Wednesday, June 17, 2015

மில்லியன் டாலர் வ்யூ ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 58)

இங்கெதானே அவுங்க இருக்காங்க. ஒரு பத்து நிமிசம் பார்த்துட்டுப் போயிறலாமான்னு ஆரம்பிச்சவர் கோபால்தான்.  நேரங்கெட்ட நேரத்துலே போவதான்னு  மனசு கேட்டாலும்,  போனமுறை கூட அவுங்களைப் பார்க்கமுடியாமல் போச்சு. அதனால் எட்டிப் பார்த்துட்டே போகலாமுன்னு துணிஞ்சு  அவுங்களுக்குப் ஃபோனைப்போட்டேன். அதுக்குள்ளே நாம் சொன்ன  அடையாளத்துலே கொண்டுபோய் வண்டியை நிறுத்திட்டார் நம்ம சீனிவாசன்.

"எப்படி இருக்கீங்க? உங்களைப் பார்க்க வரலாமா?"

"நல்லா இருக்கோம் துளசி. எப்ப வர்றதா இருக்கீங்க? "

"இப்பதான். வசதிப்படுமா?"

"இப்பவா.............   சாயங்காலம்  வந்தீங்கன்னா..........  "

அதுக்குள்ளே பிள்ளையைக் கிள்ளியவர்  தொட்டிலை ஆட்ட ஆரம்பிச்சிருந்தார்.  "அவுங்களுக்கு  வசதிப்படலைன்னா  அடுத்தமுறை பார்க்கலாம்மா."

அதை அப்படியே ஒப்பிச்சேன்.

'இன்னும் மூணு கோவில்கள் பாக்கி இருக்கே அதுக்கு நேரம் வேணாமா....  பார்க்கலாம் அடுத்த பயணத்தில்' பக்கத்தில் இருந்து  பிரசங்கம்  ஆரம்பிச்சுருக்கு.

"அடடா...   இப்ப எங்கே இருக்கீங்க? "

  "உங்க பில்டிங் வாசலில்தாம்ப்பா..."

வீட்டு எண்ணைச் சொன்னதும்  லிஃப்டில் மாடிக்குப்போய்ச் சேர்ந்தோம். கடைசியா பார்த்தது  ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்னே!

தங்க்ஸ்ம், ரங்க்ஸ்மா  வரவேற்று உள்ளே கூட்டிப்போனாங்க.


கயிலை தரிசனம் கண்டு வந்தவங்களைப் பார்த்தாலே   நமக்குப் புண்ணியம் கொஞ்சம் சேருமாம்!  என்னால் எல்லாம் கயிலைவரை போக முடியாது.  இங்கேயே இப்படிச் சேர்த்தால்தான் உண்டு.

ரெண்டுபேருக்கும் ஒரு அஞ்சு வயசு கூடி இருக்கே தவிர வேற மாற்றம் ஒன்னும் இல்லை முகத்தில் இருக்கும் களைப்பைத் தவிர.

'எதுக்குச் சாயங்காலம் பார்க்கலாமுன்னா  எதாவது  டிஃபன் செஞ்சு  வைக்கத்தான்'னு சொல்லிக்கிட்டே   பெரிய  அடுக்கு ஒன்னில் இருந்து லட்டுகளை எடுத்துத் தட்டில் வச்சு விளம்புனாங்க  நம்ம கீதா.

நமக்கு டிஃபனாங்க முக்கியம்? (லட்டு போதுமே!ஹிஹி)

வீடு மாறிப் போகப் போறாங்க. சிலநாட்களுக்கு முன்னேதான் க்ரஹப்ரவேசம் நடந்துருக்கு.  இன்னும் அந்த வீட்டில் வுட் ஒர்க் முடியலை.

கொஞ்ச நேரம் மற்றவிஷயங்களை (!) விவரிச்சுக்கிட்டு இருந்தோம்.  முக்கியமா நம்ம பயணம் & அவுங்க புது வீடு.

புதுவீடு ரொம்ப தூரமோன்னு கேட்டதுக்கு  ஜன்னல்கிட்டே கூட்டிப்போய்  அதோன்னு  காமிச்சாங்க.  இதே பில்டிங்கில்  இப்ப இருக்கும் ஃப்ளாட்டுக்கு நேர் எதிரா  அடுத்த பகுதியில் இருக்கு:-)


பிறகு அங்கே போய் வீட்டைப் பார்த்தோம்.  அறைக் கதவுகளைத்  திறந்ததும் (மாடி என்பதால் )காத்து அப்படியே  இதமா பிய்ச்சுக்கிட்டு போகுது:-) மரவேலைகள்  செஞ்சு முடிக்க  சரிவர ஆட்கள்  கிடைப்பதில்லையாம்:(   வேலையை ஆரம்பிச்சு வச்சுட்டு இதோ அதோன்னு  சாக்குச் சொல்றாங்களாம்.

மொட்டை மாடிக்குப்போனோம்.   மில்லியன் டாலர் வ்யூ அங்கேதான்!  ஒருபுறம்  தென்னைமரக்கூட்டங்களுக்குப் பின்னே ரெங்கனின் ராஜகோபுரம். இன்னொரு புறம் காவிரி, அடுத்தபக்கம் தாயுமானவர். மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார்  இப்படி அட்டகாசமா  இருக்கு!  புது டிஸைன் 'இரும்பு மரங்கள்' வேற அங்கங்கே தென்னைகளுக்கிடையில்.:( பேசணுமே.... பேசணுமே....

'வேலையில் இருந்து ரிட்டயர் ஆனதும் இந்தியாவில் போய் செட்டில் ஆகணும் 'என்று எப்போதும் மனசின் மூலையில் ஒளிஞ்சிருக்கும் ஆசை மெல்லத் தலை தூக்கியது நிஜம். ஒரு விநாடிதான்.  சமாளிச்சுக்கிட்டேன்.  தலையில் ஒரே போடு!  ஆசையே துன்பத்திற்குக் காரணமாமே!



ஶ்ரீரங்கத்தில் தங்கினால் அலைச்சல் இல்லாமல் இருக்குமே, ரெங்கனைச்சுத்த  நேரமும் கிடைக்குமேன்னு பயணம்  ஆரம்பிக்கும்  முன்னாலேயே  நம்ம வெங்கட் நாகராஜிடம்  தங்க நல்ல ஹொட்டேல்ஸ் விவரம் கிடைக்குமான்னு கேட்டுருந்தேன்.  அவரும் தமிழக அரசு  கொள்ளிடக்கரையில் ஒரு  பெரிய தங்கும்விடுதி  அமைத்திருப்பதைச்  சொல்லிட்டு,  தனியார்  விடுதிகளைப் பற்றி  நம்ம ரிஷபன் சாரிடம்கேட்டுச் சொல்றேன்னார்.  உள்ளூர்க்காரருக்கு இன்னும் விவரம் அதிகம் இருக்குமில்லையா?




நம்ம ரிஷபன் சாரும்  ராமானுஜகூடம் என்பதையும், வாமனா ராயல்ஸ் என்பதையும் குறிப்பிட்டு மடல் அனுப்பினார்.  ஹொட்டேல் ரிவ்யூ பார்த்தபோது,  ராமானுஜகூடம் பற்றி ஒன்னும் இல்லை.  வாமனா ராயல்ஸ் ரிவ்யூ பார்த்துட்டுக் கதி கலங்கிட்டார் நம்ம கோபால்.  'எதுக்கு இப்படி ரெங்கன் ரெங்கன்னு படுத்தறே.  திருச்சியிலேயே தங்கலாம்.   உனக்குக் காலையில்  அஞ்சுமணிக்குக் கோவிலில் இருக்கணுமுன்னா  நான் கூட்டிப்போறேன். அதான் காரும் ட்ரைவரும் நம்மோடு இருக்காங்களே'ன்னு என் வாயை  அடைச்சுட்டார்:(

அதே மாதிரி கூட்டிப்போனாரோ?  ஊஹும்.....  தேர்  எங்கே காலையில்  நகருது? காலையில் நம்ம ஆண்டாள் காவிரியில் இருந்து அபிஷேகத்துக்கு நீர்  கொண்டுவரும் அழகைப் பார்க்கணுமுன்னு துடிச்சுக்கிட்டு இருக்கேன்.
இதைப்பற்றி ஒரு பாட்டம் கீதாவிடமும் புலம்பினேன். இன்னும் ரெண்டொரு நாளில் நம்ம வல்லியம்மா  ஸ்ரீரங்கம் வர்றாங்கன்னு பேசிக்கிட்டு இருக்குபோது அவுங்க தங்கப்போகும்  ஹொட்டேல் ஹயக்ரீவா இங்கே பக்கத்தில்தான் இருக்குன்னதும்  எப்படி இருக்குமுன்னு நேரில்பார்த்துத் தெரிஞ்சுக்கலாமேன்னு தோணுச்சு.


பாவம்   கீதா வேற அன்றைய சமையலையே செஞ்சு முடிக்கலை. நாங்க வேற பத்து நிமிட்ன்னு சொல்லி கிட்டத்தட்ட  முக்கால்மணிவரை ப்ளேடு போட்டுட்டோம்.   அங்கிருந்து கிளம்பி  ஹயக்ரீவா போய்ப் பார்த்தோம்.
பேஸிக்கா இருந்தாலும்  நல்லாவே இருக்கு.

அடுத்த பயணத்தில் இங்கேதான் தங்கப்போறேன்.  கோபால் வேணுமுன்னா திருச்சியில் தங்கிக்கட்டும்!  அதிகாலையில் ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு நேராக் கோவில்தான்.  ஹைய்யோ....  நினைக்கும்போதே இனிக்குது.


பனிரெண்டே முக்காலுக்குச்  சங்கம் வந்து சேர்ந்தோம். கலெக்ட்டர் ஆஃபீஸ் ரோடுலே  இருக்கு நம்ம ஹொட்டேல். கார்கில் போரில் உயிரிழந்த மேஜர் சரவணன் அவர்களுக்கு ஒரு நினைவுச் சின்னம்  அமைச்சுருக்காங்க.  இதைச் சுற்றித்தான் சாலையில் போறதும் வாரதுமா  இருந்தோம். இவருக்கு  வீர்சக்ரா விருது அளித்து பெருமைப்படுத்தி இருக்கு இந்திய அரசு. வெறும் இருபத்தியேழே வயசு. பெற்றோர்களை நினைச்சால்  மனசே கலங்கிப்போகுது.



வரவேற்பு வாசலில் இருந்த  சங்கம் பணியாளர்  சிரித்தமுகமா  'தரிசனம் நல்லாக் கிடைச்சதா?'ன்னு விசாரிச்சார். காலையில் அவரிடம்தான் நம்ம் சீனிவாசன் வழி எல்லாம் கேட்டு வச்சுருந்தாராம்.  அவரிடம் இன்னும் சில கோவில்களுக்கு வழி கேட்டுக்குங்கன்னு  சொல்லிட்டோம். கோபாலும் அவரிடம்  தெளிவுபடுத்திக்கிட்டார்.  அறைக்குப்போனோம்.  அடுத்த அறை அரசியல் வியாதிகள் காலி செஞ்சுட்டாங்க போல....  படைகளைக் காணோம்!

இவருடைய பெயரைத்தான்  எப்படியோ மறந்துட்டேன்....  சக்திவேல் என்று லேசா நினைவு.  மனசில் எங்காவது ஒளிந்திருக்கும் பெயர் ஞாபகம் வரும்வரை  அவர் சக்திவேலாகவே இருக்கட்டும்!


பகல் சாப்பாடு ரூம் சர்வீஸில்.  ஒரு தாலி மீல்ஸ் போதுமுன்னு சொன்னேன்.  கூடவே ரெண்டுலஸ்ஸி. ஒரு மூணு ஆள் சாப்பிடும்  அளவுக்கு சோறு அனுப்பி வச்சுடறாங்கப்பா.  எல்லாம்  கடைசில் வீணாகுது:(

கொஞ்ச நேர ஓய்வுக்குப்பின்  மதியம்  மணி மூணுக்குக் கிளம்பிட்டோம். காவிரிப்பாலம் கடந்து கிழக்கு நோக்கி ஒருமணி நேரப்பயணம். கிட்டத்தட்ட 35  கிமீ.  ஒரு கல்யாண நிச்சியதார்த்தம் !

தொடரும்.........:-)



28 comments:

said...

மொட்டை மாடி காட்சிகள்.... இதற்காகவே நிறைய நேரம் மொட்டை மாடியில் இருப்பதுண்டு! :)

அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

said...

துளசிதளம்: மில்லியன் டாலர் வ்யூ ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 58) = அருமையான பயணப் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி: துளசிதளம்
நன்றி மேடம் Tulsi Gopal

said...

//அதிகாலையில் ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு நேராக் கோவில்தான். ஹைய்யோ.... நினைக்கும்போதே இனிக்குது.//

அற்புதமாகத்தான் இருக்கும் !!
சாப்பாடு பார்க்க சூப்பர் . சுவை ?

said...

ஆகா...! அருமையான காட்சிகள்...

கீதா அம்மாவுடன் இனிமையான சந்திப்பு...

said...

கீதா அவர்கள் முகத்தின் டிரேட்மார்க் சிரிப்பு எங்கே போச்சு?
வ்யூ நன்று. பேசாமல் அடுத்த ட்ரிப்ல அவங்க வீட்லயே த்ங்கிடுங்க.. கேட்டா அப்டித்தான்னு கராறா (கறாரா ?) சொல்லிடுங்க :-)

said...

ஒவ்வொரு இடமும் ரொம்ப சுத்தமாக இருக்கின்றதே? ஆச்சரியம் தான்.

said...

Thanks for sharing the pic of Mama-Mami....seeing after 4-5 years...

said...

கோபுர படத்தை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததும் அந்த ஆங்கிலில் வீடு சன்னதி பக்கம் வருமே என்று மனசு கணக்கு போட....அடுத்த அடுத்த படங்களில் நிவர்த்தியானது.

said...

உங்க ஆசை நியாயமான ஆசைதான். எனக்கும் அதுபோல ஒரு ஆசையுண்டு. விடியல்ல எந்திரிச்சு தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மனப் பாக்கனும்னு. அடுத்து வர்ரப்போ ஹயக்கிரிவாலயே தங்கிருங்க.

ஆசையே துன்பத்துக்குக் காரணம். உண்மைதான். இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறாய் ஞானத்தங்கமே-ன்னு கவியரசரும் எழுதியிருக்காரு. ஆண்டவன் கொடுத்தத வெச்சி நிம்மதியா இருந்துக்குறதுதான் நல்லது.

பயணங்களின் போது நட்புறவுகளைச் சந்திப்பதும் மகிழ்ச்சியே. மொதமொதலா பெங்களூரில் சந்திச்சோம். அப்போ சுதர்சனனும் இளவஞ்சியும் கூட வந்திருந்தாங்க. :)

said...

இடம்லாம் நல்லா இருக்கு. இன்னும் மரங்களையெல்லாம் விட்டுவச்சிருக்காங்களே. இன்னும் காங்க்ரீட் காடா மாற்றவில்லையா? கடைசியில் தாலி தட்டோட முடிச்சிட்டீங்க. சாதத்தைத்தான் காணோம்.

said...

மொட்டை மாடி வ்யூ சூப்பராக இருக்கும். ஹயக்ரீவா நன்றாகத் தான் இருந்தது. வல்லிம்மாவை பார்க்கப் போனோமே...

தொடர்கிறேன்.

said...

மறந்தேனே போனது.. இன்னொரு பதிவர் வீடு கிட்டத்தட்ட கோவிலுக்குள்ளயே இருக்கு. அங்கேயும் தங்கலாம். ஹிஹி..

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அலுக்கவே அலுக்காத காட்சிகள்! எனக்கும் ரொம்பவே பிடிச்சிருக்கு!

said...

வாங்க ரத்னவேல்.

மிகவும் நன்றி.

said...

வாங்க சசி கலா.

சுவையும் நல்லாத்தான் இருந்தது. நான் வெறும் பருப்பு என்பதால் கோபாலைத்தான் கேட்கணும்:-)

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பதிவர்களுக்கு ஊருலகமெல்லாம் சொந்தங்களுக்குப் பஞ்சம் ஏது? :-)))

said...

வாங்க அப்பாதுரை.

ஆஹா.... இனிமே எல்லாம் இப்படித்தான்:-)

எனக்கே அங்கே அஞ்சு இடம் இருக்காக்கும்!

said...

வாங்க ஜோதிஜி.

கெமராக் கோணம் அப்படி:-) கொஞ்சம் கீழே இறக்கினால் போச்:(

said...

வாங்க மதுரையம்பதி.

எத்தனை வருசங்கள் ஆனாலும் மனசில் இருக்கும் அன்பு மறக்குமா என்ன?

ஆமாம்.... நீண்டகாலத்துக்குப்பின் உங்கள் வருகை இங்கே! நலம் தானே?

said...

வாங்க குமார்.

எல்லாத்தையும் கிட்டக்கக் கொண்டு வந்துருவேன்:-)

said...

வாங்க ஜிரா.

நம்ம பதிவர் குடும்பங்களுடன் அப்பப்ப நடக்கும் சந்திப்புகள் மனசுக்கு ரொம்பவே மகிழ்ச்சியைத் தருகிறதே! மறக்க முடியுமா? என்ன ஒரு அன்பு! அதுக்காகவே தொடர்பில் இருப்போம்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இன்னும் சிலவருசங்களில் காங்க்ரீட் காடுகள் அதிகரிக்கும்தான்:( இப்போதைக்குக் காவிரி போட்ட பிச்சை அந்த மரங்கள்!

சோறு இருந்த பாத்திரத்துக்கு இந்த காஃபி டேபிளில் இடமில்லைன்னு பக்கத்து நாற்காலியில் வச்சுருந்தது, இந்த ஃப்ரேமில் அடங்கலை:-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நம்ம அப்பாதுரையின் பின்னூட்டம் பார்த்தீங்கதானே? குறிப்பால் உணர்த்துகின்றார்.

ஹயக்ரீவாவை இனி நாமும் பரிந்துரைக்கலாம்!

said...

ஆஹா! தாராளமா டீச்சர்.

அப்பாதுரை சாருக்கும் நன்றி.

said...

நன்றி ரோஷ்ணியம்மா!

said...

இன்னைக்குத் தான் இங்கே வர நேரம் கிடைச்சது. படங்கள் அருமை. ஜோதிஜி சொன்ன சுத்தம் ஶ்ரீரங்கத்தில் உண்டு. அதிகம் குப்பைகளைக் காண முடியாது. திருச்சியில் கொஞ்சம் குப்பை பார்க்கலாம் என்றாலும் முக்கியச் சாலைகள் சுத்தமாகவே இருக்கும். சென்னையை ஒப்பிடுகையில் ஶ்ரீரங்கம், திருச்சி குப்பைகள் குறைவான ஊரே. அதிலும் ஶ்ரீரங்கம் ராஜகோபுரத்துக்கு உள்புறம் சுத்தமாகவே காணப்படும். இதை நன்கு பராமரித்தும் வருகின்றனர்.

said...

ஹயக்ரீவா சிறந்த தங்குமிடம் தான். கீழேயே பாலாஜி பவன் உணவு உண்ணும் இடம் உள்ளது. அதைத் தவிரவும் பக்கத்தில் ரங்காபவன் என ஒன்றும் ஓம்ஶ்ரீரங்கபவன் என்று ஒன்றும் உள்ளது. சிருங்கேரி மடம் எதிரே உள்ளது. ராஜகோபுரம் நடக்கும் தூரம் தான். அறைகள் விசாலமாகவும் காற்றோட்டமாகவும் உள்ளன. நான் முக்கியமாகக் கவனிப்பது அறையில் ஜன்னல்கள் காற்று வரும்படி அமைக்கப் பட்டிருக்கிறதா என்பதே. ஏனெனில் என்னதான் ஏ.சி. இருந்தாலும் வெளிக்காற்றும் உடம்பில் படணும்.

said...

@அப்பாதுரை,

அப்போது இருந்த டென்ஷனில் நாங்க சாப்பிடவே மறந்திருந்தோம். :( அவ்வளவு மன அழுத்தம். மரவேலைக்காரங்க ஒரு மாதிரி படுத்தினாங்கன்னா அப்போப் பார்த்து மதியம் பனிரண்டிலிருந்து இரண்டு வரை மின் வெட்டு இருக்கும். இரண்டிலிருந்து நாலு வரை இங்கே குடியிருப்பு வளாகத்தில் சப்தம் செய்யக் கூடாது. ஆணி அடித்தல், மிஷின் போட்டு வேலை செய்தல், மரம் அறுத்தல் எல்லாம் கூடாது. ஆக ஒரு நாளைக்கு மொத்தம் நாலு மணி நேரம் ஆட்கள் வந்தாலும் வேலை செய்ய முடியாது. அவங்க வரதே காலை பதினோரு மணிக்கு! இந்த அழகில் எப்படி வேலையை முடிக்கிறது? எப்போப் புதுவீடு போறதுனு ஒரே குழப்பம். துளசி வர அன்னிக்குத் தான் வீடு காலி பண்ணத் தேதி கொடுத்திருந்தோம். அப்புறமா அதை மேலும் ஒரு மாசம் நீட்டித்து! போதும்டா சாமினு ஆயிடுச்சு இந்த மர வேலை! :( சிரிப்பு எங்கேருந்து வரும்? அழாமல் இருந்ததே பெரிய விஷயம்! :(