Monday, January 16, 2017

ஆஞ்சிக்கும் அலகு! ( நேபாள் பயணப் பதிவு 2 )

பெருமாள்  தரிசனமும் ஆச்சு,   ப்ரஸாதம் என்ற பெயரில் ராச்சாப்பாடும் ஆச்சு. இனி முஸ்தாஃபாவுக்குப் போகலாமுன்னு கோவிலைவிட்டு வெளியில் வந்தால் கிச்சனர் சாலை சந்திப்பில் ஒரு பெரிய ஊர்வலம் ஜிலுஜிலுன்னு விளக்குகளுடன் நகருது.  ஊர்வலமா இருந்தாலும் சாலை விதிகளை மீறக்கூடாது என்ற மக்கள்.   போறவர்ற வண்டிகளுக்கு இடைஞ்சல் இல்லாம இடதுபக்க ஓரமா  வரிசை கலையாமல் போறாங்க. 'மாப் மென்ட்டாலிட்டி'ன்னு  சொல்லிக்கிட்டு அட்டகாசம் செய்யலை!





 சிகப்பு விளக்கு வந்தவுடன்  பாதி ஊர்வலம்  செராங்கூன் சாலை கடந்து அந்தாண்டை, மீதி இந்தாண்டை. என்ன ஏதுன்னு விசாரிச்சேன். மங்கி காட் பொறந்தநாள்!   ஓ மை காட்!!!  வீரதீர பராக்ரமன்!  இந்த வீரத்தைப் போற்றும் விதமா  முதுகுலே அலகு குத்திக்கிட்டு சாமி இருக்கும் தேரை (!) இழுத்துக்கிட்டுப் போறார் பக்தர்!





சீனர்களின்  பாரம்பரியக் கொண்டாட்டத்தில் இருக்கும் ஏகப்பட்ட பண்டிகைகளில் இதுவும் ஒன்னு! சீன ட்ராகன் ஊர்வலத்தில் போகுது!  லயன் டான்ஸ் எல்லாம்  அங்கங்கே  நின்னு ஆடிக்கிட்டு  ஏற்கெனவே போயிருச்சாம்.  அடடா....  மிஸ் பண்ணிட்டேனே....  நடந்துபோகும்  சிங்கங்களைப் பார்த்தேன்....
பழக்கூடைக் காவடிகளுடன் பெண்பக்தர்கள்! முட்டாய் எல்லாம் கொடுத்துக்கிட்டே போனாங்க.

சீன ஆஞ்சி, நினைத்தால் எழுபத்தியிரண்டு  வகைத் தோற்றம் எடுக்கக்கூடியவர்!  பலவான்!  மலையையே பெயர்த்து எடுத்துக்கிட்டுப் பறக்கும் ஆற்றல் உடையவர்!  ஒரே தாவு தாவினால் அம்பத்திநாலாயிரம் கிமீ  போயிருவார்! (நாஞ்சொல்லலை.... நமக்கும் சீனங்களுக்கும் ஏகப்பட்ட  ஒத்துமை இருக்குன்னு!)

ஊர்வலம் நம்மைக் கடந்தபின் கிளம்பலாமுன்னு பார்த்தால்.... எங்கே.... அதுபாட்டுக்கு 'அனுமார் வால்' போல  நீளமா வந்துக்கிட்டே இருக்கே....  பார்த்தவரை  போதுமுன்னு நம்மவர் அவசரப்படுத்தியதால்   முஸ்தாஃபா சென்ட்டர் நகைக்கடை பிரிவுக்குப் போனோம். மகள் கேட்ட மாதிரி ஒன்னும் சரியா அமையலை.  இந்தியாவில் தேடலாம். அங்கேயும் சரியாகலைன்னா... திரும்ப இதே வழியாத்தானே ஊர் திரும்பணும். அப்பப் பார்த்துக்கலாமுன்னு முடிவு.
ஃபேரர்பார்க் ஸ்டேஷனுக்கு வந்து ரயில் பிடிச்சு  ரெண்டு இடத்தில் மாறி ஏர்ப்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தோம். மணி பனிரெண்டாகப்போகுது.  அம்பாஸிடர் லவுஞ்சுக்குப்போய் அறைச்சாவியை வாங்கிக்கிட்டுப் போய் அலார்ம் கால் சொல்லிட்டு படுத்தாச்சு. காலை ஆறுமணிக்கு எழுந்தால் போதும்.

இந்த பாடி க்ளாக் இருக்கே...  அது தன் வழக்கத்தை சட்னு மாத்திக்காது, பாருங்க. ராத்திரி மூணரைக்கு விழிப்பு வந்துருச்சு. எங்கூரு  ஏழரை அப்போ! வைஃபை இருக்கேன்னு கொஞ்ச நேரம் வலை மேயல். சின்னதா ஒரு குட்டித்தூக்கம்..... இப்படி நேரம் போக்கிட்டு ஆறுமணிக்கு  எழுந்து  குளிச்சு ரெடியாகி  ஏழு மணி ஆகுமுன் அறையைக் காலி செஞ்சுட்டு, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் லவுஞ்சுக்குப் போனோம். கோபாலின் உபயத்தால் இதெல்லாம் எனக்கும் லபிக்குது :-)
காலை ப்ரேக்ஃபாஸ்ட்டா உப்புமா, வடை &  காஃபி கிடைச்சது. கொஞ்சநேரம்  கீழே போய் ட்யூட்டிஃப்ரீ கடைகளை வேடிக்கை பார்த்துட்டு எட்டு மணி  ஆகும்போது நம்ம கேட்டுக்குப் போயிட்டோம்.



கூட்டமான கூட்டம். மூணு வெவ்வேற ஃப்ளைட்டுக்கு  ஒரே கேட் வச்சுருக்காங்க. சரியா ஒன்பதுக்கு நம்ம  ஃப்ளைட் கிளம்புச்சு. ஸில்க் ஏர்!  முதல்முறையா இதுலே போறேன்.  காத்மாண்டு  போறோம். ஆமாம்.... நேப்பாளத்துலே என்ன ஆடுது?  இப்ப என்னத்துக்கு இங்கே?
ஒரு ஆறேழு வருஷமா, ஒவ்வொருமுறை இந்தியா போகும்போதும்,  இந்த 108 திவ்யதேசக்கோவில்களைத் தேடிப்போய் தரிசனம் பண்ணிக்கிட்டு வர்றோமில்லையா? போனோம் கும்பிட்டோமுன்னு இருக்காம நம்ம துளசிதளத்துலேயும் விலாவரியா கோவில் விஸிட்களை எழுதிக்கிட்டு இருக்கேன்னுதான் உங்களுக்குத் தெரியுமே!

நண்பர்களும் இன்னும் எத்தனை கோவில் பாக்கி? எத்தனை பார்த்தாச்சுன்னு அப்பப்பக் கேட்டுக்கிட்டு இருந்தாங்க. ஆரம்பத்துலே நம்ம பயணங்களில்  அதுவா அமையும் திவ்ய தேசங்கள்னு ஆரம்பிச்சது, அப்புறம்  காஞ்சிபுரம், சீர்காழி, கேரளான்னு பகுதி பகுதியாப் போய் அங்கிருக்கும் திவ்யதேசக் கோவில்கள் தரிசனமுன்னு மாறி இருந்தது.

நூத்தியெட்டுன்னு சொல்றோமே தவிர கடைசி ரெண்டு இந்த மண்ணுலகில் இல்லை. மேலோகத்தில்  இருக்கு. அங்கே நாம் போனபிறகுதான் அது நமக்குன்னு சொல்றாங்க. நாந்தான் இடும்பி ஆச்சே. எனக்கொரு தனி வழி இருக்குல்லையா?  எப்ப நூத்தியெட்டு தரிசிக்கலாமுன்னு வீட்டை விட்டு  அடியெடுத்து வைக்கிறோமோ... அப்பவே  நம்ம பெருமாள் அந்த கடைசி ரெண்டை, போனஸா முதல்லேயே கொடுத்துருவார், படியில் அளக்கும்போது லாபம்னு சொல்லி அளக்கறதைப்போல :-) அதனால் மண்ணுலகில் நாம் போகும்   நூத்துயெட்டு பட்டியலில் இருக்கும் முதல் கோவில் மூணாவதுன்னு என் கணக்கு:-)

ஒருநாள் இதுவரை என்னென்ன கோவில்களை தரிசனம் செஞ்சோம், என்னென்ன போகலைன்னு கணக்கு எடுத்தப்ப, இன்னும் ஒன்பது கோவில்கள் பாக்கின்னு  தெரியவந்தது.  அதுலே ஒரண்ணம் நேப்பாள நாட்டில் இருக்கும் முக்திநாத். பாக்கி எட்டு, என்னவோ பாகம் பிரிச்சாப்லெ வட இந்தியா நாலு, தென்னிந்தியா நாலுன்னு  இருக்கே!

ஒன்னு ரெண்டு   தென்னிந்தியக் கோவில்கள்  அந்த வழியில் போயும்கூட ஜஸ்ட் மிஸ்டு:-(    இன்னொன்னு... படியேறப் பயந்துக்கிட்டுத் தள்ளிப்போட்டுக்கிட்டே வர்றது....

வட இந்தியக்கோவில்களில் ஒன்னு ரெண்டு சீஸன் அனுசரிச்சுப் போக வேண்டியவை. முக்திநாத் கோவிலும்,  குளிர் பனி ஆரம்பிக்குமுன் போய் வரணும். போக்கு வரத்து வசதிகள் அவ்வளவாகப் போறாது.

நம்ம லதானந்த் ஸார் இருக்காரே... அவர் 108 திவ்யதரிசனங்களை முடிச்சு ஒரு புத்தகம் கூட வெளியிட்டு இருக்கார்.  பிருந்தாவனம் முதல் பிரயாகை வரை என்று பெயர். அனுபவப்பட்டவரிடம் கேட்டுக்கலாமேன்னு  அவருக்கு மடல் அனுப்பி விசாரிச்சேன்.  நாம் போக வேண்டிய கோவில்களுக்கான பகுதிகளை எடுத்து அனுப்பினார். படிக்கும்போது  ஐயோ... கொஞ்சம் கஷ்டப்படுவோம் போலிருக்கேன்னு தோணுச்சு.

இன்னும் கொஞ்சம் அவரிடம் விளக்கங்கள் எல்லாம் கேட்டுக்கிட்டேன்.  கூடுதலா சில நாட்களை இதுக்குன்னு ஒதுக்கி வச்சுக்குங்க. போனோம் வந்தோமுன்னு  இருக்கமுடியாது. போறதுக்கே நம்ம அதிர்ஷ்டத்தைப் பொறுத்து  ஒரு ரெண்டு நாளோ, இல்லை  நாலைஞ்சு நாளோ கூட ஆகலாமுன்னு சொல்லி இருந்தார்.

ரொம்பச்சரி. முக்திநாத் பயணம்  அந்தக் காலத்துலே இன்னும் ஆபத்தானதாத்தான் இருந்து இருக்கணும். அதனாலேயே போனாப் போனதுதான், முக்தி கிடைச்சுருமுன்னு  இப்படிப் பெயர் வச்சுட்டாங்க போல!  நம்ம திருமங்கை ஆழ்வார் போய், பெருமாளை தரிசனம் செஞ்சு , பாசுரங்கள் பாடி  மங்களாசாஸனம் செஞ்ச கோவில்களில்  இதுவும் ஒன்னு.  இப்படி ஆழ்வார்கள்  பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்த கோவில்கள்தான்  இந்த திவ்யதேசக் கோவில்கள் என்னும் பட்டியலில் இருக்கு.  இப்படியாப் பட்ட கோவில்களில்  இங்கே முக்திநாத் மட்டும் அவர் கிளம்பி வந்தும் கடைசியில் கோவில்வரைபோக முடியாமல், சாளக்ராமம் என்னும் இடத்தில் இருந்து பெருமாளை மனக்கண்ணால் தரிசனம் செஞ்சு  பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்ய வேண்டியதாப் போயிருக்கு! ப்ச்.... பாவம்...நம்ம திருமங்கை.

முக்தி முக்தின்றாங்களே.... ஒரேடியா  போயிட்டா....   என்ற நினைப்பும் வரத்தான் செஞ்சது.  போற இடம் கடல் மட்டத்தில் இருந்து உசரம் கூடுதல். காலநிலை வேற சரி இருக்காது. நமக்கோ ஆஸ்த்மா.....  அதுபாட்டுக்கு இழுத்துக்கிட்டுக் கிடந்தால்..... பாவம் நம்மவர் என்ன ஆவார்?

பயணத்திட்டங்கள் உருவாகி வரும்போதே மனசு பலகணக்குகளைப் போட்டுக்கிட்டு இருந்தது உண்மை.  முதலில் கொஞ்சம் விலை உயர்ந்த (!) நகை நட்டுகளை பயணத்துலே பயன்படுத்த வேணாம் என்ற ஞானம் பிறந்தது. அதுக்காக மூளியாப் போகவும் முடியாதுல்லையா?  சுமாரான, மகளுக்குப் பிற்காலத்துலே பயனில்லாதவைகளாப் பார்த்து ஒன்னு ரெண்டு எடுத்துப் போட்டுக்கிட்டேன்! மறக்காமல்  சங்கும் சக்கரமும் கைகளில்  ஆச்சு :-)

லாக்கர், உயில் விவரங்களை மகளுக்குச் சொல்லியாச்சு.  செடிகொடிகளை எப்படிப் பார்த்து என்னென்ன நாளுக்கு தண்ணீர் ஊத்தணும், ரஜ்ஜுவை எப்பப்பப்போய் பார்த்துட்டு வரணும் என்றெல்லாம் சொல்லிக்கிட்டே இருந்தேன்.

இங்கே போய்வர காலநிலை நமக்கு சாதகமா இருப்பது செப்டம்பர் அக்டோபர் மாதங்கள்னு சொல்லி இருந்தாங்க. அதிலும் தீபாவளிக்கு முன்னால் போய்வரணும். நாம் தனிப்பட்ட முறையில் போறோம்.  அதனால் டூரிஸ்ட்கள் கூட்டம் அதிகம் இல்லாத காலமாகவும் இருக்கணும் என்றெல்லாம் பார்த்துப் பார்த்துத்தான் பயணத்திட்டம் போட்டுக்கிட்டு இருந்தார் நம்மவர்.

2016 ஜனவரியில்தான் ஊருக்குப் போயிருந்தோம். இப்ப செப்டம்பரிலேயே போகணுமா.... பேசாம வர்ற செப்டம்பருக்குப் போனால் என்னன்னு ஒரு யோசனை.

 "வேணாம்.  இன்னும் வயசாகிரும்."

" ஒரு வருசத்துலேயா? "

' ஒரு வருசமுன்னா ஒரு வருசம். கொஞ்சம் கையும் காலும் நல்லா (!) இருக்கும்போதே போயிட்டு வரணும் ' என்றார். அதுவும் உண்மைதான். உடல்நிலை ஓரளவு நல்லா இருக்கும்போதே பயணம் செய்வதுதான் நல்லது.
இப்ப ரெண்டு மாசத்துப் பயணத்திட்டம். முதலில் நம்ம டாக்டரைப் பார்த்து,  வழக்கமா எடுத்துக்கும் மருந்து வகைகளை  மூணு மாச ஸ்டாக் எழுதி வாங்கிக்கிட்டோம். அப்பதான்,   உயரம் அதிகமாவும், பிராணவாயு கம்மியாகவும் இருக்கும் இடத்துக்குப் போறதால் ஆஸ்த்துமாகாரிக்கு எதாவது ஆகிட்டால் என்ன செய்யறதுன்னு  அதுக்கான  விசேஷ மருந்து எடுத்துக்கணுமான்னு கேட்டார் நம்மவர்.  'அது என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டுச் சொல்றேன்'னு  சொன்னாங்க டாக்டரம்மா.  நாட்டை விட்டுக் கிளம்பும் வரை  ஒன்னுமே சொல்லலைங்கறது வேற விஷயம்....  :-(

இங்கே நியூஸியில் டாக்டருங்க அப்படி சட்னு மருந்து எழுதிக் கொடுத்துறமாட்டாங்க. கூடியவரை மருந்து தர்றதையே தவிர்ப்பாங்க. நம்மூர்போல டாக்டர் க்ளினிக் போனால் ஊசி போட்டுக்கறது என்றதெல்லாம் இங்கே இல்லை.  எங்க மாமியாருக்கு  டாக்டர்னா ஊசி போடணும். வெறும் மருந்து எழுதிக்கொடுத்தா.... நல்ல டாக்டரே இல்லைன்னு சொல்லிருவாங்க :-)

அப்புறம்... குளிருக்கான ஆடைகள், ஜாக்கெட்டுகள் பொதி தயாராச்சு.  லைஃப் ஸேவர்னு நான் பெயர் சூட்டியிருக்கும் தெர்மல் உள்ளாடைகள் கொஞ்சம் கட்டாயம் கொண்டு போகத்தான் வேணுமுன்னார் நம்மவர். அவர் கவலை அவருக்குன்னா என் கவலை எனக்கு.....   போன பயணப்பதிவே இன்னும் எழுதி முடிக்கப்படாமல் இருக்கு. இதுலே நடுவுலே ப்ரேக் போட்டால் எப்படி?  தொடரும் வரணும். ஆனால் தொடரே வேலையாக இருக்கவும் முடியாது.  வாரம் மூணுன்னு இருப்பதைக் குறைந்தபட்சம் வாரம் ஒன்னுன்னு  வெளியிடலாமேன்னு ஒரு பத்துப் பதிவுகளை எழுதி,  படங்களோடு   ட்ராஃப்ட்டில் போட்டு வச்சேன். எல்லாம்  அங்கங்கே கிடைக்கப்போகும்  நெட் கனெக்‌ஷனைப் பொறுத்துத்தான்... க்ருஷ்ணார்ப்பணம்.......

சொல்ல மறந்துட்டேனே....  காலணி?  மலை மேல் ஏற (!)  பொருத்தமான ஷூஸ் கொண்டு போகணுமாம். சரியாப் போச்சு.  என்னோட வாக்கிங் ஷூ போதாதா? தாராளம். ஆனால் இது கொஞ்சம் விலை கூடியது. சமீபத்துலே வாங்குனது. அதுக்கென்னன்னால்....   மலைப்பகுதிப் பயணம் முடிச்சதும் தூக்கிப்போட்டுட்டு வந்துடணுமாம். அது வேற கனமா ஏன் தூக்கிக்கிட்டுன்னு வாதம் பண்ணறார். கஞ்சத்தனம் எனக்கு.... மனசே வரலை.

பேசாமக் கொஞ்சம் (!) மலிவானது ஒரு ஜோடி வாங்கிக்கிட்டுப் பயன் முடிஞ்சதும் தூக்கிப் போட்டுடலாமுன்னு  இங்கே  ஒன்னு வாங்கினேன். காலுக்குப் பழகட்டும். கடிச்சு வைக்கப்போகுதுன்னு  ஒரு மாசமா வீட்டுக்குள்ளே போட்டு நடந்தேன். புதுசு அதனால் பாதகமில்லை :-)  நம்மவர்  அவருடைய ஷூவையே  கொண்டு வருவாராம்.

நேப்பாள் முடிச்சுட்டு இந்தியாவில் உள்ளூர் விமானங்களில் போகும்போது,  எடைப்பிரச்சனை உண்டு என்பதால்  சின்னப்பொட்டிகள் மட்டும் கொண்டு போகணும் என்ற முடிவு. அதுலேயும்  கொஞ்சநஞ்ச எடை அதிகமானால்  நிறைய பணம் கட்டணுமாமே.... அதுக்காக ஒரு அஞ்சு கிலோ கூடுதல் எடைக்கான காசை இப்பவே கட்டிட்டால்  மலிவு (?) என்று பார்த்து அதே போல முழுப்பயணத்துக்கும் இந்தியாவில் உள்ளூர் விமானங்களுக்கு டிக்கெட் புக் பண்ணி பணமும் கட்டினார்.

நேப்பாளத்துக்குத் தனி ஏற்பாடு. இதோ இவ்வளவும் சொல்லி முடிக்கறதுக்குள்ளே விமானம் தரை இறங்கற நேரம் வந்துருக்கு.  தூரத்தே இமயமலைத் தொடர்கள்.  என்னென்ன சிகரங்கள் தெரியுதுன்னு  விமானி சொல்வார்னு எதிர்பார்த்தேன்.  ஊஹூம்.... கப்சுப்.  விமானப்பயணங்கள் அபூர்வமா இருந்த காலங்களில்  கண்ணில் தெரியும் காட்சிகளை பைலட் விவரிப்பதைப் பார்த்துருக்கேன். இப்போ... விமானப்பயணம்  பஸ்பயணம் போலவும், விமான நிலையங்கள் பஸ் ஸ்டாண்டு போலவும் ஆகிக்கிடப்பதால்...  யாரும் எதையும் சட்டையே செய்யறதில்லை.....
ஆனாலும் கண்ணில்பட்ட சிகரங்களை விடாமல் க்ளிக்கினேன்.  அப்புறம்தான் தெரியவந்தது  எவெரெஸ்ட் நம்ம கெமெராவில் விழுந்துருக்குன்னு!  அடுத்த பத்தாவது நிமிட்டில் பொட்டிபொட்டியா வீடுகள். மலைச்சரிவில் இருக்கோ?
அப்புறம்   மேலே இருந்து பார்க்கும்போது  சரியான ரோடெல்லாம் இல்லாமல் வீடுகளோ வீடுகளைக் கொட்டி வச்சுருக்காங்க..  எல்லாம் அநேகமா நாலுமாடிக் கட்டிடங்கள்.  ஊருக்கு நடுவில் ஓடும் ஆறுடன் காத்மாண்டு நகரம் !


சிங்கையில் இருந்து அஞ்சேகால் மணி நேரப்பயணம் இது.

தொடரும்..........:-)


22 comments:

said...

துளசி மேடம்... 2008ல நானும் ஹஸ்பண்டும் முக்துநாத் யாத்திரை சென்றோம். தெரிந்திருந்தால் அந்த அனுபவத்தை உங்களுக்கு அனுப்பியிருப்பேன். உங்கள் பயணத்தைப் படிக்க ஆவலோடு இருக்கிறேன். முடிந்தால் உங்கள் மெயில் பகிரவும்.

said...

சிங்கையின் ஒழுங்கும் மக்களின் பொறுப்புணர்வும் மகிழ்ச்சியளித்தன

said...

உங்களோட முன்னேற்பாடுகளைப் படிச்சா, தலை சுத்துது, பயமா இருக்குது. இருந்தாலும் பெரியவாளோட போறது அந்த பெருமாள் மகாலக்ஷ்மி தாயாரோடவே போறது போல. தொடர்ந்து வருகிறேன்.

said...

இந்த மங்கிகாட் வெச்சு ஒரு சீனப்படம் வந்தது. அவர் எதோ வம்பு பண்றாரு. புத்தர் அவரோட சேட்டைகளைக் கொறச்சு நல்வழிப்படுத்துறாரு. நீங்களும் இதே மாதிரி கதை எழுதியிருந்தீங்க.

அந்த சிவப்பு மீன் ரொம்ப அழகு.

திருமங்கை ஆழ்வாருக்கு முக்திநாத் கிடைக்காத மாதிரி பாம்பன் சுவாமிகளுக்கு பழனிக்கு உத்திரவாதம் ஆகல. காரணம் அவர் சொன்ன சின்ன பொய். அவங்களுக்கே அப்படின்னா.. நமக்கெல்லாம் இத்தனை கோயில் பாக்கக் கிடைச்சது கடவுளோட பெருங்கருணைதான் காரணம்.

பிரேக்பாஸ்ட்ல உப்புமா “எக்கச்சக்கமா” இருக்கே. சாப்பிட்டு முடிக்கவே கஷ்டப்பட்டிருப்பீங்களே :))))

Ever rest எடுக்காமல் எவரெஸ்ட் பார்த்த எங்கள் டீச்சர் வாழ்க!

said...

மங்கி காட் பொறந்தநாள் ...சூப்பர்

said...

வயசு இருக்கும் போதே பயணங்கள் இருக்க வேண்டும் என்பதில் மாறுபடுகிறேன் என் பெரிய அண்ணா வயசு 84 இப்போதுதான் ஊர் ஊராகப் பயணிக்கிறார் அவரும் நேபாளத்துக்குச் செல்வதாகக் கூறி இருந்தார் என்ன அவர் சென்று வந்த இடங்கள் பற்றிக் கோர்வையாக சொல்லத் தெரியாதவர்

said...

பிரம்மாண்டங்களை ரசித்தேன்.

said...

கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயோன் மருவிய கோயில்
சென்று வணங்க குடும்பமும் வசதியும் இடம் கொடுக்க வேண்டுமே.என் பக்கத்து வீட்டு பாட்டி தனது 85 வயதில் முக்தினாத் போய்வந்தார் இன்றும் 95 வயதில் திடமாக இருக்கிரார் மனம்தான் காரணம்
நீங்களும் கோபால் ஸாரும் நூறு வயதிலும் இது போல பெருமாளை சேவித்துக்கொண்டு
வாழ முக்திநாதனை வேண்டுகிரேன்

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எப்படி மெயில் ஐடி அனுப்ப? நீங்க உங்க ஐடியை பின்னூட்டமா அனுப்புங்க. அதை வெளியிட மாட்டேன். அதன்பின் அதில் தொடர்பு கொள்ளலாம். உங்களனுபவம் வாசிக்க எனக்கும் ஆர்வம்தான்!

said...

வாங்க விஸ்வநாத்.

சூஷிச்சால் துக்கமில்லை கேட்டோ! பயணம் போய் திரும்ப வரணும், பதிவு எழுதணும் என்ற கடமைகள் இருக்கும்போது.... கவனமில்லாமல் பயணம் போகலாமோ?

said...

எத்தனை முன்னேற்பாடுகள்! தலை சுற்ற வைக்கும் முன் யோஜனை. அனுபவம் கை கொடுக்கிறது. முக்திநாத் பற்றி கேள்விப்பட்டதில்லை.கைலாஷ் போலவா?

said...

வாங்க ஜிரா.

இப்ப ஒரு ஐநூறு வருசத்துக்கு முன்னால்தான் ஆஞ்சியை ரிலீஸ் பண்ணி இருக்காராம் புத்தர்!

கடவுளின் கருணைக்கு எல்லை ஏது? ஏதோ பெரியவங்க பண்ண புண்ணியத்துலே கொஞ்சூண்டு நம்மமேலே ஒட்டிக்கிட்டு இருக்கோ என்னவோ!

வடை ரெண்டு என்பதால் உப்புமா குறைந்த அளவில். கணக்கு சரியாச்சோ :-)

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

வருகைக்கு நன்றி!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆரோக்கியமான உடல் என்றால் வயது ஒரு பிரச்சனை இல்லை போல! எல்லாம் அவரவர் கொடுப்பினை!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க ஸ்ரீநிவாசன்.

பாட்டியம்மா கொடுத்து வைத்தவர். நல்லா இருக்கணும்! எங்கள் வணக்கங்களை அவருக்குத் தெரியப்படுத்துங்கள்.

நன்றிகள் !

said...

வாங்க ஸ்ரீராம்.

கைலாயம்.... ஹைய்யோ! பெரிய விஷயம். அங்கே போய்வர ஹெல்த் செக்கப் எல்லாம் உண்டு. என்னை அன்ஃபிட்ன்னு தள்ளிருவாங்க.

இந்த முக்திநாத், அந்த 108 திவ்யதேசக் கோவில்களில் ஒன்று. கொஞ்சம் மெனெக்கெட வேணும். அவ்ளோதான். பக்கத்து நாடு என்பதால் இந்தியாவில் இருந்து போகும் பயணிகளுக்குப் பிரச்சனை இல்லை.

said...

நீங்கள் படத்தில் காண்பித்திருப்பது மச்சப்புச்'ரே? (மீனின் வால் போல் இருக்கும் மலைச் சிகரம்). சைடுல பார்த்தா வால் பிளந்ததுபோல் தெரியும். இதுதான் போக்ரா (நேபாள்) அருகில் இருக்கும் மலைச்சிகரம். அதைப் பார்த்த உடனே எனக்கு 2008ல் போன பயணம் நினைவுக்கு வந்துவிட்டது (என் ஹஸ்பண்டோட)

said...

"ஆதலினால் பயணம் செய்வீர்' என்ற செப்டம்பர் பதிவில் சரியாகக் கணித்து எழுதியிருந்தேன். ஆனால் ரெகக்னைஸே பண்ணலை நீங்கள்.

திருப்பிரிதியா அல்லது சாள்க்ராம்மா? மலைநாட்டுத் திருப்பதி கடினம் என்று நினைக்கமுடியவில்லை

9/18/2016 4:04 PM

said...

@ நெல்லைத் தமிழன்.

ஆஹா.... தகவலுக்கு நன்றி. இந்தப் படம் சிங்கையில் இருந்து காத்மாண்டு போகும் வழியில் எடுத்தது.

தனிமடல் அனுப்பி இருக்கேன். பாருங்கள்.

said...

@நெல்லைத் தமிழன்.

ஆஹா... அந்தப் பதிவா? கிளம்புவதற்கு முன் போட்ட பதிவு. அப்புறம்.... பதில் போட நேரமே வாய்க்கலை.

எல்லாம் கிடைக்கும் இணையத்தொடர்பைப் பொறுத்துத்தான்.....

இதைப்போல பல பதிவுகள் பயணத்தில் இருந்த காரணத்தால் பதிலே போடாமல் விடப்பட்டிருக்கின்றன :-(

said...

நேபாளம் பயணம் குறித்து தெரிந்து கொள்ள தொடர்கிறேன். பயணத்திற்கு முன்னர் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது நினைவில்....

தொடர்கிறேன்.