Friday, June 12, 2015

அம்மா மண்டபம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 57)

நம்ம சுஜாதா வாசகர்களுக்கு   ரொம்பவே பரிச்சயமான பெயராக இருக்கும் இந்த  அம்மா மண்டபத்தை எத்தனையோ முறை கடந்து போயிருந்தாலும் உள்ளே போய்ப் பார்க்க சந்தர்ப்பமேகிடைக்கலை இதுவரை.

திருச்சியில் இருந்து ஸ்ரீரங்கம் வரும்போது காவிரிப்பாலம் கடந்து கொஞ்சதூரத்துலே  லெஃப்ட் எடுத்தால் அது அம்மாமண்டபம் ரோடு.

 காவிரியை ஒட்டியே போகும் இந்த சாலையில் ஒரு ஒன்னரை  கிலோ மீட்டர் தூரத்தில் சாலையில் லேசான ஒரு வளைவு வலதுபக்கம்.   மீண்டும் ஒன்னரை கிலோ மீட்டர்தான். நேரா  ஸ்ரீரங்கம் கோவிலுக்குப் போயிருது.  இந்த வளைவில்தான் இருக்கு அம்மாமண்டபம்.

ஸ்ரீரங்கம் போகும்போது  ரெங்கா ரெங்கான்னு   ஒரே ஓட்டம் . திரும்பி வரும்போது  நல்லா இருட்டிப் போயிரும். இப்பப் போய் எப்படின்னு  இருந்துருவேன். இந்தமுறை வசமா  நேரம் ஆப்டது.

காவிரி நதிக்குப்போகும் படித்துறைதான் இது.  மண்டபம் கட்டி விட்டுருக்காங்க.  ஒரு காலத்துலே திறந்த மண்டபமா இருந்த இதை,  இப்போ இரும்புக்கேட் வேலி போட்டு  ராத்திரிகளில் மூடி வச்சுடறாங்களாம். அந்தக் காலத்துலே எல்லாம் மக்கள் தொகை ரொம்பவே குறைவு என்றதால் எல்லா இடங்களும் நல்லா சுத்தமாத்தான்  இருந்துருக்கும்.  உள்ளூர் மக்கள்  ஆத்துலே போய் குளிச்சுத் துவைச்சுன்னு  இருந்த நாட்கள்.  காவிரித்தாயும் வற்றாத ஜீவநதியாக இருந்துருப்பாள்!

எப்படி இதுக்கு அம்மாமண்டபம் என்ற பெயர் வந்துருக்கும்?  ஒரு வேளை அந்தக் காலத்துலேயே  தீர்க்கதரிசனத்தில் கண்டுபிடிச்சுட்டாங்களோ!  அம்மா பெயரில் எல்லாமே வரப்போகுதுன்னு......

என் சின்ன அறிவு சொல்லுது...  இது காவிரிஅம்மனுக்காகக் கட்டுனது. அம்மன்மண்டபம்.! அது அப்படியே  காலப்போக்கில் அம்மா மண்டபம்  என்று ஆகி இருக்கலாம்.    (தெரிஞ்சவுங்க சொல்லுங்க)

கங்கையிலும் மேலான  காவிரி என்பதால் பித்ரு பிண்டம் வைப்பது போன்ற முன்னோர்களுக்கான  தனிப்பட்ட வழிபாடுகள்  ஆரம்பிச்சு இப்போ  அதுவே ப்ரதானமா  நடந்துக்கிட்டு இருக்கு.  இதுக்கான  சம்ப்ரதாய சடங்குகளுக்கான கடைகளும் இங்கேயே இருக்கு! வந்தமா, வாங்குனமா, செஞ்சமா,  போனமான்னு!

இதைத் தவிர புண்ணிய நதிகளில் ஸ்நானம் என்ற வகையில்  யாத்ரிகர்கள் வந்து  நதியில் முங்கிக் குளிச்சுட்டு,  ரெங்கனை தரிசிக்கப்போறாங்க.

 உள்ளூர்க்காரர்கள் அநேகமா வர்றதே இல்லைன்னுதான்  தோணுது.  இடத்தைப் பார்த்தாலே குமட்டும் விதமா அழுக்கோ அழுக்கு.  சுத்தமா இருப்பது  குப்பைத்தொட்டி மட்டும்தான்!  யாருமே பயன்படுத்துவதில்லை:(


இதுலே தோஷ பரிகாரம் அது இதுன்னு குளிச்சு முடிச்சுட்டு,  அதுவரை கட்டி இருந்த ஆடைகளை அவிழ்த்து அங்கேயே கடாசிட்டுப் போறாங்க,  அதுக்குன்னு ஒரு  கம்பித்தொட்டி இருந்தாலும் கூட .  அவுங்க செஞ்ச  பாவங்கள் எல்லாம் போயே போச் என்ற நம்பிக்கை!  பாவங்கள், தோஷங்கள், கஷ்டங்கள்  எல்லாம்  தீர  உடையைத் துறக்கணும் என்பதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போல!

நம் ஆன்மாவுக்கு  இந்த உடல்தான் உடை.   உடல் அழிஞ்சால்தான்  செய்த வினைகள் கர்மங்கள் எல்லாம் இந்த உடலுக்குத் தீரும் இல்லையா?   (  என்ன இது?  எனக்குள்  துளஸியானந்தமயி   நெசமாவே  உருவாகிக்கிட்டு  வர்றது  போல  இருக்கே !)


உள்ளே  நுழைஞ்சதும்  சின்னதா மண்டபம் ஒன்னு நடுவிலே இருக்கு.  நம்ம  நம்பெருமாள் விஸிட் வரும் காலங்களில் அவர் வந்து  அமர்ந்து அருள் பாலிப்பார்.

மண்டபத்துக்கு அடுத்த பக்கம் போனால்  கொஞ்ச தூரத்தில் காவிரி. ரெண்டு பக்கங்களில்  சில சந்நிதிகள்.

அட!  காவிரி தாயாருக்கு ஒரு சந்நிதி இருக்கு!  மாலை 6.05  மணிக்கு காவேரி ஆரத்தி எடுக்கறாங்களாம்!  (அஞ்சு நிமிசம் க்ரேஸ் டைம்!)

ஒரு பக்கம்  தகரக்கொட்டாய் போட்டு  அதில்  வரிசையா  இடங்களுக்கு நம்பர் எல்லாம் போட்டு  தர்ப்பணம் செய்து வைக்கும் புரோகிதர்கள்  உக்கார்ந்துருக்காங்க.   32  இடங்கள் இவுங்களுக்கு!  மீதி இருக்கும் இடத்தில்  சலூன் சுழல்நாற்காலி போட்டு மொட்டை அடிக்கும்  நாவிதர்கள்  வரிசை.


இந்த சேவைகளுக்கெல்லாம்  கட்டணம் வசூலிக்கறாங்க. சீட்டு வாங்கிக்கிட்டு அதில் குறிப்புட்டுள்ள வாத்தியாரைத் தேடிப் போகணும் போல!

சித்தி விநாயகர் ஆலயம். புள்ளையார் சந்நிதிக்குப் பக்கத்தில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சிக்கு குட்டியா ஒரு சந்நிதி.

ஸ்ரீ விஷ்ணுதுர்கை

ஜனங்க பாதுகாப்பாக் குளிக்கக் கம்பித்தடுப்பு எல்லாம் போட்டு வச்சுருக்கு  திருச்சி மாநகராட்சி.  ஆனால்  தண்ணியே இல்லாமல் அந்தப்பகுதி வெறும் சேறாக் கிடக்கு.   மக்கள்  எதைபற்றியும் கவலைப்படாமல்  அந்தாண்டை போய் குளிச்சுக்கிட்டு இருக்காங்க.  ஒருவேளை காவிரியில் வெள்ளம் வந்தால்  கம்பித்தடுப்புக்குள் பத்திரமாக் குளிக்கலாம்.


எதிர்க் கரையில்  ரொம்பதூரத்துலே மலைக்கோட்டை தெரியுது.  இங்கிருந்தே பார்த்துக் கும்பிட்டுக்கலாம்.

நதியைப் பார்த்திருக்கும் பக்கம் மண்டபத்தின் முகப்பில் பெருமாள் ஹாயாத்  தாய்ச்சிண்டு இருக்கார்.




இத்தனைபேர் பயன்படுத்தும் இடம் இன்னும் கொஞ்சம் சுத்தமா இருந்தால் தேவலை என்று மனசு அடிச்சுக்கிட்டது  தப்பா?

அதிலும் மார்கழியில் நம்ம ஆண்டாள்  இங்கே வந்து  ரெங்கனுக்கு அபிஷேகநீர்  தங்கக்குடத்தில் எடுத்துக்கிட்டுப் போவாளாமே!


வெளியே மண்டபத்துக்கு வரும் வழியிலும்  டூவீலர்களும்  த்ரீ வீலர்களும் எக்கச்சக்கமா நின்னுக்கிட்டு இருக்கு.  இதுலே தெருமுழுக்க  டென் தௌஸண்ட் வாலாக்கள் வெடிச்ச குப்பைகள் வேற.  இந்தத் தெருவிலே சில கல்யாண மண்டபங்கள்  இருக்கே. மாப்பிள்ளை  அழைப்பு நடந்துருக்கு போல!


ஒரு அஞ்சாறு நிமிசம்தான் அங்கே இருந்தோம்.  வெளிவரும்வரை  அடுத்து நடக்கப்போகும் பதிவர் சந்திப்பு பற்றி  எங்களுக்கே தெரியாது!

தொடரும்..........:-)

========================================================================





24 comments:

said...

துளஸியானந்தமயி - கண்டிப்பாக அம்மா...!

said...

ஆஹா திருவரங்கத்துக்கு வந்தாச்சா? நடுவில் சில பகுதிகள் படிக்காம நான் இன்னும் கேரளத்திலேயே இருக்கேன்! படிக்க வேண்டும்! :)

அம்மா மண்டபம் - பொதுவா உள்ளூர் காரங்க அங்க குளிக்க போவதே இல்லை! தண்ணீர் நிறைய இருக்கும்போது போவதுண்டு. ஆனால் வருடத்தில் பெரும்பாலும் தண்ணீர் இருப்பதில்லை! :(

said...


தகவல்களும், புகைப்படங்களும் அழகு.....

said...

ஸ்கூல் லீவுக்கு திருவானைக்காவல் போன போது பார்த்த திருச்சியைச் சுற்றிய இடங்கள்.. சுத்தமாக மறக்கடிக்கின்றன படங்கள் :-).

நிஜமாகவே அப்படி ஒரு சடங்காக இருக்கலாம். இல்லையென்றால் புதிதாகக் கிளப்பிவிட்டிருக்கும் துளஸீயானந்தமயின் தத்துவ விசாரம் அட அட அட!

தீர்க்கதரிசனம் என்னையும் வியக்கவைக்கிறது. எல்லாம் அம்மாமயம்!

கடைசியிலே ஜஸ்பென்ஸோட முடிச்சிருக்கீங்க?

said...


1966-ம் வருடம் திருச்சியில் இருந்தபோது ஒரு முறை ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து அம்மா மண்டப்த்துக்குக் குதிரை வண்டியில் ஆடிப்பதினெட்டுக்கு (என்று நினைவு) போயிருக்கிறோம்.ஆதற்குப்பின் போகவே வாய்க்கவில்லை. சில நேரங்களிலுங்கள் சிந்தனைகள் பக்தகோடிகளிலிருந்து மாறுபட்டுத் தெரிகிறது கீப் இட் அப்.

said...

அம்மா மண்டபத்திற்கு உள்ளூர்க்காரங்க போவது அரிது தான். வெளியூர் கும்பல் தான் அசுத்தப்படுத்துவது எல்லாம். கஜேந்திர மோக்ஷம் இங்கே தான் நடைபெறும். ஆடிப்பெருக்கு இங்கே ஆர்ப்பாட்டமாக நடைபெறும். கோடையில் இரண்டு மூன்று வருடங்கள் சற்று தள்ளி சம்மர் பீச்சாக வைத்து நடத்திக் கொண்டிருந்தார்கள்...:)

இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் “ரங்கநதி” இந்த அம்மா மண்டபத்தை சுற்றியே தான் இருக்கும். ஆற்றில் வெள்ளம் வரும் போது அடித்து செல்லும் உயிர்களை மீட்டெடுக்கும் பிணந்தூக்கியின் காதல் கதை... 550 பக்கங்கள் என்று நினைவு...:)

கீதா மாமியை காணோமே????

said...

திருச்செந்தூர் ஒரு முறை சென்று வாருங்கள். சுத்தம் சுகாதாரம் என்ற வார்த்தைகளுக்கு புதிய அர்த்தம் புரிந்து மூக்கை பொத்திக் கொண்டு வருவீங்க.

said...

ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம், காவேரி, என்றாலே சுஜாதா தான் நினைவுக்கு வருவார். ஸ்ரீரெங்கத்து தேவதைகளும் கூடவே வருவார்கள்!!!

அட! ஆமாம் அம்மா மண்டபம்ங்கறது சரிதானே சகோதரி! அம்மா படமாத்தானே போட்டுருக்காக......சரியாத்தான் சொன்னீஹ....
நம்ம நண்பர்கள் அங்க் இருக்கறவங்கள யாரையெல்லாம் பாத்தீங்க?!

said...

துளசியானந்தமயி...பேரு நல்லாருக்கே! சிப்ளா கட்டைய வைச்சுட்டு ஒரு காவிகலர் துணி உடுத்திக்கிட்டு இந்தியா வந்துருங்க ஒரேநாள் தான் உங்களுக்குத் தனி மண்டபமே கட்டிருவாங்க.....ஹஹ்ஹா...படங்கள் சூப்பர்...

said...

இதுதான் அந்த அம்மா மண்டபமா.. ஆகா.. ஒங்க புண்ணியத்துல பாத்தாச்சு.

எனக்குப் பொதுவா சடங்களில் நம்பிக்கை கிடையாது. மனசை விடவா மந்திரம் ஆண்டவனை அருகில் கொண்டு வந்துறப் போகுது. கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் யாருமே இருக்க முடியாதுங்குறது என் கருத்து. அவங்கவங்க கருமத்தை அவங்கவங்கதான் கழுவ முடியும். அது நீங்க சொல்ற மாதிரி மனமாற்றத்தால் தான் வருங்குறதுதான் என்னுடைய நம்பிக்கையும். ஆயிரமாயிரம் தப்புகளைச் செஞ்சிட்டு பாவ மன்னிப்பு கேக்குறதும் யாகங்களையும் வேள்விகளையும் நடத்தி என்ன பயன்? உள்ளம் உணராம இதையெல்லாம் செய்றது வீண். உள்ளம் உணர்ந்தபிறகும் இதெல்லாம் வீண்.

என்னவோ.. இந்த நாடும் நாட்டு மக்களும் நல்லாருக்கட்டும். :)

said...

குப்பையும் அழுக்கும் அவசரவசரமா கெளம்ப வெச்சுடுச்சு போல :(
கோவில் ஆறு குளங்களையாவது சுத்தபத்தமா வெச்சுக்கலாம் . இது பெரிய குறை தான் நம்ம ஊரில் . என்னைக்கு மாறுமோ ?
எல்லாரும் மாறணும் . என் வகையில் நானும் என் மகளும் வெளியில் ஒரு சிறு துரும்பை கூடரோட்டில் போடகூடாதுன்னு உறுதியா இருக்கோம் . எங்களால் முடிந்தது . இதை எல்லாரும் செய்தால் ஓரளவுக்கு நம்ம ஊர் சுத்தம் ஆகும் .

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆஸ்ரமம் உருவாகப்போகுதுன்னு அடிக்கடி அசரீரி கேட்குது. நல்லபடியாக முடிஞ்சால் பதிவர்களுக்கு 50% டிஸ்கவுண்ட், அங்கத்தினர் பதிவுத் தொகைக்கு:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உள்ளே போனதுமே தெரிஞ்சுருச்சு உள்ளூர் மக்கள்ஸ் வர்றதில்லைன்னு! பாவம் ஆண்டாள்.... ரெங்கனுக்காக மூச்சைப் பிடிச்சுக்கிட்டு வந்து போறாள்!

said...

வாங்க கில்லர்ஜி.

சுஜாதா கதைகளில் படிச்சுட்டு இங்கே போனால் ஏமாற்றம்தான்:(

வருகைக்கு நன்றி.

said...

வாங்க அப்பாதுரை.

புகைப்படம் பொய் சொல்லுமோ!!!!! மறந்தால் தேவலாம்தான்.

சடங்கு இருக்குன்னுதானே இப்படிச் செய்யறாங்க. அதை ஒழுங்குமுறையா ஒரு இடத்தில் அதுக்குன்னு வச்சிருக்கும் தொட்டியில் போடப்டாதோ?

பெரிய சஸ்பென்ஸெல்லாம் இல்லை. ரோஷ்ணியம்மா என்று நான் அழைக்கும் ஆதி வெங்கட் சொல்றதைப் பார்த்தீங்களோ?

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஆன்மிகம் என்பதைக்கூட மக்கள் சரியாப் புரிஞ்சுக்கலையே:-( ச்சும்மாக் கோவில்களுக்குப்போய் வர்றது மட்டும்தானா? கண்ணைத்திறந்து அக்கம்பக்கம் பார்க்கக்கூடாதா என்ற ஆத்தாமைதான் எனக்கு. எக்கச்சக்கமாக் கிளம்பி இருக்கும் ஆஸ்ரமங்களும் குரு பதவியில் இருப்பவர்களும் சுத்தமா இடங்களையும் கோவில்களையும் வச்சுக்கலைன்னா சாமி நீ கேட்ட வரத்தை உல்ட்டா பண்ணிருவாருன்னு சொல்லி வைக்கலாம்.

பால் அபிஷேகம் கடவுளுக்கு ரொம்பச்சரி. ஆனால் ஒரு சொம்பு, இல்லை ஒரு குடம் போதுமே. எதுக்கு 108, 1008 ன்னு வீணாக்கணும். அதையும் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுக்க இயலாதவர்களின் குழந்தைகள் குடிச்சா சாமி சந்தோஷப் படமாட்டாரா என்ன? கடைசியில் பால் சப்ளை செய்பவரைப் பணக்காரரா ஆக்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்கபோல. இதுபோல் மனத்தைப் பிராண்டும் பல சமாச்சாரங்கள் இருக்கு:( என்னமோ போங்க!

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

உண்மைதான் நீங்கசொல்வது. பெருமாள் வரும் தினம் மட்டும் கொஞ்சம் சுத்தப்படுத்தினால் ஆச்சு. இல்லைன்னா இருக்கவே இருக்கு அவருக்குப்பின் பேக் ட்ராப்பாப் போடும் திரை!

கீதா ஊருலே இல்லையோ? தனிமடலுக்கும் பதில் இன்னும் வரலை:(

ரங்கநதி வாசிக்கலை. நம்ம கணேஷ் பாலாவிடம் கேக்கணும். இ.சௌ.வாசிச்சதே இல்லைன்னு புலம்பினதுக்கு ரெண்டு நாவல்களை சிவம், விட்டுவிடு கருப்பா) அனுப்பினார்.

said...

வாங்க ஜோதிஜி.

திருச்செந்தூர் ரெண்டுமுறை போயிருக்கேன். முதல் முறை 43 வருசங்களுக்கு முன்பு. அப்ப கொஞ்சம் சுத்தமாத்தான் இருந்துருக்கணும். அதுவுமில்லாமல் கிணத்துத்தவளையா இருந்ததால் கவனிச்சு இருக்கமாட்டேன் :(

அதன்பிறகு 2009 இல் போனது. லஞ்சு டைமில் மற்ற கோவில்கள் மூடி இருப்பதால், அந்த நேரத்துக்கு இங்கே போயிட்டு வந்துறலாமுன்னு நம்ம டூர் கைடு சொன்னதால் போனோம். ஒருமணி நேரத்துக்கும் குறைவாகத்தான் அங்கிருந்தோம். போனோமா, முருகனைக் கும்பிட்டோமா திரும்பி வந்தோமான்னுதான். நல்ல கூட்டம்தான். அப்பவும் நின்னு நிதானமாப் பார்க்கலையே:(

said...

வாங்க துளசிதரன்.

எந்த உலகத்தில் இருக்கீங்க? சிப்ளாக் கட்டை, காவித்துணி எல்லாம் அவுட் ஆஃப் பேஷன் இப்போ.

ஆ(ர்)டுநரி ப்ளெய்ன் க்ளோத்ஸ் சாமியாரிணி. கட்டாயம் காவிதான் வேணுமுன்னா கோபால் போட்டுக்கட்டும்:-)

நிறையப் பேரை பார்க்க அமையலை. நமக்குன்னு ஒரு நாலுபேர்மட்டும்! விவரம் அடுத்து வரும் பதிவுகளில்:-)

said...

வாங்க ஜிரா.

என் மனசில் இருப்பதைச் சரியாச் சொல்லிட்டீங்க!

முக்காலரைக்கால்வாசி வேண்டுதல்கள் பணம் பணம் பணத்துக்கு மட்டுமே:(

கலி ரொம்பதான் முத்திக்கிடக்கு!

said...

வாங்க சசி கலா.

இனிய பாராட்டுகள். உங்களைப்போல ஒவ்வொருவரும் இருந்தால் எவ்ளோ நல்லா இருக்கும்!!!!

ஹூம்............

said...

நீங்க எண்ணங்களின் நாயகியைத் தான் சந்திச்சீங்களோனு நினைச்சேன்.. அதைத்தான் இப்படி பில்டப் கொடுத்துப் போடுறீங்கனு.. ஹிஹி..

said...

@ அப்பாதுரை.

அதே அதே...... நாக்கை வளைச்சு மூக்கைத் தொட்டுன்னாலும்...... கண்டுபிடிப்பு ரொம்பச்சரி:-))))))

said...

https://www.facebook.com/SrirangamTv/photos/a.513712475318959.110979.500579303298943/996364303720438/?type=1&theater