Friday, May 27, 2016

புள்ளையாரின் 'தோளர்' :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 39)

காட்டில் தனியா நிக்கும் ஒற்றையானையைக் கடந்து போறோம். அம்பாரியில் புள்ளையார் உக்கார்ந்துருக்கார்.
கொஞ்சதூரத்தில் குட்டியூண்டு குன்றின்மேல் குட்டியா ஒரு பாலவிநாயகர் கோவில் கொண்டுருக்கார், தன் தகப்பனோடு!  அட!  போனமுறை பார்க்கலையேன்னு  குன்றேறிப்போய் தரிசனம் செஞ்சுக்கிட்டோம். இன்னும் கொஞ்சதூரத்தில்  புத்தர் இருக்கார். கோவில் கதவு மூடி இருக்கு. போனமுறைகளில் தரிசனம் ஆச்சுதான்.
விண்ணளந்துக்கிட்டு இருக்கார் ஒருத்தர்:-) முக அழகு அருமை! எதுத்தாப்லெயே  எல்லாப் புகழும் இறைவனுக்கேன்னு  ஒரு மசூதி!   இங்கே சாமிகளுக்குள் எந்த பேதமும் இல்லை. எல்லோரும் ஒன்னுக்குள் ஒன்னா கலந்துகட்டித் தாயா பிள்ளையாத்தான்  இருக்காங்க.
கண்ணில் பட்டது ஒரு புது அமைப்பு! நவகிரகங்கள்! திருஞானசம்பந்தர்  அருளிய கோளறு திருப்பதிகம், நுழைவு வாசலின் ரெண்டுபக்கமும் இருக்கு. அதை நின்னு வாசிச்சேன்.  உள்ளே போனால் நடுவில் சூரியன்!  பனிரெண்டு ராசிகளும் அவனைச் சுற்றி!  இடமும், வலமுமா நவ்வாலு கிரகங்கள் அவரவர் திசை நோக்கி! அவரவருக்கு உரிய ஸ்லோகம் அவரவர் இடத்தில்!  சொல்லிக் கும்பிட்டுக்கலாம்.


அண்ணாமலையாரும் உண்ணாமுலையாளும் பக்கத்து ப்ளாட்டில்!
திருவள்ளுவர்  தினமும் ஒரு குறளுக்குப் பொருள் சொல்லியவண்ணம் இருக்கார்!
சுஷீல்ஹரி பள்ளிக்கூட வாசலைத் தாண்டி  பெரியகோவில் வளாகத்துக்குள் வந்துருந்தோம்.  பொதுவா நாம் பார்க்கும் ஆள் நடமாட்டம் ஒன்னும்  காணமேன்னு இருந்தேனே....  இப்பக் காரணம் புரிஞ்சது. எல்லோரும் விழாவுக்கான ஏற்பாடுகளில் முழுகி இருக்காங்க. மறுநாள் நிகழ்ச்சிகள் இவை!

எங்கே பார்த்தாலும் பூக்களோ பூக்கள்! சரஞ்சரமாக் கோர்த்துக்கிடக்கு! பெரியகோவில் மூர்த்தியான பூரணப்ரம்மம் அலங்கரிப்பு ஒரு புறம். எதிரே இருக்கும் பெரிய யாகசாலை மண்டபத்தின் ஒரு கோடியில் கோட்டிஸ்வாமிகள்  இருக்கார். இப்போ புதுசா  மற்ற மூணு மூலைகளில்  ரெண்டு பெரிய யானைகளுடன் புள்ளையார், ஆதிசேஷனோடு ராதாக்ருஷ்ணன், நாலுகுதிரைகள் பூட்டிய தேரில் ஸ்ரீராமனும் சீதையும்!  காலடியில் நம்ம ஆஞ்சி!



ஒரு இடம் நம்ம  மஹாபெரியவா காஞ்சிமுனிவருக்கு!
இங்கேதான் புதுசுபுதுசா எதாவது  அலங்காரங்களும் அமைப்புகளும்  வந்துக்கிட்டே இருக்கே!  நம்ம முகநூல் நண்பர் கோபால் ச்சூடா (Gopal Chooda) அவர்களின் தயவால்  எல்லா சனிக்கிழமை  பூஜைகளும் மற்ற விசேஷநாட்களின் படங்களும், வீடியோ க்ளிப்புகளும்  இருந்த இடத்தில் இருந்தே நோகாமல் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன். சிலபடங்களின் பின்னணியில் புதுசா எதாவது  தெரிஞ்சால் என்ன ஏதுன்னு அவரிடம் இன்பாக்ஸில் கேட்டுத் தெரிஞ்சுக்குவேன்.  பாபாவின் தீவிர பக்தர் இவர். பொறுமையா  எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அனுப்புவார்!

பூக்களம், விளக்குகளுக்கு  திரிபோட்டு  எண்ணெய் ஊற்றி வைப்பதுன்னு  எல்லோரும் ஒவ்வொரு வேலையில்!  வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னது நாம்தான். இப்போ நமக்கான வேலை படமெடுத்தல்னு  திருப்திப் பட்டுக்கிட்டேன்:-)
பிரகாரத்தில் பெரியகோவிலின் விவரங்கள் எழுதி வச்சுருக்காங்க. சுவாரஸியமான சங்கதிகள்!  இன்னும் ஒன்னு , ஞானி எப்படி இருப்பார்னு!  பலசமயங்களில்  நமக்குத்தான் ஞானம் என்னன்னே புரியறதில்லை.....   படிச்சுப் பார்க்கும்போது...   நம்மாலே ஏன் அடுத்துப்போக முடியலைன்னு கொஞ்சம் விசனமாவும் இருந்தது உண்மை.
அடுத்துப்போன   சாப்பாட்டுக்கூடத்திலும் தொட்டடுத்து இருந்த அடுக்களையிலும் வேலைகள் பரபரன்னு நடக்குது. காய்கறிக் குவியல்கள்! அவரவருக்கு முடிஞ்சவகையில் உதவி செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மேஸ்திரி போல்  அதிகாரம் செய்யவோ, அதட்டி உருட்டி, மிரட்டி வேலை வாங்கவோ யாருமில்லை!   எல்லாம் அன்பால் கட்டுண்ட மனங்கள்!  அன்பு இருக்குமிடத்தில் மற்ற எதுக்கும் அவசியமில்லைதானே!

தீவிரமா வெங்காயம் உரிக்கும்  குட்டி பக்தர்:-)
பிள்ளைகள் வரைந்த வாழ்த்து அட்டைகளின் தோரணம் வழியெங்கும் விதவிதமாய்! அலங்கார விளக்குகள் முழுசும் சோலார் பவரில் வேலை செய்யுது.

சமணக்கோவிலுக்குள் போய் கும்பிட்டுக்கிட்டோம்.
பிள்ளைகளுக்கான  ஆக்டிவிட்டீஸா, ட்ராஃபிக் சைன்ஸ்  என்ன சொல்லுதுன்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு பார்க் இருக்கு. நல்ல விஷயம்.
அறைக்குத் திரும்பலாமுன்னு  போனதில் வழியில் துர்கையைத்  தரிசித்தோம். ஹைய்யோ!  வழக்கமான பிரமிப்புதான்.  என்ன ஒரு கம்பீரம்! என்ன ஒரு சிரிப்பு !
இங்கேயும்  ஒரு யாகசாலை இருக்கு!  காயத்ரி மண்டபம்.  புதுசா  இங்கேயும் ஒரு ராமர் அண்ட் சீதா?  ஆனால் ராமர் கையிலே கோதண்டத்தைக் காணமே... ஆஞ்சி வேற இருக்கார்.  முதுகிலே அம்பறாதூணி  இருப்பதால் ராமர்தான்னு நினைச்சுக்கிட்டேன்.

துர்கை  கோவிலில் இருந்து அறைக்குத் திரும்பும் வழியில்  என்னவோ வித்தியாசம்!  ஆங்..........  இங்கே இருந்த பசுக்கொட்டில் எங்கே? புதுசா ஒரு கட்டடம் கட்டிக்கிட்டு இருக்காங்க?
அறைக்கு வந்ததும் நம்மவர் மட்டும் வேட்டிக்கு மாறினார்.  திரும்ப கணேஷ்புரிக்குப் போனோம். எல்லோரும் பூஜை மும்முரத்தில். நமக்கும் பூஜைக்கூடைகள் வந்தன. வீட்டுக்கு ஒன்னு போதும்னு  ஒரு கூடையை மட்டு வாங்கி கோபாலிடம் கொடுத்தேன். நம்ம முழங்கால் பிரச்சனையால் தரையில் உக்காரக் கஷ்டம் இல்லையோ!
தேங்காய், பழம், பூ, விபூதி, குங்குமம்,மஞ்சள், வெத்தலை பாக்கு  இருக்கு. சந்நிதி  உள்ளே அர்ச்சகர் சொல்லும் மந்திரத்தைத் திருப்பிச் சொல்லி  அவர் சொல்படி பூ, குங்குமம் இத்தியாதிகளைக் கொண்டு அர்ச்சிக்கவேணும். (ஓ எல்லோரும் அர்ச்சகராகலாம் என்பது இப்படியும் பொருந்துதே!)
மந்திரம் என்னன்னு  சின்ன அட்டையில் கூடைக்குள்ளும்  இருக்கு. நல்லவேளை. தப்புத்தப்பா உளறவேணாம் !
பூஜை முடிஞ்சு தீபாராதனை ஆனதும் நாங்க இருக்கும் இடத்தில் இருந்தே கண்ணில் ஒத்திக்கிட்டோம். அடுத்து உற்சவர் வெளியில் வந்தார். கோவிலைச் சுத்தப்போறார். நம்மவர் ஊர்வலம் போகும் புள்ளையாருக்குத் தோள் கொடுக்கப்போனார். முகத்தில் தனியா ஒரு மகிழ்ச்சி தெரிஞ்சது!
முடிஞ்சவரை க்ளிக்கினேன்.  போதுமான வெளிச்சம் இல்லாததாலும், ஊர்வலம் நகர்ந்துக்கிட்டே இருந்ததாலும் படம் சரியா வரலை.  (பொதுவா நான் எங்கேயும் ஃப்ளாஷ் பயன்படுத்தறதில்லை. மக்கள் முகத்தில் திடீர்னு வெளிச்சம் அடிக்க வேணாமேன்னுதான்....)

பிரஸாத விநியோகம் அடுத்து! மோதகம், கேஸரி, சுண்டல், அரிசி உப்புமா, ஒரு பர்ஃபி, ஒரு வாழைப்பழம், அரை ஆப்பிள்.  நமக்கு டின்னரும் ஆச்சு:-)

 பத்து நிமிசம்போல அங்கே  கொஞ்சம் பேச்சு பரிமாறிட்டு அடுத்த அரை நிமிட்டில்  அறைக்கு வந்தோம் .

நான் வேஷம் மாறிக்கணும். விழாவுக்குப் போறேனாக்கும் :-)

தொடரும்........  :-)


10 comments:

said...

படங்களும் நிகழ்வுகளும் வழக்கம்போல் அருமை. யானை மேல் அம்பாரி ரசிக்கும்படி இருந்தது.

said...

படங்கள் யாவும் நன்றாக இருக்கின்றன. விளக்கங்கள் மிக நன்றாக....

said...

ஒத்தையாக அம்பாரியில் பிள்ளையார் அருமை.
ம்ற்ற படங்கள் எனக்கு தெரியவில்லை அப்புறம் பார்க்கிறேன்.

said...

இது ஒரு தனி உலகம். எல்லா விவரங்களும் மிக ரசிக்கும்படி இருக்கின்றன. நன்றி துளசிமா.

said...

அழகிய படங்கள்....

தொடர்கிறேன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க மோகன்ஜி.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!

said...

வாங்க கோமதி அரசு.

ஏகப்பட்டப் படங்களைப் போட்டுப் படுத்தறேனோ...........

மன்னிக்கணும்.

said...

வாங்க வல்லி.

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க. உண்மையாவே இது ஒரு தனி உலகம்தான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வதற்கு நன்றி.