Wednesday, April 09, 2014

மயக்கமென்ன ஸ்வாமி.... ஏனிந்தக் கிடப்பு?

அஞ்சே நிமிசத்தில் கோவில் வாசலுக்குக் கொண்டு வந்தார் ஆட்டோக்காரர்.  தலையை நல்லா உயர்த்தினால்  இருட்டில் மசமசன்னு கோபுரம் தெரியுது. உச்சியில் ஒரு விளக்கு போட்டுருக்கப்டாதோ?  காசி ஸ்ரீ காமகோடீஸ்வரர்  திருக்கோவில்.  ஸ்ரீ பஞ்சாயதனேஸ்வரர் ஆலயம்.

பகலில் கோவில்!


அதென்ன பஞ்சாயதன பூஜைன்னு  புரியலை.  தேடினபோது  கண்ணில் பட்டது  கீழே.

காஞ்சி மகா சுவாமிகள் அவரது சொற்பொழிவு ஒன்றில் பஞ்சாயதன பூஜை பற்றி விளக்கி இருக்கிறார். சில இந்துக்கள் வீடுகளில், நதியிலிருந்து எடுக்கப்பட்ட விசேஷ கற்களை வைத்து செய்யப் படும் பூஜை இது. நேபாள நாட்டில் கண்டகி நதியில் கிடைக்கும் கற்களை சாலக்ராமம் என்றும் விஷ்ணுவின் சக்கரம் தாங்கிய அம்சம் என்றும் சொல்லுவர். தஞ்சாவூர் அருகில் வல்லத்தில் கிடைக்கும் சூரியாகாந்தக் கற்களை சூரியன் வடிவமாகக் கருதி பூஜை செய்வர். இதே போல பீஹாரில் சோனபத்ராவில் கிடைக்கும் சிவப்பு நிறக் கற்களை விநாயகராகவும் நர்மதை நதியில் கிடைக்கும் உருண்டைக் கற்களை பாணலிங்கமாகவும், ஆந்திரத்தில் சுவர்ணமுகி நதியில் கிடைக்கும் கற்களை அம்பாளாகவும் வைத்து பூஜை செய்வார்கள். ஐந்து கற்களை வைத்து செய்யப்படும் இந்த பூஜை பஞ்சாயதன பூஜை ஆகும்.

ஓ.... அப்ப   இங்கே  ஸ்ரீ பஞ்சாயதனேஸ்வரர் ஆலயம் என்று  தகவல் போட்டுருந்ததால் சிவன், விஷ்ணு, அம்பாள், புள்ளையார், சூரியன் என்ற ஐந்து கடவுளர்களையும் ஒரே இடத்தில் வச்சுப் பூஜை செய்வது என்று புரிஞ்சது.  பஞ்ச மூர்த்தங்கள்.   புரிதல் சரியான்னு  தெரிஞ்சவுங்க யாராவது சொல்லுங்களேன்.

 ஆதிசங்கரர் சிஷ்யப்பிள்ளைகளுடன்  இருக்கார்.

குழந்தைப் பண்டிட் ஒருத்தர் கோவிலைச் சுத்திக் காட்டினார்.  படிக்கலையான்னு கேட்டேன். பக்கத்துக் கட்டிடத்தில் இருக்கும்   சங்கர மடம் வேதபாடசாலை மாணவராம். குருகுலம்.  மஹாராஷ்ட்ராவிலிருந்து வந்துருக்கார். வந்து வருசம் நாலாச்சு. படம் எடுத்துக்க அனுமதியும் கொடுத்தார்.

கோவில் கட்டி எத்தனை வருசமாச்சுன்னு கேட்டேன்.  பாவம். குழந்தை  முழிச்சது. போகட்டும்..... ஆதி சங்கரர் நிறுவின  கோவில் என்பதால் எப்படியும் ரெண்டாயிரத்து ஐநூறு வருசங்களுக்கு  முன்பாக இருக்கணும்.  ப்ராச்சீன்!  இப்ப இருக்கும் ஸ்டைலில் அப்போ இருந்திருக்காது.  அந்நியர் படையெடுப்பில் காசி மாநகர் 'அடிபட்ட காலம்' ஒன்னும் இருக்கே:(

நம்ம 'பெரியவா'  1934 இல்  இங்கே வந்து போயிருக்கார்.  ஒருவேளை  அந்தக் காலக் கட்டத்தில் இப்போதிருக்கும் நிலையில் கட்டி இருக்கலாம்.  சங்கர மடத்தினர்  நல்ல விதமா மெயின்டெய்ன் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ததாஸ்து!!!

கோவில் ரொம்ப சுத்தமாப் பளபளன்னு இருக்கு. கச்சிதமான  கருவறை. மூலவர் லிங்கரூபத்தில். தவிர  அம்பாள், புள்ளையார். ஆறுமுகன், ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகத் திருக்கோலம். கஜலக்ஷ்மி. ஆஞ்சநேயர் , மீனாட்சி இப்படி சகலரும் ஒரே இடத்தில்.  கவனத்தை அதிகம் ஈர்த்தவர், ஆலகாலம் உண்ட மயக்கத்தில்  சயனித்திருக்கும்  சிவன். என்ன ஆகுமோன்னு  தேவர்கள்  அவரைசுற்றி நின்னு பார்த்துக்கிட்டு இருக்காங்க.


 பாவாடை கட்டுன ஆஞ்சி!


எனக்கு இப்பெல்லாம் சிவனைப் பார்த்தால் ஐயோன்னு பாவமா இருக்கு.  சரியாச் சொன்னால். கொஞ்சநாளைக்கு முன் நண்பர் எழுதின ஒரு புத்தகத்தைப் (‘Seriously Searching Shiva.’) படிச்சது முதல்.

 பாற்கடலைக் கடையும் ஸீன்.   மந்தாரமலை மத்தைச் சுத்திக் கயிறாகக் கிடக்கும் வாசுகிப்பாம்பின் வாலையும் தலையையும் பிடிச்சு  இழுக்க இழுக்க அதுக்கு வலி பொறுக்கமுடியலை.  நச்சுப்பை குலுங்குது. வேதனை தாங்காமல்  வாயைத் திறந்துச்சு. அதிலிருந்து ஆலகாலவிஷம்   குபுக்ன்னு வருது.  அதைத் திரட்டி எடுத்து என்ன செய்யலாமுன்னு  யோசிக்கிறாங்க. அதானே பாலில் கலந்துட்டா......   ஐயோ அத்தனையும்  விஷப்பாற்கடல் ஆகிடாதோ?

எங்கே அதை வீசி எறிஞ்சாலும் அது பட்ட இடமெல்லாம்  அப்படியே கருகிப்போயிரும். வீசி எறிவதென்ன..... அதன் காற்றுப் பட்டாலுமே அத்தனையும் காலி:(  அப்பதான் அங்கிருந்த சிவன்,  இதை நான் எடுத்துக்கறேன்னு சொல்லிக் கையில் எடுத்தவர் அதை எங்கே வைப்பதுன்னு  தீர்மானிக்கமுடியாமல் சட்னு வாயில் போட்டு விழுங்க ஆரம்பிச்சார்.  தனக்கு ஆபத்தானாலும் பரவாயில்லை.   ஈரேழு உலகத்துக்கு ஒன்னும் நேரக்கூடாதுன்னு நினைச்ச  அப்பாவி!

அருகே இருந்த பார்வதி , கணநேரத்தில் நடந்ததைப் பார்த்து  அதிர்ச்சி ஆகிட்டாங்க. புருஷன் விஷம் குடிச்சுகிடந்தா எந்த மனைவிதான் கதறாமல் இருக்க முடியும்?  எங்கே விஷம்   வயித்துக்குள் போயிருமோன்னு பதறிப்போய் அவர்  மென்னியைப் பிடிச்சாங்க. விஷம் அங்கேயே கண்டத்தில் நின்னு போச்சு. அதான் அவரை நீலகண்டன்னு சொல்றோம்.

என்னதான்  விஷம் வயித்துக்குள்ளே இறங்காட்டியும் அதன் பாதிப்பு இருக்கத்தானே செய்யும்? அப்படியே மயங்கிக் கிடக்கிறார். அங்கே பாற்கடலை இன்னும் ஜோராக் கடைஞ்சுக்கிட்டு இருக்காங்க. விதவிதமான அதிசயப்பொருட்கள் ஒவ்வொன்னா  கிளம்பி வந்துக்கிட்டு இருக்கு. பதினெட்டுன்னு சொல்றாங்க.

பதிநாலு  வகை ரத்தினக்கற்கள்,  ரம்பை ஊர்வசி, மேனகை, திலோத்துமை என்ற  அப்ஸரஸ்கள் (தேவலோக நடன மங்கையர் )  வாருணி என்ற சுராபானம் (அய்ய.... குடி!)   கற்பக விருக்ஷம், காமதேனு,  சந்திரன்,  உச்சிரவஸ் என்னும் ஏழுதலைக்குதிரை, பாரிஜாத மலருக்கான மரம்,

மஹாலக்ஷ்மிகூட அதுலே இருந்துதான் தோன்றினாங்க. கௌஸ்துபம் என்ற நகையும், சங்கு ஒன்றும் வந்தன.   பெருமாள்,  இவைகளைத்  தனக்குன்னு எடுத்துக்கிட்டார்.

 வெள்ளையானை  இந்திரனுக்கு.  அழகான காதணி ஜோடியை  தன் அம்மா அதிதிக்குன்னு எடுத்து வச்சுக்கிட்டார்  இந்திரன்.   குடை ஒன்னும் வர, அது வருணனுக்குப் போச்சு.  அப்ப இனி மழையைக் கண்டு ஒதுங்க வேணாம்:-))))  மற்ற பொக்கிஷங்களை  எனக்கு எனக்குன்னு கேட்டு மத்த தேவர்கள் எடுத்துக்கிட்டு ஆனந்தமா  இருக்காங்க.

தங்கை  ஸ்ரீதேவி வந்ததைப்போல, அக்கா  மூதேவியும் இங்கிருந்துதான் வந்தாங்க. அவளை மட்டும் யாரும் எடுத்துக்கலை.  அதிர்ஷ்டமே இல்லாத கூறு கெட்ட குப்பாயி:(  அவளுக்கும் ஒரு புகலிடம் வேணுமுன்னு அழுதாள்.  வேத ஒலிகள் இல்லாத இடங்களில் போய் இருந்துக்கோன்னு அனுப்பிட்டாங்கன்னு கேள்வி.

ஒரு பக்கம் மயங்கிக் கிடக்கும் சிவனை யாரும் சட்டை பண்ணலை. இந்தப் பெருமாளைக்கூடப் பாருங்களேன்....எவ்ளோ சுயநலம்:(

தன்வந்த்ரி என்னும்  தேவலோக டாக்டர் கடைசியில்  கையில் அமுதக் கலசத்தோடு தோன்றினார். இவருக்கான கடைதல்தான் மொத்தமும். மற்ற  பொக்கிஷங்கள் எல்லாம் போனஸ்!  அப்புறம்தான் சிவனின் நினைவு வந்து  'அச்சச்சோ.... எப்படி இருக்காரோ'ன்னு  பார்க்க  ஓடி வந்தாங்க தேவர்கள்.:(

அடுத்தவர் நல்லா இருக்கணுமுன்னு உயிரைத் தியாகம்  செய்யத் துணிஞ்ச சிவன் மேல் எனக்கு அன்பும் தயையும் வந்துச்சு ... பாவம்ப்பா:(

இங்கே முதலில்  மயங்கிக்கிடந்தவரைப் பார்த்ததும்  பெருமாள்தான் பள்ளி கொண்டிருக்காருன்னு நினைச்சேன். பக்கத்துலே ஒரே ஒரு பெண். அட! தேவலையே!   என்னமோ ஆகிக்கிடக்கு எனக்கு:( கிடந்தவனைப் பார்த்தால்,  அவன் பெருமாள்தான்னு  துப்பட்டா போட்டுத் தாண்டிருவேன். படத்தை உடனே தோழிகளுக்கு அனுப்பினேன்.  'நல்லாக் கண்ணைத் திறந்து பார். நெத்தியிலே பட்டைன்னாங்க ஒருத்தர். பொண், பச்சை உடம்புன்னாங்க இன்னொருத்தர்.  அட ராமா....  சிவனா கிடக்கறார்னு ஆகிப்போச்சு எனக்கு:(

சுருட்டபள்ளி என்னும் ஊரில் (ஆந்திரமாநிலம்) இப்படி சயனித்து இருக்காருன்னு கேள்வி. ஒருக்கா போகணும்!

 பெருமாள் சந்நிதியில் ஒரு அர்ச்சகர் இருந்தார்.  நவக்ரஹங்கள்  இருக்கும் குட்டி மண்டபம் அருமை! நம்ம சண்டிகர்  முருகன் கோவிலை நினைவுபடுத்தினர்.

தரிசனம் நல்லபடி ஆச்சுன்னு மகிழ்ச்சியோடு அங்கிருந்து கிளம்பி மூணாம் நிமிஷம் இன்னொரு பளீர் வாசல் கண்ணில் பட்டது.  நாலைஞ்சு பேர்  அங்கிருந்து வெளியே வர்றாங்க.   இதுதான் நாம் தேடி வந்த  ஹனுமனா  இருக்கணுமுன்னு  ஆட்டோவை நிறுத்தச் சொல்லி உள்ளே போனால்..................

தொடரும்..........:-)


19 comments:

said...

அழகான படங்கள் அம்மா...

நாங்களும் ஒருக்கா போகணும்...

said...

படங்களும் விளக்கமும் நன்றாக இருந்தது

said...

விவரிப்பு அருமை ,அழகு படங்கள். நல்ல தரிசனம் !

said...

ஜூப்பரு..

said...

nalla pakirthal teacher

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஒரு நாலைஞ்சு நாள் தங்கி நிதானமாப் பார்த்துட்டு வாங்க. நான் நிறையக் கோட்டை விட்டுருக்கேன்:(

நானும் ஒருக்கா..........

said...

வாங்க அபயாஅருணா.

வணக்கம்.

முதல் வருகைக்கு நன்றி.

said...

வாங்க சசி கலா.

நன்றிப்பா.

said...

வாங்க சாந்தி.

டேங்கீஸ்ப்பா.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ரொம்பநாளுக்கு ரொம்ப நாளு!!!!

நலமா?

தொடர்ந்து வரணும், ஆமா!

said...

சிறப்பான கோவில். ஒரு முறை இங்கே சென்றதுண்டு......

படங்களும் விளக்கங்களும் வழமை போல பிரமாதம்.....

said...

சிவனார் மகிமையே மகிமை. எல்லாம் டீம் வொர்க் தானேம்மா. முதுகு வலிச்ச ஆமைக்கு என்ன பதில். ஆண்மை பொலியும் சிவபெருமானுக்கு கோடி கோடி நமஸ்காரங்கள். படங்கள் முக்கியமா அந்தப் பையன். என்ன சாத்வீகம் முகத்தில். நல்லா இருக்கணும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்கதான் ஊன்னா ஆன்னா காசி, ஹரித்வார்ன்னு கிளம்பிடறீங்களே!!

said...

வாங்க வல்லி.

சரியாச் சொன்னீங்க. இது டீம் ஒர்க்தான்.

ஆனால் டீமில் ஒரு பகுதிக்குக் கிடைச்சது 'நாமம்' இல்லையோ:(
அதுவே அநியாயமாத்தான் எனக்குத் தெரியுது.

ஆமைக்கு முதுகில் உள்ள ஓடு, எதையும் தாங்குமாம். நோ வலி!!!

said...

பால பண்டிதர் வெகு அழகு.

said...

உங்களுடைய பதிவுகள் எல்லாம் நேர்முகவர்ணனை போல் சுவாரசியமாக இருக்கின்றன. உங்களின் காசி யாத்திரையைப் படித்த பின்பு தான் காசிக்கு போகவேண்டுமென்ற ஆசையும் துணிவுமேற்பட்டுள்ளது. நன்றி

பெருமாள் மட்டும் தான் பள்ளிகொள்ளும் கோலத்தில் இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் மேல்மலையனூரில் அம்மன் பள்ளிகொள்ளும் நிலையில் உள்ள சிலையைப் பார்த்தேன் , இந்தக் கோயிலில் சிவனும் அப்படி இருக்கிறார். இது நவீன காலச் சிற்பிகளின் கற்பனையா அல்லது ஏதாவது பழமையான கோயில்களிலும் திருமாலைப் போல் சிவனும் பள்ளிகொள்ளும் பழங்காலச் சிலைகள் உண்டா என்பதை அறிய ஆவலாக உள்ளது.


//ஆதி சங்கரர் நிறுவின கோவில் என்பதால் எப்படியும் ரெண்டாயிரத்து ஐநூறு வருசங்களுக்கு முன்பாக இருக்கணும்.//

ஆதிசங்கரரின் காலம் எட்டாம் நூற்றாண்டு என்கிறார்கள் ஆனால் நீங்கள் 2500 வருடங்கள் என்கிறீர்கள். பல ஆதிசங்கரர்கள் இருந்தார்களா?

said...

வாங்க ரஞ்ஜனி.

மனசு பளிங்கா இருக்கே, அதான் அந்த அழகு!!!!

(தாமதமான பதிலுக்கு மாப்ஸ் ப்ளீஸ்)

said...

வாங்க வியாசன்.

காசியில் உங்களுக்கு(ம்) ஒரு கோவில் இருக்கு. காசி அரசரின் அரண்மனைக்குள்ளே, மறக்காமல் போய் தரிசனம் செஞ்சுக்குங்க.

ஆணோ பெண்ணோ எல்லோருக்கும் களைப்பு வந்தால் படுக்கத் தோணாதா?

இப்பெல்லாம் புள்ளையார் கூட படுத்த நிலையிலும், பாம்புக் குடையுடன் இருந்த நிலையிலும் அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருக்கார். ஒரு நாள் புள்ளையார் ஊர்வலம் (மகாராஷ்ட்ரா)பாருங்க யூ ட்யூபில்:-)

ஆதி சங்கரர் காலம் கிமு அஞ்சாம் நூற்றாண்டுன்னு நம்ம காஞ்சிப் பெரியவா தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

said...

நஞ்சுண்டு கிடந்தசிவனார் தர்சனம் பெற்றோம்.