Monday, January 02, 2017

குண்டு வச்சுருக்கோமுன்னு........ குழப்பம் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 113)

'காலையில் வர்றோம். லஞ்ச் உங்களோடு. சாப்பிட்டு முடிச்சதும்  கிளம்பிப் போயிருவோம். அப்படித்தான் டிக்கெட் புக் பண்ணி இருக்கு'ன்னார் பெங்களூர் மைத்துனர்!  இன்றைய ஸ்பெஷலாக ஞாயிறு. கூடவே காதலர் தினமாம். கல்யாணமானால் காதலிக்கக்கூடாதா என்ன?  ஜாலியா அவுட்டிங் கிளம்பி வாங்கன்னோம்.
நாங்கள் சென்னை மச்சினர் வீட்டுக்குப்போய்ச் சேரும்போது, காலையில் வந்திறங்கிய  பெண்களூரு மச்சினர் ப்ரேக்ஃபாஸ்ட்டில் பிஸி. நமக்கு ஏற்கெனவே லோட்டஸில் ஆச்சு  என்பதால்  பிள்ளைகளுடன் பேசிக்கிட்டு இருந்தோம்.  அப்புறம் அண்ணன் தம்பிகள் பேசிக்கட்டுமுன்னு விட்டுட்டு லேடீஸ் எல்லோரும் கிளம்பி  கடை விஸிட்.  வேளச்சேரியில்  தண்டீஸ்வரம் நகர் கடைகள்.  பெரிய கோபுரத்துடன் ஒரு கோவில் இருக்கு அங்கே.  ஒருநாள் போகணும்.....

 அவுங்களுக்கு இஷ்டப்பட்ட புடவை, சுடிதார் எல்லாம் வாங்கிக் கொடுத்துட்டு,  வீட்டுக்கு வந்தால்  பகல் சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு  பேச்சு நடந்துக்கிட்டு இருக்கு. அவர்கள் விருப்பமென்று சொல்லி விட்டதால்  புஹாரியைத் தெரிவு செஞ்சாங்க.  சாப்பாடு அவரவர் விருப்பம். எனக்குப் புதினா பரோட்டாவும் தயிரும்.

வீட்டுவாசலில் ஸ்போர்ட்ஸ்! 
அஞ்சு மணிக்கு  ரயில் என்பதால் நாலரைக்கு மச்சினர் குடும்பத்தை சென்ட்ரலில் விட்டுட்டுத் திரும்பி வரும் வழியில் எதாவது வாங்கணுமுன்னா சொல்லும்மா. ரூமுக்குப்போய் பைனல் பேக்கிங் செஞ்சுரணும் என்றார் நம்மவர்.  ' ஒன்னும் வேண்டாம். நீங்க கேட்டதால சொல்றேன். நேத்துப் பார்த்த நான்முகம் வாங்கலாமுன்னா  .............. '    சரின்னுட்டார். அதே எக்ஸ்பிரஸ் அவென்யூ. அதே கடை.  நான்முகம் தலையை வாங்கியாச்.


அன்றைக்கு மாலை ராஜ் டிவி செய்தியாளர்  நம்மைச் சந்திக்க வர்றார் என்பதால் வேறெங்கும் போகலை.  சொன்ன நேரத்துக்குச் சரியாக வந்துட்டார்! தமிழ்ச் செய்திகள் வாசிக்கிறாராம். தமிழ் ஆர்வம் உள்ளவர் என்பதால் உச்சரிப்பு எல்லாம் ரொம்பச் சரியாக இருக்கும். இது புது உத்யோகம். ஒருநாள் செய்தி வரும் நேரம் பார்க்கணும்.  நியூஸியில்  பார்க்கச் சான்ஸ் கிடைக்குமான்னு தெரியலை. அப்படியே  கிடைச்சாலும் நேரங்கெட்ட நேரத்தில் முழிச்சுருந்து   பார்த்தால் உண்டு.....  நம்மவர் ஒருநாள் பார்த்துட்டு, ரொம்ப நல்லா வாசிக்கிறார்.  கோட்டும் ஸூட்டுமா  மிடுக்கான உருவம் என்றார்! 
 
 கொஞ்ச நேரம் பழங்கதைகளில்  முழுகினோம்.   டிவிக்காரர் எப்படி நமக்குப் பரிச்சயமானார்?   ஹைய்யோ.....   இவர்  நம்ம பதிவுலக நண்பர்தான். நாங்கெல்லாம் ஜிரான்னு  சொல்லும்  நம்ம ராகவன் கோபாலசாமி!   மாணிக்க மாதுளை முத்துகள் என்ற வலைப்பக்கத்துக்கு உரிமையாளர்!
டீச்சரைப் பார்க்க  வரும்போது வெறுங்கையா வரலாமோ?   தானே எழுதுன   நாலுவரி நோட்டு  கொண்டுவந்துருந்தார்.  நூத்துக்கு நூறுன்னு மார்க் போட்டேன்னு தனியாச் சொல்லணுமா?  :-)
பள்ளிக்கூடத்துக்கு லஞ்ச் பாக்ஸ் கொண்டு வர்ற மாதிரி,     கூடவே   பேக்கரி ஐட்டம் வாங்கி வந்துருந்தார். டீச்சர் வேலை நல்லாதான் இருக்கு:-)

ராச்சாப்பாடுக்கு  ரொட்டியும் பாலும் இன்றைக்கு!
பேக்கிங் எல்லாம் முடிச்சுட்டுத்தான் தூங்கினோம்.  ஆச்சு   நாளைக்கு  இந்தியாவுக்கு டாடா சொல்ல வேண்டியநாள்.
காலையில் வழக்கம்போல் ப்ரேக்ஃபாஸ்ட். இந்தப் பயணத்தின் கட்டக் கடைசி. முதலில்  பாண்டிபஸாரில்  நம்ம அனுமனுக்காக  ஒரு மாலை வாங்கிக்கிட்டுப்போய்      அடையார் அனந்தபதுமநாபனை தரிசனம் செஞ்சுக்கிட்டு, போயிட்டு வரேன் பைபைன்னு  சொல்லியாச்.
கோவில் கோலாகலமா இருக்கு. ப்ரம்மோத்ஸவம் ஆரம்பிச்சு இன்றைக்கு நாலாவது நாள்.  புள்ளையார் கல்வச்ச கவசத்தில் ஜொலிக்கிறார். பெருமாளோ....   கேக்கவெ வேணாம். தகதக தகதக.....  உற்சவர் காலையும் மாலையும் வீதிவலம் போவதால் நாளுக்கு ரெண்டு அலங்காரத்தில்  மின்னறார்.


ஒரு தோழியின் பெற்றோர்  அந்த ஏரியாவில் இருக்காங்க. அங்கேயும் போய் ஒரு பத்து நிமிசம் நலம் விசாரிப்பு.  மயிலை சரவணபவனில் பகல் சாப்பாடு.  அறைக்குத் திரும்பியதும், பெரிய வண்டி கொண்டு வரேன்னு  சொல்லி, சீனிவாசன் போனார்.

அவர் திரும்பியதும்,  மூட்டை முடிச்சுகளை எடுத்துக்கிட்டு,  லோட்டஸ் பில்லை செட்டில் செஞ்சுச்சுட்டு, அண்ணன் வீட்டுக்குப் போயிட்டோம்.  விட்டுப்போன பாக்கிப் பேச்சுடன்  காஃபி டிஃபன் ஆச்சு.


 ஒன்பது மணிக்கு ஏர்ப்போர்ட்டில் இருந்தால் போதும்.  வீட்டில் இருந்து கிளம்புமுன் ராச்சாப்பாட்டுக்கு ஆப்பம்! துளசிக்கான ஸ்பெஷல்.  அண்ணி மனம் நோகக்கூடாதேன்னு நல்லா வெளுத்துக் கட்டிட்டு ஏர்ப்போர்ட் வந்து செக்கின் ஆச்சு.  ஏர் இண்டியா லவுஞ்சுக்கு  போனோம். அது ஒரு மூலையில் கிடக்கு.


அங்கே ஒன்னும்  சரி இல்லைன்னு கிளம்பி வர்றோம்.  பயணிகளுக்கு எதோ சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதில் என் மாமனார் பெயர் அடிபடுது.  உங்க அப்பா பெயர் ரொம்ப பிரபலமோன்னு  இவரைக் கிண்டல் செஞ்சுக்கிட்டே  போர்டிங் கேட் வந்தால்....    போர்டிங் பாஸைப் பார்த்ததும்  இவரை கப் னு புடிச்சுக்கிட்டாங்க.  அவ்ளோ நேரம்  அனௌன்ஸ் பண்ணிக்கிட்டு இருந்தது  நம்மவருக்காகத்தான்! அட ராமா......

'நீ  விமானத்துக்குள்ளே  போயிரும்மா. நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்'னு  சொல்லிட்டு, ரெண்டு செக்யூரிட்டிகளோடு  இவர் போயிட்டார்.  எதாவது  பிரச்சனைன்னா......  உள்ளே போயிட்டால் என்னால் திரும்பிவர முடியாமப்போச்சுன்னா என்ன செய்யறதுன்னு நான் அங்கேயே இருந்தேன்.
அன்றைக்கு அந்த விமானத்துக்குள்ளே போன  மொத்தப் பயணிகளையும் பார்த்துட்டேன். என்னக் கடந்துதான் ஒவ்வொருத்தராப் போய்க்கிட்டு இருந்தாங்க.  நம்மவரைக் காணோம்.  ரொம்ப நேரத்துக்குப்பிறகு ஓட்டமும் நடையுமா வந்து சேர்ந்தார்.  காத்துக்கிட்டு இருந்த விமானப் பணியாளர்கள் எங்களைச் சட்னு  உள்ளே இழுத்துக்கிட்டாங்க.  அடுத்த அஞ்சாவது நிமிட் விமானம் கிளம்பத் தயாராகிருச்சு.

எல்லாம் நான்முகம் பண்ண கலாட்டாதான் :-) இவர் நல்ல பபுள் ராப்பரில் சுத்தி செக்கின் பெட்டிக்குள் வச்சுருந்தார்.  விமானத்தில் பொட்டிகளை ஏற்றுமுன், ஸ்கேன் செஞ்சப்ப,  மெடல் குண்டு  இருக்குன்னு தெரிஞ்சுருக்கு. அது என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்கத்தான்.... இப்படி.  மேல்தளத்துலே பெட்டிகளை செக்கின் செஞ்சு உள்ளெ அனுப்பும்போதே ஸ்கேன் செய்யும் வசதி இல்லையாம்.  விமானத்துக்குள் ஏத்துமுன் ஸ்கேன் செய்யறாங்களாம்.   பாதுகாப்பு சரியா இருக்குன்ற திருப்தி நமக்கு இப்போ :-)
பொட்டியைத் திறந்து, நான்முகத்தைக் காமிச்சதும்  எல்லோரும் சிரிச்சாங்களாமே:-)

'கீழே இறங்கி அங்கே திரும்பி, இங்கே திரும்பி, மாடிப்படிகளில் ஏறின்னு ரொம்பதூரம், அந்த  செக்யூரிட்டி ஸ்டாஃப் கூட  நடக்கவேண்டியதாப் போச்சு. எனக்குதான் கஷ்டமா இருந்ததே தவிர  அவுங்க  ரொம்ப வேகமா நடக்கறாங்க'ன்னு  சொன்னார்.  ஆஸ்பத்ரி போல  இது ஒரு தனி உலகம்,  இல்லை!  வேலை செய்யும் மக்கள் நடையோ நடைன்னு  உள்ளேயே பத்து கிமீ நடந்துருவாங்க போல!

பலபலன்னு பொழுது விடியும் நேரம் சிங்கையில் வந்து இறங்கியாச்சு.


தொடரும்.............  :-)

17 comments:

said...

ஜிராவுக்கு சுத்திப் போடச்சொல்லுங்க!

said...

வாங்க ஸ்ரீராம்.

சொன்னால் ஆச்சு! ஜிராம்மா.... எங்கே இருக்கீங்க? பேசாம நானே இங்கேருந்து சுத்திப் போட்டுடவா?

பாவி கண்ணூ பரப்பா கண்ணு நொள்ளைக்கண்ணு, கள்ளக்கண்ணு.....

said...

நல்லாயிருக்கு நண்பரே, நம்ம வேளச்சேரி தண்டீஸ்வரம் பக்கமெல்லாம் வந்துட்டு நமக்கெல்லாம் தகவலே தெரிவிக்கலையே...அடுத்த தடவை மறக்க வேண்டாம்! - சுவையான பயணப் பதிவு. தொடருங்கள். - இராய செல்லப்பா நியுஜெர்சி

said...

இவ்ளோ நாள் எங்களையும் எல்லா இடத்துக்கும் இழுத்துக்கிட்டு போயிட்டு வந்ததுக்கு நொம்ப நன்றி.

said...

வாங்க இராய செல்லப்பா.

நீங்க நியூஜெர்ஸியில் இருக்கும்போது, வேளச்சேரி வந்த தகவலை எங்கெ சொல்வது? :-) எல்லா சென்னைப்பயணங்களிலும் வேளச்சேரிக்கு வந்துக்கிட்டுதான் இருக்கோம். மைத்துனர் வீடு அங்கேதான்.

அடுத்தமுறை கட்டாயம் தகவல் தெரிவிக்கறேன். பார்க்கலாம்... சந்திப்பு வாய்க்குமா என்று!

said...

வாங்க விஸ்வநாத்.

அதுக்குள்ளே நன்றி சொன்னால் எப்படி? சிங்கையில் சுற்றும்போது கூட வரமாட்டீங்களா என்ன? :-)

said...

superkka... appadiye booka pottudungalen...

sivaparkavi

said...

நான்முகன் படுத்தியபாடு......

said...

புஹாரி ஓட்டல்ல போய் பரோட்டா தயிர் சாப்பிட்ட ஒரே ஆள் நீங்கதான் டீச்சர். பரிமாறுனவரே குழம்பிப் போயிருப்பாரு.

இப்போ ராஜ் நியூஸ் வாசிக்கிறதில்ல டீச்சர். ஒரு பிரேக் விட்டாச்சு. :)

ஏர்ப்போர்ட்டுக்குள்ள நடந்து நடந்தே அவங்களுக்கு நல்ல உடல் நலம் இருக்கும். நல்லாருக்கட்டும்.

said...

இனிய பயணம்..... சிங்கையில் தொடர்வோம்! :)

ஒவ்வொரு பயணமும் பல அனுபவங்களை நமக்குத் தருகிறது... அதற்காகவே தொடர்ந்து பயணிப்போம்.....

said...

வாங்க சிவபார்கவி.

புத்தகம் போட்டுடலாம். பிரச்சனை இல்லை. ஆனா.... வாங்க ஆட்கள் வேணுமே :-)

said...

வாங்க மாதேவி.

ஏற்கெனவே நான்முகனின் வேலையால்தான் உலகத்து சனமே கஷ்டப்படுது. இதுலே நம்ம நான்முகமும் சேர்ந்து வேலையைக் காட்டிருச்சு பாருங்க :-))))

said...

வாங்க ஜிரா.

பரிமாறுனவரைவிட அதிகம் குழம்பிப்போனவர் சமையல்காரர்தான். புதினா பரோட்டான்னதும் அட்டை போல கெட்டியா ஒரு வஸ்துவை ரொம்பநேரம் கழிச்சுக் கொண்டு வந்து வச்சாங்க. தயிர் எங்கேன்னதுக்கு அதுக்கும் ஒரு கால்மணி நேரம். எல்லோரும் டிஸர்ட் சாப்பிடும் சமயம்தான் எனக்கு மெயின்ஸ் வந்துச்சுன்னா பாருங்க.

ஆமாம்.... ஏன் சேதிகளுக்கு ப்ரேக் விட்டுட்டீங்க...... உங்க நல்ல காலமுன்னு நினைக்கிறேன்.... இப்ப வர்ற சேதிகள் எல்லாம்........ ரொம்பவே படுத்துதே !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

விதவிதமான அனுபவங்கள்தான்! நல்ல உடல்நலம் வேணும் என்பதே இப்போதைக்கு முக்கியம்!
வாங்க. சிங்கையில் இதுவரை போகாத இடம் ஒன்னு பாக்கி இருக்கு. அங்கே போகலாம் :-)

said...

என் நண்பர் ஒருவருக்கும் இந்தமாதிரியான அனுபவம் இருந்தது கலை நயம் மிகுந்த நடராஜர் சிலை ஒன்றை வாங்கி இருக்கிறார். சோதனையின் போது அவர்களுக்கு கலைப் பொருள் கடத்தப் படுகிறது என்னும் சந்தேகம் நல்ல வேளை சிலை வாங்கிய பில் அவரிடம் இருந்தது

said...

Ha ha

said...

சில சமயம் ஏர்போர்ட்டில் இது போன்ற அனுபவங்கள்..ம்ம்

நல்ல சுற்றுலா...உங்கள் பழைய பதிவுகளையும் வாசித்து வருகிறோம்...இப்பக்காதான் கமென்ட்
வாசிக்கறோம் ஒவ்வொண்ணுக்கும் கமென்ட் போட முடில...நிறைய இருக்குல்லா...அதனால் சும்மா உங்க கூட சுத்தி வர்றோம் ...