Tuesday, May 04, 2010

தகதக ஜிலுஜிலு பளபள.......

காலையில் கண் தொறக்கும்போதே கண்ணனின் நினைவு. சட்னு தயாராகிக் கோவிலுக்குப் போய்வந்து ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டுக் கிளம்பலாம். கீழே வந்தோம். ப்ரஷாந்த் குளிப்பதாக தகவல் சொன்னார் அடுத்து நின்ன வண்டியின் ட்ரைவர். எதிர்வரிசையில் ஒரு ஆட்டோ சாமான்களை இறக்குது. அதுலே போகலாமுன்னு எதிர்வரிசைக்குப் போனால், 'கோவிலுக்குப் போக ஆட்டோ எதுக்கு? நாலைஞ்சு நிமிச நடைதான். நேரேபோய் வலது பக்கம் திரும்புனா கோவில்'. அட! தெரியாமப்போச்சே!
நாங்க இருந்த தெரு ஹனுமன் வீதி. வலது பக்கம் திரும்புனா கனகதாஸா தெரு. பெயரைப் பார்த்ததும் மனசுலே ஜன்னல் கூடவே வருது. .உடுபி ஸ்ரீ க்ருஷ்ணனை நாம் தரிசிக்கும் ஜன்னலுக்குப் பெயர் நவக்ரஹ ஜன்னல். ஏன் சாமியை ஜன்னலில் எட்டிப்பார்க்கணுமாம்?
தாழ்த்தப்பட்ட மக்களினம் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத காலக் கட்டம்.
க்ருஷ்ணன்மீது அடங்காத அன்பும் பக்தியும் கொண்ட கனகதாசர் தினமும் கோவிலுக்கு வெளியில் மேற்குப் பார்த்தஒரு ஜன்னல் பக்கம் நின்னு 'அவனை' மனதில் வணங்கி எப்படித்தான் இருப்பான்னு தெரியலையே நமக்கு அவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்காதான்னு ஏங்கறார். பக்தன் குறையைத் தீர்க்க ஒரு நாள் 'சட்'னு திரும்பி நின்னுட்டானாம் க்ருஷ்ணன்.



அதுலே இருந்து பழையபடி கிழக்கு நோக்கி அவன் திரும்பவே இல்லை(யாம்). அப்போதான் கனகதாஸரின் பக்தியைப் பற்றித் தெரியவந்துச்சு. அன்று முதல் எல்லோருக்குமே மேற்கு பார்த்த தரிசனம் மட்டுமில்லாம எல்லோருமே இனி ஜன்னல்மூலமாத்தான் அவனைப் பார்க்கணுமுன்னு தீர்மானிச்சு அங்கே ஒரு ஜன்னலைப் பண்ணி வச்சுட்டாங்க. இந்த ஜன்னல் ஒன்பது துவாரங்களைக் கொண்ட நவகிரக ஜன்னல். இதுக்கு தங்கமுலாம் பூசி வச்சு இருக்காங்க. (ஒருவேளை அசல் தங்கமோ என்னவோ? பக்தர்கள் தொட்டுத்தொட்டு முலாம் எல்லாம் காணாமப் போயிருக்கணுமே! ஆனால் பளிச்ன்னு அழகா இருக்கே!)24 விதமான கண்ணனின் உருவங்கள் இதுலே இருக்கு. ஒவ்வொன்னும் அழகு அற்புதம்தான் என்றாலும், உள்ளே அவன் இருக்கும்போது கண் வெளியே ஆராய்ச்சி செய்ய மறுக்குதே.

கனகதாஸா தெருவின் கடைசியில் எலெக்ட்ரானிக் கேட் ஒன்னு வச்சு அதன்வழியா உள்ளே போகவும் வரணுமுன்னு இருக்கு. பாதுகாப்புக் காரணம். காவலாளி எவரும் இல்லை அங்கே.. விசேஷநாட்களுன்னா இருப்பாங்க போல. தெருமுனையில் இருந்த பூக்கடையில் வெள்ளையா ஒரு பூ வாழைஇலையில் பொதிஞ்சு வச்சுருந்தாங்க. பார்க்க நூல்திரிகளாட்டம் இருக்கு. கனகாம்பரம் விலை ரொம்பவே மலிவு. முழம் அஞ்சே ரூபாய்.


கேட்டைக் கடந்தால் மாடவீதி. மடங்கள் அங்கங்கே இருக்கு. வாசல் கதவுக்கு எதிரா அந்தந்த மடத்துக்குரிய க்ருஷ்ணரின் உருவங்கள் வச்சு பூஜிக்கிறாங்க. வேடிக்கை பார்த்துக்கிட்டே நடந்தோம். கூடையில் பச்சை மட்டைகள். இதுதான் ஒருவேளை அந்தத் திரிப்பூக்கள் மூலமோ? சந்தேகம் உடனே தெளிஞ்சது. இது கமுகுப்பூக்கள். அச்சச்சோ...... பூக்களை வெட்டிட்டால் பயிர்? போகட்டும் அதான் எக்கச்சக்கமா விளைஞ்சு நிக்குதே. ஒருவேளை பூக்களுக்குன்னே வளர்க்கும் மரங்கள் இருக்கலாமே!

இன்னும் உடுபிக்கு கண் தெளியலை. காலைநேரம். எல்லாம் நிச்சலனமா இருக்கு. தேர்கள் ஓசைப்படாமல் நிக்குது. வேற ஏதோ வழியில் வந்திருக்கோமுன்னு புரியுது. கணெதிரே ஒரு கோபுரவாசல். அதுக்கு நேர் எதிரா ஸ்ரீமாத்வர் உருவச்சிலை கம்பிக்கூண்டில்.
கோபுர வாசலில் சிலர் உள்ளே போய் வர்றதைப் பார்த்து அங்கே போனால் அங்கே ஒரு மூணு பட்டை ஜன்னல். அதுக்குள்ளே எட்டிப்பார்த்து நமஸ்கரிச்சுட்டுப் போகுது சனம். நாமும் எட்டிப் பார்த்தால்............. ஹை ! இதுதான் ஒரிஜனல் கனகதாஸா ஜன்னல். இங்கிருந்து பார்த்தால் அந்த நவக்ரஹ ஜன்னல் தெரியுது. ரெண்டுக்கும் நடுவிலே அந்த மண்டபம். நேத்து எப்படி இதைக் கவனிக்காமல் விட்டேன் உள்ளே இருந்தப்ப? நவக்ரஹ ஜன்னல்கிட்டே யாரும் இல்லைன்னா....... இங்கிருந்தே அவனைப் பார்க்கலாம்,அதிர்ஷ்டம் இருந்தால்!

தேருக்குப் பக்கம் போய் பார்த்தால்..... அட்டகாசமான மரவேலைப்பாடுகள். ராமலக்ஷ்மணர்சீதை அனுமன்கூட இருக்காங்க. கோவில் முகப்புக்கு வந்தால் சுவரில் அற்புதமான சித்திரங்கள். ஜடாயு ராவணனுடன் சண்டைபோட்டு இறகுகள் வெட்டப்படுதல், ஐயோ ன்னு சீதை அலறி வாயை மூடி அழறாள். குசலவர்கள் வில்வித்தை பயிற்சி செய்யும்போது தாய் சீதை கூடவே இருந்து பார்க்கிறாள். ராமனும் சீதையும் அவர்கள் பின்னே லக்குவனுமாக வனவாசத்தில் ஒரு காட்சி. இன்னும் மேலே உத்தரத்துக்கு அருகில் பள்ளிகொண்ட பரந்தாமன், விஷ்ணு துர்கை, ஆஞ்சநேயர், கண்ணனும் ராதையும், குழந்தைக் கண்ணன் தொட்டிலில் இப்படி ஏராளம்.
க்ரீம் நிற கோபுரத்தில் டெர்ரகோட்டா சிற்பங்கள் அங்கங்கே க்ரீமும் ப்ரிக்ரெட்டுமா காண்ட்ராஸ்ட்டா அது ஒரு அழகு. நேத்து இருட்டுலே சரியாத் தெரியலை இந்த அழகெல்லாம்!!!!

சந்நிதிக்குப் போய்ச்சேர்ந்தோம். என்ன ஆச்சு ? ஆட்கள் எல்லாம் எங்கே போனாங்க? ஏன் இப்படி நிசப்தமா இருக்கு. ஜன்னலில் யாரும் இல்லை. ஹைய்யோ!!!!! ஒட்டிப்பிடிச்சேன். உள்ளே ஜிலுஜிலுன்னு வெளிச்சம் போட்டுக்கிட்டு வைர அங்கியில் நிக்கறான்ப்பா. கண்ணே கூசுது; ரெண்டு நிமிஷம் நின்னு பார்த்துட்டு கோபால் போய் திண்ணையில் உக்காந்து தியானம்(?) செய்ய ஆரம்பிச்சுட்டார். அவர் தலைப்பின்னால் ஒரிஜனல் கனகதாஸா ஜன்னல் இருக்கு.
நான் நகரவேண்டி இருக்கலை. யாராவது வந்தால் வழிவிடப்போறேன். வரலையே! அஞ்சாறு நிமிசம் கழிச்சு ஒரு பக்தை. அவ்ளோதான். அப்புறம் நானே........ நான் மட்டுமே! இப்படியே அரைமணி நேரம் விலகுவதும் ஓடிவந்து இடம்பிடிப்பதுமா ஒரு ஆட்டம். எத்தனைமுறை, எவ்வளவு நேரம் என்ரதுக்குக் கணக்கே இல்லை! போகலாமுன்னு இவர் எழுந்து வர்றார். எனக்கோ.....கொதி அடங்கலை. இன்னும் இன்னும் இன்னுமுன்னு பேராசையா இருக்கு. பார்த்த திருப்தி வரலைன்னு சொன்னால்..... ஒரே ஒரு முறை பார்த்து மனசுலே வச்சுக்கணும். அது அப்படியே அங்கே நிக்கணும். அது போதும். அப்படிப் பார்ப்பதுதான் தரிசனம் உபதேசம் பொழியுது. நான் எதையும் காதுலே வாங்கும் நிலையில் இல்லை. கடைசியா இன்னொருமுறை பார்த்துட்டுத்தான் வருவேன்னு அதுக்குள்ளே வந்துருந்த அஞ்சாறுபேருக்குப்பின்னே போய் நின்னு பார்த்துட்டுத்தான் கிளம்பினேன். சரியா இன்னும் பக்குவப்படலை நான்:(

பேய்க்கு வாக்கப்பட்டுப் பரிபூரணமாப் பக்குவம் அடைஞ்சுட்டார் நம்ம இவர்!

கோவிலுக்கு முன்னே கோவிலைச் சுத்தி இருக்கும் நாலுவீதிகளும் நல்ல அகலமாப் பளிச்ன்னு இருக்கு. ஸ்ரீ மாத்வரால் நியமிக்கப்பட்ட எட்டு மடங்களும் இங்கேதான் இருக்கு.

35 comments:

said...

நீங்க நிறைய புண்ணியம் பண்ணி இருக்கீங்க டீச்சர் . அதன் இவ்ளோ கோவில் தரிஷனம்

said...

பார்த்தால் பசி தீரும்னு சொல்வாங்க. ஒங்களுக்கு ஏறியிருக்கு போல. :) தப்பில்லை. சாப்பாடு நல்லாருந்தா கூட ரெண்டு வாய் சாப்டுறதில்லையா. நல்ல பாட்டுன்னா கூட ரெண்டு வாட்டி கேக்குறதில்லையா. அந்த மாதிரிதான்.

பக்குவமெல்லாம் நல்லதுதான். ஆனா ஆண்டவனிடத்திலும் வைக்கும் அன்பிற்கும் அம்மாவிடத்தில் குழந்தை வைக்கும் அன்பிலும் பக்குவமா பெரிது! :)

எல்லாஞ் சரிதான் டீச்சர்.

அந்தக் கமுகுப் பூக்கள் ரொம்ப அழகு.

கனகதாசர் ஜன்னல் வழியாப் பாத்தார்னு தெரிஞ்சி... அவர உள்ள வர வைக்காமா... அல்லது அவர் சார்ந்தவங்கள உள்ள வர வைக்காம... அங்கேயே இருந்து பூஜை செய்ற கூட்டத்தினரைத் தவிர எல்லாரையும் ஜன்னலுக்கு வெளிய நிக்க வைச்ச பெருமையை என்ன சொல்றது!

said...

அந்த திரிப்பூக்கள், கமுகுப்பூக்கள் பார்க்க அழகாக இருக்கின்றன என்ன வாசனை டீச்சர்? வைர அங்கியில் கண்ணன் ஜொலிக்கிறான் டீச்சர்.

said...

படிச்சுட்டேன்,.. அப்புறம் வர்றேன்.

said...

// நான் நகரவேண்டி இருக்கலை. யாராவது வந்தால் வழிவிடப்போறேன். வரலையே! அஞ்சாறு நிமிசம் கழிச்சு ஒரு பக்தை. அவ்ளோதான். அப்புறம் நானே........ நான் மட்டுமே! இப்படியே அரைமணி நேரம் விலகுவதும் ஓடிவந்து இடம்பிடிப்பதுமா ஒரு ஆட்டம். எத்தனைமுறை, எவ்வளவு நேரம் என்ரதுக்குக் கணக்கே இல்லை! போகலாமுன்னு இவர் எழுந்து வர்றார். எனக்கோ.....கொதி அடங்கலை. இன்னும் இன்னும் இன்னுமுன்னு பேராசையா இருக்கு. பார்த்த திருப்தி வரலைன்னு சொன்னால்..... ஒரே ஒரு முறை பார்த்து மனசுலே வச்சுக்கணும். அது அப்படியே அங்கே நிக்கணும். அது போதும். அப்படிப் பார்ப்பதுதான் தரிசனம் உபதேசம் பொழியுது. நான் எதையும் காதுலே வாங்கும் நிலையில் இல்லை. கடைசியா இன்னொருமுறை பார்த்துட்டுத்தான் வருவேன்னு அதுக்குள்ளே வந்துருந்த அஞ்சாறுபேருக்குப்பின்னே போய் நின்னு பார்த்துட்டுத்தான் கிளம்பினேன். //

இதை எத்தனை தரம் படிததாலும் திரும்பவும் படிக்கவேண்டும் என்ற மன நிலைக்கு நாங்களே உந்தப்படும்போது
அந்த கிருஷ்ணனை நேரடியாகப்பார்த்த தங்களின் மன நிலையை என்ன சொல்லி வர்ணிக்க !!

அன்னிக்கு க்ருஷணின் விஸ்வ ரூபத்தைப்பார்த்த பார்த்தனின் மனதில் பொங்கிய பிரமிப்பும், பரவசமும்
தங்களுக்கும் ஏற்பட்டது என்றால் மிகையாகாது.

கண்டது கண்ணனல்லவா ! அவன்
உண்டது வெண்ணையா ? இல்லை ....துளசி கோபாலின்
வெள்ளை உள்ளத்தையா ?

கோபாலோ ... !
கண்ணனைக் கண்டார்
கண்ணனே ஆனார்.

சுப்பு ரத்தினம்.

said...

\\ LK said...
நீங்க நிறைய புண்ணியம் பண்ணி இருக்கீங்க டீச்சர் . அதன் இவ்ளோ கோவில் தரிஷனம்\\

ரீப்பிட்டே ;)

said...

வைர அங்கி தரிசன சேவைக்கு நன்றி... இதுவரை நான் எங்கும் பார்த்திராது...

//பேய்க்கு வாக்கப்பட்டுப் பரிபூரணமாப் பக்குவம் அடைஞ்சுட்டார் நம்ம இவர்!//

;-))))

said...

வைரஅங்கி சேவை நிறைவா இருக்கு.

//ஆண்டவனிடத்திலும் வைக்கும் அன்பிற்கும் அம்மாவிடத்தில் குழந்தை வைக்கும் அன்பிலும் பக்குவமா பெரிது//

அதேதான் அக்கா..

கமுகுப்பூக்கள் வெகு அழகு.கேரளாவிலும், நாஞ்சில் நாட்டிலும் சிறுதெய்வ வழிபாடுகளின்போது சுவாமிக்கு சார்த்துவார்கள்,பார்த்திருக்கேன்.

said...

வைரக் கிருஷ்ணன்ம் தங்கக் கிருஷ்ணன் இன்னும் என்ன எல்லாம் உடுத்திக்கிறானோ இந்தப் பிள்ளை.
ரொம்பவே அழகு துளசி. கோவிலும்,தரிசனமும்,ப்ரகாரங்களும்,வீதிகளும்ம்ம்ம்ம்ம்ம்ம்
அக்கடான்னு அங்கயே இருக்கத்தான் நம்மால முடியுமா.அதான் கூப்பிட மாட்டேன்னு சொல்றான்.

said...

வாங்க எல் கே.

ஒருவேளை போன ஜென்மத்தில் நிறைய பாவம் பண்ணி, அதைத் தீர்க்கக் கோவில் கோவிலாப் போறேனோ என்னவோ?

said...

வாங்க ஜீ ரா.

நலமா?

'நான் கிருஷ்ணனா இருந்தால் அப்படியே ஜன்னல் எல்லாம் மாயமா மறையச்செஞ்சு கனகதாஸருக்கு டைரக்டா தரிசனம் கொடுத்துருப்பேன்'னு நினைச்சேன்.

ஆனா அப்ப இருந்த காலக்கட்டத்துலே ஜன்னலில் முகம் காமிச்சதே பெரிய புரட்சியா இருந்துருக்கும்!

இன்னொருமுறை கனகதாஸரைப்பற்றிப் படிச்சபோது, கோவில் சுவரில் விரிசல் விழவச்சு இடைவெளியில் தரிசனம் தந்தார்ன்னு இருக்கு. ஒருவேளை அதனால்தான் எல்லோருக்குமே ஜன்னல்ன்னு ஏற்பாடு செஞ்சுருக்கலாம்.

said...

வாங்க சுமதி.

அடடா..... வாசனை என்னன்னு முகர்ந்து பார்க்கத் தோணலையே! சின்ன சரமாக் கட்டுனதைக் கொஞ்சம் ப்ரஸாதமாக் கொடுத்தாங்க க்ருஷ்ணன் சந்நிதியில். வாங்கி கண்ணில் ஒத்திக்கிட்டதோடு சரி.

said...

வாங்க அமைதிச்சாரல்.

இங்கேயும் கேரளப்பாணி கோவில்களும் வழிபாடுகளும் அலங்காரமும்தான் இருக்கு.

கமுகுப்பூக்கள் கொத்து நிஜமாவே அருமைதான்.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

என்னவோ எப்பவோ ஒரு நல்ல காரியம் செஞ்சுருக்கேன்போல. அதான் தரிசனம் செஞ்சுக்கோன்னு ஒரு சான்ஸ் கொடுத்துட்டான். இப்போ நினைச்சாலும் கண்ணுலே குளம் கட்டுது.

எனக்குத்தான் அப்போ இருந்த மனநிலையைச் சரியா 'எழுத்தில்' சொல்லத் தெரியலை.

said...

வாங்க கோபி.

பாவம். போயிட்டுப்போறான்னு நினைச்சுருப்பான் போல!

said...

வாங்க லோகன்.

நிறைவான தரிசனம்தான். முதல் நாள் போனப்ப இன்னும் ரெண்டு நாளுக்கு லக்கி ப்ரைஸ் அடிக்கப்போறேன்னு கனவுகூடக் காணலை.

said...

வாங்க வல்லி.

எந்த அலங்காரத்திலும் ஆடாம அசையாமப் பொறுமையா நிக்கிறான் பாருங்க:-))))))))

said...

//தகதக ஜிலுஜிலு பளபள//

டீச்சர்!இரண்டு சவரன் தலைப்பு கடன் கொடுங்க!

said...

//க்ரீம் நிற கோபுரத்தில் டெர்ரகோட்டா சிற்பங்கள் அங்கங்கே க்ரீமும் ப்ரிக்ரெட்டுமா காண்ட்ராஸ்ட்டா அது ஒரு அழகு.//

எனக்கு இதுதான் ரொம்பப் பிடிச்சிருக்கு.

கண்ணனின் வைர தரிசனம் கண்ணிலே நிக்குது.

‘வருகலாமோ..’ என்றெல்லாம் கேட்டு கேட்டிலே நிக்காமல், தடாலடியா ஜன்னல் தரிசனம் செய்த கனகதாசரின் பக்திக்கு மெச்சி திரும்பி முகம் காட்டிய கண்ணனின் கருணையே கருணை.

said...

thanks ji, for sharing

said...

Beautiful pictures. You are one Lucky one to have all the Darshan. We are glad to follow you, as we are seeing Him through your eyes and pictures.

said...

க்ரீம் நிற கோபுரத்தில் டெர்ரகோட்டா சிற்பங்கள்
அருமையாக இருக்கு.

Anonymous said...

கமுகுப்போட்டோ சூப்பர்

said...

அங்கே இந்த படத்தை கவனித்தீர்களா? விநாயகர் பெருமான் எதிரே படையல் போட்டிருக்கும். சின்னக்கண்ணன் படைப்பதற்கு முன் அந்த பலகாரங்களை தின்றுவிடக்கூடாது என்பதற்காக யசோதை கண்ணனின் கைகளை பின்னால் கட்டியிருப்பார். அப்படியிருப்பினும் கண்ணன் வாயால் கவ்வமுயற்சி செய்வான். விநாயகர் கண்ணனின் தவிப்பைக்கண்டு இரங்கி சிலையிலிருந்து வெளிவந்து தும்பிக்கையால் கண்ணனுக்கு ஊட்டுவார். இதை கதவின் பின்னே இருக்கும் யசோதை கண்டு அதிசயிப்பதுபோல் அந்த ஓவியம் இருக்கும். அந்த ஓவியத்தின் புகைப்படம் உங்களிடம் இருந்தால் தயவுசெய்து இங்கே வெளியிடும்படி சகேட்டுக்கொள்கிறேன்.
த.துரைவேல்

said...

வாங்க ராஜ நடராஜன்.

அதென்ன ரெண்டே ரெண்டு சவரன்? கொஞ்சம் கூடப்போட்டு எடுத்துக்குங்க:-))))

said...

வாங்க நானானி.

//தடாலடி......?//
கேட்டு ஒன்னும் ஆகப்போறதில்லைன்னு அப்பவே இருந்துருக்கோ!!!!!

said...

வாங்க ராம்ஜி_யாஹூ.

கூடவே வர்றீங்க. நன்றி.

said...

வாங்க சந்தியா.

இதுக்குப்பெயர்தான் 'நான் பெற்ற இன்பம் பெறுக இவையகம்'

நன்றி. கூடவே வாங்க.

said...

வாங்க குமார்.

நன்றி.

said...

வாங்க சின்ன அம்மிணி.

தெங்கின் பூ போலவே ரொம்பச்சின்ன சைஸுலே ரொம்ப அழகா இருக்கு உள்ளே!

said...

வாங்க துரைவேல்.

அடடா.....கோட்டை விட்டுட்டேன் போல இருக்கே:(

எங்கே எந்த இடத்தில் இருக்கு? க்ருஷ்ணன் சந்நிதியில் இருக்கும் திண்ணைச் சுவர்களிலா?

said...

நாம் மூலவரைப் பார்க்கும் சாளரத்தின் எதிர்ப்பக்கம் இருக்கும் திண்ணைச்சுவர் ஓவியங்களில் ஒன்று. முன்னரே ஏதோ ஒரு வார/மாத இதழில் சில ஆண்டுகளுக்கு முன் இவ்வோவியத்தைப்பற்றி படித்திருக்கிறேன். போனவருடம் இதேமாதத்தில் கோயிலுக்குசென்றிருந்தபோது ஒவ்வோவியத்தை புகைப்படம் எடுக்க அனுமதிகேட்டபோது அவர்கள் தயங்கினர். அதனால் எடுக்கஇயலவில்லை.
த.துரைவேல்

said...

துரைவேல்,

நான் திண்ணைச்சுவர்களைப் பார்த்த தினம் அங்கே, திண்ணைகள் முழுசும் ஒரே கூட்டமா உக்கார்ந்து ஹனுமன் ஜயந்திக்காக பஜனை பாடிக்கிட்டு இருந்தாங்க. கிட்டே போக முடியாமல் போனது. அப்புறம் ஆளே இல்லாத ரெண்டாம் மூணாம் தரிசனத்தில் நான் ஜன்னலைவிட்டு நகரவே இல்லை. அதான் மிஸ் செஞ்சுட்டேன்:(

ஒரு சுட்டி தரேன். இதுலே ஏராளமான ஓவியங்கள் கொட்டிக்கிடக்கு. கிடைக்குதான்னு பாருங்க.

http://www.stephen-knapp.com/krishna_darshan_art_gallery.htm

said...

"வைர அங்கியில் கண்ணன்" படத்திலேயே கண்ணைக் கொள்ளை கொள்ள வைக்கிறான். நேரில்...

said...

வாங்க மாதேவி.

//நேரில்...//

நோ சான்ஸ்......அனுபவிக்க முடியாது. கண்ணில் குளம் கட்டிருதுப்பா.