Wednesday, March 09, 2016

பொங்கலுக்கும் புத்தகங்களுக்கும் ஒரு பிணைப்பு இருக்குதோ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 5)

முதல் கட்ட சேதிகளின்படி 20 ஆம்  தேதி கடைசி நாள் என்பதால்  நாளை வரை காத்திருக்காமல் இன்றைக்கு (19 ஆம் தேதி) போயிட்டு வந்துடலாமேன்னு  கோபால் சொன்னதை உடனே  சரின்னு ஏத்துக்கிட்டேன். இந்தமுறை ஒய் எம் சி ஏ ராயப்பேட்டையாம்.

 சென்னை வெள்ளப் பாதிப்பு காரணத்தால் ஏற்பட்ட கஷ்டநஷ்டங்களில் பதிப்பகங்களும் ரொம்பவே அடிபட்டிருக்குன்னு தகவல். ஏராளமான புத்தகங்கள் நீரில் மூழ்கிருச்சுன்னு கேட்டப்ப 'ஐயோ'ன்னு இருந்துச்சு. வழக்கமா ஜனவரியில் நடக்கும் புத்தகத் திருவிழாவை ஏப்ரலுக்கு மாத்தப்போவதாத்தான் சொன்னாங்க.

நமக்குப் போகச் சான்ஸ் இல்லையேன்னு  கவலையும் பட்டு மனதையும் ஒருமாதிரி தேத்திக்கிட்ட சமயம், சின்ன அளவில் விழா நடத்தப்போவதாக ஒரு சேதி வந்து பால் வார்த்தது. இதோ கிளம்பியாச்சு.

இருநூற்றுச் சொச்சம் கடைகளுடன், டாக்டர் ஏ பி ஜே. அப்துல்கலாம் அரங்கு! நுழைவு நன்கொடை ஐந்து ரூபாய்.



வேலைநாளாக இருந்தாலும் கொஞ்சம் மக்கள்கூட்டம் இருந்தது. வாசிப்புப் பழக்கம் இன்னும் போகலை என்பது மகிழ்ச்சியே!


தாகம் தீர்க்க ஜூஸ் கடை ஒன்னு.  ஜூஸை வாங்கிக் குடிச்சுட்டு , மற்ற  வசதிகள் எப்படி இருக்குமோன்னு பயம் வந்ததால் ...  ஜூஸ் வேணாமுன்னு ஒதுக்கவேண்டியதாப் போச்சு.

ஸ்டால்களைப் பார்த்துக்கிட்டே, ஒன்னுரெண்டு புத்தகங்களை வாங்கியபடியே  நகர்ந்து போனதில் 'சந்தியா' வுக்குப் போயிருக்கோம்.


பதிப்பாளருக்கு நம்மைக் கண்டதும் வியப்பு! சட்னு உதவியாளரிடம் அஞ்சு அக்காக்களை எடுத்துவரச் சொல்லிட்டு, எப்ப வந்தீங்கன்னார்:-)



இன்னும் ஒரு வாரத்துக்கு  திருவிழாவை நடத்திக்கச் சொல்லிட்டாங்கன்னு சொன்னார். அப்ப இன்னொருமுறை வரமுடிஞ்சா நல்லா இருக்குமுன்னு தோணுச்சு. நம்மாட்கள் யாராவது தெம்படறாங்களான்னு கண் பயணிச்சது. மருந்துக்குக்கூட  யாரையும் காணோம். (என்னவோ எல்லாரையும் பார்த்தவுடன் கண்டுபிடிச்சுரும் போல!)

சந்திரஹாசம் என்ற புத்தகத்துக்கு பிரமாண்டமான விளம்பரங்கள்  எங்கே பார்த்தாலும்!


இன்னொரு  ஸ்டாலில் தமிழில் குர் ஆன் இலவசமாக் கொடுத்தாங்க.  படிச்சுத்தான் பார்க்கலாமேன்னு  கை நீட்டினோம். சாஜிதா புக்  சென்ட்டர் நிறைய தலைப்புகளில் புத்தகங்கள் போட்டுருக்காங்க.

சுதந்திரப்போராட்டத்தில் முஸ்லீம்களின் தியாகங்கள்....  வாங்கி இருந்துருக்கலாம்னு...........  இப்போ தோணுது :-(

ஸ்ரீபாலகங்கை பப்ளிகேஷன்ஸில் பத்து ரூபாயில் புத்தகங்கள்!!!!


கிழக்கில்.......... வழக்கம்போல் சுஜாதாவின் ஆளுமை!

உயிர்மையிலும் கோலோச்சியவர் சுஜாதாதான்!

யானை!  இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன்!


ஸூட்கேஸைத் தள்ளியபடி ஒருத்தர்  புத்தகங்களை எடுத்துப் பின்னட்டைகளை பார்த்துக்கிட்டு இருந்தார். ஊருக்குக் கிளம்புனவர் அப்படியே இங்கே வந்துட்டாரோன்னு மெள்ளப் பேச்சுக் கொடுத்தேன். புத்தகத் திருவிழாவுக்குப் புத்தகங்கள் வாங்கத்தான்  ஸூட்கேஸோடு வந்துருக்கார்.  வாட் அ நீட் ஐடியா!!!  எனக்குத் தோணாமப் போச்சே...... ஆனால்  அவருக்கு ரெண்டு கை நமக்கு நாலுன்னு சொல்லிக்கிட்டேன் மனசுக்குள் :-)

ஆன்மீகம், சமையல் எல்லாம்  இன்னும்  மவுஸோடு நல்லாவே போகுதாம்!

காவ்யாவில் நம்ம பெருமாள் முருகனைப் 'பார்த்தவுடன்', இனி எழுதப்போவதில்லை என்று  முடிவெடுத்த சம்பவம் நினைவுக்கு வந்து கொஞ்சம் படுத்துச்சு. ஆனால் அவர் படைப்புகளை வச்சு  இன்னொருத்தர் ஒரு புத்தகம் போட்டுருக்கார்.



இதுக்குள்ளே நம்ம கையில் ஒரு பத்து புத்தகங்கள் வந்துருக்கு.  மனசில் வச்சுருந்த லிஸ்ட் காணாமப்போய் இருந்தது. சில புத்தகங்கள் தலைப்புக்காகவே வாங்க வச்சுருச்சு. அதுலே ஒன்னு.... 'உபரி வடைகளின் நகரம்'. ஹா....  நம்ம சமாச்சாரம் இவுங்களுக்கும் தெரிஞ்சு போச் :-)

ஆனா சும்மாச் சொல்லக்கூடாது..........  சில புத்தகங்களின் முகப்பு அட்டை பிரமாதம்!
சந்திரஹாசம் ஸ்டாலுக்கு வந்துருந்தோம். எதோ கடற்கொள்ளைக்காரரின் கூடாரம் போல் இருக்கேன்னு உள்ளே நுழைஞ்சோம். சினிமா செட்!  ஆ. வி. போட்டுருக்கு! வெங்கடேசன் என்றதும்  காவல்கோட்டையான்னு கேட்டதுக்கு ஆமாம் என்ற பதில். க்ராஃபிக் நாவலாம். தமிழில் புது முயற்சி. கதை கேட்கன்னு ஒரு ஆப்(பு) இருக்கு. அது இலவசம்தானாம். புத்தகத்துக்குள்ளே அதுக்கான பாஸ்வேர்ட் இருக்குமாம்.  மகள் ஒரு வேளை கதை கேட்பாளோ என்ற நப்பாசையில் வாங்கலாமேன்னார் நம்மவர்.



கதை கேட்க எப்படி இருக்கும் என்று போட்டுக் காமிச்சாங்க. சரின்னு வாங்கினோம். உடனே நம்மை புத்தகத்தோடு ஒரு போஸ் க்ளிக்கினாங்க.  விகடனில் ஒரு சிறுகுறிப்போடு படம் வருமாம். சிறுகுறிப்புக்கான தகவலைச் சொல்லிட்டு வந்தார் நம்மவர். (வந்ததான்னு தெரியாது.) 


பில்ராத் ஆஸ்பத்திரிக்காரங்க ஒரு ஸ்டால் போட்டு,  மருத்துவப் பரிசோதனைகளுக்கு விலைகுறைப்பு பட்டியல் போட்டு வச்சுருக்காங்க.


ஒன்னரை மணிக்கூறில்  ஒருவழியா  ஒரு சுத்து வந்தாச்சு. தடுக்கிவிழும்படி இல்லாமல் தரைவிரிப்பு எல்லாம் நல்லபடியாவே போட்டு வச்சுருந்தாங்க. அப்படியே தடுக்கி விழுந்தாலும் புத்தகக்கடையில் போய்த்தான் விழுவோம்:-) பார்க்கிங் தொல்லையும் இல்லை.  அமைப்பாளர்களுக்கு பாராட்டுகள்.



கிளம்பி தி. நகருக்கு வந்து,  பாண்டிபஸார் ப்ளவுஸ் பீஸுக்கான ஷாப்பிங் தொடங்குச்சு. இது மகளுக்கான ஷாப்பிங் என்பதால் கவனம் தேவை!  ஒரு காலத்தில் தைச்ச மேட்ச்சிங் ப்ளவுஸ்கள் எல்லாம்  சின்னத்தாப் போயிருக்கு! இப்பத்தான் தெரியுது அவளிடம் இருக்கும் புடவைகளின் எண்ணிக்கை என்னிடம் இருப்பதைவிடக் கூடுதல்னு!

சரி எப்படியோ.... புடவை கட்டுனாச் சரி. பாரம்பரியம் காப்பாற்றப்படட்டுமே!

தையல் கடைக்குப்போய் மகளின் ஆணைக்கிணங்க  நம்ம முஸ்தாஃபா மாஸ்டரிடம் வழிமுறைகளை விளக்கிச் சொல்லிட்டு அப்படியே காஞ்சிபுரத்தில் வாங்கிய நமக்கானவைகளையும் தைக்கக் கொடுத்துட்டு  சரவணபவனுக்குப் போய்  சூடா ஒரு பஜ்ஜியும்  காஃபியும் ஆச்சு.  எதுக்கும் வழித்துணைக்கு  இருக்கட்டுமேன்னு  கொஞ்சம் நொறுக்ஸ்.

அப்படியே திரும்பி அறைக்கு வரும் வழியில் பழமுதிர்ச்சோலையில் கொஞ்சம் பழங்களும் ஒரு தயிரும்.

ராத்திரி சாப்பாட்டுக்கு இங்கேயே எதாவது ரூம் சர்வீஸில் சொன்னால் ஆச்சு. இல்லையோ!

தொடரும்........:-)

PINகுறிப்பு:  இன்னும்  அங்கெடுத்த  புத்தகத் திருவிழாப் படங்களை ஃபேஸ்புக் ஆல்பத்தில் போட்டு வச்சுருக்கேன். நேரமும் விருப்பமும் இருந்தால் க்ளிக்கலாம்


12 comments:

said...

புத்தக வேட்டை..... நடக்கட்டும்!

தொடரின் மற்ற பகுதிகளுக்கான காத்திருப்புடன் நானும்.

said...

உங்க கூட இவ்ளோ சுத்தியிருக்கேன். காலே வலிக்கலை துள்சிக்கா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்வதற்கு நன்றிகள்.

said...

வாங்க சாந்தி.

உங்களை என் தோளில் சுமந்து கொண்டுபோய், காண்பிக்கும்போது கால் எப்படி வலிக்குமாம்!!!

said...

எவ்வளவு புத்தகங்கள். கண்ணைப் பறிக்கிற மாதிரி. ஐந்து அக்கா கொடுத்தாரா. அட.
சந்திர ஹாசம் வாங்கினீங்களா.இத்தனை புதுமைகள் வந்திருக்கின்றன பதிப்புலகில்.

சூட்கேஸ் மனிதர் பிரமாதம் நோகாமல் வாங்கிக் கொண்டு செல்ல நல்ல வழி.
மீண்டும் படங்களைப் பார்க்கப் ம்போகிறேன் மிக நன்றி துளசி.
ப்ளௌஸ் கடை சூப்பர்.,

said...

இந்த முறை புத்தகத் திருவிழா பக்கம் போவதில்லை என்ற விரதம் வைத்திருக்கிறேன்.

சந்திரஹாசம் என்ன மாதிரி புத்தகம் என்று புரியவே இல்லை. அவ்வப்போது ஆ.வியில் விளம்பரம் வரும். ஒன்றும் புரியாது. நான் ஆ வி வாங்குவதால் சொல்கிறேன்.. இதுவரை உங்களைப் பற்றிய குறிப்பு வரவில்லை!

:)))

said...

உங்களுடனான பயணம் எங்களுக்கு அலுப்பைத் தருவதில்லை. அதிக மகிழ்ச்சியையும், படிக்கும் ஆர்வத்தையும் தருகிறது.

said...

இந்த முறை புத்தகக் கண்காட்சிக்குப் போகக் கொடுத்துவைக்கல. நீங்க கெடச்ச நேரத்துலயும் விடாம போயிட்டு வந்துட்டீங்க. சூப்பர்.

பெங்களூரில் இருந்த போது குரான் தமிழ் மொழிபெயர்ப்போட ஒரு நண்பர் கொடுத்தாரு. அத சென்னைக்கு மாறி வரும்போது எங்கயோ விட்டுட்டேன். அதே பெங்களூர்ல ஒரு ஆட்டோ டிரைவர் எனக்கு பைபிள் கொடுத்தாரு. அதுமட்டும் எப்படியோ என் ஷோல்டர்பேக்ல வந்துருச்சு. இன்னும் என் ஷோல்டர்பேக்ல இருக்கு.

சூட்கேசோட புத்தகக்கண்காட்சிக்குப் போறது நல்ல திட்டமா இருக்கே.

சந்திரகாசம் படிச்சீங்களா? எப்படி இருந்தது? டிவிட்டர் பேஸ்புக்ல அதுக்கு அவ்வளவு விளம்பரம் பண்ணாங்க.

said...

இம்முறை புத்தக ஸ்டால்கள் வெள்ளத்தில் பாதிப்பு இல்லாத பதிப்பகத்தார்கள் போட்டதாகச் சொன்னார்கள். போக முடியவில்லை.

பெட்டியோடு புத்தகம் வாங்கப் போறது நல்லாருக்கே..நல்ல ஐடியாதான்..

சந்திரகாசம் செம விளம்பரம்.

தொடர்கின்றோம்

said...

சந்திரஹாசம் எப்படின்னு சொல்லுங்க

said...

புத்தகத் திருவிழா என்றாலே வாசிப்பு பழக்கம் உள்ள புத்தகப் பிரியர்களின் மனதில் குதூகலம்தான். இந்த பதிவையும் படங்களையும் ஏற்கனவே படித்து விட்டேன். இப்போது ஆர்வம் காரணமாக திரும்பத் திரும்ப பார்த்தேன்.

திருச்சியிலும் சென்ற வாரம்தான் புத்தகத்திருவிழா நடந்து முடிந்து இருந்தது. அங்கு இருந்த சந்தியா பதிப்பகம் சென்றபோது ஜீவியின் நூல் ஒன்றை வாங்கி விட்டு, துளசி டீச்சர் எழுதிய புத்தகம் வேண்டும் என்றேன். விற்பனையாளார் , நீங்கள் எழுதிய ‘அக்கா’ என்ற நூலை மட்டும் எடுத்துக் கொடுத்தார். நான் அந்த பையனிடம் “அவர் எழுதிய நியூசிலாந்து, செல்லப்பிராணிகள் பற்றிய புத்தகங்களூம் வேண்டும் ‘ என்றேன். ”அவைகளை எடுத்து வரவில்லை. ஆன்லைனில் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார். “ என்னப்பா, அவர் ஒரு பிரபல வலைப்பதிவர். அவர் எழுதிய எல்ல நூல்களையும் கொண்டு வரவேண்டாமா/’ என்று சொல்லி விட்டு, அக்கா என்ற நூலை மட்டும் வாங்கினேன். இனிமேல்தான் படிக்க வேண்டும்.

said...

இது வரை ஆ.வி.யில் சிறுகுறிப்பு வந்ததாக தெரியவில்லை...அக்கா




சிவபார்கவி
திருச்சி
9842830416