Wednesday, January 04, 2017

சிங்கை சந்திப்புகள் :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 114)

ஆறடிக்க அஞ்சு நிமிட் இருக்கும்போதே  வந்துட்டோம்.  மற்ற பெட்டிகள் எல்லாம் நேரடியா நியூஸிக்கே போகும்படி புக் பண்ணியாச்சு என்பதால்  கையில் இருக்கும் அவரவர் கேபின் பேகுடன் பரபரன்னு குடிநுழைவுக்குப்போய்  கடவுச்சீட்டில்  ஸ்டாம்ப் அடிச்சவுடன்  நேரா ரயிலைப் பிடிக்கப் போனோம். ரெண்டு இடத்தில் வண்டி மாறணும் என்றாலும்  காலை நேரத்தில் அவ்வளவாக் கூட்டம் இருக்காது. நிதானமாகப் போனால் ஆச்சு. ஃபேரர்பார்க் ஸ்டேஷனில் இறங்கி  பார்க் ராயல் ஹொட்டெலுக்குப்போய்ச் சேர்ந்தோம்.

இங்கே என்ன ஒரு அநியாயமுன்னா..........  மதியம் மூணு மணிக்குத்தான் செக்கின்.  காலை 6 முதல் பகல் மூணுவரை ஒன்பது மணி நேரம்   அறை எடுத்துருந்தும்கூட தேவுடு காக்கணும் :-(

 முந்தியெல்லாம் டே ரூம்னு ஒரு புக்கிங்  இருந்துச்சு. காலையில் வந்து அறைக்குப் போனோமா.... சட்னு குளிச்சுட்டுச் சீனுவைப்போய் தரிசனம் பண்ணிக்கிட்டு, அப்படியே பொடி நடையில்  நெரிசலே இல்லாத செராங்கூன் சாலையில்  காலாற நடந்து கோமளவிலாஸ் போனோமான்னு  இருக்கும்.  கடைகள் எல்லாம் பத்துமணிக்குத்தான் திறப்பாங்க என்றதால்  நடைபாதை எல்லாம் காலியோ காலிதான். ஹொட்டேலுக்குப் பக்கத்துலேயே கோமளவிலாஸ் ஃபாஸ்ட் ஃபுட் இருந்தாலும், பழைய  இடம்தான் எனக்குப் பிடிக்கும்.  அருமையான காஃபியுடன் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு  இட்லி வடையை உள்ளே தள்ளிட்டு, நிதானமா நியூபார்க் (அப்ப அதுதான் பெயர்) ஹொட்டேலுக்கு  நடந்து வந்து அறைக்குப்போய்  நிம்மதியா ஒரு தூக்கம். இதுக்கே எப்படியும் காலை  ஒன்பதரை,  பத்து மணி ஆகிரும். 

 சென்னையில் முதல்நாள்  ராத்திரி பனிரெண்டு மணிக்குப்பக்கம் விமானம் ஏறணும். விமானத்திலும் தூங்க முடியாது. சிங்கை ஃப்ளைட்டு சத்தத்துக்குப் பேர் போனது.  அன்றைக்கு  இரவு ஒன்பதுக்கு நியூஸி ஃப்ளைட் எடுப்பதால்   ரெண்டு ராத்திரிகள் தூக்கமில்லாமல்  போயிரும் என்றது கஷ்டம்.
சுமார் நாலு இல்லை அஞ்சு மணி நேரம் தூங்கி எழுந்தால்  கொஞ்சம்  உறக்கச்சடைவு போய் உற்சாகம் திரும்பிரும்.  மூணு மணிக்குக் கிளம்பி தோழிகள் யாரையாவது  சந்திக்கலாம். பல சமயங்களில்  அவுங்களே அறைக்கு வந்துருவாங்க.  மாலை ஆறுவரை பேசிச்சிரிச்சு,  கீழே போய் எதாவது சாப்பிட்டுன்னு  பொழுதே ஓடிப்போகும். அப்புறம் டாக்ஸி எடுத்தால் நேரே சாங்கி.  அப்படியே போய்  எதாவது ட்யூட்டிஃப்ரீ வாங்கணுமுன்னால் வாங்கிக்கிட்டு நேரா நியூஸி ப்ளேன்தான்.

இப்ப அந்த டே ரூம் வசதியையே எடுத்துட்டாங்க........   காலை நேரத்தில் அறை வேணுமுன்னால் முதல்நாளுக்கும் சேர்த்து ரெண்டுநாளா புக் பண்ணினால்தான் உண்டு.  அறைவாடகை ஒரே கொள்ளை என்பதால்.......  ரெண்டுநாளுக்கு  எடுக்க மனசு வர்றதில்லை.

 வரவேற்பில்  இப்போதைய  வழக்கம்போல் மூணு மணிக்குத்தான் செக்கின். நீச்சல் குளம் இருக்கும் தளத்தில் நீங்க போய் குளிச்சுக்கலாம்.  பெட்டிகளை எல்லாம் நாங்க  பார்த்துக்குவோம்.  நீங்க எங்கியாவது  வெளியே போயிட்டு மூணு மணிக்கு வந்தால் உங்கள் அறை தயாரா இருக்குமுன்னு இனிப்பாச் சொன்னாங்க.
நாங்க முணுமுணுத்துக்கிட்டே  நீச்சல்குளம் இருக்கும் தளத்துக்குப்போய்  குளிச்சுட்டு உடை மாத்திக்கிட்டு, எங்கள் கேபின் பைகளை கீழே ஒப்படைச்சுட்டு  நம்ம சீனுவைப் பார்க்கப்போனோம். காலை மணி  ஒன்பதரை. காலை  பூஜைகள் முடிஞ்ச சமயம். பெருமாள் ரிலாக்ஸ்டா இருந்தார். நமக்குத் தெரிஞ்ச ஸ்ரீனிவாச பட்டர் ஸ்வாமிகளும்  அங்கே உக்கார்ந்து  என்னமோ வாசிச்சுட்டுக்கிட்டு இருந்தார்.   தரிசனம் பண்ணி  வச்சுக் குசல விசாரிப்புகள் முடிஞ்சதும்  வழக்கமான தூண் அருகில் உக்கார்ந்து கையோடு கொண்டுபோயிருக்கும்  ஸ்ரீவிஷ்ணுசகஸ்ரநாமம் புத்தகம் எடுத்து(பெரிய எழுத்து)வாசிச்சோம்.

பிறகு கோவிலை வலம்வந்துக்கிட்டே க்ளிக்கோ க்ளிக்ஸ்தான்:-)  எத்தனைமுறை படங்கள் எடுத்தாலும் அலுக்கறதே இல்லை. இங்கே மூலவரைக்கூடப் படம் எடுத்துக்கலாம். முதல்முதலில் இங்கே வந்தப்ப.....  (அது ஆச்சு  முப்பத்திரெண்டு வருசம்)  மூலவரைப் படம் எடுக்க ரொம்பவே தயக்கமா இருந்துச்சு.  மற்றவர்கள் படம் எடுப்பதை 'ஆ'ன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.  அப்போ ஃப்ல்ம்ரோல் போடும் கெமெராதான்.  ப்ளாஷ் போட்டுக்காம எடுத்ததெல்லாம் இருட்டடிப்பு பண்ணிட்டார் பெருமாள் :-)  இப்போதான் இந்த டிஜிட்டல் வந்தபின் .....  நம்ம  காட்டுலே மட்டுமில்லை நாட்டுலேயும் மழையோ மழை!



பதினொரு மணி வெயில் ரொம்பவே உக்ரம்:-(  கோமளவிலாஸ் வரை நடந்துபோக சோம்பல். கோவிலுக்கு எதிர்வாடையில்  திறந்துருக்கும் ஒரு ரெஸ்டாரண்டுக்குள் நுழைஞ்சாச்சு. முந்தி இதுக்குப்பெயர் நளன்.  முகமில்லாத பெண்களின் ஓவியங்கள் வச்சுருப்பாங்க.  இப்ப வியாபாரம் கை மாறி இருக்கு. வேற எதோ பெயர்  பார்த்த நினைவு.  உள்ளே மொத்த கடையும் பெண்களால் நடத்தப்படுதுன்னு புரிஞ்சது.  ஆளுக்கு ரெண்டு இட்லி, ஒரே ஒரு காஃபின்னு  முடிச்சுக்கிட்டோம்.  சிங்கை வந்துட்டால் எனக்கு இளநீரை விட மனசே ஆகாது.   சாலை சந்திப்பு முனையில் இருக்கும் கடையில் இளநீர். அருமை. பெரூசா வேற இருக்கு!  என் விருப்பத்திற்கேற்றபடி  கொஞ்சம் நிறையவே தேங்காயும்!  குடிச்சு முடிச்சுட்டு      ஹொட்டேலுக்கு வந்து,  வரவேற்பில்  'கொஞ்சம் எங்களைக் கவனிம்மா'ன்னு அழுதுட்டு நீச்சல்குளம் இருக்கும் தளம் போனோம். அதுவரை போக  நமக்கு  ஆக்ஸெஸ் கார்ட் சாவி கொடுத்துருந்தாங்க:-)
அங்கே போனால்  கூட்டமான கூட்டம். எல்லாம் இந்தியர்கள்தான்.  பிள்ளைக்குட்டிகளுடன் பெரிய பெரிய  குழுவா வந்துருக்காங்க. ஷாப்பிங்தான்  முக்கியமாம். வேணாமுன்னாலும் பேச்சு காதில் விழுதே!  தில்லி, மும்பை, ஹைதராபாத்னு  ஒரே கலகல.  இதுலே  தில்லிக்குழுவில் ஒரு தேன் நிலவு  ஜோடி.  கையில் இருக்கும்  பளிச் மெஹெந்தியும்  முழங்கை வரை இருக்கும் வளைகளும்,  நொடிக்கொருமுறை   வெட்கம் கலந்த புன்னகையுமா  இருக்கும்  முகங்களும்  ஜோரு!

மும்பைக்குழு ஏற்கெனவே வந்து பழக்கப்பட்டவங்க போல.  ஏகப்பட்ட பிள்ளைகள். ஏராளமான  டப்பர் வேர்  டப்பிகளில் விதவிதமான சாப்பாடு கொண்டு வந்துருக்காங்க.  முழு லக்கேஜும் சாப்பாடுதான். பொட்டி காலியானதும்.....  இங்கே ஷாப்பிங் பண்ணி, பொட்டிகளை நிரப்பிக்கிட்டுப் போவாங்க போல!

நெருங்கிய தோழிக்கு ஏற்கெனவே தகவல் அனுப்பி இருந்ததால் அவுங்க இன்றைக்கு வாரவிடுமுறையை மாற்றி வச்சுருந்தாங்க.  இங்கே வந்திறங்கியதும்  செல்லில் கூப்பிட்டு,  வந்தாச்சு. அறைக்குப் போனதும் தகவல் சொல்றேன்னு  சொல்லி வச்சதுதான். இப்ப மூணு மணி வரை அவுங்களை சந்திக்க  முடியாது.  அறை  ரெடியானதும்  சொல்றேன்னு  வரவேற்பில்  சொல்லி இருக்காங்களே....

ரெண்டுங்கெட்டானாப் போச்சேன்னு  நீச்சல் குளத்தாண்டை கூடாரம் அடிச்சு, உள்ளே போட்டுருக்கும்  லவுஞ்சரில் படுத்துத் தூங்க முயற்சி செய்யறேன்.  மேலே ஓடும் மூங்கில் விசிறிகூட சூடான காத்துதான் வீசுது.  இவர் ஏற்கெனவே தூங்கிட்டார். கொஞ்ச நேரத்தில் எப்படியோ தூங்கிப்போயிட்டேன் போல!
நம்மவர் எழுப்பி, வா அறைக்குப் போகலாமுன்னார்.  பூர்வஜன்ம புண்ணியத்தால்  ஒன்னே முக்காலுக்கு அறை கிடைச்சுருச்சு.  தோழிக்கு சேதி அனுப்பிட்டு அறைக்குப்போய்  செட்டில் ஆனோம்.  அறை ஜன்னலில் எட்டிப்பார்த்தால் அதே நீச்சல் குளம் வியூதான் நமக்கு:-)
ஒருமணி நேரத்தில் தோழி சிங்கை  எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் வந்துட்டாங்க. வீட்டுக்கு   ஏன் சாப்பிட வரலைன்னு  கோவிச்சுக்கிட்டாங்க.   'அறை கிடைக்கும்வரை  வேறெங்கும் போக முடியாதே....   அக்கம்பக்கத்துலே இருந்தாத்தானே  நல்லது'ன்னு சமாளிச்சார் நம்மவர் :-) பேசாம நேரா நம்ம வீட்டுக்கு வந்து குளிச்சு சாப்ட்டுத் தூங்கிட்டு, மூணு மணிக்கு இங்கே வந்துருக்கலாமேன்னு சொன்னது ரொம்பச் சரி.  ஆனால்... சீனு விடலையே :-)

கொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு,  எதாவது சாப்பிடலாமேன்னு கீழே இறங்கிப்போனோம்.  நேரங்கெட்ட நேரமா இருக்கு......   தோழி ஏற்கெனவே சாப்புட்டாங்களாம்.  சையத் ஆல்வி ரோடில் எதோ ஒரு கடை.  ராஜ் ரெஸ்டாரண்ட்ன்னு நினைவு.  எனக்கொரு தோசை, நம்மவருக்கு ஒரு சப்பாத்தி.
செராங்கூன்  சாலை சந்திப்புவரை  பேசிக்கிட்டே நடந்து வந்து இளநீர் ஆச்சு.  அறைக்குத் திரும்பி இன்னும் கொஞ்சநேரம் பழங்கதைகளையும் புதுக்கதைகளையும் முடிஞ்சவரை பேசிட்டு,  ரெஸ்ட் எடுங்கன்னுட்டு,   ஜெயந்தி கிளம்பிட்டாங்க.
அடுத்து இன்னொரு குட்டித்தூக்கம் ஆனதும்....   பதிவுலக நண்பர், உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்சவர் வீட்டுக்குக் கிளம்பினோம்.  புங்கோல் ஸ்டேஷன்  ( பொங்கோல்னு தமிழில் எழுதி இருக்கு!) போகணும்.  அங்கே காத்திருந்தார் நம்ம கோவி கண்ணன்.  ரொம்பக் கிட்டக்க வீடு!  ஆத்து வாசலில் ஸ்டேஷன் :-)


புது வீட்டுக்கு மாறி இருக்காங்க.  ஹாலில் இருந்து பார்க்கும்போது அட்டகாசமான மில்லியன் டாலர் வ்யூ!   குடும்பமே நமக்கு நட்பு என்பதால் மகனோடும் மகளோடும்  பேசிச் சிரிச்சுன்னு  நேரம் ஓடுனதே தெரியலை!

இடையிடையே பேச்சில்  கலந்துக்கிட்ட கண்ணனின் மனைவி, சமையலில் பிஸி.  நமக்கு  அங்கேயே ராச்சாப்பாடு!    அட்டகாசமா விருந்தே வச்சுட்டாங்கப்பா!!!

சிவச்செங்கதிர் வளர்ந்துட்டார். ஆறுமாசக் குழந்தையா இருந்தப்ப  இருந்து  பார்த்துக்கிட்டு இருக்கோம்:-) அப்பா அம்மா கூடவே ரயிலடி வரை வந்து  டாடா, பை பை சொன்னது அழகு!



சிங்கையில் நமக்கு ஏராளமான நண்பர்கள் இருக்காங்க என்றாலும், அவுங்களோட   வேலைநாளில்  நாம் இங்கே  வந்தால்  சந்திக்க முடியாமல்தான் போயிருது.   இப்படிப் பயணங்களில் பல சமயங்களில் ஒரு சிலரைத்தான் சந்திக்கிறோம் என்றாலும் அவ்வளவாவது பார்த்தோமேன்னுதான் இருக்கவேண்டி இருக்கு.   வீக் எண்ட் என்றால் அதிலும் ஞாயிறுன்னா   டபுள் ஓக்கே!  போனமுறை அதிக நண்பர்களுடன் சந்திப்பு  நடந்தே நாலு வருசமாச்சு. ஹூம்.......

அறைக்குத் திரும்பி  தூக்கமோ தூக்கம்.  நீங்களும் ஓய்வெடுங்க. நாளைக்கு இன்னும் கொஞ்சம் ஊர் சுத்தலாம் :-)

தொடரும்....  :-)


19 comments:

said...

சிங்கப்பூரில் கோயிலைக் கண்டோம். புகைப்படக்கலையின் வளர்ச்சி நமக்கு மிகவும் பயனுள்ளதை இவை போன்ற அனுபவங்கள் உணர்த்துகின்றன. நாளை தொடர்ந்து உங்களுடன் பயணிப்போம்.

said...

உறக்கச்சடைவு! புது வார்த்தை எனக்கு! பார்க்க முடியாத இடங்களை புகைப்படம் வாயிலாக ரசித்துக் கொள்கிறேன்!

said...

சிங்கையில் தொடரும் சந்திப்புகளும் நிகழ்வுகளும்.....

நானும் தொடர்கிறேன்.

said...

கோவிலும்.,,

பெருமாள், கருடாழ்வார் , ஆண்டாள்..ஆஹா அனைவரும் ரொம்ப அழகு...
உங்க கிளிக்ஸ் வழக்கம் போல் சூப்பர்...

said...

nandri.

said...

சிங்கை சீனு தரிசனம். நண்பர்கள் விருந்து என அமோகம்.

said...

சிங்கை அழகான ஊர். போய் நாளாச்சு.

கோயில்ல போட்டோ எடுக்கக் கூடாதுங்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அனைத்தையும் கடந்து அனைத்துக்கும் உள்ளிருக்கும் இறைவனை புகைப்படம் தீட்டாக்கிவிடும் என்று நான் நினைக்கவில்லை. எல்லாம் வியாபார தந்திரம் தான். நாமெல்லாம் தப்புகள் செய்யும் போது நமக்குள்ள இருக்கும் ஆண்டவனுக்கு வராத தீட்டு போட்டால வந்திரும்னா அந்தக் கருத்தே தப்புங்குறது என்னோட கருத்து. :)

கோவியார் நலமாக இருக்கிறாரா? முன்பு ஒருமுறை பிஷானில் அவரைச் சந்தித்தது நினைவுக்கு வருகிறது.

said...

கற்றோருக்குச் செல்லும் இடமெல்லாம் சிறப்பு, அதுவும் டீச்சரம்மா என்றால் கேட்கவே வேண்டாம் எங்கு போனாலும் துரத்தும் சீனி .

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரொம்பச்சரி. அதுவும் இந்த டிஜிட்டல் கேமெரா வந்தபின் எல்லாம் சுகமே!! எனக்கு இப்போ துப்பறிபவர்கள் வச்சுக்கும் ரகசிய கேமெரா இருந்தால் தேவலைன்னு ஒரு எண்ணம்:-)

இல்லைன்னா உடம்பில் பில்ட் இன் கேமெரா வேணும். கண்ணை மூடித்திறந்தால் க்ளிக்!

said...

வாங்க ஸ்ரீராம்.

அதென்ன பார்க்கமுடியாத இடங்கள்? எனக்கு இந்த வயசில் கிடைச்சது உங்களுக்கு இன்னும் சீக்கிரமா லபிக்கட்டும்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்குமார்.

ரசித்தமைக்கு நன்றிப்பா.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றிகள்!

said...

வாங்க மாதேவி.

விட்டதையெல்லாம் பி/படிச்சீட்டீங்க !!!!

நன்றீஸ்ப்பா!

said...

வாங்க ஜிரா.

நம்மூரில் எல்லாத்துக்கும் ஆகமத்தைக் காரணமாச் சொல்லிருவாங்க :-)
அந்தக் காலத்தில் இப்படி கேமெரா, கணினி என்னும் வஸ்துக்கள் வரப்போகுதுன்னு தெரியாதில்லையா !!!!

அதிலும்.... ரொம்பக் கடைநிலை ஊழியர்களுக்குக் கேமெராவைப் பார்த்ததுமே..... ஆவேசம் வந்துரும்:-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கற்றோரா.... சரியாப்போச்சு !!!!

எல்லாம் இணையம் தந்த கொடை.... இந்த நண்பர்களும் நட்பும்!

said...

உங்களுடன் கூட வருவதே, நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஏதுவாகிறது.

@ஜி.ராகவன் - நீங்கள் சொல்வதுபோல் மூலவரை புகைப்படம் எடுப்பதால் தவறில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், அது கோவிலின் சூழலைக் கெடுத்துவிடும். நீங்கள் நிச்சயமாக இதனைப் பார்த்திருப்பீர்கள். எந்த இடத்துக்குப் போனாலும், அங்கு உள்ள சூழலை அனுபவிப்பதை விட்டு விட்டு எப்படி செல்ஃபி கலாச்சாரம் ஆட்டிவைக்கிறது என்று. உற்சவருக்கு அபிஷேகமோ அல்லது அருளிச்செயலோ நடந்துகொண்டிருக்கும்போதே நிறையபேர் மொபைலை நீட்டுவதால் நிம்மதியான தரிசனம் தடைக்குள்ளாகிறது. இதுதான் மிக முக்கிய காரணமாக இருக்கும். தெய்வ சான்னித்யம் எல்லாம் போகாது ஆனால், மக்களுக்கு அந்த டிசிப்பிளின், நெக்குருகும் தன்மை, மரியாதை போய்விடும். சிங்கையில் உள்ள அந்த டிசிப்பிளினை எல்லா இடங்களிலும் கொண்டுவருவது இயலாது. நம்ம ஊரில், செக்யூரிட்டி பிரச்சனையும் இருக்கிறது.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

செல்ஃபி கலாச்சாரம் மோசமாத்தான் போய்க்கிட்டு இருக்கு. மறைந்த தமிழக முதல்வரின் இறுதிச்சடங்கில் செல்ஃபி எடுத்துக்கிட்டுவங்களை எதில் சேர்க்கறது?

சிங்கைக் கோவில்களில் நிகழ்ச்சியைப் பதிவு செய்வதுதான் நடக்குது. யாரும் அங்கே செல்ஃபி எடுத்துக்கொள்வதை நான் பார்க்கலை இதுவரை!

எனக்கு செல்ஃபி எடுக்கத் தெரியாது என்பது இங்கே உபரித்தகவல் :-))

said...

துளசிதரன் : உங்கள் வழி சிங்கையின் ஒரு சிறு பகுதியைக் கண்டு ரசிக்கிறேன்...

கீதா: சிங்கப்பூர் அழகான ஊர்...மீண்டும் உங்களுடன் ஒரு சுற்றல் நினைவுகள்...சீனு, செரங்கூன், கோமளவிலாஸ், ஏர்போர்ட்டில் காவேரி...என்று பல நினைவுகள்...வருஷங்கள் பல ஆச்சு போயி...