Friday, June 19, 2015

திரு அன்பில், வடிவழகிய நம்பி ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 59)

சரியாகச் சொன்னால் லால்குடியில் இருந்து ஒரு ஏழு கிலோ மீட்டர்தான்.   சுந்தரராஜப் பெருமாள் கல்யாணமண்டபம் கட்டிவிட்டுருக்கார்.  அதைத்தொட்டடுத்துக் கோவிலின் மதில் சுவர். வெளியே கோபுர வாசலைப் பார்த்தமாதிரி இருக்கும் பெரிய பலிபீடம் கடந்து கோவிலுக்குள் போறோம்.

ராஜகோபுரத்துலேயே 'உள்ளே இப்படி'ன்னு  சாம்பிள் காமிக்கிறார் பெருமாள். வெத்தலை பாக்குப் பழத்தட்டும் புகையும் ஊதுபத்தியுமா  பன்னீர் தெளிச்சு சந்தனம் குங்குமத்தோடு  ஒரு வரவேற்பு.
அட!  இப்பெல்லாம் கோவில்களில் வரவேற்பு இப்படி ஜோரா இருக்கேன்னு  அதிசயிக்கும் போதே ' தங்கைக்கு இன்னிக்கு இங்கே நிச்சியதார்த்தம் நடக்குது'ன்னு சொன்னார் வரவேற்றவர்.

டெர்ரக்கோட்டாவில் செஞ்சதுபோல் இருக்கும் கொடிமரம்!

ஒரு நூறு வருசத்துக்கு முன்பு கோவிலை சீர்செய்து  கும்பாபிஷேகம் செஞ்சதாய் ஒரு கல்வெட்டு.  அதுக்குப்பிறகு இன்றுவரை ஒன்னுமே செய்யலைபோல:( சமீபத்தில் கொஞ்சம் வண்ணம் பூசும் வேலை நடந்துருக்குன்னு நினைக்கிறேன்.  திருமண் பளிச்!

ரொம்பப்பழமையான கோவில் என்றுதான்கோவில் சரித்திரம்சொல்லுது. திருமழிசை ஆழ்வார் வந்து பாடி மங்களாசாஸனம் செஞ்சு வச்சுருக்கும்  திவ்ய தேசக்கோவில். அந்தப்பாடலையும் எழுதிப்போட்டுருக்காங்க.

கோவில் திறந்திருக்கும் நேரம்  காலை 7 முதல் பகல் 12.30.  மாலை 4 முதல் 8.
முதலில் பெருமாளை தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு  சந்நிதிக்குப்போனோம். இப்போ மணி 4.10 என்றாலும் சந்நிதி  கம்பிக் கதவால் மூடி இருந்தது. பட்டர் கல்யாண வேலைகளில் பிஸியாக இருக்காரோன்னு  கொஞ்சம்  கம்பி வழியாக் கண்ணை செலுத்தி சேவிச்சுக்கிட்டு இருந்தோம்.  அவசர அவசரமாக பட்டர் ஓடி வந்து கதவைத்  திறந்தார்.


பாற்கடலில் பள்ளிகொண்டவர் அதே போல இங்கே புஜங்க சயனகோலம் காண்பிக்கிறார். நல்ல அழகன்.  சுந்தரன்! நம்ம  சுந்தரராஜன்!  ப்ரம்மாவுக்கும் சிவனுக்கும், வால்மீகி முனிவருக்கும்  மண்டூக மகரிஷிக்கும் தரிசனம் கொடுத்துருக்கார்.

இன்றைக்கு நாம் உத்தமர் கோவில் போனோம் பாருங்க...   அதே   சம்பவம்தான். ப்ரம்மனுடைய தலையை சிவன் கிள்ளிட்டார். தலையும்  கைநகத்தில் அப்படியே ஒட்டிக்கிச்சு! என்ன உதறியும் கபாலம் கீழே விழலை.  அதையே பிட்சைப்பாத்திரமா வச்சுக்கிட்டு இரந்துண்டார். போதாததுக்கு ப்ரம்மஹத்தி தோஷமும் சிவனைப் பீடிச்சது. பிட்சை எடுக்க  உத்தமர் கோவிலுக்குப் போறார்.  மஹாலக்ஷ்மி பிக்ஷை இட்டதும்  கபாலம்  நகம் விட்டு நீங்குச்சு. அங்கிருந்த பெருமாளை வேண்டியதும்  ப்ரம்மஹத்தி தோஷமும் அவரை விட்டு விலகியது. அந்த நன்றியுடன்,  இங்கே திரு அன்பில் இருக்கும் பெருமாளையும் வந்து ஸேவித்து தரிசனமும் கிடைக்கப் பெற்றாராம்.


உலகில் இருக்கும் அத்தனை அழகுருவங்களையும் தானே படைப்பதால் ப்ரம்மாவுக்கு  கர்வம் பொங்கி வந்துருக்கு.  மஹாவிஷ்ணு,  ஆணவத்தை ஒழின்னு சொன்னாலும் கேக்கலை.  ப்ரம்மனிடம் உடனே  பிடி சாபம் என்றார்!  அதன் காரணமா  பூவுலகில் மனுசனா  உருவம் எடுத்த  ப்ரம்மன், கோவில் கோவிலாப்போய் தன்  சாப விமோசனத்துக்கு வழி கேட்டுக்கிட்டே இருக்கறார். இந்த  இடத்துக்கு வந்து  கும்பிடும் சமயம்,  அதீத அழகுடன்  மனுஷ்ய ரூபத்தில் அங்கே மஹாவிஷ்ணு வர்றார்.  அவரைப் பார்த்து வியந்த ப்ரம்மன்,  இந்த உருவம் நான் படைச்சதில்லையே...  உருவாக்கியவர் யாராக இருக்கும் என்று குழம்பிட்டு,இவ்வளவு அழகான  நீர், யார் ? என்று கேட்க,  அழகு நிரந்தரம் இல்லை. அழியக்கூடியது.  அழகை நினைச்சு ஆணவம் கொள்ளக்கூடாது.  அழகைவிட அன்புதான் முக்கியம்ன்னு  உபதேசம் செஞ்சு தான்  யாரென்று காண்பிக்க தரிசனம் கொடுத்துருக்கார் இந்த திருவன்பில்.

அதே அழகோடு இப்போ நமக்கும் இங்கே  சேவை சாதிக்கிறார்  வடிவழகிய நம்பி. உற்சவருக்கு இந்தப் பெயர்தான்!
மேலே: சுட்டபடம்.


ஒருசமயம் வால்மீகி முனிவருக்கும் ப்ரம்மனுக்கும்  சயனக் கோலத்தில் இருக்கும் பெருமாள்களில் எவருக்கு அழகு அதிகம் என்ற  என்று ஒரு விவாதம் ! அப்பவும்  அழகு அழகுன்னு அழகுதான் பிரச்சனைக்குக் காரணமா இருக்கு, பாருங்க.  சரி. பெருமாளிடமே கேட்டுக்கலாமுன்னு  போய்க் கேட்டப்ப,  திருஅன்பில் போய்ப் பார்னு சொல்லி அனுப்பினாராம்!

 அழகுப்போட்டிகளில் வெவ்வேற ஆட்கள்  வந்து அழகைக் காமிக்கிறாங்க.  ஆனால்  வைகுண்டவாசன்,  தானே பல உருவங்களில் அழகழகா வந்துருக்கார். தோல்வி என்ற கவலையே இருக்காது:-) எப்படியும்  க்ரீடம் அவருக்கே!!!

தாயாருக்கு இங்கே  அழகியவல்லி நாச்சியார் என்ற பெயர்!

இங்கே இருக்கும் தீர்த்தம் மண்டூக தீர்த்தம் என்ற பெயரில். இதுக்கும் ஒரு கதை இருக்கு.


சுதபா மகரிஷி நிலத்திலும் நீரிலும் இருந்து தவம் செய்யும் வல்லமை உடையவர்.  ஒருநாள்  குளத்துக்குள் இறங்கி தண்ணீருக்கடியில் தவம் செஞ்சுக்கிட்டு இருக்கார்.  அப்போ அங்கேவந்த துர்வாஸர் (கோபக்கார மகரிஷி) சுதபா, சுதபான்னு  கூப்புட்டுப் பார்த்து தேடி இருக்கார்.  வெளியே போயிருக்கார் போல, வரட்டுமுன்னு  காத்துக்கிட்டு இருக்கார்.  ரொம்ப நேரம் கழிச்சு தண்ணிக்குள் இருந்து வெளிப்பட்ட  சுதபாவைப் பார்த்ததும்  கோபம் வந்துருச்சு.  இங்கேயேதான் இருந்துக்கிட்டு என் குரலுக்கு மதிப்புக் கொடுத்து பதில் சொல்லலையா நீர்?  பிடி சாபம்!  எப்போ தண்ணீர் இவ்ளோ இஷ்டமாச்சோ.... அப்போ தண்ணீரிலேயே இருக்கும் தவளையாக மாறக்கடவீர்!

டடங்.....  சுதபா ஒரு மண்டூகமா மாறி க்ளக் க்ளக்ன்னார்! தவளை எப்படி சத்தம்போடுமோ அப்படி:-)  அதே மொழியில்  சாபவிமோசனம் என்னன்னு கேட்க, தவளை மொழியும்  அறிஞ்ச துர்வாஸர் சொல்றார்....  "மஹாவிஷ்ணுவை தியானம் செய்துகொண்டிரும்.  சாபம் விமோசனமாகும்."

அதேபோல பலகாலங்கள் கழிச்சு  மஹாவிஷ்ணு தரிசனம் கொடுத்து சாபம் நீக்கினார். மண்டூகமாக இருந்த மகரிஷியின் பெயரால்  தீர்த்தத்துக்கு மண்டூக தீர்த்தம் என்ற பெயர் லபிச்சது. அந்தக் குளம் இந்தக் குளம்தான்!


சந்நிதியை விட்டுவெளியில் வந்ததும்  பிரகாரம்  சுற்றலாமுன்னு போனால் அழகியவல்லித் தாயார்  என்ற சுந்தரவல்லித் தாயார் சந்நிதியில்  மூர்த்திக்கும் அனுவுக்கும் நிச்சியதார்த்தம் நடக்குது.
உற்றார் உறவினர்  குழுமி இருக்காங்க.  பொட்டுக்கடலைக் கூடு!  சீர்வரிசைகளில்  ஸோப் இருக்கு!   'ஸோப் போட்டுப் பழகிக்கணும்  ரெண்டுபேரும்' என்று சிம்பாலிக்காச் சொல்றாங்க போல!
  மொத்தம் 21 தட்டுகளில்  சீர்வரிசை.  அப்பாடா.... எண்ணிக்கை சரியா இருக்குன்னு எனக்கொரு  மகிழ்ச்சி.  எங்க தூரத்து உறவினரில் ஒரு அத்தை இருந்தாங்க.  கல்யாணம், சுபகாரியங்களில் சீர்வரிசை தட்டுகள்  21க்குக் குறைச்சலா இருந்தால் அதை  ஒத்துக்கவே மாட்டாங்க, அது  வேற யார் வீட்டு விசேஷமா இருந்தாலுமே:-))))

தாம்பூலம் கொடுத்தாங்க கல்யாண வீட்டுக்காரர்கள். கூடவே கொஞ்சம் இனிப்பு வகைகளும்.  ஒரு மரியாதைக்காக ஒரு பழம் ஒரு வெற்றிலை, ரெண்டு ஆரஞ்சு மிட்டாய்  எடுத்துக்கிட்டோம்.

மணமக்களை வாழ்த்திட்டு, அப்படியே க்ளிக்கிட்டு  வலையில் போடப்போறேன்னு சொல்லிட்டு ப்ரகார வலத்தைத் தொடர்ந்தோம்.   கருவறை விமானம் கோபுர வடிவில் இருக்கு!!!!!  தாரக விமானமாம்.


நந்தவனத்தில் தெங்குகளும் ஒத்தை நந்தியார்வெட்டைப் பூச்செடிகளும் இருந்தாலும் தாழைப்புதர் கண்ணில் படலை. இதுதான் தலவிருட்சம் என்பதால்  கொஞ்சம் ஆர்வம் இருந்துச்சு.


பரமபத வாசல் பார்த்ததும்  சட்னு ஒரு துக்கம். எப்படி இதைக் கடந்து போவேன்?  அப்புறம்தான்  பசுக்கொட்டில் வழியே(யும்) பரமனை அடையலாம் என்ற உண்மை விளங்குச்சு.

கோவிலுக்கு வெளியே  இருக்கும் மண்டபம்.

சோழர் காலத்துலே கட்டுன கோவில் என்றார்  பட்டர். போருக்குப் போகுமுன் மன்னர் தன் உடைவாளைப் பெருமாள் சந்நிதியில் வச்சுக் கும்பிட்டு விட்டுத்தான் போவாராம். கோவிலுக்கு ஏராளமான விளைநிலங்கள்  இருந்தாலும்...........    ப்ச்.....சேகரித்த சின்னச்சின்னச் செய்திகளில் சில:-)

அரைமணியில் தரிசனம் முடிச்சு இதோ கிளம்பிட்டோம் அடுத்த இடத்துக்கு!

தொடரும்..........:-)

21 comments:

said...

ரசித்தேன்.

said...

நேரடியாகத் தரிசித்த திருப்தி
படங்களுடன் ஸ்தல வரலாறுடன்
சொல்லிப் போனவிதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

அருமையான படங்கள்...

மன அழகே என்றும் சிறப்பு அம்மா...

said...

நாங்கள் செல்லும் கோயில் உலாவின்போது இக்கோயிலுக்குச் சென்றுள்ளோம். புகைப்படங்கள் பதிவிற்கு அழகைத் தருகின்றன.
அண்மையில் விக்கிபீடியாவில் 200 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன், காண வாருங்கள்.
http://drbjambulingam.blogspot.com/2015/06/200-5000.html

said...

நாங்கள் சென்ற வருடம் அன்பில் சென்று வந்தோம். அருகிலேயே பத்து நிமிட நடையில் ஒரு சிவன் கோவிலும், அதற்கடுத்து பத்து நிமிடத்தில் மாரியம்மன் கோவிலும் உண்டு. கிராமத்து கோவில்கள் என்பதால் கும்பலும் இல்லை. நிதானமாக தரிசனமும் செய்து கொள்ள முடியும்.

சீர் வரிசை தட்டில் பவர் சோப் புதிது தான். இனிப்பு, பூக்கள், பழங்கள் இப்படி வைப்பார்கள்...:)

அன்பிலிலிருந்து அப்பக்குடத்தானுக்கு வேறொரு வழியாக செல்ல முடியும் என்றார்கள். நாங்கள் அங்கு தனியே தான் ஒருநாள் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி வழியாக சென்றோம்.

http://www.venkatnagaraj.blogspot.com/2013/05/blog-post.html

said...

துளசிதளம்: திரு அன்பில், வடிவழகிய நம்பி ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 59)= அருமை அம்மா. நாங்களும் உங்களுடன் கோவில் வலம் வந்தோம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி மேடம் துளசிதளம் = திருமதி Tulsi Gopal

said...

இன்னும் எத்தனை கோவில்கள் பாக்கி. 108 திவ்யதேச க்ஷேத்திரங்களில்?

said...

அருமை !! கதைகள் அறிந்தோம் .
கல்யாண பெண்ணின் முகத்தில் பூத்த வெட்க சிரிப்பு அட அடா !!! அழகு !!!

said...

அழகிய கோயில். கல்யாணக் காட்சி வேற பாத்தாச்சு. நிச்சயதார்த்தம்ல. கல்யாணம்னு சொல்லிட்டேன். பொண்ணு மாப்பிள்ளை முகத்துல எவ்வளவு மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.

அதென்ன 21 தட்டு கணக்கு?

அத்தனை பாசுரங்கள் இருந்தாலும் தொண்டரடிப்பொடியாழ்வாரோட இந்த ஒரு பாசுரம் எல்லாரும் மனசுல பச்சக்குன்னு ஒட்டிக்கிட்டு பாத்தீங்களா... பச்சை மாமலை போல் மேனி..

கீழ கீதை வரியையும் எழுதியிருக்காங்க. ஆழ்வார்கள் யாருமே கீதையைப் பத்திப் பேசலையாமே. பாசுரங்கள்ள அவ்வளவா பழக்கம் இல்லாததால விவரம் சரியாத் தெரியல.

நூறாண்டுக் கல்வெட்டு படிக்க முடியுற அளவுல எளிமையாத்தான் இருக்கு.

said...

நல்ல கோயில் தரிசனம். இப்போது பண்ணையார்கள் என்பவர்களின் விளை நிலங்களின் பூர்வகதை, கோயில் நிலத்தை லவட்டியதாகத்தான் இருக்கும் ('நிறைய விவசாயிகளுடையதும் இதில் அடங்கும்). அது மக்களுக்கே பயன்பட்டால் அவர்களுக்கு நல்லது. இல்லாட்டித்தான் அதுக்கு ஒரு பழமொழி இருக்கே (சிவன் சொத்து குல நாசம்).

அப்பக்குடத்தான் கோயிலும் சென்றீர்களா? 'நாங்கள் சென்றிருந்தபோது அப்பம் பிரசாதமாகக் கொடுத்தார்கள். கோயில் தரிசனத்தில், பிரசாதத்தைப் பற்றிக் கேட்பதுண்டோ?

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ரமணி.

அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இதைப் புரிய வைக்கத்தான் கடவுளர்களும் முயற்சி செய்யறாங்க! ஆனால்.... ஊர் உலகம் கேக்குதா?

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

முதலில் எங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகளைப் பிடியுங்க!

விக்கிபீடியா பங்களிப்பு மனநிறைவைத் தரும். என்னிடம் ஒரு சமயம் நியூஸி நாட்டைப்பற்றி எழுதச் சொன்னார்கள். என் நடை அதுக்குச் சரிப்படாது. இப்ப திடீர்னு நடையை மாத்தினால் எனக்கு சிரமம் என்பதால்....... மறுக்க வேண்டியதாப் போச்சு:(

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நாங்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற கோவில்களுக்குப் போகலை:(

சுட்டிக்கு நன்றி. இந்தப்பதிவு கண்ணில் படவே இல்லை. நீங்க சொன்னதும் போய்ப் பார்த்தேன். அப்பக்குடத்தான் நாளை நம் துளசிதளத்தில் வருகிறார்.!

said...

வாங்க ரத்னவேல்.

பகிர்தலுக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இன்னும் சரியா எண்ணிப் பார்க்கலை. ஸேவித்தது ஒரு எழுபது இருக்குமுன்னு நினைப்பு.

said...

வாங்க சசி கலா.

இது அவுங்களுக்கான நாள் இல்லையோ! அந்தப் பூரிப்பும் முகத்தில் அழகா இருக்கு!

said...

வாங்க ஜிரா.

முந்தியெல்லாம் கல்யாணத்துக்கு முதல்நாள் நிச்சயதார்த்தம் நடப்பதுண்டு. என்ன ஒன்னு அது செல் இல்லாத காலம் பாருங்க. நோ கடலை:-)

இன்னும் நிறையக் கல்வெட்டுகள் இருக்குன்னு சொன்னாங்க. கல்யாணக்கூட்டத்துலே அலைய வேணாமுன்னு இருந்துட்டோம்.

பச்சை மாமலை ........... அடடா.... என்னமா பாடிட்டார் பாருங்க!!!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அது சிவன் கோவிலுக்கு மட்டுமேன்னு நினைச்சுட்டாங்க போல இருக்கு. அரியும் சிவனும் ஒன்னு ன்னு சொல்லி இருப்பதை அறியாதவர்கள் :(

அப்பக்குடத்தான் தரிசனத்துக்குப் போனோம். ஆனால்..... அப்பம் கிடைக்கலை!

நாளையப்பதிவு அப்பக்குடத்தானுக்கே!

said...

அன்பில் அநிருத்தபிரம்மராயர் தான் நினைவில் வருகிறார். நாங்க மாரியம்மன் கோயிலை வெளியிலிருந்தே தரிசித்தோம். மற்றக் கோயில்களுக்குப் போனோம்.