Wednesday, July 05, 2023

இன்றைக்கு பாக்ஸிங் டே ! அரசு விடுமுறை !

அடடா.....   வீட்டுலே எல்லோரும் குத்துச்சண்டை போடக்கூட ஒருநாள் லீவு விடறாங்களே ! ஹாஹா
ப்ரிட்டனில் இருக்கும்  ஒரு சம்ப்ரதாயமாம் இது ! பெரிய தனவந்தர்கள், பிரபுக்கள்  வீடுகளில் க்றிஸ்மஸ் பண்டிகைக்காக நிறைய கேக் வகைகள், பிஸ்கெட், புட்டிங்ஸ், அது இதுன்னு  ஏராளமாச் சமைச்சு வைப்பாங்களாம்.  மாளிகைகளில் வேலைக்காரர்கள், சமையல்காரர்களுக்காப் பஞ்சம் ? 
பார்ட்டி நடந்து முடிஞ்சதும்  எக்கச் சக்கமா மீந்து போய்க் கிடக்கும் ஐட்டங்களையும் , பரிசுப்பொருட்களையும்  அவுங்க பணியாளர்களுக்குக் கொடுத்தது போக  பாக்கி இருப்பவைகளை அநாதை ஆஸ்ரமங்களுக்கு அனுப்பிருவாங்களாம்.  க்றிஸ்மஸ் பாக்ஸ் னு பொட்டிகளில் நிரப்பி அனுப்புவதால்  இது பாக்ஸிங் டே !  இப்ப இதெல்லாம் நடக்குதான்னு தெரியலை.  ஆனால் சம்ப்ரதாயங்களில் ஒன்னு.

நியூஸிக்கு முதலில்  வந்து சேர்ந்த மவொரியர்களுக்கு அடுத்து (சுமார் ஆயிரம் வருஷம் கடந்த பின்) வந்தவர்கள் எல்லோரும் இங்கிலாந்துலே இருந்துதான்  வந்தவங்க என்பதால் அதே பழக்கவழக்கங்களை இங்கேயும் தொடர்ந்துக்கிட்டு இருந்துருக்காங்க.  காலப்போக்கில்  பாக்ஸ் நிரப்பி அனுப்பறதெல்லாம் நின்னுபோயிருக்கு.... ஆனால் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்  பரிசுகள் கொடுப்பதெல்லாம் இப்பவும் உண்டு.  
அக்டோபர் மாசம் 27 முதல் க்றிஸ்மஸ் சம்பந்தமுள்ள வியாபாரம் ஆரம்பிச்சுரும்.  அதென்ன  27ன்னு ஒரு கணக்கு ?  ஹாஹா....   முதல்நாள்  அக்டோபர் 26 க்கு  அரசு விடுமுறை.  நியூஸியின் உழைப்பாளர் தினம்.  நாம் எங்கே மறந்துருவோமோன்னு  கடைகளும் மால்களும் ஞாபகமா அலங்காரம் பண்ணிருவாங்க.  இருக்கற காசுலே என்ன வாங்கிக்கொடுப்பதுன்னு எல்லோரும்  தலையைப் பிச்சுக்குவாங்க. அப்பதான் கடனட்டை தேய்ப்பது ஜரூரா நடக்கும். பண்டிகை முடிஞ்சாட்டு,  முக்காவாசி சனம் கடன்பட்டுக்கிடக்கும்.  சின்ன ஐட்டம் முதல்  பெரிய ஐட்டம் வரை  (வீட்டுச் சாமான்கள்தான்) ஸேல் ஸேல்ன்னு எங்கெபார்த்தாலும்..... 

ஆனால் நாம் ஐய்யய்யோ    ஸேலை மிஸ் பண்ணிட்டோமேன்னு கவலைப்பட வேண்டியதே இல்லை. பண்டிகை முடிஞ்ச ஏழே நாளில் புதுவருஷ ஸேல் வந்துரும் :-)
இந்த பாக்ஸிங் டே அன்னைக்கு அரசு விடுமுறைன்னாக்கூடக் கடைகண்ணிகளை திறந்துருவாங்க.  பாக்ஸிங் டே ஸேல் ஆரம்பம் ! பண்டிகை நாள் முழுக்க  ஊரே ஜிலோன்னு இருந்தது, அப்படியே ஸீன் மாறிடும்..... எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம்தான். ஏற்கெனவே பார்த்து வச்சுருக்கும் பொருட்களை வாங்கிக்க நல்ல சந்தர்ப்பம். . ஒரு நாலு நாளைக்கு இந்த ஸேல் இருக்கும். 
இதுலே நாம் மட்டும் கம்மியா ? கொஞ்சம் அலங்காரப்பொருட்கள் வாங்கிக்க இந்த ஸேல் தான் சரி. நவராத்ரி, தீபாவளின்னு நம்ம பண்டிகைகள் வரும்போது  அலங்கரிக்க விளக்கு வரிசைகள், செயற்கைப்பூக்கள்னு வாங்கி வச்சுக்குவோம். டிசம்பர்  24 வரை பத்து டாலருக்கு (ச்சும்மா ஒரு எடுத்துக்காட்டுதான்) வித்துக்கிட்டு இருந்தவைகள்,  இன்றைக்கு (டிசம்பர் 26) அரை விலை.  மறுநாள் போனால் இன்னும் கொஞ்சம் மலிவு. இப்படியே போய் நாலாவதுநாள் 99 சென்ட் !  என்ன ஒன்னு நமக்கு வேணுங்கறது நாலாம்நாள் வரை இருந்தால் நம்ம அதிர்ஷ்டம்.  முக்காவாசி வித்துப்போயிருது. 

 நம்மளைமாதிரிதானே எல்லோரும் இருப்பாங்க இல்லே ?  அதுவும் க்றிஸ்மஸ் சம்பந்தப்பட்டப் பொருட்களை உடனே வாங்கிருவாங்க. எப்பவும் அதே அலங்காரம் என்பதால் வர்ற வருஷத்துக்கு ஆச்சு !  நானோ,   அரைவிலையை விடக் கொஞ்சம் கம்மியா  வரும்போது வாங்கினால் போதுமுன்னு இருந்துருவேன். அதுக்காகக் கடைக்குப் போகாமல் இருப்பேனா என்ன ? 
காலையில் ப்ரஸாதம் செய்ய மெனெக்கெட முடியலை.  Phool Makhana   கொஞ்சம் வாங்கி வச்சது நினைவுக்கு வந்தது.  முதலில் இது என்ன சமாச்சாரமுன்னே தெரியாது.  ஒரு சமயம் நம்ம ஹரே க்ருஷ்ணா கோவிலில் ஸ்ரீ ல ஸ்ரீ பிரபுபாதா சிலைக்கு  மாலையாப்போட்டுருந்ததைப் பார்த்தேன்.  பெயரைக் கேட்டுக்கிட்டு வந்தேன். இண்டியன் கடைகளில் கிடைக்குதுன்னதும்  போய்ப் பார்த்தால்  கிலோ 48 டாலர். ஒரு நூறு கிராம் போதுமில்லையோ !  எடை இல்லாத சமாச்சாரம் என்பதால்  நிறையவே  வருது அந்த நூறுக்கு !  கூகுளாண்டவரைக் கேட்டால்  ரெஸிபி எல்லாம் சொல்றார். குஜராத்துலே விரதம் இருக்கு சமயம் இதைச் சாப்பிடுவாங்களாம்.   கொஞ்சம் எடுத்து வறுத்து பெருமாளுக்குக் கொடுத்தாச்சு.  இது வேறொன்னுமில்லை.... தாமரை விதைதான் ! 

இந்த வருஷம் பாக்ஸிங் டே அன்னிக்கு நண்பர் பேரனுக்கு உபநயனம் விழா வச்சுருக்காங்க. பொதுவா இப்படிப்பட்டக் குடும்ப விழாக்கள், கல்யாணம் எல்லாம் ஊருக்குப்போய் நடத்திக்கறதுதான் இங்கே வழக்கம். நம்மைத் தவிர மற்ற உறவினர் எல்லோரும் ஊர்லேதானே இருக்காங்க. எல்லோருக்கும் டிக்கெட் போட்டுக் கூட்டி வர்றது நடக்கற காரியமா என்ன ? பொண்ணோ மாப்பிள்ளையோ இங்கத்து ஆள்ன்னா  இங்கேயே கல்யாணம் நடத்திக்கறதும் உண்டுதான். மகள் கல்யாணம் இங்கேதான் நடந்துச்சு. எங்க அறுபதாங்கல்யாணம் ஊருலேதான் !

நண்பர்கள் மராத்திக்காரர்கள். ஒரு ஃபங்ஷன் ஹாலில் நிகழ்ச்சி.  குஜராத்தி பண்டிட் வந்து நடத்திக் கொடுத்தார்.  நாயகனின்  அப்பா,  இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசியைப் பார்த்திருப்பாரா என்ன ?  நோ ச்சான்ஸ்னு நினைக்கிறேன். நாயகனின் தாத்தா பாட்டி நமக்குப் பழைய நண்பர்கள்.  இதுலே 'பாட்டி' நம்ம யோகா குடும்ப அங்கம். நெருங்கிய சொந்தமாப் போயிட்டாங்க, இல்லே :-)  இன்னொரு செட் பாட்டி & தாத்தா இந்தியாவில் இருந்து வந்துருந்தாங்க.


எனக்கு இன்னொரு தோழியின் அறிமுகம் கிடைச்சது. க்ராஃப்ட் வேலையில் மன்னி !!!  சின்னச் சின்ன அலங்காரங்கள் அருமையாப் பண்ணியிருந்தாங்க.  ஏழுபேருக்கு இலைபோட்ட சாப்பாடு !  இலைப் புள்ளையார் , விழாவின் விளக்கம் இப்படி, நல்லா  இருந்ததை மனதாரப் பாராட்டினேன் !   நம்மிடம் மர மணி எல்லாம் இல்லைன்னாலும்  செஞ்சு பார்க்கலாமுன்னு  ஒருநாள் நம்ம ரஜ்ஜுவின் பந்தில் செஞ்சு பார்த்தேன். ரொம்பவே சுமாரா வந்தது :-) ஆனால் ஐடியா கிடைச்சுருச்சே !




இப்ப டிசம்பர் மாசம் கடைசிக்கு வந்துருக்கோம். எங்க சம்மர் சீஸன் டிசம்பர் முதல் ஃபெப்ரவரி வரைதான் என்றபடியால் சூரியன் இருக்கும்போதே வெயிலை அனுபவிச்சுக்கணும்.    



ஒருநாள் பீச், ஒருநாள் ச்சும்மா ஒரு லாங் ரைடு, ஒரு நாள்  நம்ம வீட்டு ராஸ்பெர்ரி தயாரிப்பு , ஒருநாள் நம்மூர் பெரிய தோட்டம்(ஹேக்ளி பார்க்) இப்படி நாட்கள் போகுது.  ஹேக்ளி பார்க் போனப்ப நம்ம யோகா குடும்பமும் சேர்ந்துக்கிட்டாங்க. என்னோட ஜல லிங்கத்தைக் காமிச்சேன்.  என்னோட ஃபேவரிட் இடமெல்லாம்  கூட்டிப்போய்க் காமிச்சேன்.   




மாசக்கடைசி நாளும் வந்துருச்சு.  சனிக்கிழமையாச்சேன்னு நம்ம ஹரே க்ருஷ்ணாவில் ஆரத்தி தரிசனம். நாளைக்கு 2023 பொறக்குது.
நம்ம அன்பு விநாயகர் கோவில்  & புள்ளையார் கோவில் இரண்டிலும் நள்ளிரவு பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க.  வீட்டாண்டை இருக்கேன்னு அன்பு விநாயகர் கோவிலுக்குப் போனோம். சகஸ்ரதீபம் ஸ்பெஷல் இன்றைக்கு.  முதல்முறையா இப்படியெல்லாம் நம்மூரிலேயே நடக்கறது மனசுக்கு நிறைவா இருந்துச்சு. 

அத்தனை விளக்குகளுக்கும் எண்ணெய் ஊத்தித் திரி போட உதவலாமேன்னு  சீக்கிரம் போனோம். ஆயிரத்தெட்டு டீலைட்ஸ் கேண்டில்கள்தான் !  சரியா பதினொன்னரைக்கு விளக்குகளை ஏத்தத் தொடங்கினோம். முதல் தீபத்தை ஏற்றி விழாவைத் தொடங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைச்சது.      
ஒரு காமணி இருக்கும்போது இன்னும் சில பக்தர்கள் வந்தாங்க. எல்லோருமாச் சேர்ந்து எல்லாத் திரியையும் ஏற்றினதும் புள்ளையார் அட்டகாசமா ஜொலித்தார் !

சரியாப் பனிரெண்டானதும் 'ஹேப்பி நியூயியர் புள்ளையாரே'ன்னு சொல்லி, தீபாராதனை  ஆச்சு.

உங்களுக்கும்  அந்த 2023 புதுவருஷ வாழ்த்துகளை இங்கே சொல்லிக்கறேன். என்ன.... ஒரு ஆறுமாசம் பிந்திப்போயிருச்சு :-)





PINகுறிப்பு : நம்மூர்  பார்க் & பீச் படங்களை அங்கங்கே போட்டுருக்கேன்.

8 comments:

said...

கிரிக்கெட்ல பாக்சிங் டே கிரிக்கெட் பிரபலம். அதில் சிவப்பு கலர் பந்து வச்சு விளையாடுவாங்க..

said...

பாக்சிங் டே விளக்கங்கள் சிறப்பு. மற்ற தகவல்களும் நன்று. படங்கள் - குறிப்பாக உங்கள் தோழியின் கைவண்ணம் நன்று.

said...

அருமை நன்றி

said...

வாங்க ஸ்ரீராம்,

அட! இந்த சிகப்புப் பந்து சமாச்சாரம் எனக்குப் புதுசு !!!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

ரொம்ப அழகா செஞ்சுருந்தாங்க ! நமக்கும் நாலு ஐடியா கிடைச்சுருச்சு பாருங்க !!!!

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

பிள்ளையார் வணக்கத்துடன் புதுவருட கொண்டாட்டங்கள் ஆரம்பம்.

said...

வாங்க மாதேவி,

ச்சும்மாச் சொல்லக்கூடாது.... அன்பு விநாயகர் ரொம்பவே அழகுப்பா !