Monday, January 23, 2017

போவது உறுதி.... வழிதான் வேற ! ( நேபாள் பயணப்பதிவு 5 )

பட்டர் கை காட்டுன வழியிலே போனால்... ஒரு  கோவில்கட்டிடத்தின் மொட்டை மாடியில் போய்ச் சேர்வோம்.  கீழே நதி ஓடுது. எதிர்க்கரையில் ஆரத்திக்கான ஏற்பாடுகள் நடக்குது!  ஆஹா... நாம்தான் கோவிலுக்குள் ஆர்த்தின்னு தப்பாப் புரிஞ்சுக்கிட்டோம்..... ஹரித்வார், காசியில் பார்த்தமாதிரி   இந்த பாக்மதி நதிக்கு (Bagmati) எடுக்கும் ஆரத்தி போல!

காத்மாண்டுவின் கங்கை இது!  பித்தளை அடுக்கு விளக்குகளை தயாராக்கி வச்சுருக்காங்க. ஆத்தங்கரைன்னு நல்லா சிமெண்ட் போட்ட இடம்தான்.  ஒரு ஏழெட்டு மீட்டர் அகலமா இருக்கு. அதுக்கு அடுத்தாப்லே சின்னச்சின்ன  சந்நிதிகள் மாதிரி வரிசையா இருக்கு. உள்ளே என்ன சாமிகளோ? சிவனாகத்தான் இருக்கணும். சந்நிதிகளுக்கிடையில் இருக்குமிடத்தில்  திண்ணைபோல ஒரு அமைப்பு. எல்லாத்துக்கும் பின்னால் சின்னக்  குன்றுபோல் உசரமா ஒன்னு நீண்டு போகுது ஆற்றின் நீளத்தையொட்டியே....  அதுலேதான் அங்கொன்னு இங்கொன்னுன்னு விளக்குகள். மேலே எதோ தோட்டம் இருக்கோ என்னவோ?
கொஞ்சம் இருட்டா வேற இருக்கு. எதிர்க்கரையில் நடப்பதை சிரமப்பட்டுக் கவனிக்கவேண்டி இருக்கே....திண்ணைப்பகுதியிலெல்லாம் மக்கள் கூட்டமா அடர்த்தியா உக்கார்ந்துருக்காங்க.  மக்கள் நடமாட்டமும் அதிகம். அந்தப்பக்கத்தில் இருந்து ஆற்றில் இறங்க படிகள் மூணு அடுக்கில் இருக்கு. படிகள் ஒவ்வொன்னும் உயரம் கூடுதல். இறங்கி ஏறினால் கால் முட்டி காலி எனக்கு.....

மொட்டைமாடியின் கைப்பிடிச்சுவரின் இடது  பக்கம் ஒரு ஓரமா இடம் பிடிச்சு நின்னுக்கிட்டு இருக்கோம். அங்கே இருந்து இடதுபக்கம் கீழே போகும் படிகள் தெரியுது. ஆனால் படிகளுக்கான வாசலுக்கு எந்தப்பக்கம் போகணுமுன்னு தெரியலை.....    வரவர மக்கள் கூட்டம் நம்மை நெருக்கித் தள்ளுது.  நாங்க மாடியின் மூலைக்குத் தள்ளப்பட்டிருந்தோம்.     நம்மவர்தான் எனக்குப் பாதுகாப்பு வளையமா இருந்தார்.

 வெளியில்தானே இதெல்லாம் நடக்குது. இங்கே  படம் எடுக்கலாமா இல்லே கூடாதான்னு எனக்கொரு யோசனை.  கூட்டத்துலே இருக்கும் மக்கள் செல்ஃபோனில் படங்களும் வீடியோக்களுமா எடுத்துத் தள்ளிக்கிட்டு இருக்காங்க.  நம்மவரும் அவருடைய செல்லை வெளியில் எடுத்து அப்பப்ப ஒன்னுன்னு க்ளிக்க ஆரம்பிச்சார். முக்கால் இருட்டுலே என்ன தெரியுதோ அது............

எனக்குப் பக்கத்துலே இருந்தவர்களை முண்டியடிச்சுக்கிட்டுச் சுவர் பக்கமா வந்த சிலர், சில்லறைக் காசுகளை கீழே வீசி எறியறாங்க. என்ன நடக்குதுன்னு குனிஞ்சு பார்க்கிறேன்.....  ஆஹா..... எனக்கு  ரொம்பப் பிடித்த  விஷயம் கீழே நடந்துக்கிட்டு இருக்கு!!!!
ஆற்றின் இந்தாண்டைக்  கரை இது. இங்கே.... கும்பல்கும்பலா மனிதர்கள் தண்ணீராண்டை. படிக்கட்டுகளுக்கு இடைவெளி விட்டுட்டு அங்கங்கே மேடை அமைப்பு. இறந்தவர்களை  எரிக்கும் இடம். ஸ்மசான் காட்!!  ஆர்யா காட்ன்னு பெயராம்.    இனி என் கவனம் எங்கே போகுமுன்னு தனியாச் சொல்லணுமா?
படிக்கட்டுகளுக்கிடையில் கடைசி மூணு நாலு படிகளில் சரிவா ஒரு  கல் நாலாவது படிகளில் ஆரம்பிச்சுத் தண்ணீர்வரை போகுது.  இறந்தவர்களைத் தூக்கிட்டு வந்து முதலில்  நதியில் இறங்கி  அவுங்களை மூணுமுறை தண்ணீரில் முக்கி எடுத்துட்டு அந்த சரிவான கல்லில்  கால்கள் தண்ணீரில் இருக்கும்படி   படுக்க வைக்கிறாங்க.  மேல்படியில்,    தலைமாட்டில் ஒரு சின்ன சிவலிங்கம் அமைப்பு. அதுக்குப்பின்னால் ஒரு பள்ளம் இருக்கு போல!  அதுக்குள்  கைவிட்டு தண்ணீர் கோரி எடுத்து  இறந்தவர்கள்  தலையில்  ஊத்தறாங்க. இதை ஒரு நாலைஞ்சு பேர்  செய்யறாங்க. ரொம்ப நெருங்கிய சொந்தமா இருக்கணும். பிள்ளைகளாக இருக்கலாம்.

அப்புறம்  மேடைக்குப்பக்கம் ஒரு ஸ்ட்ரெச்சர் போல இருக்கும் மூங்கில் ஏணியில் இறந்தவர் உடலை வச்சு அலங்கரிக்க ஆரம்பிச்சாங்க. புதுத்துணிகள், பூமாலைகள் இப்படி. இதுக்கும் அதே நாலைஞ்சுபேர். ஒரு பண்டிட் கூடவே நின்னு என்ன செய்யணுமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கார். அரை இருட்டுலே அத்தனையும் நடக்குது.

அப்பதான் நம்ம பக்கத்துலே புதுசா வந்து சேர்ந்துக்கிட்ட உள்ளுர்வாசி,  யார் யார் சாஸ்த்திரங்களைச் செய்யணும் என்றெல்லாம் எனக்கு விளக்கம் சொல்ல ஆரம்பிச்சார். இங்கேயும் போனவங்களின் அந்தஸ்த்துதான் எங்கே எரிப்பது என்ற இடத்தை நிர்ணயம் செய்யுதாம்.  முக்கியப்பட்டவர்கள், மால்தாரிகள் எல்லாம்  இங்கேயும் இதுக்குப் பக்கத்துலே இருக்கும் நாலைஞ்சு மேடைகளிலும். வசதி குறைஞ்சவர்கள், பிரபலம் இல்லாதவர்கள் எல்லாம்  ஆத்துக்கு நடுவில் இருக்கும் பாலத்தைக் கடந்து  போயிடணும். இதே கரைதான் என்றாலும்  கொஞ்ச தூரத்தில்.  இந்த இடம்தான்   ஜஸ்ட் கோவிலுக்கு நேர் கீழே,  கோவிலின் பார்வையில்  இருக்கு!
கைப்பிடிச்சுவரைக் கெட்டியாகப்பிடிச்சுக்கிட்டு  எட்டிஎட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தேனா..... என் கைகளை   உரசிக்கிட்டுச்   சட்னு தாண்டி ஒரு உருவம்  கைப்பிடிச்சுவர் மேலேயே  நடந்து போச்சு. யம்மாடி... ஆஞ்சி.....!!!

நாங்கள் நிக்கும் இடத்துக்குக்கீழே மூணு சந்நிதிகள் இருக்குன்னு சொன்னேன் பாருங்க.... அதோட  கும்மாச்சி மேலே காசு எறியுது சனம். குறிப்பா பெண்கள் தான் காசு எறிஞ்சுக்கிட்டு இருந்தாங்க. என்ன சமாச்சாரமுன்னு  உள்ளுர்க்காரரைக் கேட்டதுக்கு, வீசிப்போட்ட காசு கும்மாச்சிக்குக்கீழே சுத்தி இருக்கும்  சின்ன இடத்துலே விழுந்து அங்கே நின்னுட்டால் நினைச்ச காரியம் நடக்குமாம். ஆஹா...  ஜோஸியம் பார்த்துக்கறது போலவா? இதுக்கு என்னவோ ஒரு சொல் இருக்கே....  ஆங்....  ஆரூடம் பார்க்கறது...  சரிதானே?
அப்புறம் ஒருநாள் நான் எடுத்த படம் இது. மூணு சந்நிதியும் கும்மாச்சியோடு இருக்கு. மேலே தெரியும் மொட்டைமாடியின் ஓரத்தில் நாங்க நின்னுருந்தோம்.

பார்த்தவரை  ஒரு காசுகூட  அங்கே நிக்கலை. எல்லாம் தெறிச்சுத் தெறிச்சு உருண்டு  வேறெங்கியாவது இடுக்கில் போய் நிக்குது.  முக்கால்வாசியும் கீழே தரையில்தான் விழுது. நாலைஞ்சு பசங்க ஓடியோடிக் கீழே விழும் நாணயங்களைப் பொறுக்கிக்கிட்டு இருந்தாங்க.

இதுக்குள்ளே எதிர்க்கரையில் ஆரத்தி ஆரம்பிச்சது.  சில குடும்பங்களைப் பெயர் சொல்லி மைக்கில் கூப்பிட்டாங்க. அவுங்கதான் இன்றைய ஆரத்திக்கு ஸ்பான்ஸர்கள். போனவாரம் இங்கே உறவுகளின் சம்ஸ்காரம் செஞ்சவங்களாம்.  அப்புறம் வெளியூரில் இருந்து வந்த  ஆன்மீக யாத்திரைக்குழுவின் தலைவர்,  அஞ்சு நிமிட் பேசினார். சங்கு ஒலிக்க, மணியோசையுடன்  நடந்த   ஆரத்தியைக் கவனிச்சுக்கிட்டு இருக்கும்போதே.... கீழே  அலங்காரம் முடிச்சு, சிதைக்குப்போகக் காத்திருந்த உடம்பு,  தகனமேடைக்குப் போச்சு.
ஆரத்தி    மொத்தமே ஒரு இருவது நிமிட்தான். அதுக்குள்ளே கீழே நாலு பேர்     வந்து,  குளிச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டாங்கன்னா பாருங்க........... இந்த நேரத்தில் இப்படி பிஸியா?  அப்பப் பகலில் கேக்கவே வேணாம்.....

காசியைப்போல் இங்கே வந்து சாமிகிட்டே போனால் மறுபிறப்பு இல்லை, நேரடியா சொர்கம்தான் என்ற நம்பிக்கை இருப்பதால் போனவங்களும் சரி, போகப்போறவங்களும் சரி  இங்கே வந்து சேர்ந்துடறாங்க.  பலர் இங்கே வந்து காத்துக்கிடக்கறாங்களாம்.... கோவிலின்   வளாகத்தில்   அவுங்களை ஆஸ்ரம சேவகர்கள்  கவனிச்சுக்கறாங்களாம்.

இப்ப தரிசனம் பண்ணமே நம்ம பஷுபதிநாத்தை.... நமக்குக்கூட மறுபிறவி கிடையாதுன்னு  இங்கே ஒரு பலத்த நம்பிக்கை. நல்லதாப் போச்சு :-)

ஆரத்தி முடிஞ்ச அடுத்தகணம் கூட்டம் கலைய ஆரம்பிச்சது. கீழே என்ன நடக்குதுன்னு நின்னு பார்க்க விடாம, கோவில் காவலாளிகள் பிகில் ஊதிக்கிட்டே கூட்டத்தைத் திருப்பி அனுப்பறதில் மும்முறமா இருக்காங்க. கொய்ங் கொய்ங்ன்னு பிகில் சத்தம் காதைக் கிழிக்குது.  எதிர்க்கரைக்கு எப்படிப் போகணும்னு பார்த்தால்  கொஞ்சதூரத்தில் ஒரு பாலம் தெரிஞ்சது. பகல் நேரத்தில்  வந்து பார்க்கணும்....

பாக்மதி நதிக்கு அப்பாலும் இப்பாலுமா பரந்து விரிஞ்சுருக்கும் கோவில்வளாகம் மொத்தம் 652 ஏக்கர்  பரப்பளவு! அம்மாடியோ.............  எந்தக் காலத்துலே முழுசும் சுத்திப் பார்க்கப்போறோம்?

கூட்டத்தோடு கூட்டமா நாமும் நகர்ந்து  கோவில் கருவறை  வாசலுக்கு வந்திருந்தோம்.  மஞ்சள் விளக்கில் தங்கமா மின்னும் கருவறைக் கதவுகளை
 இழுத்துப் பூட்டி இருந்தாங்க. நந்தி மட்டும் பெரிய கண்களால் நம்மைப் பார்க்குது. முன்வாசல் கேட்டுக்கு போங்கன்னு விரட்டிக்கிட்டே இருந்தாங்க காவலாளிகள்.  நாம் வெளியே வந்துட்டோம். கொஞ்ச நேரத்துலே  கம்பிக் கதவை மூடிட்டாங்க.  வெளி முற்றத்தில் பளீர்னு விளக்கு வெளிச்சம். பயணிகளிடையே  முக்கிய  சமாச்சாரமா க்ளிக்ஸ் நடக்குது. நாமும்  ஜோதியில் கலந்தோம். நந்தி கம்பிகளினூடே....  க்ளிக்!
அடுத்து.... காலணி பாதுகாக்கும் இடத்துக்குப் போய்  நம்ம பையைத் திரும்ப வாங்கிக்கிட்டுக் காலிப் பையை மரத்தில் தொங்க விட்டாச்சு.  சாயங்காலம் பார்த்த அந்தப் பெண்,   தரிசனம் ஆச்சான்னு கேட்டுக்கிட்டே  சாளக்ராமம், ருத்ராக்ஷம் எல்லாம் தரமானது வேணுமான்னு கேட்டாங்க. எதிரே கடை வச்சுருக்காங்களாம். அகர்வால்னு ஒரு கடை பார்த்த நினைவு. அது இல்லையாம். அதுக்கு அந்தாண்டையாம்.  இன்னொருநாள் வரேன்னு சொல்லிட்டு  வளாகத்தை விட்டு வெளியே வந்தால்  நம்ம வண்டி கொஞ்ச தூரத்தில் கண்ணில் பட்டது.
லெமன்ட்ரீக்குப் பக்கத்தில் வந்ததும், அந்த தமில் ஏரியாவில் முன்பக்கமாவே இருக்கும் கடையில் கொஞ்சம் பழங்கள் வாங்கிக்கலாமேன்னு தோணுச்சு. வயித்துலே உ .கி  வேற  உக்கார்ந்துருக்கு. ராத்திரி சாப்பாடு வேணாம்.

 ஏற்கெனவே பார்த்து வச்சுக்கிட்ட கடையில் பழங்களும், மாம்பழ ஜூஸும் வாங்கிகிட்டோம்.  மாம்பழம் என்ன ரூபத்தில் வந்தாலும் நான் விடமாட்டேன்:-)  நிறைய  நட்ஸ், சீஸ், பிஸ்கெட்ஸ் வகைகள் இருக்கு அங்கே. 200 கிராம் பாக்கெட்டுகளாப் போட்டு வச்சுருப்பதில் நாமும் கொஞ்சம்  பாதாம், பிஸ்தாவும் ரெண்டு பாக்கெட் பிஸ்கெட்ஸும் வாங்கினோம். நாளையப் பயணத்துக்கு  வழியில்  பயன்படும்.

லெமன்ட்ரீ வந்து சேர்ந்தோம். ப்ரகாஷ்  இருந்தார்.  இந்த்ரா வீட்டுக்குப் போயிட்டாங்களாம். ப்ரகாஷின் அண்ணன் மகள்தான் இவுங்க. அப்பா அம்மாவுடன்   மகன்கள் இருவரும் கூட்டுக் குடும்பமா வசிக்கிறாங்களாங்களாம். அடுத்துள்ள கிராமத்துலே இருந்த இவுங்க வீடுகள் எல்லாம் இப்போ ஒன்னரை வருசத்துக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்  அழிஞ்சே போயிருச்சாம்.  அங்கே இருந்த குடும்பமெல்லாம் இப்ப  நகரத்துக்கே வந்துட்டாங்க. அதான்  நிறையக் கூட்டமா இருக்கு.

எம்பது கிமீ தூரத்துக்கப்பால் என்பதால்   இங்கே நகரத்தில் சேதாரம் அவ்வளவா இல்லைதான்...  கோவில்  வளாகத்தில் கூட சில இடங்கள் பாதிக்கப்பட்டு இருக்கு என்பதை  அங்கங்கே கட்டைகளை வச்சு முட்டுக் கொடுத்துருக்கறதைப் பார்த்தேனே... சில இடங்களில் தார்பாலின் போட்டு மூடித்தான் வச்சுருக்காங்க. உலக பாரம்பரியச் சின்னங்களில் இந்தக் கோவிலையும் யுனெஸ்கோ சேர்த்துருக்கு..  என்பதால்  அழிஞ்ச பகுதிகளைப் புனர்நிர்மாணம் செய்ய இவுங்க உதவிக்கு வர்றாங்கன்னு நினைக்கிறேன்.


நிலநடுக்கத்தின் பாதிப்பை நேரடியா உணர்ந்தவங்க நாங்க என்பதால்   அங்கத்து நிலமை  நல்லாவே புரிஞ்சது. கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் உயிர்கள் போயிருக்கு :-( என்ன கொடுமை..... 7.8  அளவில் நடுக்கமுன்னா சும்மாவா........... ப்ச்....

இந்த ஃபிப்ரவரி 22 வந்தால் எங்க ஊரில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு வயசு 6 ஆகும். ஊரில் பாதி அழிஞ்சே போச்சு. அதிலிருந்து  இந்த மாதிரி சேதி கேட்டாலே மனசு நடுங்கிருது...:-(

மறுநாள் எங்களுக்கான பயணத்திட்டங்களை விளக்கிச் சொன்னார்.  நாலைஞ்சு நாட்களுக்குத் தேவையான துணிமணிகளை எடுத்துக்கிட்டு, மற்ற பெட்டிகளை இங்கேயே விட்டு வச்சுட்டுப்போகும் ஏற்பாடு. பகல்  ஒன்னேமுக்காலுக்குத்தான்   ஃப்ளைட் என்பதால்  காலையில்  சில இடங்களைச் சுத்திப் பார்த்துக்கலாமாம்.  கார் ஏற்பாடாகி இருக்கு.

லெமன்ட்ரீ ஹொட்டேலுக்குன்னு தனியா இன்னும் வண்டிகள்  வாங்கிக்கலை. ஆனால்  வேற ட்ராவல்ஸ் வண்டிகளை இவுங்க பயன்படுத்திக்கறாங்க.

ராச்சாப்பாட்டுக்கு எதாவது சமைக்கணுமான்னு கேட்டார். வேணாமுன்னு சொன்னோம்.  இங்கே காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் நம்ம அறை வாடகையில் சேர்த்தி. மற்ற நேரங்களில் சாப்பாடு வேணுமுன்னா சொன்னால் செஞ்சு தர்றாங்க. மெனு கார்டு பார்த்துட்டு நாம் சொன்னால்... இவுங்க தயாரிப்பு இல்லைன்னாலும் வெளியே இருந்து வாங்கி வந்து தர்றாங்க.

இதெல்லாம்  இங்கே நாங்க பேசிக்கிட்டு இருந்தப்ப, சுமனும் இன்னொரு  பணியாளான  போலாராமும்  ஒரு மூலை டேபிளில் உக்கார்ந்து படிச்சுக்கிட்டு இருந்தாங்க. மாணவர்களாம். ஆஹா... அதானே  பையனாட்டம் இருக்காங்களேன்னு பார்த்தேன்.  வசதி இல்லாத குடும்பம் என்பதால் நம்ம ப்ரகாஷ்தான் படிக்க வைக்கிறாராம். கிராமத்தில் இருந்து வந்து இங்கேயே தங்கி இருக்காங்க. பள்ளிக்கூட நேரம் போக  மற்ற நேரங்களில்   இங்கேயே வேலை செய்யறாங்க. ஸ்டூடன்ட் ஜாப்!

நீங்க நல்லா இருக்கணும். உங்க பிள்ளை குட்டிகளுக்குப் புண்ணியமுன்னு வாழ்த்தினேன். ஒரு பெண் குழந்தை, ஒன்னரை வயசில் இருக்காளாம். செல்லில் இருக்கும் குடும்பப்படங்களைக் காமிச்சார். கொள்ளை அழகு அந்தப் பாப்பா!

அறைக்குப்போய் அடுத்த சிலநாட்களுக்குத் தேவையானவைகளை சின்ன கேபின் பேகில் வச்சுட்டு,  பாக்கி எல்லாத்தையும் பெரிய பெட்டிகளில் போட்டுப் பூட்டி வச்சோம். லேப் டாப் கொண்டு போக வேணாமுன்னு முடிவு.  செல்ஃபோன்,  ஒரு கேமெரா, அதுக்கான சார்ஜர்கள் போதும்.

பழத்தை  முழுங்கி ஜூஸைக் குடிச்சுக் கட்டையைக் கிடத்தியாச்சு.
பாக்மதி நதி .வலையில் சுட படம் இது. கூகுளாருக்கு நன்றி.

தொடரும்.........:-)


12 comments:

said...

நல்ல அனுபவங்கள்..... பாக்மதி நதியும் பார்த்தாச்சு.

said...

அருமை. நன்றி.

said...

நேர்ல செல்லுகிற மாதிரியே எழுதியிருக்கீங்க. நாங்க போனபோது, பாக்மதி நதி வெறும் சாக்கடையாகத்தான் (கொஞ்சம்கூடத் தண்ணீர் இல்லாமல், கழிவு நீர் வாய்க்காலாக) இருந்தது. இப்போ ரொம்ப நல்லாச் சரிபண்ணியிருக்காங்க.

பசுபதினாத் கோவில்ல 108 சிவலிங்கங்களைச் சுத்திவர்ற மாதிரி ஒரு இடம் இருக்குதே (கிட்டத்தட்ட சிறிய maze மாதிரி). கருவறையிலிருந்து 50 அடிக்குள்ள. அத விட்டுட்டீங்களா?

நீங்க எப்படி அரேஞ்ச் பண்ணிக்கிறீங்கங்கறதை அறிய ஆவலாயிருக்கிறேன். அங்க அங்க நல்ல கைடு, போகவர டிரான்ஸ்போர்ட்டுனு பக்காவா திட்டமிட்டிருக்கிறீர்கள்.

said...

காசியில் கங்கா ஆர்த்தி பார்த்துள்ளோம். அதைவிட அருமையாக இருப்பதைப் போலுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

said...

பாக்மதின்னா சரசுவதியா? பாக் - வாக்கு?

கங்கைக் கரை மாதிரிதான் பாக்மதி கரையிலும் நடக்குது போல. சின்ன ஆறா இருந்தாலும் இரண்டு பக்கமும் படிக்கட்டுகள் பாக்க அழகா இருக்கு.

நிலநடுக்கம் மட்டுமல்ல புயல் வெள்ளம் வறட்சின்னு இயற்கைச் சீற்றங்கள் பலவகை. ஆண்டவன் தான் காப்பாத்தனும்.

said...

நதியோரம்... சற்றே மேடான இடத்தில் ஆரத்தி. இருள் சூழல். கீழே இறந்தவர்களுக்கு காரியங்கள்... உரசிகிச்செல்லும் ஆஞ்சி...

அமானுஷ்யம்! பார்க்க ஆவல் வருகிறது. படங்கள் ஜோர்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்க இன்னும் அந்தப் பக்கம் போகலை என்பதே எனக்கு வியப்பா இருக்கே!!!

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அதெல்லாம் பக்காவா நம்ம ட்ராவல் ஏஜண்ட் கவனிச்சுச் செஞ்சுருவாரு:-) பொழுதன்னிக்கும் வெளிநாட்டு டூர் போய் பழக்கமிருக்கே!!! நானும் கத்திக்கிட்டே இருப்பேன்... இது ஒன்னும் உங்க ஆஃபீஸ் டூர் இல்லை. சுத்திப்பார்க்க நேரமே விடறதில்லைன்னு. இப்பதான் கொஞ்சம் கேக்க ஆரம்பிச்சு இருக்கார் 42 வருச வாழ்வில் :-)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

காசி ஆரத்தி ஒரு பெரிய ஷோ மாதிரி இருக்கு. இங்கே ரொம்பவே சுமார்தான். இன்னொரு இடத்திலும் இந்தப் பயணத்தில் கங்கை ஆரத்தி பார்த்தேன். எனக்குப் பிடிச்சது என்னவோ முதல்முதலா ஹரித்வாரில் பார்த்த கங்கை ஆரத்திதான்! மனசு அப்படியே லயிச்சுப்போய் அனுபவித்தேன், அன்று!

said...

வாங்க ஜிரா.

அப்படித்தான் இருக்கணும். கோவில்களில் சரஸ்வதி சந்நிதி தனியாக பல இடங்களில் இருக்கு இந்த நாட்டில்!

said...

வாங்க ஸ்ரீராம்.

இன்னும் கிட்டப்போய்ப் பார்க்கலையேன்னு எனக்கொரு குறை இன்னும் இருக்கே:-)