Tuesday, May 11, 2010

சதுர்முக் பஸாடி

சதுர்முக் பஸாடிக்குப் போகும் வழியில் இன்னொரு கோவில் (அனந்த சயனன்) மூடிக்கிடக்கு. ஒரு கல்குன்றின் மேலே இந்த பஸாடி இருக்கு.
சுட்டெரிக்கும் வெய்யிலில் மேலே ஏறணுமான்னு ஆயாசம் வந்ததென்னமோ நிஜம். ஆனால்..... போகட்டுமுன்னு விடமுடியுதா என்ன? நல்ல அகலமான படிகள். ரெண்டு பக்கமும் பாதுகாப்புக்கு ரெய்லிங் போட்டுருக்காங்க. மெள்ள மெள்ள ஏறினேன். படிகள் முடியும் இடத்தில் சின்னதா ரெண்டுபக்கமும் திண்ணைகள். மூச்சு வாங்கக் கொஞ்சநேரம் உக்கார்ந்துட்டு யதேச்சையாப் பார்வையைஓட்டி, நடந்துவந்த படிகளையும் உசரத்தையும் பார்த்து இன்னொரு பெருமூச்சு விட்டு நிமிர்ந்தால்................ மூச்சே நின்னு போச்சு. தூரமா ஒரு கோட்டைச் சுவர்க்குள்ளில் இருந்து எட்டிப் பார்க்கும் பாஹூபாலி!
இந்தக் கர்க்கலா ஏரியாவில் மட்டும் 18 பஸாடிகள் இருக்காமே! அதுலே ஒன்னு போல! விசாரிக்கணும். உள்ளே போனால் பெரிய திறந்தவெளிப் பிரகாரம். கடந்து நாலைஞ்சு படிகள் ஏறினால், கருஞ்சாந்து நிறத்தில் மின்னும் மூவர்! கருவறைன்னு தனியா வைக்காமல் மண்டபம் போல் கட்டியிருக்கும் கோவில். பக்கத்துக்கு மூணு பேரா நாலுபக்கமும் ஆளுயரச்சிலைகளா மும்மூணு தீர்த்தங்கரர்கள். ஒவ்வொரு மூவருக்கும் முன்னால் ப்ரமாண்டமான வாசல்நிலைகள். சதுரக்கோவிலா இருக்கு.


எந்தப்பக்கம் இருந்து உள்ளே வந்தாலும் ஒரு மூவரின் தரிசனம் கிடைச்சுரும். வலம்வரும்போது நாம் கடைசியாகத் தரிசிக்கும் மூவருக்கு முன்னே 24 தீர்த்தங்கரர்களும் சின்னச்சின்ன சிலைகளா கூட்டமா மூவரின் காலடியில் உக்காந்துருக்காங்க. ஆனால் நாம் வந்த வாசலைத்தவிர மற்ற மூணையும் அடைச்சே வச்சுருக்காங்க. வலம்வரும் உள்பிரகாரமெல்லாம் கருங்கல் தூண்கள் அங்கங்கே. இந்தக் கோவிலில் இப்படி உள்ளும்புறமுமா 108 தூண்கள் இருக்கு. சிலது வேலைப்பாடில்லாமல் சாதாரணமாவும், சிலது சிற்பங்களைக் கொண்டதாகவும் இருக்கு. முக்கியமா வெளிப்புறம் இருப்பவைகளில் ராமாயண, மகாபாரத நிகழ்ச்சிகள் செதுக்கப்பட்டுருக்கு.

இந்தக் கோவிலைக் கட்ட 30 வருசம் ஆச்சாம். இருக்காதா பின்னே? 1586 வருசம் கட்டப்பட்டது. இந்தப்பகுதியில்தான் திப்பு சுல்தான். ஆட்சியில், கும்பினிக்காரருக்கு எதிராகப் போர் நடந்தப்ப கோட்டை, அகழி எல்லாம் உண்டாக்கி கிழக்கிந்தியக் கம்பெனிக்கெதிரா போரிட்டாராம்.
தூண்களுக்கும் கூரைக்கும் இருக்கும்(?) சின்ன இடைவெளிகளில் புறாக்கள் குடும்பம் ஏராளம். என்னை எட்டிப் பார்க்கும் ஆர்வத்தில் சரியாகச் சிறகு முளைக்காத புறாக்குஞ்சு சட்னு மேலே இருந்து குதிச்சு எனக்கு வழிகாட்டி போல முன்னால் தத்தித்தத்தித் தளர்நடை போட்டுப் போனது. பாவம். திரும்ப கூட்டுக்கு எப்படிப்போகுமுன்னு தெரியலை:(
எதிரே இருக்கும் சிலையைப் பற்றி இங்கே இருந்த பண்டிட் தாத்தாவிடம் கேட்டோம். அம்மா உசரம் யாராலே ஏறமுடியும்? வயித்துலே இதமா பால் வார்த்தார் அவர். கார் மேலே போகும்படியா பாதை இருக்காம். கீழே பாதுகாவலுக்கு இருப்பவரிடம் சொன்னால் கார்ப் பாதைக்கான கேட்டைத் திறந்து விடுவாராம். இந்தக் கோவிலுக்கு ஒரு சின்னக் காணிக்கை கொடுத்தவுடன், வரவு வச்சுக்கிட்டு ரசீது கொடுத்தார். ஆங்கிலம் சரளமாப் பேசுறார். நமக்கும் எல்லா விவரமும் கேட்டுத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. கிளம்பும் சமயம் தட்சிணை கேட்டார். இந்த உடுபி யாத்திரையில் முதல் முறையா வாயைத்திறந்து தட்சிணை கொடுங்கோன்னு கேட்டவர் இவர் ஒருத்தர்தான்.

இவர் சொன்னதுபோலவே ரெண்டு மூணு தெருவைக் கடந்து எதிர்ப்புறம் காட்சியளித்தக் குன்றின் அடிவாரத்துக்குப்போய்ச் சேர்ந்தோம். பொறுப்பாளரும் நம்ம வண்டியில் வந்து ஏறிக்கிட்டார். குன்றைச்சுற்றி கொஞ்சதூரம் போனதும் கார்ப்பாதைக்கான கேட் இருந்துச்சு. அதைத் திறந்து உள்ளே போனோம். நல்ல ரோடாத்தான் இருக்கு. மேலே போய்ச் சேர்ந்தால்.....மூணு ஜோடிகள் அங்கங்கே மர நிழலிலும், மதில் சுவர் நிழலிலுமா உக்காந்து 'கடலை' வறுத்துக்கிட்டு இருந்தாங்க. அடிக்கிற வெயிலுக்குச் சீக்கிரம் வறுபட்டுப் போகுதுபோல! கேட்டுத்தான் பூட்டி இருக்கே எப்படி வந்தாங்களாம்? அடிவாரத்துலே படிக்கட்டு ஒன்னும் இருக்காம். புதர் மூடிக்கிடக்கும் வழி. காதலியின் கடைக்கண் பார்வையிலே காற்றிலேறி விண்ணையும் சாட முடியும் என்றால் புதர்வழி எம்மட்டு?
கோவில் நுழைவு வாசலுக்கு முன்னால் ஒரு பெரிய மகாஸ்தம்பம். உச்சியில் ஏதோ ஒரு பெண் தேவதை. ஆனால் அது ப்ரம்மதேவராம்!
பூட்டி இருந்தக் கம்பிக் கதவு வழியே பார்த்தால் நெடுநெடுன்னு நிக்கிறார் கோமடீச்வரர். உள்ளே போனால் ரெண்டு பக்கமும் பெரிய திண்ணைகள். சிலுசிலுன்னு காத்து அருமை. பிரகாரம் சுற்றியும் பெரிய கோட்டை மதில் சுவர்கள். சிதிலமான இந்தச் சுவர்களைச் சமீபத்தில் திரும்பக் கட்டுனப்ப அதுலே இருந்து 18 தீர்த்தங்கரர்களின் சிலைகள் கிடைச்சதாம். இன்னும் ஆறு எங்கே இருக்குன்னு தெரியலை. ஆனால் கிடைச்சுரும் பாருங்கன்னார் குமார்

ஸ்ரவணபெளகுளாவில் அவர் பாதங்கள் தரையோடு இருப்பது மாதிரி இல்லாமல் பாஹூபாலி சின்னதா ஒரு மேடையில் நிக்கறார். 42 அடி உயரம்
1432 வது வருசம் ஃபிப்ரவரி மாசம் 13 ஆம்தேதி இவரை ப்ரதிஷ்டை செஞ்சுருக்காங்க. கீழே சிலையைச் செதுக்கி, குன்று உச்சிக்குக் கொண்டுவந்தாங்களாம். அப்போ போட்ட பாதைதானாம் இப்போ நாம் காரில் வந்தது. இங்கே அக்கம்பக்கங்களில்தான் தரமான கருங்கற்கள் கிடைக்குதாம். கர்னாடகாவில் இதுவரை இருக்கும் பாஹுபலி சிலைகள் எல்லாமே இங்கே செதுக்கிக் கொண்டுபோனவைகள்தானாம்.
கோட்டையின் வெளிப்புறம் ஒரு பக்கம் கிணறு ஒன்னு இருக்கு. வெறும் கருங்கல் மலையில் என்றுமே வற்றாத கிணறாம். பார்வையை எதிர்ப்புறம் செலுத்தினால், நாம் போய்வந்த சதுர்முக பஸாடி தெரியுது. இந்தக் கோட்டையைக் கட்டி முடிச்சு 150 வருசம் ஆனபிறகுதான் அந்த பஸாடியை அரசரின் பேரன் கட்டுனாராம். ஆனால் இது பளிச்சுன்னு இருக்கு. அது ரொம்பப் பழைய லுக்காக் கிடக்கு.
குமாரைத் திரும்பக் கொண்டுவந்து அடிவாரத்துலே இருக்கும் அலுவலகத்தில் விட்டுட்டு நாங்க கிளம்பினோம். பகல் சாப்பாடு எங்கேன்னு முடிவு செஞ்சுக்கலை.. அப்படியே ராத்தங்கலுக்கும் இடம் தேடணும். திடீர்னு காட்டுப்பக்கம் வண்டி திரும்புது. வண்டி மலைமேல் ஏறிப்போகணும். இதுக்கு அனுமதி வாங்கிக்கணுமுன்னு ப்ரஷாந்த் சொன்னார். பணம் ஒன்னும் கட்ட வேண்டாம். ஆனால் அனுமதிச்சீட்டு இல்லாமல் பயணிக்க முடியாது. இங்கே வாங்குன சீட்டை மலையின் அடுத்த பக்கத்தில் இறங்கும்போது அங்கே இருக்கும் செக் போஸ்டில் கொடுக்கணும்.

14 comments:

said...

சுத்திலும் ஆளரவமே இல்லாம அமைதியா இருக்கு. அதுவே ஒரு தனி அழகையும் தருது.

said...

வாங்க அமைதிச்சாரல்.

அமைதிக்கு அமைதி பிடிக்கலைன்னாதான் ஆச்சரியம்:-))))

said...

அருமையான கட்டுரையும், புகைப்படங்களும். இறுதியாக கூறி கொள்ளலாம் என்று இருந்தேன்... இந்த கர்நாடக ஆன்மீக தொடரை விரும்பி படிப்பதற்கு முக்கிய காரணம் தங்களின் எழுத்தும் நான் சிறு பிள்ளையை இருந்த பொது (7 வயது) எனது தாய், அண்ணன், அக்காளுடன் சுற்றுலா சென்ற அதே இடங்களுக்கும் திரும்பவும் சென்ற உணர்வு, குறிப்பாக உடுப்பி, மூகாம்பிகை, சரவணபெலகோலா, பெங்களூர் etc.... நினைவுகளை மீட்டு கொண்டு வந்ததற்கு நன்றி டீச்சர்.

said...

சுற்றிலும் எவ்வளவு தென்னை மரங்கள் பார்க்க மிகவும் அழகாக இருக்கின்றன.

said...

பசாடி பசாடின்னுட்டு,
கட்டினவங்க அங்க இருந்தாங்களோ என்னவொ!
அதிசயமா இருக்கு. என்ன சாப்பாடு சாப்பிட்டா இந்த மாதிரி வலிமை வரும். கருங்கல்லை அடுக்கிறது,
மாளிகை கட்டறது எல்லாம் பிரமிக்க வைக்கிறது.
கடைசிப் படம் ரொம்ப அழகு. ஆரன்ய நிவாஸ்னு ஒரு போர்ட் போட்டு இருக்கலாம்:)

said...

உங்க‌ளோட‌ குதிர‌மூக் ப‌திவுக்கு க‌மென்ட்ஸ் லிங்கே வ‌ர‌லை.. இது அங்க‌ போட‌ வேண்டிய‌ க‌மென்ட்,, :)

1996, 97ல் ரெண்டு மூணு த‌ட‌வை அங்கே போய் இருக்கேன். கே.ஐ.ஓ.சி.எல்லில் எங்க‌ள் ப்ராஜ‌க்ட் ஓடிக்கொண்டிருந்த‌து. ம‌ங்க‌ளூர் சென்று அங்கிருந்து ப‌ஸ் பிடித்து அந்த‌ ம‌லைச்சாலையில் குதிர‌மூக் சென்று, நீங்க‌ள் போட்டிருக்கும் ரெஸ்ட்டார‌ண்டில் சாப்பிட்ட‌து என்று ந‌ன்றாக‌ பொழுது போகும்.. அப்போது மைனிங்க் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌தால் ஆட்க‌ள் இருப்பார்க‌ள்.. ப‌ர‌ப‌ர‌ப்பாக‌ இல்லையென்றாலும் நீங்க‌ள் சொல்வ‌து போல் கோஸ்ட் ட‌வுன் போல‌ இருக்காது.. கேட்க‌வே க‌ஷ்ட‌மாக‌ இருக்கிற‌து.

said...

அழகோ அழகு .. அமைதியும் அழகு

said...

வாங்க லோகன்.

ஆஹா..... ரிவிஷன்! டீச்சர்ங்க வேலையே இதுதானே. எல்லாத்தையும் தேர்வுக்கு முன் நல்லா ரிவைஸ் செஞ்சுக்கணும்:-)))

said...

வாங்க சுமதி.

மேற்குக்கடற்கரை முழுசும் தெங்குக்குப் பஞ்சமே இல்லையேப்பா!!!

said...

வாங்க வல்லி.

சாப்பாடு?????

நிச்சயமா பீட்ஸாவும் பர்கருமா இருக்கச்சான்ஸே இல்லை:-)))

ஆரண்யநிவாஸ் பெயரே அழகுதான். ஆனால் ரிஸார்ட் என்ற பெயரில் யாராவது வந்து நிஜ அழகைக் கெடுக்காமல் இருக்கணும்.

said...

வாங்க வெண்பூ.

எக்ஸ்ஃப்ளோரர்லேதான் பொட்டி வரலை:(

உங்க பின்னூட்டத்தை 'அங்கே அந்தப் பதிவில்' காப்பி & பேஸ்ட் செஞ்சுருக்கேன்.

வெறிச்சோன்னு இருக்குமிடம் மனசுலே சோகத்தை வரவழைச்சுருது:(

said...

வாங்க கயலு.

அமைதியே ஒரு அழகுதான்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி!

said...

பாஹூபாலி,அழகான இடம்.

ஸ்ரவணபெளகுளா பார்த்திருக்கிறேன்.

said...

வாங்க மாதேவி.

கர்நாடகாவில் இருக்கும் 5 பஹூபாலிச் சிலைகளில் ஸ்ரவனபெளகுளாதான் வயசானதும் உசரம் கூடுனதும்.

நானும் போயிருக்கேன்.

57 அடி உசரம். கி. பி.981வது வருசம்.