Friday, May 14, 2010

வித்யாஷங்கரும் ஷாரதையும்

பகல் சாப்பாடு 12.15 மணியில் இருந்து 2.30 வரை. ராத்திரின்னா 7.15 முதல் 8.30 வரை. பரவாயில்லையே...இந்த அரேஞ்ச்மெண்ட் நல்லா இருக்கே! சோறு கண்ட இடம் சொர்க்கம்ன்னு இருந்துறலாமா!!! இருட்டப்போகுது. கொஞ்சமாவது வெளிச்சம் இருக்கும்போதே பார்த்துட்டு அப்புறம் ஹொட்டேலைத் தேடிப்போகலாமுன்னு முடிவு ஆச்சு. மங்களுரில் நமக்கு ட்ராவல் வண்டி ஏற்பாடுசெஞ்ச ராவ் சொன்ன இடத்துக்குத்தான் போகலாமுன்னு இருக்கோம். மொதல்லே இதைப் பார்க்கலாம்.

பெரிய நுழைவு வாசல். காலணிகளை அங்கே விட்டுட்டுக் கோட்டை மாதிரி இருக்கும் வளாகத்துக்குள்ளே நுழைஞ்சோம். தோட்டம் பிரமாதம். ஷாரதாம்பா கோவிலுக்கு இப்படிப்போன்னு இடதுபக்கம் அம்புக்குறியும் சாப்புடணுமுன்னா இன்ன நேரத்துக்கு இப்படிப்போன்னு வலதுபக்கம் காமிக்கும் அம்புக்குறியுமா நம்மை வரவேற்பது ஸ்ரீ ஸ்ரீ ஸ்ருங்கேரி மடம். நேர் எதிரா தோரணவாயில் பிள்ளையார் சந்நிதி. விக்கினம் வராமலிருக்க அந்த விக்னேஸ்வரனை முதலில் கும்பிட்டுக்கலாமுன்னு உள்ளே நுழைஞ்சோம். வெள்ளியில் செய்த வேலைப்பாடுகளுடன் உள்ள கதவு மூடி இருக்கு. கதவின் நிலையில் மேலே நடுவா புள்ளையார் உருவம் மாலை அலங்காரத்துடன். ஒரு ஏழெட்டுப்பேர் நின்னுருந்தாங்க. சரி. அநேகமா இப்பத் திறந்துருவாங்கன்னு நாங்க(ளும்) நினைச்சோம்.
நின்ன சனம் கதவைக் கும்பிட்டுட்டு போகுது. அங்கே இருந்த அர்ச்சகரிடம்(?) சந்நிதி எப்போ திறப்பாங்கன்னு பவ்யமா கேட்டேன். அதான் இதுன்னு கதவைக் காமிச்சார். அட ராமா!!! நிலையில் இருக்கும் பிள்ளையார்தான் இந்த சந்நிதிக்கான ஸ்வாமி.

நமக்கிடது பக்கம் இருக்கும் வழியில் போகலாம். மாதா சரஸ்வதி, ஷாரதேன்னு மனசுக்குள் பாடிக்கிட்டே போய் வலப்பக்கம் திரும்பினால்...... அட போங்கப்பா. எத்தனைதரம்தான் இப்படி மூச்சடைச்சு நிக்கிறது!!!! நமக்கு வலப்பக்கம் புதுக்கோவிலும் கண்ணுக்கு நேரா பழைய ஆனால் பார்க்க அம்சமா வித்தியாசமா ஒரு கோவிலும் இருக்கு. ஆஹா.....இப்படி ஒன்னை ஹளபேடு, பேலூர் பயணத்தில் (அப்போ நான் பதிவர் இல்லை! அது ஆச்சு 16 வருசம் முந்தி) பார்த்தமே!


வித்யாசங்கரர் கோவிலுன்னு பழைய கோவிலுக்குப் பெயராம். நல்ல உசரமான படிக்கட்டுகளுடன் மூணு பக்கமும் வாசல்களுமா நிக்குது. வெளிப்புறம் முழுசும் விதவிதமான சிற்பங்கள். எதைச் சொல்ல எதைவிடன்னு தெரியலை. முடிஞ்சவரை க்ளிக்கோ க்ளிக்தான். புத்தர், தீர்த்தங்கரர், கிருஷ்ணர், ராமர்ன்னு விஷ்ணுவின் அவதாரங்கள், 1 சிவப்புராணங்களில் வரும் கதைநாயகர்கள்ன்னு ஏராளம், ஏராளம்.
விஜயநகர சாம்ராஜ்யத்தை ஆரம்பிச்சு வச்ச ஹரிஹரர், புக்கர் உடன்பிறப்புகள் கட்டிய கோவில். காலக்கணக்கு சொல்லுது 1338ன்னு. சரித்திர ஆராய்ச்சிகளில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் சொல்றாங்க இந்தக் கோவில் சாளுக்கியர்கள் (ஹொய்சாலா பேரரசு) கட்டுனது. அதைத்தான் விஜயநகர மன்னர்கள் பராமரிச்சு மேம்படுத்தி இருக்காங்கன்னு. (இதுதான் உண்மையாக இருக்கணும். இதே மாதிரிக் கோவில்களை 16 வருசம் முந்தி பார்த்தேனே) எப்படியானாலும் அருமையான சிற்ப வேலைப்பாடுகளுடன் துங்கா நதிக்கரையில் கம்பீரமா நிக்குது இது!


துங்கா நதித்தண்ணீர் ரொம்ப சுவையா இருக்குமாம். 'துங்கா நீர் குடிக்க, கங்கா நீர் குளிக்க'ன்னு ஒரு பழமொழிகூட இருக்குன்னா பாருங்க,
படியேறி உள்ளே போனால் அற்புதமான வேலைப்பாடுகளுடன் 12 தூண்கள். இதை ராசித்தூண்கள்ன்னு சொல்றாங்க. 12 ராசிகளைக் குறிக்குதாம். ரொம்ப விசேஷமான கோவிலின் அமைப்பு காரணம் சூரியன் அந்தந்த ராசிகளில் ப்ரவேசிக்கும்போது அந்த ராசிக்குண்டான தூணின் மீது காலைச்சூரியன் விழு(மா)ம். நம்மைப்போல ராத்திரியில் போய் நின்னா..... சொல்றதைக் கேட்டுக்கிட்டுத்தான் வரணும். தூண்களுக்கு நடுவிலே தரை லெவலில் இருந்துசின்னஇறக்கமா ஒரு ரெண்டு இஞ்ச் பள்ளத்திலே வட்டமான ஒரு டிஸைன். கவனிக்காம குறுக்கே நுழைஞ்சால் கால்தட்டிப்போகும். அங்கங்கே சிலர் தூண்களுக்குப் பக்கத்தில் உக்கார்ந்து கண்மூடித் தியானம் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க., சின்னதா ஒரு ஒன்னரை அடி உயரமான மேடைபோன்ற இடத்தில் வெள்ளைப்பட்டுடுத்தி அலங்காரமா ஒரு அம்மன் சிலை ஒரு பக்கமாவும், லிங்கரூபத்தில் முகமூடி போட்ட சிவனும் புள்ளையாரும் இருந்துததா நினைவு. என் கவனம் எல்லாம் அந்த அம்பாள் மேலேயே நின்னு போச்சு. யார்ன்னு கேட்டேன்(மடத்தனமா) ஷாரதான்னு பதில் கிடைச்சது. சரஸ்வதி. வெள்ளைக் கலையுடுத்தி வீற்றிருக்கிறாள். குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்ய விசேஷ இடமாம். ஒரு பெரிய தாம்பாளத்திலே சனங்க காணிக்கையை போட்டுட்டுப் போறாங்க. சில்லறை இல்லையேன்னு முழிக்க வேணாம். நாம் பெரிய நோட்டைப் போட்டுட்டு தட்சிணை போக மீதிச் சில்லரையை எடுத்துக்கலாம். யாரும் யாரையும் ஒன்னும் சொல்றதில்லை. முன்னேரு போனவழியைப் பின்னேர் தொடர்ந்தது:-)
' மாலிக் காஃபூர்' படையெடுப்பின்போது ரொம்ப அடிபட்ட கோவில்களில் இதுவும் ஒன்னாம். நல்லவேளையா அப்படியே விட்டுடாமல் சீர்படுத்திப் பராமரிச்சு வச்சுருக்காங்க. கோவில் நல்ல உயர மேடையில் இருப்பதால் கதவருகில் நின்னாலே சுத்துப்புறம் எல்லாம் நல்லாத் தெரியுது. நதிக்கரையிலே பார்க் ஒன்னு இருக்காம். அங்கே போக ஒரு பாலமும் போட்டுருக்காங்க. மசமசன்னு இருட்டுலே என்னத்தைப்போய் பார்க்கன்னு விட்டுட்டேன். இந்தப் பக்கம் கொஞ்ச தூரத்துலே கொஞ்சம் உசரமான இடத்துலே மேற்குத் தொடர்ச்சி மலையை ' பேக் ட்ராப்' பா வச்சு ஒரு புதுக்கோவில் தெரிஞ்சது. எந்த வழின்னு தெரியலை:(
ஸ்ரீ ஷாரதாம்பாள் கோவிலுக்கு போகலாம். ஆதிசங்கரர் ஆரம்பிச்சு வச்சது. இந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்? அவர் இந்தப் பக்கம் போன சமயம், பயங்கரமான வெய்யில் காலம். கர்ப்பிணித் தவளை ஒன்னு மூச்சு வாங்க வலியில் துடிக்குது. சுள்ளுன்னு வெய்யில்வேற அதன் தலையில்:( இதைச் சகிக்கமாட்டாத நாகம் ஒன்னு தன் படத்தை விரித்து அந்தத் தவளைக்குக் குடை பிடிச்சுக்கிட்டு இருந்துச்சாம். ஜென்ம விரோதிகள் இப்படி பகைமை பாராட்டாமல் இருந்ததைப் பார்த்த அவர் இது புண்ணிய பூமின்னு இங்கேயே அன்னைக்குக் கோவில் கட்டினாராம். ஷாரதா தேவியைப் பாதுகாக்க, கிழக்குலே காலபைரவர், மேற்கிலே ஆஞ்சநேயர், வடக்குலே காளி, தெற்கில் துர்க்கான்னு நாற்புறமும் சில கோவில்களையும் கட்டுனாராம். இவருக்கு இந்த நாலு என்ற எண் மேல் ஏகப்பட்ட வாஞ்சை போல இருக்கு.
ஆதிசங்கரர் பாரதத்தின் நான்கு புறமும் தர்மத்தைப் பரப்பவும் அத்வைதக் கொள்கையைப் பரப்பவும் நாலு மடங்களையும் ஸ்தாபிச்சார். ஜ்யோதீர் மடம் வடக்கே பத்ரிநாத் அதர்வணம், கிழக்கே பூரி (ஒடிஸ்ஸா) கோவர்தன மடம் ரிக், மேற்கே காளிகா மடம் த்வாரகை சாமவேதம், தெற்கே ஷாரதா மடம் யஜூர் ன்னு நாலு பீடங்கள். நான்கு வேதத்துக்கும் ஒவ்வொன்னுன்னு இருக்கு.

கோபுரம்தான் சின்னதே தவிர கோவில் உள்ளே பெருசாத்தான் இருக்கு. இங்கேயும் தங்க விக்கிரஹம். ஆனால் இன்னிக்கு முத்துக்களால் ஒரு அலங்காரம். ரொம்ப அழகா இருந்தாள். படம் எடுக்க அனுமதி இல்லைன்னு போர்டு சொல்லியது. நவராத்ரிப் பண்டிகை இங்கே அமர்க்களப்படுமாம். பத்து நாளும் அம்மன் ஊர்வலம் விதவிதமான அலங்காரத்தில் இருக்குமாம்.


இந்த்ரி அலங்காரத்தில் உள்ள படம் இது. வேறு வழி இல்லாததால் இவை
ரெண்டும் 'சுட்ட படம்'
வளாகத்துலே விசேஷங்களுக்காக ஒரு ஹால், ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி சபா பவன் இருக்கு. மைசூர் அரண்மனை தர்பார் மண்டபத் தூண்கள் போலவே இங்கேயும் கலர்ஃபுல்லான தூண்கள். அம்பாளின் உருவச்சிலைகளும் வச்சுருக்காங்க. போதிய வெளிச்சம் இல்லாததால் படம் சுமாராத்தான் வந்துச்சு. வளாகத்தின் ஓர் அறையில் கோவிலுக்கு வெள்ளி & தங்கத்தகடுகள் செய்யும் வேலைகள் நடக்குது. நல்ல மெல்லிசாத் தகடுகளைத் தட்டி வடிவமைக்கிறாங்க.
அத்வைதா ஹொட்டேல் புத்தம் புதிது. இன்னும் லிஃப்ட் போடலை. 3 . ரெஸ்டாரண்ட் கிடையாது. எல்லா அறைகளும் ரெடியாகவுமில்லை. 'ரூம் வித் துங்கா நதி வியூ' எடுத்துக்கிட்டோம். இருட்டில் ஒன்னும் தெரியலை. பொழுது விடியட்டும் பார்க்கலாம்.

சாப்பாட்டுக்காக மறுபடிக் கிளம்பி ஊருக்குள் வரவேண்டி இருந்துச்சு. விசாரிச்சப்ப பாதி வழியில் ஒரு ரெஸ்டாரண்ட் இருக்காம். ஆனால் மடத்துக்கிட்டே போயிட்டால் அட்டகாசமான ஒன்னு இருக்குன்னாங்க. ஹொட்டல் குருன்னு சொன்னதா நினைவு.

அங்கே போனால் இடமே ரொம்ப சுமார். மனசுக்குப் பிடிக்கலைன்னு வெளியே வந்துட்டோம். வேற எதாவது இருக்கான்னு தேடுனதில் ஒரு மெஸ் மாதிரி கண்ணுலே பட்டுச்சு. வாசலில்' டிஃபன் ரெடி'ன்னு போர்டு.

வீடுதான். தெருவிலிருந்து பார்த்தால் ஆளோடியில் எதிரும் புதிருமா ரெண்டு வரிசையா இலை போட்டுப் பரிமாறிக்கிட்டு இருக்காங்க. நல்ல சுவையா இருக்கும் போல. பயங்கரக்கூட்டம். ரெண்டு இலைக்கும் நடுவில் இருக்கும் சாண் அகல இடத்தில் எவர்சில்வர் பக்கெட்டுகளுடன் சட்னி, சாம்பார் வகையறாக்களை ஓடி ஓடி இலையில் ஊத்தறதைப் பார்த்தேன். எங்கே இலையை மிதிச்சுருவாங்களோன்னு எனக்கு ஒரே திக்திக். ஐயோ இப்படிப் பதறிக்கிட்டு என்னால் சாப்பிட முடியாது. மேலும் கீழே உக்காரணும். விஷப்பரிட்சை தேவையா?

மரியாதையாக் கிளம்பி பாதி வழியில் இருக்கும் ரெஸ்டாரண்டுக்கு வந்தோம். மாடி ஏறனும். கோபால் 'ஆசைப்பட்ட செட் தோசை' அவருக்கு. எனக்கு ஒரு ப்ளெயின் தோசை. ப்ரஷாந்துக்கு வேணுங்கறதைக் கொடுக்கச் சொல்லியாச்சு. ஏதோ மீல்ஸ் வாங்கிக்கிட்டார்.
அறைக்குத் திரும்பிக் கட்டையைக் கிடத்தினோம்.

23 comments:

said...

அவசர அடி அடிச்சீங்களா? இல்லை அடுத்த நாளும் நிதானமாப் பார்த்தீங்களான்னு தெரியலை. அதனால அடுத்த பதிவைப் பார்த்துட்டு அப்புறமா கொஞ்சம் மேட்டர் சொல்லறேன். :)

said...

வாங்க கொத்ஸ்.

வகுப்பில்தான் இருக்கீரா!!!!

அடுத்த நாள் காலை வரலாமுன்னு நினைச்சு முடியாமல் போச்சு. கிடைச்ச நேரத்துலே பார்க்க முடிஞ்சது இவ்ளோதான்.

மேட்டரைச் சீக்கிரம் சொல்லும்.

எதை விட்டேன்னு பார்க்கணும்.

said...

hmm ithu entha oornu puriyala. oorla irunthu vanthapuram matthatha padicha puriumnu ninaikiren

said...

//நிலையில் இருக்கும் பிள்ளையார்தான் இந்த சந்நிதிக்கான ஸ்வாமி//

yes teacher i have also heard about that.

said...

உள்ளேன் டீச்சர்...இப்போதைக்கு இதுதான்...விரைவில் மொத்தமாக தேர்வுக்கு முன்னாடி எல்லாத்தையும் படிச்சிடுவேன் ;)

said...

வாங்க எல் கே.

அடடா..... ஸ்ருங்கேரின்னு குறிச்சொல் கொடுத்துருந்தேனே!

said...

வாங்க ப்ரசன்னா.

கேள்விப்பட்டதைவிட இப்போ ஃபோட்டோ எவிடன்ஸ் கிடைச்சுருக்கு உங்களுக்கு:-))))

said...

வாங்க கோபி.

இன்னிக்கும் கடைசி பெஞ்சா????

ம்ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க.

said...

பழைய கோவில் மற்றும் சிற்ப வேலைப்பாடுகள் அனைத்தும் நன்றாக உள்ளது டீச்சர்:)))))

said...

கதவே சன்னிதியாக!!... வித்தியாசமா இருக்கு.

said...

மடத்து அலுவலகத்திலே இருந்து இடப்பக்கமாப் போனால் கன்னடக்காரர் ஒருத்தர் வீட்டிலேயே சாப்பாடு, டிபன் கொடுக்கிறார். கீழே உட்காரமுடியாதுனா வெளியே இருக்கும் பெஞ்சிலேயே சாப்பிட அநுமதி உண்டு. ஆனால் உங்களுக்குச் சரியா வருமா தெரியலை. சின்ன வீடுதான் அதுவும், அது தவிரவும் மூன்று, நான்கு வீடுகளில் மெஸ் வைச்சு நடத்தறாங்க. மடத்தின் தங்குமிடமே நல்லாவும் இருக்கும். பராமரிப்பும் சுத்தமாகவே இருந்தது. வயதுக்கு ஏற்றாற்போல் அறை கொடுப்பாங்கனு கேள்வி. நாங்க கீழே வேணும்னு கேட்டுக்கிட்டு எடுத்துக்கொண்டோம்.

said...

வித்யாரண்யர் கோயில் அது. சிருங்கேரி பீடாதிபதிகளில் ஒருவர். அவர் காஞ்சி மடத்தில் இருந்து அனுப்பியவர் என்றும் சொல்வதுண்டு. ஹம்பி நகரத்தை நிர்மாணம் செய்ய நல்ல நேரம் குறித்துக்கொடுத்துவிட்டுத் தான் பூஜை முடிச்சுச் சங்கை ஊதும்போது நகரத்தின் நிர்மாணத்திற்கான அஸ்திவாரம் போடச் சொல்லி ஹரிஹர, புக்கர்களிடம் சொல்லி இருந்தார். அவங்களும் தயாராய்க் காத்திருக்க அங்கே தூரத்தில் போன மாட்டிடையன் ஒருவன் மாடுகளை ஒருங்கே சேர்க்கச் சங்கை எடுத்து ஊத, இவங்க இங்கே நகரை நிர்மாணிக்க, வந்தது வினை. பின்னால் சரியான நேரத்திற்கு வித்யாரண்யரின் சங்கநாதம் கேட்கப் பதறிப் போன சகோதரர்கள் குருவை நாடி ஓடி விஷயத்தைத் தெரிவிக்க, கண்களை மூடிய வித்யாரண்யர் கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர். இந்த நாடும், தர்மமும் செழித்து ஓங்கவும், சநாதனம் நிலைபெற்று நிற்கவும் இந்த சாம்ராஜ்யம் உறுதுணையாய் இருக்கவேண்டும் என்ற எண்ணத்திலேயே நேரம் குறிச்சேன். ஆனால் இப்படி ஆகிவிட்டது. இதுவும் தெய்வசங்கல்பம் தான். இந்த சாம்ராஜ்யம் முந்நூறு வருடங்களே இருக்கும், அதற்கு மேல் இருக்காது என்றும் கூறினாராம். ஹரிஹர, புக்கர்கள் தாங்கள் ஸ்தாபித்த விஜயநகரத்தை முதலில் வித்யாரண்யர் பெயரில் வித்யா நகரம் என்றே அழைக்க எண்ணி இருக்கின்றனர். ஆனால் வித்யாரண்யரின் கருத்துப்படி விஜயநகரம் என்ற பெயர் சூட்டப் பட்டது. சாம்ராஜ்யமும் அவருக்கே காணிக்கையாக்கப் பட்டது. இன்றளவும் கர்நாடக மக்கள் தங்கள் அரசராக சிருங்கேரி மட பீடாதிபதிகளையே மனதளவில் எண்ணுவார்கள். ஹம்பி நகரத்தின் வீழ்ச்சி ஒரு கண்ணீர்க்கதை! மனதைத் துடிதுடிக்க வைக்கும்.

said...

வித்யாரண்யர் கோயிலைப் படம் எடுக்க எங்களுக்கு அநுமதி மறுத்துட்டாங்க. பரவாயில்லை, நீங்க எடுத்திருக்கீங்க!

said...

உங்களைப் பாடகர்கள் பற்றிய தொடர்பதிவுக்கு அழைத்துத் தனிமடல் போட்டிருந்தேனே?? நீங்களும் பதில்கொடுக்கலை, ரேவதியும் பதில் கொடுக்கலை, அவங்களையும் கேட்கணும்! :))))))))

said...

வாங்க சுமதி.

ஒரு நாள் வேணும் நின்னு நிதானமா ஒவ்வொரு சிலைகளாப் பார்த்துப் புரிஞ்சுக்க.

அருமைதான் போங்க.

said...

வாங்க அமைதிச்சாரல்.

மூடுன கதவு திறக்கலையேன்னு 'மணிக்கதவே தாழ்திறவாய்' மனசுக்குள்ளே பாடிக்கிட்டே நின்னேன்:-))))

said...

வாங்க கீதா.

பயணத்துலே 'எனக்கு' சாப்பாடுதான் கொஞ்சம் பிரச்சனை. ஆனால் வெறும் சோறு கிடைச்சாலும் போதுமுன்னு அதைமட்டும் விழுங்கி வச்சுருவேன். குழம்பு கறிகள் ஒன்னுமே வேணாம்.


கடைசியில் அந்த 'மாட்டிடையன்' சங்கை ஊதிக் கெடுத்துட்டானா!!!!!

புது விவரத்துக்கு நன்றி. இப்போ தெரிஞ்சுக்கிட்டேன்.

ஷாரதா கோவிலில்தான் நோ போட்டாகிராஃபி இருந்துச்சு.

Anonymous said...

//நாம் பெரிய நோட்டைப் போட்டுட்டு தட்சிணை போக மீதிச் சில்லரையை எடுத்துக்கலாம்//

இந்த பாலிஸி எனக்கு பிடிச்சிருக்கு :)

said...

வித்யாசங்கரர் கோவில் சிற்ப வேலைப்பாடுகள் அருமை.
விரிவான பயணத் தகவல்கள் நன்றி.

said...

வாங்க சின்ன அம்மிணி.

நம்ம தமிழ்நாட்டுக் கோவில்களில் எத்தனை பெரிய நோட்டாக இருந்தாலும் கோவில் அர்ச்சகர்கிட்டே கேட்டால் சில்லரையை மடியில் இருந்து எடுத்துத் தர்றாய்ங்க!

நம்ம கோபால்தான் சில்லறை வேணுமுன்னா இந்த டெக்னிக்கைக் கண்டுபிடிச்சவர்:-)))

said...

வாங்க மாதேவி.

கோவிலும் அருமைதான். இன்னும் நல்லா நின்னு பார்த்து அனுபவிக்க நேரம் இல்லாமல் போச்சு. இருட்டு கவிழும் சமயமா வேற இருந்துச்சு.அதான் கிடைச்சவரை இங்கே.....

said...

கோவிலும் கதையும் நல்லா இருந்தது துளசி.
வித்யாரண்யர் சாம்ராஜ்யம் நிறுவக் காரணமாக இருந்தார் என்று தெரியும்.
இவ்வளவு கதை இருக்குன்னு நீங்களும் ,கீதாவும் சொன்ன பிறகே தெரிகிறது.

சரித்திரம் ஒரு அதிசயம்.
அதை இத்தனை விவரமாக் கேட்க சுவாரஸ்யம் கூடுகிறது.

said...

வாங்க வல்லி.

எனக்கும் பாதிக் கதை நம்ம கீதா சொன்னதுக்கப்புறம்தான் தெரிஞ்சது.

சரித்திரம் ரொம்ப சுவையான சப்ஜெக்ட்டுத்தான்ப்பா. அதென்னமோ சின்ன வயசுலே சரித்திரமுன்னாவே மரம் நட்டார், குளம் வெட்டினாருன்னு இருந்துட்டோம்.

உண்மையான சரித்திரத்தை யாராவது சார்புநிலை இல்லாம எழுதி இருப்பாங்களான்றதுதான் சந்தேகம்.

அப்படி ஒன்னு கிடைச்சுட்டால்.....
எல்லா த்ரில்லரையும் தூக்கி சாப்பிட்டுடும், இல்லே?