Wednesday, January 18, 2017

தமெலில் ஒரு எலுமிச்சை மரம் ( நேபாள் பயணப்பதிவு 3)

த்ரிபுவன் இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் தரையை தொட்ட விமானத்துலே இருந்து ஏணிப்படிகளூடா இறங்கினோம்.  பிரமாதமான கட்டிடமெல்லாம் இல்லை.  உள்ளே போனதும்   நமக்கு,  நாட்டுக்குள் நுழைய விஸா வாங்கிக்கணும். இந்தியாவில் இருந்து வரும் மக்களுக்கு விஸா தேவை இல்லை. ஆனால்  பாஸ்போர்ட், ஓட்டர்ஸ் ஐடின்னு  கொண்டு வரணுமாம்.


பதினைஞ்சு நாட்களுக்கு 25 டாலர் (யூ எஸ்) ஒரு ஆளுக்கு என்ற மேனிக்கு  அம்பது கட்டி விஸா வாங்கினோம். கார்டெல்லாம் நீட்ட முடியாது.  காசாக் கொடுக்கணும். கூடவே நம்ம பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ ஒன்னும் அந்தப் படிமத்தில் ஒட்டிக்  கொடுக்கணும். ஒட்டறதுக்குப் பிசின் கூட வைக்கலை.  நம்மவர்  கொஞ்சம் செல்லோ டேப் வச்சுருந்தார். அதை எடுத்ததும்  நமக்கு அங்கே டிமாண்ட் கூடிப்போச்சு.  'எனக்கு எனக்கு'ன்னு  ஆயிரம் கைகள் நம்மைச் சுத்தி.....   ஒருவழியா  பாஸ்போர்ட் என்ட்ரி போட்டுத் தந்தாங்க.  இதுக்கே  ஒரு  மணி நேரமாச்சு. நிதானம் பிரதானம்னு  வேலை. இந்த அழகில் கம்ப்யூட்டர் டௌன்னு  ....    ரெண்டே ரெண்டு கவுன்ட்டரும், நூத்துக்கணக்கில் பயணிகளும். முக்கால்வாசியும் வெள்ளைக்காரர்கள்தான்.  சின்னப் பிள்ளைகளுக்கு  வரிசையில் நிக்க போரடிக்குது. அதுக பாட்டுக்கு அங்கே இங்கேன்னு ஓடி விளையாடுதுங்க.

ஒருவழியா இந்தப் பகுதியில் இருந்து பொட்டிகளை எடுத்துக்கும் பகுதிக்குப் போனால் அங்கேயும் குழப்பம்.  தரையில் கூட்டமாப் பொட்டிகளைப் போட்டு வச்சுருக்காங்க. நம்மதைத் தேடி எடுக்க இன்னும் ஒரு அரைமணி நேரம் ஆச்சு.
வெளியே வர்றோம். நம்மவர் பெயர் எழுதுன அட்டையைத் தூக்கிப் பிடித்தபடி ஒரு  இளைஞன். என்ன ஒரு பதினாறு பதினேழு  இருக்கலாம்.
நம்ம பெட்டிகளை வாங்கிக்கிட்ட, சுமன், சூர்யா என்ற  ரெண்டுபேருடன் கார்பார்க்  போனோம். சாமான்களை வண்டியில் போட்டுட்டுக் கிளம்பியாச்சு.  சூர்யா லாமாதான் ட்ரைவர்.  சுமன்?  லெமன் ட்ரீ ஹொட்டேல் பணியாள்.
வலையில் தேடிப்பிடிச்ச இடம்தான் இந்த லெமன் ட்ரீ ஹொட்டேல். மெயில் மூலம்தான் இதுவரை தொடர்பு.  உரிமையாளர் ப்ரகாஷ்  நமக்குத் தேவையான தகவல்களை அனுப்பிக்கிட்டே இருந்தார். அவரிடமே நம்ம தேவைகளைச் சொல்லி ஒரு உள்நாட்டு பயணத்திட்டம் தயாரிக்கச் சொல்லி இருந்தோம். நேரில் போய் அதிலுள்ள சாதக பாதகங்களைப் பேசினால் ஆச்சு.

த்ரிபுவனில் இருந்து  தமில் என்ற பகுதிக்குப் போறோம். இங்கேதான்  எலுமிச்சைமரம் இருக்கு:-) சுமார் அரைமணி நேரப் பயணம். அது ட்ராஃபிக் இல்லாத நேரமாம். வழியெல்லாம்  நடைபாதைக் கடைகளும்,  நெருக்கமா  கடைகள் இருக்கும் வீதிகளும்,  கூட்டமுமா இருக்கு.  நேப்பாளமொழிக்கு எழுத்துரு ஹிந்தி எழுத்துகள்தான். அதனால்  கடைப்பெயர்களை வாசிச்சுக்கிட்டுப் போனேன்.  பழக்கம் விட்டுப்போனதால் தத்தித்தத்தித்தான் படிக்க முடியுது :-(  ஒரு சின்ன சந்து போலிருந்த இடத்துக்குள் கார் நுழைஞ்சது.   தரையில்  பாவியிருந்த  கற்கள், டைல்ஸ்,  எல்லாம் உடைஞ்சு போய்  இருக்கு இந்த சந்தில். உண்மையில் இது சந்தே இல்லை. தெரு! பெரிய வண்டிகள் எல்லாம் இதுக்குள்ளே வந்து போகுது. அதான் கல் பதிச்ச  பாதை இந்த அழகில் கிடக்கு போல...



ஒரு ஏழெட்டு கட்டடம் தள்ளிப்போனா  லெமன்ட்ரீ வந்துருது.  இறங்கி உள்ளே போறோம்.  பெயரை நியாயப்படுத்த முற்றத்தில் சில எலுமிச்சை மரங்கள்(!) தொட்டிகளில்:-)  கைகூப்பி வணக்கம் சொல்லி வரவேற்றார் வரவேற்பாளர் இந்த்ரா.
நமக்கான அறை ரெண்டாவது மாடியில் ஒழுங்குபடுத்தி வச்சுருந்தாங்க. லிஃப்ட் கிடையாது. நான் நினைக்கிறேன், என் உடல் இளைக்க ஆரம்பிச்சது அப்போ இருந்துதான். தினம் இருவது கிராம் என்ற கணக்கு:-)  ரூம் வித் வ்யூ வேணுமுன்னு என் வழக்கப்படிக் கேட்டு வச்சேன்.  எதிரில் இன்னொரு புது ஹொட்டேல் வருது. அதோட தோட்ட வேலைகள் , அலங்காரங்கள் நடந்துக்கிட்டு இருந்துச்சு.  நாலைஞ்சுபேர் சேர்ந்து  ஃபவுன்டெய்ன், சின்னதா  புத்த ஸ்தூபா  மாடல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.

நம்ம  ஹொட்டேலில் மொத்தம்  பனிரெண்டு அறைகள்தான். ஒரு பழைய வீட்டை வாங்கி அதை இப்படி மாத்தி அமைச்சுருக்காங்க. வெளிமுற்றத்தின் ஒருபக்கம் சமையலறை.  முற்றத்தின் எதிர்ப்பக்கம் ரெண்டு மூணு மேஜை போட்டு  அவுட் டோர் ஸிட்டிங் & டைனிங்.  முற்றம் கடந்து உள்ளே காலடி வச்சால் சின்னதா ஒரு  வரவேற்புப் பகுதி.  தொட்டடுத்து ஒரு ஆஃபீஸ் ரூம். இந்தாண்டை  ரெண்டு சோஃபா போட்டு வச்சுருக்காங்க.  இதையடுத்து  ஹாலில் பாக்கி இருக்கும்   இடத்தில் நடக்க இடம் விட்டுக் கடைசியில் மாடிப்படிகள். இந்தாண்டை ஒரு வரிசையில் அஞ்சு மேஜைகள். ப்ரொப்பர் டைனிங் ஏரியா, கேட்டோ!

  'ஏஸி வேலை செய்யலை, அறை ரொம்ப சூடா இருக்கே'ன்னு வரவேற்பில்  சொன்னதுக்கு ஒரு சின்ன ஃபேன் எடுத்துக்கிட்டு வந்த இந்த்ரா, அன்றைக்கு எதோ மெயின்டனன்ஸ் வேலைன்னு  காலையில் இருந்து எலக்ட்ரிசிடி இல்லை.  இன்னும்  அரைமணியில்  பவர் வந்துருமுன்னு சொல்லி பேக்கப் பவர்க்கு  இருக்கும்  ப்ளக் பாய்ன்டில் ஃபேனைப் பொருத்திட்டு, 'ப்ரகாஷ் நாம் வந்துட்டோமான்னு கேட்டாராம். இன்னும் பத்து நிமிட்லே வந்துருவார். வந்தவுடன்  ஃபோன் பண்ணறேன்'னு சொல்லிட்டுப் போனாங்க.   ஃபோன் வந்துச்சு.

நாங்க ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கீழே போனோம். அதுவரை  இமெயிலில் சந்திச்ச ப்ரகாஷ் , நல்ல ஸ்மார்ட் மனிதர்.  ட்ராவல் & டூரிஸம் படிச்சவர்.  சிலவருசங்கள்  வெளியே வேலை பார்த்துட்டு, இப்போ சொந்தமா பிஸினஸ் ஆரம்பிச்சுருக்கார். நமக்கான பயணத்திட்டங்களை தயாரிச்சு வச்சதைச் சரி பார்த்தோம். மாற்றிக்கும்படியா ஒன்னும் இல்லை.
மொதல்லே கொஞ்சம் காசை மாத்திக்கணும். இந்திய ரூபாய்களையும் கடையில் வாங்கிக்கறாங்களாம்.  நம்ம ப்ரகாஷிடமே  கொஞ்சம் நேபாள் காசு கிடைச்சது. ஒரு யூஎஸ் டாலருக்கு 105 நேபாள் ரூபாய்,  ஒரு இந்திய ரூபாய்க்கு  ஒன்னரை  நேபாள் ரூபாய்னு ஒரு கணக்கு.  இந்தியாக் காசுன்னா, 500, 1000 மாத்திரம் புழக்கம். (இப்ப அங்கே என்ன செய்வாங்களோ? ) 

இன்றைக்குப் பகல் சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டோமேன்னு....   வெளியில் எங்கே ரெஸ்ட்டாரண்ட் இருக்குன்னு நம்மவர் கேட்க,  ரெண்டு தெரு தள்ளி  ஏராளமானது இருக்குன்னு சொல்லி,   வழிகாட்ட இன்னொரு பையனை நம்மோடு அனுப்பினார்.
நம்ம சந்துக்குப் பேரலலா   இன்னொரு சந்துக்குள் நுழைஞ்சோம்.  இனி நேரப்போக வேண்டியதுதான்.  நாங்க போய்ப் பார்த்துக்கறோமுன்னு  பையர் போலாராமைத் திருப்பி அனுப்பிட்டோம்.
 தமில் (  தமெல்னு எழுதினாலும் பேசும்போது தமில்னுதான் சொல்றாங்க!)  ஏரியா டூரிஸ்ட்களால் நிரம்பிக் கிடக்கு! ஏகப்பட்டக் கலைப்பொருட்கள் கடைகள்,  பெரிய பெரிய ஷோரூம்களிலும், அதே சாமான்கள் நடைபாதைக் கடைகளிலுமா........
காசு மாத்திக்க ஏராளமான கடைகள்! தங்கும் விடுதிகள்,  மலை ஏத்தம்,  சின்ன விமானத்தில் சுத்திக் காமிக்கிறது, ராஃப்டிங் இப்படி ......  இன்னொரு  மணி சேஞ்சரிடம்  இன்னும் கொஞ்சம் காசு மாத்திக்கிட்டோம். ஒரு வாரம் தங்கப்போறோம். வேண்டித்தானே இருக்கு! இதுலே பாருங்க  யூஎஸ் டாலர், யூரோ,அஸ்ட்ராலியா, சிங்கப்பூர் கரன்ஸி எல்லாம் எடுத்துக்கறாங்க. நியூஸி டாலர் எடுக்கமாட்டாங்களாம். இத்தனைக்கும் நியூஸிக்கும் நேபாளுக்கும் ரொம்பவே  சம்பந்தம் இருக்கு.  எங்க எட்மண்ட் ஹிலரிக்கும் டென்சிங் நோர்கேக்குமில்லாத  உறவா?  ஆனா....  காசுன்னு வந்துட்டா... சொந்தமாவது பந்தமாவது...................
ரெண்டுங்கெட்டான் நேரமா இருக்கே...  ஸ்நாக்ஸ் போதும். முதல்லே எனக்கொரு காஃபி.....   ஒரே தலை வலி....  ஒரு இடத்தில் ஆனியன் ரிங்ஸ், பொட்டேடோ சிப்ஸ்,  காஃபி கிடைச்சது.  கையிலே காசு... வாயிலே தோசை. வெள்ளைக்காரப் பயணிகளுக்கான மெனுதான்  அநேகமா எல்லா இடங்களிலும்.... இப்படிச் சொல்றேனே தவிர...  இந்த  உருளைக்கிழங்குதான் என்னைக் காப்பாத்தியது  என்பது உண்மை :-)
நம்ம சந்துக்குத் திரும்பிவரும்போது, சந்தின் ஆரம்பத்தில் ஒரு பக்கம் குழாயடி!  பெரிய தொட்டி மாதிரி ஒரு டிஸைன். படிகளில் இறங்கிப்போகணும்.  குழாயைக் கூட ஒரு கலை அழகோடுதான் அமைச்சுருக்காங்க. குழாயைத் திறக்கவோ மூடவோ  ஒருவிதமான வசதியும் இல்லை. தண்ணி பாட்டுக்கு  மெலிஸா வந்துக்கிட்டே இருக்கு!
அந்தப் படிகளில் ரெண்டு இளைஞர்கள்  உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்க. கல்லூரிப் பையர்கள், ஓஜ்   அண்ட் ராபின் என்ற  பெயர்கள். படிச்சு முடிச்சதும் வேலை தேடி வெளிநாட்டுக்குத்தான் போகணுமாம்....        உள்ளூரில் வேலை கிடைப்பதில்லைன்னு....  ப்ச்...
ஓஜ் போட்டுருந்த  டிஷர்ட்டில் புள்ளையார்! எங்கே வாங்கினார்னு கேட்டதுக்கு இதே தமில் ஏரியாக் கடைகளில்தான்னார். தேடிப்பார்க்கணும்.


11 comments:

said...

அருமை.
நிலநடுக்கத்தால நிறைய சேதம் போலிருக்கோ இல்லே ஆரம்பத்துலேர்ந்தே இவ்ளோ தானோ ரோடுகளெல்லாம் ?

said...

போகணும்னு ப்ளான் இருக்கு. அம்ருதம்மா பரிட்சை முடியட்டும். கிளைமேட் எப்படி?

said...

இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் அநேக ஒற்றுமைகளோ

said...

நெருக்கமான தெருக்கள், உடைந்த டைல்ஸ் என்று நம்மூரைப் பார்ப்பது போலவே....

said...

வாங்க விஸ்வநாத்.

சேதம் அதிகம்தான். ஒன்பதாயிரம் உயிர்கள் போயிச்சு :-( சாலைகள் பராமரிப்பு அவ்வளவாப் போதாதுதான்..... பொருளாதாரத்தில் கஷ்டப்படும் நாடு. .... ....

said...

வாங்க புதுகைத் தென்றல்.

வட இந்தியாவின் காலநிலைதான். டிசம்பர் ஜனவரி குளிர் அதிகம்.

விரைவில் பயணம் அமைய வாழ்த்துக்கின்றேன்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அண்டைநாடுதானே! ஒற்றுமை இல்லாமலா இருக்கும்? :-) சென்னையிலேயே குட்டி நேபாளம் இருக்கே! எந்த ரெஸ்ட்டாரண்ட் போனாலும் நேபாளி பணியாளர்கள் இருப்பதைக் கவனியுங்கள்!

said...

வாங்க ஸ்ரீராம்.

ஆஹா...அப்ப ஹோம்ஸிக்கே வராது :-)

said...

நீங்க நேபாளம் போனாலும் Tamil ஒங்கள விடமாட்டேங்குதே. :)

நேபாளமொழியும் இந்தியைப் போலவே தேவநாகரி எழுத்துருவைத்தான் பயன்படுத்துது. இரண்டு மொழிகளுக்கும் எழுத்துரு கிடையாதுன்னு நினைக்கிறேன்.

நேபாள போட்டோக்களையெல்லாம் பாக்குறப்போ போக ஆசையா இருக்கு. பாப்போம். எப்போக் கொடுத்து வைக்குதுன்னு.

நேபாளத்துல ரொட்டி தால் எல்லாம் கிடைக்காதா?

said...

தொடர்கிறேன்.. இப்போதான் போய் இறங்கியிருக்கீங்க... இனி பசுபதி'நாத் லேருந்து எல்லாக் கோவில்களையும் மீண்டும் உங்கள் தொடர் வாயிலாக தரிசனம் பண்ணலாம்.

said...

தமெல்.... நல்ல பெயர்....


பையரின் சட்டையில் இருக்கும் பிள்ளையார் வாவ்....

தொடர்கிறேன்.