Wednesday, June 03, 2015

பதினெட்டாம்படியேறி பெருமாள் தரிசனம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 55)


செம்பியன் ரெஸ்ட்டாரண்டில்  காலை  உணவு.  சங்கம் கீழ்தளத்தில் விஸ்தாரமா இருக்கு.  சுவர்களில் அழகான ஓவியங்கள். இதோ  குந்தவை, ராஜராஜன். இந்தப்பக்கம் அவுங்க தாய்  பெரிய பிராட்டி செம்பியன் மாதேவி! சுற்றிவர  அழகழகான ஓவியங்கள்.  பொன்னியின் செல்வனை மனசுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது:-)

படு நீட்டான டைனிங் ஹால். பதார்த்தங்களையும் சீராக  அங்கங்கே அடுக்கி வச்சுருந்தாங்க.  நமக்கு எப்போதும் வழக்கமானவைதான்.  வடை பார்க்கும்போதே நல்லா  இருக்குமுன்னு தோணுச்சு. அதானால் ரெண்டு!



காஃபிக்கான பால் மட்டும் தவலை  போலுள்ள குடத்தில் காய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. ஃபில்டர்காஃபி ஸ்டேஷன்!


ஹொட்டேல் பிள்ளையார்  அரிசி ரங்கோலிக்குப்  பின்னால்!

எட்டுமணிக்குக் கிளம்பி  திருவெள்ளறை போறோம். காலையில் மற்ற கோவில்கள்,  மாலை ரெங்கன் என்று பிரித்தாளனும். காலையிலேயே  ரெங்கனைப் பார்க்கப் போனால் அங்கிருந்து  கிளம்பவே மனசு வராது.  ஒரு 28 கிமீதான்.  காவிரி கொள்ளிடம் கடந்து பிச்சாண்டவர் கோவில், மண்ணச்சநல்லூர் தாண்டி திருவெள்ளறை போய்ச்சேர முக்கால் மணி ஆச்சு.  மெயின்ரோடு கடைவீதிகளில் எல்லாம் நல்ல  கூட்டம்! (நியூஸி ஆட்களுக்கு  பத்திருவதுபேர் இருந்தாலே கூட்டம்தான். அதுக்கும்மேலேன்னா... நல்லகூட்டம்!)

கோவிலுக்கான நுழைவு வாயில் நாம் என்னென்ன தரிசனம் செய்யப்போறோமுன்னு ட்ரெய்லர் காட்டுது:-)  அதைக் கடந்து  ரெண்டுபெரிய மதில்களுக்கிடையில் சந்துபோலிருக்கும் வழியில் போய்   கோவிலுக்கு முன் வண்டியை நிறுத்தினோம்.  பாதியில் வேலை நின்னு போன  மொட்டைக் கோபுரம்!   அடடா....   முந்தி ஸ்ரீரங்கத்து  ராஜகோபுரமும் இப்படித்தானே அரைவாசியாக் கிடந்துச்சு!   பின்னாளில் இதை (யும்) கட்டி எழுப்புவாங்களா இருக்குமோ?

100 அடி உசரமுள்ள வெள்ளைப் பாறை(குன்று?) மேல்  கோவிலைக் கட்டி இருக்காங்க!  ஸ்வேதபுரின்னு கூட ஒரு பெயர் இருக்காம்!  மார்கண்டேய மகரிஷி பெருமாளை தரிசிக்கணுமுன்னு தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார். அப்போ  தன்னுடைய படைகளுக்குத் தொந்திரவு கொடுத்துக்கிட்டு இருக்கும் வெள்ளைப்பன்றியைத் துரத்திக்கிட்டு சிபி சக்ரவர்த்தி வர்றார். பன்றி போய் ஒரு குகைக்குள் நுழைஞ்சுருது.  மன்னரும் குகைக்குள் போறார். அங்கேதான்  மார்கண்டேயர்  இருக்கார். முனிவரை வணங்கி, பன்றி விவரம் சொன்னதும்,  'நான் தவம் செய்தும் வராதவர், உன்முன்னே வெள்ளை வராஹமாக வந்து அருள் செய்தார்'னு சொன்னாராம். உடனே  இருவரும்  பெருமாளை தியானிக்க  மஹாவிஷ்ணு தரிசனம் கொடுத்தார்னு ஒரு கதை இருக்கு.  அது நடந்த இடம் இதுதான்.


பெரியாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் பாடி மங்களசாஸனம் செஞ்ச  கோவில். 108 திவ்யதேச வரிசையில்  ஆறாவது  இடத்தில் இருக்கு.

நிறையப் படிகள் இருக்கு ஏறிப்போக. என் வழக்கப்படி எண்ணிக்கிட்டே ஏறினேன். 18!    பதினெட்டாம்படி தாண்டி பெருமாள் ஸேவிக்கணும்.பேஷ் பேஷ்!

கோபுரவாசலைக் கடந்து அடுத்து கண்ணெதிரில் நிக்கும் சின்னக்கோபுரம் கடக்கணும்.  நாலு படி இங்கே!  அதையும் தாண்டினால் இன்னொரு பிரகாரம். பிரகாரச் சுவர்களே  கோட்டை மதில்கள்போல் ரொம்ப  உசரமா இருக்கு!
அதென்னமோ முதலில் ப்ரகாரங்களைச்  சுத்தி வந்துட்டுத்தான் மூலவரை ஸேவிக்கணும் என்றொரு விதி இருந்தாலும், இந்த அடங்காப்பிடாரியால் அப்படி இருக்க முடியலை.  பரபரன்னு  பெருமாளைத்தேடி ஓடினேன்.  நம்ம இவர் வழக்கம்போல் எனக்கு முன்னால் ஓடுறார்.  இந்தப்பக்கம் கண்ணைத் திருப்பிட்டு முன்னால் பார்த்தால் இவரைக் காணோம். தக்ஷிணாயணம் என்ற பெயரோடு  ஒரு வாசல். சரி இவர்   உத்தராயணம் போயிருப்பார்னு நினைச்சு அந்தப்பக்கம் சுத்திக்கிட்டுப்போனால் அங்கே வாசல் ஒன்னும் இல்லை.  சுவர் முழுக்க சாமிகள். அதுலே நம்ம புண்டரீகாட்ஷனும் இருக்கார்.

எல்லோரும் சாமிப்பெயரை பிள்ளைகளுக்கு வைப்பாங்கன்னா, பெருமாள் பக்தன் பெயரை வச்சுக்கிட்டார்னு சொல்லணும். புண்டரீகர்னு ஒரு  தவசீலர்  நந்தவனம் ஒன்னு அமைச்சு அதில்  நட்டு வளர்த்த துளசியை மாலையாக்கி தினமும் பெருமாளுக்குச் சார்த்துவார். அவருடைய பக்தியை மெச்சி,  அவருக்குக் காட்சி கொடுத்ததோடு , தனக்கு புண்டரீகாக்ஷன்னு  பெயரும் வச்சுக்கிட்டாராம்!


அதுக்குள்ளே  அங்கே  என்னைத்தேடி வந்த சீனிவாசன்,  வாசல் அங்கே இருக்குன்னதும்  போனவழியே திரும்பினேன்.  பேசாம வலம் வந்துருக்கலாம். இப்ப அப்ரதக்ஷணமா ஆகிப்போச்.  அப்பதான் கவனிக்கிறேன் இங்கே  இதே பக்கத்தில்தான் உத்தராயணம் வாசல் இருக்கு!  தக்ஷிணாயணம் உத்தராயணம் ரெண்டுக்கும் இடையில் சிற்பங்கள்.

தைச்சுப் போட்ட படம் !

'ஸார், தக்ஷிணாயம் பக்கம் போயிருக்கார்'ன்னு  சொல்றார் சீனிவாசன்.  படிகள் இருக்கு மேலே போக.  கொஞ்சம் இருட்டா இருந்தாலும்  எண்ணிக்கிட்டே மெள்ளப் படி ஏறினேன். 21.

ஒரு கூடம் போல இருக்குமிடத்தில் போய்ச் சேருது படி.  இடதுபக்கம் கருவறை. உள்ளே பெருமாள்  செந்தாமரைக் கண்ணன் நின்ற கோலத்தில். அதென்னவோ கூட்டமா நிக்கறாரேன்னு பார்த்தால்  சந்த்ர சூரியர்களுடன்   ஆதிசேஷனும் நின்ற கோலத்தில். ஆஹா.... நாலு பேர்.  அப்ப கூட்டம்தான்:-))))
இந்தப்பக்கம் மார்கண்டேயர்! பங்கஜவல்லி என்ற பெயருடன் தாயார் உற்சவமூர்த்தியாக! இங்கே நம்ம தாயாருக்கு  வீட்டுப்பெயர் செண்பகவல்லி. ஆனால் வெளியே போகும்போது   பங்கஜவல்லி:-)

ஒருநாள் தாயாரிடம்  'உனக்கு என்ன வேணுமுன்னு' கேட்டுருக்கார் பெருமாள்.  முதலில் ஒன்னும் வேணாமுன்னு  (என்னப்போல்!) சொன்ன தாயார்.  கொஞ்சம் யோசிச்சு 'என் பிறந்த வீடான இந்தப் பாற்கடலில் எனக்கு  முன்னுரிமை வேணுமுன்னு சொல்லவும்,  'அடடா....  பார்யா வீடு பரம சுகமல்லோ!  இதை விட்டுத்தரச் சொல்றாளே'ன்னு  ஒருவிநாடி யோசிச்சவர் இதை விட பேஷான  இடம் ஒன்னு இருக்கு!  அங்கே உனக்கே முன்னுரிமைன்னு சொல்லி இருக்கார்!. அந்த இடம் இந்த திருவெள்ளறைதானாம்!  அதனால் இங்கே பங்கஜவல்லிக்கு புறப்பாடுகளில்  முன்னுரிமை!  ஜாம் ஜாமென்று  முன்னால் போகும்  நம்ம  பங்கஜத்துக்குப் பின்னேதான் பெருமாள் போவாராம்!

நல்லபடி தரிசனம் ஆச்சு. நாங்க மூணு பேர்தான் அங்கே பட்டர்களைத் தவிர்த்து!

திரும்ப கீழே இறங்க கூடத்தின் பக்கம் வந்தபோது  கோபாலின் கழுத்தில் விழுந்தது துளசி மாலை!  பெருமாளுக்குச் சாத்துனதாம்! அவருடைய கையில் இன்னொரு மாலையைத் திணிச்சு  மனைவிக்குப் போடச் சொன்னாங்க.  துளசிக்கே துளசி மாலை!  கழட்டினதும் சடார்னு கைநீட்டி வாங்கி வச்சுக்கிட்டார் பட்டர். அப்ப அடுத்து  வரும் பக்தர்களுக்கு  துளசி சூடிய  துளசி மாலையோ! நல்லா இல்லையே.........    ப்ச்....:(  தினப்படி  கைச்செலவுக்கு இப்படி ஒரு கைங்கர்யம். ஆனால் இவ்ளோ அவ்ளோன்னு ஒன்னும் கேட்கலை.  வாயைத் திறக்குமுன் கோபாலே  கொடுத்துட்டார்.

கிழக்கு பார்த்து நிற்கும் பெருமாளின்  இடது கைப் பக்கம் தக்ஷிணாயணம், அவருக்கு  வலது கைப் பக்கம் உத்த்ராயணம் என்று  வாசப்படிகள்  வந்து முடியுது.  உத்தராயணத்தை ஆறு மாசத்துக்கு மூடி வைக்கிறாங்க, ஆடி முதல்  மார்கழி வரை. அப்ப தக்ஷிணாயணம் திறந்துருக்கு! தை மாசம் முதல் ஆனி வரை  தக்ஷிணாயணம் மூடி இருக்கும். ஆறாறு மாசத்துக்கொரு வாசல் திறப்பு!

சூரியனின் சுற்றுதான் கணக்கு. பூமத்திய ரேகையில் இருந்து ஆறுமாசம் வடக்கு, ஆறுமாசம்  தெற்குன்னு சூரியன்  சஞ்சாரம் செய்யறான்னு  சொல்வாங்க. (சூரியன் என்னவோ ஒரே இடத்தில்தான் இருக்கான்.  பூமிதான் தன்னைத்தானே சுத்திக்கிட்டுச் சூரியனையும் சுத்துது என்பது   பின்னாட்களில்  கண்டுபிடிக்கப்பட்டது என்பதை கொஞ்சம்  தள்ளி  வச்சுட்டு எழுதறேன்.சரியா?)


வடக்கு வாசல் குபேரனுக்கு உரியது. தென்திசையோ  எமன் வடிவில்  இருக்கும் தர்மராஜனுக்கு !

குபேரன்னா குஷியாகும் மனசு எமன் என்றால் சோர்ந்து போகாதோ? அதனால்  எமனுக்குப் பதிலா கோவிந்தரா இருக்காராம் பெருமாள். ரெண்டும் ஒன்றுதான் ! கோவிந்தா..... கோவிந்தா ....:-)

கீழே வந்தப்ப,   பெருக்கு மாறால் பிரகாரத்தைச் சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தவங்க ரேவதி!  கொஞ்சநேரம் பேசிட்டு, என்னோட நெருங்கிய தோழியின் பெயரும் உங்க பேர்தான்னு  சொல்லிட்டு க்ளிக்கினேன்.
தாயார் செண்பகவல்லிக்குத் தனிச் சந்நிதி. ராமானுஜருக்கும்  தனியா ஒரு சந்நிதி  உண்டு.

கோவில் புஷ்கரணியில் திவ்ய கந்த, குச, சக்கர, புஷ்கல, பத்ம, வராக, மணிகர்ணிகான்னு ஏழு தீர்த்தங்கள் ஒன்று சேர்வதா ஐதீகம்.

மண்டபத்துக்குள்ளே  தசாவதார சந்நிதின்னு  ஒன்னு இருக்கு!
காலையில் மழை பேய்ஞ்சதோ இல்லை கோவிலை   அலம்பி விட்டார்களோ.....ப்ரகாரங்களில் எல்லாம் ஈரத்தரை.  அப்படியே நடந்து அடுத்துள்ள சக்ரத்தாழ்வார் சந்நிதிக்குப்போய் கும்பிட்டோம். கம்பிவழி தரிசனம்தான்.




ஆஞ்சிக்கும்  தனியாக   ஒரு  சந்நிதி. இவர் காரியசித்தி ஆஞ்சநேயர்!  லக்ஷ்மிநரசிம்மர், பெரியாழ்வார், ஆண்டாள் எல்லோரையும் வணங்கி, நம்ம ஆண்டாளுக்கு 'தூமணி மாடத்து....' பாடிட்டுத்தான்  வெளியே வந்தேன்.


பெருமாள் தளிகைக்கு  உருளியில்  நைவேத்யம்  கொண்டு போறாங்க.

எல்லோருக்கும் கைகாட்டி  முடிக்க நேரமாகும்தான்.  அதுவரை....    போகட்டும்....பெருமாளே!

நல்ல பெரிய கோவில்தான்.  கோட்டைபோலவே சுற்றுச்சுவர் டிஸைன் இருக்கு. வெளிப்ரகாரத்தில்  காடு போல் வளந்துருக்கும் புல்தரைக்கு அந்தாண்டை  ஆதிசேஷனுக்கு தனியா ஒரு சந்நிதி. கதவு சார்த்தி  இருக்கு.

 மூலவரைத்தவிர எல்லா சந்நிதிகளும் சாத்திதான் வச்சுருக்காங்க.  சொன்னால்   பட்டர் வந்து திறந்து தரிசனம் செஞ்சு வைப்பார் போல!  ஆனால்கம்பி  வழி போதுமுன்னு  இருந்துட்டேன்.  சேஷனுக்கு கம்பி தரிசனம் கிடையாது!

நாம் இங்கே அங்கேன்னு சுத்திக்கிட்டு இருந்தப்ப கோஷ்டி சொல்ல வந்தவர்கள் கிளம்பிப்போறதைப் பார்த்தேன்.  மிஸ் பண்ணிட்டேனே......
ஆ'லை'ய நிர்வாக அறிவிப்பும் அதனருகில் ஆட்டோக்ராஃபும்:(

காலை   ஏழு மணி முதல் பகல் ஒன்னேகால் வரையிலும், மதியம் மூணரை மணி முதல்  இரவு  எட்டுவரையில் கோவில் திறந்து வைக்கிறாங்க.
கோவிலுக்கு வெளியே   எதிர்வாடையில்  மடம் இருக்கு!  ஸ்ரீராமானுஜர்னு நினைக்கிறேன்.

 திருவெள்ளறைதான்  உய்யக்கொண்டான், அவதார ஸ்தலம்.  இவர் நாதமுனிகளின்   ப்ரதம சீடர்  என்ற  நினைவு.  எங்களாழ்வானின் அவதார ஸ்தலமும். இதுதானாம்.

எங்கே பார்த்தாலும் பெருமாள் சின்னங்கள்தான்!

பதினெட்டாம்படிக்குப் பக்கத்தில் பஸ் டைமிங்ஸ் போட்டு வச்சுருப்பது நல்லசெயல்!

பத்துமணி ஆச்சு. நல்ல தரிசனமுன்னு பேசிக்கிட்டே கிளம்பி அதே மதில்களுக்கிடையில் உள்ள தெருவில் வந்து   திரும்புமிடத்தில் பயங்கரக்கூட்டம்.  எதோ கல்யாண விழா. பெரிய பெரிய  வண்டிகள்  அடைச்சு நின்னு ஒவ்வொன்னா கிளம்புது. கட்சிக் கல்யாணம் போல!  அம்மா படம் போட்ட  வண்டியை  வழி அனுப்பறாங்க.  மாவட்ட கவுன்சிலர் மூக்கன்  வண்டி!  அதுவரை பொண்ணு மாப்பிள்ளையை யாரும் சட்டை செஞ்சுருக்கமாட்டாங்க. இனிமேத்தான்.....



கோவில்  அலங்கார நுழைவு வாசலுக்குப் பின்னாடி தசாவதார சிலைகள் நல்லாவே இருக்கு.


அதே மண்ணச்ச நல்லூர் வழியா  திரும்பிப்போறோம்.  அண்ணனுக்கு செல்லில்   திருவெள்ளறை தரிசனம் ஆச்சுன்னு  தகவல் சொன்னேன்.  அப்ப அண்ணி, 'ஸ்வஸ்திக் டிசைனில் இருக்கும்   மாமியார் மருமகள் குளத்தைப் பார்த்தேதானே?'ன்னாங்க!

ஙே..............


பல்பு வாங்கினபிறகு  வலையில் தேடியதில் ஆப்ட்டது! பட உரிமையாளருக்கு நன்றிகள்.


தொடரும்:-)


16 comments:

said...

அண்மையில் இக்கோயிலுக்குச் சென்றுள்ளேன். அழகானகோயில், கோபுரம். பதிவைப்படித்துக்கொண்டு வரும்போதே ஸ்வஸ்திக் குளத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைத்தேன். இறுதியில் விவரமறிந்தேன்.

said...

திருவெள்ளறை பற்றிய வரலாறு ரொம்பவே சுவாரஸ்யம்...

தலைப்பு பற்றி : ஒருவேளை ஐயப்பனோ...! எல்லாமே ஒன்று தானே அம்மா...

said...

படங்களும் பதிவும் நேரில் பார்த்த உணர்வை தருகிறது. தொடருங்கள்! தொடர்கிறேன்.

said...

திருவெள்ளறை. திருச்சி பக்கத்துல இருக்குல்ல. ஒரு வாட்டி திருச்சி போனப்போ இங்கயும் போகச் சொல்லி யாரோ சொன்னாங்க. ஆனா போக முடியல.

ரொம்பநாள் கழிச்சு அரங்கநாதன்னு எழுதிப் பாக்குறேன். எந்த ஆழ்வாரும் ஸ்ரீரங்கம்னோ ரங்கன்னோ பாடலை. அரங்கநாதன்/திருவரங்கம் தான். ரங்கத்துக்கும் அரங்கத்துக்கும் பொருளே வேற. ஏன் இப்படி மாத்திச் சொல்றீங்கன்னு கேட்டா யார் கிட்டயும் பதிலும் இல்லை. திருவை ஸ்ரீ ஆக்குறது கூட ஓக்கே. அப்பக்கூட ஸ்ரீஅரங்கம்னுதானே வரனும்? என்னவோ போங்க. ஆழ்வார் பயன்படுத்திய பேர்களுக்கே இதுதான் நிலை போல.

அது ஏன் பள்ளி/கல்லூரி மாணவ மாணவியர் நான்காம் பிரகாரத்துக்குப் போகக் கூடாதாம்?

உழுந்த வடை பாக்க நிறத்தாலும் அளவாலும் பதமா இருக்கு. ரெண்டு என்ன.. மூனு வடைகள் எடுத்திருக்கலாம். :)

அந்த ஓவியங்களும் அழகுதான். இராஜராஜசோழன்னாலே நடிகர் திலகத்தோட முகம் நினைவுக்கு வர்ரதைத் தவிர்க்க முடியல.

said...

18 படி பெருமாள் கோவில் விவரங்கள் அறிந்தோம்
ஸ்வஸ்திக் குளத்தின் மாமியார் மருமகள் பெருமை என்ன ?
ரொம்ப ஆவலா இருக்கு ?

said...

அம்மா, இப்போது கோவையை சேர்ந்த ஒரு மருத்துவர் குடும்பத்தினர் தனியாக அந்த முன் கோபுரம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளார்கள்.

said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் துளசி.வாழ்கவளமுடன்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இதுக்குத்தான் போகுமுன் விவரமெல்லாம் சேகரிச்சுக்கணும் என்பது. டீச்சரா இருந்தாலும் நோட்ஸ் ஆஃப் லெஸன் முக்கியம் பாருங்க! நிறைய இடத்தில் இப்படிக் கோட்டை விட்டுருக்கேன். 'பின்னொருக்கில் ஆகட்டே'ன்னு இருக்கவேணும்தான்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இருமுடிக்கட்டு இல்லாம இங்கே 18 படிகள் ஏறிப்போகலாம்!

எல்லாம் ஒன்னுதான். ஆனாலும் இருக்குமிடங்கள் வெவ்வேறா இருக்கே:-)

said...

வாங்க செந்தில் குமார்.

உங்கள் ஆதரவுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

அடுத்தமுறை வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் போயிட்டு வாங்க. சாமி சூப்பரா இருக்கார்!

அரங்கனுக்கே இப்படின்னா........

பள்ளி கல்லூரி மாணவர்கள் அங்கிருக்கும் தனிமையை வேறவிதமா பயன்படுத்திக்கறாங்களோ என்னவோ!

said...

வாங்க சசி கலா.

என்னவா இருக்கும்? ஒருவரை ஒருவர் பார்த்துக்க முடியாது என்பதைத்தவிர:-)))

said...

வாங்க சாந்தா.

முதல்முறை வருகை தந்ததோடு நல்ல சேதியையும் சொல்லி இருக்கீங்க!

மனம் நிறைந்த நன்றிகள்.

said...

வாங்க கோமதி அரசு.

ரொம்பநாளா உங்களைக் காணோமே? பயணத்தில் இருப்பீங்கன்னு நினைச்சேன். தேர் நிலைக்கு வந்தாச்சா?

வாழ்த்துகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

இன்னொருக்கா உங்க ஊருக்கு வர்றோம் இன்னும் ஆறு மாசத்தில்:-)

said...

திருவெள்ளறை பற்றி தெரிஞ்சுக்கிட்டொம்...நல்ல அழகான படங்கள்...

said...

வாங்க துளசிதரன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.