கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு வர்றியான்னு, ' யாரோ..... யாரையோ' கேக்குறமாதிரி இருக்குல்லே?
புலம்பல்ஸ் டே ஆகிப்போச்சே.... சாப்பிட ஏதுவான ஒரு இடமும் பெல்தங்காடியில் கண்ணில் படலை. இன்னும் கொஞ்சம் போய்ப் பார்க்கலாமுன்னு இவ்வளவு தூரம் வந்துருந்தோம். ஒரு காண்டினெண்டல் ரெஸ்டாரண்டு பெயரைப் பார்த்து அங்கே போனால்.... ஏர் கண்டிஷன் அறையிலே நம்மளை இருத்தி, ஏஸி போட்டுவிட்டுட்டு ஆர்டர் எடுத்துக்கிட்டுப் போனாங்க. ரெண்டு பரோட்டா, ஒரு வெஜிடபிள் கறி. 'நான் வெஜ்' வேணாமா வேணாமான்னு பத்து முறை கேட்டுட்டுப்போன சப்ளையர் நம்மைச் சுத்தமா மறந்துட்டார். ஒரு இருவது நிமிஷம் போயிருக்கும். என்னதான் ஆச்சுன்னு கேட்டுட்டுவரப்போன கோபால், 'இப்போ கொண்டு வர்றாராமு'ன்னு சொல்லி இன்னும் அஞ்சு நிமிசம் ஆச்சு. ஊஹூம்...... நோ ஸைன்!
இனி காத்திருக்க முடியாது போய் ஆர்டரைக் கேன்ஸல் செஞ்சுட்டுக் கிளம்பலாமுன்னு ரெண்டு பேருமா கல்லா இருக்கும் அடுத்த வாசலுக்குப் போனால்....அடுத்திருந்த ஹாலில் நிறைய ஆட்கள் இருந்து சிக்கனும் மட்டனும் மீனுமா வெட்டி விழுங்கிக்கிட்டு இருக்காங்க. சுடச்சுடப் பரோட்டா அடுக்கைக் கொண்டுவந்து அங்கே விளம்பறார் ஒரு பணியாளர்.
நாம் வெஜ் என்றபடியால் மெனெக்கெடலை போல இருக்கு. கல்லாவில் இருந்தவரிடம் ஆர்டரைக் கேன்ஸல் செஞ்சுருங்க. நேரமில்லை காத்திருக்கன்னா...அவர் அதெல்லாம் முடியாது. இதோ வந்துருதுன்றார். சரி. இதுக்குண்டான காசையாவது வாங்கிக்குங்க. எங்களுக்கு ஒன்னும் வேணாமுன்னா முடியாதாம். காசை வாங்கிக்க மாட்டாராம். பரோட்டாவை நம் வாயில் திணிச்சுட்டுத்தான் காசு வாங்கிப்பாராம். அந்த ஆள் பணியாளரை நோக்கிக் கத்துனதும்தான் தெரிஞ்சது ஆயாள் ஒரு சேட்டனாணு. சரியான இடத்துலே நான் தலையிட்டேன். 'தீரே சமயமில்லா. இனியும் ஒருபாடு தூரம் யாத்ரை பாக்கி உண்டு. நேரத்தே போயில்லெங்கில் ப்ளேன் போய்க்கழியும்.'
தயை உள்ள பார்வையை நம் பக்கமும், அக்னிப்பார்வையைப் பணியாளரிடம் ஒரே சமயத்தில் வீசினார் சேட்டன். தடதடன்னு ஆடும் கையால் ரெண்டு தட்டுகளில் வெறும் பரோட்டா வருது. 'பார்ஸல் ஆய்க்கோட்டே'ன்னு நாங்க சொன்னதும் திரும்ப உள்ளெ எடுத்துக்கிட்டு ஓடப்பாக்கிறார். சேட்டன் இன்னொரு முறைப்பை அனுப்புனதும் ஒரு ப்ரவுன் கவரில் போட்டுக் கொடுத்தார். 24 ரூபாயைக் கொடுத்துட்டு அதை எடுத்துக்கிட்டு 'கறி கறி' ன்னு பின்னால் இருந்து வந்த கூச்சலைக் கண்டுக்காம hurry hurry ஓடுனோம்.
தர்மஸ்தலாவில் இருந்து 53 கி.மீ. தூரத்தில் இருக்கும் மூடபிட்றிக்கு வந்து சேர்ந்தாச்சு. வண்டியில் வரும்போதே பசிப்பிணியைத் தீர்க்க ஒவ்வொரு பரோட்டாவை சின்ன ரோலாச் சுருட்டி வக் வக்ன்னு தண்ணீரைக் குடிச்சுக்கிட்டே தின்னோம். வாயே சரி இல்லை. மொழுக்ன்னு இருக்கு. ஸ்ரீராமர் கோவில் புள்ளையார் கொடுத்த லட்டு கைவசம் இருக்கேன்னு நினைவு வந்துச்சு. அதை மூணாப் பகிர்ந்துக்கிட்டோம். ப்ரசாதமாச்சே.... தனியாத் திங்கலாமா?
சின்னத்தெருக்களில் நுழைஞ்சு ஆயிரம் தூண் பஸாடிக்குப் போறோம். இந்த மூடபிட்றிதான் சமண மதத்தினரின் காசி. நம்ம அதிர்ஷ்டம் பாருங்க...... 'உத்திர காசி'க்குப் போகணுமுன்னு ஆசைப்பட்டதுக்கு 'தக்ஷிண் காசின்னு கோகர்ணாவையும் ஜைன காசி'ன்னு இங்கேயும் வந்துக்கிட்டு இருக்கேன். வரும்வழியில் சமண மடங்கள் சில இருக்கு. சமண மத சம்பந்தமான ஸ்ரீமதி ராமராணி ஆராய்ச்சி மையம் இங்கே இருக்கு. கையால் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளின் பெரிய தொகுப்பு இங்கே இருக்காம். உலகம் முழுவதிலும் இருந்து ஜைனமத ஆராய்ச்சியாளர்கள் வந்து போகும் இடமாம். காசி என்ற பெயரும் இருப்பதால் சமணர்கள் வருசம் முழுசும் யாத்ரீகர்களா வந்துக்கிட்டே இருப்பாங்களாம். இங்கே அப்படி வரும் மக்களுக்குத் தங்கும் வசதிகள் செஞ்சு வச்சுருக்காங்க.
கோவில் இருக்கும் தெருவுக்குள் திரும்பினால் கண் எதிரே சுமாரான அளவில் முகப்போடு 'த்ரிபுவன திலக சூடாமணி' பஸாடி. அஞ்சாம் நூற்றாண்டு சமாச்சாரம். தெருவின் இரண்டு பக்கங்களிலும் திண்ணைவச்ச அழகான சின்ன அளவிலான வீடுகள். பளபளன்னு மின்னும் கதவுகள் வா வான்னு கூப்புடுது. கோவிலுக்குள்ளே நுழைஞ்சால் தேருக்கு நடுவில் என்னமோ மரக்கம்பம் வச்சுக்கிட்டு இருக்காங்க. திருவிழா வரப்போகுது போல!
சமணமதம் இந்தப் பக்கங்களில் தழைத்திருந்த காலக்கட்டங்களில் இங்கே கட்டப்பட்ட 18 பஸாடிகளுக்கும் தலைமையா இருந்தது இதுதான். அலங்காரமும் அளவும் இங்கேதான் பிரமாதம். விதவிதமான சிற்ப வேலைப்பாடுகள் உள்ள தூண்கள் ஏராளம். எண்ண முடியலைன்னோ என்னவோ இதுக்கு ஆயிரம் தூண்கள் பஸாடின்னு பெயர் வச்சுட்டாங்க.
வழக்கம்போல் ரெண்டு பக்கமும் யானைகள் நிற்கும் படிகள். மகாஸ்தம்பம், கொடிமரம் கடந்து, கோவிலைப் பார்த்துக்கும் ட்யூட்டியில் இருந்தவரிடம் ஒரு தொகையை கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுத்து ரசீது வாங்கிக்கிட்டோம். படம் எடுத்துக்க அனுமதி கிடைச்சதோடு அவரே வந்து ஒவ்வொன்னையும் உடைஞ்ச தமிழில் விளக்கிச் சொன்னார். நம்ம சென்னை 'பாம்க்ரோ ஹொட்டேலில்'' அஞ்சு வருசம் வேலை செஞ்சுருக்காராம்!
முகப்பு வாசக் கதவில் இருந்தே அற்புதமான சிற்ப வேலைகள் ஆரம்பிச்சுருது. முன்மண்டபத்துலே ஒவ்வொரு தூணும் 'ஆ'ன்னு வாயைப்பிளக்க வைக்குது. ராமாயணக் காட்சிகள் அற்புதம். சேது கட்டுவதற்கு சுக்ரீவனோட சேனைகள் கல்லைச் சுமந்து கொண்டு போய்க் கடலில் போடும் சிற்பம் சூப்பர்.
பாம்க்ரோவ்காரர் இல்லைன்னா இதைக் கவனிச்சுப் பார்த்திருக்க முடியாது. இங்கேயும் மண்டபத்தில் சிலர் கடலை வறுத்துக்கிட்டு இருந்தாங்க. கல்லைக் கடைஞ்செடுத்த தூண்களும் சிற்பங்களும். நம் கை நுழையும் விதத்தில் பெரிய தூண்களில் சுத்திவரச் சின்னதாக் குட்டிக் கணுக்களாத் தூண்கள். வெறும் தூண்களுக்கே தனியா ஒரு ஆல்பம் போடத்தான் வேணும். நேரம் கிடைக்கட்டும்
தூரத்தே இருக்கும் கருவறையில் மூலவர் ஜொலிக்கிறார்.
தவழும் கண்ணன் வெண்ணை சுவைக்கிறான். நாட்டிய மங்கைகளும் யானைகளும் அலங்காரக் கதவுகளும் அழகழகான சிற்பங்கள் உள்ள தூண்களுமா எதைச்சொல்ல எதை விட? இண்டு இடுக்கு விடாமல் எப்படித்தான் செதுக்குனாங்களோ!!!!
மண்டபத்தின் உள்ளே இருந்து அண்ணாந்து பார்த்தால்.... வெறுங்கல்லால் எப்படியெல்லாம் உள்கூரை அமைச்சுருக்காங்க!!! எப்படி எதுக்கும் அசையாமல் 1500 வருசங்களா நிக்குது!!!!
வெளிப்புறம் ப்ரகாரம் சுற்றிவரத் திண்ணைமேடை இருக்கு. அங்கேயும் மூணு வரிசைகளில் தூண்களோ தூண்கள். நமக்கு ஆறு பக்கமும் கற்களைத்தவிர வேறொன்னுமே இல்லை. கேரளபாணியில் மேல்மாடம் உள்ள கூரை. அங்கேயும் சிற்பவேலைப்பாடுகள். திருவிழாவுக்குக் கொளுத்தும் தீவட்டின்னு ஏகப்பட்டவை.
கோவில் இருக்கும் அடி பீடத்தையும் விட்டுவைக்கலை. அங்கே ஒரு தீ உமிழும் சீன ட்ராகனைப் பார்த்து அசந்து போயிட்டேன்.
யானைக்கும் குதிரைக்கும் குரங்குக்கும் சிம்மத்துக்கும் அளவே இல்லாம எல்லா இடங்களிலும் நீக்கமற!!!!
தலவிருட்சம் இருக்கும் மேடை வெளிப்பிரகாரத்துலே. கோவில் படு சுத்தம். மாடி ஏறிப்போய்ப் பார்க்க அனுமதி கிடைக்கலை. சந்நியாசிகள் சிலர் தங்கி இருக்காங்களாம்.
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அருமையான கோவிலைப் பார்த்த மனத்திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பி பாஜ்பே விமான நிலையம் வந்து சேர்ந்தோம். இருபத்திமூணே கிமீதான். அரைமணியில் கொண்டுவந்து தள்ளிட்டார் ப்ரஷாந்த். இது அவரோட ஏரியாவாச்சே! சிட்டிக்குள்ளே போகாததால் 20 கிமீ தூரம் மிச்சமாச்சு.
கிங் ஃபிஷர் பணியாளர்கள் ஓடோடிவந்து விசாரிச்சுச் சாமான்களை ட்ராலியில் ஏற்றி 'செக் இன்' செய்யும் கவுண்டருக்கு அழைச்சுக்கிட்டுப்போய் போர்டிங் பாஸ் வாங்கும்வரை எல்லா சேவைகளையும் இனிய முகத்தோடு செஞ்சாங்க. சிகப்புக் கம்பளமும், வெத்திலை பாக்கும்தான் பாக்கி. இதென்னடா நாம் எந்த லோகத்தில் இருக்கோம்னு நினைச்சேன். இதுவும் பார்ட் ஆஃப் இண்டியாதானே!!!!!!
ப்ரஷாந்துக்கு நன்றி சொல்லிட்டு அப்படியே நம்மாலான உபதேசம் ஒன்னும் செஞ்சேன். சின்ன வயசுக்குள்ள வேகம் இருக்கும். ஆனால் மலைவளைவுப் பாதைகளில் வேகமாப் போகாமல் கவனமாக வண்டி ஓட்டணும். வாழ்க்கை இன்னும் ரொம்ப இருக்கு உமக்கு. இருந்து எல்லாத்தையும் வாழ்ந்து பார்க்கவேணாமா?
சரின்னு தலை ஆட்டுனவரின் கண்களில் என்னமோ இருந்தமாதிரி (எனக்கு) தோணுச்சு. விடுங்க......... ப்ரமை .....
'தீர்த்தயாத்திரை' முடிச்சவளுக்குப் போனஸா போனால் போகட்டுமுன்னு சாமி பிஸினெஸ் க்ளாஸ்லே ஸீட் போட்டுருந்தார். ஏற்கெனவே நெட் மூலம் ஸீட் தெரிவு செஞ்சுருந்தோம். வழக்கமான விமானம் இல்லாமல் ஸ்ரீலங்கா போகும் விமானம் வந்துருக்காம். சென்னையில் நம்மை இறக்கிட்டு இலங்கை போகுதாம். எப்படியோ நல்ல இருக்கை கிடைச்சது. பெண்களூர் வந்து ஒரு மணி நேரம் கழிச்சுக் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம்.
'சரியாக் கணக்குப்போட்டுச் சொன்னால்' மங்களூர் வந்து இறங்கியதில் இருந்து திரும்ப மங்களூர் விமானநிலையம் வரை 'ஏறக்குறைய' 100 மணி நேரம் ஊர்சுற்றிப் பார்த்ததில் நான் அனுபவித்த எல்லாக் காட்சிகளையும் ப்ளஸ் & மைனஸ் உட்பட 32 பதிவுகளா எழுதி இருக்கேன். ஆரம்பம் முதல் கூடவே வந்தவர்களுக்கும் இடையில் வந்து கலந்துக்கிட்டவர்களுக்கும், பின்னூட்டம் இட்டும் இடாமலும் ஆதரவு தந்த அனைத்து வாசக நண்பர்களுக்கும், நம் சரித்திர வகுப்புக் கண்மணிகளுக்கும் என் இனிய வணக்கங்களும் நன்றிகளும்.
மீண்டும் சந்திக்கும் வரை,
என்றும் அன்புடன்,
உங்கள் துளசி டீச்சர்.
Wednesday, May 19, 2010
ஏன்றி, ஸொல்ப மூடுபிட்றி
Posted by துளசி கோபால் at 5/19/2010 02:06:00 PM
Labels: moodabidri, அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
romba arumaya sutti kamicheenga teacher... aduttha pathivukaaga kathirupom
எத்தனை எத்தனை படங்கள், எவ்வளவு எழுத்து, எத்தனை விவரங்கள்!! அசத்திவிட்டீர்கள். இமாலய சாதனை!
100 மணி நேரம்ன்னு கணக்கெல்லாம் போட்டீங்களா.. :)
தூண்கள் எல்லாம் அசத்தல். அதும் இண்டு இடுக்கு விடாம எல்லாத்தையும் எங்களுக்கும் காமிச்சிட்டீங்க.
வாங்க எல் கே.
கொஞ்சம் மூச்சு வாங்கிக்கிட்டு அடுத்த பதிவை ஆரம்பிக்கலாம். ஒருவேளை நாளைக்கே:-)))))
வாங்க சரவணன்.
2456 படங்கள் எடுத்துட்டு அதுலே 10% கூட பதிவுலே போடலைன்னா எப்படி? :-)))))
தொடர்ந்த வாசிப்புக்கு நன்றி
வாங்க கயலு.
அதான் 20 கிமீ கட் பண்ணிட்டு ஏர்ப்போர்ட்டுக்கு வந்துட்டோமே. காத்திருந்த நேரத்தில் கணக்கெல்லாம் போட்டேன்:-))))
எதைப்படிச்சோம்,எதை விட்டோம் என்ற குழப்பம் இருக்கு.அவ்வளவு இடங்கள்....கேமிராவும் ஏமாற்றாமல் படங்களை அருமையாக பிடித்துக்கொடுத்துள்ளது.
சிற்ப வேலைப்பாடுகளெல்லாம் பிரமிப்பா இருக்கு. அந்த தூண்களையெல்லாம் பார்த்தா நம்மூரு ஆயிரங்கால் மண்டபம் மாதிரி இருக்கே. உங்க கூடவே விமானத்தை பிடிக்க ஓடிவந்ததில் மூச்சு வாங்குது :-))))
வாங்க குமார்.
மொத்தம் 32. அதான் குழப்பம்:-)))))
வாங்க அமைதிச்சாரல்.
உருண்டைத் தூண்களில் நுணுக்கமா என்னென்னமோ செஞ்சுருக்காங்கப்பா!!!!!
நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை!!!
இது வெறும் கற் கோவில் இலலை - கலை கோவில் ... என்னமா உண்டாக்கி இருக்காங்க
thanks for taking us all along ur trip. Thanks a lot teacher. Whats the next topic? i guess by now you have completed another trip and ready to start sharing that.
///2456 படங்கள்/// yapaa ippove kannai kattudhe... chanceless.
என்னா வேகம்பா .நானே ஓடி வந்த மாதிரி இருக்கு. அதுவும் கடைசிப் பதிவுன்னா இத்தனை ஓட்டமா:)
ப்ரஷாந்துக்கு நிஜமா சோகமாத்தான் இருந்திருக்கும். தேரெ மேரே பீச் மே இன்னும் என் காதில் ஒலிக்கிறது. சமண மதத்தவர் சிற்பக்கலைக்காகவே பிறந்து இருப்பார்களோ.
இந்த உடுப்பி ட்ரிப் சரித்திரம்தான் படைத்திருக்கிறது.
அயர வைக்கும் விஷயங்கள். மறக்காமல்
எடுத்து வைத்த குறிப்புகள். அதை பதிவில் கொண்டு வந்த லாவகம். ம்ம்.ஹாட்ஸ் ஆஃப் துளசி.
முந்தைய பதிவிலியே கொஞ்சம் மலையாளம் விளையாடித்தெ பார்த்தேன்.:)
வாழ்த்துகள் துளசி.
100 மணி நேரம் - நாலு நாள்தான் முழுசா. அதுக்கே 32 பதிவா!! ஆச்சர்யம்!! உங்க வார்த்தை விளையாட்டுகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் டீச்சர். அதுக்காகவே அவ்வப்போது எட்டிப்பாத்துக்கிடுவேன் இங்கே.
சமண மதம் - பஸாடி: புதுத் தகவல் எனக்கு. சமண மதம்கிறது, மகாவீரைக் குருவாகக் கொண்ட மதம்தானே? (அவ்ளோதான் தெரியும் எனக்கு! அதான் சந்தேகம்)
தூண்கள் ஒவ்வொன்றும் உங்கள் கேமராக் கண்களில் அழகாக தெரிகின்றன டீச்சர். அடுத்த பதிவிற்காக நானும் வெயிட்டிங் டீச்சர்:)))))
வாங்க அது ஒரு கனாக் காலம்.
உங்க கர்நாடகா கோவில் பயணத்துலே இந்த இடத்தையெல்லாம் விட்டுட்டீங்களே:(
வாங்க ப்ரசன்னா.
ரொம்பச் சரி.
இன்னொரு பயணம் ஆரம்பிச்சுருச்சு. ஆனால் இது வேற மாதிரி.
இதையும் எங்காவது எழுதித்தான் வைக்கணும். இல்லைன்னா கோபால் என்னெல்லாம் நடந்துச்சுன்னு கேட்டுக்கிட்டே இருப்பார். மறதி கூடுதல் மனுஷருக்கு.
அதுக்கு முன்னே ரொம்ப நாளா கிடப்பில் போட்டவைகளை முடிக்கணும்.
வாங்க வல்லி. சோம்பலில்லாமல் கூடவே வந்ததுக்கு நன்றி.
சமணத்துறவிகள் இப்படிச் சிற்பக்கலைக் காதலர்களா இருந்துருக்காங்க!!!!!
கேரளாவுக்கும் கர்நாடகாவின் மேற்குக் கரைக்கும் ஒற்றுமை நிறைய இருக்குப்பா. அதான் கொஞ்சம் சம்சாரிக்கச் சான்ஸ் கிட்டி:-))))
வாங்க ஹுஸைனம்மா.
சமணமதத்தில் 24 குருக்கள் வரிசையா இருந்துருக்காங்க. இவுங்களைத்தான் தீர்த்தங்கரர்கள்ன்னு சொல்றாங்க. இந்த 24 பேரில் கடைசி குருதான் மஹாவீரர்.
ரொம்பப் பழைய மதமுன்னு சொல்றாங்க.கடைசி குரு இருந்ததே ஏசு பிறக்க 599 வருசங்களுக்கு முன்பாம்.
எனக்கும் ரொம்பத் தெரியாது. அவுங்க கொள்கைகளில் ஒன்னு மட்டும் தெரியும். எல்லா உயிர்களுக்கும் ஆன்மா இருக்குன்றது.
கட்டிடக்கலையில் கை தேர்ந்தவர்கள்.
வாங்க சுமதி.
எனக்கும் தூண்களைப் பார்த்த பிரமிப்பு இன்னும் அடங்கலை.
சின்னதா உருண்டைக்கல்லில் வரிசையாச் செதுக்கும்போது எவ்வளவு கவனமா இருந்துருக்கணும். கொஞ்சம் கல் தெறிச்சாலும் முழுத் தூணும் போச்சே!
இனிய பிரயாணத்தை அழகுற பகிர்ந்தளித்து எங்களைக் கண்டுகளிக்க வைத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
ஆகா....பாடம் முடிஞ்சிடுச்சா..இப்பதான் ஒரு எக்ஸாம் முடிச்சிட்டு வந்தேன்...இப்போ திரும்ப அடுத்த எக்ஸாம் வந்துடும் போல ! ! ! ;)
100 யப்பா ஞாபகத்துல வச்சி கடைசியில ப்ரஷாந்துக்கு ஏற்பட்ட என்னாமே வரை எல்லாத்தையும் பகிர்ந்து படங்கள் போட்டு....இதை சொல்றதுக்கே நான் ஒரு பதிவு போட வேண்டி வரும் டீச்சர் ;))
மீண்டும் விரைவில் அடுத்த பாடத்துடன் வாங்க ;)
வாங்க மாதேவி.
கொஞ்சம் இழுத்துக்கிட்டே போனபோதும் சுணங்காமக் கூட வந்ததுக்கு நன்றிப்பா.
வாங்க கோபி.
இவ்வளோ ஆர்வமா? அடடா.... இன்னும் 32 சேர்த்து எழுதி இருக்கலாமோ:-))))))
It felt as if we travelled through your eyes. So, is the next trip coming sooooon?
தர்மஸ்தல கேள்விப்பட்டு இருக்கேன், போய் பார்க்க ஆவல். வாய்ப்பு கிடைக்குமான்னு தெரியல.
சமணக் கோவில் மற்றும் சிற்பங்கள் அருமை
வாங்க சந்தியா.
அடுத்த ட்ரிப்?
இடப்பெயர்ச்சிதான்:-)))))
வாங்க கோவியாரே.
தர்மஸ்தலா போகும்போது விசேஷம் ஒன்னும் இல்லாத சாதாரண நாளில் போயிட்டு வாங்க.
உங்களுக்கு ஒரு வேளை கொடுப்பினை இருக்கலாம், தரிசனம் செய்ய!
ஜைன மதத்தில் கடவுள் என்பது தனியாக சொல்லப் படவில்லை தானே. தீர்தங்கரர்களை மூலவராக வழிபடுகிறார்களா என்ன? வழிபாடுன்னா எப்படி இருக்கும்? ராமாயண மகாபாரத சிற்பங்கள் இந்தக் கோவிலில் எப்படி? முன்னே சரவண பலகுலா கோவிலிலும் ராமாயணா மகாபாரத சிற்பங்கள் இருந்ததாக சொல்லி இருந்தீர்கள் தானே.Are these versions of jainism?
http://www.virutcham.com
வாங்க விருட்சம்..
ஜைனமதக் கோவில்களில் மூலவரா ஒவ்வொரு தீர்த்தங்கரர்களைத்தான் வச்சுருக்காங்க. அவுங்களுக்கும் 24 தீர்த்தங்கரர்கள் இருக்காங்களே.
இன்னும் பார்த்தா எல்லா ஜைனக்கோவில்களிலும் பத்மாவதி (தாயார்) தனிச்சந்நிதி இருக்கு. மஹாலக்ஷ்மியாச்சே. இவுங்களொ முக்காவாசி மார்வாடிகள். வேண்டிதானே இருக்கு! இன்னும் சில கோவில்களில் மணி மந்த்ர தேவ்ன்னு புள்ளையாரும் தனிச்சந்நிதியா ஒரு மாடத்துலே இருக்கார்.
சென்னை ஜி,என்,(செட்டி)சாலையில் இருக்கும் ஜைனக்கோவில் பற்றி முந்தி இங்கே எழுதி இருப்பதைப் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2007/03/1.html
இவுங்களும் இந்து மதத்தையொட்டியே வர்ரதாலேதான் ராமாயண மஹாபாரதக் காட்சிகள் கோவிலில் செதுக்கி இருக்கோ என்னவோ. ஆனால் இங்கே இந்த ஆயிரம் தூண் பஸாடியில் ட்ராகனைப் பார்த்து ஆடிப்போயிட்டேன்.
ஆமாம்..... இவுங்க கோமட்டீஸ்வரான்னு பெரிய சிலை வச்சுக் கும்பிடும் பாஹூபலி தீர்த்தங்கரர் வரிசையில் இல்லை. இவர் முதலாம் தீர்த்தங்கரரின் ரெண்டாவது மகன்.
மூத்த மகனுக்கும் இளையவருக்கும் ராஜ்யம் அடைவதில் போட்டி. சைனியங்களோடு போய் சண்டை போடாமல் ஒண்டிக்கு ஒண்டின்னு சண்டை போடறாங்க. மூணு விதமான சண்டை. அதில் மல்யுத்தம் ஒன்னு. அப்படிச் சண்டை போட நிக்கும்போது, சண்டையை ஆரம்பிச்சு வைக்கிறார் அண்ணன். ஒரு குத்து விழுந்துச்சு தம்பிக்கு. இப்ப, தம்பி கையை ஓங்கறார். ரொம்ப அசுர பலம் உள்ள தம்பி இவர். அண்ணன் சட்னின்னு எல்லோரும் கண்ணை மூடிக்கிறாங்க. ஓங்கிய கையோடு நிர்கும் தம்பிக்கு அந்தக் கணம் மனசுலே தோணுச்சு, வெறும் ராஜ்யத்துக்காக இப்படி உடம்பொறப்பைக் கொல்லணுமா?ன்னு. ஓங்குன கை அப்படியே கீழே இறங்கக்கூடாது என்ற அரசவிதிப்படி, அந்தக் கையைத் தன் தலையிலே வச்சு தன் தலைமுடியை தானே பிச்சுப்போட்டுட்டு, எல்லா ஆசைகளையும் துறந்துட்டேன்னு சொல்லி ஆடைகளை உரிச்சுப் போட்டுட்டாராம்.
எந்த மதம் என்றாலும் உள்ளே போய்க் கொஞ்சம்(?) கவனமாப் பார்த்தால் சுவையான விவரங்கள் ஏராளமாக் கிடைச்சுருது.
Post a Comment