Monday, May 24, 2010

அதுலே, அறுபத்தியஞ்சு வகை இருக்காமே......

நெசமாவா சொல்றாய்ங்க? ரொம்பப் பெருசாம். ஒரு ரவுண்டுலே உடம்பு மூச்சு வாங்கிறப்போகுது! கைடு(புத்தகம்) சொல்வதை நம்பலாமா வேணாமா? அனுபவிச்சுப் பார்த்துடலாம். கிளம்பு......


செக்டர் 3. போகெய்ன்விலா தோட்டம். கார் பார்க்கிங் இடத்தைப் பார்த்ததும் 'சட்'னு எங்க நியூஸி நினைவு வந்துச்சு.(ஏன்?!!!!) சுழல்கேட் வழியா நுழையணும். 34 வயசாகுது. மொத்தம் 20 ஏக்கர். மெது ஓட்டத்துக்குத் தனிப்பாதை ,வளைஞ்சும் நெளிஞ்சும். நம்மைப்போல உள்ளவர்களுக்கு 'எம்மாந்தூரம் வந்துட்டோமோ'ன்னு பதைபதைக்காமல் இருக்க அங்கங்கே மைல்க்கல். 20 கிராம் இளைப்பது உறுதி! ஆரம்பத்துலேயே வெள்ளையும், ஆரஞ்சும், மஜெந்தாவுமா சில கண்ணில் பட்டன. பாதையோடு போனால்.....ஒரு காங்க்ரீட் அமைப்பு. என்னதான் எழுதி வச்சுருக்கு பார்க்கலாமே..... மனசு அப்படியே கல்லை முழுங்குனாப்போல ஆயிருச்சு.

நம்ம அப்துல்கலாம் ஐயா, தலைவரா இருந்தப்ப வந்து திறந்து வச்சுருக்கார், போர் (கால) நினைவகம். நாட்டின் சுதந்திரத்துக்குப்பிறகு வந்த போர்களில் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் ப்ரதேஷ் அண்ட் சண்டிகர் மாநிலங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான நினைவகம்.
ஏப்ரல் 28. 2004 வது வருடம் அடிக்கல் நாட்டி, ஜூன் 11, 2005 நினைவுக் கட்டிடம் எழுப்ப ஆரம்பிச்சு, ஆகஸ்ட் 17, 2006 வது வருடம் கலாம் ஐயா திறந்து வச்சுருக்கார். J & K operations 1947-48 தொடங்கி வீரர்களின் பெயர்கள் அகரவரிசையா சலவைக்கல்லில் பொறிக்கப்ப்ட்டு இருக்கு. இந்தியா-சீனா போர் 1962, இந்தியா-பாக் போர் 1965, ஆப்பரேஷன் பவன் 1987-89, ஆப்பரேஷன் விஜய் 1999, எல்லையில் நடந்த சண்டைகள், உள்நாட்டுப் பாதுகாப்புக்காக நடந்த சண்டைகள், ஐக்கியநாடுகளுக்காப்போய் பங்கேற்ற வகைகள், ஆப்பரேஷன் கோவா 1961, இந்தியா-பாக் சண்டையில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் INS KHUKRI யில் இருந்த கப்பல்படை வீரர்கள் இப்படி வரிசைவாரியாப் பார்த்தப்ப....... இத்தனை உயிர்கள், இத்தனை குடும்பங்கள், குழந்தைகுட்டிகள்.......

நாம் இப்படிச் சொல்றோமே.... எதிரி நாட்டுலேயும் எத்தனை மனிதர்கள் அழிவுகளைச் சந்திச்சு வீரமரணம் அடைஞ்சுருப்பாங்கன்ற எண்ணமும் வந்துச்சு. எதுக்குப் போர் வந்து உயிர்களை காவு வாங்குதுன்னு.... கலக்கம்தான்.

இதோடு நின்னுடாது.... இன்னமும் போர்கள் வரத்தான் போகுது, வீரர்கள் மரிக்கத்தான் போறாங்கன்றதுபோல வரிசை நீண்டு நீண்டு போய் இன்னும் புதிசா சலவைக்கல் வைக்க ஏதுவான அமைப்பு.....வளைஞ்சு வளைஞ்சு போகும் வெற்றிடங்கள்.

தோட்டத்துக்குப் போன உற்சாக மூடு அப்படியே கழண்டுக்கிச்சு. ச்சும்மா ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம் . 20 கிராம் இளைக்கலைன்னா பீடை போச்சு போங்க. அங்கங்கே நீர் ஓடை போல ஒன்னு வெட்டி வச்சுருக்காங்க. தண்ணீர்தான் இல்லை. அது பக்கத்துலே மூங்கில் புதர்கள். காகிதப்பூக்கள் செடிகள் மட்டுமில்லாமல் அங்கங்கே சில பூக்கும் மரங்கள் இப்படி இருந்த ஒரு இடத்தில் பெரிய ஞானி ஒருத்தர் கம்பீரமா தலை உயர்த்தி, தன் அன்புக் கரங்களை நீட்டி அழைப்பது போல ( அச்சச்சோ...எனக்கு என்னமோ ஆகிருச்சு!) ஒரு பெரிய மாமரம். பிஞ்சுகளா நிறையத் தொங்குது. தொரட்டி ஒன்னைக் கட்டி யாரோ வேலையைக் காமிச்சுருக்காங்க போல. நிறைய இலைகள் கொத்துக்கொத்தா தரையில். கூடவே உடைஞ்சுபோன மூங்கில் தொரட்டி:(

வட்டமான சுற்றுச்சுவர் கட்டி உள்ளே இருக்கைகள் போட்டுருக்க, குடை பிடிச்சதுபோல வட்டத்தைக் கவிழ்ந்து பார்க்கும் போகன்வில்லாச் செடிகள். சூப்பரா இருக்கு. உள்ளே கொஞ்சம் இருளோன்னு இருப்பதுதான் யோசனை.
வரிசைகட்டி நிற்கும் அசோகமரங்கள். பெரிய பெரிய புல்வெளிகள். காலார நடக்கவரும் மூதாட்டிகள் (80+) டர்பன் தலைகளோடு பேசிக்கிட்டே நடக்கும் ஆண்கள் யாரைப்பார்த்தாலும் கோபாலுக்கு ரிட்டயர் மிலிட்டரிக்காரர்கள்தான்:-))) இவ்வளவு குள்ளமா இருக்காங்களே ஆர்மிக்காரர்களா எப்படி இருக்க முடியும்? அளக்கும்போது அரையடி டர்பனையும் கணக்குலே சேர்த்துக்குவாங்களோ ? 'ஙே' ன்னு முழிச்சவர்.
'அப்டீங்கறே? சரி. ரிட்டயர்டு சிவில் சர்வீஸ் மக்கள்னு மாத்திக்கோ'ன்னார்.
'ஆங்.... அது!' இருக்கும், இருக்கும். நம்மூர் மெரினாவில் இப்படி ஒரு க்ரூப் தினமும் வந்து சந்திக்குமாம். ஒரு நாளொருத்தர் வரலைன்னா..... மத்தவங்களுக்கு அடி வயித்துலே திக்!..... எங்கே போனாலும் லீவு சொல்லிட்டுப் போகணும்.

ஆமாம். நம்ம பதிவர் உலகில் எப்படி? லீவு சொல்லாம, வலையிலும் காணலைன்னா தேடுவீங்களா?

சில பேர் சீரியஸ் வாக்கர்ஸ். பச்சை சுடிதார் ஒன்னு நான் (பெஞ்சுலே உக்கார்ந்து) பார்க்கும்போதே பத்து தரம் குறுக்காலே வந்து போச்சு.
'நல்ல' போட்டோக்ராஃபர் ஒருத்தர் கஷ்டப்பட்டு மண்டி போட்டுப் படங்கள் எடுத்துக்கிட்டு இருந்தார். வணங்காமுடியாட்டம் நான் ஒரு பக்கம் ஜஸ்ட் எய்ம் & ஷூட்.
தோட்டத்தின் ஆரம்பத்திலும், கடைசியிலுமா ரெண்டு கழிப்பறைகள். அங்கங்கே குடிநீர் குழாய்கள் எல்லாம் போட்டு வச்சுருக்காங்க. தோட்டத்துக்கு எதிர்ப்பக்கம் ஹரியானா மாநில எம் எல் ஏ ஹாஸ்டல் இருக்கு. ஆளுயர டிஃபன் கேரியரை 'ஏகே 47' வச்சவரின் காவலோடு ஒருத்தர் தூக்க முடியாமத் தூக்கிட்டுப்போனார். இதுலே மட்டும் மாநிலங்களுக்குள் பேதமே இல்லை:-)

அங்கிருந்த நேரத்தில் ,கணிசமான அளவில் மக்கள் வந்து போவதைப் பார்த்தேன். எல்லோருக்கும் பயனா ஓரிடம் இருக்கு. மக்களும் கண்டதைப் போட்டு அசிங்கமாக்காமல் சுத்தமாக வச்சுருக்காங்க.

தோட்டங்கள் நிறைய இருக்கும் மாநிலமாம் இந்த சண்டிகர். நானோ நியூஸியின் தோட்டநகரமான 'கிறைஸ்ட்சர்ச்'சில் இருந்து வந்துருக்கேன். நேச நாடுகளின் தோட்டத்துக்கு நேசம் காமிக்காமப் போகலாமா? (இந்த ஊரில் கிறைஸ்ட்சர்ச் என்ற பெயரில் ஒரு சர்ச் இருக்காம்!) நேரம் கிடைக்கும்போது ஒவ்வொரு தோட்டமாகப் போய்ப்பார்த்து எழுதும் உத்தேசம் உண்டு. இதைப்போலவே இங்குள்ள கோவில்களையும்.

காலநிலை: பயங்கர வெய்யில். 47 டிகிரி செல்ஷியஸ். ஈரப்பதம் 17% அதனால் வேர்ப்பது இல்லை.(சென்னையில் 53%) உடலெங்கும் எரிச்சல் உணர்வு.

22 comments:

said...

அருமை. அதுவும் கோபால் சார் போஸ் ரொம்ப அருமை

said...

:-)

said...

அழகான தோட்டம் டீச்சர். 20 ஏக்கரா? வாக்கிங் போக சிறந்த இடம். டீச்சர், தினமும் போறீங்களா?

அப்புறம் ஒரு விஷயம். டாக்டர் அப்துல் கலாமோட வெற்றிக் கல்லுக்குப் பின்னால நீங்க இருக்கீங்க :-)

said...

Good

said...

//இன்னமும் போர்கள் வரத்தான் போகுது, வீரர்கள் மரிக்கத்தான் போறாங்கன்றதுபோல வரிசை நீண்டு நீண்டு போய் இன்னும் புதிசா சலவைக்கல் வைக்க ஏதுவான அமைப்பு.....வளைஞ்சு வளைஞ்சு போகும் வெற்றிடங்கள்//

:-((

said...

ஆஹா குறிப்புக்கள் எடுத்துக்கிட்டேன்.

வலையுலகத்துல ஆளைக்காணோம்னா பதிவு போட்டாவது போன்போட்டாவது விசனப்படுவோம். நாங்கள்ளாம் பாசக்கார பயலுவு டீச்சர். லைலா புயலுக்கு அப்புறம் மெர்க்குரி லெவல் குறைஞ்சிடும்னு நினைச்சேன், இப்பவும் 42 டிகிரிக்கு மேலே, தாங்க முடியல

said...

பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது ஆனால் மனது கனத்து போகிறது. நம் நாட்டு வீரர்களின் நினைவு காலத்தால் அழியாதது டீச்சர்.

said...

காலநிலை: பயங்கர வெய்யில். 47 டிகிரி செல்ஷியஸ். ஈரப்பதம் 17% அதனால் வேர்ப்பது இல்லை.(சென்னையில் 53%) உடலெங்கும் எரிச்சல் உணர்வு.//


ஈரப்பதம் குறைவாக இருக்கும்பொழுது வியர்க்காது. ரிஸ்க் ஃபார் டிஹைட்ரேஷன் அதிகம்.
முன்னாடியே சொல்லி இருந்தீங்கன்னா, ஒரு மண்பானைலே நீர் மோர் எடுத்துகிட்டு பின்னாலேயெ
வந்திருப்பேனே !!

சுப்பு ரத்தினம்.

said...

அழகான இடம்...;)

said...

வாங்க எல் கே.

சார்..... தொப்பை மாட்டிக்கப்போகுதுன்னு பயப்படறார். நீங்க போஸ் அருமைன்னுட்டீங்க:-))))))

said...

வாங்க விக்னேஸ்வரன்.

சிரிப்பாணிக்கு நன்றி:-)))

said...

வாங்க ரிஷான்.

தினமும் வாங்கிங் போறேன் கனவில்!!!!

சென்னைக்கு வந்தப்ப, வீடு பெஸண்ட் நகரில் எடுத்ததே தினம் கடற்கரையில் வாக் போய் உடம்பைப் பாதியாக்கத்தான்.

ஆனால்.... கடற்கரையும் அதுக்குப் போகும் வழியும் இருக்கும் அழகைப்பார்த்து நடுங்கிப்போய் வீட்டுக்குள்ளே அடைஞ்சதுதான் கண்டது.

இங்கே நிறையத்தோட்டங்கள் நடைப்பயிற்சிக்குத் தோதாய் கற்கள் பாவி வச்சுருக்காங்க. நம்ம வீட்டுக்குப் பக்கமே ஒரு நிமிச நடையில் ஒன்னும், மூணு நிமிச நடையில் ஒன்னுமா ரெண்டு பார்க்.

ஆனால்...வெய்யல் இந்தப் போடு போடுதே. வெளியில் தலைகாட்ட முடியலை.

ஆடமாட்டாதவளுக்குக் கூடம் ஒரே கோணல்:-)))))

கலாமோட வெற்றிக்குப்பின் இருப்பது மகிழ்ச்சியே:-)))))

said...

வாங்க பித்தனின் வாக்கு.

புது வேலையில் செட்டில் ஆகிட்டீங்க போல!

said...

வாங்க ஹுஸைனம்மா.

எதுக்கு மனுசன் நிலத்துக்காக அடிச்சுக்கிட்டுச் சாகறான்னே புரியலை:(

said...

வாங்க புதுகைத் தென்றல்.

மெர்க்குரி லெவல் இப்போதைக்குக் குறையாதாம். மீட்டர் வெடிக்காம இருக்கணும்:(

விசாரிப்போமுன்னு சொன்னது மனசுக்கு ஆறுதலா இருக்கு. பத்துநாள் இடுகை இல்லைன்னா ஃபோன் பண்ணுங்க:-)))))

said...

வாங்க சுமதி.

உயிர் அழிவுன்னா ரெண்டு தரப்புக்கும்தானே?

மனசுக்குக் கஷ்டம்தான்ப்பா.

said...

வாங்க சுப்பு ரத்தினம் ஐயா.

மோர் கைங்கரியத்தை இங்கே பால்பண்ணை செய்யுது. அட்டகாசமான மோர் ஒரு லிட்டர் 16 ரூபாய்க்கு 'VERKA' ஒரு ப்ராண்டு கிடைக்குது. அடிக்கும் வெயிலுக்கு அமிர்தம்.
செக்டர்களுக்குள் பால் & மோர், தயிர் விற்பனைக்கு மட்டும் கடை உண்டு.

நீங்க வரும்போது மோர்ப்பானையுடன் வாங்க. நோ ஒர்ரீஸ்:-)

said...

வாங்க கோபி.

அழகுதான். ஆனா வெய்யிலுக்குச் சுருண்டுப்போய்க் கிடக்குது:(

said...

பரந்த அழககான தோட்டம்.

said...

வாங்க மாதேவி.

இன்னும் நிறையத் தோட்டங்கள் உள்ள ஊர்.

போனால் எழுதுவேன் அவைகளைப்பற்றியும்.

said...

இப்படி இருந்த ஒரு இடத்தில் பெரிய ஞானி ஒருத்தர் கம்பீரமா தலை உயர்த்தி, தன் அன்புக் கரங்களை நீட்டி அழைப்பது போல ( அச்சச்சோ...
எனக்கு
என்னமோ !!
மாமரம் ஞானியாகிட்டதா உங்களுக்கு.? சீக்கிரமே துளசியானந்தா ஆஸ்ரமம் ரெடின்னு சொல்லுங்க.:)
பூங்கா நல்லாத்தான் இருக்கு. ஆனா , அது வரத்துக்குக் கரணமானவங்க உயிரோடு இல்லையே:(
ஆறடில அடங்கறத்துக்குள்ள ஆடுகிற ஆட்டம் புராண காலத்திலிருந்து இருக்கத்தானெ செய்கிறது துளசி!
இதுக்கு அவங்க சொல்கிற பெயர் தேசபக்தி!

said...

வாங்க வல்லி.

எல்லா ஞானமும் போதி மரத்தடியில் தானா?

மாமரத்துலே(யும்) ஞானம் இருக்குப்பா!!!!

அந்தக் காலத்துலேயே, எல்லைகளைப் பிரிச்சவுடனே சண்டையும் உயிர்தியாகமும் வந்துருச்சு:(