Wednesday, October 09, 2019

மைஸூர் வடையாம்ப்பா............. (பயணத்தொடர், பகுதி 153 )

காலையில் திரைச்சீலையைத் தள்ளிவிட்டால் இன்னும்  ஏழரை கூட ஆகலை....  எல்லா பெரிய நகரங்களையும்போல ட்ராஃபிக் பயங்கரமா இருக்கு! சென்னையைப்போல் கலந்துகட்டியா  இருக்காம நாலு சக்கரமும் ரெண்டு சக்கரமும் பாதையைப் பாகம் பிரிச்சுக்கிட்டு இருக்காங்க.

பத்துமணிக்குதானே வண்டிக்குச் சொல்லி இருக்கோமுன்னு கொஞ்சம் நிதானமாவே எழுந்து குளிச்சு முடிச்சு ஒரு எட்டேகால் போல ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம்.  அங்கெதான் மைஸூர்  வடை இருந்துச்சு. போண்டான்ற பெயர் வடக்கில் இல்லை போல.... (நம்ம டோண்டு நினைவு வந்தது....) 

கொஞ்சம் நல்லா சாப்பிட்டுக்கோன்னார் 'நம்மவர்'.  பயணம் இருக்கு. அதிக தூரம் ஒன்னும் இல்லை ஒரு அறுபத்தினாலு கிமீதான். சாப்பாடானதும் வெளியே ஸ்வொஸ்தியைச் சுத்திப் பார்க்கப் போனோம்.  எப்பவும் தங்குமிடத்தைச் சுத்திப் பார்க்க நேரமே கிடைக்கறதில்லை....
அழகான தோட்டமும், அங்கங்கே சிலைகளுமா நல்லாத்தான் இருக்கு. பெரிய நீச்சல் குளம் வேற ! 'நம்மவர்' பயணம் என்று எப்போ எங்கே கிளம்பினாலும் ஒரு ஸ்விம்மிங் ட்ரங்க்ஸ் எடுத்து வச்சுக்குவார். அதைப் பயன்படுத்தத்தான் நேரமே வாய்க்கறதில்லை..... இப்பவும்தான்....

வரவேற்பில் இருக்கும் புள்ளையாருக்கு விளக்கேத்தி வச்சுருக்காங்க.
ஆச்சு மணி பத்து. வண்டி ரெடின்னதும் பொட்டிகளை எடுத்துக்கிட்டு செக்கவுட் செஞ்சுட்டுக் கிளம்பியாச்சு. புபனேஷ்வரை விட்டு வெளியில் போறதால் வண்டிக்குத் தனி ரேட்.  போகவர கொடுத்துடணும். டோல்ரோடு வேற  இடையில் வருது. எல்லாத்துக்கும் சேர்த்து பணம் அடைச்சுட்டுக் கிளம்பியாச்.
அதுவரை எங்கியோ ஒளிஞ்சுருந்த  வருணன்  வேகமா வந்து நம்மோடு சேர்ந்துக்கிட்டான். அருமையான சாலையா இருக்கு என்றாலும்  அடிச்சுப்பேயும் மழையில் எதிரில் என்ன இருக்குன்னே தெரியலை. ட்ரைவர் அஷோக்  சின்னப்பையனா இருக்கார். (  ட்ரைவிங் லைஸன்ஸ் எடுத்துருப்பாருன்னு நினைக்கிறேன்..... )  இளங்கன்று பயமறியாம விர்ன்னு ஓட்டிக்கிட்டு இருக்கு. 
'மெள்ளப்போப்பா அஷோக்கு.  நமக்கு அவசரம் ஒன்னும் இல்லை'ன்னதும் சரி சரின்னு தலையை மட்டும் ஆட்டிக்கிட்டு ஓட்டறார். வாயில் தம்பாக்கு இருக்கு. உப்பிய கன்னம் சொல்லுதே....

டோல்கேட்டாண்டை சின்னச் சின்ன ட்ரக்குகளை, டபுள் டெக்கராக்கி அதுலே பயணம்  போகும்  பக்தர்கள்  நெருக்கியடிச்சு  உக்கார்ந்துக்கிட்டு இருக்காங்க.கூகுளார் ரெண்டரை மணி நேரம்னு சொன்னதுக்கு, நாம் இப்படி அடிச்சு ஊத்தும் மழையில் ஒன்னே முக்கால் மணி நேரத்துலேயே  ஊருக்குள் வந்துட்டோம்.   மழை கொஞ்சம் விட்டுருக்கு இப்போ.... ஒரு பழைய காலத்து வீட்டுக் கதவு அருமை!

இந்தியாவின் ஸ்வொச்ச் பாரத் ஐகான் இந்த ஊருன்னு   விளம்பரவளைவு வச்சுருக்காங்க.   கண்ணை மூடிக்கிட்டு வச்சுட்டாங்க போல.....  ப்ச்....
ஜமீந்தார் மாளிகைக்கு வந்துட்டோம். இங்கேதான் தங்கல். பூரி கோவில் புரோஹித் இதன் உரிமையாளர்.  நாம் வரும் விவரம் ஏற்கெனவே தகவல் சொல்லி இருந்ததால்  இவரே கோவில் தரிசனத்துக்கு எற்பாடு செஞ்சுருவாராம்.
சவாரி இருக்கும்போதே இத்தனை வேகத்தில் வந்தவர் திரும்பிப்போகும்போது எவ்ளோ வேகத்தில் போவாருன்னு நினைச்சாவே எனக்குக் கதி கலங்குது.....  பத்திரமாத் திரும்பிப்போகணுமே பெருமாளேன்னு வேண்டிக்கிட்டு, பகல் சாப்பாட்டுக்குக் கொஞ்சம் காசையும் கொடுத்து, 'நிதானமா ஓட்டிக்கிட்டுப்போப்பா'ன்னு சொல்லிட்டு உள்ளே போய் செக்கின் ஆச்சு.


செக்கவுட் டைம் காலை ஏழரையாம்.... அட ராமா....  வேறெங்கும் இப்படிக் கேள்விப்பட்டதுகூட இல்லையே....
 செக்கவுட் செஞ்சுட்டு அப்புறம் ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு, லவுஞ்சில் ரெஸ்ட் எடுக்கலாமாம்.  வெளியே சுத்திட்டு வரப்போனாலும்  பெட்டிகள் பத்திரமா இருக்குமாம்.  என்னமோ போங்க....ஒவ்வொன்னு ஒரு ரகம்....
ரெண்டாவது மாடியில் அறை. பால்கனி கர்ட்டனைத் திறந்தால் பூரி கடற்கரை !  காத்து அப்படியே பிச்சுக்கிட்டுப் போகுது!  சுத்தமான கடற்கரை வேற !  ஹூம்..... (நம்ம மெரீனா....)
சரியா நாலுமணிக்குக் கோவில் வாசலுக்கு வரச்சொல்லி சேதி வந்தது.  நான் அதுக்குமுன்னாலேயே துடிச்சுக்கிட்டு இருந்தேன். இந்தப் பயணமே அந்த 'ஜாகர்நாட்டை' தரிசிக்கத்தான்....  'நம்மவர்'தான் கொஞ்சம் பொறுமையா இரு. முன்பின் தெரியாத இடம்.  புரோஹித்  கூடவே போறதுதான் நல்லதுன்னுட்டார்.பகல் சாப்பாட்டுக்குப் போயிட்டு வந்துடலாமுன்னு கிளம்பினோம். மாளிகை வாசலில் ஆட்டோ கிடைச்சது. அக்கம்பக்கம் எங்கே போகணுமுன்னாலும்  அம்பது  ரூ.  கொஞ்சதூரத்துலே இஸ்கான் ரெஸ்ட்டாரண்டு இருக்குன்னு அங்கே போய் இறங்கிக்கிட்டோம். இவ்ளோ கிட்டன்னா நடந்தே வந்துருக்கலாம். ஐநூறு மீட்டர்தான்.  மழையும் அழுக்குமா இருக்கும் சாலையில் நடப்பதும் கஷ்டம்தான் போங்க....

கோவிந்தாஸ் ரெஸ்ட்டாரண்ட்லே சைனீஸ் மெனு கூட இருக்கு!  (உண்மையில் சீன நாட்டில் இந்த மஞ்சூரியன் என்ற பெயரில் ஒன்னுமே இல்லை....    இது இந்தியக் கண்டுபிடிப்பாக இருக்கணும் ) நமக்கு வேண்டிய தால்பாத் கிடைச்சது. இங்கே ரெஸ்ட்டாரண்டு கூடவே கெஸ்ட் ஹௌஸூம்  இருக்கு.  சாப்பாடானதும்  ஒரு ஷேர் ஆட்டோவில் திரும்பி ஜமீந்தார் மாளிகைக்கு வந்துட்டோம்.  கோவில் இங்கிருந்து ரெண்டரை கிமீதூரம்தான்.  மூணரைக்குக் கிளம்பினால் சரியா இருக்குமுன்னு சொன்னார் 'நம்மவர்'

இந்த ஹொட்டேல் இருக்கும் சாலைக்குப் பெயரே சக்ரதீர்த்த ரோடு. எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு !  இங்கே கடல் பார்க்கும் அறைகள், தெரு பார்க்கும்  அறைகள்னு தனித்தனி ரேட்.   நம்ம கன்யாகுமரி மாதிரிக்  கடலைக்கூடக் காசாக்கலாம் !
ஃப்ரீ வைஃபை நல்லா வேலை செய்யுது.  கொஞ்ச நேரம் அதில் போக்கினேன். எதிரில் கடல் வேற இருக்கே... போதாதா?
மூணரைக்குக் கிளம்பி டைனிங் ஹால் வழியா ஹொட்டேல் வாசலுக்குப் போனோம். இந்த வாசல் சிலைகளோடு அருமையா இருக்கு!  வாசலில் ஆட்டோ கிடைச்சது.  செல்ஃபோன், தோலில் செஞ்ச பர்ஸ், ஹேண்ட் பேக், கெமெரா, Bபேக் Pபேக் இப்படி எதுவுமே கூடாதாம்.  கோவில் வாசலில் இருக்கும் க்ளோக் ரூமில் பொருட்களை வச்சுட்டுப்போக வசதி இருக்காம்.

சுருக்கத்துலே சொன்னால்  காசைத்தவிர வேறெதுக்கும் அனுமதி இல்லை ! அதனால் நான் கெமெரா இல்லாத வெறுங்கையாகவும், நம்மவர் காசு & செல்ஃபோன்களுமாத்தான் கிளம்பி வந்துருக்கோம். ஒரு அவசர ஆத்திரத்துக்கு செல் வேணுமுன்னுட்டார். நானும்  'ராமன்கூடவே போன சீதையாட்டம்   உங்க செல்லோடு என் செல்லும் இருக்கட்டுமே' ன்னேன் :-)

அதே அம்பது ரூபாய்க்கு கோவிலாண்டை இறக்கி விட்டார் ஆட்டோக்காரர்.

தொடரும்....... :-)


11 comments:

said...

வழக்கமாக நாம் மைசூர் போண்டா என்றுதானே கூறுவோம். இப்பொழுதுதான் மைசூர் வடை கேள்விப்படுகிறேன்.

said...

அருமை நன்றி

said...

ஜமீன்தார் மாளிகையும் கடலும் மனதை இழுத்து கொண்டே போகிறது.

அடுத்து கோவில் காண ஆவல்...

said...

கோவில் பற்றிய விவரணைகள் குறைவே பெருமாளை காண்வில்லையே

said...

/கோவிந்தாஸ் ரெஸ்ட்டாரண்ட்லே சைனீஸ் மெனு கூட இருக்கு! (உண்மையில் சீன நாட்டில் இந்த மஞ்சூரியன் என்ற பெயரில் ஒன்னுமே இல்லை.... இது இந்தியக் கண்டுபிடிப்பாக இருக்கணும் )/

சீனத் தலைவர் சென்னை வருவதால் ஒரு சீன தமிழகக் கதை வேணும்ன்னு சொன்னார் நண்பரொருவர். நாம எழுதித்தந்தது.

ஒரு பொங்கல் சமயம், மாமல்லபுரம் பக்கம் ஜல்லிக்கட்டு நடந்தப்போ ஒரு சைனாக்காரன் புதிய உணவு ஒன்றை அறிமுகப்படுத்தினான். விழா நடந்த இடத்துக்கு வந்தப்போ இங்க என்ன நடக்குதுன்னு கேட்டான். ஒருத்தர் மஞ்சுவிரட்டுன்னு சொன்னாங்க. அதைக் குறிக்கும்படி வெச்ச பேருதான் மஞ்சூரி. இப்போ மஷ்ரூம் மஞ்சூரி, சிக்கன் மஞ்சூரின்னு பல அவதாரம் எடுத்துக் கலக்குது.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

நானும் முதல்முதல்தான்...... ஆமாம். தபால்வடைன்னு கூட ஒன்னு இருக்கு தெரியுமோ?

தோழி வீட்டுலே 'தபால்' னு செஞ்சு கொடுத்தாங்க :-)

http://thulasidhalam.blogspot.com/2006/04/blog-post_17.html

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

கடலுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கேப்பா !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஒரு பதிவுலே அடங்கமாட்டாரே பெருமாள்... விஸ்வரூபம் காமிச்சுடமாட்டாரா?

அடுத்த வரப்போகும் பதிவுகளில் கொஞ்சம் விவரங்கள் வருகின்றன. விஸ்தாரமா மூணு நாலு பதிவுகள் வரை போகலாம் :-)

said...

வாங்க கொத்ஸ்,

சீன அதிபரை நம்ம பதிவுக்குக் கூட்டி வந்தமைக்கு நன்றி ! (எல்லோரும் ஜோராக் கைதட்டுங்க, பார்க்கலாம் :-)....)

இது சீனாக்காரன் கண்டுபிடிப்பு இல்லையேப்பா.... நம்மாளுங்க எதை விட்டு வச்சாங்க !

said...

பால்கனி கர்ட்டனைத் திறந்தால் பூரி கடற்கரை...


எத்தனை கடற்கரை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் மனசுக்கு மகிழ்ச்சி தான் .... அதன் காற்றும் மணமும்