ஊரே ஜிலோன்னு கிடக்குது. எல்லோரும் எங்கே போனாங்க ? பண்டிகைநாள் நல்ல கலகலப்பா இருக்க வேணாமா ? கடைகள் எல்லாம் மூடி இருக்கு. குறைஞ்சபட்சம் ஒரு சாமானைக்கூட டிவி மூலம் விக்கமாட்டாங்க. இன்றைக்கு டிவியில்கூட ஒரு கமர்ஸியலும் (ஆட்ஸ்) இருக்காது. அப்ப சனம் காரை ஓட்டிக்கிட்டு ரோடுலே சுத்துமோ ? பெரும்பாலான மக்கள் குடும்பத்தோடு க்றிஸ்மஸ் லஞ்ச்ன்னு பிஸி.
எங்க யோகா வகுப்பு ஆரம்பிச்சு இப்போ ஒரு அஞ்சு வருஷமாகுது. ஆரம்பகாலத்துலே இருந்தே வகுப்புக்கு வந்துக்கிட்டு இருந்த ஒரு இருபத்தைஞ்சு பேர்களுக்குள் ஒரு நல்ல நட்புணர்வு உருவாகியிருந்ததால், யோகா குழுவுக்கு நாந்தான் யோகா குடும்பம்னு பெயர் சூட்டினேன். யாருக்கும் 'தான், தான்' என்ற ஈகோ ஒன்னும் இல்லை என்பதால் வகுப்பு நேரங்களில் கூடுவதைத்தவிர பண்டிகைகள், பிக்னிக், ஃபேஷன் ஷோ, ம்யூஸிக் நைட் , எல்லோருமாச் சேர்ந்து எங்கெயாவது ஒன்னா வாக் போறதுன்னு எதாவது கூடுதல் நிகழ்ச்சிகளை வச்சுக்குவோம். இவைகளுக்கெல்லாம் அங்கங்களின் குடும்ப அங்கங்களையும் கூடச் சேர்த்துக்குவோம். இது தவிர பிறந்தநாள், திருமணநாள் விசேஷங்களுக்கு, வகுப்பு நேரத்தில் கடைசி பத்து நிமிட்களை ஒதுக்கிச் சின்னதா ஒரு பார்ட்டி நடத்திக்குவோம்.
போன வருஷம் ஒரு அங்கத்தின் திருமணநாள் பொன்விழாவாக இருந்ததால் ஒரு ஹாலை புக் பண்ணி பெரிய பார்ட்டி ஏற்பாடு செஞ்சோம். வருஷாந்திர லீவுன்னு ஒன்னரை மாசம் இருந்தாலும் அதில் வரும் வீக் எண்ட்களில் பொது இடங்களில் கூடி மகிழ்வதுதான். முக்கியமா நடைப்பயிற்சி. ஆளுக்கொரு வகை ஸ்நாக்ஸ் கொண்டுபோனால் ஆச்சு.
இன்றைக்கு அரசு விடுமுறை என்பதால் சம்மர் ஹாலிடேன்னு ஊருக்குப் போயிருந்தவங்களைத் தவிர மற்ற எல்லோருமே கூடியாச்சு. நல்லவேளை, எங்க குழுவில் இருக்கும் மருத்துவர்களுக்கு ஆன்கால் ட்யூட்டி இல்லை.
இதுவரை போகாத இடத்துக்குப் போனோம். Ouruhia Reserve, சிடிக்கவுன்ஸிலின் பப்ளிக் பார்க் & ரிஸர்வ். நம்மூரு கார்டன் ஸிடி ஆஃப் நியூஸின்னு பெயர் வாங்கி இருக்கு.
ஊருக்கு நடுவில் 407 ஏக்கரில் இருக்கும் ஹேக்ளி பார்க் தவிர 437 பார்க்குகள் சின்னதும் பெருசுமா ஊர் முழுக்க விரவியிருக்குன்னா பாருங்க. இந்த ஹேக்ளி பார்க்கில் கொஞ்ச இடத்தைத்தான் கடன் வாங்கித் தாற்காலிக க்ரிக்கெட் ஸ்டேடியமா மாத்தியிருக்காங்க. ஒரிஜினல் ஸ்டேடியம் 2011 நிலநடுக்கத்துலே பாழாப்போயிருச்சு. உலகெங்கும் உள்ள க்ரிக்கெட் ப்ரேமிகள் இந்த கூடார ஸ்டேடியத்தை டிவியில் பார்த்திருப்பாங்க!
இன்றைக்குப் போகுமிடம் நம்ம வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம்தான், ஒரு 19 கிமீ இருக்கும். நான் காலையில் நைவேத்யம் செய்ய நேரமில்லைன்னு பெருமாளுக்கு 'டைம்பாஸ் நட்ஸ்' வச்சுட்டு, அப்படியே ஃப்ரைட் ரைஸ் செஞ்சு அதையும் படைச்சாச். இதுதான் நம்ம வகையில் பிக்னிக் கொண்டு போறோம். நாங்க ஒரு பதினொன்னரைக்குப்போய்க் காலியாக் கிடந்த ஒரு ஓப்பன் குடிலை நம்ம குழுவுக்காகத் துப்பட்டா போட்டு வச்சோம். மக்கள் வர ஆரம்பிச்சாங்க. புள்ளைகுட்டிகளைக் கூட்டிக்கிட்டு வரும் குடும்பங்கள் ஒரு காமணி லேட்.
கொஞ்சம் விளையாட்டு, ஃபோட்டொ செஷன், லஞ்ச், நடைப்பயிற்சின்னு நேரம் ஓடிப்போச்சு. இந்தவகை ஒன்றுகூடல்களுக்கெல்லாம், அவுங்கவுங்களே தட்டும், டம்ப்ளர்களும் கொண்டு வரணும் என்ற ஐடியாவை சில வருஷங்களுக்கு முன் கொடுத்தது நாந்தான். எப்படியும் பிக்னிக் சேர் கொண்டுபோகப் போறோம். கூடவே தட்டு கொண்டுபோனால்....பேப்பர் ப்ளேட், க்ளாஸ் குப்பைகளைக் குறைக்கலாமில்லையா ? ஐடியா நல்லாவே ஒர்க்கவுட் ஆகுது. கடைசியில் பெரிய குப்பை மூட்டையைக் கொண்டு வரவேணாம்.
வீடு திரும்பும் வழியில் இருக்கும் 'தாய்லாந்து புத்தர் கோவிலுக்குப் போறேன்'னு சொன்னவுடன், 'ஹைய்யோ... நாங்க பார்த்ததில்லை'ன்னு பாதிக் குடும்பம் கூடவே சேர்ந்துக்கிச்சு. நாங்க அப்பப்பப் போற இடம் என்பதால் கூட்டிப்போய் நல்லா சுத்திக்காமிச்சு, அங்கிருக்கும் புத்தபிக்குவின் ஆசிகளையும் வேண்டினோம். அவருக்கும் ரொம்பவே மகிழ்ச்சிதான்.
இந்த புத்தர் கோவில் வந்தே 22 வருஷம் ஆச்சு. 1998 லே, நம்மூரில் ரொம்பநாளா இருக்கும் புத்தமதத்துக் குடும்பத்தில் ஒரு மரணம் நடந்துபோச்சு. சடங்கு சாங்கியம் எல்லாம் செய்ய மதகுருமார் இங்கே இல்லையேன்னு வடக்குத்தீவு வெலிங்டன் நகரில் இருக்கும் புத்தர் கோவிலில் இருந்து ஒரு குருவைக் கூட்டிவந்து எல்லாம் ஆச்சு. அப்பதான் இந்த ஊருலே ஒரு புத்தர் கோவிலைக் கட்டலாமேன்னு தோணியிருக்கு.
ஐடியாவை அப்படியே விட்டுடாம, நம்மூருக்கு டூரிஸ்ட்டா வந்த ஒரு புத்தபிக்குவை அகஸ்மாத்தாச் சந்திச்சுப் பேசுனதில் அவர் உதவி செய்யறேன்னு சொல்லியிருக்கார். புத்த பக்தர்கள் ஒன்னுகூடி ஒரு அமைப்பை ஏற்படுத்திக்கிட்டாங்க. கோவிலைக் கட்டறதுன்னா சும்மாவா ? தாற்காலிகமா ஒரு வீட்டை வாங்கி அதைக் கோவிலா வச்சுக்கிட்டுப் பூஜைகளைத் தொடர்ந்துருக்காங்க. அடுத்த ரெண்டாம் வருஷம் 2000லே பண்ணை நிலங்கள் விற்பனைக்கு வந்தப்ப வாங்கி அங்கே ப்ராப்பர் கோவிலையே கட்டிட்டாங்க. கோவில் & கோவில் தோட்டம் தவிர்த்துக் கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்யறாங்க. காய்கறிகள் பயிரிடல். கோவில் சேவைக்கு வந்து தங்கியிருக்கும் புத்த பிக்குக்கள்தான் விவசாயத்தில் பங்கெடுக்கறாங்க. விளையும் காய்கறிகளை, உள்ளூர் தாய் ரெஸ்ட்டாரண்டுகள் வாங்கிக்கறாங்க. அந்தக் காசை வச்சுக் கோவிலின் தினப்படி செலவுகள் ஆகிருது ! என்ன ஒரு தன்னிறைவு பாருங்க.
இந்தத் தோட்டத்தில் நிறைய யானைகள் இருப்பதால் நாங்க அப்பப்ப வந்து போவோம். கோவில் திருவிழா சமயத்தில் ரொம்பவே அருமையா அலங்கரிச்சு வைப்பாங்க. இன்றைக்கு அங்கே பார்த்த சில அலங்காரம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது ! பாப்கார் மல்லிகைன்னு முதலில் நம்பவே முடியலை !
கிளம்பி வரும்போது பக்கத்துப் பேட்டையில் வசிக்கும் யோகா குடும்ப அங்கம், நம்மையெல்லாம் அவுங்க வீட்டுக்குக் கூட்டிப்போய் டீ உபசாரம் செஞ்சாங்க. இந்த புத்தர் கோவிலைப் பத்திக் கேள்விப்பட்டுருந்தாலும், இதுவரை போகலையாம். புத்தமதத்தினருக்கு மட்டுமே அனுமதின்னு நினைச்சாங்களாம் ! இதுக்குத்தான் துல்ஸி வேணுங்கறது.....:-) நான் பார்க்காத புத்தர்கோவிலா !!!!!
நம்ம ஊரில் இதுவரை ஏழு புத்தர் கோவில்கள் வந்துருக்கு. நம்ம பேட்டையிலேயே ஒன்னு 2007 ஆம் வருஷம் கட்டிமுடிச்சாங்க. தய்வான் நாட்டு புத்தமதத்தினர் கட்டியிருக்கும் கோவில் இது. ரொம்ப அழகான புத்தர் சிலை, பளபளன்னு பீங்கான் மாதிரி இருக்கும் பளிங்குச்சிலை.
வெவ்வேற நாடுகள் புத்தமதத்தைப் பின்பற்றுவதால்.... அவுங்கவுங்க நாட்டு மக்களுக்காக அவுங்கவுங்க ஸ்டைலில் கோவில் !
நல்லாத்தான் இருக்குல்லே !
4 comments:
சுவாரஸ்யமான அனுபவங்கள்...
வாங்க ஸ்ரீராம்,
வாழ்க்கை முழுசும் அனுபவங்கள்தான், இல்லையோ !
யோகா சுற்றுலாவுடன் கோவில் தரிசனமும். நன்று.
வாங்க மாதேவி,
ரசித்தமைக்கு நன்றிப்பா !
Post a Comment