Wednesday, June 24, 2015

கொடிமரம் இப்படி படிமரமா ஆகிருச்சே! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 60)

பக்தர்கள் பரமனை ரசிக்க படிகளேறி உள்ளே ஓடினால்....  நானும் வருவேன்னு அடம்பிடிச்சு இப்படிப் படிகளில் ஏறிப்போகுது பாருங்க!

திரு அன்பில் வடிவழகனை தரிசித்த கையோடு திருப்பேர்நகர் போறோம். காவிரிக்கு அந்தாண்டை இருக்கார். எங்கேன்னு யாரோ கேக்க, அப்பாலே இருக்கார்ன்னு  பதில் கிடைச்சதோ என்னவோ இவர் அப்பாலரங்கனா ஆகிட்டார். கோவிலடி என்றும் ஒரு பெயர் உண்டு இந்தத் தலத்துக்கு! உண்மையில் கோவிலடி என்றால்தான் உள்ளூர் மக்கள்ஸ்க்கு நல்லாவே தெரியுது!


கிடந்த கோலத்தில் இருப்பு! நம்ம ஸ்ரீரங்கத்து  ரங்கனுக்கும்  மூத்தவராம்!

பஞ்சரங்கத்தலங்களில் ஆதிரங்கத்துக்கு (ஸ்ரீரங்கபட்டினம் மைசூர்) அடுத்தது  இந்த அப்பாலரங்கம்தான்.  மூணாவது இடம்தான் ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டவனுக்கு.  நாலாவது சதுர்த்தரங்கம் கும்பகோணம் சாரங்கபாணி,  அஞ்சாம் இடம் நம்ம  இந்தளூர் (மாயவரம்)பரிமளரங்கனுக்கு!

சரியாச் சொன்னால் திரு அன்பில் கோவிலுக்கு நேரா குறுக்கால் போனால் நாலே கிமீயில் இந்தக் கோவில் வந்துரும் என்றாலும், கொள்ளிடம் நடுவில் இருக்கே!  அதனால்  கொஞ்சதூரம் கிழக்கே போய்  கொள்ளிடம் பாலம் கடந்து பூண்டி  போகும் வழியில் போய் மறுபடியும் மேற்கே  போகணும். சுத்துதான் ஆனாலும் ரொம்ப தூரமோன்னு  நினைக்க வேணாம். ஒரு பதினாறு கிமீ இருக்கலாம்.


நான் சொன்ன 'கொஞ்சதூரம் ' போகும்போதே  நிறையப்பேர் கைகளில் பூஜை சாமான்களுடன் நடந்து போறாங்க. பார்த்தால் கிறித்துவமதம் சேர்ந்தவர்களாத் தெரிஞ்சது. சிலர் தலையில் ஒரு கூடையுடன்.  கூடைக்குள்ளில் கரிஅடுப்பு போல சின்னதா ஒன்னு புகைஞ்சுக்கிட்டு வேற இருக்கு!  என்னவா இருக்குமுன்னு யோசிக்கும்போதே இடதுபக்கம் சிலுவைகள் புதைந்திருக்கும் இடம் பார்த்ததும்  இன்றைக்குக் கல்லறைத் திருநாளோ (All souls day)என்று நினைச்சதும் சரியாத்தான் போச்சு!







வலப்புறம் திரும்பிப் பாலம் கடந்ததும் ஏதோ வனத்துக்குள் போகுது பாதை.  வனப்பயணம் அலுக்கவே இல்லை.  பாதையில் அங்கங்கே மயிலாரின் நடமாட்டம்!  கொஞ்சம் ஆடக்கூடாதோ?  வாகன நடமாட்டத்துக்குப் பழகிய மயில்கள் என்பதால் வண்டிச்சத்தம் கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்துட்டு, பக்கவாட்டுப் புதர்களுக்குள் போயிருதுங்க


இடதுபக்கம் திரும்பும்படி உத்தரவாச்சு.  திரும்பினோம். வழி தவற சான்ஸேஇல்லை!  கோவில் வாசலுக்குப் போயாச்சு.  கோவிலடி!  கொஞ்சம் உயரமான இடத்தில் இருக்கு கோவில். மூணுநிலை ராஜகோபுரம்!  சின்னதா ஒரு தேர் கார்நிறுத்துமிடத்துக்கு அருகில்.


வழக்கமில்லாத வழக்கமா இவர் 'துளசி' வாங்கினார்.  'பாவம்'  துளசின்னு தோணி இருக்கும் போல!  இருக்கட்டும்! கோபுரவாசல் கடந்து உள்ளே போறோம். எதிரில் இன்னும் ஒரு இருபது படிகள் ஏற்றம். இதுலேதான் கொடிமரமும் ஏறி நடுவழியில் நிக்குது! போறபோக்கில்  இதையும் கும்பிட்டுவிட்டு உள்ளே நுழையறோம்.


நம்ம பெருமாள், மேற்கு பார்த்து கிடந்த நிலையில்  ஸேவை சாதிக்கிறார்.   ஒரு கை பாம்புப் படுக்கையின் அருகில் உக்கார்ந்திருக்கும் உபமன்யூ தலையைத் தொட்டு ஆசி வழங்கும் நிலையிலும், இன்னொரு கை ஒரு சின்னக்குடத்தை அணைத்துப்பிடிச்சுத் தூக்கி வச்சுருக்கும் நிலையிலும்  காட்சி தர்றார். அந்தக்குடம்தான் அப்பக்குடம். அதனால் அப்பக்குடத்தான் என்ற பெயரும் வந்துருக்கு.


தாயார் பெயர்  கமலவல்லி. இந்திரா தேவின்னும் ஒரு பெயர் உண்டு.

சொல்லிவச்சாப்லெ இந்தக் கோவிலுக்கும் நிறைய கதைகள் இருக்கு! ஒன்னொன்னும் ஒரு விதம்:-)


 உபமன்யூ என்னும் அரசன், ஒருநாள்  தியானம் செஞ்சு அதில் ஆழ்ந்துபோயிருக்கும்போது...  துர்வாஸ மகரிஷி வர்றார்.  மன்னன் உடனே தன்னைக் கவனிச்சு மரியாதை செய்யலைன்னு  மூக்குக்குமேல் கோபம் வந்து, 'பிடி சாபம். உன் பலம் அழியட்டும்' என்றார்.   அரசனுக்கு பயம் வந்துருச்சு. புராணங்களின் வழக்கப்படி சாபவிமோசனம் என்னன்னு கேட்க,   பலாசவனத்துக்குப் போய்   ஒரு லக்ஷம்பேருக்கு அன்னதானம் செய்' என்றாராம். இந்த திருப்பேர் நகருக்கு,  அப்போ இப்படி ஒரு பெயர் இருந்துருக்கு.



அதன்படியே  சாபவிமோசனத்துக்கான அன்னதானம்  தினமும் நடந்துக்கிட்டு இருக்கு. பெருமாள் பார்க்கிறார் .  ஒருநாள்  கிழவராக  உருவம் எடுத்து  சாப்பாட்டுக்கு வர்றார். சாப்பிட ஆரம்பிச்சவர் , அன்றைக்கு செஞ்சுவச்ச சமையல் முழுசையும் சாப்பிட்டுவிட்டு, இன்னும் எதாவது இருக்குமா என்ற கேள்வியுடன்  பார்க்க,   திகைப்புடன் இருந்த உபமன்யூ' இன்னும் எதாவது தேவையா பெரியவரே'ன்னு  கேட்டதும், ஒரு குடம் அப்பம் வேணும் என்றாராம்.  உடனே அப்பம் தயாரிக்க ஆரம்பிக்கிறார்  சமையல்காரர்.

பெருமாள்  ஒரு அலங்காரப்ரியன் என்று சொல்லக்கேள்வி. இப்பப் பார்த்தால்...  சரியான சாப்பாட்டுப்ரேமியுமா இருக்காரே! வைகுண்டத்தில் பெருமாளுக்கு  அமைஞ்ச  சமையல்காரர்  சரியா சமைக்கறதில்லை போல!  

அப்பக்குடம்  கிழவர் கைக்கு வந்ததும் உபமன்யூவின் சாபம் தீர்ந்து  பெருமாள் தரிசனம்  கொடுத்தார். இவ்ளோ சாப்பிட்டால் அசதியா இருக்காதா? அதான் படுக்கை(யும்) போட்டாச்சு.  பக்தர்கள் மனதில் இருந்து  இடம் பெயரக்கூடாது என்று விண்ணப்பித்தபடியால் சரி ன்னுட்டு இங்கேயே இருந்துட்டார்.  அதுவும் திருப்பேர் நகர் என்ற பெயருக்கும் காரணமா இருக்கு.

இன்னொரு கதை என்னன்னா....  இதே உபமன்யூ சிறு குழந்தையா இருக்கும்போது  பசிக்குப் பால் வேணுமுன்னு அழுதாராம். அப்போ சிவன் , 'இந்தா பாற்கடலை உனக்குத் தர்றேன். குடிச்சுக்கோ'ன்னார் (சிவபுராணம் சொல்லுதாம்!)  பக்கத்தில் இருந்த  பெருமாள், 'என்னடா இவர் நம்முடைய பாற்கடலை எடுத்து தாராளமா தானம் கொடுக்கறாரே (கடைத்தேங்காய் + வழிப்பிள்ளையார்) என்று(அல்ப்பமா) நினைக்காமல்,   ஒரு குடம் நிறைய அப்பம் எடுத்துக் கொடுத்தாராம், பாலில் தொட்டுச் சாப்பிட்டுக்கோன்னு!!

ஆட்டைக் கடிச்சு  மாட்டைக் கடிச்சு.... என்றதைப்போல  நம்ம பெருமாளையே   கடன் வாங்கிட்டு ஓடுனவரா ஆக்கிப்பிடுத்து இன்னொரு கதை!

நம்ம அழகர்கோவில்  கள்ளழகர் ,  அவருடைய ஊரில் அப்பம் சுட்டு விற்கும் ஒரு கள்ளர் இனத்துப் பெண்ணிடம், ஏராளமா அப்பங்கள் வாங்கி முழுங்கிட்டு, அதுக்குண்டான காசைக் கொடுக்காமல்  கள்ளனாட்டம்  ஓடி வந்துட்டாராம்.(அப்போ, ஒளிஞ்சு   ஓடி வந்து கிடந்தது கோவிலடியில்போல!)

இது மெய்தான்னு  சொல்லும் சாட்சியமும்  இருக்கே!  அழகர்கோவில் உற்சவர் சுந்தரராஜர்  ஊர்வலம் வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்  மேளதாளங்கள் எல்லாம் அடிக்காமல் நிறுத்திப்பிட்டு,  கப்சுப்ன்னு ஓசைப்படாமல்  உற்சவர் பல்லக்கைத் தூக்கிக்கிட்டு ஓடும் வழக்கம்  இப்பவும் இருக்காமே!  கள்ளன். இந்தப் பழக்கம் க்ருஷ்ணாவதாரத்திலும் தொடர்ந்திருக்கு பாருங்க. அங்கே அப்பம், இங்கே வெண்ணெய்!

எது எப்படியோ....  அப்பக்குடத்தானுக்கு  இங்கே அனுதினமும் அப்பம் நிவேத்தியம் செஞ்சு ப்ரஸாதமா பக்தர்களுக்கு  விநியோகிக்கறாங்க. அது  சாயரக்ஷைக்கு என்பதால் நமக்கு லபிக்கலை:(

காலையில் எட்டரை முதல் பகல் பனிரெண்டு, மாலை  நாலரை முதல்  இரவு  எட்டுன்னு கோவில் திறந்து இருக்குது.

பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார்  வந்து தரிசனம் செஞ்சு, பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்துருக்காங்க. திவ்யதேசக் கோவில்களின்  பட்டியலில் இடம் உண்டு. நம்மாழ்வார், தன்னுடைய கடைசி பாசுரத்தை  இங்கு பாடிட்டு, திருநாடேகினார் என்கிறார்கள்.

கோவிலில் கட்டுமான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. மற்ற சந்நிதிகள் எல்லாம் மூடித்தான் இருந்துச்சு. ஒரு சந்நிதிக்கு  வெளியே நம்ம ஆஞ்சி மட்டும் கைகூப்பி உக்கார்ந்துருந்தார்.  மூடிக் கிடந்தது ராமர் சந்நிதியாக இருக்கலாம்!

பார்க்கலாம், திருப்பணி வேலைகள் முடிஞ்சதும் கோவில் பளிச் என்றாகணும்!

சின்ன ஊரா இருப்பதால் நிதானமா நின்னு சேவிக்கலாம். முதலில் கோவில் வேலைகள் முடியட்டும்.


மணி இப்ப மாலை அஞ்சு இருவது.  நேரத்தோடு திரும்பி ஸ்ரீரங்கம் போகணும். பதிவர் சந்திப்புக்குச்  சான்ஸ் இருக்கும்போல:-))))




22 comments:

said...

துளசிதளம்: கொடிமரம் இப்படி படிமரமா ஆகிருச்சே! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 60) = எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா திருமதி துளசிதளம் Tulsi Gopal

said...

அருமையான கோவில். அப்படி ஒரு அமைதி அங்கே.... தள்ளு முள்ளு இல்லாமல் நிம்மதியாய் பெருமாளை சேவிக்கலாம்!

இன்னமும் திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறதா? இரண்டு வருடங்களுக்கு முன்னரே ஆரம்பித்தது! எப்போது கும்பாபிஷேகம் என்று தெரியவில்லை.

said...

கதைகள் சொன்ன விதம் ரொம்பவே சுவாரஸ்யம் அம்மா...

said...

வழக்கமாக நாங்கள் செல்லும் கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றுள்ளோம். அழகான புகைப்படங்கள். நன்றி.

said...

இரண்டு முறை போயும் பார்க்க முடியலை. கிடைக்குதானு தெரியலை.

said...

இந்தக் கோவிலுக்குப் போனதில்லை. கோவில் கதைகள் எல்லாமே சுவாரசியம் வலைச்சரம் பார்ப்பதில்லையா.?

said...

இந்தமாதிரிப் பெரிய கோயில்களெல்லாம் அந்தக் காலத்தில் கட்டினார்கள் என்றால், அதைப் பராமரிக்கவும், பெருமாள் சேவிக்கவும் நிறைய பக்தர்கள் நிரம்பியதாய் ஊர் இருந்தது. இப்போ எல்லோரும் (அனேகமாக) ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்கள். பெரிய கோவில்கள், சிறிய பக்தர் குழாம் என்றாகிவிட்டது. இந்தக் கோவிலுக்கு நிறையப் படிகள் ஏறவேண்டும்.

அப்பம் மிஸ் ஆகிவிட்டதா. பரவாயில்லை. கொஞ்சம் எண்ணெய் ஜாஸ்தியாகத்தான் இருக்கும்.

said...

கதைகள் அருமை !மயிலார் போஸ் கொடுத்துட்டு ஓடிட்டார் போல :)
ஒரு படத்தில் ஓரத்தில் நீல கலரில் ஒரு சிறிய கோவில் இருக்கே அது மாடலா அல்லது கோவிலா ?

said...

பிப்ரவரியில ஸ்ரீரங்கம் போயிருந்தபோது இந்தக் கோவிலையும் சேவித்தோம். படி முழுவதும் சாரம் கட்டியிருந்தார்கள். நடுநடுவே புகுந்து மேலே போனோம். பெரிய பெருமாள் சேவை இல்லை. உற்சவர் மட்டுமே சேவை கொடுத்தார். பெரிய பெருமாளின் பாதுகைகள் மட்டும் - ஆ! எத்தனை பெரியவை! - சேவை தந்தன.
மறுபடியும் உங்கள் பதிவு மூலம் கோவிலடிக்கு போய்வந்தாயிற்று.

said...

வாங்க ரத்னவேல்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரெண்டு வருசமாச்சா? வேலை நடக்கறமாதிரி தெரியலை. அங்கங்கே இடிச்சுப்போட்டு வச்சுருக்காங்க. எங்கே பார்த்தாலும் கம்பிகளும் கல்லுமாக இருக்கு:(

ஒருவேளை நாம் போன சமயம் அவுங்க அன்றைய வேலைகள் முடிச்சுருப்பாங்களோ என்னவோ?

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஊக்கம் தரும் பின்னூட்டம்! நன்றிகள்.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர் வருகைக்கு நன்றி.

எங்களுக்கு இதுதான் முதல்முறை. திருப்பணிகள் முடிஞ்சதும் இன்னும் நல்லா இருக்கும்போல. மீண்டும் ஒருமுறை செல்ல முடியுமான்னு பார்க்கணும்.

said...

வாங்க கீதா.

கும்பாபிஷேகம் முடிஞ்சாட்டுப் போய்ப் பாருங்க. நிம்மதியாக் கிடக்கறவனை நாமும் நிம்மதியா ஸேவிக்கலாம்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இதுவரை நாம் கண்டது கடுகளவு. காணாதது மலை அளவுன்னுதான் கோவில்கள் நம்ம பக்கங்களில் இருக்கின்றன!

வலைச்சரத்துக்குத் தாமதமாக வந்தேன். மன்னிக்கணும்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

உண்மைதான். சின்ன ஊரை விட பெரிய நகரங்களுக்குப் போறது இப்ப அதிகமாத்தான் இருக்கு. அப்போ அந்தக் காலத்தில் கூட்டுக்குடும்பம். ஒரே இடத்தில் இருந்தாங்க. இப்ப .... வேலை எங்கெ இருக்கோ அங்கே வாசம்!

அப்பம் தரணுமுன்னு அவன் நினைச்சால் இன்னொருமுறை கூப்பிடுவான்தானே!

said...

வாங்க சசி கலா.

அங்கெல்லாம் தோண்டிப்போட்டு இருந்ததால் வெளிப்ரகாரம் சுத்த முடியலைப்பா. அடுத்தமுறை போனால் பார்த்துட்டு வாரேன்:-)

said...

வாங்க ரஞ்ஜனி.

நலமா? பாதுகையை நான் பார்க்கலையேப்பா:(

கட்டாயம் அடுத்தமுறை வான்னுட்டான்:-)

திருவடி பார்க்கலைன்னு புலம்புவதே எனக்கு வேலையாப் போச்சு!

said...

கோயிலும் கதைகளும் புதுசு.....மயில் ரொம்ப அழகு....மூட் வரலைப் போல அதான் ஆடலை...

அப்பால.... விளக்கம் சரிதான் போலருக்கு....

உங்கள் பயணத் தொடரை மிகவும் ரசிக்கின்றோம்...சகோதரி

கொஞ்சம் வேலைப் பளுனால வர முடியாமப் போச்சு இனி ஜாயின் பண்ணிக்கறோம்...

said...

மயில் ஏதாவது ஒரு வழியில் கண்ணுல பட்டா அது எனக்கு நல்ல செய்தின்னு நம்பிக்கை. இந்தப் போஸ்ட் போட்டு ரெண்டு மூனு நாளாச்சுன்னாலும் இன்னைக்குத்தான் மயிலைப் பாக்கக் கொடுத்து வெச்சிருக்கு.

கோயில்னாலே கதைகள் இருக்கத்தானே செய்யும். நீங்க சொன்ன கதைகள் நல்லாருக்கு.

என்னது கடவுளுக்குப் படைச்சுட்டு அதைப் பிரசாதமாக் கொடுக்குறாங்களா? இப்படி எந்தக் கோயில்லயும் பாத்ததில்லையே. பொதுவா மூடி எடுத்துட்டுப் போயிருவாங்க. இல்லைன்னா விஐபிக்குப் போகும். இந்தக் கோயில் விலக்குவிதி போல.

said...

//என்னது கடவுளுக்குப் படைச்சுட்டு அதைப் பிரசாதமாக் கொடுக்குறாங்களா? இப்படி எந்தக் கோயில்லயும் பாத்ததில்லையே. பொதுவா மூடி எடுத்துட்டுப் போயிருவாங்க. இல்லைன்னா விஐபிக்குப் போகும். இந்தக் கோயில் விலக்குவிதி போல.//

மறுத்து பதில் எழுதுவதற்கு மன்னிக்கவும். காலை நிவேதனம் சமயம் கோஷ்டி நடந்தால் கோஷ்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் சின்னக் குழந்தைகள் உட்படப் பிரசாதம் பகிர்ந்து அளிக்கப்படும். நேரே கருவறையிலிருந்தே வரும் பிரசாதம். மாலை பிரசாதமான வடை, அப்பம் போன்றவை வெளியே ஓர் இடத்தில் வைக்கப்பட்டு தரிசனம் முடிந்து வரும் சேவார்த்திகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்படும். இதை ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாங்களும் ஒரு முறை அப்பம் இலவசமாகப் பெற்றிருக்கிறோம். மற்ற நேரப் பிரசாதங்கள் மற்றும் பட்டாசாரியார்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் பிரசாதங்கள் அவர்களாலேயே இலவசமாக/ அல்லது விலைக்குக் கொடுக்கப்படும். ஶ்ரீரங்கம் கோயிலில் மாலை தோசைப் பிரசாதம் அம்மாதிரி கருவறை சந்தனு மண்டபம் எதிரிலுள்ள கிளி மண்டபத்தில் வைத்துக் கொண்டு பட்டாசாரியார்கள் விலைக்குக் கொடுப்பார்கள். குறைந்த விலையே இருக்கும். இதே போல் ஒவ்வொரு சந்நிதியிலும் கோஷ்டியில் கலந்து கொண்டால் இலவசப் பிரசாதம். உள் ஆண்டாள் சந்நிதியில் இலவசப் பிரசாதம் புளியோதரை வாங்கி இருக்கோம். காஞ்சிபுரம் சென்றபோதும் வரதராஜப் பெருமாள் கோயிலில் காஞ்சிபுரம் இட்லி பிரசாதம் இலவசமாக பட்டாசாரியார்களால் கொடுக்கப்பட்டது. மற்றபடி வெளியே பிரசாத ஸ்டால்களில் கிடைப்பது பிரசாதம் அல்ல. கான்ட்ராக்டர்கள் டென்டர் எடுத்துச் செய்து தருவது. அறநிலையத் துறையினரால் நடத்தப்படும் கடைகள்.
திருப்புல்லாணி சென்றபோது அங்கேயும் ஆதி ஜகந்நாதப் பெருமாள் கோயிலில் பாயசம் பிரசாதம் மடைப்பள்ளியில் 50 ரூ பணம் கட்டும் அனைவருக்கும் விநியோகிக்கப்படுகிறது. விஐபிக்கெல்லாம் போவது இல்லை. தினம் தினம் விஐபிக்கள் கோயில்களில் வருவதும் இல்லை. கோயில் ஊழியர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அதைச் சிலர் வீடுகளுக்கு எடுத்துச் செல்கின்றனர். பலர் விற்கின்றனர்.
திருவெள்ளறை கோயிலில் பவித்ரோத்சவம் உற்சவம் போது தயிர்சாதம் பாவாடைப் பிரசாதம் ஒரு மூட்டை கொடுத்தார்கள். என்ன செய்யறதுனு புரியலை!

said...

திருப்பதியிலும் கிட்டத்தட்ட இதே நடைமுறைதான். என்ன ஒண்ணுனா நாம் போகும் சமயம் பிரசாத விநியோக சமயமாக இருக்கணும். ஒருமுறை எங்களுக்கு தரிசனம் முடிஞ்சு திரும்பி வரும்போது லட்டு பிரசாதம் கிடைத்தது. அளவில் சிறியது ஆனால் சுவையில் தனித்துவம்! இப்படிப் பெருமாள் கோயில் பிரசாதங்கள் பற்றிச் சொல்லிட்டே போகலாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் ஶ்ரீநிவாசவெங்கடேசப் பெருமாள் கோயில்(இங்கே கதம்ப சாதம் அருமையா இருக்கும்) பெருமாள் கோயில்களுக்குப் போனாலே வயிறு நிறைந்து தான் வருவோம். ஏதேனும் ஒரு பிரசாதம் கிடைக்கும்.