மாயவரம் வரை போயிட்டு வரலாம்மான்னார் நம்மவர். ஆஹா..... அங்கே நமக்கு வேண்டியவர்கள் ரெண்டு பேர் இருக்காங்களேன்னு சரின்னேன். ரொம்ப தூரமில்லை..... ஒரு நாப்பது கிமீ தூரத்துக்கும் குறைவுதான். காலை ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டுக் கிளம்பும்போதே ஒன்பதரைக்குப்பக்கம்.
போற வழியில் ஸ்ரீ விட்டல் ருக்மிணி (பாண்டுரங்கன்) ஆலயம் இருக்கு. ஆனாலும் போனமுறை போனதால்.... அப்புறம் பார்த்துக்கலாமுன்னு நேரே அதைக் கடந்து போறோம்.
ஒரு அரைமணிக்கூறு போயிருப்போம்... திடீர்னு ஒரு ட்ராஃபிக் ஜாம். சாலையின் ஓரத்தில் தாற்காலிகக் கடைகள். கூட்டம் வேற.... என்னவோ திருவிழா நடக்குதுபோலன்னு நிதானமா வண்டி ஓட்டிப்போறார் விஜி. கோவில் திருவிழா.... ஏகப்பட்டக் காவல்துறையினர்..... போக்குவரத்தை ஒழுங்கு படுத்தறாங்க.....
தட்டியில் செஞ்ச அலங்கார வாசல்கள் எல்லாம் வச்சுருக்காங்க. சாலையோரத்தில் பெரிய பேனர்கள்.... மஹாகும்பாபிஷேகம் . நாலைஞ்சு கோவில்கள் சேர்ந்து செய்யறாங்களோ ? பிள்ளையார், மாரியம்மன், செல்லியம்மன், அய்யனார், மகான் உறிகட்டி சுவாமிகள்னு...... இதுவரை கேட்டிராத பெயர் !
நம்ம வண்டிக்குப் பக்கத்தில் இருந்த காவலரிடம் என்ன விசேஷமுன்னு கேட்டதுக்கு..... கோவில் கும்பாபிஷேகமுன்னு சொன்னார்.கிராமத்துக்கோவில் திருவிழா எல்லாம் பார்த்தே பலவருஷங்களாச்சு. ஒரு பெரிய மைதானத்தில் நடக்கும், அப்பெல்லாம்..... குடைராட்டினம், தொட்டில் ராட்டினம்னு .....
வலை எதுக்கு இருக்கு ? கொஞ்சம் மேய்ஞ்சேந்தான்....
இந்த இடத்துக்குப்பெயர் க்ஷேத்திரபாலபுரம். இந்த ஊர் சுடுகாட்டிலே ஒரு முதியவர் தங்கி இருந்துருக்கார். வயசு ஒரு அறுபது இருக்கலாம். வேற விவரம் ஒன்னும் தெரியாது.... தவ வாழ்க்கை..... ஊர்மக்கள் கவனிச்சுட்டு, இவரைக்கூட்டிவந்து உள்ளூர் மாரியம்மன் கோவிலில் தங்க வச்சுருக்காங்க. அப்போ 1899 வருஷம்.... இந்த ஊர் பைரவர் க்ஷேத்ரம் என்பதால்..... வந்துருக்கும் சாமியார் பைரவர் அம்சமா இருக்கணுமுன்னு சனம் நினைக்குது.
சாமியார்னு ஒருத்தர் இருந்தால்... மக்கள் தங்கள் மனக்குறைகளைப் போய்ச் சொல்லுவாங்கல்லெ ? எல்லாத்தையும் கேட்டுக்கிட்டு, கடைசியில் 'சரி. போய் வா'ன்னு சொல்வாராம். மத்தபடி குங்குமம், விபூதி, ப்ரஸாதமுன்னு ஒன்னும் கொடுக்கறதில்லையாம் ! (அதுக்கெல்லாம் எங்கே போவார் ? கார்பரேட் சாமியாரா என்ன ? ) அதிசயம் போல.... அவுங்க மனக்குறை நிவர்த்தியாயிருக்கு. ஆனா ஒன்னு.... மனுஷன் மனக்கஷ்டத்தில் இருக்கும்போது, அவுங்க புலம்பலைக் காதுகொடுத்துக் கேட்டு, ஆறுதலா ஒரு சொல் சொன்னாலும் போதும்தான். அதைத்தானே சோஸியல் மீடியாவில் நாமெல்லாம் செஞ்சுக்கிட்டு இருக்கோம்.
நோய் நொடி பிரச்சனை எல்லாம் இல்லாத மனுஷ ஜன்மம் இருக்கோ ? இப்படியே இவர் புகழ் பரவியிருக்கு.
இவர் சிலநாட்களுக்கு ஒருமுறைதான் உணவு யாசகத்துக்கு ஊருக்குள் போவாராம். ஏதாவது ஒரு வீடு ! சாப்பாடு கொண்டுவந்து தரும் வீடு அதுக்குப்பின் அமோகமா இருக்குமாம். இவர் கோவிலுக்குத் திரும்பியதும், சாப்பிட்டு மீதியானதை ஒரு உறியில் கட்டித் தொங்கவிடுவாராம். சிலபல நாட்கள் ஆனாலும் அந்த உணவு கெட்டுப்போகாமல் அப்படியே இருக்குமாம். எட்டிக்காய் என்னும் விஷத்தன்மையுள்ள காயை அப்படியே சாப்பிடுவாராம். ஒன்னுமே ஆகாதாம். இவர் ஒரு சித்தர்னு மக்கள் கொண்டாடியிருக்காங்க.
காலப்போக்கில் இவர் ஜீவசமாதியாயிருக்கார். ரெண்டு நாட்கள் அவர் உடலை எடுத்துக்கிட்டு ஊர்வலமா அக்கம் பக்கத்து ஊர்களுக்குப் போய் வந்தாங்களாம். சமாதியில் வைக்கும்போது உடலைக் காணோமுன்னு சொல்றாங்க. ஙே.... அப்போதிருந்து இவருக்கு வருஷாவருஷம் குருபூஜை நடத்தி வழிபடறாங்க, உள்ளூர் சனமும், அக்கம்பக்கத்து ஊர் சனமும்.
சமாதிக்கு மேல் சிவலிங்கப்ரதிஷ்டை செஞ்சுருக்காங்க. சுத்திவர ஒரு சின்னப் பிரகாரத்தோடு கோவிலும் ! சமாதியில் வந்து வேண்டினால் , வேண்டுகிற வரம் கிடைக்குதாம். நல்லதுதான். நம்பினால்தான் சாமியே ! இல்லையோ !
போனவருஷம் 118 வது குருபூஜை நடத்துனதா ஒரு தகவல் பார்த்தேன். சரித்திர டீச்சர் என்றபடியால் இந்த வருஷக்கணக்குப்போடும் புத்தி இன்னும் ஒட்டிக்கிட்டே இருக்கே..... அதன்படி..... இவரை உள்ளுர் மக்கள், சித்தர் சுவாமிகளா ஏத்துக்கிட்ட ஏழாம் வருஷம் ஜீவசமாதி ஆகியிருக்கார்னு.....
போஸ்டரில் /பேனரில் ஏகப்பட்ட இளைஞர்களின் முகங்கள். ஆன்மிக நாட்டம் இருக்கும் இளைய சமூகத்தைப் பார்க்கும்போது மனசுக்கு நல்லாத்தான் இருக்கு.
திருவிழாக்கூட்டம் கடந்து ஒரு இருவது நிமிட்டில் (எட்டரை கிமீதான்) நாம் போக நினைத்த கோவில் வாசலுக்கு வந்தாச் !
தொடரும்........ :-)
