Friday, October 18, 2019

இன்னொருக்கில்கூடி.... !!!! (பயணத்தொடர், பகுதி 157 )

மேற்கு வாசலில் இருந்து கிளம்பி நடந்த கொஞ்ச தூரத்திலே கோவிலின் வெளிப்புற மதில் சுவர் நமக்கிடதுபக்கம் திரும்பிடுது.  தெற்குத்திசை.....  குதிரை  வாசல் இங்கேதான் இருக்கு. கருப்புக்குதிரையில் வெள்ளை நிற வீரரும், வெள்ளைக் குதிரையில் நீலநிற வீரருமா  போரிடத்தயாரா ஆயுதபாணியா வில் அம்புகளுடன்  இருக்காங்க!   யாராம்? நம்ம பலராமரும் கிருஷ்ணரும் !  நம்ம படம் ஒரே ஃப்ரேமுக்குள் வரலை. ரொம்பக் கிட்டக்க இருக்கோமே.... அதான்  கூகுளார் அருளிய படம் ஒன்னும் போட்டுருக்கேன்.  அப்பெல்லாம்  வாசலுக்கு சன்ஷேட் கிடையாது.


ஒவ்வொரு  நுழைவு வாசலுக்குப் பக்கத்திலும் சனம் கைகால் கழுவிட்டுக் கோவிலுக்குள்ளே போக குழாயடிகள் வச்சுருக்காங்க. அதே போல பெரிய பெரிய தகவல் பலகைகள், செல்ஃபோனைக் கொண்டுவந்தால் பிடுங்கிக்குவோம். திருப்பித்தரமாட்டோமுன்னு எச்சரிக்கை செஞ்சுக்கிட்டே இருக்கு! மத்தபடி கேட் வாசலில் இருக்கும் சிற்பங்களோ,  எந்த கேட் இது என்ற விவரங்களோ ஒன்னுமே இல்லை...... செல்ஃபோன் மட்டுமே நிகழ்கால முக்கியம் !


வெளிப்புற மதில் சுவர்களையொட்டியே வெவ்வேற மடங்கள்  அவுங்கவுங்க சாமிகளுக்கான சந்நிதிகளைக் கட்டிக்கிட்டு இருக்காங்க.   முதலில் கண்ணில் பட்டவர் நம்ம ஆஞ்சிதான்! ( இல்லே  போல இருக்கே.....   மூக்கைப் பார்த்தால் சுகர் மாதிரி இல்லே?  சுகப்ரம்மம்....இல்லே   என் கண்ணுதான் ரிப்பேரா....  கோவில் முகப்புலே  வனவாச ராமர்தான் இருக்கார்....  அப்டீன்னா....   ஆஞ்சிதானோ?  )
 அவருக்கு முன்னால் ரெண்டு பக்கங்களிலும் நம்ம துள்ஸிதாஸும், சைதன்யமஹாப்ரபுவும் உக்கார்ந்துருக்காங்க.  சந்நிதிச் சுவரின் ரெண்டு பக்கங்களிலும் தாடி மீசையோடு இடுப்பில் கத்தி வச்சுக்கிட்டு வால்நீட்டி நிற்கும் புலிகள் !   த்வாரபுலீஸ் :-)

அந்தாண்டை இன்னொரு  தனியாரிடத்தில் சிம்ஹவாஹினிக்கு ஒரு சந்நிதி.... இங்கிருந்தே ஒரு கும்பிடு.
இந்தத் தெருமுழுக்க நடக்க இடமில்லாமல் சிறுவியாபாரக் கடைகள். கோவில் பிரஸாதம், நெய் (!!!) விளக்கு எல்லாம் விக்கறாங்க.


சாமிக்கு நைவேத்யம் பண்ண சனம் வாங்கிட்டுப் போகறதுக்குன்னு இனிப்பு மிட்டாய்கள் சின்ன ஓலைக்கூடையில் வச்சு விக்கறாங்க. 'ப்ரஸாத் ச்சடாவோ' னு கூப்பிடும் வியாபாரிகள்.....   ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷல் இருக்குதே  அது இங்கே காஜா ன்னு நினைக்கிறேன். இல்லே   இதுவும் ப்ரஸாதமா?  எங்கெ பார்த்தாலும் தட்டு நிறையக் காஜாக்கள்.  (அங்கே தினம் தினம் அம்பத்தியாறு வகை முழுங்கிட்டு, சிறுதீனியா இதுவும் வேண்டி இருக்கோ?  டைம்பாஸ் இல்லே?  )


வேடிக்கை பார்த்துக்கிட்டே தெற்குப்பக்கம் முடிச்சுக் கிழக்கு வாசலாண்டை போயிருக்கோம். உண்மையில் இதுதான் கோவிலுக்குள்  போக வேண்டிய  முக்கிய நுழைவு வாசல். ரெண்டு பக்கங்களிலும் சிம்ஹங்கள் இருக்கும்  சிம்மவாசல். சுவரில் இருக்கும் தூண்களில் ஜயவிஜயர்கள் !
இந்த வாசலுக்குப் பக்கத்திலும் ஒரு தனியார் மடத்தின் கோவில் இருக்கு. முகப்பில் ஆஞ்சிதான் இருக்கார். நாம் உள்ளே போகலை....


சிம்ஹவாசலுக்கு வெளியே பதினொரு மீட்டர் உயரக் கல்த்தூண், அருணஸ்தம்பம். உச்சியில் நம்ம அருணன் உக்கார்ந்துருக்கார். சூரியனின் ஏழுகுதிரை பூட்டிய ரதத்தின் ஸாரதி இவரே!   இந்தக் கல்மரம் ஆதியில் இங்கில்லை. கொனார்க் என்னும் ஊரில் இருக்கும் சூரியக் கோவிலில் இருந்து கொண்டு வந்து இங்கே வச்சுருக்காங்க. ஆச்சு மூணு நூற்றாண்டு!


சிங்க வாசலின் ரெண்டு பக்கங்களிலும் சிரிச்சமுகத்தோடு சிங்கங்கள் :-)  பயங்கரக்கூட்டம்.  உள்ளே நுழைஞ்சதும் வலதுபக்க மாடத்துலே ஜகந்நாத்  'வா வா'ன்னு சொல்றாப்போலே இருக்கார்.  நேரா படிவரிசைகள் ....  22 படிகளாம். ரொம்ப விசேஷமானவை.... சனக்கூட்டம் படிகள் நிறைச்சுப் போய்க்கிட்டு இருக்காங்க.
இப்பக் கோவிலுக்குள் என்னென்னன்னு ஒரு மாதிரி தெரிஞ்சுபோச்சுல்லே.....  இனி ஒருக்கா நாம் தனியா வந்து சுத்திப் பார்க்கணுமுன்னு 'நம்மவரிடம்' சொன்னதுக்கு 'ஆமாம்'ன்னார் :-)

சிங்கவாசல் இருக்குமிடத்தில் உள்ள சாலைக்குப் பெயர் க்ராண்ட் ரோடு.  பெயருக்கேத்தாப்பல ரொம்ப அகலம்.....  வாசலுக்கு முன்னாடி இருக்கும் வெளிமுற்றத்தில்  மூணு ரதங்கள்,  அலங்காரம் களைந்த நிலையில்.....
மூலவர் உள்ளே உக்கார்ந்துண்டு, எதுக்கெடுத்தாலும் உற்சவரை ஊர்சுத்த அனுப்பும் பம்மாத்துவேலை எல்லாம் இல்லையாக்கும்.... இந்தக் கிருஷ்ணனுக்கு   :-) கோவிலில் நடக்கும் எல்லா உற்சவங்களுக்கும்  டாண்னு அண்ணன் தங்கச்சியோடு வெளியே வந்து  கலந்துக்கிட்டுத் திரும்ப உள்ளே போய் உக்காந்துருவாராக்கும் :-)

சித்திரை தொடங்குனதும் சந்தன யாத்ரா, வைகாசி மாசம், ஸ்நான யாத்ரா, ஆனி மாசம் ரத யாத்ரா, மாசி மாதம் டோலா யாத்ரா ன்னு அப்பப்ப கருவறையை விட்டு வெளியே வந்து கொண்டாடிட்டுப்போறதுதான். இதுலே இந்த ரத யாத்ரான்னு நடக்கறதுதான் ரொம்பவே பெரிய விழா!

இதைத்தவிர சங்கராந்தி, நவராத்ரி, தீபாவளின்னு   ஒரு ஹிந்துப் பண்டிகையையும் விடறதில்லை.... கூடவே ஏகாதசி, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமின்னு ஏகப்பட்ட கொண்டாட்டாங்கள்.

ரதயாத்திரை ஒன்பதுநாள் திருவிழா.  இதுக்காகவே மூணு பெரிய ரதங்களை வருஷாவருஷம் பெரிய அளவில் அலங்கரிக்கிறாங்க.  மூணு ரதங்களின் அடிப்பகுதியும், ரதங்களின் கூடுகளுமாத்தான் இப்போ வெளியே நாம் பார்க்கிறோம்.

ஒவ்வொன்னும் நல்ல உயரம். சாமியே தெரியலைன்னு யாரும் சொல்லிடமுடியாது..... உச்சியில் ஏறி உக்கார்ந்து உலகையே பார்த்துக்கிட்டுப் போறதுதான் வழக்கம் :-)

 பலராமர் ரதம் நாப்பத்திமூணேகால் அடி, 14 சக்கரம், பெயர் தாளத்வஜா. சிகப்பும் பச்சையுமா  துணிகள்  அலங்காரம். நாலு கருப்புக்குதிரையுடன் மாதிலிதான் தேரோட்டி. தேர்வடம் யார் தெரியுமோ? நம்ம வாசுகி.  கயிறு ரோலுக்கு ஏற்கெனவே  எக்ஸ்பீரியன்ஸ்ட்தான். திருப்பாற்கடல்....

சுபத்த்ராவின் ரதம் நாப்பத்திரெண்டேகால் அடி உயரமும், 12 சக்கரங்களுமா.... பெயர்  தேவதலனா.  சிகப்பும் கருப்புமா அலங்காரம். நாலு ப்ரவுன் நிறப் பெண்குதிரைகளுடன்,  ஸ்வர்ணசூட நாகினிதான் தேர்வடம். தேரோட்டி ?  ஹாஹா... வேற யார்? அர்ஜூனன்தான் :-)

நம்ம ஸ்ரீ ஜகந்நாத்தின் ரதம்தான் ஏற்றவும் உயரமானது. நாப்பத்திநாலு அடிகளும் கொசுறா கூடவே ரெண்டு இஞ்சும் . சக்கரங்களின் எண்ணிக்கையும் 16. சிகப்பும் மஞ்சளுமா அலங்கரிப்பு. நாலு வெண்குதிரைகளும், தாருகன் என்னும் தேரோட்டியும், சங்கசூடநாகர் தேர்வடமுமாய்.....  ரதத்தின் பெயர் நந்திகோஷ் !

முதலில் பலராமர், அடுத்து சுபத்ரா கிளம்பிப்போனதும்  கொஞ்ச நேரம் கழிச்சுதான்  ஜகந்நாத் கிளம்புவார்.
தேர்களையெல்லாம் மரக்குதிரைகள், மரச்சிற்பங்கள், மரப்படிகள் எல்லாம் வச்சு  அலங்கரிச்சு முடிச்சதும்  கருவறையில் இருந்து மூலவர்களைத் தூக்கி வந்து அவரவர் ரதத்தில் ஏற்றி உக்கார வைப்பாங்க.

பூரி அரசர் கஜபதி திவ்ய சிங் தேவ் / புருஷோத்தமர், நடமாடும் ஜகந்நாதர் பல்லக்கில் வந்து கோவில் வாசலில் இறங்கி, ரதங்களின் மேலே ஏறி, பண்டா சந்தன நீர் தெளிக்க, ரதங்களின் தரையைத் வெள்ளித்துடைப்பத்தால் சுத்தம் செய்வாராம். ஆதிகாலத்தில் தங்கத்துடைப்பமா இருந்ததாம்....  பிறகு பூஜைகள், ஆரத்தி எல்லாம் முடிச்சுட்டு அவர் இறங்கினதும்  ஒவ்வொரு தேர்களா நகர ஆரம்பிக்கும். மக்கள்தான் இழுத்துக்கிட்டுப் போவாங்க.

தேர்களில் பிடிப்பிச்சுருக்கும் மரக்கட்டைகள்,  படிகளுக்கான மரத்தடிகள் எல்லாம் சேர்ந்து பயங்கர கனமா இருக்குமாம். பகல் மூணுமணிக்குக் கிளம்பினால்  பொழுது சாயறதுக்குள்ளே  குன்டிச்சா கோவிலுக்குப் போயிடணும். சூரியன் அஸ்தமிச்சுட்டால் தேர் நின்ன இடத்தில் நிக்க வேண்டியதுதான்.


உண்மையில் நம்ம பயணத்திட்டத்தின்படி  இங்கத்து நியூஸி குளிரில் இருந்து தப்பிக்கும் விதமா ஜூன் ஜூலையில் இந்தியாவுக்கு வந்துட்டு,  அப்படியே கொல்கத்தா, பூரி, காசின்னு சுத்திட்டு வரவேண்டியது.  விவரங்கள் சேகரிச்சப்ப,  ரதயாத்ரா நடக்கும் சமயமுன்னு தெரிஞ்சதும் திட்டத்தை மாத்திக்கிட்டோம்.

நாம் போனது வருஷம் 2018 (நாந்தான் பதிவை ரொம்ப நாள் கழிச்சு எழுதிக்கிட்டு இருக்கேன்) அப்போ ரதயாத்ரா ஜூலை 14 ஆரம்பிச்சு, ஜூலை 22 தேதிக்கு முடிஞ்சது.  உலகம் முழுவதிலும் இருக்கும்  பக்தர்களில் பலரும் இந்த சமயத்துக்குப் பூரிக்கு வந்துடறாங்க. அந்த வருஷம் மட்டும் ஏழு லக்ஷம் பேர் வந்துருந்தாங்களாம்.  எல்லா ஹொட்டேல்ஸும் ஃபுல்லி புக்டு. கூட்டம் சேரும் சமயம் சுகாதாரக்கேடும் கூடவே வந்துருமே..... இதன் காரணமாத்தான் நாம்  விழா முடிஞ்ச  ரெண்டாம்  வாரம் வந்தோம். இப்ப என்னன்னா.... நல்லமழையில் மாட்டிக்கும்படியா ஆச்சு...ப்ச்....
ராஜா இந்த்ரத்யும்னன் மனைவி   ராணி   ( Gundicha  ) Gகுன்டிச்சா  தேவிக்குக் கொடுத்த வாக்குறுதியை மீறாமல்  தானே கிளம்பிப்போய் ராணியம்மா கட்டிவச்ச கோவிலில் எட்டுநாள் இருந்துட்டுத்தான் வர்றார் வருஷத்துக்கொருக்கா. இதுதான் இந்தப் புகழ்பெற்ற ரதயாத்திரை !

ராணியம்மா, இவருக்காக தன் அரண்மனையில் ஒரு கோவில் கட்டிட்டாங்க. ஸ்ரீ ஜகந்நாத் கோவிலில் இருந்து சுமார் மூணு கிமீ தூரம்தான்.  Gகுன்டிச்சா கோவில் என்றுதான் பெயரே !  அங்கே ரதங்கள் போய் வரத்தான் இத்தனாம் பெரிய அகலமான சாலை இந்த  க்ராண்ட் ரோடு. (வேற மாநிலத்தில் இருக்கும் இதே பெயருள்ள சாலையோடு குழப்பிக்க வேணாம், கேட்டோ !  )  Grand  Road / Bada Danda ன்னு   சொல்றாங்க.க்ராண்ட் ரோடு பெயருக்கேத்தாப்டி ரொம்ப அகலமா க்ராண்டாவே  இருக்கு ! ரதங்கள் போற வழியாச்சே !   வருஷா வருஷம் ரத உத்ஸவத்துக்கு  வரும் மக்கள் கூட்டம் அதிகரிச்சுக்கிட்டே போகுதாமே!   இந்த வருஷம் ஏழு லக்ஷம் பேர் வந்தாங்களாம். !
'ராணியம்மாவின்  கோரிக்கையை நிறைவேத்தறேன்'னு சொன்ன  ஸ்ரீ ஜகந்நாத்,  ராஜா இந்த்ரத்யும்னனிடம் ' உமக்கு என்ன வரம் வேண்டுமோ.... கேளும்' என்றதும்,  என்னோடு இந்த அரசவம்சம்  முடிஞ்சுடணும் என்று கேட்டாராம்.

ஏற்கெனவே குழந்தை இல்லாத தம்பதிகள்தான் இந்த அரசரும் அரசியும்.  வேற சொந்தபந்தம் வந்து ஆட்சியை எடுத்துக்கிட்டு, 'இது நாங்க கட்டுன கோவிலு'ன்னு உரிமை கொண்டாட வேண்டாமுன்னு நினைச்சுருக்கார்.

பிள்ளை வரம் கேட்பாருன்னு நினைச்சுருந்த ஜகந்நாதருக்குப் பெரிய ஷாக்காப் போயிருச்சு.   உமக்குப் பிள்ளையா இருந்து நானே, நீர் போனபின் திதி கொடுக்கறேன்னு சொல்லிட்டாராம்.   (குடந்தைக் கோவில் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல! ) அப்படியே இதுநாள்வரை நடந்துக்கிட்டுத்தான் இருக்கு !

ரதங்களைப் பார்த்ததும்..... அப்புறம் சொல்லலாமுன்னு மனசுக்குள் வச்சுருந்த விவரங்கள் தானே வந்துருச்சு பாருங்க....
மழை கொஞ்சம் விட்டுருந்தாலும்..... தரையெல்லாம் ஒரே நசநசப்பு.   குறுக்குத்தடுப்பு வரை நடக்கணுமேன்னு நினைக்கும்போது  க்ருஷ்ணன், பிக்கப் வண்டியை அனுப்பிட்டான்.
நால்கோ கம்பெனி, முதியவர்கள், நடக்க முடியாதவர்கள் இப்படியான சனத்துக்காக  இலவச சேவையா  அஞ்சு வண்டிகளை( Battery carts )  விட்டுக்கிட்டு இருக்கு. அந்த  வருஷம் ரதயாத்ரா சமயம்தான்  ஆரம்பம். மூணுவாரம் தான் ஆகி இருக்கு!  வண்டி ஓட்டும் இளைஞர், அவர் வச்சுருக்கும் நோட்பேடில்  நம்ம பெயர், ஃபோன் நம்பர் எழுதித்தரச் சொன்னார். பயணிகள் விவரம்தான்.  வேற ஒரு முதியவர், பெயர் கேட்டதுக்குக் கோச்சுக்கிட்டு வண்டியில் ஏறமாட்டேன்னுட்டார். இலவச வண்டி என்றதும் ஒருமாதிரி சந்தேகம் வேற....'கித்னா ருப்யா'ன்னு கேட்டுக்கிட்டே இருந்தார்.

ஏகாந்தமா நாங்க மட்டும் உக்கார்ந்துருந்தோம். போகும் வழியில் சின்னதா ஒரு வீடியோ க்ளிப்பும் எடுக்க முடிஞ்சது.

ஒரு ஒன்னரை கிமீ  தூரத்தில்  அவுங்க  பார்க்கிங் இருக்கு.  அங்கே இறங்கி , அவுங்க சேவையைப் பாராட்டி ஒரு பின்னூட்டம் எழுதிக்கொடுத்துட்டு இன்னொரு ஆட்டோ பிடிச்சு ஜமீந்தார் மாளிகைக்கு வந்து சேர்ந்தோம்.


கொஞ்சம் ஓய்வுக்குப்பின் ஒரு எட்டரைக்குக் கீழே  ரெஸ்ட்டாரண்டுக்குப்போய் ராச்சாப்பாடு.  பனீர் கொஃப்தா, சாதம், என்னவோ ஒரு கூட்டு,   ஃப்ரூட் லஸ்ஸி.  சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே, பெருசா  மழை பெய்ய ஆரம்பிச்சது.

மழையை  வேடிக்கை பார்க்கப்பிடிக்கும் என்றாலும்,  பால்கனிப்பக்கம்  ரொம்ப நேரம் உக்காராமக்  கால் வலியா இருக்குன்னு சீக்கிரம் தூங்கப் போயிட்டேன்.

தொடரும்......... :-)


11 comments:

said...

அருமையான விவரங்கள். அற்புதமான படங்கள்.

சங்கு சக்கரம் இடம் மாறி இருக்கோ?

said...

சுவாரஸ்யமான தகவல்களுடன், காணொளியுடன் அருமையான பதிவு. நன்றி.

said...

அருமை சிறப்பு நன்றி

said...

வெள்ளை குதிரை,கறுப்புகுதிரை வீரர்கள்,ஆஞ்சி,தேர்கள் முழுவிபரம்,கோவில் சந்நிதிகள் என பூரணமாக சுற்றி வந்து மகிழ்ந்தோம்.

உங்கள் பயணத்தில் நாங்களும் பல இடங்களை கண்டுகொள்கிறோம் .
மிக்கநன்றி திரு + திருமதி துளசி கோபால் இருவருக்கும்.

said...

வழக்கப்படி படங்களூம் இடுகையும் அருமை

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

சண்டைக்குப் போகும்போது சங்கு வலக்கையில்தான். ஆனால் இங்கே எதுக்கு இப்படின்னு தெரியலை.... :-)

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

எல்லாம் 'நான் பெற்ற இன்பம்... பெறுக இவ்வையம்' என்ற கணக்கில்தான் எழுதிக்கிட்டே போறேன். பலசமயம் வாசிக்கப் போரடிக்குமோன்னு உள்ளூர ஒரு பயம் வரத்தான் செய்யுது....

ரசித்து வாசித்தமைக்கும் உங்கள் அன்புக்கும் மனம் நிறைந்த நன்றி !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா!

மனம் நிறைந்த நன்றிகளுடன் எங்கள் அன்பும் இத்துடன் !

said...

வாங்க கௌதமன்,


வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

said...

தேர் பற்றிய தகவல்கள் அனைத்தும் மிக அருமை மா ...

கண்டிப்பாக நேரில் சென்று தரிசிக்க வேண்டிய கோவில் ..

இப்போ பல இடத்தில் இது போல ஜெகநாதர் கோவில்கள் இருக்கு ..எங்களுக்கு கூட போற வழியிலே ஒரு கோவில் ..

படங்கள் எல்லாம் அழகு..