Monday, June 01, 2015

போலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வச்சுட்டோம் !

நாள் குறிச்சிட்டாங்க.  நாலு வருசக் காத்திருப்புக்கு முடிவு கட்டநாளும் நேரமும்  குறிச்சிட்டாங்க.  இந்த 28 வருசத்துலே  எத்தனை முறை பார்த்துருக்கேன்.   இப்படி ஆகுமுன்னு கனவிலும்  நினைச்சதில்லை.

நமக்கு இன்று முதல் அஃபீஸியல் விண்ட்டர்.  நேத்தோடு Autumn காலம் க்ளோஸ்.  அப்படியே இதுவும் க்ளோஸ்:(  கடைசியா முகம் பார்க்கலாமுன்னு  பகல் மூணரைக்குப்போய்ச் சேர்ந்தோம். நாலுமணி முதல்  அக்கம்பக்கம் நாலு தெருக்களை மூடறாங்க. ஏழுவரை அந்தப்பக்கம்  போகக்கூடாது.

  காவல்துறையும்,  முடிவுக்குப் பொறுப்பு ஏத்துக்கிட்ட கம்பெனியும் (Ceres Environmental New Zealand, LTD ) நகரத்துக்குள்ளே வராதீங்க. நடக்கப்போகும் சம்பவத்தை அப்படியே நேரடி ஒளிபரப்பாக் காட்டறோம்.  உங்களுக்காகவே  Drone ஒன்னு மேலே அனுப்பறோம்.  அது எல்லாத்தையும்  அருமையாச் சுட்டுத் தள்ளிக்கிட்டே இருக்கும்.  நீங்க  இருக்குமிடத்துலேயே பார்த்துக்கலாம்.  இது தவிர 20 மீட்டர் உசரத்துலே இன்னொரு  பவர்ஃபுல் கெமெரா வைக்கிறோம்.  அதுவும் காட்சிகளை அனுப்பும் என்று  உரக்கச் சொல்லித் தலையைத்தலையை அடிச்சுக்கிட்டாலும் யாரு கேக்கறா?  எல்லாம் ஓடுதுங்க நம்மைப்போல!

பதிமூணு மாடி!    50 மீட்டர் உசரம்! வயசு அதிகமொன்னும் இல்லை.  1968இல்  டிஸைன் செஞ்சு கட்ட ஆரம்பிச்சு  1973 இல் திறந்து  வச்சுருக்காங்க.  2011  ஃபிப்ரவரி  22 வரை  இயங்கியிருக்கு.  நிலநடுக்கம் வந்ததால்  அழியவேண்டிய நிர்பந்தத்தில்  மாட்டிக்கிச்சு. வெளியே பார்க்கும்போது  பர்ஃபெக்ட்டா இருக்கும் இதுக்கு,   உள்ளே  ஸ்ட்ரக்ச்சரல் டேமேஜ் ஆகிப்போச்சாம்:(  உள்ளூர் ஏவொன் நதிக்குப் பக்கம். நட்ட நடு நகரமையம். ரெண்டு தெரு தள்ளி கிடைச்ச இடத்தில் வண்டியை நிறுத்திட்டு ஓட்டமும் நடையுமாப் போனபோதே.... ஒரு ப்ளாக் தள்ளி  கேமெரா ஸ்டேண்டு எல்லாம் போட்டுத் தயாரா இருக்காங்க சிலர்.  நதியின் அக்கரையில் அங்கங்கே சிலர்.  வீட்டில் இருந்தே  இருக்கைகள் கொண்டு வந்து போட்டுக்கிட்டு நேர்பார்வையில்  கட்டிடத்தைப் பார்த்தபடி.


செக்யூரிட்டி அம்மா வந்து  இங்கே இருக்கக்கூடாது. இன்னும் தள்ளி பின்னால் இருக்கும் சாலைக்கு அந்தப்பக்கம் போகணுமுன்னு  சொல்லி,  'நான் சொன்னது உங்களுக்குக் கேட்டுச்சா'ன்னு கேட்டாங்க. சனம் மறுபேச்சு பேசாம  இருக்கைகளை வாரிக்கிட்டு அந்தாண்டை போகுது.

படம் எடுத்தாச்சா?  இன்னும்  நாலைஞ்சு . இந்தப்பக்கம் பின்புலத்தில் கட்டிடம்வர்றமாதிரி நில்லுங்க. க்ளிக் க்ளிக்.  நீயும் நில்லு.  க்ளிக்.   ஊருக்குள் மீண்டும் ட்ராம் வண்டி  இப்பஓட ஆரம்பிச்சுருக்கு.  நிலநடுக்கத்தில் நின்னுபோயிருந்த  சமாச்சாரத்தில் இது ஒன்னு.
 இந்த நிலநடுக்கத்தால் வந்த வினைதான் இன்றைய நிலைக்குக் காரணம்.  ஆச்சு நாலு வருசம் என்றாலுமே  முழுசுமா  மீண்டு வர  இன்னும் பத்து வருசமாகுமாம்.

உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன். கம்பீரமான கட்டிடம். எங்கூர் லேண்ட்மார்க்கில் ஒன்னு.  ப்ரிட்ஜ் ஆஃப் ரிமெம்பரென்ஸ்க்கு இந்தாண்டை இப்படியெல்லாம் இருக்கும் இது இன்னைக்குக் காணாமப் போகப்போகுது.    அஞ்சு மணிக்கு  ச்சூ மந்திரக்காளி!

சரி. கிளம்பலாமுன்னு  ஆரம்பிச்சார். அதுக்குள்ளே கூட்டம்கொஞ்சம் சேர ஆரம்பிச்சது.  இல்லே... இருந்து பார்த்துட்டுப்போகலாம் என்றதும், அதுதான்  லைவா காமிக்கறோமுன்னு சொல்றாங்களே. அது போதும்ன்னார்.

 போலீஸ் போறதைப் பார்க்க வரவேணாமுன்னு போலீஸே சொல்லுது!

'முடியாது. நீங்க வீட்டுப்போய்ப் பாருங்க. நான் இங்கே இருக்கேன்.  அப்புறம் அஞ்சரைக்கு வந்து என்னை பிக் பண்ணிக்குங்க'ன்னு அஸ்திரம் விட்டேன். ராமபாணம்.  இலக்கு தப்பினதா சரித்திரமே இல்லை:-)

'சரிசரி.  இந்தக்குளிரில் நடுங்கிக்கிட்டே வெளியே உக்காரணுமா? நல்ல ஜாக்கெட் கூட நீ போட்டுக்கலை.  ஆஸ்த்மா வேற இழுக்குது. சரியான இடத்துலே கொண்டுபோய் நிறுத்தறேன்.  காருக்குள்ளே இருந்தே பார்க்கிறமாதிரி'ன்னு  வேறு வழியாக்கொஞ்சம் சுத்தி  செக்யூரிட்டி  காமிச்ச சாலைக்கு அந்தப்பக்கம் இருந்த கார்பார்க்கில் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினார்.  ஏகப்பட்ட மரங்களுக்கிடையில்  கட்டிடம் தெரியுது.  வியூ சரி இல்லைன்னதும் 'அஞ்சு நிமிட் இருக்கும்போது கீழே இறங்கிப்போய் பார்க்கலாம். அதுவரை குளிரில்லாம  வண்டிக்குள்ளே இருக்கலாம்.'  ஓக்கே ஓக்கே.

மூணு டாலரை மெஷீனில் போட்டு  பார்க்கிங் அனுமதி வாங்கிக்கிட்டோம்.  கண் முன்னே குழந்தையும் குட்டிகளுமா சனம் மெள்ளமெள்ள சேர்ந்துக்க்கிட்டே போகுது.  போய் தின்ன எதாவது வாங்கிவரவான்னார்!   அதெல்லாமொன்னும் வேணாம். அதிகபட்சம் ஒரு மணி நேரம் இருக்கப்போறோம்.  அதுக்குள்ளே தீனியா?  மெரினாவில் தீனிக்கடைகளும் குப்பையுமாக் கிடப்பது மனசில் வந்து போச்சு. டைம்பாஸ் டைம்பாஸ்ன்னு கடலை விக்கறவங்க  இங்கே மிஸ்ஸிங்.

சனம்  காபியும், சாண்ட்விச்சும்மாத் தின்னுக்கிட்டே காத்திருக்கு கண் எதிரில்.  தின்னு முடிச்சதும் குப்பைக்கூடைக்குப் போயிருது குப்பை!   சின்ன ஃப்ளாஸ்க்லே  என்னமோ வச்சுக் குடிக்குது ஒரு சின்னப்பொண்.  சீனர்.

இந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளே  நானும் ரெண்டு முறை போயிருக்கேன்!  முதல்முறை கண்டெடுத்த பாஸ்போர்ட்டைக் கொண்டு கொடுத்தது. அப்ப நடந்ததை அப்பவே எழுதி இருக்கேன்.

ஒரு நாள் எங்கள் கடை வாசலில் ஒரு நியூஸிலாந்து 'பாஸ்போர்ட்' கீழே விழுந்திருந்தது. அது இன்னும் 9 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும் நிலையிலும் இருந்தது. குடிமக்களின் கடமையின்படி, நான் பொலீஸுக்கு ஃபோன் மூலம் தெரிவித்தேன். போலீஸ் கிட்டே பேசுனது இப்படி!

" ஒரு பாஸ்போர்ட்டைக் கண்டெடுத்தேன். நான் என்ன செய்ய வேண்டும்?"

" இங்கே கொண்டுவந்து ஒப்படைத்துவிடுங்கள்"

" பொலீஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கிறது?"

" நீங்கள் எங்கேயிருகின்றீர்கள்? நாளை, நீங்கள் கடை திறக்கப் போகும்போது கொடுத்துவிட்டுப் போகலாமே "

(இடம் சொல்லப்பட்டதும், எந்தக்காவல் நிலையம் அருகிலுள்ளது என்ற தகவல் கிடைக்கிறது.)

அவ்வளவுதூரம் என்னால் வரமுடியாது.நான் கடைக்குப் போகும் வழி அதுவல்ல. நீங்களே யாரையாவது அனுப்ப முடியுமா?

"இங்கே ஆட்கள் மிகவும் குறைவு. உங்களால் எப்போது முடியுமோ அப்போது கொண்டுவந்தால் போதும்"

"தொலைத்தவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படாதா?"

"அப்படியா? ஒன்று செய்யுங்கள். அதிலுள்ள எண்களைச் சொல்லுங்கள்.
யாராவது, தொலைத்துவிட்டதாக காவலரை அணுகினால் உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். அப்போது கொண்டுவரலாமே"

இது சரிப்படாது என்று, ஒரு வாரம் கழித்து வந்த வார இறுதியில், காவல் நிலையம் சென்றேன்.

வரவேற்பில், வந்த காரணம் சொல்லப்பட்டதும், ஒரு அதிகாரி, ஆசனத்தில் அமரச்செய்து, குடிக்க ஏதாவதுகா·பி, டீ வேண்டுமா என்று கேட்டு உபசரித்துவிட்டு, ஒரு படிமத்தில் விவரங்களைப் பதிந்து கொண்டார்.அந்தப் பாஸ்போர்ட் உரிமையாளருக்கு உங்கள் விலாசம் தரலாமா என்றும் கேட்டார். காரணம் ,அவர்கள் நமக்கு, நன்றிக் கடிதமோ, மலர்களோ அனுப்புவார்களாம். அவையெல்லாம் தேவையில்லை என்று சொன்னேன்.

அதன் பின் ஒரு வாரம் சென்றபின், காவல் நிலையத்திலிருந்து, நன்றி தெரிவித்து ஒரு கடிதமும், உரிமையாளர்அந்த 'பாஸ்போர்ட்'டைப் பெற்றுக் கொண்ட விவரமும் இருந்தது.

ரெண்டாம் முறை போலீஸ் செல்லில் இருக்குபடி ஆச்சு!    க்ளிக்கிப்  பாருங்கப்பா!


ஆகாயத்தில் ஒரு வண்டு வந்ததைப் பார்த்து அதுதான் ட்ரோன் என்றேன்.  கரெக்ட் அதுவேதான்.  கட்டிடத்துக்கு முன்னால் அப்படியே நின்னு பறந்துச்சு. பக்கவாட்டில் முன்னே பின்னேன்னு எல்லா திசைகளிலும்  நிற்பதும்  பறப்பதும் நகர்வதுமாக   இருக்கு! பாரதியார் சொன்னதே. எங்கோ ஒருவன்  இயக்குகின்றான்!


அஞ்சு நிமிட் இருக்கும்போது வண்டியில் இருந்து இறங்கி ஜோதியில் கலந்தோம்.


Drone  & Jet  ரெண்டும்  ஒரே ஃப்ரேமில் வருமான்னு பார்த்துக் க்ளிக்கும்போது  டமார்னு ஒரு சத்தம்.  அப்படித் தூக்கிப்போடும் அளவுக்கு இல்லை. ஒரு பத்து லக்ஷ்மிவெடியை கொளுத்திப்போட்டாப்லெ! சடசடன்னு சின்னப் பட்டாஸ் சத்தம் தொடந்து இன்னொரு டமார்.   வானத்துக்காக அதிகபட்சம் Zoom பண்ணிட்டதால் ............  அதுக்குள்ளே கெமராக்கண்ணைக் கட்டிடம் நோக்கித் திருப்புவதில் கொஞ்சம் கடுபடு பண்ணிட்டேன்.  சப்தம்  வந்த நொடி  ரெக்கார்ட் ஆகலை:(

 அதிர்ச்சியில் உறைஞ்சுருந்த கட்டிடம்  0.1 விநாடி லேசா முன்பக்கம் சரிஞ்சு பார்ப்பதுபோல் தோற்றம் காமிச்சு அப்படியே பின்பக்கமா முழங்காலை மடிச்சு நமஸ்காரம் செய்வதுபோல் சரிஞ்சு விழுந்துச்சு.  பெருமாளே காப்பாத்துன்னு வாய் தன்னிச்சையா சொன்னதே தவிர  தொண்டையை அடைச்சுக்கிட்டு ஒரு துக்கப்பந்து. கண்களில் கண்ணீர்.

ஒருவிநாடி திகைச்சு நின்ன கூட்டம், நிசப்தத்தை உடைச்சு ஒருத்தர் கை தட்டுனதும் கூடச்சேர்ந்து கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்துச்சு. யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல்  திட்டப்படி நடந்து முடிஞ்சதாம். இன்னிக்கு இரவு பார்ட்டின்னு சொன்னார்  திட்டத் தலைவர்!

அதென்னமோ  போனமுறை  இடிச்ச ரேடியோ நியூஸிலேண்ட் மாதிரி  முழுசுமா இடிஞ்சு விழாமல்  நாலு மாடி அளவுக்கு மேலே மட்டும் விழுந்துருக்கு.  அரை வேலையோன்னு நினைச்சேன்.


அப்புறம்தான்   இந்த இடிக்கும் வேலைக்குப் பொறுப்பெடுத்துக்கிட்ட  Ceres Environmental New Zealand, LTD (  2011  ஃபிப்ரவரி நிலநடுக்கத்துக்குப் பிறகு முளைச்ச புது கம்பெனி) அதிகாரி,  'இவ்வளவுதான் இடிக்கணுமுன்னுதான் திட்டமே போட்டோம்.  முதல் கட்டிடம் மாதிரி இல்லாமல் இது கொஞ்சம் நெருக்கமான தெருவின் மூலையில் (கார்னர்) இருக்கு. மேலும் 13 மாடி உயரம். எதிர்வாடையில்  மாநகர  சிட்டிக்கவுன்ஸிலின் புதுக் கட்டிடம்  வேற இருக்கு.   போலீஸுக்கு வலதுபக்கம்  நகரின் முக்கிய சாலை.  கொஞ்சம்  பிழையாப்போனால்  முன்னால் இருக்கும் தெருவில் சாய்ஞ்சு அப்படியே போய் எதிர்க் கட்டிடத்தின் மேல் விழுந்துரும். வலப்பக்கம்  சாய்ஞ்சால்  சாலை முழுசும் காலி.அதனால் அக்கம் பக்கம் இருக்கும் மற்ற இடங்களுக்குப் பரவாமல் கவனமாத்தான்  வெடிமருந்துகளைக் குறைந்த அளவில் பயன்படுத்தினோம்' என்றார்.   More than 500 metres of detonating cord and 55kg of explosives have reduced Christchurch's old police station to rubble in a matter of 8 seconds.

'கீழே விழாமல்  தங்கிய பகுதியை சாதாரண புல்டோஸர் வச்சு இடிச்சு எடுத்துடலாம். பெரிய பெரிய க்ரேன்கள்  இந்தக் குறுகலான தெருவுக்குள் வரவேண்டிய அவசியமில்லை' என்றதும் சரியான பாய்ண்ட்தான்.

புது கம்பெனி ஆக  இருந்தாலும்  இடி ஸ்பெஷலிஸ்ட்டா ஆகிட்டாங்க. இடிப்புக்குமுன்   ஓசைப்படாமல் பல நாட்கள் தயாரிப்பு வேலைகள் இருந்திருக்கு. கட்டிடத்தில் இருக்கும்   வெளிப்புற உட்புறக் கண்ணாடிகளை ஒன்னு விடாமல் கழட்டி அப்புறப்படுத்திட்டாங்க. இல்லேன்னா இடிஞ்சு விழும்போது கண்ணாடிச் சில்லுகள் தெறிச்சு ஊர்  முழுசும்  விழுந்துருக்கும்!   இந்தக் கட்டிடம் கட்டப்பட்ட காலத்தில் பரவலா பல இடங்களில்  ஆஸ்பெஸ்ட்டாஸ்  பயன் படுத்தி இருந்துருக்காங்க. அதையெல்லாம் கூட ஸ்ட்ரிப் செஞ்சுட்டாங்க.  மரக்கதவுகள்   உள்ளே போட்டுருந்த  மரச்சாமான்கள்  எல்லாமே  அகற்றப்பட்டிருக்கு.  காங்க்ரீட்டும் கம்பிகளும் மட்டுமே  இந்த ஷெல்லில் பாக்கி!

கிளம்பின  சிமெண்ட்த்தூள் புகை அடங்க  குறைஞ்சது  ரெண்டு  மணி நேரம் ஆகுமாம்.  அதுவரை அந்தப்பக்கங்களில் போக்குவரத்து நிறுத்தி இருக்காங்க.
இது ஒன்னையும் கண்டுக்காம எங்க ஏவொன் நதி வாத்துகளும் பறவைகளும்  ஜாலியா வானத்தில் கூட்டங்கூட்டமா வட்டம் போட்டுக்கிட்டே இருந்தாங்க. இது தினசரி  ஜிம் ஒர்க்கவுட்தான் அவைகளுக்கு!

நாலு வருசக் காத்திருப்பு முடிஞ்சது.  அப்ப  போலீஸ் ஸ்டேஷனே கிடையாதா?  ஏன் இல்லை? 2012, மார்ச் மாதத்தில்   22  மில்லியன் டாலர் செலவில் ஒரு சாதாரண கட்டிடம் கட்டி அங்கே இடம் மாத்திக்கிட்டாங்க. இது தாற்காலிகம் தான்.  ஆறு வருசத்துக்குப் பயன்படுத்துவாங்களாம்.

அதுக்குள்ளே  வேறெங்கேயாவது  நிரந்தரமான  வசதிகளுடன்  புதுசு கட்டிக்க திட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க.

பொறுத்திருந்து பார்க்கலாம்,  இதே இடத்தில் வேறென்ன  கட்டடம் வரப்போகுதுன்னு.

கண் முன்னே காணாமப் போனதை நினைச்சாத்தான் மனசில்கொஞ்சம் வலி.


12 comments:

said...

நெடுநெடுவென்று நின்ற கட்டிடம் சட்டென்று நொறுங்கி விழுவதைப் பார்க்கும்போது மனத்தில் இனம்புரியாத வலி உண்டாவது உண்மைதான். அந்த 'பெருமாளே காப்பாத்து' நீங்கதானா டீச்சர்?

said...

இங்கே எனக்கே நெஞ்சுல வலி வந்துடுச்சு. வயசு 80.தாங்குமா?

said...

ரங்கநாதன் தெருவில் இது மாதிரி ஒரு கட்டிடத்தை நமஸ்காரம் செய்ய வைக்க முடியுமா..?
ரங்கநாதனுக்கே வெளிச்சம். ரொம்பவே மெனக்கிட்டிருக்கீர்கள். கோபாலுக்குத்தான் நன்றிகள்..!

said...

எத்தனை பேர்களின் உழைப்பு வீண்...

கஷ்டம்...

said...

துளசிதளம்: போலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வச்சுட்டோம் ! = அதிர்ச்சியில் உறைஞ்சுருந்த கட்டிடம் 0.1 விநாடி லேசா முன்பக்கம் சரிஞ்சு பார்ப்பதுபோல் தோற்றம் காமிச்சு அப்படியே பின்பக்கமா முழங்காலை மடிச்சு நமஸ்காரம் செய்வதுபோல் சரிஞ்சு விழுந்துச்சு. பெருமாளே காப்பாத்துன்னு வாய் தன்னிச்சையா சொன்னதே தவிர தொண்டையை அடைச்சுக்கிட்டு ஒரு துக்கப்பந்து. கண்களில் கண்ணீர். = அருமையான பதிவு. நேரில் பார்த்தாற் போல் உணர்வு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் Tulsi Gopal

said...

வாங்க கீத மஞ்சரி.

எங்க பகுதியில் இருந்த மொத்தக் கூட்டத்தில் நாங்க மட்டும்தான் இந்தியர். மத்தவங்களுக்குப் பெருமாளைத் தெரிஞ்சுருக்குமோ!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

80ன்னா தாங்காதுதான். ஆனால் இதுக்கு வயசு 42 !

said...

வாங்க நானானி.

ரங்கநாதன் தெருவா? ஊஹூம்.... ச்சான்ஸே இல்லை!

ஆமாம் இதுலே கோபாலுக்கு என்ன நன்றிகள்? இருந்து பாரக்க விடாம அங்கிருந்து என்னைக் கிளப்பவே குறியா இருந்ததுக்கா???

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஏற்கெனவே நிகழ்ந்த ரெண்டு நிலநடுக்கங்களால் பலஹீனப்பட்டுப்போன கட்டிடம் இதுன்னு நிபுணர்கள் சொல்லிட்டாங்க. அடுத்து ஒரு நிலநடுக்கம் வந்தால் நிறைய உயிரிழப்பு நேரும். அதுக்காகத்தான் இடிக்கும்படி ஆச்சு. இனிமேல் நகரமையத்துலே கட்டும் கட்டிடங்கள் அதிகபட்சம் 6 மாடி மட்டுமேன்னு இப்ப புது விதி வந்தாச்சு.

சின்ன நாடு, குறைந்த மக்கள் தொகை என்பதால் ஒவ்வொரு உயிருமே விலை மதிப்பில்லாதது. இழக்கமுடியாது!

said...

வாங்க ரத்னவேல்.

மிகவும் நன்றி.

said...

பெருமாளே காப்பாத்துன்னு உங்க குரலையும் கேட்டாச்சு. :)

ஒரு கட்டிடத்தை இடிக்கிறதுக்கு இவ்வளவு சிரமங்கள்.

வசதியான நாட்டுல நிலநடுக்கம் வந்தா இதெல்லாம் சரி.. நேபாளம் மாதிரி ஊர்கள்ள வர்ரப்போ தான் இதனோட கொடூரம் பப்பரப்பாங்குன்னு தெரியுது. ஆண்டவன் என்ன நெனச்சு இதெல்லாம் செய்றானோ!

said...

வாங்க ஜிரா.

எனெக்கென்னமோ கூடுதலான பயத்தில் ( என் கண்ணுக்கு ) நல்லா இருக்கும் கட்டிடங்களைக்கூட இடிச்சுத்தள்ளிடறாங்கன்னு ஒரு எண்ணம். தெரியாமக்கூட ஒரு உயிர் போயிடக்கூடாதுன்னு இவுங்க எடுத்துக்கற கவனம் பிடிச்சுதான் இருக்கு. என்றாலும் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்ததால்... என் புத்தி அப்பப்ப .. போதுண்டா ஒரேதா ஆடாதேன்னு சொல்லிக்கிட்டேதான் இருக்கு:(