Friday, July 21, 2023

பறக்குது பறக்குது பட்டம்......

நம்ம அன்பு விநாயகர் கோவிலில்   வாரநாட்கள் (திங்கள் முதல் வெள்ளிவரை) மாலை நேர பூஜையும் தரிசனமும், சனிக்கிழமைகளில் காலை நேரப் பூஜை மாத்திரம் உண்டு. ஞாயிறுகளில் கோவிலில் தரிசனம் கிடையாது. புள்ளையாருக்கும் ஒரு நாள் லீவு வேணும்தான்!
மகளின்  இந்த வருஷக் கல்யாணநாள், சனிக்கிழமையா அமைஞ்சதால்.... நாங்க  அன்பு விநாயகர் கோவிலுக்குப்போய்  சின்னதா ஒரு  வழிபாடு செஞ்சுட்டு வந்தோம்.  அன்றைய விசேஷ அலங்காரம் பச்சைப்புள்ளையார் !  அட ! நம்ம பச்சை !

இங்கே நம்மூரில் அருகம்புல் கிடையாது. தேடிப்பார்த்ததில்  வடக்குத்தீவில் விதை கிடைத்தது. கொஞ்சம் வாங்கி சின்னத் தொட்டிகளில்  தூவி வச்சேன். வந்தால் புள்ளையாருக்கு !

மணநாள் கொண்டாட மகளும் மருமகனும்  வடக்குத்தீவு போறதால்....  ஏர்ப்போர்ட்டில் கொண்டு விட்டுட்டு வந்தோம். அவுங்க திரும்பி வரும்வரை, அவுங்க பூனைகள்  நம் பொறுப்பில்.  காலையும் மாலையும்  அவுங்க வீட்டுக்குப்போய் சாப்பாடு பரிமாறிட்டு வரணும்.
சிட்டிக்கவுன்ஸில் நடத்தும்  வருஷாந்திர விழாக்களில் ஒன்னான பட்டத்திருவிழா இன்றைக்கு நம்மூர் கடற்கரையில் !  மதிய உணவுக்கப்புறம் கிளம்பிப்போனோம்.  இன்றைக்கு நல்ல வெயில் !  இங்கே இதை இண்டியன் சம்மர் என்று சொல்வார்கள்.  நம்ம உடம்புமே இத்தனை வருஷத்தில்  இங்கத்துக்குக் குளிருக்குப் பழகிட்டதால் இந்தச் சூடு நாக்குத் தள்ளும்.  ஆனாலும்  கண்ணில் படும்   கிவிக்கள், 'எஞ்சாய், இண்டியன் சம்மர்'னு சொல்லும்போது, அசட்டுச் சிரிப்புதான்  நம்ம பதில் :-)
நமக்கு ரெண்டு பீச் இருக்கு.  ஒன்னு   நகர்ப்புற நாகரிங்களோடும், இன்னொன்னு இயற்கை அழகிலும்.  என்னுடைய ச்சாய்ஸ் எப்பவும் இயற்கை  எழிலுக்குத்தான். ஆனால் பட்டத்திருவிழா நகர்ப்புற நாகரிகத்தில்தான்.  நியூப்ரைட்டன் பீச் என்று பெயர்.  நீளமான கடற்கரை,  கடற்கரையிலேயே லைப்ரரி பில்டிங்,  கடலுக்குள் மேலாக நடந்து போகக் கட்டிவிட்ட Pier, நேரெதிரா  திறந்தவெளி மால், குழந்தைகள் விளையாட ஒரு அமைப்புன்னு இருக்கும். சமீபத்திய வரவாக... இங்கேயே ஒரு  வெந்நீர் நீச்சல் குளம் !  குளிர்காலத்தில் இதமா இருக்குமாம். 










ஊரில் பாதி இன்றைக்கு இங்கே பீச்சில் தான் !  விதவிதமான பட்டங்கள்.  நம்மைப்போல் வேடிக்கை  மட்டும் பார்க்கவந்த  மக்கள்னு  ஒரு கூட்டம். 
லைப்ரரி கட்டடத்தின்  இடது பாகத்தின்  கீழ்ப்பகுதியில் ஒரு  ரெஸ்ட்டாரண்ட் இருக்கும்.  நம்ம தோழிதான் நடத்தறாங்க.  Salt on the Pier   என்ற பெயர். கீழே  கேஃபே, முதல் மாடியில் ரெஸ்ட்டாரண்ட்.     கட்டடத்தின்  வலது பகுதி முழுசும்  லைப்ரரி.  மூணாம்   மாடி   காத்து பிச்சுக்கிட்டுப் போகுமிடம் ! கடலைப்பார்த்து உக்காரும் வகையில் போட்டு வச்சுருக்கும் இருக்கைகளில் சீனக்கூட்டம் அரைத்தூக்கத்தில் இருக்கும் !  குளிர் காலமாக இருந்தால்  ஹீட்டர் ஓடிக்கிட்டு இருப்பதால்   குளிருக்கு இதமாக அங்கே  இருப்பாங்க.   
இங்கெல்லாம் லைப்ரெரி ரொம்பவே வசதியாக இருக்கு. அதிலும் பெரியவர்கள் பகுதியை விட  இளைஞர் பகுதியில்  சிடி,  டிவிடி எல்லாம் ஏகத்துக்கும் !  (ஆமாம்.... இப்போதான்  டிவிடி ப்ளேயர்ஸ் கூட மார்கெட்டில் இல்லையே....  சினிமா எல்லாம் எப்படித் தர்றாங்க ?  யூ எஸ் பியா இருக்குமோ ?  விசாரிக்கணும்....  )  குழந்தைகள் பகுதி தான் அழகு ! பிறந்த குழந்தைகளை அங்கத்தினராக  சேர்க்கலாம். நம்ம பேரன், (இப்பத்தான் நாலு மாசம் ஆறது ) லைப்ரரி கார்ட் வச்சுருக்கான்.  புத்தகம்  எடுத்து வர்றாங்க  பெற்றோர். 
நானுமே   இங்கே ஒரு குழந்தைகள் நூலகத்தில், பதிமூணு வருசம்  லைப்ரேரியனாக வேலை செஞ்சுருக்கேன். 

தோழி இந்த ரெஸ்ட்டாரண்ட் பிஸினஸ், ஆரம்பிச்சது முதல்  வரச் சொல்லிக்கிட்டே இருக்காங்க.   வெள்ளைக்கார மெனு நமக்குச் சரிப்படறதில்லைன்னு  இதுவரை போகலை.  சரி.. இன்றைக்கு இவ்வளோ தூரம் வந்துருக்கமேன்னு   தோழியின் கேஃபே போய் ஒரு ஐஸ்க்ரீம் வாங்கி முழுங்கிட்டுத் தோழியோடு கொஞ்சநேரம் பேசிட்டு வந்தோம்.  இங்கே முருகன் இருக்கான்!
முருகன்னு சொல்லும்போது.....   நாளைக்குத்  தைப்பூசம் இல்லே ?  ரெண்டு நாளைக்கு முன் நம்ம புள்ளையார் கோவிலுக்குப் போனப்ப.... காவடிகள் பூசத்துக்கு ரெடியாறதைப் பார்த்தேன்.  பக்தர் ஒருவர் சின்னச் செப்புக்குடம் கோவிலுக்குக் கொடுத்துருந்தார்.  என்ன ஏதுன்னு பார்த்துட்டு வந்தேன்.


நாளைக்குக் கோவிலுக்குப் போகலாம்.  இன்னொரு விசேஷம் கூட இருக்கே நமக்கு !



6 comments:

said...

அருமை சிறப்பு

said...

மக்ளுக்குத் திருமண நாள் வாழ்த்துகள். இறைவன் எல்லா ஆசிகளையும் வழங்கிடட்டும்!

கடல் படங்கள் எல்லாம் அட்டகாசம். கொண்டாட்டங்கள் வந்துட்டே இருந்தா அதுவும் நாமும் இப்படிப் போய் பார்த்து அல்லது கலந்துகொண்டால், மனம் புத்துணர்வோடு இருக்கும்..

கீதா

said...

மகளுக்கு திருமணநாள் வாழ்த்துகள்.
பட்டத் திருவிழா பீச் என அழகாக இருக்கிறது.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

வாழ்த்துகளுக்கு நன்றி !

உண்மையில் கொண்டாட்டங்களே வாழ்க்கையை நடத்திப்போகின்றன !

said...

வாங்க மாதேவி,

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா !