Wednesday, March 30, 2016

கவிஞருக்குத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் வச்ச சிலை (இந்தியப் பயணத்தொடர். பகுதி 14)

இன்றைக்கே  மூணு கோவில்களிலும் தரிசனம் கிடைச்ச திருப்தியுடன் அறைக்குத் திரும்பி, உள்ளே போய் மலை மேலிருப்பவனுக்கு சேதி அனுப்பலாமுன்னு  ஜன்னல்கிட்டே போனால் 'எல்லாம் எனக்குத் தெரியுமெ'ன்றது போல தூரக்கே இருந்து விளக்கால் பதில் சொல்றான் பாருங்க!
ரூம்சர்வீஸில் சாப்பாடு எதாவது வாங்கிக்கலாமுன்னு மெனுவைப் பார்த்தால்.... எனக்கு வேண்டியது  இருக்கு.  ரெண்டு இட்லி, ஒரு லஸ்ஸின்னு  சொன்னால், நம்மவர் தனக்கும் அதேன்னார்.   சும்மாச் சொல்லக்கூடாது.... ரெண்டே இட்லின்னாலும் அதைக் கொண்டு வந்த விதம் அருமை! தனியா ஹாட்பேக்கில் போட்டுச் சுடச்சுட வந்தது!   த பெஸ்ட் சர்வீஸ் !
சாப்பாட்டை முடிச்சு, வலை மேய்ந்து, மெயில் செக் பண்ணி, வாட்ஸ் அப் சேதிகளை பார்த்து, படங்களை  அனுப்பின்னு  ஒரு ரெண்டு மணி நேரம் போச்சு.  இங்கே Wifi  நல்லா வேலை செஞ்சது. அன்றன்று எடுத்த படங்களை  தன்னுடைய லேப்டாப்பிலும், கூடவே கொண்டுபோயிருந்த எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவிலும் சேகரிச்சு வைப்பது, மொபைல் ஃபோன்களையும் கேமெரா பேட்டரிகளையும் சார்ஜ் செய்வது போன்ற தினசரி 'கடமை'களை  நம்மவர் பார்த்துக்கிட்டார்.

 நல்ல ஹொட்டேல்களா இருந்தாலும் கூட  ப்ளக் பாய்ண்ட்ஸ்  அங்கங்கே  ரெண்டுன்னு வெவ்வேற  சுவர்களில் இருப்பவை ரொம்பக் குனிஞ்சு பயன்படுத்த வேண்டி இருக்குன்னு இப்பெல்லாம் நாலு சாக்கெட்ஸ் இருக்கும் பவர் போர்டு ஒன்னு பயணத்தில் கொண்டு போறோம். நம்ம  நியூஸி சிஸ்டத்தில் கொஞ்சம் வேறமாதிரி டிசைன் இருப்பதால்  நாலைஞ்சு ட்ராவலர்ஸ் ப்ளக் கொண்டு போகும் வேலை வேற!   பவர் போர்டு இருந்தால் ஒரே ஒரு  அடாப்டர் இருந்தால் போதும்.  வசதியாத்தான் இருக்கு.

மறுநாள் காலையில் கொஞ்சம் நிதானமாகவே எழுந்து கடமைகளை முடிச்சுக்கிட்டு, கீழே ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம். இன்றையத் திட்டத்தின்படி பயண நேரம்  அதிகமில்லை. கடப்பா என்ற ஊருக்குத்தான் போகணும்.   திருப்பதி - கடப்பா மொத்தமே சுமார் மூணு மணி நேரம். தூரம் 142 கிமீ.  இதுலே இடையில்  117 கிமீ தாண்டுனதும் ஒரு கோவில் விஸிட். அவ்ளோதான். அங்கே போய் நல்லா ஓய்வெடுத்துக்கிட்டு மறுநாள்  நூற்றியெட்டில் ஒன்றை தரிசிக்கணும். கஷ்டமான பயணம் என்பதால் இடையில் ஓய்வு முக்கியம். இவ்ளோ முன் ஜாக்கிரதையோடு திட்டம் போட்டுருக்கார் நம்மவர்.


கீழே ரெஸ்ட்டாரண்டின் பெயர் கஸானா!  ரொம்ப ஆடம்பரமில்லாத எளிய அலங்காரங்கள். பஃபே தான் இங்கேயும். நமக்கான இட்லி வடைகள் கிடைச்சது.  காஃபிதான்  சுமாரா இருந்துச்சு. ஒன்பதுக்குச் செக்கவுட் செஞ்சு கிளம்பி  கடப்பா ஹைவேயில் போறோம்.   ஒரு  ஒன்னரை மணி பயணத்துக்குப் பின் ரொம்ப தூரத்தில் ஒரு சிலை மாதிரி தெரிஞ்சது.  வளைஞ்சு செல்லும் சாலையில் அப்பப்ப ஒரு கோணத்தில் சிலையின் தலை  கண்ணாமூச்சி ஆட்டம்.

என்னவா இருக்குமுன்னு யோசிக்கும்போதே  முழு உருவமும் தெரிஞ்சது.  அங்கே போய் வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினோம். ஒரு பார்க் செட்டிங்லே  அதோ ரொம்ப தூரத்துலே மேடைமேலொரு சிலை.
காசிப்பயணத்துலே  இப்படி  ஒரு தோட்டத்துக்குள்ளே பார்த்த புத்தர் நினைவுக்கு வந்தார். சாரநாத் புத்தர்தான் இந்தியாவிலேயே உயரமானவர். 80 அடி! 
சங்கு சக்கரம்  வச்சு டிஸைன் செஞ்ச இரும்புகேட்டைக் கடந்து உள்ளே போறோம். இப்பவும்  யாரோட சிலைன்னு தெரியலையேன்னு  சுத்துமுத்தும் கண்ணை ஓடவிட்டால்.....  ஆஹா... அன்னமைய்யா ! நல்லவேளையா  இங்லீஷ்லே ஒரு போர்டு இருந்துச்சு கழிவறை எங்கே இருக்கு என்ற தகவலோடு.
108 அடி உயரச் சிலை. திருப்பதி தேவஸ்தானம் செஞ்சு அங்கே நிறுவியிருக்கு. நவீன கல்வெட்டு எல்லாம் ஜிலேபி எழுத்துக்களால்  நிரம்பி இருக்கு.  படிக்கத் தெரியாத தன்னிரக்கத்தில் ஒரு விநாடி துக்கிச்சேன்.  ஏமிட்டிரா ஈ கொடவ? நாலுகு சைடு உந்தே....  தாண்ட்ல ஒகே ஒக  சைடுலோ இங்லீஷ்லோ ராசி பெட்டக்கூடதா?


எல்லா திசைகளிலும் இருந்தும் அன்னமைய்யாவை க்ளிக்கிட்டு, வெளிவரும் சமயம்   ஒரு மூலையில் செடிகளை வெட்டி சரிப்படுத்திக்கிட்டு இருந்த தோட்டக்காரர் கண்ணில் பட்டார். அவரிடம் கொஞ்சம் விசாரிப்பு.
நமக்கு இந்த 108 என்ற எண்ணிலொரு மோஹம் இருக்கத்தான்  செய்யுது.  ஹிந்துமத நம்பிக்கைகளில் நூத்தியெட்டு என்பது   ரொம்ப ஆன்மிக சம்பந்தம் உள்ளதுதான். ஜெபமாலை மணிகளில், திவ்ய தேசங்களில், சாமி சிலைகளில்  இப்படி..... இதுக்கு முந்தி நாங்க பார்த்த ஒரே ஒரு நூத்தியெட்டு அடி  உசரச்சிலை நம்ம ஆஞ்சியோடதுதான்.  அவர் ஷிம்லாவில் இருக்கார். அவரை தரிசிக்கணுமுன்னா   இங்கே எட்டிப் பாருங்க:-)


இந்த சிலை இருக்கும் தோட்டத்தையொட்டியே  ஒரு பாதை.  அதுக்கு அந்தாண்டை ஆந்திரப்ரதேஷ் டூரிஸம் ,ஒரு  ரெஸ்ட்டாரண்ட் & ஆஃபீஸ் வச்சுருக்காங்க.  ஹரிதான்னு பெயர்.  அங்கே  எதாவது தகவல் கிடைக்குமான்னு பார்க்கலாமே...  போனோம்.
போனதுக்கு  ஆளுக்கொரு காஃபின்னு  சொல்லிட்டு மற்ற வசதிகளெப்படி இருக்குன்னு  பார்த்தால்   கழிப்பறைக்குப் போய் வந்த சீனிவாசன், ரொம்ப சுத்தமா இருக்குன்னார்.  அப்படியா? ன்னு ஆச்சரியத்தோடு  போனால் பெண்கள்பகுதியை மூடிப் பூட்டு போட்டு வச்சுருக்காங்க.  பக்கத்தில் இருந்த பணியாளர் ஒருவர்  பையில் இருந்து சாவியை எடுத்துத் திறந்துவிட்டார்.   ரொம்ப சுத்தமான இடம்!   பின்பக்கமா தனிக் கட்டிடம் என்பதால்  பாதுகாப்புக்காக பூட்டு போட்டுருக்கோம் என்றார்.  இல்லைன்னா தெருவோடு போகும் சனம்  பக்கத்து  கேட் வழியா வந்து பயன்படுத்திட்டு அழுக்கா வச்சுட்டுப் போயிடறாங்களாம்.

அப்போ... அவுங்க பயனுக்குத் தான் சாலை ஓரம் இருக்கே என்ற எண்ணமோ? தேவுடா..... :-(

ரெஸ்ட்டாரண்ட் ஹாலில் மாட்டி இருந்த படங்களைப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர் அட்டகாசமான இடங்கள்  இருக்கு. எதாவது ஒன்னு பார்க்கணுமுன்னு  ஒரு கோட்டையைக் காமிச்சார். கோட்டையான்னு ஒரு கொலைவெறி பார்வையை பரிசளித்தேன். அதென்ன எப்பப் பார்த்தாலும்... கோட்டை கோட்டைன்னுட்டு....

ஆனால் இன்னொரு இடம் எனக்குப் பிடிச்சமாதிரி இருந்தது. பார்க்கலாமுன்னு க்ளிக்கி வச்சுக்கிட்டேன்.
காஃபி முடிச்சுட்டு வெளியில் அந்தப் பாதைக்கு வந்தால்  தலப்பாக்கா 3 கிமீன்னு ஒரு போர்டு சொல்லுது.  அலங்காரவளைவு வச்சுருக்காங்க. வெறும் மூணுதானே...  போயிட்டு வந்துறலாமேன்னு கிளம்பினோம். இங்கே என்ன விசேஷமாம்?
 நம்ம அன்னமய்யா பிறந்த ஊர். அன்னமாச்சாரியாவைத்  தெரியாதுன்னு சொல்றவங்ககூட அவர் பாட்டை எப்பயாவது எங்கெயாவது கேட்டுத்தான் இருப்பாங்க. சுருக்கமாச் சொன்னா இவர் ஆந்திரநாட்டு தியாகைய்யர்தான்.
காலம் மட்டும் நம்ம தியாகைய்யருக்கு  முந்தியது. ஏறக்கொறைய பதினைஞ்சாம் நூற்றாண்டு முழுசும் வாழ்ந்தவர்! (பிறப்பு 1408 ஆம் ஆண்டு. மறைவு  1503)

ஒருவேளை இவர்தான் தமிழ்நாட்டில் தியாகைய்யரா மறுபிறவி எடுத்து,  விட்டுப்போன பாடல்களைப் புனைந்து பாடி வச்சாரோ?  தியாகைய்யரின் காலம்  May 4, 1767 முதல்   January 6, 1847 வரை.

பெருமாள் மேலே 32 ஆயிரம் பாடல்கள் புனைந்தவர்! அதுலே ஒரு பனிரெண்டாயிரம் சுவடிகள்தான் கிடைச்சிருக்குன்னு    ஓலைச்சுவடிகளில் இருந்த பாடல்களை அவருடைய மகன் பிற்காலத்தில் செப்புத்தகட்டில் பதிச்சு  வச்சதாகவும், பல ஆண்டுகளுக்குப்பின்  பூட்டிக்கிடந்த ஒரு அறையில்  அவை கண்டுபிடிக்கப்பட்டு  இப்போ அவைகளை ஒரு தனி அறையில் திருப்பதி வேங்கடவன் கோவிலில் வச்சுக் காப்பாத்திக்கிட்டு இருக்காங்கன்னும் ஒரு தகவல் உண்டு. நானும் அந்த அறையைப் பார்த்திருக்கேன். பெரிய உண்டியலுக்கு  எதிர்ப்பக்கம் இருக்கு. சந்தனம் அரைக்கும் பரிமளக்கல் பக்கத்தில் இருக்கும் அறை. அன்னமாச்சார்யா  சிலை ஒன்னு சின்னதா வச்சுருக்காங்க.

இவருடைய இளவயதில் ஒரு நாள் திம்மக்கா, அக்கலம்மா  என்ற தன் அத்தை பெண்களுடன் இவர் மலைப்பாதையில் போகும்போது எதிரில் வந்த ஒரு அழகான இளைஞர்,  'ஏன் வீணாக பெண்களுடன் பொழுது போக்குகிறாய்?' என்று கேட்டாராம். 'அழகிய கண்களையுடைய  இவர்களுடன் பொழுது போக்காமல் இருக்கமுடியுமா'ன்னு இவர் எதிர் கேள்வி கேட்க, 'இதைவிட அழகான கண்களை உனக்குக் காட்டட்டுமா'ன்னு  அவர் இவரை மலை மேல் கூப்பிட்டுப்போய்  வேங்கடவன்  சந்நிதிக்குள் நுழைஞ்சு,  ரொம்பவே  அழகான கண்களுடைய தன் உண்மை ரூபத்தைக் காட்டினாராம்.  அரவிந்த லோசனன்!  அதைக் கண்டு கிறுகிறுத்துப்போய்  தன் நினைவிழந்து கிடந்தவர் கொஞ்ச  நேரத்தில் கண் முழிச்சு, ஹரி ஹரி ஹரி ஹரி என்னும் பாடலைப் பாடியபடி மலையில் இருந்து இறங்குனதாகவும், அதுதான் அவர் பாடிய முதல்பாட்டுன்னும்கூட   ஒரு  கதை இருக்கு. அந்த முறைப் பெண்களில் ஒருவரான திம்மக்காவைத்தான் இவர் கல்யாணம்  பண்ணிக்கிட்டார்.  மனைவியும் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். தெலுகு  மொழியில் முதல் பெண் கவிஞர்!  சுபத்ரா கல்யாணம் என்ற நூலை எழுதி இருக்காங்க. இவுங்க பிள்ளையான  திருமலாச்சார்யா, பேரன் சின்னய்யா  என்றவர்கள் கூட  தெலுகுமொழி கவிஞர்களா இருந்துருக்காங்க.  எல்லாம்  ஆன்மிக இலக்கியங்கள்தான்!  குடும்பமே... இப்படி  இருந்துருக்கு!   கொடுப்பினைதான்!
இப்பவும் இவுங்க பரம்பரைக்கு திருமலை வேங்கடவன் கோவிலின் பூஜை சமாச்சாரங்களிலும் கோவில் மரியாதைகளிலும் பாத்யதை இருக்கு!  ஹைய்யோ....  என்னவொரு கொடுப்பினை!
இதோ   ஊருக்குள்ளே வந்துட்டோம். போகும் வழியிலேயே  ரெண்டு யானைகள் நின்னு வரவேற்கும் கோவில் ஒன்னு இருக்கு.  சமீபத்தியக் கோவில். அப்புறம் பார்க்கலாமுன்னு  இன்னும்  பத்தடி போனால்  பழைய கோவில் ஒன்னு  இருக்கு.

 வாங்க கோவிலுக்குள் போகலாம்....

தொடரும்............:-)18 comments:

said...

கடப்பா வுக்கு போனா பக்கத்துலே பாவுன்னி கடப்பா அப்படின்னு ஒரு க்ஷேத்திரம் இருக்கு.
திருப்பதி கோவில் மாதிரியே அமைப்பு கொண்ட ஒரு கோவில் இது.

1985 வாக்கில் நான் அங்கு சென்ற பொது நிகழ்ந்த ஒரு மிராக்கில்.

என்ன அழைத்துச் சென்ற ஒரு கடப்பா அலுவலக அதிகாரி சொன்னார்: :
பாவுன்னி என்ற ஒரு பக்தர் ஏழுமலையானை தரிசிக்க அவர் ஊரிலிருந்து நடையாய் நடந்தாராம். பின் தவள்ந்தாராம்.ஒரு இரவு இனிமேல் போக முடியாது என்ற நிலையில் அங்கே கீழே விழுந்து கிடந்த பொது,
திருவேங்கடத்தான், நீ இங்கே யே இரு. உனக்கு நான் இங்கு தரிசனம் தருகிறேன் என்று கனவில் வந்து சொல்லி, அங்கு வந்து தரிசனமும் தந்தாராம்.
இது ஸ்தல புராணம். அந்த கோவிலில் சுவற்றில் எழுதப்பட்டு இருக்கிறது.
எனக்கு இதைப் படித்து காண்பித்த எனது நண்பர் மேலும் சொன்னார்: இங்கு வந்தவர் எல்லோரும் திருப்பதிக்கு என்னைக் காண வருவர் என்று வேங்கடவானே பாவுன்னி முனிக்கு வரம் அளித்தாராம்.
என் நண்பரிடம்
நான் சொன்னேன். நான் இதுவரை திருப்பதி சென்றதில்லை.நானாவது திருப்பதி செல்லவாவது ? எனது வேலை அலுவல்களுக்கு இடையே நடக்காத ஒன்று. என்றேன்.

நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
அன்று மாலை எனக்கொரு டெலி பிரிண்டர் மெசேஜ். அந்தக் காலத்தில் செல், எல்லாம் கிடையாது. பாக்ஸ் கிடையாது. எல்லாமே தந்தி, டெலிபிரிண்டர் தான்.

உடனடியாக, நான் மட்டும், பம்பாய் மெயிலில் ஏறி திருப்பதி கிளை அலுவலகத்திற்குச் சென்று குறிப்பிட்ட வேலை ஒன்றைச் செய்ய வேண்டும் என்று. எனது கூட வந்த டீம் நண்பர்களிடம் கூட சொல்லாது செல்லவேண்டும் என்ற கட்டாயம்.

என்னை திருமலை ஸ்டேஷனில் வரவேற்ற கிளை மேலாளர் அன்று திருப்பதி கிளை அலுவலக வேலை ஒரு நேரத்தில் முடியவே, என்னை திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் சென்றார். எனக்கு ஒரு வி.வி. ஐ. பி. பாட்ஜ் மாட்டி விட, நான் எந்த க்யூ விலும் சேராது, நேராக

வேங்கடத்தான் சன்னதியை அடைந்தேன்.
உள்ளே கர்ப்பக்கிருகத்தில் என்னால் வேங்கடவனை பார்க்க இயலவில்லை. என் கண்களில் இருந்து அருவியாக கண்ணீர் பெருகிற்று. நேற்று தானே பாவுன்னி கடப்பா கோவிலில் உனது அஷ்யூரன்ஸ் ஐ நான் சந்தேகித்தேன்.
இன்று என்னை வரவழைக்கச் செய்து விட்டாயே !
இது என் வாழ்விலே நடந்த ஒரு அற்புதம்.

அது தான் திருப்பதிக்கு சென்ற முதல் அனுபவம்.

சுப்பு தாத்தா.

said...

தாளப்பாக்கம் அன்னமாச்சார்யா தரிசனத்துக்குக் காத்துக்கொண்டிருக்கிறோம். இவர் பாடல்களை எம்.எஸ்.எஸ் நிறையப் பாடியுள்ளார். திருப்பதி ஆஸ்தான வித்வானாகவும் எம்.எஸ்.எஸ் இருந்தார். அவரின் வெண்கல(?) சிலையை திருப்பதி பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் பார்த்திருப்பீர்களே.. "பாவமு லோன பாக்யமு" போன்று பல பாடல்கல்.

said...

பிரம்மாண்டமான அன்னமய்யா சிலை பார்த்ததும ஆச்சர்யம். நன்றி.

said...


i learn this place is now known as
DEVUNI KADAPA

SUBBU THATHA

said...

அந்த நாமம் சக்கரம் சங்கு அருகிலேயே சென்று படமும் எடுத்துக்கொண்டோம் 1997இல்.
தாளப்பாக்கம் அன்னமாச்சாரியர் பாடல்களுடன் பல சங்கடங்களைக் கடந்திருக்கிறோம்.

சுப்பு அண்ணா மிரகிள் எல்லோருக்கும் கிடைக்குமா. பாவுன்னி முனி கோவிலுக்குப் போக வேண்டியதுதான்.

said...

வாங்க அத்திம்பேர்.

இதே சம்பவத்தை முந்தி ஒரு திருப்பதி பதிவிலும் நீங்க சொன்ன நினைவு. ஆனால் நல்ல சமாச்சாரத்தை எத்தனை முறை கேட்டாலும் கசக்குமா என்ன?

நானும் ஒருக்கா பாவுன்னி கோவிந்தனைப் பார்க்கணுமே!

முந்தியெல்லாம் திருமலை தரிசனம் மனதுக்கு இன்பத்தைக் கொடுத்தது. குலசேகர ஆழ்வார் படி தாண்டி உள்ளே போய் சேவித்தகாலம் எல்லாம் (ஏழு)மலையேறிப் போயிருச்சு. சிங்கிள் லேன்! இப்போ ரொம்ப தூரத்துலே நெட்டுக்குத்தலா நாலு வரிசைக் கம்பிகளுக்கிடையில் அடைச்சுக்கிட்டுப் போகணும். இங்கும் பின்னால் இருந்து ஒரே தள்ளுமுள்ளு. 2 விநாடி கண்ணை ட்ரெய்ன் செஞ்சு உள்ளே அனுப்புமுன் கைபிடித்துக் கடாசியாறது :-(

விவிஐபி தரிசனம்....... கொடுப்பினை!!!!

said...

நல்ல தரிசனம் ...... தொடர்ந்து வருவேன்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எம் எஸ். அம்மாவின் சிலையின் படத்தை ஏற்கெனவே நம்ம பதிவுகளில் போட்டுருக்கேன். உண்மைக்கும் சொன்னால் திருப்பதி தேவஸ்தானம் மரியாதை தெரிஞ்சவங்கதான்!

எனக்கும் அன்னமய்யா பாடல்கள் ரொம்பப்பிடிக்கும் என்றாலும் ஃபேவரிட் நமோ நமோ ரகுகுல நாயகா............

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

ஆமாமாம் தேவுனி கடப்பா.

போயிருக்கலாம். ஆனால்.......... 'அவன்; கூப்பிடலை:-(

said...

வாங்க வல்லி.

அந்த இடம் சங்குமிட்டாதானே?

அம்மம்மா காலத்தில் அன்னமய்யா பாடல் கேக்காமல் நாள் கடந்ததில்லை !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வது மகிழ்ச்சி. நன்றீஸ்.

said...

//படங்களைப் பார்த்துக்கிட்டு இருந்த நம்மவர் அட்டகாசமான இடங்கள் இருக்கு. எதாவது ஒன்னு பார்க்கணுமுன்னு ஒரு கோட்டையைக் காமிச்சார்.//

கொலை விழும்ன்னு ஏற்கனவே கோல்கொண்டாவில் வெச்சு எச்சரிச்ச பிறகுமா!!!

சங்கு சக்கரம் அழகு. இதே போல் மலையில் கோயிலுக்குப்பின்னால் சீதாராமலஷ்மணர் சிலைகளோடு கூடிய தோட்டத்திலும் இருக்கு.

said...

வாங்க சாந்தி.

கொலையை மறந்துருப்பார் உங்க அண்ணன்:-)

திருப்பதி மலையைச் சுத்திப் பார்த்தே வருசம் 34 ஆச்சு. இப்பெல்லாம் அழகான சிலைகளைத் தோட்டத்தில் வச்சுருக்காங்கன்னு தெரிஞ்சாலும், போனோமா சாமியைப் பார்த்தோமா (?) உடனே கீழே இறங்கி வந்தமான்னுல்லே போயிருது.

அதான் அடுத்த முறை ரெண்டு மூணு நாள் ஹொட்டேல் ப்ளிஸ்லே தங்கி மலைக்குப்போய் கோவிலை விட்டுட்டு மற்ற இடங்களைப் பார்க்க ஒரு திட்டம் இருக்கு.

பார்க்கலாம்........... 'அவன்' எதிர்நடவடிக்கை என்னன்னு:-)

said...

அன்னமய்யா....பெருமானின் கவி ....ஆகா ...
.அருமை

said...

ரெண்டு இட்லிக்கு ஒரு ஹாட்பேக். நாலு இட்லியையும் அதுல கொண்டு வராம ரெண்டு ஹாட்பேக்ல கொண்டு வந்தவங்க.. சட்டினி சாம்பெரெல்லாம் ஒரே கிண்ணமாக் கொண்டு வந்துட்டாங்க.

அன்னமய்யா பத்தி ஒரு படமே வந்து தெலுங்குல சூப்பர் ஹிட்டாச்சு. நாகார்ஜுனா நடிச்சிருந்தாரு. படம் ரொம்ப நல்லாருந்துச்சுன்னு சொல்வாங்க.

நம்மூர்ல திருவள்ளுவருக்குச் சிலையெடுத்தோம். அதே மாதிரி இளங்கோவடிகளுக்கும் அருணகிரிக்கும் எடுத்தா நல்லாருக்கும்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க ஜிரா.

சட்னி சாம்பார் எல்லாம் ரெவ்வெண்டு கிண்ணத்தில். காரச் சட்னி மட்டும் ஒரே ஒரு கிண்ணம். (நான் காரம் சாப்பிடமாட்டேன்னு அவுங்களுக்கு எப்படித் தெரியுமாம்?)

அன்னமையா டிவிடி நம்மகிட்டே இருக்கு. வாங்கி வந்தே ஒரு ஏழெட்டு வருசமாச்சு. இன்னும் பார்க்க வேளை வரலை:-(

நம்மூரில் சிலைகளில் கூட அரசியல் இருக்கே!