Friday, July 28, 2023

சூரியனை ஆஃப் செய்ய மறந்துட்டேன்.......

பொழுதன்னிக்கும்  அடுக்களைப் பரிசோதனை செய்வதில் நம்மை யாரும் மிஞ்ச முடியாது.  இடும்பி இல்லையா ? எப்பவும்  வேறு வழிதான் :-) பெரிய பெட்டி நிறைய வாங்கின ஆப்ரிகாட் பழங்களைக்  கொஞ்சம் உலர்ப்பழமா மாத்தினால் என்னன்னு தோணுச்சு.  இப்போ சம்மர் சீஸன்தான் என்றாலும்,  இந்த வெய்யில் எல்லாம், வடாம் வத்தல் போடக் காணாது.  எடு நம்ம சொந்த சூரியனை ! சுமாரா வந்துச்சு. என்ன ஒன்னு மிருதுவா இல்லாம வத்தலாகிப் போச்சு.  ஒரு ரெண்டு மணிநேரம் முன்னாலேயே  சூரியனை ஆஃப் பண்ணியிருக்கணும். ஆனால் அதுக்குன்னு இருக்கும் ருசியில் மாற்றமில்லை கேட்டோ ! 


இதுதான்   இந்த சம்மர் காலக்கடைசி மாசம் என்பதாலோ என்னவோ.... தோட்டம் பூராவும் பூக்களோ பூக்கள் ! பூக்களைப் பார்த்தாலே  கண்ணும் மனசும் குளிர்ந்து போயிருது, இல்லே !

காடு போல் வளர்ந்து நிக்கற மணத்தக்காளிச் செடிகளில் ஏகப்பட்ட காய்களும் பழங்களும். நம்மவர்   'ஃபேஸ்புக், சினிமான்னு பார்த்து, போரடிச்சுக் கிடக்கறாரே'ன்னு  காய்களையும் பழங்களையும் பிரிச்செடுக்க வச்சு, வத்தலும் போட்டாச்சு.     

அடுக்களைப் பரிசோதனையில்  TTK  ( Tulsi's Test Kitchen )  கொஞ்சம் மணத்தக்காளி பொடி செஞ்சு பார்த்தேன்.   நூத்துக்கு நூறு !  பருப்புப்பொடி செய்யறமாதிரிதான். மணத்தக்காளி  வத்தலை, நெய் சேர்த்து நல்லா மணம் வர வறுத்து எடுத்துக்கணும்.   அதே  கடாயில்  பருப்பு, மிளகாய், பெருங்காயம் எல்லாம்   கொஞ்சமா நெய் விட்டு வறுத்து எடுத்து, தேவையான உப்பு சேர்த்து  எல்லாத்தையும் பொடிபண்ண வேண்டியதுதான்,

கோடை  விடுமுறை முடிஞ்சு நம்ம யோகா வகுப்புத் தொடங்கிருச்சு. பாதிப்பேர்தான் வந்துருந்தாங்க. வெளிநாட்டுப் பயணம் போனவங்க இன்னும் ஊர்திரும்பலை.  அன்றைக்கு அங்கே வகுப்பு முடிஞ்சதும் சின்னதா  பார்ட்டி. நம்ம வகையில்  இமர்த்தியும் மசாலாக் கடலையும் :-) 

நம்ம புள்ளையார் கோவில் இதே வளாகத்தில்தான்  இருக்கு என்பதால் யோகா வகுப்பு முடிஞ்சதும் கோவில் விஸிட் ஒன்னு ஆரம்பிச்சு வச்சேன்.  'வரமுடிஞ்சவர்கள் வரலாம்' என்ற அறிவிப்புடன்தான் !   எப்படியும் ஒரு நாலைஞ்சுபேராவது வருவாங்க. புதன்கிழமைப் புள்ளையார் தரிசனம்!
வடக்குத்தீவுக்குப் போன மகளும் மருமகனும்  ஏர்ப்போர்ட்டில் இருந்து 'வந்தாச்சு'ன்னு சேதி அனுப்பினதும் போய்க் கூட்டிவந்தோம். ஆக்லாந்தில் இருந்து ஹேமில்டன் நகருக்குப் போறதாகச் சொல்லி இருந்ததால், அப்படியே 'முடிஞ்சால்' நம்ம ஹேமில்டன் பாலாஜி கோவிலுக்குப் போய்வரச் சொல்லி இருந்தோம். அங்கே இருக்கும் பட்டர்ஸ்வாமிகள் நம்ம நண்பர்தான். அவருக்கும்   சேதி அனுப்பி ஒரு அர்ச்சனைக்குக் கேட்டிருந்தோம். 

அதே போல் இவர்கள் கோவிலுக்குப்போய் பாலாஜி தரிசனம் செஞ்சுக்கிட்டாங்க.  பெருமாள் நமக்கு  ஆப்பிள்களைக் கொடுத்துவிட்டுருந்தார். மகளின் பரிசாக ஒரு யானையும் எனக்காச்சு. 
 ரயிலில்தான் ஆக்லாந்தில் இருந்து ஹேமில்டன் போனார்களாம்.  ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க.   இங்கே எங்க தெற்குத்தீவில்  வெஸ்ட் கோஸ்ட் போய்வரும்  டூரிஸ்ட்டுக்கான  ஒரு ரயிலைத் தவிர வேற ஒன்னுமே இல்லை.  இருந்த ஒன்னுரெண்டு சேவையையும் யாருமில்லா ரயிலாப் போனதால் நிறுத்திட்டாங்க.  இருக்கும் ரயில்பாதையை சரக்கு வண்டிகளுக்கு தாரை வார்த்தாச்சு. ப்ச்.... கூட்டம் இல்லாததால்.... டிக்கெட் விலை ஏகத்துக்கும் அதிகம்.  டிக்கெட் விலை அதிகம் என்பதால் கூட்டமில்லை. 

நெடுநாள் நண்பர் மகனுக்குக் கல்யாணம். அவுங்க இங்கே நியூஸி வந்தப்பப் பையனுக்கு ஒரு அஞ்சு வயசு இருக்கும்.  ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவான்.  நம்ம தமிழ்ச் சங்கக் கொண்டாட்டங்களுக்கு  ஆட வச்சுருவேன். 'க்றிஸ்ட்சர்ச் சல்மான்கான்' என்றொரு பட்டத்தையும் அளித்திருந்தேன்! நாந்தான்   அப்போ தமிழ்ச்சங்கத்தின்    கலைகலாச்சார ஒருங்கிணைப்பாளர்.  பையன் வளரவளர நடனத்தின் மீதிருந்த மோஹம் குறையவே இல்லை.  பையர், உள்ளூரில் ஒரு டான்ஸ் ஸ்டூடியோ ஆரம்பிச்சு,  பாலிவுட் டான்ஸ் சொல்லிக்  கொடுத்துக்கிட்டு இருந்தார். எங்கூர் வெள்ளையர்களுக்கு  இந்தியாவைப்பற்றி  எது தெரியுதோ தெரியலையோ ....   இந்த ரெண்டு சமாச்சாரம்  மட்டும்  விதிவிலக்கு.  Curry   & Bollywood!    உள்ளூர் வெள்ளைக்கார அம்மிணிகள் கூட்டம் அம்மும் வகுப்பு !  பட்டப்படிப்பு முடிஞ்சு, இதோ கல்யாணம் வரை வந்தாச்சு. 

'நம்மவர்' ஆரம்பிச்சு வச்ச இந்தியன்  க்ளப்பிலும்   (ISCC.  Indian Social & Cultural Club )  பெரிய குழு நடனம் சொல்லிக்கொடுத்து  ஆடவைப்பதிலும் பையர் தூள் கிளப்பிடுவார்.

நம்ம  ஊர் அட்டைக்கோவிலில்தான் கல்யாணம் வச்சுருந்தாங்க. கோவிலில் கல்யாணம் முடிஞ்சதும்,   பையரோட  சொந்த  ஃபங்ஷன் ஹாலில் விருந்து ! கல்யாணத்தை நடத்திவைக்க அட்டைக்கோவில் பாதிரியாருடன், ஆக்லாந்து சர்ச்சில் இருந்து அச்சனும் வந்துருந்தார்.  பெரியதிருவடி சாட்சியாகக் கல்யாணம் நடந்தது.  நம்ம யோகா குடும்பத்தின்  அங்கங்கள் பலரும்  கலந்துக்கிட்டதால்  இன்னும் அமர்க்களமாக நடந்ததுன்னு சொல்லிக்கறேன் :-) 

ஊருலே எந்த விசேஷமுன்னாலும் யோகா குடும்ப அங்கம்  குறைந்தபக்ஷம் மூணாவது அங்கே இருக்கும் என்பதால்  எங்கே போனாலும் குடும்பம் வந்துருக்கான்னு உறுதிப்படுத்திக்கறது பழக்கமாப் போச்சு. பொது நிகழ்ச்சிகள் என்றால் பிரச்சனை இல்லை. தனியார் நிகழ்ச்சிகள் என்றால்  யார் யாருக்கு அழைப்பு போயிருக்குன்னு  தெரியாததால்.... கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்தான்.
கல்யாண விருந்தில் நம்ம  மேசை.... ஒரே ஆன்மிகமாப்போச்சு. தெய்வீகம் !   ரெண்டு பாதிரியார்களும் நம்மோடு!  துறவியாகும்  நேரம் வந்துருச்சுன்னு  சொல்லுதோ !

'படங்களொக்க எனிக்கு அயிச்சுத்தராமோ?'  அச்சன் சொல்லுக்கு மறுப்பேது ! அயிக்காம். இப்பத்தன்னே அயிச்சுத்தராம்! தந்நு.

  நம்ம ஹரே க்ருஷ்ணா  கோவில், நம்மூர் சிடி மாலில்  நாமசங்கீர்த்தனம் செய்ய வரச் சொன்னாங்க.   கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தா........ கோவிந்தான்னு  அதில் போய்க் கலந்துக்கிட்டோம். எங்கூர் க்றிஸ்மஸ் பரேடில்  பூரி ஜகந்நாத் ரதம் முந்தியெல்லாம்  வரும். நிலநடுக்கத்துக்குப்பின்   மூணு வருஷத்துக்குப் பரேடே நடக்கலை.  அப்புறம் சின்ன அளவில்னு நம்ம பேட்டையில் நடத்துனாங்க.  கழுதை தேய்ஞ்சுக் கட்டெறும்பாப் போச்சாமே ....  அதே  கதிதான் இப்ப.  பரேடு நடத்தக் காசில்லைன்னு சிட்டிக்கவுன்ஸில் சொல்லுது.  இது ரொம்பவே அநியாயமுன்னு எனக்குத்தோணல்.  

ஊர் முழுக்க சைக்கிள்பாதை போடறோமுன்னு  பில்லியன் கணக்குலே செலவு செய்யும் கவுன்ஸில் , வெறும்  நூறாயிரம்  டாலருக்குக் கணக்குப் பார்க்குதேன்னு எரிச்சல்தான்.  வீட்டுவரியைத் தாறுமாறா ஏத்திக்கிட்டே போறாங்க..... நாங்க வாயைத் திறக்காமக் கட்டறோம்.  முன்னூத்தியம்பது   ஆயிரம் வீடுகள் இருக்கும் ஊரில்... ஒரு வீட்டுக்கு அரை டாலர்  எடுத்தாலே பரேடுக்குப்போக பணம் மிச்சமாகும்....  சின்னக்குழந்தைகள் அனுபவிச்சுப் பார்க்கும் பரேடில் கை வச்சது எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை.  இங்கே புலம்பவேண்டியதாப் போச்சே.....


நாம சங்கீர்த்தனம் முடிஞ்சதும், ஒரு இண்டியன் ரெஸ்ட்டாரண்டில் போய்  லஞ்ச் முடிச்சுக்கிட்டோம். இது என் பொறந்தநாள் பரிசு.  கைகேயி மாதிரிதான் நான்.  வரம் கொடுக்கும்போது,  'இப்ப வேணாம். அப்புறமா வாங்கிக்கறேன்'னு சொல்லிருவேன். இதையெல்லாம் வேணாமுன்னு விடப்டாது கேட்டோ ! 

அப்படியே அங்கே என்னென்ன வகை இனிப்புகள் இருக்குன்னு பார்த்துட்டு வந்தேன்.  வீட்டு விசேஷம் ஒன்னு வருது.  ப்ளானிங் செய்யணும். அதுக்கான ஏற்பாடுதான்.....

8 comments:

said...

இரண்டாவது படம் எனக்கு வரவில்லை! மணத்தக்காளி பொடி ஐடியா அருமை. செய்து பார்த்து விடுவோம்.

said...

குடையும் வடாமும் , திருமண கொண்டாட்டம், நாமசங்கீர்த்தனம், இந்திய உணவு, என அமர்களம்.

said...

வாங்க ஸ்ரீராம்,

ரெண்டாவது படம்.... நறுக்கிய பழங்களை சூரியத்தட்டில் அடுக்கியதுதான்.

மணத்தக்காளிப்பொடி போல சுண்டைக்காய்ப்பொடியும் பண்ணும் யோசனையில் இருக்கேன் :-)

said...

வாங்க மாதேவி,

ரசித்தமைக்கு நன்றிப்பா !

said...

அருமை நன்றி

said...

எல்லா நிகழ்வு கொண்டாட்டங்களையும் ரசித்து வாசித்தேன். மணத்தக்காளி அங்க சூப்பரா வந்திருக்கே!!! பொடி அருமை...

டான்ஸ் பையன் திருமணம், விருந்து, அந்த யானைப் பரிசி, ரயில் படம் (செம) தோட்டம், கடைசில் ரஜ்ஜு எல்லாம் அடி பொளி கேட்டோ!!

கீதா

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க கீதா,

இங்கே மணத்தக்காளி காடு மாதிரி வளந்துவருது. ஆனால் இது Weed னு சொல்றாங்க லோக்கல் மக்கள்.

இங்கே வந்த புதுசுலே தோட்டத்துலே மணத்தக்காளி பார்த்துட்டுப் பழங்களையெல்லாம் பறிச்சுத் தின்னு, இளம் கீரைகளைப் பறிச்சுப் பாசிப்பருப்பு கூட்டெல்லாம் செஞ்சு சாப்பிட்டாச். ஒருநாள் இலங்கைத் தோழி ஒருவரிடம் இதைச் சொல்லப்போய், 'ஐய்யோ.... அது விஷச் செடின்னாங்க. அவுங்க கணவர் யுனிவர்ஸிட்டியில் வேலை. அங்கே லேபில் கொடுத்து பரிசோதனை செய்யச் சொன்னால்.... விஷச்செடின்னு சொன்னாங்களாம்.

வெள்ளையனுக்கு தெரியாத மூலிகை, கீரையெல்லாம் விஷமே! ஆச்சு 35 வருஷம். விடாம சமைச்சுக்கிட்டுதான் இருக்கேன். விஷம் நம்மாண்டை வேலை செய்யலையே.....