நாலுமணி கூட ஆகலை... அதுக்குள்ளே யாருக்கோ அவசரம்! தீபாவளி கொண்டாடத் தொடங்கிட்டாங்க... மூடி இருக்கும் ஏஸி அறை ஜன்னல்கள் பிளந்து போகும் பட்டாசு சத்தம்!
கோபமே எனக்கு வரலை:-) இப்படி ராவோடுராவா பட்டாஸ் சத்தம் கேட்டு வருசம் 33 ஆச்சே!
நம்ம பூனா வரலாற்றில் கோமளா மாமிதான் அவுங்க இருக்கும் 'வாடா'வில் முதல் பட்டாஸ் கொளுத்திப்போடும் ஆள். அதைக்கேட்டுத்தான் மொத்த வாடா சனமும் 'திவாலி ஆ கயா'ன்னு கண்ணைத் திறப்பாங்க.
கோபால் டிவி ரிமோட்டுக்குப் பாய, நான் லேப்டாப்புக்குப் பாய்ஞ்சேன். இங்கே ஃப்ரீ வைஃபை இருக்கு. நல்லாவும் வேலை செய்யுது. நம்ம மக்கள்ஸ் மின்மடலிலும் பதிவுகளிலும் அனுப்பிவச்ச வாழ்த்துகளை நான் படிக்க, டிவியில் சினிமாக்காரர்கள் ஆடம்பரமான அலங்காரத்தில் வாழ்த்துகள் சொல்லிக்கிட்டு இருக்காங்க.
டிவிக்காரர்கள் எப்பவோ ரெக்கார்ட் செஞ்சு வச்சதை, எதோ இப்பத்தான் நேரில் நின்னு சொல்றாங்க என்பதைப்போல் ரசிச்சுக்கிட்டு இருக்கார் இவர்.
ஆறுமணியாகட்டும் என்று காத்திருந்து செல்ஃபோனில் தீபாவளி வாழ்த்துகளை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சொல்லிக்கிட்டு இருந்தோம். எவ்ளோ நாளாச்சு இப்படியெல்லாம் .....
'கங்கா ஸ்நானம்' முடிச்சு, கோபால் புதுத்துணி எல்லாம் போட்டுக்கிட்டு ரெடியாகிட்டார். "கவலைப்படாதேம்மா. எதாவது சல்வார் கமீஸ் போட்டுக்கோ. சீனிவாசன் வந்ததும் புதுப்புடவை கட்டிக்கலாம்."
கவலையா? அப்டீன்னா என்ன? நான் ஜாலியாத்தான் இருக்கேன். வீட்டு வேலைகளோ அடுப்படி சமாச்சாரமோ இல்லை பாருங்க. கொண்டுபோன துணிகளை ஆராய்ஞ்சேன். போன பொங்கலுக்கு மச்சினர் வீட்டுலே வச்சுக்கொடுத்த புடவையை ப்ளவுஸ் தச்சுக்கக் கொண்டுபோனது கண்ணில் பட்டது. மதுரை மாநாட்டுக்குக் கட்டிக்க இன்னொரு புடவையும் வச்சுருந்தேன். அதன் ப்ளவுஸ் இதுக்குச் சரியாகுமான்னு பார்த்தால்.... நாட் பேட்! மேலும் வச்சுக்கொடுத்ததுக்கு ரன்னிங்லே ப்ளவுஸ் துணி. அதிரசம் தின்னாப்லெ இருந்துச்சு.
வல்லியம்மா ஃபோனில் கூப்பிட்டு வாழ்த்துச் சொல்லி, ப்ரேக்ஃபாஸ்டுக்குக் கிளம்புன்னாங்க. கீழே போகும்போது,கண்ணில்பட்டவர்களுக்கெல்லாம் 'ஹேப்பி தீபாவளி' சொல்லிக்கிட்டே போய்ச் சேர்ந்தோம். விருந்தினர்கள் அதிகமில்லை. ஒரு பத்து பேர்தானாம். பணியாளர்கள் ரொம்பவே ரிலாக்ஸ்டா இருக்காங்க ரெஸ்ட்டாரண்டில். எல்லாமே நார்த்தீஸ். திவாலி முபாரக் ஆச்சு!
தோழியும் மகனுமா வந்து சேர்ந்துக்கிட்டாங்க. புடவை ரொம்ப நல்லா இருக்குன்னு பாராட்டு வேற! அதுலேயே அரைவாசி வயிறு நிறைஞ்சுருச்சு. மீதி காலுக்கு இட்லி வடை காஃபி. கடைசிக் கால் காலி. அப்படித்தானே சாப்பிடணும், இல்லையோ!
சீனிவாசன் சொன்ன டைமுக்கு வந்துட்டார். ஆனால் தோழி சொல்லி வச்சுருந்த வண்டிக்கு ட்ரைவர் வந்து சேரலையாம்.தீபாவளிதான் காரணமாம். ஆட்டோவில் போக முடிவு. சீனிவாசனையே கொண்டு விட்டுட்டு வரச் சொல்லிட்டு அவர் திரும்பி வந்தவுடன், மச்சினர் வீட்டுக்குக் கிளம்பிப் போனோம்.
வழியெல்லாம் பட்டாஸ் வெடிச்ச குப்பைகள், ஒரிஜினல் குப்பைகளை மறைச்சுக்கிட்டு இருந்துச்சு.
'எப்படியும் நாலுமணி நேரமாவது ஆகும். அதுவரை ச்சும்மா ஏன் தேவுடு காக்கணும்? நீங்க வீட்டுக்குப்போய் தீபாவளி நாளில் குடும்பத்தோடு இருந்துட்டு, நாங்க ஃபோன் பண்ணும்போது வாங்க'ன்னு சீனிவாசனிடம் சொன்னதும் அவருக்கு முகம் 1000 வாட்!
"கிளம்ப அரைமணிக்கு முன்னால் சொல்லுங்க ஸார். வந்துர்றேன்"
ஊரில் இருந்து வந்த உறவினர்களும் நிறைஞ்ச குடும்ப தீபாவளியா இருந்துச்சு. நாத்தனாரின் சம்பந்திகள்! என் புடவையைப் பார்த்ததும் மச்சினர் மனைவி கண்ணில் ஒளி! அவுங்க போன பொங்கலுக்கு வாங்கிக் கொடுத்ததாச்சே! 'இன்னுமாக்கா கட்டாம வச்சுருந்தீங்க?'ன்னு வியப்புதான். முந்தி ஒரு காலத்துலே புடவை வாங்கிட்டு வீட்டுக்குள் நுழைஞ்ச அடுத்த விநாடியே கட்டிப் பார்த்துருவேன். ரிஷிப்பிண்டம். ராத்தங்கமாட்டேன். அதெல்லாம் போனபிறவின்னு வச்சுக்கணும்:-)
"உங்களுக்குப் புடவை இன்னும் வாங்கலைக்கா. நீங்க ஊருக்குத் திரும்பிப்போகும்போதுதான் கொடுக்கணும் . என்ன கலர் வேணுங்க்கா? அதே பச்சைதானா?"
அதுக்குள்ளே எங்க நாத்தனார், 'அண்ணிக்கு ஒரு புடவை வாங்கியிருக்கேன்'னு சொல்லிக் கொடுத்தாங்க.
'இப்ப தீபாவளிக்குத் தர்ற புடவையைபொங்கலுக்குக் கட்டிக்குவேன்' சொன்ன கையோடு 'எனக்கு தயவு செஞ்சு யாரும் புடவை வாங்கித் தராதீங்க. அங்கேபோனால் கட்டிக்க ச்சான்ஸே இல்லை. அப்படி எதாவது பரிசு கொடுக்கணுமுன்னு நினைச்சால்..... சின்னதா ஒருபொம்மை வாங்கித்தாங்க.கொலுவுக்கு வச்சுக்கறேன் 'என்றேன். சரிதானே?
சின்னதுக்கு இது புரிஞ்சுருச்சு போல! நம்ம பையிலே தன்னுடைய சின்ன பொம்மை ஒன்னைப் போட்டு வச்சுருக்கு! நியூஸி வந்தபின்தான் கவனிச்சேன். அட என் செல்லமே! கொலுவுக்கு ஆச்சு:-)))))
நானானி கொடுத்த இருட்டுக்கடை அல்வாவை எடுத்து வெளியில் வச்சேன். 'ஏது! 'ன்னார் மச்சினர்! பதிவராக ஆனதின் பயன் என்றேன்:-) பாதியை அங்கே துண்டு போட்டு விளம்பிட்டு, மீதிப் பாதியை கால் வாசி கால் வாசியா ரெண்டு பங்கு போட்டேன், தசரதன் கெட்டான்:-))))
வீட்டுக்கு இப்போதைய பெருந்தலை நம்ம கோபால்தான் என்பதால் ஆசிகளும், கைநீட்டங்களும் நடந்து முடிஞ்சது. இங்கே வரும் வழியிலேயே பசங்க அங்கங்கே டப் டுப்புன்னு பட்டாஸ் வெடிச்சுக்கிட்டு இருந்தாங்க.
நாங்க போனபோதுதான் வீட்டுலே கடைசி பந்தி ப்ரேக்ஃபாஸ்ட் நடந்துக்கிட்டு இருந்துச்சு. நாம் ஏற்கெனவே லோட்டஸில் சாப்பிட்டாச்சுன்னதும் கொஞ்சமாக் கோச்சுக்கிட்டாங்க. எனக்குக் காலையில் மருந்து எடுத்துக்கணும். அது வெறும் வயிற்றில் கூடாது என்பதால்.... தின்னாம எங்கேயும் கிளம்ப விடமாட்டாரு நம்ம கோபால்.
ஆனாலும் விடாம சூடா 'வடை' போட்டுத்தர்றேன்னு ஆரம்பிச்சாங்க. நம்ம வீக் பாய்ண்டைத் தொட்டதும்..... தலையை ஆட்ட வேண்டியதாப்போச்சு சரின்னு:-)
பட்டாஸ் சத்தம் அதிகமாக் கேக்க ஆரம்பிச்சது. இவ்ளோ நேரம் பசங்க எல்லாம் சாப்பிடப்போயிருந்தாங்க போல. சின்னுவுக்கு உடம்பெல்லாம் நடுக்கம். வாடான்னதும் பக்கத்துலே வந்து உக்கார்ந்துக் கிட்டான். பாவம் குழந்தை.
நாத்தனார் பேரன். தீபாவளிக்கு சிலந்தி உடுப்பு:-)
மச்சினர் மகன் 'கத்தி' பார்க்கக் கிளம்பினான். மகள், ஃப்ரண்ட்ஸ் வீட்டுக்குத் தீபாவளி பலகாரம் எடுத்துக்கிட்டுப் போறாளாம். எங்களுக்கும் தீபாவளி பலகாரம் ஒரு பொதி கிடைச்சது.
கதைகள் பேசி கலகலப்பாய் பொழுது போனது. மதிய சாப்பாடு ஆனதும் கிளம்பி நேரா பதிவர் சந்திப்புக்குப் போனோம்.
அங்கே.....அஞ்சே நிமிசத்தில் ம்ருதங்கம் வாசிக்கக் கத்துக்குவார் நம்ம கோபாலுன்னு நான் கனவிலும் நினைக்கலை!
குழந்தைக்கண்ணன் கனிவமுதன் தன் இசைக்கருவிகளோடு பேசிக்கிட்டு இருக்கானே தவிர, அம்மா ஊட்டும் பருப்பு சாதத்துக்கு வாயைத் திறக்கலை:-)
இந்த வருசம் நம்ம தலயின் 'அம்மா' தவறிப்போனதால் வீட்டுலே தீபாவளி இல்லை. ப்ச்.....
நானானியின் அல்வாவில் கால் வாசி கொஞ்சம் மன ஆறுதலைக் கொடுத்துருக்கணும்!
கோபாலுக்கும் கனிக்கும் ஒரு புரிதலும் அன்பும் இருக்கு என்பதை கடந்து போன நாட்களில் கவனிச்சு இருக்கேன். இப்பவும் அதேதான்.... சட்னு ரெண்டு பேரும் வாசிப்பு, சங்கீதமுன்னு தங்கள் உலகத்துக்குள் போயிட்டாங்க.
நானும் பாலபாரதி & லக்ஷ்மி தம்பதியருமா எங்க பேச்சைத் தொடர்ந்தோம். நேரம் ஓடத்தான் செஞ்சது. அப்பதான் அங்கிருந்த ம்ருதங்கத்தை ஆசையோடு பார்த்தார் கோபால். வாசியுங்களேன்னு சொன்னதுதான்.... பாலாவை அந்த க்ஷணமே குருவா ஏத்துக்கிட்டார். குரு தாளக்கட்டுச் சொல்ல சிஷ்யன் வாசிச்சதை நீங்க கேட்டுக்கணும்:-))))
அஞ்சே நிமிசத்தில் ம்ருதங்கம் 'அடிக்கக்' கத்துண்டார்!!!!!
அதிர்ச்சியில் என் கை நடுங்க, நம்ம க்ளிக்ஸ் ஒன்னுமே சரியா வரலை:(
கல்யாணம் ஆன புதுசுலே நம்ம கோபாலுக்கு ம்ருதங்கம் வாசிக்கக் கத்துக்கணுமுன்னு ரொம்ப நாளா ஆசை. சுமார் ஏழு வருசம் கத்துக்கணும் என்று சொல்லி ஆசையில் வெந்நீர் வார்த்தேன். "அப்போ ஈஸியாக் கத்துக்கும் வாத்தியம் எது?" வேறென்ன ஜால்ரா தான்னு சொன்னதை நம்பி வாசிக்க ஆரம்பிச்சவர் இன்னும் நிறுத்தலை:-) யாருக்கு வாசிக்கிறார் என்பதில்தான் மாற்றம்! மனைவி,மகள் என்று தொடங்கி, இப்போ ரஜ்ஜூவுக்கு:-)
நம்ம லக்ஷ்மி அண்ட் பாலாவுக்குத் தெரிஞ்சவங்க மகள் பஸில் அடுக்குவதில் நிபுணி. நம்ம மயில் கதை உங்களுக்குத் தெரியுமோல்யோ? தோல்வியை கம்பீரமா ஒப்புக்கொண்டு அதை மூட்டை கட்டிக் கொண்டு போயிருந்தேன். அட்டகாசமா அதைச் செஞ்சு முடிச்சுட்டாங்க ஐஸ்வர்யா. இங்கே என் மனமார்ந்த வாழ்த்துகளைப் பதிவு செஞ்சுக்கறேன். ஹேட்ஸ் ஆஃப் ஐஸூ!
லக்ஷ்மி அனுப்பி வச்ச நியூஸி மயில்:-)
இங்கேயும் லட்டு, மிக்ஸர், ஏலக்காய் சேர்த்த அருமையான டீன்னு தீபாவளிப் பலகாரத்தை ஒரு கை பார்த்துட்டு அடுத்த பதிவர் சந்திப்புக்குக் கிளம்பினோம்:-)
பாலா வீட்டு மஹா'லக்ஷ்மி ' சீனிவாசனையும் மறக்கலை.
கிளம்புற நேரம் முத்தம் கொடுத்துட்டான்ப்பா!!!!
தொடரும்.........:-)
22 comments:
பதிவராக ஆனதின் பயன்அல்வாவா...? ஹா... ஹா...
// கவலையா? அப்டீன்னா...? // அதானே...?
நல்ல நிகழ்வுகள். நல்ல நடையில் பகிர்வு. படிப்பது போலில்லை. உடன் இருப்பதுபோல் இருந்தது. நன்றி.
உங்கள் தளத்தை விரும்பி படிப்பவன் என்றாலும் கருத்துக்கள் கூற யோசிப்பவன்; கருத்து சொல்லி பொல்லாப்பு எதுக்கு என்று கருத்து கூறாமல் சென்றுவிடுவேன்.
மேலும், எனக்கு நடிக்க தெரியாது; கருத்து என்ற பெயரில் உண்மையை சொல்லிவிடுவேன் என்ற பயம் உள்ளது; யாருக்கும் உண்மையை கேட்க மனது இருக்காது!
நீங்கள் இருவரும் இருக்கும் [முதல்] படம் நன்றகா இருக்கு! அழகாவும் இருக்கு. காதல் செய்து வாழ்கையில் ஜெயித்தவர்களில் --உங்கள் குடும்பம் உண்டு!
வாழ்க! அதே சமயம், உங்கள் இருவருக்கும் "திருஷ்டி சுத்தி போடனும்" என்று பொய்யாக [என் மனசாட்சிக்கு எதிராக சொல்ல மாட்டேன்--ஏன் சொல்ல முடியவில்லை! ஆனால், காதல் ஜெயித்து என்பதற்கு நீங்கள் ஒரு உதாரணம்--Bench Mark!
பின்குறிப்பு;
ஆமா! உங்களை டீச்சர் டீச்சர் என்று சொல்கிறார்களே..நீங்கள் என்ன டீச் செய்கிறீர்கள்? எங்கு டீச் செய்கிறீர்கள்? விருப்பப்பட்டால் சொல்லலாம்!
என் பின்னூட்டம் பிடிக்கவில்லை என்றால் நீங்கள் இதை நீக்கி விடலாம்!
ஜால்ரா வாசிப்பதை பத்திசொல்லியிருந்தது சூப்பர். :))
ஐ... ஃபோட்டோவில் வல்லிம்மா!
//சின்னதுக்கு இது புரிஞ்சுருச்சு போல! நம்ம பையிலே தன்னுடைய சின்ன பொம்மை ஒன்னைப் போட்டு வச்சுருக்கு!//
அடேடே.... என்ன அன்புக் குழந்தை? சூப்பர்.
அன்புப் பட்டாஸ்கள் !
கிளம்புற நேரம் முத்தம் கொடுத்துட்டான்ப்பா!!!!//
இதை விட வேறு நினைவு பரிசு வேண்டுமா?
எப்போதும் இந்த அன்பு முத்தம் நினைவில் இருக்கும்.
பயண அனுபவம் அருமை. வல்லி அக்காவும் நீங்களும் உள்ள படம், அருமையான அழகான படம்.
ஆஹா தீபாவளிக் கொண்டாட்டம்.. நானும் கால் பாதியில் கால் பாதி திருநெல்வேலி அல்வா எடுத்துக் கொண்டேன்....
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
நம்ம நானானி இப்படி 'அல்வா கொடுப்பாங்க'ன்னு நினைக்கவே இல்லையாக்கும், கேட்டோ:-)))
வாங்க ஜம்புலிங்கம் ஐயா.
ஆரம்பகாலத்தில் பல நடைகள் நடந்து பார்த்து, இதுதான் எனக்கானதுன்னு தெளிஞ்சு , இப்போ பத்து வருசமா இதே நடைதான்:-)))
வாசிப்பவர்கள் மனசுக்கு நெருக்கமா இருக்கத்தான் இந்த கதை சொல்லிக்கு ஆசை!
வாங்க நம்பள்கி.
நலமா?
உண்மை சுடும் என்று சொல்றீங்க! பல சமயங்களில் இது உண்மையே!
காதலில் ஜெயிப்பு அவ்ளோ சுலபமில்லை! நிறைய படவேண்டி இருக்கும்.பட்டோம்:(
நம்ம துளசிதளத்தில் சரித்திர வகுப்புகள்தான் பெரும்பாலும். வகுப்பு நடக்குதேன்னு டீச்சர்னு நம்ம வாசகர்கள் கூப்பிட ஆரம்பிச்சு அதுவே நிலைச்சும் போச்சு.
உண்மையிலேயே நான் ஆசிரியர் படிப்பு முடிச்சவள். என் அதிர்ஷ்டம் பாருங்க.... படிப்புப் பயிற்சிக்காக பள்ளிகளில் போய் வகுப்பு எடுத்தேனே தவிர முடிச்ச பிறகு அந்த வேலைக்கே போகலை(மாணவர்கள் தப்பிச்சாங்க)
அதான் இப்போ வலை உலகில் டீச்சர்!
சந்தேகம்.... க்ளியர் ஆச்சா?
வாங்க புதுகைத் தென்றல்.
அடிக்கிற அடியில் எங்கே இருக்கும் ஜால்ரா உடைஞ்சுருமோன்னு போன பயணத்தில் இன்னும் ரெண்டு செட் வாங்கி வந்தேன்:-)
வாங்க ஸ்ரீராம்.
குழந்தைகள் செலுத்தும் அன்புக்கு ஈடேது !!!
வருகைக்கு நன்றி.
வாங்க கோமதி அரசு.
சரியாச் சொன்னீங்க! அருமையான பரிசு!
நன்றீஸ்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
தீபாவளியை பொங்கல் கழிச்சுச் சொல்றேனே!
// நானும் கால் பாதியில் கால் பாதி திருநெல்வேலி அல்வா எடுத்துக் கொண்டேன்....//
அள்ள அள்ளக் குறையாது அல்வா!!!
[[[கல்யாணம் ஆன புதுசுலே நம்ம கோபாலுக்கு ம்ருதங்கம் வாசிக்கக் கத்துக்கணுமுன்னு ரொம்ப நாளா ஆசை. சுமார் ஏழு வருசம் கத்துக்கணும் என்று சொல்லி ஆசையில் வெந்நீர் வார்த்தேன். "அப்போ ஈஸியாக் கத்துக்கும் வாத்தியம் எது?" வேறென்ன ஜால்ரா தான்னு சொன்னதை நம்பி வாசிக்க ஆரம்பிச்சவர் இன்னும் நிறுத்தலை:-)]]]
நல்ல humor! ஜால்ரா அடிக்கமா எவனாலேயும், காதல் கல்யாணம் செய்தாலும், குப்பை கொட்ட முடியாது!
கோபால் ஜெமினி கணேசன் ரசிகரா? ஏனென்றால் அவர் மீசை அப்படி இருக்கு; ஜெமினி கணேசன் மீசை அப்படிதான் இருக்கும்--அதுக்கு ஒரு ஸ்பெஷல் பெயர் உண்டு--Pillar rocks மீசை! ஆம்! கொடைக்கானலில் உள்ள இரண்டு Pillar rocks மீசை
தீபாவளி இனிப்பு போல படங்கள். அன்பால எழுதின வார்த்தைகள். உங்க தோழி வாயில இருக்கிறதை முழுங்கிட்டுப் போஸ் கொடுத்திருக்கலாம். மச்சினர் வீடு அழகா இருக்கு. பேரனும்,சின்னுவும் சூப்பர். எனக்குச் சின்ட்டு நினைவுதான் வந்தது. கனியும் கோபாலும் தனியா பதிவே போடணும் போல இருக்கு. என்னமா ஒட்டிக்கிறான்.
மயிலை ஐஸு முடித்துவிட்டதா. என்ன ஒரு அழகு பா.கம்பீரமா இருக்கு. கொடுக்கவேண்டிய இடத்தில்தான் கொடுத்து இருக்கிங்க. அந்த நிலா மயில் போலக் குழந்தையும் நன்றாக இருக்கணும் லக்ஷ்மி பாலா படங்கள் நிறைவா இருக்கு. என்னன்னு சொல்ல முடியாமல் இந்தப் பதிவு அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வாழ்த்துகள் துளசிமா. குறையொன்றும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் நீங்கள் இருவரும்.
படங்கள் எல்லாமே அழகு அக்கா ..சின்னு நடுக்கம் படத்தில் தெரியுது ..
ஹய் :! வல்ல்லிம்மா . அப்புறம் அந்த பச்சை கலர் புடவை ...வாஆவ் அழகு கலர் டிஸைன் ..
@நம்பள்கி,
//ஜால்ரா அடிக்கமா எவனாலேயும், காதல் கல்யாணம் செய்தாலும், குப்பை கொட்ட முடியாது!//
உண்மையே. ஆனால் சமயத்துக்குத் தகுந்தாற்போல் இருபாலருமே ஜால்ரா அடிக்கவேணும்தான்:-)
கோபால்,எம்ஜிஆர் ரசிகர்!
வாங்க வல்லி.
என் இனிய தோழி எப்படி இருந்தாலும் எனக்கு அழகோ அழகுதான்ப்பா.
எனக்கும் சிண்ட்டு நினைவு வரத்தான் செஞ்சது:( ப்ச்....
மயில் செஞ்ச ஐஸுவை அடுத்த பயணத்தில் சந்திக்க ஆசை. பார்க்கலாம்.
வாங்க ஏஞ்சலீன்.
பாவம்ப்பா அந்த ச்சின்னு:( சதா கட்டிப்போட்டே வச்சுருக்காங்க. அவன் வீட்டுக்குள்ளே வந்ததும், ஆளாளுக்கு விரட்ட ஆரம்பிச்சது எனக்குச் சுத்தமாப் பிடிக்கலை:(
நம்ம ரஜ்ஜு, செல்லம் கொடுத்தே கெட்டுக்கிடக்கு. அதைப்போல அவனும் ஆகணுமா என்கிறார் கோபால்!
very nice padivu nalla halwa for me?
மகிழ்ச்சிதரும் கொண்டாட்டம்.
Post a Comment