Friday, October 11, 2019

ஜகத்துக்கு அதிபதி, தன் அண்ணன் தங்கையுடன் ! (பயணத்தொடர், பகுதி 154 )

கோவிலாண்டைன்னா  கோவிலாண்டையே இல்லை.... கோவில் வாசலுக்கு ஒரு கிமீ இருக்கும்போதே சாலையில் தடுப்பெல்லாம் வச்சு வாடகை வண்டிகளை நிறுத்திடறாங்க. இங்கிருந்து பார்த்தால் சாலை முழுக்க மக்கள் நடமாட்டம். இதுலே  சாலையிலேயே சாலைப்பாதைக் கடைகள் வேற !


மழையைக் கொஞ்சம் கூட சட்டை பண்ணாமல் மாடுகளும் மனிதர்களும் நடமாடிக்கிட்டே இருக்காங்க.  நல்லவேளை... சாலைக்கு நடுவில் நெடூகத் தடுப்பு வச்சுருப்பதால் எதிரும் புதிருமா குறுக்கும் நெடுக்கும் புகுந்து வரும்  போக்குவரத்தின் சல்யமில்லை.....
 மழைக்கிடையிலும் சாலையைச் சுத்தப்படுத்திக்கிட்டே இருக்காங்க. ஆனால் நம்ம சனம் லேசுப்பட்டதா?   தின்னுட்டுத் தூக்கிப்போடுது.....

நாங்களும் நடந்துநடந்து ஒரு இடத்தில் ஜகந்நாத் கோவில் ஆஃபீஸ் பார்த்துட்டு அங்கே விவரம் எதாவது கிடைக்குதான்னு போனோம்.  பயங்கரக்கூட்டம்.  பலரும் மழைக்கு ஒதுங்குனாப்போல இருக்கு, ஒரு செல்லம் உட்பட.....  இன்னும் கொஞ்ச, வலதுபக்கம் நடந்து போனால்  கோவில் வாசல் வருமாம்.

போக்குவரத்தை நிறுத்தி வைச்சுட்டாங்கன்னு நம்மை ஏமாத்திட்டாரோ அந்த ஆட்டோக்காரர்னு ஒரு சம்சயம். விசாரிச்சதில் கார்களுக்குத்தான்  இப்படியாம். ஆட்டோ வரலாமாம். இதை நைஸா தன்னுடைய ஆட்டோவுக்குப் பயன்படுத்திக்கிட்டார் அந்த ஆள்.  தான் ஓட்டறது கார்ன்னு எண்ணம் போல.....



போற வழியிலே கோவில் கோபுரமும், சுதர்ஸனச் சக்ரமும், அதில் பறக்கும் கொடியும் கண்ணில் பட்டது.   இந்தாண்டை மூணு ரதங்கள்..... மனசு தடதடன்னு இருக்கு.....

க்ளோக் ரூமைத் தேடி நடக்கும்போது, இவ்வளவு கூட்டத்திலும் நம்மைக் கண்டுபிடிச்சுட்டார் ஹரிஷங்கர். நம்ம  புரொஹித் அவர்களின் மகன்.  'க்ளோக் ரூம் ஒன்னும் வேணாம். அந்தாண்டை வாசலுக்கெதிரா நம்ம  இடம் இருக்கு. அங்கே வச்சுட்டுப் போகலாமு'ன்னு சொன்னதால் அவர் கூடவே மக்கள் வெள்ளத்துக்குள் நுழைஞ்சு நீந்திப்  போனோம். அங்கே போனால், இதுவும் இவுங்க ஹொட்டேல்தான்!  பிஷ்ணுபவன் லாட்ஜ்.

'அடடா....  தெரிஞ்சுருந்தால் இங்கே வந்தே தங்கி இருக்கலாமே'ன்னு தோணுச்சு.  'நம்மவர்'தான் ரொம்ப இரைச்சலா இருக்கும் இடமுன்னு சொன்னார். உனக்குக் கடல் பார்க்கணுமேன்னுதான்  பேலஸில் புக் பண்ணினேன்.

காசை மட்டும் எடுத்துச் சட்டைப்பையில் போட்டுக்கிட்டு, காலணி, பர்ஸ் (தோலில் செஞ்சதாச்சே!  தோல்பொருட்கள் கொண்டுபோகக்கூடாத இடங்களுக்கு, காசு வச்சுக்கன்னு சின்னதா அழகான துணி பர்ஸ் ஒன்னு நம்ம புதுகைத் தென்றல்  கொடுத்துருந்தாங்க. அதைக் கையோடு கொண்டும் வந்துருந்தேன். ஆனால் பாருங்க அதுக்குள்ளே கொஞ்சம் காசு வச்சுட்டு ஸிப்பை இழுத்து மூடும்போது, ஸிப் கையோடு வந்துருச்சு. அதனால் அறையிலேயே வச்சுட்டு வந்தேன். ஊருக்குப்போய் ஸிப்பைச் சரியாக்கணும்! )

 செல்ஃபோன்களை அங்கே ரிஸப்ஷனில் கொடுத்து வச்சுட்டு தெருவைக் கடந்து எதிர்வாடைக்குப் போனால்..... கைகால்  கழுவ  வரிசையா குழாய் வச்சுருக்காங்க.  கால்களை நனைச்சுட்டு ரெண்டு எட்டில் கோவிலின் புலி வாசல் (மேற்கு வாசல்) வழியாக  உள்ளே நுழைஞ்சோம். வாசலில் எலக்ட்ரானிக் கேட், போலிஸ் எல்லாம் இருக்கு. யாரையும் உபத்ரவிக்கலை.

 கோவிலுக்கு நாலு புறமும் வாசல்கள்  வச்சுருக்காங்க.  கிழக்குத் திசையில் சிம்ஹவாசல் (ஸிம்ஹத்வார்), வடக்கு யானை   வாசல் (ஹாத்தி த்வார்), தெற்கு  குதிரை வாசல்(அஷ்வத் த்வார்) மேற்கில் புலிவாசல்.....  யானை குதிரை எல்லாம் சரி. உலகாளும் அரசன் ஜகந்நாதனின் படை. இந்தப் புலி எப்படி?  நம்ம புலிக்கால் முனிவர் வியாக்ரபாதர்  நினைவிருக்கோ? அவர் பெயரில் இது வ்யாக்ரவாசல்! ஆக மொத்தம் கிழக்கும் மேற்கும் சிங்கமும் புலியும், வடக்கும் தெற்கும் யானையும் குதிரையும் :-)

சம்ப்ரதாயப்படிக் கோவிலுக்குள் போகும் முகப்பு வாசல்  சிங்க (கிழக்கு)வாசல்தான். ஆனால்   முக்கால்வாசி ஊர்களில் எப்பவும் நமக்கு  பின்பக்க வாசலே அமையும். கார் பார்க் பொதுவா அந்தப் பக்கங்களில்தான் இருக்கும். அப்படியே ஏறிப் போயிருவோம்.  நம்ம  லக்ஷணம், இந்த ஹரிஷங்கருக்குக் கூடத் தெரிஞ்சுபோச்சு, பாருங்க. இப்பவும் சிங்கத்தை விட்டுட்டுப் புலிதான் கிடைச்சுருக்கு :-)
கோயிலுக்குள் போக கண்டிப்பா ஹிந்துகளுக்கு மட்டுமே அனுமதி.  தான் ஹிந்துவாக இருந்தும், தன்கூடவே மற்ற மதத்தினரைக் கூட்டிப்போக முயன்ற  இந்தியப் பெருந்தலைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  வேற்று மதத்தவரை மணம் செய்த காரணத்தால் இன்னொரு பெருந்தலைக்கும் அனுமதி தரலை.
நம்ம இஸ்கான் ஸ்தாபகர் ஸ்ரீல ப்ரபுபாதா அவர்களும், தன்னுடைய வெளிநாட்டு பக்தர்களுக்கு (ஹிந்துவாக முறைப்படி மதம் மாறாத பக்தர்கள்) அனுமதி மறுக்கப்பட்டதால் தானும் கோவிலுக்குள் போகாம வந்துருக்கார். அதன் காரணமாத்தான்  புபனேஷ்வர் இஸ்கான் கோவிலில் பூரி ஜகந்நாதர் கோவில் மூலவர்களை அங்கத்துச் சந்நிதியில்  ப்ரதிஷ்டை பண்ணி, கோவிலுக்கு ஸ்ரீக்ருஷ்ணபலராம் மந்திர்னு பெயர் வைச்சதும்!

அந்தக் காலத்துலே  பாரதத்தில் ஹிந்துக்கள் மட்டுமேதானே இருந்தாங்க. அப்ப பிரச்சினை ஒன்னும் இருந்துருக்காது. அப்புறம் சமண, புத்தமதங்கள் கொஞ்சம் பரவி இருந்துருக்கு.  அதுக்குப்பின் அந்நியர் வந்து நாட்டைப் பிடிச்சு வலுக்கட்டாயமா  பலரை மதமாற்றம் செஞ்சுருக்காங்க.  ஆனால்   எது எப்படி ஆனாலும் அவரவர்  தன் மதச் சின்னங்களை தைரியமா நெற்றியில் தரிச்சும், மற்றபடி உடைகள் மூலமும் வெளிப்படுத்தி இருந்த காரணத்தால்  ஹிந்துக்கள் அல்லாதவர் யார்னு கண்டுபிடிக்க முடிஞ்சுருக்கும். ஆனால் இப்போ? 

பெரிய வளாகமா இருக்கு! சுத்திவர இருக்கும் மதில்சுவர் உயரம் ஏழு மீட்டர்னு  சொன்னார் ஹரிஷங்கர்.  நாலுலக்ஷத்து இருபதாயிரம் சதுர அடி வளாகமாம்!  (அம்மாடியோ!!!! ) பத்து ஏக்கர் என்றதை எப்படிப் பயமுறுத்திச் சொல்றார் , பாருங்க :-)

பதினோராம் நூற்றாண்டுலே  கலிங்க நாட்டில் கங்கப்பேரரசின்  ஆட்சி. அப்போ இருந்த அரசர் சோட்டா கங்கர், கோவிலைக் கட்ட ஆரம்பிச்சு,  பனிரெண்டாம் நூற்றாண்டில் அரசரா இருந்த  அனங்கபீம தேவரின் ஆட்சியில்  முடிச்சுருக்கார். இவர்  அரசர் அனந்தவர்மதேவரின் மகன். இம்மாம் பெரிய கோவிலைக் கட்ட  இத்தனை வருஷங்கள் ஆகித்தான் இருக்கும், இல்லே?

இந்தக் கோவில்கள் எல்லாம் வருமுன்னேயே ஸ்ரீஜகந்நாத்  அங்கே இருக்கார். ப்ராச்சீன்.... அஞ்சாயிரம்  வருஷமுன்னு சொல்றாங்க...

இவ்ளோ பெரிய, அழகான கோவிலை, வேற்று மதத்தவர் நாட்டுக்குள் நுழைஞ்சு ஆட்சியைப் பிடிச்சுக்கிட்டப்போ அழிக்க ஆரம்பிச்சதும்  உண்டு.  அது 1360 ஆண்டு.... ப்ச்.... (அவுங்க ஆட்சியில்தான் புபனேஷ்வர் கோவில் சிற்பங்களையெல்லாம் சிதைச்சதும்  நடந்துருக்கு  :-( எப்படித்தான்  மனசு வருதோ..... ஔரங்கஸேப் காலத்துலே  கோவிலையே இடிக்கப்போறேன்னு சொல்லி.....  கடைசியில் கோவிலை மூடி வச்சுட்டாதகவும்,  அவர் செத்தபின்தான் திரும்பக் கோவிலைத் திறந்தாங்கன்னும் ஒரு செய்தி உண்டு )  
கண்ணுக்கு நேரா  கோபுரத்துலே இருக்கும் சந்நிதி ஒன்னு. படிகள் அமைச்சுருக்காங்க.  நரசிம்மர் சந்நிதியாம்.  ஹரிஷங்கர்  விறுவிறுன்னு   இடம் வலமுன்னு போய் நிறையப் படிகள்  இருக்கும் இடத்துக்குக் கூட்டிப்போயிட்டார். படிகள் நீளத்துக்கு அகலமான வாசல்..  ரெண்டு ஓரங்களிலும்  காய்ஞ்ச புல்லில் செஞ்ச துடைப்பம் போல் ஒன்னு வச்சுக்கிட்டு உள்ளே காலடி எடுத்துவைக்கும் பக்தர்களுக்கு 'தர்ம அடி' கொடுத்துக்கிட்டு இருக்காங்க ரெண்டு பண்டாக்கள். (ஏற்கெனவே நம்ம நுனிப்புல் உஷாவின்  பூரி கோவில் விஸிட் வாசிச்ச நினைவில்) ஓரத்துலே ஏறிப்போகாமல் நடுவிலேயே போனேன்  :-) நம்மவருக்கும்  ஹரித்துவாரில் அடி வாங்குன நினைவு வந்துருக்கணும்! (உண்மையில் இந்த 'அடி' நம் பாவங்களையும் பீடைகளையும் அகற்றி, நம்மைத் தூய்மைப்படுத்திக் கடவுள் முன் போய் நிற்கும் தகுதியை ஏற்படுத்தும் ஐதீகம்தான்)

அகலவாசல் முழுசும் அணு அளவு இடம் விடாமல் பக்தர்கள் கூட்டம் அடை போல்! பெரிய ஹாலில் எள் போட்டால்  எள் விழும் வகையில்தான். திருப்பதி போல நெருக்கியடிக்கலை. இன்றைக்குக் கூட்டம் குறைவுன்னார் ஹரிஷங்கர்!

இந்த அலை அப்படியே முன்னால் போகும்போது நாமும் முன்னேறிப் போனோம். படியேறி வந்து உயரத்தில் ஆரம்பிச்சது, கொஞ்சம் கொஞ்சமாச் சரிஞ்சு ரெண்டு மூணு படிகளிறங்கி   திரும்பத் தரைத்தளத்து வந்துருது. அடுத்த அஞ்சாவது நிமிட்டில் இதோ  கருவறைமுன் நிக்கறோம். ஜகத்துக்கே அதிபதி, தன்  அண்ணன் தங்கையுடன் !
இடுப்பளவு தடுப்புக்குப்பின் பண்டாக்கள்.  (பட்டர்களைத்தான் வடக்கில் பண்டான்னு சொல்றாங்க ) வா வா, சீக்கிரம் வா ன்னு கையை ஆட்டி ஆட்டிக் கூப்பிடறாங்க..... ஜல்தி ஆவ்......


தொடரும்......:-)

PIN குறிப்பு:

நம்ம சிங்காரச் சென்னையில் இப்போ வடநாட்டுக் கோவில்கள் எல்லாம் நம்மைத் தேடி வந்தாச்சு. ஈஸிஆர் ரோடுபக்கம்தான்.... எல்லாமே.  ஒரு பத்து வருஷத்துக்கு முன்  சென்னை பூரி ஜகந்நாத் கோவில் போய் வந்தது இங்கே:-)

http://thulasidhalam.blogspot.com/2009/10/beech-mein-kaun-hai.html

7 comments:

said...

மிக அருமை. நன்றி.

said...

மிக அருமை அம்மா .ஜெகன் நாதரை பார்க்க வேண்டும் போல இருக்கிறது .படங்கள் நல்லா இருக்கு அம்மா .



என் வலைதளத்தில் புதிய பதிவு போடு உள்ளேன் .பார்த்துவிட்டு சொல்லவும்

https://gangaisenthilprasad.blogspot.com/2019/10/blog-post.html
https://gangaisenthilprasad.blogspot.com/2019/10/4.html

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க செந்தில்பிரசாத்,

உங்களோடு கூடவே உங்க கொலுவும் படிப்படியாக வளர்ந்துருக்கு !

இனிய வாழ்த்து(க்)கள் !

said...

பத்து ஏக்கரில் அம்மாடியோ.
கோவில் கட்டி முடிக்க நூற்றாண்டுகள் ஆச்சரியம்தான்!!

said...

வாங்க மாதேவி.

கோவில் இருக்கும் நிலத்தையே முதலில் உயர்த்தினாங்களாம். அதுக்கே நிறைய மாசங்கள் போயிருக்கும். !

said...

ஜகத்துக்கே அதிபதி, தன் அண்ணன் தங்கையுடன் ...

அமைதியான தரிசனம் உங்களுடன் ..