Friday, March 04, 2016

சிவமணிக்கொரு சிஷ்யப்பிள்ளை ரெடி! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 3)

ட்ரம்மா இல்லை காரான்னு  கொஞ்சம் யோசனைதான். எதுக்கும் அம்மாகிட்டே கேட்டால் ஆச்சுன்னு  கேட்டப்ப, அடிக்கறதுக்கே ஓட்டு! நம்மவரும் அதுக்குத்தான் ஓட்டுப் போட்டுருந்தார். நாந்தான் கொஞ்சம் கவனத்தை வேற பக்கம் திருப்பிப் பார்க்கலாமுன்னு நினைச்சேன்.

வர்றேன்னு சொன்னதும்,  'கேட்கணுமாக்கும். வீட்டுலேதான் இருப்போமு'ன்னு சொல்லிட்டாங்க. நம்ம ட்ரைவர் சீனிவாசனுக்கு எந்த இடமுன்னு கோடி காமிச்சால் போதும்னு சொல்லி இருக்கேன்ல. அப்படியே நேரா வீட்டாண்டை கொண்டுபோய் நிறுத்தினார்.

நம்ம ஹீரோ அப்பத்தான் குளிச்சுட்டு உடை மாத்திக்கிட்டு இருக்கார். அம்மாவும் அப்பாவும் முக மலர்ச்சியுடன் வாங்கன்னாங்க. சட்னு  ரெடியாகி வந்த ஹீரோவுக்குக் கோபாலைப் பார்த்த மகிழ்ச்சி  முகத்தில்!  ரெண்டு பேருக்கும் ஒரே வேவ் லெங்த்:-)

செட்டைப் பிரிச்சு  செட் செய்ய ஆரம்பிச்சாங்க அங்கிளும்,  அப்பாவுமா!


அடுத்த நிமிஷம் அடி ஆரம்பிச்சது.! பிறவிக் கலைஞன்டா!!!   இயல்பா வருது எல்லாமே! இப்ப சொல்றேன்... எழுதி வச்சுக்குங்க.  நம்ம கனிவமுதன் இசை உலகில் ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள்  கலக்கப்போவது  உறுதி.

அங்கே இங்கேன்னு மனசை அலைய விடாமல் ஒரே குறிக்கோளுடன் இருப்பதுதான் ஸ்பெஷாலிட்டி. இப்படிச் சொல்லும்போது  நம்ம ஐஸ்வரியாவைப் பத்தி(யும்) சொல்லணுமுன்னு தோணுது. தனியாவே அவுங்களைப் பற்றி எழுதறதுதான் நியாயம்.  இன்று மாலைக்குள் தனிப் பதிவா ஒன்னு போடப் போறேன்.


சந்துருவுக்கு என்ன ஆச்சுன்னு  தெரிஞ்சுக்குங்கோன்னு கோபாலுக்கு  ஒரு அன்பளிப்பு:-)

பாலாவும் லக்ஷ்மியும் நான் எழுதவந்த காலத்துலே இருந்தே நண்பர்கள் என்பதால் இப்ப இன்னும் சொந்தம் கூடிப்போச்சு என்பதே உண்மை:-) என் நண்பர்கள் எல்லோருமே நம்ம கோபாலின் நண்பர்கள் என்பதால் இன்னும்  ஸ்ட்ராங்கான பந்தம்!

ஒருமணி நேரம் என்னமா ஓடுச்சுன்னு இன்னமும் விளங்கலை!

கிளம்பி தி நகர் வந்தோம். பகல் சாப்பாட்டுக்கான நேரம் தாண்டி இருந்துச்சு. அதுக்காக ஒன்னுமே சாப்பிடாமல் இருப்பதா? நமக்கு வேணாமுன்னாலும் நம்ம ட்ரைவர் சாப்பிட வேணாமா?  வெங்கடநாராயணா சாலை சரவணபவனுக்குப் போகலாமேன்னு போனால்.... திருப்பதி தேவஸ்தானப் பெருமாள் சந்நிதிக் கதவு திறந்துருக்கு!   அப்படி என்ன விசேஷம் இருக்கும்?  ஒரு வேளை நம்ம சென்னை விஜயம்? ஊஹூம்... நமக்கெல்லாம்  நடக்குமா?  எதோ பெரிய இடம் வந்துருக்கு போல! அதிகார வர்க்கமா இருக்கணும்.....  நிறைய காவல்துறை மக்களைக் காண முடிஞ்சது.


வண்டியில் இருந்தே ஒரு கும்பிடு போட்டுட்டு முதல்லே  'பேட் கி பூஜா' நடத்தினோம். முடிச்சுட்டுப் பெருமாளைப் போய்ப் பார்க்கலாமே....  வேண்டாத சில ஐட்டங்களுடன் மினி டிஃபன். ரொம்ப சுமார். அதைத் தொடர்ந்து வந்த காஃபி ஓக்கே:-)

முதலில் சாப்பிட்டு முடிச்ச சீனிவாசன்,  கோவிலை மூடியாச் என்ற சேதியைக் கொண்டு வந்தார். போகட்டும், பெருமாளுக்கு அதிர்ஷ்டமில்லை.

அறைக்குப்போய் கொஞ்சநேரம் ஓய்வு. மறுபடி கிளம்பி மச்சினர் வீட்டுக்குப் போனோம். சின்னு சோகமா படுத்துருந்தது. லேசான வாலாட்டல்.
வழக்கமான உரையாடல்ஸ்.  புடவைகளைப் பற்றி பேச்சு வந்தபோது  ரெண்டு வருசத்துக்கு முந்தி மச்சினர் மனைவி அன்பளித்த புடவையை சிலாகிச்சப்ப, அது ரொம்பவே விலை மலிவுன்னாங்க.  விலையா முக்கியம்? நமக்குப் பிடிச்சிருப்பது அதி முக்கியமில்லையோ?

'அடுத்ததெருவில்தான் கடை இருக்கு அக்கா. வாங்க போய்ப் பார்க்கலாமு'ன்னு  சொன்னதால் அங்கே  போனோம். வீடுதான். கடையா மாத்தி  இருக்காங்க. ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி  நடத்தும் கடை. ஆஹா....  நம்ம சப்போர்ட் கட்டாயம் இருக்கணும். க்வீன்ஸ் வார்ட்ரோப் என்ற பெயர். கசகசன்னு  கொட்டி வைக்காமல் வெவ்வேற மாநில நல்ல வகைகளைக் கொஞ்சமா வச்சுருக்காங்க.

சிலபுடவைகளைப் பார்த்துட்டு,  இன்னொரு இடத்துக்குப்போய் அங்கே உள்ள புடவைகளைப் பார்த்துட்டு வர்றோமுன்னு  சொல்லிட்டே கிளம்புனோம்.  போன இடத்தில்  ஒன்னும் சரிப்படலை. திரும்ப இங்கேயே வந்து நாலு புடவைகளை வாங்கியாச். தங்கைக்கு (மச்சினர் மனைவி)ஒன்னு, நாத்தனாருக்கு ஒன்னு. எனக்கு ரெண்டு.  முப்பது சதம் கழிவு வேற! தங்கை இங்கே நெடுநாள் வாடிக்கையாளர் என்பதால் கூடுதல் தள்ளுபடி:-)

பூவைப் பார்த்தால் விடமுடியுதா?

எனக்கு ஏனோ பூனா ஞாபகம் வந்துச்சு. ஒருமுறை நவ்தால் பூட்டு வாங்கணுமுன்னு ஒரு கடையில் விசாரிச்சோம். விலை அதிகமுன்னு நினைச்சு,   இன்னொரு கடையில் பார்க்கலாமுன்னு போனால் அங்கே இதைவிட விலை இன்னும் அதிகமா இருந்துச்சு. என்ன ஒரு  ரெண்டு மூணு ரூபாய் அதிகம். அப்பெல்லாம் ஒரு ரூ என்பதே தங்கம் போல!  திரும்ப முதல் கடைக்கே வந்து பூட்டு வேணுமுன்னு கேட்டதுக்கு,  வேற இடத்துக்குப்போய்  கேட்டுட்டு வந்ததால்  பூட்டை நமக்கு விற்கமாட்டேன், அங்கேயே போய் வாங்கிக்கோன்னு  கடைக்காரர் சொல்லிட்டார்!!!! "ஹம் நை தேயேகா. உதரீ கரீதோ"

இது எப்படி இருக்கு? நல்லவேளை நம்ம கர்னல் அப்படிச் சொல்லலை :-)

திரும்ப வீட்டுக்கு வந்து கொஞ்சம் அரட்டை அடிச்சுட்டு அண்ணன் வீட்டுக்குக் கிளம்பினோம்.  இதுதான் லாஸ்ட் ஸ்டாப் இன்றைக்கு.


மகனுக்கு வாங்கி இருக்கும் வண்டி. நம்மவருக்கு ஓட்டிப்பார்க்க ஆசைதான். ஆனால்... முட்டுக்கட்டை போட ஒருத்தி இருக்கேனே!

நம்ம சீனிவாசனுக்கு நம்ம உலா விவரங்கள் அத்துபடி என்பதால் யார்வீட்டுக்குப் போறோமுன்னு ஒரு சொல் சொன்னால் போதும். அங்கே கொண்டுபோய் சேர்த்துருவார்.

ராச்சாப்பாடு அண்ணன் வீட்டில். எலிக்கான வடைகள்  காத்திருந்தது.

இன்றைக்கு இட்லி வடையில் ஆரம்பிச்சு அதே இட்லி வடையில் முடிச்சாச்சு.

முதல்நாள் சுத்து முடிஞ்சு அறைக்கு வந்து சேர்ந்தோம். இனி நாளைக் கதை நாளைக்கு.

குட்நைட்.

தொடரும்...... :-)


9 comments:

said...

துணிக்கடை நல்லா இருக்குப்பா.
கனியும் ட்ரம்ஸ்களும் சூப்பர். கோபால் துளசி கனிவில் கண்ணன் சிரிப்பை எங்களால் பார்க்கமுடிந்தது. கட்டாயம் நல்லா வருவான்மா.

இதமான வேலையில் மல்லிகை சூடும் ஓர்ப்படிக்கு வாழ்த்துகள்.
இட்லிவடையிலேயே ஓட்டீ விட்டீர்களாப்பா.>(

அவங்க வீட்டு மணிப்ளாண்ட் நல்லா வளந்திருக்கு.

said...

// போகட்டும், பெருமாளுக்கு அதிர்ஷ்டமில்லை.// //எலிக்கான வடைகள் காத்திருந்தது.//

:)))))

said...

மகிழ்வான தருணங்கள் ...

said...

அந்த மொரு மொரு தோசையும் உளுந்து வடை சட்னியும் பார்த்து பசி வந்திருச்சி :)
ஸாரீஸ் கண்ணை அள்ளுதே !! ட்ரம்சை அந்த குட்டி என்னே ஆர்வமா பார்க்கிறான் !சந்தோசம் கொள்ளையாய் தெரியுது அந்த குட்டி முகத்தில்

said...

ஹஹஹஹ பெருமாளுக்கு அதிர்ஷ்டமில்லை.....எலிக்கான வடைகள் எல்லாம் ரசித்தோம்..அடுத்த சுற்றிற்குப்போகிறோம்..

said...

பயணம் இனிதானது..... தொடரட்டும். நானும் தொடர்கிறேன்.

said...

// நம்ம கனிவமுதன் இசை உலகில் ஒருநாள் இல்லாட்டி ஒரு நாள் கலக்கப்போவது உறுதி.//

உங்கள் வாக்கு (டீச்சர் அல்லவா) நிச்சயம் பலிக்கும் .

said...

வாங்க வாங்க நண்பர்களே!

பின்னூட்டிய அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!

said...

பிச்சி மணக்குது..