Friday, March 18, 2016

சுருட்டபள்ளி சீதா! ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 8)

காசிப்பயணத்தில் நம்ம சங்கரமடத்துக் கோவிலில் முதல்முதலா ஆலகாலம் விழுங்கி மயங்கிக்கிடக்கும் சிவனைப் பார்த்ததுமுதல், ஐயோ பாவம்னு அவர்மேல்  ஒரு அன்பும்  இரக்கமும் தோணியிருந்துச்சு.  இதே கோலத்தில்  ஒரு ஊரில் இருக்கார்னு தகவல் கிடைச்சதும் போகத்தான் வேணுமுன்னு முடிவு செஞ்சுக்கிட்டேன்.
மேலே படம்: காசி சங்கரமடம் கோவில்.


பயணம் போக விரும்பும் இடங்களை நம்மவரிடம் சொன்னால் போதும். அதுக்கேத்த திட்டம் ஒன்னு அமைச்சுருவார். நம்ம 108 தலங்களில்  எதாவது ஒன்னு தரிசனம் செய்யப்போகும்போது அப்படியே  கொஞ்சம் கிளைபிரிஞ்சு போய் வரும்படி  நம்ம விருப்பத்தையும் சேர்த்துக்குவார்.   அப்படித்தான்  இப்பவும்........


கண் முழிச்சதும் டிவியில்  பெருமாள் தரிசனம்! நல்ல சகுனம்:-) குளிச்சு முடிச்சு தயாராகி ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போறோம். நாம்தான் போணி!  நமக்குப் பிரியாவடை ஸ்பெஷலா மசால்வடை. ஆஹா...  ரெண்டு என் கணக்கில். பைனாப்பிள் கேசரியும் ஓக்கே!  கடந்த  ரெண்டுநாளா பள்ளிக்கூட யூனிஃபாரத்தில் ஒரு சின்னப்பிள்ளையை டைனிங்ஹாலில் பார்த்துக்கிட்டு இருக்கேன். சாப்பிடப் பாடாய் படுத்தும்! பாட்டி இட்லித் தட்டைக் கையில் எடுத்துக்கிட்டு பின்னாலேயே ஓடிப்போய் ஊட்டிவிடுவாங்க. ஸ்கூல் வேன் வந்து லோட்டஸுக்கு முன்னால் நின்னதும் கூட்டிப்போய் வண்டியில் ஏத்திட்டு வருவாங்க.

இன்றைக்கு நாம் சாப்பிட்டு முடிச்சுக் கிளம்பும்நேரம் பாட்டியும் பேத்தியும் உள்ளே நுழைஞ்சாங்க. கொஞ்சம் பேச்சுக் கொடுத்ததில்  காரணம் தெரிஞ்சது.  வெள்ள பாதிப்பு அதிகம். ஆலந்தூரில் வீடு.  ரிப்பேர் வேலைகள் நடப்பதால் இப்ப ஒரு பத்து நாளா இங்கே தங்கி இருக்காங்க. இன்னும்  ஒரு  நாலைஞ்சு நாள்  ஆகுமாம், வேலைகள் முடிய. பள்ளிக்கூடத்து வேன் இங்கே வந்து புள்ளையைக் கூட்டிப் போகுது.

அறையைக் காலி செஞ்சு  பெரிய பெட்டிகளை சேஃப்டி ரூமில் வச்சுட்டு இதோ கிளம்பி போரூர் வழியா திருவள்ளூர்  நோக்கிப்போறோம்.  ஒரு இடத்தில் நம்மைக் கடந்து போனது  நீலக்கலர் விளக்கு  வச்ச அரசாங்க வண்டி.  உள்ளே கலெக்டர் அம்மா.
சென்னை வெள்ளம் எபிஸோடில்  சட்டத்தின் படி  நடந்துக்கிட்டவங்க எல்லாமே பெண் அதிகாரிகள்தான். முறையற்ற கட்டடங்களை இடிக்கச் சொல்லி நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரிகள்ன்னு  வாசிச்சப்பயே...  மாற்றல் உறுதின்னு நினைச்சேன்.  அதே ஆச்சு.   நேர்மையான அதிகாரிகளுக்கு  இதுதான் கதி. அவுங்க வண்டியைப் பின் தொடர்ந்தே நிதான வேகத்தில் போறோம்.  அவுங்க வண்டி  கலெக்டர் ஆஃபீஸுக்குள் நுழைஞ்சது.  நாங்க  அதைக் கடந்து  ஊத்துக்கோட்டை சாலையைப் பிடிச்சாச்சு.

கிளம்பின ரெண்டேகால் மணி நேரத்தில் சுருட்டபள்ளி கோவிலுக்கு வந்துருக்கோம். வெறும் 74 கிமீ தூரம்தான். சாலை லக்ஷணம் அப்படி :-( வழியில் ஆந்திர எல்லையைத் தொட்டதும், சீனிவாசன் போய் பெர்மிட் வாங்கிக்கிட்டு வந்தார்.  ஒரு வாரத்துக்குத் தர்றாங்க.  ட்ராவல்ஸ் வண்டி என்பதால்  கூடுதல் காசு கைமாறுச்சுன்னு தனியா சொல்ல வேணாம்தானே :-(

ஒருமேடையில் பெரிய நந்தி அழகாக் கால் மடிச்சுப்போட்டு உக்கார்ந்துருக்கு! அதன் பார்வைக்கு நேரா ஒரு அஞ்சடுக்கு கோபுரம்.

இடதுபக்க மண்வெளியில் நாலைஞ்சு கடைகளும் கார் பார்க்கும்.
கோபுரவாசலில் எதோ கோவில் சமாச்சாரம் தெலுகு மொழியில். ஆனால் சிறப்பு தரிசனத்துக்கு ரூ 50 என்பது மட்டும் தமிழிலும் எழுதியிருந்துச்சு.  விசேஷநாளொன்னும் இல்லையே.... நமக்கு சாதா தரிசனமே போதுமுன்னு உள்ளே நுழைஞ்சோம்.
படம் எடுக்க அனுமதி இல்லைன்னு தெரிஞ்சதும் மனம் விம்ம, விடுவிடுன்னு மூலவரை தரிசனம் பண்ண ஆசையோடு உள்ளே போனால் லிங்க ரூபத்தில் இருக்கார் வால்மீகீஸ்வரர்.  தீபாராதனை  காமிச்சு விபூதி பிரசாதம் கிடைச்சது. இவருக்குத் துவாரபாலகரா இருப்பவர்கள்  சங்கநிதியும் பதுமநிதியுமாம்! எதிரே  இன்னொரு சந்நிதியில் இன்னொரு லிங்கம். இவர் ராமலிங்கம்.  இந்தப் பக்கம்  குட்டியா குகை போல உள்ளடங்கி இருக்கும் சந்நிதியில்  ராமர் சீதா, லக்ஷ்மணர், பரதன் சத்ருகன், ஆஞ்சநேயர்னு முழுக்குடும்பமும் ஒன்னா  இருக்காங்க.
உள்பிரகாரம் சுற்றிவரும்போது வல்லப கணபதி, செல்வ கணபதி, நர்த்தன கணபதி, பால கணபதி, மோக்ஷ கணபதி, சுந்தரகணபதின்னு   ஏகப்பட்ட புள்ளையார்கள், சூரியன், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமண்யஸ்வாமி,  சாஸ்தா,   ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி, லிங்கோத்பவர், ப்ரம்மா, வால்மிகி முனிவர், காசி விஸ்வநாதர், குபேரன்  இப்படி  சின்னச்சின்ன சிலைகளா நிறைய சாமிகள்.  முப்பத்துமுக்கோடி தேவர்கள் என்பது உண்மைதான்!


இவர் ஏகபாத த்ரிமூர்த்தி!


நம்ம வால்மீகி முனிவர்  ராமாயணம் எழுத ஆரம்பிக்குமுன் இங்கே வந்து சிவனை வணங்கி தவம் செய்து சிவதரிசனம் கிடைச்சதும் எழுத ஆரம்பிச்சாராம். அதான்  ராமர் குடும்பம் முழுசும் இருக்கோ !

கருவறைக்கு இடதுபக்கம் தனிச்சந்நிதியில் அம்பாள் மரகதாம்பிகை.  இங்கே துவாரபாலகரா இருப்பவை  காமதேனுவும் கற்பகவிருக்ஷமும்! முதலில் அம்பாளைக் கும்பிட்டபின்தான் வால்மீகீஸ்வரரை தரிசிக்கணுமாம்.  நமக்குத்தான் எப்பவும் ஒரு அவசரம் இருக்கே... கோவிலுக்குள் நுழைஞ்சதும் மூலவரை நோக்கி ஓடும் கால்கள்:-(

வெளிப்ரகாரம் சுற்ற ஆரம்பிச்சதும்  ஒருவேளை  பள்ளிகொண்டேஸ்வரர் வேறொரு கோவிலாக இருக்கணுமுன்னு நாங்க பேசிக்கிட்டே, அங்கே நமக்குப்பின்னால் வந்துகொண்டிருந்தவர்களிடம் கேட்கலாமுன்னு  ஆரம்பிக்கும்போதே அடுத்த கோவிலில் இருக்கார்னு சொன்னாங்க, தமிழில்.  இதே வளாகத்தில் இப்ப நாம் பார்த்த கோவிலுக்குப் பக்கத்திலேயே  தனிக்கோவிலா இன்னொன்னு இருக்கு. வலம் வரும்போது ரெண்டு கோவிலுக்கும் ஒரே சுத்துதான்.
பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தன்னு  கட்டங்கட்டமா  கம்பித்தடைகளை வச்சு நம்மைப் படுத்தறாங்க. யாருமே இல்லைன்னாலும் கம்பிவழியா சுத்திச்சுத்திப்போறது அலுப்பா இருக்கு. விசேஷநாட்களுக்கு மட்டும் வச்சுட்டு எடுக்கும் வகையில் அமைக்கக்கூடாதா?

இங்கேதான் பள்ளிகொண்டேஸ்வரர் கிடக்கிறார். நல்ல பெரிய உருவம்தான். ஆறடிக்குக் கொஞ்சம் கூடுதலா இருக்கலாம். நஞ்சுண்டேஸ்வரர்!  ஆலகாலம் விழுங்கி விஷத்தின் கடுமையால்  மயக்கத்தோடு கீழே கிடக்கும் ஈஸ்வரன் தலையைத் தன்மடிமேல் தாங்கியவண்ணம் பார்வதி உக்கார்ந்து இருக்காங்க.  சட்னு பார்த்தால் பெருமாளின் கிடந்த கோலம்! அதுக்கேத்த மாதிரி  தீப ஆரத்தி எடுத்ததும் துளசிதீர்த்தம்தான் பிரஸாதம்!  சடாரி மட்டும்தான் இல்லை. சந்தேகக் கண்களுடந்தான்  ஸேவிச்சுக்கிட்டு இருந்தேன்.
கிடக்கும் சிவனைச் சுற்றி  தேவர்களும் முனிவர்களுமா நிக்கறாங்க.  பாற்கடலைக் கடைஞ்சு  கடைசியில் அமுதம் கிடைச்சபிறகுதான்  நஞ்சுண்டவனின் நினைவு வந்துருக்கு.  அச்சச்சோ.... என்னாச்சோன்னு  ஓடி வந்து நிக்கறாங்க.

இந்த சம்பவம் பற்றி முன்பு (காசிப் பயணத்தில்) எழுதுனது இங்கே. அப்பப்ப சுயவிளம்பரமும் வேண்டித்தான் இருக்கு.பிரதோஷகாலம் இங்கே ரொம்பவே விசேஷமாம்.  அதுவும் சனிக்கிழமை வரும் பிரதோஷமுன்னா  கேக்கவே வேணாமாம்!  மாதம் ரெண்டுமுறை வரும் இந்த நாட்களில்  சுமார் பதினைஞ்சாயிரம் பேர் தரிசனத்துக்கு வர்றாங்களாம்.  சிவராத்ரின்னா  டபுள்  டபுள்!

 டபுள்ன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது, இங்கே கோஷ்டத்திலும் சந்நிதிகளிலும் இருக்கும் எல்லா தெய்வங்களும்  தத்தம் மனைவி/ மனைவியரோடுதான்  இருக்காங்க.

தக்ஷிணாமூர்த்தி கூட தன் மனைவியோடுதான் (பெயர் கௌரி ) இருக்கார். சாஸ்தாவும் பூரணா  அண்ட் புஷ்கலான்னு இருவருடன்!

இதனால் இந்தக் கோவிலில் வந்து வழிபட்டால் தம்பதிகள் ஒற்றுமையோடு இருப்பாங்கன்ற நம்பிக்கை. (நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குதோ!)  போகட்டும், நானும் ஒருநாளைக்குக் கோபாலுடன் சண்டை போடாமல் இருந்து பார்த்தால் ஆச்சு!  பாவம். அவருக்குத்தான் போரடிச்சுரும்.

துர்வாசமுனிவரின் சாபத்தால் பதவியும் பலமும் பறிபோன இந்திரனுக்காகத்தானே பாற்கடல் கடைந்த சம்பவம் ஆச்சு என்பதால் பதவி போனவர்கள் இங்கே வந்து கும்பிட்டால் போனது கிடைச்சுருமுன்னு சொல்றாங்க.

எப்படியோ கூட்டம் கூடக்கூடக் கோவில் வருமானம் அதிகமாகுதே! எல்லாக் கடவுளர்களுக்கும் வெள்ளிக் கவசம் பளிச்ன்னு  இருக்கு! நல்லா இருக்கட்டும்.
கோவில் தினமும் காலை 6 முதல் பகல் 1 வரையும்,  மதியம் 3.30 முதல்  இரவு 8.30 வரையும் திறந்து வைக்கிறாங்க. பிரதோஷநாட்களில்  முழுநாளும்  மூடுவதே இல்லை!

1971 இல் நம்ம மஹாபெரியவா இங்கே 40 நாள் கேம்ப். அப்போ ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தோண்டச் சொல்லி இருக்கார்.  கிடைச்சது ஒரு நீளக் கல்பாளம். அதுலே சின்னச்சின்னக் காலடித் தடங்களா பதிஞ்சு இருக்கு.  அவை நம்ம ராமனின் மகன்களான குசலவர்களின் கால் தடம் என்று சொன்னாராம்.
(சுட்ட படம்.  படத்துக்குச் சொந்தக்காரருக்கு நம் நன்றி.)


மேலும் இடது தொடையில் அமர்ந்துருக்கும் மனைவியுடன் ஒரு தக்ஷிணாமூர்த்தி சிற்பமும் கிடைச்சதாம். நாம் கோஷ்டத்தில் தரிசித்தது இவர்களைத்தான்.

வெளியே வரும்போது நமக்காக சீதா காத்திருந்தாள். சுருட்டபள்ளி சீதா, அழகோ அழகு! கொஞ்ச நேரம் கொஞ்சிட்டு  'ஜனகரு'க்குக் கொஞ்சம் அன்பளிப்பு கொடுத்துட்டுக் கிளம்பினோம்.


சலாம் மேடம்:-) அரைமணிதான் ஆகி இருக்கு இவ்ளவும் பார்க்க! பேஷ் பேஷ்!

வாங்க அடுத்த ஊருக்குப் போகலாம்!

தொடரும்.......:-)


குறிப்பு: கடவுளர் படங்கள் கோவிலின் வலைப்பக்கத்தில்  இருந்து  சுட்டவை. அன்னாருக்கு நன்றிகள்.


19 comments:

said...

சீதா அழகி. சுருட்டப்பள்ளின்னால் பார்வதி அல்லவா வந்திருக்கணும்.
புலித்தோல் இல்லாட்ட அவர் பெருமாள் தான்.
இங்கதான் கர்ப்பிணி சீதையும் இருக்காளோ. லவகுசா பாதங்கள் இருக்கே அதுதான் கேட்டேன்.

said...

அழகிய புகைப்படங்கள்.

said...

ஆஹா.... வாங்க வல்லி.

பார்வதி ரொம்ப பிஸி. கணவர் தலையை மடியில் வச்சுக்கிட்டு ஆடாம அசையாம கோவிலுக்குள் உக்கார்ந்துருக்காங்க.

நம்ம சீதா.... ஜாலியா வெளியில் இருக்கிறாள் :-)

கர்ப்பிணி சீதை, நம்ம கோயம்பேடில் இருக்காளே!!!!

said...

உங்களுடன் கோயில் உலா வந்தோம், பதிவு மூலமாக. நன்றி.

said...

அருமையான தரிசனம்..

said...

விடுபட்ட பகுதிகள் அனைத்தையும் ஒரு சேர இன்றைக்கு தான் படிக்க முடிந்தது. பயணத்தில் நானும் தொடர்ந்து உங்களுடன் வருகிறேன் என்பதில் மகிழ்ச்சி.

said...

சயன சிவபெருமான் அருமையான தரிசனம். தினம் திருவள்ளுர்வரை வந்தும் கூட இன்னமும் தரிசிக்க கூப்பிடவில்லை :-(

இப்ப சென்னை-திருவள்ளூர் சாலை அருமையா மேல் பூச்சு பூசப்பட்டு வழவழனு இருக்கு. மழைக்கு தாங்குமா என்பது சந்தேகமே.

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசிப்புக்கு நன்றீஸ்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

உலாவில் கலந்து கொண்டதற்கு நன்றி.

said...

வாங்க சாந்தி.

டேங்கீஸ்ப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உங்க பக்கத்திலும் எனக்கு ஏராளமா விட்டுப் போயிருக்கு. பார்க்கலாம் எப்போ முடிக்கப்போறேன்னு!

தொடர்வதற்கு நன்றிகள்.

said...

வாங்க நன்மனம்.

திருவள்ளூர்வரை வந்தால் போதாதே..... இன்னும் 23 கிமீ பயணம் ஆந்திர எல்லை வரை போகணும். ஊத்துக்கோட்டை சாலை.

said...

அருமை ..

சீதாவின் கால் விரல்கள் ...ரொம்ப நீளம்

said...

என்னது, 108 திவ்ய தேசங்களுக்கு பயணமா?

அப்ப 108 வது திவ்ய தேசமான வைகுண்டத்துக்கு எப்படி போவிங்க.? அக்காசிவபார்க்கவி
திருச்சி


said...

சுருட்டப்பள்ளி போகனும்னு ரொம்ப நாளா பேச்சு ஒன்னு ஓடிக்கிட்டிருக்கு. ஆனா போகத்தான் வேளை வரல.

இந்தக் கோயில் மொதல்ல தமிழ் மன்னர்கள் ஆட்சிக்குள்ளதான் இருந்திருக்கனும்னு தோணுது. மரகதம்னு அம்மனுக்கு அழகான தமிழ்ப் பேர் வெச்சிருக்காங்களே.

பள்ளிகொண்டேஸ்வரர்னா கூப்பிடுறாங்க? சயனேஸ்வரர்னு பேரை இன்னும் மாத்தலையா?

சில இடங்கள்ள தோண்டும் போது சிலை கிடைச்சதுன்னு கேள்விப்படும் போதெல்லாம் ஒன்னு தோணும். கிடைக்கிற சிலைகளையும் கற்பாளங்களையும் கார்பன் டேட்டிங் செஞ்சா அதோட வயசு தெரிஞ்சிருமில்லையா. அதுனால பண்ணிப்பாக்கலாமே.

நம்பிக்கையின் அடிப்படையிலேயே எடுத்துக்கிட்டாலும் இத்தன வருஷம் பழையதுன்னு தெரிஞ்சா இலவ குசர்கள் எத்தனை ஆண்டுகள் முன்னாடி இருந்தவங்கன்னு தெரிஞ்சிரும்லயா. இது என்னோட கருத்து. :)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

கால்விரல்கள் மட்டுமா கை விரல்களும் நீளம்தான். கையும் நீளம்தான்:-) பாவம், குழந்தை :-(

said...

வாங்க சிவபார்க்கவி.

எப்படியா இல்லே எப்பவா?

கூடவரேன்னு சொல்லுங்க, இப்பவே கிளம்பிப்போய், எப்படின்ற வழியைத் தெரிஞ்சுக்கலாம். ஓக்கேதானே?

said...

வாங்க ஜிரா.

எதெது அவுங்களுக்குச் சரிவராதோ.... அதையெல்லாம் ஆகமவிதிப்படி சரி இல்லைன்னுடுவாங்களே!

ஆதிகாலத்துலே மின்சார விளக்கு இல்லை. அதனால் சந்நிதிகள் இருட்டிருட்டா சின்ன எண்ணெய் விளக்குகளோடு இருந்தன. இப்ப மின்சாரவெளிச்சத்துலே பளிச்னு சாமி இருந்தால் எல்லோருக்கும் தரிசனம் நல்லா அமையாதா?

வெளிச்சம் போட்டால் சாமி வேணாமுன்னு சொல்லிருவாரா?

இதுலெல்லாம் நம்ம அடையார் அனந்தபதுமந்தான் ஹைடெக் சாமி. பளிச்ன்னு கருவறையில் வெளிச்சம். கொஞ்சதூரத்துலே நின்னாலும் முழு அழகையும் ரசிச்சு சேவிக்கலாம். விசேஷ நாட்களில் CCTV கெமெரா வச்சு வெளியே இடமில்லாமல் நிற்பவர்களும் கருவறை பூஜைகளை அனுபவிக்கும்படி செஞ்சுருக்காங்க.

காட்சிக்கு எளியவனாக இருக்கவேணாமோ கடவுள்?

கோவில் இருக்கும் ஊரைத்தாண்டியும் ஆதித்த சோழன் ஆட்சி இருந்துருக்கு!

said...

// வெளிச்சம் போட்டால் சாமி வேணாமுன்னு சொல்லிருவாரா?

இதுலெல்லாம் நம்ம அடையார் அனந்தபதுமந்தான் ஹைடெக் சாமி //

நியாயமான பேச்சு டீச்சர்.

அனந்து பக்கத்துலயே இருப்பதால அடிக்கடி போறது அங்கதான்.

// கோவில் இருக்கும் ஊரைத்தாண்டியும் ஆதித்த சோழன் ஆட்சி இருந்துருக்கு! //
டீச்சர்.. இன்னைக்கு சோழநாடுன்னு சொல்றது பாதி தமிழ்நாட்டுலயும் மீதி ஆந்திராவிலும் இருக்கு. ஆந்திராவிலிருந்த சோழர்களுக்குப் பேர் மாறிடுச்சு. இதப்பத்தி யாரோ எழுதியிருந்தாங்க.