Monday, May 17, 2010

நித்யானந்தா நகரில் ஒரு 'ராமன்'

மொஃபஸல் பஸ் ஸ்டாண்டுலே வண்டி கிளம்பும் சமயம் 'மதுரை மதுரை, தூத்துக்குடி தூத்துக்குடி'ன்னு ஊர்பேரைச்சொல்லிக் கூப்பிடும் கண்டக்டர் போல.... இது என்ன 'தர்மஸ்தலா தர்மஸ்தலா'ன்னு ..... அதுவும் ஹீனமாக் கீச்சுக்குரலில்..... 'யோவ்... ப்ரஷாந்து.....வாயைத்திறந்து கேளுமைய்யா...இந்த ரோடுலே போனா தர்மஸ்தலா வருதான்னு..... ஆமாம் நீர் ஏற்கெனவே இந்தப் பக்கம் எல்லாம் வந்துருக்கீரான்னா......' பேந்தப்பேந்த ஒரு முழி!

ஆரம்பமே சரியில்லை....காலையில் கிளம்பி ஸ்ருங்கேரியில் ஜனார்த்தனன் கோவில் இருக்காமே அங்கே போயிட்டுப்போகலாமுன்னா... விசாரிச்ச நாலைஞ்சு பேருக்கும் இப்படி ஒரு கோவில் இருப்பதே தெரியலை. எல்லாம் அத்வைதாவில் கிடைச்ச இட்லியின் வேலையாத்தான் இருக்கணும். இலவச ப்ரேக்ஃபாஸ்ட் உண்டுன்னு நம்மகிட்டே இனிமையாச் சொல்லி இருந்தாங்க, காலையில் பெட் காஃபி ஃப்ளாஸ்கில் கொண்டுவந்து கொடுத்தபோது. ஏது? அதான் ரெஸ்டாரண்டு இல்லையேன்னா.....

வெளியே இருந்து வாங்கி வச்சுருவாங்களாம். இன்னும் ஒரு மாசத்துலே இங்கேயே எல்லா வசதிகளும் வந்துரும். அதுவரை வர்ற விருந்தினர்களுக்கு, அறை வாடகையில் 25 சதம் கழிவுன்னு டைனிங் ஹால் போகும்போது கவுண்டரில் சொன்னாங்க. டைனிங் ஹால் நல்லாப் புத்தம் புது மேசைகளுடன் நல்லா இருந்துச்சு. ரெண்டு இட்டிலி சாம்பார் சட்னி கிடைச்சது. அதை முடிச்சதும் இன்னும் இட்லி வேணுமான்னு கேட்டாங்க! என்னா தில்லு!!!!
காலையில் ரிவர் வியூ தெரியுதான்னு ரொம்ப ஆசையாத் திரையைத் திறந்தால்....... ஒரு பசுமாடுதான் ஜிலோன்னு இருக்கும் தெருவில் மெதுநடை போட்டது. இந்த ஹொட்டேல் துங்கா நதிப் பாலத்துக்கருகில் வித்யாநகர் என்னும் பகுதியில் இருக்கு. நல்லா கேமெராக் கண்ணை விரிச்சுப் பார்த்தால் தூரத்துலே சின்னதா ஓடைபோலப் போகும் நதி.
சட் புட்டுன்னு சீக்கிரமாவே கிளம்பிட்டோம். கொஞ்சம் ஊரைச்சுத்திப் பார்த்துட்டு தர்மஸ்தலா போகணும். ஸ்ரீ ஷாரதா மடம் வழியாத்தான் போனோம் என்றாலும் இன்னிக்கே குக்கே சுப்ரமணியாவும் போயிடலாமுன்னு ப்ரஷாந்த் சொன்ன பேச்சைக் கேட்டுத் தொலைச்சுட்டோம். ரெண்டு இடம் பார்க்கணும் என்றால் மடத்துக்குள்ளே போய்வர நேரம் இல்லை.

வழக்கம்போல தப்பான வழியில் அஞ்சாறு கிலோமீட்டர் போனதும், ஏதோ மனசுக்குள்ளே சந்தேகப்பொறி தட்ட, ஒருவீட்டு வாசலில் நின்னு பேசிக்கிட்டு இருந்த மூணு இளைஞர்களிடம் கோபால் வழி கேட்டபிறகு, வண்டியைத் திருப்பவேண்டியதாப் போச்சு. பழியெல்லாம் இட்லிக்கே!
அதே அஞ்சாறு கிமீ திரும்பி வந்தபிறகு எதுக்கும் இருக்கட்டுமுன்னு ஒரு தரம் வழியைக் கேட்டுக்கோன்னா........ஹீனக்குரலில் தர்மஸ்தலா தர்மஸ்தலா..... அட போப்பா....

மலைப்பாதையில் விர்விர்ன்னு வேகம்பிடிச்சு வண்டி போகுது. கமுகும் தெங்கும் இருடீ.... உனக்கு இங்கெதான் இருக்கு''ன்னுதுங்க. குதிரேமுக் தேசீயப் பூங்காவுக்குள் நுழையும் இன்னொரு மலைப்பாதையில் பயணிக்கிறோம். கேரேகட்டின்ற கிராமத்தைக் கடந்தால் மூங்கில் புதர்கள் எக்கசக்கம். கொஞ்சதூரத்தில் வந்த ஏத்தத்தில் ஒரு கோவிலில் அர்ச்சகர் பூசை செஞ்சுக்கிட்டு இருக்கார். வழித்துணை அம்பாள் இல்லைன்னா பிள்ளையார் கோவிலாத்தான் இருக்கணும். போற வேகத்தில் ஒரு கும்பிடு போட்டதுதான். எப்பவாவது எதிரில் ஒன்னு ரெண்டு வண்டிகள் வந்தால் உண்டு என்ற நிலையில் நம் வண்டியின் சத்தத்தை விட்டுட்டுப் பார்த்தால் நல்ல அமைதி. பூங்காவுக்கான செக் போஸ்ட்டில் அனுமதி வாங்கினோம்.கொஞ்ச தூரத்தில் நம் வயித்தில் பால் வார்க்கன்னே தர்மஸ்தலாவுக்கு இப்படிப்போன்னு அம்புக்குறி போட்டுச் சொல்லும் போர்டு சொன்ன பேச்சைக்கேட்டு இடதுபக்கம் திரும்பினோம். ஏழெட்டு நிமிசத்தில் சத்தியதேவி கோவில்னு எழுதுன இன்னொரு பலகையைப் பார்த்ததும் மனசெல்லாம் 'ஜிவ்'ன்னு பறந்துச்சு. குண்டக்கா மண்டக்கான்னு இருந்தால்தான் என்ன? தமிழில் எழுதி இருக்கே!
வாசலில் ரெண்டு யானைகள். இடையில் சின்னதா ஒரு மேற்கூரையுடன் மாடம். கோவில் சின்னதா அம்சமா இருக்கு. கோவிலுன்னு சொல்றதைவிட, எல்லோரும் கூடிப்பேசி விழாக்கள் நடத்த ஏதுவான அமைப்புன்னு சொல்லலாம். கோவில் சந்நிதி மூடி இருந்துச்சு.

வாழைப்பழக்குலைகளாத் தொங்கவிட்டிருக்கும் பழக்கடையைக் கவனிச்சுக்கிட்டே குருவாயனகேரேன்னு ஒரு சின்ன ஊரைத் தாண்டினோம். நாலு பழம் வாங்கிப்போட்டுருக்கலாம்......ஹூம்... அடுத்துவந்த கொஞ்சம் பெரிய ஊர் பெல்தங்காடி.
வெறும் ஒன்னரை மணி நேரப் பயணம் இப்படி இழுத்துக்கிட்டே போகுது.
நேத்ராவதி நதிப் பாலங்கடந்து உஜிரே என்ற ஊர், நிறையப் பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளுக்கும் பேர் போனது. ஸ்ரீ தர்மஸ்தலா மஞ்சுநாதேஸ்வரா கல்லூரிகூட இங்கேதான் இருக்கு. இன்னும் பத்தே கிமீதான் போகணும். பாதையைத் தவறவிடலைன்னு ஆனந்தப்பெருமூச்சு விடும்போது திடுக்ன்னு ரெண்டு பெருய யானைகள் தும்பிக்கையை உயர்த்தி இங்கே வந்துட்டுப்போன்னு கூப்பிடுதுங்க. ஸ்டாஆஆஆஆஆஆப்
அழுத்தமான செங்காவி நிறக் கட்டிடத்தில் தங்கமா மின்னும் கடவுளர்களின் உருவங்கள். ஸ்ரீ ராமர் கோவில். புதுக் கட்டிடத்தின் பின்னே அதை ஒட்டி நிற்கும் பழைய கோவிலின் கோபுரம் கண்ணில் பட்டது. கார் பார்க்கின் நுழைவுக்கருகிலே அச்சுவெல்லக் கட்டியைத் தூக்கித் தனியே நிறுத்தி வச்சது போல ஒரு சதுரமான அமைப்பு. அதன் மூன்று பக்கங்களிலும் ராமாயண நிகழ்ச்சிகள். என்னவா இருக்குமுன்னு அடுத்த பக்கம் போனால் அட! இது தேர்ப் பார்க்கிங்:-)
கண்திருஷ்டி படாமல் இருக்கட்டுமுன்னு இதை ஒட்டி ஒரு கிணறு. சுத்துச்சுவரை எழுப்பாமல் பேசாம தரை அளவுலே வச்சு இரும்பு மூடி போட்டுருக்கலாம். இன்னொரு பக்கத்தில் பாதி மறைவது போல ஒரு கொட்டாய். என்னடா இது ' ஐ ஸோர்' ன்னு நினைச்சு அதன்வழியா யானையை நோக்கிப் போனால், கொட்டாய்க்குள்ளே இருந்து இங்கே வந்துட்டுப்போங்கன்னு ஒருத்தர் கூப்புட்டார். ராமாயணக் காட்சிகளைப் பாதி வரை மறைக்கும்படி மூணு தனித்தனிச் சந்நிதிகள். ஒவ்வொன்னிலும் ஒரு குரு. ஒன்றில் சத்குரு நித்தியானந்தர், துன்னூறு வாங்கிக்கிட்டு யானையை நோக்கிப்போனோம்.
கொஞ்சம் உசரத்தில் இருக்கும் கோவிலுக்குப் போக ஒன்னு வர ஒன்னுன்னு ரெண்டுபுறமும் படிக்கட்டுகள். வெயில் உரைக்காமலிருக்க மேற்கூரை போட்டு ரப்பர் மிதியடிகள். உள்ளே போகும் வழியின் தொடக்கத்தில் சின்னதாத் தண்ணீர் தேங்கிநிற்கும் அமைப்பு. அதுலே இறங்கிப்போகணும். காலையும் சுத்தம் செஞ்சாப்புலே ஆச்சு! படிகள் முடியும் இடத்தில் கட்டிடத்தின் ஹால் முகப்பிலே வாயைத் திறந்து தும்பிக்கையைத் தூக்கியபடி நான்கு யானைத் தலைகள். கீழே துவார பாலகர்கள்கள். இதுக்குமேல் படமெடுக்க அனுமதி இல்லை:(

பிரமாண்டமான ஹாலின் மறு கோடியில் மூணு சந்நிதிகள். அங்கேயும் சில 'குரு'க்கள். ஷீரடி சாய்பாபாவும் இருக்கார். அந்தக் கோடிவரை போய்த் திரும்பினால்தான் மாடிக்கு ஏறிப்போகலாம். 'முதல்லே கீழே இருக்கும் குருக்களைச் சேவிச்சுட்டு வா' ன்னு ஒரு போர்டு வேற! நமக்குக் காரியம் பெருசா வீரியம் பெருசான்னு ........

மாடிப்படி ஏறிப்போனால் படிகள் முடியும் இடத்தில் முதலில் புள்ளையாருக்கு ஒரு சந்நிதி. பக்கத்துலேயே மேசை ஒன்னு போட்டுக்கிட்டுப் புள்ளையார் பிரஸாதம் விக்கிறார் ஒருத்தர். இந்தப் பக்கமெல்லாம் பிரஸாதமுன்னால் அது லட்டு மட்டும்தான். கொழுக்கட்டை இருக்காதான்னு ஆவலாப் போன எனக்கு ஏமாற்றம் என்றாலும் ஒரு லட்டு வாங்கிக்கத் தோணுச்சு. முப்பது ரூபாய். கொஞ்சம் அதிகம்தான். ஆனால்....வாங்குனதே நல்லதுன்னு ஆச்சு.
ஒரு ஆறேழடி உசரமுள்ள ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகச் சிலைகள். ராம லக்ஷ்மணர்கள், சீதை, மண்டியிட்ட ஆஞ்சநேயர்ன்னு பளிங்கில் கொள்ளை அழகான ரூபங்கள். நமக்கிடப்பக்கமும் வலப்பக்கமும் வரிசையா நவதுர்கா சந்த்ரகண்டா, க்ருஷ்மாண்டா, ஷைலபுத்ரி, ப்ரஹ்மச்சாரிணி, ஸ்கந்தமாதா, காத்யாயனி, மஹாகௌரி, ஸித்திதாத்ரி, காலராத்ரி, ன்னு பளிங்குச்சிலைகள், சூரிய சந்திரன்னு நவ கிரக நாயகர்கள், மொத்தம் கோவில் முழுக்க 36 இருக்கு.
நித்தியானந்தா ஸ்வாமி ( ஏழு வயசில் சந்நியாசம் வாங்கிய கேரளாக்காரர்) இந்த தர்மஸ்தலா கோவிலுக்கு 1927 வது வருசம் வந்தப்ப, இந்த இடத்தில் (இப்போ ராமர் கோவில் உள்ள இடத்தில்) ஒரு இரவு தங்கினாராம். இங்கே ராமனுக்கு ஒரு கோவில் கட்டணுமுன்னு மனசில் தோணி இருக்கு. இவருடைய மறைவுக்குப்பின், பிரதம சீடரான ஆத்மானந்தா சரஸ்வதி ஸ்வாமிகள் குருவின் ஆசையை நிறைவேத்த 1969 லே இந்தக் கோவிலைக் கட்டத் தொடங்கினாராம். இடம்? அப்போ தர்மஸ்தலா ஸ்ரீக்ஷேத்ரத்தின் எஸ்டேட் மேனேஜரா இருந்த சூர்யநாராயணா ராவ் நன்கொடையாக இடத்தைக் கொடுத்துருக்கார். 1971வது வருசத்தில் சின்னதா ஒரு கொட்டகை போட்டு ஆரம்பிச்சு இருக்காங்க. நித்யானந்தா நகரும் கோவிலும் உருவானது. முப்பது வருசத்துலே பிரமாண்டமான கட்டிடம், இந்தப் பக்கம் போற எல்லோருடைய கவனத்தையும் இழுக்குது.

ஸ்ரீ ஆத்மானந்தா ஸ்வாமிகள் போன வருசம்(2009) ஜூலையில் சமாதியாகிட்டார். இப்போ இருப்பவர் ஸ்ரீ ப்ரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகள். 50 வயசுக்காரர். பூர்வீகத்துலே கர்நாடக அரசு வேலை. சட்டம் படித்தவர். விவசாய இலாகா இயக்குனரா விதான் சௌதாவில் 4 வருசம் வேலை செஞ்சவர்.
கோவில் அழகு. ஆனால் காவலாளிகளின் கெடுபிடி கொஞ்சம் அதிகம். நரிக்கு நாட்டாமை கொடுத்ததுபோல் இருக்கு.

அரைமணி இங்கே போயிருச்சேன்னு கிளம்பினோம்.

21 comments:

said...

"செங்காவி நிறக் கட்டிடத்தில் தங்கமா மின்னும் கடவுளர்களின் உருவங்கள்..."
பார்க்க இரண்டு கண்போதாது போலிருக்கே. அவ்வளவு அழகு.

உங்கள் கமாராவுக்கு வணக்கங்கள்.

said...

வாங்க டொக்டர் ஐயா.

நலமா? அழகான அமைப்பு. அருமையான யானைகள். கெமெராவுக்கு இதைக் கண்டதும் பயங்கர மகிழ்ச்சி:-))))

said...

ஒவ்வொண்ணும் ஒவ்வொரு அழகு...

said...

வாங்க கயலு.

ஆமாம்ப்பா. யானைகளைத்தானே சொல்றீங்க????

said...

செங்காவியில் தங்கச்சிலைகள் அட்டகாசமா மின்னுது.

இட்லி என்னங்க பண்ணிச்சு!!!. அது பாட்டுக்கு தேமேன்னு கல்லாட்டம் இருக்கு :-)))))

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதே அதே...கல்குண்டுகள்தான்:(

said...

//ஒரு பசுமாடுதான் ஜிலோன்னு இருக்கும் தெருவில் மெதுநடை போட்டது. நல்லா கேமெராக் கண்ணை விரிச்சுப் பார்த்தால் தூரத்துலே சின்னதா ஓடைபோலப் போகும் நதி.//

Haa haaa :) what the hotel people can do, if there is no water in the river? :-)

said...

//த்தியானந்தா ஸ்வாமி ( ஏழு வயசில் சந்நியாசம் வாங்கிய கேரளாக்காரர்) //

Ohhhh idhu vera nithyanandava????

said...

செங்காவி நிறத்தில் கோவில் பார்க்க நன்றாக உள்ளது, யானைகளும் அழகாக உள்ளன டீச்சர்:)))))

said...

ஸ்ரீ ராமர் கோவில், ராமாயணக்காட்சி, அனைத்தும் அழகாக இருக்கிறது.

said...

வாங்க ப்ரசன்னா.

அதான் எனக்கு ஆச்சரியம். அரபிக்கடலில் கலக்கும் ஆறுகள் அனைத்தும் சும்ம ஜில்லுன்னு ஃபுல் ரிவரா ஓடும்போது இந்த துங்க்ஜாவுக்கு என்ன வந்ததுன்னுதான்.....

ஆமாம். வேற நித்யானந்தாதான். இல்லைன்னா கிருஷ்ணன் கோவில் கட்டி இருக்கமாட்டாரா? :-)))))

said...

வாங்க சுமதி.

யானை = அழகு :-)))))

said...

வாங்க மாதேவி.

மூணு சுவர்களிலும் 6x3 = 18 ன்னு ராமாயணக் காட்சிகள் சூப்பரா இருக்கு. ஜனகனுக்குச் சீதை கிடைப்பதுகூட ஒரு சித்திரம் இருக்கு. அழகை ரஸிக்க விடாமல் அந்தக் கொட்டாயைக் குறுக்கே பூந்து கட்டணுமா?

என்னமோ போங்க:(

said...

ஒவ்வொரு முறையும் உங்கள் புகைப்படத்திற்கு அடிமையாகிக்கொண்டு இருக்கின்றேன்,

தலைப்பை பார்த்து ஆச்சரியத்துடன் உள்ளே வந்து அசந்து போய் விடை பெறுகின்றேன்.

ஞானம் தேடியவர் கம்பிக்குள்
அமைதி தேடியவர்கள் அதோகதியில்
அடித்து தூள் கிளப்பியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மட்டுமே.

ஏற்கனவே சுந்தர் ராமன் சொன்ன வாசகம் தான் நினைவுக்கு வருகிறது.
பிரவாகமான நடை.

said...

beautiful pictures. idli's do look good, no wonder prasanth keeps missing the route. the temple is magnificient

said...

அழகான கோவில் டீச்சர்

பள்ளிகூடத்துக்கு ஒரு மாச லீவு வேணும் டீச்சர். லீவ் லெட்டரோட வந்திருக்கேன் :)

said...

வாங்க ஜோதிஜி.

புகழ் எல்லாம் நம்ம கெமெராவுக்கே!!!!

கதைசொல்லியின் நடை மெதுவாகப்போனாலும் சீராகப் போகுதுன்னு உங்க பின்னூட்டம் சொல்லுது!
நன்றி.

said...

வாங்க சந்தியா.

ப்ரஷாந்த் இந்தப் பக்கமெல்லாம் நம்மாலே தெரிஞ்சுக்கிட்டார்:-)))))

'இட்லி' படத்துலே அழகா வந்துருச்சு!!!!

said...

வாங்க நான் ஆதவன்.

லீவு க்ராண்டட் ஆன் ஒன் கண்டிஷன்.

போய்வந்ததும் உங்கள் விடுமுறையைப் பற்றி 1000 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுதணும்.

முந்தியெல்லாம் ரெண்டுஇல்லை மூணு பக்கங்கள்ன்னு இருக்கும். நாங்கெல்லாம் வழக்கத்தைவிட பெருசுபெருசான எழுத்தா எழுதிப் பக்கத்தை நிரப்புவோம்:-)))

said...

இப்போது முன் வாசலில் காலை கழுவி செல்ல தண்ணீர் கிடையாது. நீங்கள் போன போது புதிதாக தெரிகிறது. இப்போது கொஞ்சம் பழசாக இருக்கிறது.
நான் 6 ம் தேதி போனேன்.

said...

வாங்க கோமதி அரசு.

அஞ்சு வருசமாச்சே. அப்ப இது கவனிப்பில்லாமல் சரித்திரம் ஆகிப்போச்சு:(