Monday, July 10, 2023

கரும்புத்தோட்டத்திலே............

முந்தாநாள்   Fiji Girmit Foundation NZ, Christchurch  Branch  ஏற்பாடு செய்த   Celebrating The Lives   of Our Girmityas என்ற  நிகழ்ச்சிக்குப் போயிருந்தோம்.
கிர்மிட் என்றவுடன்,   நம்ம பாரதியாரின்  கரும்புத்தோட்டத்திலே   என்ற சோகப்பாடல் நினைவுக்கு வந்துருச்சு. பதிவின் கடைசியில் இந்தப் பாடலைச்  சேர்த்துருக்கேன்.

கஷ்டங்கள்  ஆரம்பிச்சது 1879 ஆம் ஆண்டு.  நம் மக்களைக் கொண்டுவந்தக் கடைசிக் கப்பலின் சேவை நின்றது 1916  ஆம் ஆண்டு.   எல்லாம்  ப்ரிட்டனின் காலனி ஆதிக்கத்தின் கொடுமை!    கிர்மிட் சிஸ்டம் முடிவுக்கு வந்தது 1920 ஆம் ஆண்டு!

இதுக்குள்ளே அறுபதாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தியஞ்சு பேர்களை         ( 60,965 ) இந்திய மண்ணில் இருந்து கொண்டு வந்துட்டாங்க.  முதல் இருபத்திநான்கு ஆண்டுகளில் வந்தவர்கள் ஒரிஸ்ஸா, பீஹார், கல்கத்தா, கங்கை சமவெளிப்பகுதி மக்கள் என்று   அனைவரும் கல்கத்தா துறைமுகத்திலிருந்துதான்.  1903 இல்தான்  மதராஸில் வேட்டை துவங்கியது.  வட ஆற்காடு,  தஞ்சாவூர், மதராஸ் பட்டினம்,  கோயமுத்தூர், க்ருஷ்ணா கோதாவரிக்கு இடைப்பட்ட ஊர்களின் மக்கள், கொஞ்சமா மலபார் ஆட்கள் இப்படி  ஐநூற்றியெண்பத்தொன்பதுபேர் (589 )  மெட்ராஸ்  துறைமுகத்தின் மூலம். 

இவுங்க, தங்களைக்  கிர்மிட்டியான்னு  சொல்லிக்குவாங்க. இந்த சொல்லின் மூலம் போஜ்புரி மொழி.  முதலில் வந்தவங்க இவுங்கதானே ! கிர்மிட்.....  வெள்ளைக்காரன் அக்ரிமென்டில் கொண்டுவந்தானாம். பேச்சு வழக்கில்  அக்ரியில் இருந்து அ  முதலில் காணாமப்போச்சு. க்ரிமென்ட் அப்புறம் கிர்மிட் ஆச்சு.  கிர்மிட்லே வந்தவங்க க்ரிமிட்டியா. சரியாப்போச்சுல்லெ ! 

மூணு வருஷம் ஒப்பந்தப்படி  வேலை. அதுக்கப்புறம்  விடுதலை. சரியா ?  ஆனால் ஃபிஜி எங்கே..... அவுங்க விட்டுவந்த நாடு எங்கே ?  கிட்டவா இருக்கு, நீச்சலடிச்சுத் திரும்பிப்போக ?  கப்பலில் கூட்டிவந்தானே.... திரும்பக் கப்பலில் கொண்டுபோய் விட்டானோ ? ஊஹூம்..... கும்பினிக்காரனின் அராஜகம். 

கரும்புத்தோட்டத்து வேலைன்னு சொல்லிக் கூப்பிட்டு வந்தாலும்,  புது இடத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டுருக்காங்க. முதல் தலைமுறை அனுபவித்த கஷ்டம்,  ரெண்டாம் தலைமுறைக்கு இல்லை. இப்படியே ஏழு தலைமுறைகள் கடந்து போயிருக்கு.  

முதலில் வந்தவர்கள்  வடக்கர்கள் என்றபடியால்..... ஹிந்தி மொழிதான் புழக்கத்தில்.  ரொம்ப காலம் கழிச்சுத்தானே தென் இந்திய மக்கள்  வருகை.  என்னதான்  முயன்றாலும், அவரவர் மொழிகளைத் தக்கவச்சுக்கறதில் தோத்துத்தான் போயிருச்சு சனம்.  இப்ப ஒரு ரெண்டு தலைமுறைக்கு முன் கூட சங்கம் ( தென் இந்திய சன்மார்க ஐக்கிய சங்கம். TISI  Sangam ) நடத்தும் பள்ளிக்கூடங்களில் தமிழ் மொழியை ஒரு பாடமாகச் சொல்லிக் கொடுத்துருக்காங்கதான். சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் தமிழகத்தில் இருந்து வந்தனர்.   ராணுவப்புரட்சிக்குப்பின்   எல்லாம் குழப்பமான நிலையில்  இதெல்லாமே நின்னு போச்சு. ப்ச்.....

மக்களும் அண்டைநாடுகளுக்குப் புலம் பெயர்ந்துட்டாங்க. ஏறக்கொறைய  பாதி சனம் நட்டை விட்டுப்போயாச்சு. அண்டைநாடுகள்ன்னா....  முக்கியமா நியூஸி &  ஆஸிதான். 

இவுங்கெல்லாம் வந்தபிறகுதான்  ராமாயண மண்டலிகள்  ஆரம்பிச்சு  ராமாயணம் வாசிப்பைத் தொடங்கினாங்க.  சாமி கும்பிடும் விஷயத்தில் மட்டும் இவுங்களை அடிச்சுக்கவே முடியாது. சைவம், வைணவம்னு இல்லாம எல்லா சாமிகளும் ஒன்னுதான் !  எங்கூர்லே கூட ஆறேழு ராமாயண மண்டலிகள் இருக்கு. இதைத் தவிர, ஒரு பெரிய ஹாலை வாங்கி,   சநாதன தர்ம பரிபாலன சபான்னு ஆரம்பிச்சு எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுறாங்க. ஹாலில் நம்ம ஹனுமனுக்கு ஒரு சந்நிதி கட்டி, சிலையை இந்தியாவில் இருந்து வரவழைச்சுப் பூஜை நடக்குது ! சபாவில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் ராமாயண வாசிப்பும் வருஷம் முழுவதும் நடந்துக்கிட்டு இருக்கு.

அந்தக் காலத்தில் இந்தியாவை விட்டு வந்தப்ப  அவரவர் ஊர்களில் எப்படி  வழிபாடு நடத்துனாங்களோ அதே மாதிரிதான் இன்னும் ஃபிஜியிலும், வேறெங்கெங்கே புலம் பெயர்ந்து போனாங்களோ அங்கெல்லாமும் நடத்திவர்றாங்க.  அப்போ எப்படி இருந்துருக்கும் என்பதை நானும் ஃபிஜியில் இருந்தகாலத்தில் பார்த்திருக்கேன் !  இப்பவும் பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். 

ஒரு பத்து வருஷங்களுக்கு முன்  Fiji Girmit Foundation  னு ஒரு அமைப்பை ஆக்லாந்து நகரில் தொடங்குனாங்க. இந்த ஊர் வடக்குத்தீவில் இருக்கு. இது  தலைநகரம் இல்லை. ஆனால் பெரிய ஊர். பெருசுன்னு சொல்றது மக்கள் தொகைக்காக.  
பிறகு நம்ம தெற்குத்தீவிலும் ஒரு கிளை ஆரம்பிச்சு, நம்ம நண்பர்தான்  தலைவரா இருக்கார். நாலைஞ்சு வருஷமா இங்கே  கிர்மிட்டியா நினைவுநாள் நடக்குது.  நாம்    இப்போது வாழும் நல்ல வாழ்க்கைக்கு  அஸ்திவாரம் போட்ட  முன்னோர்களை வணங்கி, அவர்கள் செய்த தியாகங்களுக்காக  அவர்களை நினைவு கூறும் நாள்!

ஃபிஜியின்  வளர்ச்சியிலும்  கிர்மிட்டியாஸ் பெரும்பங்கு வகித்ததால்  அங்கே கிர்மிட் நாளுக்காக அரசு விடுமுறை அறிவிச்சு இருக்காங்க. மே மாதம் 14 ஆம் தேதின்னு ஒரு கணக்கு.

நாங்க, இங்கே விழாக்களையெல்லாம் வார இறுதின்னு வீக் எண்டுக்கு நேர்ந்து விடுவோம்.  வசிக்கும் நாட்டில் என்ன சட்டதிட்டங்களோ அதைத்தானே கடைப்பிடிக்கணும், இல்லையோ  ?
இந்த வருஷ விழாவைத்தான் முந்தாநாள்  கொண்டாடினோம்.   ஆக்லாந்து  கிர்மிட் ஃபௌன்டேஷன்  தலைவர் திரு  க்ருஷ் நாயுடு அவர்கள் வந்து சிறப்பித்தார்.  இந்த அமைப்பின் பேனர் பார்த்து வியந்தேன். உண்மையை இப்படிச் சொல்லியிருக்காங்க.  இந்தியா, ஃபிஜி, நியூஸிலாந்து என்ற மூன்று நாடுகளும் கப்பல் பாய்மரத்தின் பாயில் ! 


க்ருஷ் நாயுடு அவர்கள் பேசும்போது, ஃபிஜி இந்தியர்கள் யாரும் இதுவரை இங்கே அரசியலில் பங்கெடுக்கவில்லை என்று கவலைப்பட்டார்.  அப்ப நான் நினைச்சேன்..... தன்னுடைய குடும்பத்துக்கு மட்டுமே பணம் சேர்க்கணும் என்ற அரசியல்வாதிகளையும்,  இருக்கும் கொஞ்சநஞ்சக் காசை, கட்சிக்காகவும் நாட்டுக்காகவும் கொடுத்துட்ட அரசியல்வாதிகளையும் போல இல்லாமல், தானுண்டு, தன் குடும்பமுண்டுன்னு  உழைக்கும் மக்களாக நாம் இருப்பது எவ்வளவோ பரவாயில்லைதானே !






மேடை அலங்காரம் சிம்பிள் & ஸ்வீட் !

விழாவின் ஆரம்பத்தில்  இந்த மூன்று நாட்டு தேசியகீதங்களும் பாடப்பட்டன !  (கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட தருணம் அது !)


ப்ரார்த்தனைகள்  கிறிஸ்தவ & ஹிந்து  முறையில் நடந்தன. முன்னோர்கள் நினைவை மனதில் வச்சு மெழுகுத்திரி ஏற்றினோம். 



தொடக்க நிகழ்ச்சியாக  ஒரு நடனம்.  மஹாகணபதீம்......    உள்ளூர் &  வெளியூர் தலைவர்களின் பேச்சு,  ஹிந்தி  கற்றுக்கொள்ளும்  மாணவர்களின் நடனம்,  ஹிந்தி டீச்சரின் கவிதை வாசிப்பு, தோழி ஒருவரின் பாட்டு,  நிகழ்ச்சிகளில் பங்கெடுத்த மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல், இடையிடையே க்விஸ் நிகழ்ச்சியாகக் கிர்மிட்டியாஸ்  சம்பந்தமான கேள்விகள்.  நம்மவர் கூட ஒரு கேள்விக்குச் சரியான பதில் அளித்து, ஒரு சாக்லட் பெட்டியை பரிசாக வாங்கினார்.

"ஆரம்பகால கிர்மிட்டியாக்களில்  ஆண்களுக்கு ஒரு நாள் கூலி எவ்வளவு ?"

"ஒரு ஷில்லிங்"

ஃபிஜியில் கிடைக்கும் பழங்கள், உணவு வகைகள்  இப்படிக் குழந்தைகளுக்கான கேள்விகள் !

தோழிகளின் மகள்கள் ஆடிய ஃபிஜி நடனம் இப்படிக் கலைநிகழ்ச்சிகள் !
கமலா பாய் அம்மாவுக்கு  கம்யூனிட்டி சேவைக்கான மெடல் ( அம்மா வரலை.) அவருடைய மகன்  வந்து பெற்றுக்கொண்டார் )


கிர்மிட்டியாஸ் நினைவுக்கான கேக்!   பல வருஷங்களாக  இலவசமாக ஹிந்தி வகுப்புகள் நடத்தும் தோழியும்,  சீனியர்களுமாக  கேக்கை வெட்டினோம்.
நிகழ்ச்சிகளுக்கு நடுவே  சூடான டீ, போண்டா வேற !   குளிருக்கு இதமே!

நாங்க ஃபிஜியில் இருந்த சமயம், நாங்க இருந்த ஊரிலேயே  கிர்மிட்டில் வந்தவர்களில் ஒரு பாட்டி மட்டும் எஞ்சி இருந்தாங்க.  தமிழகத்தில் இருந்து போனவங்க இந்தப் பாட்டி.  நமக்கு மகள் பிறந்த செய்தி கேள்விப்பட்டு, அந்தத் தள்ளாத வயதிலும் குழந்தையைப் பார்க்க  வந்திருந்தாங்க.
 அவுங்களைப்பற்றி கரும்புத்தோட்டத்திலே  என்ற ஃபிஜித்தீவு புத்தகத்தில் எழுதியிருந்தேன். உண்மையில்  நம்ம துளசிதளம் ஆரம்பித்த புதுசு அப்போ.  சங்கமம் என்ற ஒரு  இதழுக்காக, ஒரு நண்பர்  கேட்டுக்கொண்டதால்  ஃபிஜியைப் பற்றிச் சின்னதா ஒரு  தொடர் எழுதினேன்.  அதையே நம்ம துளசிதளத்திலும் போட்டு வத்திருந்தேன்.  

கிர்மிட் பாட்டி  இங்கே :

  http://thulasidhalam.blogspot.com/2004/10/blog-post.html

அப்புறம் ஏழு வருஷங்கள் கழித்துதான்,    விரிவாக எழுதிய ஃபிஜித்தீவு புத்தகம் ,  எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களின் முன்னுரையுடன்  சந்தியாப்  பதிப்பகத்தின்  வெளியீடாக  வந்தது. 


http://thulasidhalam.blogspot.com/2011/01/blog-post_06.html

 விழாவில் 'நம்மவர்',   கிர்மிட் பாட்டியைப் பற்றிப் பேச விரும்பி மேடை ஏறினார்.  பேச்சு முடிஞ்சதும், இன்னொரு நபர் வந்து, அந்தப் பாட்டியின் உறவினர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.  பாட்டியின் உறவினர் குடும்பத்தைச் சந்திச்சதில் ரொம்பவே மகிழ்ச்சி அடைந்தோம்.
நம்ம நண்பர்கள் இருவர், நிகழ்ச்சிகளை அருமையாக நடத்திக்கொண்டு போனார்கள்.  இங்கே ஃபிஜி ரேடியோவின் பிரபலம் !

நிகழ்ச்சிகள் எல்லாம்  முடிவடையும் நேரம், ஃபிஜி இசைக்குழுவினரின் பாடல்கள்  மேடையில்.  எல்லோருக்கும் இரவு டின்னரும் தயாராகி இருந்தது.  சைவ & அசைவ உணவுகள். 


ஒன்னு சொல்லணும்.....  ஃபிஜி இந்தியர்களைப்போல் உழைப்பாளிகளைப் பார்ப்பது அரிது.  வீட்டு வேலை, வெளியில் பார்க்கும் உத்யோகம் தவிர  சத்சங்கங்கள், பார்ட்டிகள்,  நண்பர் வீட்டு விசேஷங்கள் இப்படி எந்த  சமூக வேலைகளிலும்  ஆண்களும் சரி, பெண்களும் சரி ஆர்வமாகப் பங்கெடுத்து உதவி செய்வார்கள். கர்மயோகிகள் என்றுதான் நான் எப்பவும் சொல்வேன்.  இன்றைக்குக்கூட ஹாலுக்கு நாம் போன நேரம், அடுக்களையில் தோழிகள் மூவர் டீ தயாரிப்பில் இருந்தாங்க.
ஒருவகையில் பார்த்தால் நாங்களும் இந்த கிர்மிட்டியாஸ் மாதிரிதான்.  என்ன ஒன்னு.... மூணுநாலு மாசம்  கப்பலில் பயணம் செய்யாமல்  ஃப்ளைட்டில் வந்துருந்தோம்.  இந்தியா... ஃபிஜி.... நியூஸி ன்னு,  இல்லே!!!!

கடுங்குளிரும் மழையுமாக இருந்தாலும்  நல்ல  கூட்டம் வந்திருந்தது !
மஹாகவி பாரதியின் பாடல் இதோ !   

ஹரிகாம்போதி ஜன்யம்

ராகம் - ஸைந்தவி தாளம் - திஸ்ரசாப்பு

பல்லவி

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

சரணங்கள்

கரும்புத் தோட்டத்திலே - அவர்
கால்களும் கைகளும் சோர்ந்து விழும்படி
வருந்து கின்றனரே! ஹிந்து
மாதர்தம் நெஞ்சு கொதித்துக் கொதித்துமெய்
சுருங்குகின்றனரே - அவர்
துன்பத்தை நீக்க வழியில்லையோ? ஒரு
மருந்திதற் கிலையோ? - செக்கு
மாடுகள் போலுழைத் தேங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

பெண்ணென்று சொல்லிடிலோ - ஒரு
பேயும் இரங்கும் என்பார்; தெய்வமே! - நினது
எண்ணம் இரங்காதோ? - அந்த
ஏழைகள் அங்கு சொரியுங் கண்ணீர்வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார், அந்தக் (கரும்புத்தோட்டத்திலே)

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே! துன்பக்
கேணியிலே எங்கள் பெண்கள் அழுதசொல்
மீட்டும் உரையாயோ? - அவர்
விம்மி யழவுந் திறங்கெட்டும் போயினர் (கரும்புத்தோட்டத்திலே)

நெஞ்சம் குமுறுகிறார் - கற்பு
நீங்கிடச் செய்யும் கொடுமையிலே அந்தப்
பஞ்சை மகளிரெல்லாம் - துன்பப்
பட்டு மடிந்து மடிந்து மடிந்தொரு
தஞ்சமு மில்லாதே - அவர்
சாகும் வழக்கத்தை இந்தக் கணத்தினில்
மிஞ்ச விடலாமோ? - ஹே
வீரமா காளி சாமுண்டி காளீஸ்வரி! (கரும்புத்தோட்டத்திலே)

11 comments:

said...

முன்னோர்களின் தியாகத்தினையும் அவர்கள் பட்ட கஷ்டங்களையும் இன்றைக்கு வரை நினைவு கூர்வது சிறப்பானது. விழா குறித்த தகவல்களை உங்கள் பதிவு வழி அறிந்து கொண்டேன். உங்கள் புத்தகம் வாசித்தது தான் - விரிவான தகவல்களுடன் சிறப்பாக அமைந்த புத்தகம்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருகைக்கும் கருத்திற்கும் என் மனம் நிறைந்த நன்றி !

said...

மிகவும் கவர்ந்த பதிவு.

முன்னோர்களை நினைவுகூரும் விதமாக இன்றும் விழா எடுப்பது மிகச் சிறப்பு.

இவர்களில் சிலரின் முன்னோர் திருவண்ணாமலை...எங்கிருந்து எங்கே கிளை பரப்பியிருக்கிறார்கள்... வியப்புதான்.

said...

அருமை நன்றி

said...

ஃபிஜி தீவு பற்றி நீங்க எழுதின பதிவுகள், வரலாறு சில பகுதிகள் உங்க்ள் தளத்தில் வாசித்திருக்கிறேன் துளசிக்கா. இப்பதிவும் ரசித்து வாசித்தேன். நிறைய தகவல்கள். ஃபிஜிதீவு மக்கள் பற்றி வரலாறும் வேறு எதிலோ வாசித்து தெரிந்து கொண்டதுண்டு. உங்கள் மூல பல நேரடியான அனுபவத் தகவல்கள்! பிரமிப்பு!

கீதா

said...

அங்கு சென்ற நம் முன்னோர்களின் கஷ்டங்களையும் தியாகங்களையும் நினைவுகூர்ந்து கொண்டாடிய நிகழ்வு மிக அருமை. படங்கள் வழி நிகழ்வுகள் தெரிகிறது மிகவும் சிறப்பு

கீதா

said...

பிஜி மக்களின் வரலாறும் தியாகமும் நெஞ்சைத் தொட்டது.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

அந்தத் திருவண்ணாமலையைக்கூட சரியாகச் சொல்லத் தெரியாது . திண்ணாமலென்னு சொல்வாங்க.

நினைச்சுப் பார்த்தால் வியப்பேதான் !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

தமிழ்த் தெரியாத தமிழர்கள் ! 'மந்(த்)ராஸி நை ஜானே'ன்னு வருத்தத்துடன் சொல்லும்போது நமக்குப் பாவமா இருக்கும்.

said...

வாங்க மாதேவி,

வெள்ளைக்காரன் இப்படிப் பண்ணிப்புட்டானேப்பா..... ப்ச்...