Monday, July 17, 2023

ஏகப்பட்டவைகளில் எதுக்குன்னுதான் போறதாம் ?

டிசம்பர்  முதல்  ஃபெப்ரவரி வரை நமக்குக் கோடைகாலம்!  இப்ப வீட்டுத்தோட்டத்தில் பூக்கள் நிறைய வரணுமுன்னால்...... கொஞ்சம் தோட்டவேலைகளை அப்பப்பப் பார்த்தே ஆகணும்.  புல்வெட்ட ஒருவரை ஏற்பாடு செஞ்சுருந்ததால்.... ரெண்டு  வாரங்களுக்கொரு முறை அவர் வந்து  பத்தே நிமிட்டில் புல் வெட்டிட்டுப் போயிருவார். கேட்டைத் திறந்து மெஷினைத் தள்ளிவர, திரும்பப்போய் வெட்டுன புல்களை அவருடைய  ட்ரெய்லரில் போடன்னு இன்னும் ஒரு அஞ்சு நிமிட். ஆகக் காமணியில் வேலை முடிஞ்சுரும். இதையே  நாம் செய்யணுமுன்னால்..............  அரை நாள் ஓடிப்போகும். 'அங்கெ சரியா வெட்டலை, இங்கே அப்படியே இருக்கு'ன்னு ஒரு கொன்னக்கோல்  கச்சேரி நடக்காது ? 

பள்ளிக்கூட விடுமுறைன்னு  ஒரு ஆறுவாரம்  இப்போதான்.  வெளிநாடு, உள்நாடுன்னு ஊருக்குப்போற சனம்  போகுதுன்னா....  ஏறக்கொறைய  அதே  அளவில் வெளிநாட்டு & உள்நாட்டுப் பயணிகள் வந்துக்கிட்டு இருப்பாங்க.  ஆகக்கூடி  எங்கே பார்த்தாலும் சனமே சனம்தான்.  நாட்டுக்கு நல்ல வருமானம் சுற்றுலாப்பயணிகளால் வர்றதால்  டூர் கம்பெனிகள்   பரபரன்னு பிஸியா இருப்பாங்க.  இதுலே  ஏகப்பட்டக்   கல்யாணங்கள் நடப்பதும் இப்பதான்.  
தை பொறந்தவுடன்.....  அமாவாசைக்குச் சீனப்புத்தாண்டு வந்துரும். இப்ப சீனப்பயணிகள் அதிகமா வர்றாங்க. அவுங்க  தங்க  வைக்கறதுக்கான   விடுதிகளும் , அவுங்களை ஊர் சுத்திக்காமிக்கறதுக்குமுன்னே ஏகப்பட்ட சீனட்டூர் கம்பெனிகள்  முளைச்சுருச்சு.   டிரைவர் , கைடு  எல்லாமே அவுங்காட்கள்தான்.  உள்ளூரிலும் சீனச் சாப்பாடு கொஞ்சம் விலை குறைவுதான், இந்திய ரெஸ்ட்டாரண்டு விலைகளை விட. இந்திய உணவு வகைகள் விதவிதமாக இருக்குன்னாலும், இந்த இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகளில் எல்லாம் ஒரே மெனு.  நமக்கே போரடிச்சுப்போய்,  வீட்டுலேயேதான் பெரும்பாலும் சமைச்சுக்கறோம். 


காய்கறிகள்  (இந்திய வகை தவிர) கொஞ்சம் விலை குறைவாகவே இருக்கும்.  ஆனாலும் அதே முட்டைக்கோஸ், காலி ஃப்ளவர், கேரட்னு  அலுத்துப்போகுதில்லையா ? தக்காளி சீஸன் காலம் என்பதால்  பார்த்துக்கிட்டே இருந்து  விலை மலிவாக  ( பத்து லிட்டர் பக்கெட் நிறைய )  அஞ்சு டாலருக்கு வரும்போது  வாங்கி வந்து,  நல்லாக் கழுவி எடுத்துத் துண்டுகளாக்கி,  கொஞ்சம் எண்ணெயில் நல்லா வதக்கி எடுத்து, ஆறினவுடன் ஐஸ் க்யூப் ட்ரேயில்  நிரப்பி ஃப்ரீஸ் பண்ணிக்குவோம். 

இதுலேயே இன்னும் கொஞ்சம் பரிசோதனை முறையில்  வெங்காயம் & தக்காளியைச் சேர்த்து வதக்கி ஃப்ரீஸ் செய்வதும் உண்டு. இதோ அதோன்னு பார்த்துக்கிட்டு இருக்கும்போதே  மே  மாசம்  குளிர் ஆரம்பிச்சவுடன் விலையேற்றமும் ஆரம்பிச்சுரும்.  இந்தப் பதிவு எழுதும் சமயம்  கிலோ தக்காளி பதினைஞ்சு டாலர்!


வீட்டுத் தோட்டத்திலும் தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயம், கீரை, உருளைக்கிழங்குன்னு கொஞ்சம்  கிடைக்கும் என்றாலும்,  பூச்செடிகள்தான் நிறைய !  கோடை என்பதால் தினமும் செடிகளுக்குத் தண்ணீர் விடும் வேலையும் கூடுதலா இருக்கும். 

வெளிநாட்டில் ஜாலியா இருக்கோமுன்னு நம்மாட்கள் நினைப்பாங்க.... ஆனால் அதுக்கு நேரெதிராத்தான்  இங்கே  ! வேலைக்கு உதவியாட்கள் வச்சுக் கட்டுப்படி ஆகாது என்பதால் எல்லாமே தமக்குத்தாமாய் தான்! இத்தனைக்கிடையிலும்  கொண்டாட்டங்களுக்குக் கணக்கே இல்லை :-)

நம்ம  இந்தியர்களும் நிறையப்பேர்  வந்துட்டதால், அவுங்கவுங்க மாநில விழாக்களுக்கு அழைப்புகள் அனுப்பிக்கிட்டே இருப்பாங்க.  வழக்கம்போல் எல்லாமும் வீக் எண்டுகளுக்கு நேர்ந்து விடுவதே !

பஞ்சாபிகளின் லோஹ்ரி பண்டிகைக்குப் போகணும். நம்ம போகிப்பண்டிகைதான் இது.  குளிர்கால முடிவு விழா.  அன்றைக்குச் சனிக்கிழமை என்பதால் நம்ம ஹரே க்ருஷ்ணா கோவில் தரிசனம் முடிச்சுட்டுப் போனோம்.  புதுசா இப்போ வந்தவங்களைத் தவிர முக்கால்வாசி நமக்குப் பரிச்சயமானவங்கதான்.  முகப்பு அலங்காரம் வழக்கம்போல் அருமை !  அரங்கத்தில் கலை நிகழ்ச்சிகளும் பரவாயில்லை. எல்லாம்   பல்லே பல்லேன்னு அந்த பாங்ராதான்.  புதுமணத் தம்பதிகளை வரவேற்றும், புதுசாப் பிறந்த குழந்தைகளை வரவேற்றும்  'தலை லோஹ்ரி'  கொண்டாடுனாங்க. 




ஆனால்  யாராக இருந்தாலும், அவுங்கவுங்க கலை கலாச்சாரத்தை விட்டுறாமல் இங்கேயும் தொடர்வதைப் பாராட்டத்தான் வேணும்.  ஊரில் இருந்ததை விட  வெளியே போனபிறகுதான்  இவைகளின் மதிப்பு நமக்குக் கூடுதலாத் தெரியுது போல !  அதிலும் இளைய வயதினர் இதிலெல்லாம் ஆர்வமா ஈடுபடறது உண்மையிலேயே  சந்தோஷமாத்தான் இருக்கு !

மறுநாள்  நம்ம ஆர்ய சமாஜ் நடத்தும்  வருஷாந்திர காயத்ரி மஹாயக்ஞம்.  நம்ம சநாதன் ஹாலில்தான்  வழக்கமா நடக்கும்.  இப்போ அங்கே கூரை மாற்றிக்கிட்டு இருக்கோம் என்பதால்  வேற இடம் தேடி, ஊருக்கு வெளியில் நடத்தறாங்க. நம்ம ஹாலைத்தவிர வேறெங்கே நடத்தினாலும்,  ஹாலுக்குள்  யாகம் செய்ய அனுமதி இல்லை.  அதனால்  வெளியே தோட்டத்தில் யாகமும், ஹாலுக்குள்ளே ப்ரஸாதமும் என்ற ஏற்பாடு.

எனக்குப் பொதுவா இந்த ஹவன் / யாகங்களில் கலந்துக்கப் பிடிக்கும். 'தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா'ன்னு நம்ம முண்டாசு பாடியதையொட்டி, தீக்குள் நந்தலாலாவை தரிசிக்கமுடியும் என்றொரு நம்பிக்கை. அதுக்காகவே போவேன்.   ஆர்யசமாஜ் கிளை, நம்மூரில் ஆரம்பிச்சு ஒரு பத்துவருஷம் இருக்கும்.  நம்ம தோழி டாக்டர் ஜானகிதான் தலைமை ஏற்று நடத்தறாங்க. எனக்கு ரொம்பப்பிடிச்ச விஷயம் ஒன்னு.... நேரம் தவறாமை.  யார் வந்தாலும் வராவிட்டாலும் சொன்ன நேரத்துக்கு பூஜை தொடங்கிரும் !
இந்த வருஷாந்திர ஹவன் இல்லாமல் ஒவ்வொரு மாசமும் சிறிய அளவில்  அங்கங்களின் வீடுகளில் நடக்கும்.  வீடுகளில் நடப்பவைகளுக்கு நாம்  பாட்லக் வகையில்  ஏதாவது செய்து கொண்டு போவோம்.  பெரிய அளவில் ஹாலில் நடப்பவைகளுக்கு,   வெளியே  இந்தியன் ரெஸ்ட்டாரண்டுகளில் ஏற்பாடு செய்வோம்.
இந்த ஹவன்களிலும் எல்லோரும் பங்கெடுத்துக்கொண்டு அக்னி தேவனுக்கு ஆஹுதி செய்வோம். கீழே உக்கார முடியலையா.....  நோ ஒர்ரீஸ்,   நாற்காலியில் உக்கார்ந்து  அவி அளிக்கலாம்.   ஃபிஜி இந்தியர்கள்,  எந்த விழா, பூஜை என்றாலும் ஹவன் செய்வார்கள். ஃபிஜி  இந்தியன் கடைகளில் ஹவன் சாமகிரி என்று,  தேவையான பொருட்கள் எல்லாமே  வச்சு ஒரு பெரிய  பாக்கெட்டில் கிடைக்கும்.  கூடவே  ஹவனுக்குத் தேவையான மாமரக் கட்டைகளும்! 

இப்படி  நிறைய சமாச்சாரங்கள் பொதுவில்  நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. கூடவே  வீடுகளில் நடக்கும் சிறப்பு வழிபாடு, விழாக்கள்னு நமக்குத்தான்  எல்லாத்துலேயும் கலந்துக்க நேரம் இருப்பதில்லை. 

புதுக்குழந்தை பிறந்த வடக்கர்கள் , Chhathi Ceremony ன்னு  குழந்தை பிறந்த  ஏழாம்நாள்  ஒரு விழா கொண்டாடுவாங்க.  தெற்கில் நமக்குப் பத்துநாள் தீட்டு  உண்டல்லவா ? பதினோராம்நாள் புண்யாஹவசனம்  பண்ணுவோம். சில வீடுகளில் பதிமூணாம் நாள், பதினைஞ்சாம் நாள்னு  செய்வாங்க. இதெல்லாம் அவரவர் குடும்பப்பழக்கம்.  நாள் கணக்குதான் இப்படியே தவிர  சடங்கெல்லாம்  ஒன்னுபோலத்தான். 

ஒரு  ஃபிஜித் தோழியின் பேத்தி பிறந்து  ச்சத்தி விழாவுக்கு அழைச்சுருந்தாங்க. நாமும் இதுவரை  வடக்கர்களின் இந்த சடங்கைப் பார்த்ததில்லையேன்னு கிளம்பிப்போனோம்.  பக்கத்தூரில் ஒரு சர்ச் ஹாலில் விழா. உள் அலங்காரம் செய்தது இன்னொரு இந்தியத் தோழி. இப்பெல்லாம் விழாக்களுக்கு அலங்கரிப்பது ஒரு முக்கியமான சமாச்சாரமா ஆகி இருக்கு.  ஈவண்ட் ஆர்கனைஸர்னு புது  பிஸினஸ்.   சில கடைகளில் கூட வாடகைக்கு அலங்காரத்துக்கும் , அவசியமானதுக்கும்  பொருட்கள் கிடைக்குதுதான். சின்னதோ, பெருசோ எல்லாத்துக்கும் எல்லாமும் கிடைக்கும் காலம் !  





குழந்தை கண்ணில் எங்கே மை வச்சுருவாங்களோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். நல்லவேளை.... பெற்றவர்கள் கண்ணுலேதான் மை.  இந்தச் சடங்கைப் பற்றித் தெரிஞ்சுக்க  வலையில் விவரம் தேடினால்....... ஆஹா.....   வேற மாதிரி இருக்கு.  குழந்தை பிறந்த ஆறாம்நாள்,  விதியின் தேவன்  வந்து, குழந்தையின்  விதி எழுதும் நாளாம்.  பொதுவா ராத்ரி பத்து மணிக்கு பூஜை அறையில் விளக்கேற்றி வச்சு, குழந்தையைக் கையிலேந்தி, தாய் அந்த விளக்கை வணங்கணும்.  அறையிலே பேப்பரும் பேனாவும் (சிவந்த மை ) வைக்கணுமாம்.   விதி வந்து விதியை எழுதிட்டுப் போகுமாம்.  நம்ம  கண்ணுக்குத் தெரியாதுன்னு நினைக்கிறேன்.   

ஒரு வேளை அந்த (சிவந்த ) மையைத்தான்  காஜல் நினைச்சி கண்ணுலே மை வைக்கறாங்களோ ?  இதுலேயும் வெவ்வேற   குடும்பங்களில் வெவ்வேற  வகையில் இருக்கலாம். இப்போ நாம் பார்த்தது  ஃபிஜி இந்தியர்களில், ஹிந்துஸ்தானி மக்கள்  செய்யும் சடங்கு வகை! 

மை வச்சு முடிச்சதும்  நாட்டுப்பாடல்கள் பாடுனாங்க.  ஃபிஜி குழுவில் வாத்யங்களுக்கா பஞ்சம் ? 
ரொம்ப நாளாப் பார்க்காமலிருந்தவர்களைப் பார்த்துப்பேச  இதெல்லாம்  ஒரு வாய்ப்பு இல்லையோ !!!! 

நாமும் குழந்தைக்கு பரிசு ஒன்னு கொடுத்து ஆசி வழங்கிட்டு வந்தோம்.  விருந்து சூப்பர் !





4 comments:

said...

இந்த தக்காளி வதக்கி ப்ரீஸ் பண்ணி வைபபது எந்த அளவு உபயோகப்படும் - இந்தியாவில்!

எலுமிச்சம்பழம் சல்லிசாகக் கிடைக்கும்போது சாறு பிழிந்து ப்ரீசரில் வைத்து பாட்டிலில் வில்லைகளாக வைக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வதுண்டு செய்ததில்லை!

said...

வாங்க ஸ்ரீராம்,

ஃப்ரீஸ் பண்ணும் வேலையெல்லாம் இந்தியாவுக்கு ஆகாது. முதலில் இடைவிடாத மின்சாரம் தடங்கல் இல்லாமக் கிடைக்கணுமே....

நான் நம்ம வீட்டு எலுமிச்சம்பழங்க்ளையே பிழிந்து சாறெடுத்து ஐஸ் க்யூப் ட்ரேயில் ஊற்றி ஃப்ரீஸ் செஞ்சு ஐஸ் கட்டிகளாக எடுத்து ஃப்ரீஸர் பையில் போட்டு வச்சுக்கறேன். ஃப்ரீ ஃப்ளோ வகை. எலுமிச்சை சாதம் செய்யும்போது நாலு கட்டியைப் போட்டால் ஆச்சு !

குளிர் காலம் வருமுன் நிறைய ஃப்ரீஸ் பண்ணும் வேலை இருக்கும். அஞ்சு மாசத்துக்கு எல்லாம் வரணும்.

அப்பதான் எதுவும் முடங்காமல் வழக்கம்போல் சமைக்க முடியும்.

said...

விழா அருமை.
குளிர் கால வரவும் ஏற்பாடுகளும் அவசியமானதே.

said...

வாங்க மாதேவி,

வழக்கம்போல் சமைக்கணுமுன்னா இப்படியெல்லாம் செஞ்சு வச்சுக்கிட்டால்தான் சரிப்படுத்துப்பா !