Monday, January 05, 2015

குரங்குப் பிடி ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 10)


வணக்கம் மக்கள்ஸ்!  எல்லோருக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.  விடுமுறைகள், விழாக் கொண்டாட்டங்கள் எல்லாம் நல்லபடி முடிஞ்சு புத்துணர்ச்சியோடு வகுப்புக்கு வந்துருக்கீங்கதானே?

பயணத்தொடரில்   எங்கெ விட்டேன்...........   ம்ம்ம்ம்

//மணியைப் பார்த்தால்....  ஐயோ பதினொன்னே முக்கால்.  பனிரெண்டுக்கு  செக்கவுட் செய்யணுமே....//

போன வழியாகவே திரும்பி வர்றோம்.   அந்த 'ஜெயின் கோவில்'   கோபுரம் கண்ணில் பட்டதும்.... 'இது நமக்கில்லை  சொக்கான்னு மனம் நினைக்கும்போதே....'  அங்கே அஞ்சு நிமிசம் போயிட்டுப் போகலாமுன்னு  கோபால் திருவாய் மலர்ந்தருளினார்.  ஒரு  மேம்பாலத்து சைடு ரோடில் போய்க்கிட்டு இருக்கோம் அப்போ:(

இனி எங்கே போறது? சாமி வரம் கொடுத்தாலும்.....

பாலத்துக்கடியில் போய் ரைட் எடுத்துக்கலாமுன்னு சீனிவாசன் சொல்லி அப்படியே செஞ்சார்.  ஸ்ரீ மாருதி சாய்தாம் மந்திர் என்று போர்டு சொல்லுது. கோவிலுக்கு முன்னால்  அவுங்க வளாகத்துலேயே  வண்டி நிறுத்திக்க  இடமும் கிடைச்சது. தரைத்தளத்தில் சின்னதா ஒரு ஜூத்தா கர்.  செருப்பை விட்டுட்டுப்போகலாம்.  கோவில்முற்றத்தில் காங்க்ரீட் கொடிமரம். (கருட ஸ்தம்பான்னு எழுதி வச்சுருந்தாங்க!)

ரெண்டு   ஓரங்களிலும்  நம்ம யானைகள்! ஒரு இருபது படிகள் மேலேறிப்போகணும்.  ரெண்டு பக்கமும் படிகள் வச்சு நடுவாந்திரத்தில்  சின்னதா ஒரு வாட்டர் ஃபௌண்ட்டன் நீர்வீழ்ச்சிபோல படி இறங்கி  வர, அதுக்கு நடுவிலே  இருக்கும் சிவன். ஓ...  கங்கைக்கு நடுவில் இருக்கார்!  அலங்கார விளக்கெல்லாம் கூட  இருக்கு. இரவு நேரத்தில் சலசலன்னு தண்ணீர் வழிந்தோட அட்டகாசமாக இருக்கும் போல!



பெரிய ஹாலின் நடுவில் விஸ்வரூபம்  காமிக்கிறார் நம்ம அனுமன்.  கோயிலில் அவ்வளவாக் கூட்டமில்லை. ஒரு ஏழெட்டுபேர்தான்.  ஒரு பக்கம்  அர்ச்சனை டிக்கெட் விற்பனைக்காக  அமர்ந்திருந்தவரிடம், படங்கள் எடுத்துக்கலாமான்னதுக்கு  'இஷ்டம்போல தாளிச்சுக்கோ'ன்னுட்டார்:-)))

  அவரிடம் கோவில் விவரங்கள்  கொஞ்சம் கிடைச்சது. மொத்தம் முப்பத்தி ஆறுஅடி  உசரம்.  ஒரே கல். க்ரானைட்.  அதுவும் நூறு டன்.  புதுச்சிலையா இருக்கேன்னேன். இப்பதான்  ஒன்னேமுக்கால் வருசமாச்சு. வர்ற  சங்கராந்திக்கு  வயசு ரெண்டுன்னார்.

புத்தம் புதுக் கருக்கு மாறலை. அபிஷேகம் தைலக்காப்புன்னு  நடந்து நடந்து  அது கருங்கல் சிலையா ஆக இன்னும் பல வருசங்கள் ஆகலாம்.  வரப்போகும் கூட்டத்தை மனசில் வச்சு இப்பவே கம்பித்தடுப்பு போட்டு வச்சுருக்காங்க. அபிஷேகம் செஞ்சுக்கவும் அலங்கரிக்கவும் வாகா  அனுமனுக்கு பின்பக்கம்  இரும்பு ஏணிப்படிகள்.    தினம் பூமாலை சார்த்தவும் வேண்டித்தானே இருக்கு!

நல்ல பெரிய வளாகம்தான்.  முக்கால் ஏக்கர்னு சொன்னாங்க. 27000 சதுர அடிகள், இந்தியாவிலேயே உயரமான அனுமன், கர்நாடகா மாநிலத்தின் முதல் என்றெல்லாம் அவுங்க கொடுத்த கார்டில்  போட்டுருக்கு.  எல்லாஞ்சரி. ஆனால் ....   இந்தியாவிலேயே உயரம் என்பதுதான் கொஞ்சம் இடிக்குது. ஷிம்லா போனப்ப அங்கே 108 அடி உயர ஹனுமனைப் பார்த்துப்படமும் போட்டுருந்தேனே!


 பூபாலும் சாந்தியும் அர்ச்சனை டிக்கெட்டுகள் வாங்கிக்கிட்டாங்க. நின்னு நிதானமா குடும்ப அங்கத்தினர்கள் பெயர், நக்ஷத்திரம்  எல்லாம் கேட்டு  அர்ச்சனை செஞ்சார் பட்டர். ஆஞ்சிக்குப் பின்பக்கம் சீதையும் ராமனுமா முகம் காமிக்கிறாங்க. நெஞ்சத்தில்  ராமரும் சீதையுமா  இடம்பிடிச்சுருக்காங்க.



சந்நிதியை வலம் வரலாமுன்னு போறோம்.  அனுமனுக்கு  வலப்பக்கம்  தனி சந்நிதியில்  சந்தோஷி மாதா. ஜஸ்ட் அனுமனுக்கு பின் பக்கம்  இருக்கும் இடத்தில்  ஏழு சின்னச்சின்ன பளிங்கு மாடத்தில்  துர்க்கை, சரஸ்வதி,லக்ஷ்மி, புள்ளையார், ஹனுமன்,  குக்கா ஜாஹர் வீர்  இப்படி .....   இந்த வரிசைக்கு மேலே திருப்பதி பாலாஜி. அவருக்கும் மேலே  சுவற்றில்  சித்திரங்கள். நடுவில் பார்வதி பரமேஸ்வரன்,  ரெண்டு பக்கமும் புள்ளையாரும் சுப்ரமணியனும்.(எதையும் விட்டு வைக்கலை!)

கடந்து போனால்....  சந்தோஷி மாதாவுக்கு   பாரலலா...   ஹனுமன் இடக்கைப் பக்கம் ஷிர்டி சாய்பாபா.  ஹால் முழுசும் சுவரில்  ஹனும சரிதம். சின்ன அளவிலான  புடைப்புச் சிற்பம் வகை.




வலம் தொடர்ந்து முடிக்கும் போது ப்ரஸாத விநியோகம்.  புளியோதரை.
புதுக்கோவில் என்றபடியால்....   பணத்தேவைகள் அதிகம் இருக்கத்தானே செய்யும் இல்லையா?  எவ்ளோ, எதுக்கு  கொடுத்தால் அருள் கிடைக்குமுன்னு  தகவல் பலகை சொல்லிக்கிட்டு இருக்கு:-) விருப்பம்  இருந்தால் வடை மாலை கூடச் சார்த்தலாமாம்.

அடடா.....   வடை போச்சே!

இப்பெல்லாம்  சாமிகள் வெப்ஸைட் வச்சுக்கறது வழக்கமாப் போச்சுன்னா, இவர் ஃபேஸ்புக்லே கூட இடம் புடிச்சு இருக்கார்:-)  சரியான குரங்குப்பிடி, கேட்டோ:-))))    போகட்டும்,....காலத்துக்கேத்த கோலம்!

Shree Maruti Sai Dham








சிலை செய்ய ஆரம்பிச்சது  முதல்சகல விவரங்களும் அங்கே இருக்கு.  உங்களுக்காக சில படங்களைப் போட்டு வைக்கிறேன். சுட்ட  படம் சூடா இருக்குமே!


 கோவில் நுழைவு வாசலுக்குப் பக்கமாவே  நவகிரகங்களுக்கும், ஆதி சேஷனுக்கும், நாக தேவதைகளுக்கும் தனித்தனி சந்நிதிகள்.  சனீஸ்வரனுக்கு ஸ்பெஷலா இன்னொரு சந்நிதி.



எல்லாருக்கும் ஒவ்வொரு கும்பிடு போட்டுட்டு, அடிச்சுப்பிடிச்சு  சிட்ரஸுக்குத் திரும்பினோம்.  சொன்ன நேரத்துக்குக் கொஞ்சம் (!) லேட் ஆகிப்போச்சு.  அறைக்குள்ளே புதுசா ஒரு எலக்ட்ரானிக் லாக்கர் (இரும்புப்பெட்டி)  உக்கார்ந்துக்கிட்டு இருக்கு.  ஃப்ரீ ஸ்டைல் :-)  யாருக்காவது வேணுமுன்னா டக்ன்னு தூக்கி இடுப்பில் வச்சுக்கிட்டு நடையைக் கட்டலாம்:-))))

 சட்னு பொட்டிகளை எடுத்துக்கிட்டு அறையைக் காலி செஞ்சுக்கிட்டோம். கீழே பில் செட்டில் செஞ்சுக்கிட்டு இருந்தப்ப , காலையில் நம்மிடம் குறை கேட்ட  மேலாளர்  ஓடிவந்து, 'மேடம், லாக்கர் வச்சுட்டோம், பார்த்தீங்களா'ன்னார்.

'பார்த்தேன். ரொம்ப நன்றி.  ஆனால் இப்படி  சும்மா கப்போர்டில் வைக்கக்கூடாது.  அசைச்சு எடுக்க முடியாதபடி  சுவரோடோ, இல்லை  அந்தக் கப்போர்டிலோ  பிடிப்பிக்கணும்.  செக்யூர்டா  இருக்கணும். இப்ப யார் வேணுமுன்னாலும் கையோடு தூக்கிட்டுப் போகலாம் போல இருக்கே' ன்னு  சொன்னதோடு  குறிப்பேடில்  கருத்தைப் பதிவு செஞ்சுட்டும் வந்தேன்.

 வீட்டு வந்து சாப்பிட்டுட்டுப் போகலாமுன்னு சாந்தி ஆரம்பிச்சாங்க. ஊஹூம்.....  வேலைக்காகாது.

அவுங்களுக்கு சொந்த பிஸினெஸ்.  ஆஃபீஸை  இப்போ சில வருசங்களா சாந்தியும் பார்த்துக்கறாங்க.  எம்ப்டி நெஸ்ட் சிண்ட்ரோம்  வந்துருதே!  தீபாவளிக்கு இன்னும் இடையில் ஒருநாள்தான் இருக்குன்றபடியால்.....  அலுவலர்களுக்கு  தீபாவளி போனஸ், இன்றைக்குத்தான் பட்டுவாடான்னு  காலையில் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  இப்போ சாப்பாட்டுக்கடை ஆரம்பிச்சா  அவ்ளோதான்......

அரைநாள்  ஆஃபீஸ் வேலையைப் பாருங்க.   எங்களைப் பற்றிய கவலையை விடுங்க. போறவழியில் எங்காவது பார்த்துக்கலாமுன்னு  சொல்லவேண்டியதாப் போச்சு.


தொடரும்.............:-)





26 comments:

said...

சீதாராம ஆஞ்சனேயர் அசத்தல்..

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

said...

அமர்களமான அனுமன்...!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா...

said...

சுட்ட படங்கள் உண்மையிலேயே சூடுதான் மேடம்!

said...

வாங்க சாந்தி.

சாரல் அடிச்சது போல் மகிழ்ச்சியா இருக்கு. அதுவும் அமைதியாக:-)

ஆஞ்சியை ரசித்ததுக்கு நன்றிப்பா.

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

புத்தம்புதுசா அமர்க்களமேதான்!

உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

said...

வாங்க ஆறுமுகம் அய்யாசாமி.

மேக்கிங் ஆஃப் ஹனுமன்...சுட்டது நாலே படங்கள்தான். அந்த சூடே அதிகமோ:-))))

said...


இந்த இடம் இருப்பதே தெரியாதே.போனதில்லை

said...

தும்கூர் போகும்போது பல தடவை இந்த ஹனுமனுக்கு நமஸ்காரம் சொல்லிவிட்டுப் போயிருக்கேன். நேரில் இன்னும் தரிசித்ததில்லை. நியூஸி லேருந்து வந்துட்டுப் போயிட்டாங்க...இன்னும் லோகல் ஆளு நீ வரல பாருன்னு ஹனுமான் கேட்கறதுகுள்ள போயிட்டு வந்துடறேன்.

கம்பீரமான ஆஞ்சநேயரின் புகைப்படங்கள் அருமை.

said...

என்ன ஒரு புதுமையான வடிவமைப்பு. என்ன ஒரு சுத்தம்! என்ன ஒரு பிரம்மாண்டம்! என்ன அழகு!


said...

வாங்க ஜி எம் பி ஐயா.

உங்க விஸ்வஷாந்தி ஆஸ்ரமம்போகும் சாலையில் இந்தக் கோவில் இருக்கு.

விலாசம் இதுதான்.

எப்பவாவது நேரம் கிடைக்கும்போது போய் வாங்க. மற்ற விவரங்கள் விசாரிக்க அவுங்க செல் நம்பரும் எழுதறேன்.


Sri Maruti Saidham Temple

Adakamaranahalli Bus stop (Near Himalaya Drug)
Tumkur Road, Bangalore.

Cell#: 94496 17458

said...

வாங்க ரஞ்ஜனி.

அதான் லோகல் ஆளுகிட்டே சொல்லுன்னு என்னாண்டை சொல்லி அனுப்பியிருக்காரேப்பா!!!

போயிட்டு, அவராண்டை சொல்லிருங்கோ...துளசி சொல்லி அனுப்பினாள் என்று:-)))

said...

வாங்க ஸ்ரீராம்.

சுத்தமா பளிச்ன்னு இருப்பதே கூடுதலழகுதான்.

நம்ம மக்கள்ஸ் எப்போ இதைப் புரிஞ்சுப்பாங்கன்னு தெரியலையே:(

said...

புதுக்கோவில் நல்லா இருக்குங்க.

said...

பதிவில் சொல்ல விட்டுப்போனது:(

நல்ல பெரிய வளாகம்தான். முக்கால் ஏக்கர்னு சொன்னாங்க. 27000 சதுர அடிகள், இந்தியாவிலேயே உயரமான அனுமன், கர்நாடகா மாநிலத்தின் முதல் என்றெல்லாம் அவுங்க கொடுத்த கார்டில் போட்டுருக்கு. எல்லாஞ்சரி. ஆனால் .... இந்தியாவிலேயே உயரம் என்பதுதான் கொஞ்சம் இடிக்குது. ஷிம்லா போனப்ப அங்கே 108 அடி உயர ஹனுமனைப் பார்த்துப்படமும் போட்டுருந்தேனே!

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நீங்க ஜிஎம்பி ஐயாவுடன் விஸ்வரூபம் போகும்போதே கோவில் கண்ணுலே பட்டுருக்கணுமே!

அலங்கார வளைவில் நம்ம யானைகள் வரிசை வேற இருக்கே:-))))

அடுத்த முறை பெண்களூர் போனா, ஒரு நடை போயிட்டு வாங்க. உண்மையிலேயே நல்லா, அழகா,சுத்தமா இருக்கு!

said...

பெரிய அனுமார்தான்.

இந்த ஆசியாவிலேயே பெரிய.. இந்தியாவிலேயே பெரிய... இதுக்கெல்லாம் எதுவும் அளவுகோல் இருக்குறாப்புல தெரியல. எல்லாரும் சொல்லிக்கட்டுமே.

படங்கள் அழகு. புளியோதரை பிரசாதமா. ஆயிரம் பேருக்கு 5000 ரூவாய்னா ஒருத்தருக்கு அஞ்சு ரூவா கணக்கு வருது.

சென்னை பக்கத்துலயும் இதே மாதிரி அனுமாரை நிறுத்தியிருக்கிறதா யாரோ சொன்னாங்களே.

ஆயிரம் அனுமார்களைப் பார்த்தாலும் சுசீந்திரம் அனுமார்தான் பச்சக்குன்னு ஒட்டிருக்காரு எனக்கு. சின்ன வயசுல போனது.

லாக்கருக்கே லாக்கர் தேவைப்படும் போல. நல்லவேள குறிச்சு வெச்சிங்க.

said...

படப்பை ஆஞ்சநேயரைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தினம் காலை விஜய் டிவியில் காட்டுகிறார்கள்.

said...

வாங்க ஜிரா.

எல்லாம் ஆளாளுக்குச் சொல்லிக்கிறதுதான்:-)))

நங்கைநல்லூர் ஆஞ்சநேயர் உசரமா இருக்காரே!

said...

வாங்க ஸ்ரீராம்.

படப்பை.... முரளிதர ஸ்வாமிகள் ஆஸ்ரமம்தான் என்றால் இங்கே பாருங்க.

http://thulasidhalam.blogspot.com/2012/11/blog-post.html

said...

அதே இடம்தான். டிவியில் முரளிதர் ஸ்வாமிகள்தான் வருவார்.

நீங்கள் தந்துள்ள சுட்டியில் கடைசி கமெண்ட் யார் என்று பார்த்தீர்களா?

:))))))))))))))

said...

ஹைய்யோ ஸ்ரீராம்!!!!

அட ராமா:-)))))

said...

நியூஸிலாந்தில் பூமி அதிர்ச்சி என்று படித்தேன். நீங்களும், கோபால் சாரும் மற்றவர்களும் எப்படி இருக்கிறீர்கள்? யாவரும் நலமா?

said...

வாங்க தமிழ் இளங்கோ.

2010 செப்டம்பரில் ஆரம்பிச்சு நேற்று வரை நாலரை வருசமா ஆரம்பிச்ச ஆட்டத்தை நிறுத்தாமல் ஆடிக்கிட்டே இருக்காள் நிலமாதா!

நேற்று தூக்கத்தில் இருந்தபோது ஒரு 6.5.

அதன்பின் ஆஃப்டர் ஷாக் என்று அரைமணிக்குப்பிறகு அஞ்சு நிமிச இடைவெளியில் மூணு முறை. 3.6. 3.5 3.5 இப்படி. இது நம்மூரிலிருந்து 30 கிமீ தூரத்தில்.

ஆனாலும் எல்லோரும் உணரும் வகைதான்.

எல்லோருக்கும் இப்ப ரொம்பவே பழகிப்போச்சு.

லேசா ஆடத்தொடங்குனதும் நம்ம ரஜ்ஜூ துள்ளிப் பாய்ஞ்சு வெளியே ஓடுவதைப் பார்க்கணும்!!!!

பாவம் குழந்தை. அவனுக்கு முதல் நிலநடுக்கப் பயம் மனசில் அப்படியே பதிஞ்சு போயிருக்கு. அப்பத்தானே தன் குடும்பத்தை பிரிய நேர்ந்தது இல்லையா:(

நலம் விசாரித்த அன்புக்கு நன்றி.
நாங்கள் நலம்.

said...

அனுமன் அசத்தலா இருக்கார். அவருக்கும் ஃபேஸ்புக்கா??? சூப்பர்.

said...

ஆஞ்சநேயரின் கண்கள் எவ்வளவு விசாலம் !!!! . அழகிய சிலை .நன்றி துளசி !!!

said...

ஆஞ்சிக்கும் முகப் புத்தகம் - தகவல் பரிமாற்றம் செய்ய நல்ல வசதி தான்! :)

இன்னுமொரு கோவில் பார்த்த திருப்தி. நன்றி டீச்சர்.