Wednesday, March 16, 2016

இன்னும் சென்னை வாசனை வந்து ஒட்டலை போல ........... ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 7)

நாளைக்குக் காலையில் உள்நாட்டுப் பயணம் ஒன்னு  கிளம்பறதால்,  நாத்தனாரைப் பார்த்துட்டு வந்துடலாமேன்னு வேளச்சேரியை நோக்கிப்போறோம். இந்த OMR ரூட்லே இதுவரை நான் போனதே இல்லை என்பதால் வேடிக்கை பார்த்துக்கிட்டே போகும்போது வழியில் இளநீரைப் பார்த்துட்டு வாங்கலாமுன்னு வண்டியை நிறுத்தறோம். என்னன்னு தெரியலை பயங்கர ட்ராஃபிக் ஜாம். 'இந்த நேரத்தில் இப்படி இருக்காதுன்னு தான் இப்படி வந்தேன்'றார் சீனிவாசன்.

நாத்தனார் வீட்டுலே இருக்காங்களான்னு   கேட்டுக்கலாமுன்னு  செல்லில் கூப்பிட்டால், கோவில் கும்பாபிஷேகத்துக்குப் போக ரெடி ஆகறாங்களாம். அதுக்குள்ளே  மச்சினர் மனைவி நம்மைக் கூப்பிட்டு 'இப்பதான் கோவிலில் அபிஷேகம்  நடக்குது. இதெல்லாம் முடிஞ்சு அலங்காரம் நடக்கணும். எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிரும். நீங்க  நாத்தனார் வீட்டுலே இருந்து நேரா கோவிலுக்கு வந்துருங்க'ன்னு சொன்னாங்க.


இதுக்கிடையில்தான் மேலே சொன்ன ஜாம் சமாச்சாரம். ஊர்ந்து போய்க்கிட்டு இருக்கோம்.  அதுக்குள்ளே இன்னொரு ஃபோன்.  கோவிலில் இருக்கும் தங்கை(மச்சினர் மனைவி) பேசறாங்க.  'நாத்தனார்  ப்ளான் சேஞ்ச். மாலை  பூஜைக்கு வர்றதா இருக்காங்க. நீங்க  முதல்லே கோவிலுக்கே வந்துருங்க'ன்னாங்க. கோவில் நம்மை விடமாட்டேங்குது:-)


சாலையில் இருந்து  தெருவுக்குள்  நுழைஞ்சால்  வலப்பக்கம் ஒரு ஏரி. இடப்பக்கம் சமயபுரத்தம்மன் கோவில். நாராயணபுரம். கோவிலைக்கடந்து இடப்பக்கம் திரும்பினால் கோபால் நகர்.

பள்ளிக்கரணை காடாக இருந்த காலத்தில் மச்சினர் அங்கே இடம் வாங்கிப்போட்டு ஒரு சிறு தொழிற்சாலை ஆரம்பிச்ச காலக்கட்டம்.  அப்புறம் அந்த  ஏரியாவுக்கு  அவர் பெயரை வச்சே கோபால் நகர்னு நாமகரணமாகிருச்சு.
அப்போ ஒருமரத்தடியில் இருந்த அம்மனுக்குச் சின்னதா ஒரு கோவில் எழுப்பி குடிவச்சதில் இவருக்குப் பெரும்பங்கு. சின்னதா கோபுரமும் எழுப்பியாச்சு.  அப்புறம் கொஞ்சம்கொஞ்சமாக் கோவில் வளர்ந்துக்கிட்டு இருக்கு. போனமுறை திறந்த மண்டபவெளியா இருந்தஇடம் இப்போ கோவில் முன்மண்டபத்தையொட்டிய ஹால்!   இன்னும் சில தெய்வங்கள் குடியேறி இருக்காங்க. கூடவே நவகிரகங்களும்!இன்றைக்கு அங்கே மஹாகும்பாபிஷேகம்!

ஒருவழியா நாங்க போய்ச் சேரும்போது  பூஜைகள் முடிஞ்சு சாப்பாடும் முடிஞ்சுருக்கு. சாம்பார் சாதம், தயிர்சாதம், வடை எல்லாம் காலி. சக்கரைப் பொங்கல்தான் இருக்கு.  நம்மைப் பார்த்தவுடன்  பதறிப்போய் அண்டாக்களை எட்டிப் பார்த்துட்டு, சக்கரைப் பொங்கலை வாரி ஒரு தட்டில் வச்சு சாப்பிடச் சொன்னாங்க.
இன்னும் சென்னையின் குணாம்சங்கள் வந்து ஒட்டிக்காத எளிமையான கிராம மக்கள்!

பரவாயில்லை. நீங்க சாப்பிடுங்கன்னு சொல்லும்போதே,' பிரசாதம் ஏற்கெனவே வாங்கி ஆஃபீஸ் ரூமில் வச்சுருக்கேன்கா'ன்னாங்க தங்கை.  இவுங்க ஒரு சிறுதொழிலதிபர். கோவிலுக்குப் பின்பக்கத்தெருவில்  தங்கையின் நிறுவனம் இருக்கு.  டுவீலருக்கான ஒருசில  ரப்பர் சாதனங்கள் தயாரிக்கறாங்க. இங்கேயும் மெஷீன் ஆபரேட்டர்கள் எல்லாம் வட  இந்தியரே.   நம்மாளுங்களுக்கு வேலை செய்யத்  தோணலைபோல.  ஆள் கிடைப்பதில்லையாமே!  இலவசமா எல்லாம் கிடைக்கும்போது எதுக்கு மெனெக்கெடுவானேன்னு  இருக்காங்களாயிருக்கும்  :-(

பூசாரி ஐயா  வந்து கோவிலைப்பற்றிச் சொன்னார். இப்ப நல்லா நடக்குதுங்க. இவுங்கதான் நிறைய உதவி செய்யறாங்கன்னார், தங்கையைக் காட்டி. மனசுக்கு மகிழ்ச்சியாத்தான் இருந்துச்சு. பொதுவா கொஞ்சநேரம் எல்லோரிடமும் பேசிட்டு, நம்ம வகையில் ஒரு தொகைக்கு காசோலை எழுதிக் கொடுத்துட்டு அம்மனைக் கும்பிட்டுக்கிட்டுக் கிளம்பினோம்.

தொழிற்சாலையில் எப்படி அந்த ரப்பர் காம்பௌண்டை  உருக்கி மோல்ட் செய்யறாங்கன்னு எனக்கு  கோபால் சொன்னார். நானும் என்னென்ன ப்ராஸஸ்னு  ஹிந்தியில் கேட்டதும் ஆபரேட்டர்களுக்கு முகமெல்லாம் மகிழ்ச்சி. நல்லபடி விளக்கிச் சொன்னாங்க.

தமிழ் பேசக் கத்துக்கிட்டாங்களாம். ஆனா...முதலாளியம்மா இன்னும் ஹிந்தி பேசக் கத்துக்கலை பாருங்க:-)

சாப்பாடெல்லாம் பிரச்சனை இல்லையாம்.  மாடியில்  தங்குமிடம். அவுங்களே சமைச்சுக்கறாங்களாம்.  உள்ளே இருக்கும் சின்ன  காலி இடத்தில்  தக்காளி, கத்தரின்னு சில காய்கறிகள் போட்டு வச்சுருக்காங்க.

ரப்பர் சாதனங்களை ட்ரிம் செஞ்சுக்கிட்டு ரெண்டு பெண்கள். எதோ வீட்டில் காய்கறி நறுக்குவதைப்போல பேசிக்கிட்டே  கத்தரியால்  வெட்டி ஒழுங்குபடுத்திக்கிட்டு இருக்காங்க.   குடிசைத்தொழில்!!! தொழிற்சாலையின் ஆரம்பகாலத்துலே இருந்தே வேலைசெஞ்சுக்கிட்டு இருக்கும் சீனியர்ஸ் இவுங்கதான்.
எடுத்து வச்சுருந்த பிரசாதங்களையெல்லாம்  இங்கேயே  எல்லோருக்கும் கொடுத்துட்டு, கொஞ்சூண்டு கையில் எடுத்துக்கிட்டு மச்சினர் வீட்டுக்குப் போறோம்.
போறவழியில் அடையார் ஆனந்தபவன். அங்கே லஞ்சு முடிச்சுக்கலாமுன்னு  கோபால் சொன்னதால் ஒரு ஸ்டாப். நம்ம சீனிவாசன், கோவிலிலேயே சாப்பிட்டுட்டாராம்.  நல்லா இருந்துச்சுன்னார்.

இங்கே கொண்டு வந்து வச்ச மெனுகார்ட் பார்த்துட்டு  கொழுக்கட்டை கேட்டால்  இல்லைன்னார் பணியாளர். நான் கேட்ட எதுவுமே இல்லைன்னதும்,  ஒரு ஜீரா ரைஸ் சொன்னேன்.  கோபாலும் தங்கையும் அவுங்களுக்கு வேணுங்கறதைச் சொல்லிட்டாங்க.

சாப்பாடு வரும்வரையில்  கண்ணை ஓட்டி எதிரில் இருந்த இனிப்புகளைப் பார்த்துக்கிட்டு இருந்தால் அங்கே இருக்கு கொழுக்கட்டைகள் இனிப்பும் காரமுமாய்!

எழுந்துபோய்   'ஸர்வர் இல்லைன்னு சொன்னாரே'ன்னு கேட்டால்.... இது செல்ஃப் சர்வீஸ் கவுண்ட்டராம். இங்கே நாமே முதலில் காசு கட்டிட்டு வாங்கிக்கணுமாம்.  அது ஒன்னும் பிரச்சனை இல்லை. நாம்  கொழுக்கட்டை  வேணுமுன்னு ஆர்டர் சொன்னப்ப, இல்லை என்று சொன்னவர் 'அங்கே செல்ஃப் சர்வீஸ் கவுண்டரில் இருக்கு'ன்னு சொல்லப்டாதோ?  இது என்ன இப்படி ஒரு வியாபாரம்? வெளங்கிரும்....
பால் பன்னு இருக்குன்னாங்க தங்கை.  அது  அவுங்க ஊர்லே ஃபேமஸாம்!  சரின்னு அதையும் வாங்கிக்கிட்டு  வந்து நம்ம மேசையில் வைக்கும்போது ஜீரா ரைஸ் வந்துருச்சு. யாருக்கு வேணும்?  பார்ஸல் பண்ணச் சொல்லி எடுத்துக்கிட்டோம். இவுங்களும் சாப்பிட்டு முடிச்சு  இன்னும் சில தீனிகளையும் வாங்கிக்கிட்டு மச்சினர் வீட்டுக்குப் போனோம்.  காலையில் தேர்வு எழுதப்போன மகன் வீட்டுக்கு  வந்துட்டார். பிள்ளை சாப்பிட்டு முடிச்சதும் நாத்தனார் வீடு.

அப்பதான்  திரும்பவும் செல்ஃபோன் பற்றிய பேச்சு வந்துச்சு. பசங்கதான் இதிலெல்லாம் ரொம்பவே ஸ்மார்ட் என்பதால் புதுசா ஒன்னு வாங்கிக்க எது சரிப்படும், எங்கெ போய் வாங்கலாமுன்னு கேட்டப்ப, இங்கேயே (வேளச்சேரி) நல்ல கடைகள் இருக்குன்னதும் போய்த்தான் பார்க்கலாமேன்னு  கிளம்புனோம்.
நம்மகிட்டே இருப்பது 11 வருசப் பழசு. நோக்கியாவின் 2005 மாடல் (nokia_6230i) பட்டன் ஃபோன். இதை இந்தியாவுக்குன்னே நேர்ந்துவிட்டுருந்தோம்.  தொலைஞ்சு போக சான்ஸே இல்லை. வேறெங்காவது   வேணுமுன்னே விட்டுட்டு வந்தால்கூட, பார்க்கறவங்க நம்மைக் கூப்பிட்டு  'என்னத்தையோ' விட்டுட்டுப் போறீங்களேன்னுருவாங்க. பிக்பாக்கெட் அடிக்கிறவன் கூட வெளியே எடுத்துப் பார்த்துட்டு அதாலேயே நம்ம தலையில்  ரெண்டு போட்டுட்டுப் போவான்.   இதுக்கு ஒரு சிம் வாங்கறதுக்குத் தலையாலே தண்ணிகுடிச்சதெல்லாம் தனிக்கதை. அப்பெல்லாம் பயங்கரக் கட்டுப்பாடு.

ஒவ்வொரு பயணத்துக்கும் அதை எடுத்துப்போய் சென்னையில் கால் பதிச்சவுடன் ஆன் செய்துட்டால்,  திரும்பி வரும்நாளில் ஏர்ப்போர்ட்டில் செக்கின் முடிஞ்சதும் வீட்டுக்குப் ஃபோன் செஞ்சு 'உள்ளே வந்துட்டோமு'ன்னு சொல்லிட்டு ஆஃப் செஞ்சுருவோம்.  எப்பவும் இந்த வெயிட் கூடுதலோ என்ற கவலையால் 'ஆபத்து இல்லை' ன்னு தகவல் தெரிவிப்பது கடமைகளில் ஒன்னு:-)

அதுலே எதாவது  டெக்ஸ்ட் கொடுக்கணுமுன்னா.......  அம்பேல். பட்டன் தட்டி அது தப்பு தப்பா எழுதி, அதை அழிச்சு மீண்டும் தட்டின்னு  முக்கால்மணி நேரமாகிரும் எனக்கு.  எனக்கும் செல்லுக்கும் தீராத  பகை. எனக்குன்னு ஃபோனே வேணாமுன்னு பிடிவாதமா இருந்தவளை இந்த  வாட்ஸ் அப் மாத்திருச்சு. நம்ம தோழிகள் கூட்டம், ஸ்மார்ட் ஃபோன் வாங்கிரு. இப்பெல்லாம் அதுலேதான் உடனுக்குடன் பேசிக்கிறோம், 'உன்னைத் தவிர' ன்னதும், அடடா.... நல்லதெல்லாம் மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கோமேன்னு இவரைத் தொணப்பி ஒரு ஸாம்சங் கேலக்ஸி எஸ் 5 வாங்கியதில் இருந்து  எல்லாமே ஈஸிபீஸியாப் போயிருச்சு.

வேளச்சேரி மெயின் ரோடில் ஒரு கடைக்குப் போனோம். ஸாம்சங் ஜே 2  ஒன்னு ஓக்கே ஆச்சு. சரி வாங்கிக்கறோமுன்னு சொன்னால் கடைக்காரர் ஸ்டாக் இல்லை, இனிமே வராது. அதை நிறுத்திட்டாங்கன்னார். அப்ப எதுக்கு டிஸ்ப்ளேலே வச்சுருக்கீங்கன்னா.....  பே பே......

சரின்னு எதிர்வாடையில் இருந்த  இன்னொரு கடைக்கு (பூர்விகா) போனால் அங்கே கொட்டிக் கிடக்கு. வாங்கறோமுன்னு சொன்னதும், பழைய நோக்கியாவில் இருந்த சிம்மை சின்னதா வெட்டி அதுலே போட்டு செய்யவேண்டியதையெல்லாம் செஞ்சு கொடுத்தாங்க.  கடையில் இருந்த மூணு இளைஞர்கள் ரொம்பவே உதவியா இருந்தாங்க. (க்ளிக்!)
அட்ரஸ் புக்லே இருந்த காண்டாக்ட்ஸ் எல்லாம் புதுசுலே அப்படியே வராமல் போயிருச்சு. நல்லவேளையா என்னிடம் பழைய  தொடர்பு எண்கள் ப்ரிண்டவுட் எடுத்துக் கைப் பையில்  வச்சது (முன் ஜாக்கிரதை!) இருந்ததால் சரிப்படுத்தினோம். இதுலே டூயல் சிம்.
பழைய ஃபோனை பத்திரமாக் கொண்டு வந்துருக்கேன். எப்பவாவது நோக்கியாக் காரன்  ஃபர்ஸ்ட் ஜெனரேஷன் போன் வேணுமுன்னு கேட்டால்  வித்துடணும்:-))))

இங்கே நியூஸியில் ரெண்டு சிம்  மாடல் எல்லாம் வர்றதில்லை. இந்தியாவுக்குன்னே ஸ்பெஷலா செய்யறாங்க போல.  (நியூஸி திரும்பினதும் இன்னொரு சிம் வாங்கிப் போட்டுக்கிட்டோம்) 

அப்புறம் எல்லோரும் ஒரு வழியா நாத்தனார் வீட்டுக்குப்போய் கொஞ்சநேரம் 'வெள்ளக்கதை'களைப் பேசிக்கிட்டு இருந்தோம். கீழ்தளம்வரை வெள்ளம். இவுங்க மாடியில் என்பதால் தப்பிச்சாங்கன்னாலும், அப்பப்பார்த்து ஊரில் சொந்தக்காரர் மரணம். அதுக்குப் போக கொஞ்சம் கஷ்டப்படவேண்டியதாப் போயிருச்சாம். கிடைச்சது படகுப் பயணம். மீண்டும் மச்சினர் வீட்டுக்கு வந்து  தங்கையையும் மகனையும்  இறக்கி விட்டுட்டு லோட்டஸுக்குத் திரும்பியாச்சு.
நாளைக்குப் பயணம் கிளம்பறோம். ஒரு நாலைஞ்சு நாளைக்கான உடைகளை எடுத்துக் கேபின் பேகில் வச்சுக்கிட்டுப் பெரிய பெட்டிகளைப் பூட்டிட்டு கீழே இருக்கும் சேஃப்டி ரூமில் வச்சுட்டுப் போகலாம்.

நீங்களும் தயாரா இருங்க.

தொடரும்...........:-)


10 comments:

said...

கொழுக்கட்டை எனக்கு ரொம்பப் பிடிக்கும்!! நிறைய படங்கள் திறக்கலை. ஒவ்வொன்றாய் தனி விண்டோவில் திறந்து பார்த்து ரசித்தேன். பழைய பேசிக் மாடல் நோக்கியாவின் உபயோகம் இன்னும் இருப்பது மகிழ்ச்சி. அதில் பேட்டரி சார்ஜ் நிற்பது போல மற்றவற்றில் நிற்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் நிறைய பின்னூட்டம் எழுதலாம். என் கணினி படுத்தும் பாட்டில் சுருக்கமாகவே 'ரசித்தேன்' என்று நிறுத்திக் கொள்கிறேன்!

:)))

said...

வாழ்த்துக்கள் ..புது phone க்கு ...

said...

New phone price?

said...

சமயபுரத்தாள் கூப்பிடும் போது போகாமல் இருக்கத்தான் முடியுமா?

அடையார் ஆனந்த பவன்ல டேபிள் செர்வீசல்லாம் இருக்கா என்னா? எப்பவும் செல்ப் சர்வீஸ்னு நெனச்சிக்கிட்டிருக்கேன் நான். கொழுக்கட்டை நல்லாயிருந்ததா?

பழைய நோக்கியா மொபைலெல்லாம் எம்.எஸ்.வி மாதிரி. செய்ய வேண்டியதை மட்டும் ஒழுங்காச் செய்யும். நல்லா உழைக்கும். சார்ஜ் ரொம்ப நேரத்துக்கு இருக்கும். பிரச்சனைகள் ரொம்ப ரொம்பக் குறைவு.

நியூசிலாந்துல டூயல் சிம் வசதி இல்லையா? அங்கல்லாம் மனிதர்கள் நேர்மையானவங்க போல. ரெண்டு மூனு நம்பர் வெச்சு மக்களை ஏமாத்தமாட்டாங்க போல. அதான் அங்க ஒரு சிம்மே எல்லாருக்கும் போதுமா இருக்கு.

said...

உழைக்கும் மகளிர் வரிசையில் உங்கள் தங்கையும் சிறக்க வாழ்த்துகள். சமயபுரத்தம்மா இங்கயும் வந்துட்டாங்களா. நல்லத்துதான். சிரத்தையாகச் செய்யும் உங்க மச்சினருக்கு வாழ்த்துகள்

said...

வாங்க ஸ்ரீராம்.

நானும் சுருக்கமாவே சொல்லிக்கறேன்,ப்ளீஸ்.

நன்றீஸ்.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

நியூஸியைப் பத்திய உங்க கணிப்பு சரிதான். டெலிகாமில் கூட, டூயல் ஸிம் பற்றிக் கேட்டதுக்கு அது தேவைன்னு நினைக்கலைன்னு சொன்னாங்க.

அடையார் ஆனந்தபவனில் முற்பகுதி டேபிள் ஸர்வீஸ். பிற்பகுதி செல்ஃப் சர்வீஸ்.

இனிப்புக் கொழுக்கட்டையைவிட உப்புக் கொழுக்கட்டை நல்லா இருந்துச்சு. அரிசி உப்புமா டேஸ்ட் :-)

said...

வாங்க வல்லி.

தங்கை தனிமடலில் பதிவைப் பாராட்டி சேதி அனுப்பினாங்க. தொழிலகத்திலும் மகளிருக்குக் காட்டினாங்களாம். எல்லோருக்கும் மகிழ்ச்சி :-)

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா!

said...

ஆஹா நிறைய தெரியாத கோயில் எல்லாம் தெரியுது...சுவாரஸ்யமான பயணம்தான்...நோக்கியா எங்கிட்டயும் அதே ஃபர்ஸ்ட் ஜெனரேஷன்...தான் ரெண்டு கிடக்குது. சார்ஜ் நிறைய நேரம் நிக்கும். எக்சிபஷனுக்கே கேட்டாக் கூட கொடுக்க மாட்டேன் ஹிஹிஹி...நான் டிஸ்ப்ளே பண்ணிடுவேன்ல வீட்டுலயே!!

கீதா