Monday, April 14, 2014

நம்ம காசி விச்சுவும், விசாலாக்ஷியும்

காலை எட்டரைக்குக் கார் வேணுமுன்னு சொல்லி வச்சுருந்தோம்.  டைனிங் ஹால்  போய் காலை உணவை முடிச்சுக்கிட்டோம். பஃபேதான். ஆனால் காலங்கார்த்தாலே  பராத்தா, பூரி ச்சனா ன்னு வட இந்திய வகைகள்  எனக்கு ஆகறதில்லை.  ரொட்டியும் வெண்ணையும் போதும்.  கூடவே கொஞ்சம் பழங்கள்,  பழரசம்,காஃபி.

லிஃப்ட்க்கு  காத்திருந்தப்ப, நெத்தி நிறைய பூசி வச்சுருக்கும்  சிந்தூர், சிவந்த முகத்தை மேலும் சிகப்பாக்கி இருக்க,  மனமகிழ்ச்சி பூராவும் கண்களில்  கொப்புளிக்க, வெள்ளைக்காரப் பெண்கள்  வந்து சேர்ந்தார்கள்.  அஞ்சரைக்குக் கங்கைக்கரைக்குப் போனவங்க.  அங்கே  சூரியோதயம்,  பூஜை புனஸ்காரம் எல்லாம் அனுபவிச்ச புண்யவதிகள். ப்ரம்ம முஹூர்த்தத்தில்  கங்கை தரிசனம்!   ஹூம்....  சொக்கா... இது எனக்கில்லை எனக்கில்லை:(


ரிஸப்ஷனில், கங்கை படகு சவாரி வேணுமான்னு கேட்டாங்க.  மாலை  அஞ்சரைக்கு படகு இருக்காம்.  மாலை கங்கை ஆரத்தி முடிஞ்சதும்  கரைக்கு  வந்துடலாமாம். ஜஸ்ட்  ஐநூறுதான் தனிப் படகுக்குன்னாங்க.  ஓக்கேன்னுட்டோம்.

ராடிஸ்ஸன்  வண்டி சரியான நேரத்துக்கு வந்துருச்சு.    இளைஞர் கைலாஷ்தான் ஓட்டுனர். (ஆஹா.... நமக்கு வண்டி ஓட்ட  கைலாசநாதரே  வந்துட்டாரு! )  முதலில் காசி விஸ்வநாதரை சேவிச்சுக்கணும்.  அதுக்கு அஞ்சரை கிலோ மீட்டர்  பயணிக்கணும்   ஊருக்குள் போக.   பகல் நேரக் காசியில்  இன்னும் பனி மூட்டம் விலகலை.  கண்ணில் பட்ட  முதல் கடையே   'செத்தவங்களுக்கான ஸ்பெஷலைஸ்ட் ஷாப்.'  கடைப்பெயர்  பலகை ஒன்னுமில்லை. வச்சுருக்கும்  பொருள்களே   எல்லாத்தையும் சொல்லிருது!   தனிப்பட்ட பகுதிகளில் இல்லாமல் ஊர் முழுக்கப் பரவிக்கிடக்கும்  கடைகளில்  அழகான நிறங்களில் ஓரத்தில் சரிகை வச்சுத் தைச்ச  புடவைகள் (!!).  வண்ணங்கள் இல்லாமல் ப்ளெய்னா வெள்ளை  வேஷ்டிகளும் (லேசா சரிகை உண்டு கேட்டோ! ) வரிசையாத் தொங்கிக்கிட்டு இருக்கு.   இங்கேயும்   அழகிய நிறங்கள் பெண்களுக்கே!   தூக்கிப்போகும் ஏணிகள்  பச்சை மூங்கிலில் செஞ்சு சாய்ச்சு வச்சுருக்காங்க.  எல்லாமே ஜஸ்ட் ரெடி மேட்.   ஏணி (பாடை) அகலம் கொஞ்சம் குறைவா இருக்கோன்னு எனக்குக் கவலை:(கடை வீதிகளில்  மக்கள் கூட்டம் ஆரம்பிச்சுருக்கு.   சாலைகளின் ரெண்டு பக்கமும் திறந்த நிலையில் ஓடும் கழிவு நீர் சாக்கடைகள். எங்கே ஓடுது :( ஊர்க்குப்பையெல்லாம் அடைச்சுக்கிட்டு அப்படியே தேங்கிக்கிடக்கே. கோவிலுக்குச் சமீபம் வந்துட்டோம். 'இதுக்கு மேலே  வண்டிக்கு அனுமதி இல்லை.  இங்கேயே நிறுத்தறேன். நீங்கபோய் தரிசனம் முடிச்சுக்கிட்டு வாங்க'ன்னார்  கைலாஷ்.  சாலையின் குறுக்கே தடுப்பு போட்டு வச்சுருக்காங்க.  காவல்துறையினர்  ரெண்டுபேர்  நாற்காலிகளில் உக்கார்ந்துக்கிட்டு சாவகாசமாப் பேசிக்கிட்டு இருக்க.  நாற்காலியில் துப்பாக்கி, இரும்புப்பூண் போட்ட  தடிக்கம்புகள் சாஞ்சுக்கிட்டு ஓய்வெடுக்குதுகள்.

சாக்கடை ஓரமாவே காசி அல்வா  விக்கறாங்க. இப்பப் பச்சைப் பட்டாணி சீஸன்.  அதையும் உரிச்சுப்போட்டு வச்சுருக்கு இன்னொரு வண்டியில்.  உரிச்ச பட்டாணியை எண்ணெயில் வதக்கி  உப்பு மிளகாய்ப்பொடி தூவி விக்கறாங்க.  கார் நடமாட்டம் இல்லாததால் சாலையில் மக்கள் நடக்க இடம் இருக்கு. ஆனாலும்  டுவீலர்கள் குறுக்கே பாய்ஞ்சு போவதால் கவனமாக நடந்து போறோம். ஏராளமான  த்ரீ வீலர்களும் காசியில்  இருக்கு.  இதுக்கும் சாலைக்குள்ளே வர அனுமதி  உண்டு, கேட்டோ!   சண்டிகரில்  பார்த்தபிறகு,   ரெண்டரை வருசம் கழிச்சு இப்பதான் மீண்டும் பார்க்கிறேன்.

"அம்மா.....  மந்திர்  ஜானேகா.....  அச்சா  தர்ஷன்  மிலேகா.  மேரா ஸாத் ஆயியே அம்மா.... ஆப் தெலுகு ம்மா?   சவுத் கா பண்டிட் பி ஹே.... ம்மா.  மே பி போல் சக்தா ஹூம்......"

தீபக் பாண்டே நம்மை  வளைச்சுக்கிட்டார்.  வெறும் நூறு ரூபாய் கொடுத்தால் போதுமாம், கோவிலுக்குள் கூட்டிப்போய் தரிசனம் செஞ்சு வைப்பாராம்.

நமக்கோ இங்கே கோவிலுக்கு எந்தப்பக்கம் போகணும் என்ற விவரம் இல்லை.ஜஸ்ட் கிளம்பி வந்துருக்கோம். எதுக்கு? கங்கையின் படித்துறைகளை தரிசிக்கன்னு  வாய் சொல்லிக்கிட்டாலும், உண்மையில் மகா மயானம் தான் மனசில் இருக்கு.

ஜ்யோதிர்லிங்கங்கள் பனிரெண்டில் இங்கே காசியில் இருக்கும் விஸ்வநாத்ஜி தான் முதலில்,  நம்பர் ஒன்.  எனக்கு ஏற்கெனவே   இந்தப் பனிரெண்டில் மூணு தரிசனம் கிடைச்சிருக்கு. இங்கே நாலாவது. நம்ம கோபால்   தரிசித்தவர்கள்  அஞ்சு. அதெப்படி  ஒன்னு கூடுதல்?  அவுரங்காபாத் நகருக்கு  ஆஃபீஸ் வேலையாப் போன இடத்தில்    அங்கிருந்து  ஒரு பதினைஞ்சு கிமீ தூரத்தில் இருக்கும்  க்ரிஷ்னேஸ்வர்  தரிசனம் ஆகி இருக்கு.

காசியில் இப்ப இருக்கும்  கோவில் இந்தூர் மஹாராணி அஹல்யாபாய்  ஹோல்கர்  1780 இல் கட்டுன ஆலயம்.  ஆனால்  காசி நகர் ரொம்பவே பழையது.  சாமியும் பழையவரே!  கங்கை எவ்ளோ பழசோ அந்த அளவு !    புராணத்தின்படி  இவர் கங்கையை விட  மூத்தவர்.  பிரம்மலோகத்தில் இருந்து ஆகாயகங்கை, பகீரதன் தவத்தால் பூமிக்கு இறங்கியபோது  அதைத் தன் தலையில் தாங்கிப்பிடிச்சவர் சிவன்தானே?  அப்ப உண்மையான ப்ராச்சீன் இவர்தான்.

அந்நியப்படையெடுப்பில் கணக்குவழக்கில்லாதபடி பலமுறை இடிச்சுத்தள்ளியும் இவர் பிழைச்சிருக்கார், பாருங்களேன்.   11 ஆம் நூற்றாண்டில் கில்ஜி  இடிச்சிருக்கார்.  கொஞ்ச நாளில் புதுக்கோவில் வந்துச்சு.  மீண்டும் இடிப்பு. மக்களும் அசரலை. மீண்டும் மீண்டும் கட்டி எழுப்பிட்டாங்க கோவிலை.

அக்பர் சக்ரவர்த்தி ஒரு முறை,   இடிஞ்ச கோவிலைக் கட்ட பொருளுதவி செஞ்சுருக்கார். அவருடைய மந்திரி தோடர்மால்  அப்போ ஃபைனான்ஸ் மினிஸ்டர்! அவர் மூலமாகக் கோவில் எழும்புது. ஆனால் பாருங்க அக்பர் பேரன்  அவுரங்கஸேப் தன் ஆட்சி காலத்தில்  தாத்தா கட்டுன கோவிலை இடிச்சுத் தள்ளி இருக்கார்:(

ஒரு முறை கோவிலை இடிச்ச கையோடு அங்கே ஒரு மசூதியையும் கட்டி விட்டுருக்காங்க. பொதுவா இந்துக்களுக்கு  சர்வமதம் சம்மதமே. கடவுள் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றதாலோ என்னவோ மசூதியை ஒன்னும் செய்யாமல் விட்டுட்டு இந்தப்பக்கமா கோவிலை விரிவு படுத்தி இருக்காங்க. அப்படி ஒன்னும் பெரிய ப்ரமாண்டமான கோவில்  இல்லை.  சின்னதுதான்.

தங்கத்தகடு போர்த்திய  கோபுரங்கள் இருக்கு. மெயின் வாசல் வழியாப்போயிருந்தால் கண்ணில் பட்டிருக்குமோ என்னவோ?


சாலையில் இருந்து பிரியும் ஆயிரக்கணக்கான சந்துகளில் கூட்டிக்கிட்டுப் போறார் தீபக்.  எல்லாம் ரொம்பக் குறுகலா இருக்கு. இதுலே   நீட்டிக்கிட்டு இருக்கும் கடைகள், மக்கள்ஸ் நடமாட்டம் எல்லாமும் சேர்ந்து  நாலடி  அகலம் இருந்தாவே அதிகம்!  நம்மைக்கூட்டிப்போய்  ஒரு கடைக்குள்ளே மர லாக்கர்கள் இருக்கும்  சின்ன அறையில் விட்டுட்டு  ஹாயா அங்கே இருந்த  பெஞ்சில் சாய்ஞ்சவர்,  கோவிலுக்குள் எதுக்கும் அனுமதி இல்லை என்றார். (காசைத்தவிர!!!  ) ரூபாய் நோட்டால் இயங்கும் குண்டுகளைக் கண்டுபிடிச்சுட்டாங்கன்னா...........   காசுக்கும் உள்ளே அனுமதி  இருக்காது:-)))எல்லாத்தையும் லாக்கரில் வச்சுப் பூட்டிட்டு   சாவியை எடுத்துக்குங்கன்னார்.   ஏற்கெனவே நம்ம பயணங்களில் இந்த  'எதுக்கும் அனுமதி இல்லை' என்பதை பல இடங்களில் அனுபவிச்சு இருக்கோமே!

வாய் திறவாமல் வச்சுப் பூட்டினோம்.  சாவி நம்ம கையில். ரெண்டாவது சாவி இருக்காதா என்ன?  எல்லாம் ஒரு நம்பிக்கைதான்!  ஆனாலும்.....  கேமெரா உள்ளே போயிருச்சேன்னு  ஏங்கினேன்.செருப்பைக் கடையில் விட்டுட்டோம். உக்கார்ந்து ஷூ கழட்டத்தான் பெஞ்சு. வெளியே வரும்போதே ஒரு  தட்டில் பலவகை ப்ரஸாதப்பொட்டலங்களையும்  அதே சாமந்திப்பூச்சரங்களையும் குமிச்ச கடைக்காரர், 'ஒரு ஆயிரத்துக்கு  வச்சுறவா'ன்னார்.

அதெல்லாம்  வேணாம் என்றதும் '  வெறுங்கையிலேயா  சாமி கும்பிட போறே?' என்ற   எரிச்சல்,  முகத்தில்.  லாக்கர் மட்டும் போதும் என்றதும்  அம்பதுன்னார். ஓக்கே!

விறுவிறுன்னு தீபக் நடக்க, நாம் பின்னே ஓடறோம். செக்யூரிட்டி கேட்டில் ஆண்/பெண்களுக்கான பிரிவில் தொட்டுத்தழுவதல் எல்லாமாச்சு:( கோவிலுக்குள்ளே கூட்டமான கூட்டம்.  குரங்குகள் நடமாட்டம் வேற. அங்கங்கே நின்னு நிதானிச்சுப் பார்க்க நேரமில்லை. சட்னு ஒரு வாசலுக்குள்  நுழைஞ்சு போனால் எதிரில்  வலது பக்கம் விச்சு இருக்கார்!

காலையில் ரெண்டரைக்கு சாமியை எழுப்பி விட்டுடறாங்க.  ராத்திரி பத்தரைக்கு அர்த்தஜாம பூஜை. இது முடியவே கிட்டத்தட்ட  பதினொன்னே முக்கால்,பனிரெண்டாகிருமாம். இதுக்கிடையில் ஆறுகால பூஜை நடக்குது. பகல் நேரங்களில்  கோவிலைப் பூட்டுவதில்லை.

திருப்பதி நினைவு வந்தது. அங்கேயும் பெருமாளைக் கொஞ்சம் தூங்கவோ,ரெஸ்ட் எடுக்கவோ விடுவதில்லை. ரெண்டு மணிக்கே எழுப்பியும் விட்டுடறாங்க.  பாவம்.....  கடவுளா இருந்தாலும் கஷ்டமோ!!!

வெள்ளியில் தொட்டி போன்ற அமைப்பில்  பூக்கள் நிறைஞ்சு  வழிய நடுவில்  லிங்கத்தின் மேல்பக்கம் தெரியுது. கையில் இருக்கும் செம்பில் இருந்து பாலை , (கங்கை சேர்த்த பால்!) சாமியின் தலையில் ஊத்தித் தொட்டுக் கும்பிடுது சனம். மரகதலிங்கமாம்.   ஹைய்யோ! அப்ப ஒரு பக்கம் விளக்கு வச்சுட்டால்  பச்சை ஜொலிக்காதோ?

 வெள்ளித்தொட்டி, தங்க ஆவுடையார், மரகத லிங்கம்   காலை அபிஷேகம் முடிஞ்சவுடன் !! 

படங்கள், கூகுளார் அருளிச் செய்தார்!

குனிஞ்சு  சாமியைத் தொட்டு வணங்கிட்டு  அடுத்த சந்நிதிக்குப் போறோம், தீபக் வழிகாட்டுதலில்.  அன்னபூரணி சந்நிதியாம்.  சின்ன வாசலில் தலையை இடிச்சுக்காமல்  குனிஞ்சு  உள்ளே போகணும்.  குனிஞ்சு தலையை முதலில் நீட்டி, உள்ளே நம்ம உடம்பைக் கொண்டுபோகறதுக்குள்  அங்கே ரெடியா நிற்கும்  அர்ச்சகரின் கையில் இருந்த சாமந்திப் பூச்சர மாலைகள்   நம்ம கழுத்தில்  சடார்னு விழுந்துருது.  'யே மா அன்னபூர்ணி.  பாஞ்ச் சொவ் டாலோ'ன்னு தட்டை நீட்டறார்,  பளிங்கு சாமிக்கு முன்பக்கத்தில் சம்மணம் போட்டு உக்கார்ந்திருக்கும்  சீஃப் அர்ச்சகர்.  'சொல்லற்று'  கோபாலின்  கை பாக்கெட்டில் நுழைஞ்சு  ஐநூறு கொண்டு வந்துச்சு.   ஊருலகத்துக்கே படிஅளக்கும்  அம்பாளுக்கு  நாம் படி அளக்க வச்சுடறாங்க. ரெண்டு மந்த்ரம் சொல்லி, நம்ம நெற்றியில் குங்குமம்  தீற்றினார்!  நல்லவேளை  குறுக்குக்கோடு!  நாமம் போடலையாக்கும்:-) பலிக்கடா ஃபீலிங். போயிட்டுப்போகுது போ!

 'பார் நான் கொண்டு வந்த ஆடுகளை' என்று தீபக்கின் பார்வை அர்ச்சகரிடம் ரகசியம் பேசியது:-)

அடுத்த சந்நிதியில்  பத்ரிநாத்,கேதார்நாத் கடவுளர்கள். தொட்டடுத்து ராதையும் க்ருஷ்ணனும்.  எல்லாம் சுவரில் இருக்கும் மாடத்தில் சின்ன அளவு பளிங்குச் சிலைகளே! நீட்டிய தட்டுகளில் சின்ன நோட்டுகளாப் போட்டுட்டு தீபக்கைத் தொடந்தோம். இன்னொரு வாசலைத் தாண்டினால்.... தெருசந்தில் இருக்கோம். அட! அம்புட்டுதானா  விச்சு தர்ஷன்?

இல்லை. இன்னும் இருக்காம். இன்னும் ரெண்டுகுறுக்குச் சந்துகளைக் கடந்துபோனால்  லாக்கர் கடை வந்துருச்சு.  கைப்பை,கேமெரா எல்லாம் எடுத்துக்கிட்டுக் காலணியை மாட்டிக்கிட்டுக் கிளம்பறோம். இன்னும் நாலு சந்துகளில் பயணம். விசாலாக்ஷி கோவில் முன் நிக்கறோம் இப்ப.

தமிழ்நாட்டு நாட்டுக்கோட்டை செட்டியார்கள் (நகரத்தார் )  கட்டியிருக்கும் கோவில் இது. இங்கேயும் படமெடுக்க அனுமதி இல்லைன்னு உள்ளே போர்டு இருக்கு. அதனால் என்ன கோவில் முகப்பு வாசலை க்ளிக்க முடிஞ்சது.  காசி விஸ்வநாதர் கோவிலின் அர்த்தஜாம பூஜை இப்பவும் இவர்கள் பொறுப்பில்தான் நடக்குது.

நகரத்தார்களுக்கு காசி விசாலாக்ஷி கண்கண்ட தெய்வம் போல. அவர்கள் சமூகத்தில் நிறைய பெண்களுக்கு  பெயர் 'சாலாட்சி'என்று இருக்கு. விசாலாட்சி என்பதில் 'வி ' கொயட்  லெட்டர் ஆகிருது:-)

அம்மனை வலம் வந்து  வணங்கினதும்  குங்கும ப்ரஸாதம்  கிடைச்சது.  சின்னக்கோவில்தான், ஆனால் அற்புதமா இருக்கு.  போனவருசம்தான் கும்பாபிஷேகம் செஞ்சுருக்காங்க. அதனால் எங்கும் எல்லாம் பளிச்!

பிலவங்க வருசம்  திருப்பணி செஞ்சதா ஒரு தகவல் இருக்கு.  அநேகமா  1847 இல் கட்டுனதா இருக்கணும்.  வருசம் 1820 இல் இருந்தே காசி விஸ்வநாதருக்கு  தினம்  நடக்கும் ஆறுகால பூஜையில் மூணு பூஜைகளை  நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்தான்  செஞ்சுக்கிட்டு இருக்காங்க. காலை 4 மணி, பகல் 11.30  ,இரவு 9 மணின்னு முக்காலம் இவுங்க சத்திரத்தில் இருந்துதான்  பூஜைக்கான பொருட்கள் எல்லாம்  கொட்டுமேளத்தோடு கோவிலுக்குப் போகுது.  சத்திரம் கூட  இதுக்கு முன்பே கட்டுனதாத்தான் இருக்கணும்.  நமக்குத்தான் சரியான விவரம் இல்லாமல் போயிருச்சு. இல்லைன்னா இங்கே கூட தங்கி இருக்கலாம். காலத்துக்கேற்றபடி இப்ப வசதிகளும் நிறையச் செஞ்சுருக்காங்க(ளாம்). முக்கியமா நம்மசாப்பாடு கிடைக்கும். கோட்டை விட்டுட்டோம். நம்ம கயல்விழிமுத்துலட்சுமி அவுங்க பதிவில்   இந்தச் சத்திரத்தைப்பற்றிக் குறிப்பிட்டு இருந்தாங்க. ஆனாலும்......   நமக்கு மிஸ்ஸாகிப்போயிருச்சு:(

தீபக்கைத் தொடர்ந்தோம். மெயின் தெருவுக்குச் சமீபம் வந்தாச்சு.  'அம்மா....பனாரஸி ஸாடி  இதர்  பஹூத் அச்சா ஹைம்மா. அவுர் சஸ்தா பி ஹை' ன்னு ஆரம்பிச்ச தீபக், என்கூட வாங்க ஒரு அருமையான கடை, இதோ பக்கத்தில்தான் இருக்குன்னு ஆசை காமிக்கிறார். ஏற்கெனவே துணிகள் வாங்குவதில்லைன்னு முடிவு செஞ்சுருந்ததால்...........   வேணவே வேணாமுன்னு கண்டிப்பாச் சொன்னதும்  அவர் முகம் வாடிப்போச்சு. 'வாங்கலைன்னா பரவாயில்லை. சும்மா ஒரு அஞ்சு நிமிசம் பார்த்துட்டுப் போகலாம்'

நோ நோ.....நஹி நஹி நஹி!

நான் கடை வச்சு நடத்தின காலத்தில், இங்கத்து  வெள்ளைக்காரப் பெண்மணி (வயசானவர்)  ஒரு நாள் கடைக்கு வந்து வார்னாஷி போயிருந்தப்ப வாங்கின  மூணு பட்டுத்துணிகள்  இவை.  இங்கே  எனக்குப் பயன் இல்லை. சும்மாக்கிடக்கு.  உங்க கடையில் விற்பனைக்கு  வாங்குவீர்களான்னு  பையில் இருந்த பொதியைப் பிரிச்சுக் காமிச்சாங்க.  நல்ல உயர்ந்த  வகைப் பட்டு. நிறைய சரிகை  வேலைப்பாடுகள். ஒவ்வொன்னும் பயங்கரக்  கனம். சுவரில்  அலங்காரமா வால் ஹேங்கரா மாட்டினால்  சூப்பரா இருக்கும்.  என்ன விலைன்னு கேட்டேன்.  இந்தியாவில் கொஞ்சம் நிறையத்தான் கொடுத்துட்டேன்.  அது பரவாயில்லை. நீங்க ஒரு இருவது டாலர் கொடுத்தாலும் போதுமுன்னாங்க. எனக்கு 'ஐயோ'ன்னு ஆகிப்போச்சு.  அப்போ  டாலருக்கு  18  ரூபாய்தான்.  மனசு தாங்காமல், நாப்பது  டாலர் கொடுத்து அனுப்பினேன்.  இப்ப நம்மூட்டு சாமி மேடையை அலங்கரிக்குது காசிப்பட்டு!

கடை என்ன ஆச்சுன்னு கேக்காதீங்க. அது ஒரு ஆறுமாச  ட்ரையல்தான்.  சரிப்படாதுன்னு   மூடிட்டோம். ஆனால் அதுலே கிடைச்ச அனுபவங்களுக்கு கணக்கு வழக்கில்லையாக்கும்:-) ஒரு அம்பது பதிவு தேறும்! 

 நூறு ரூபாய் கொடுத்ததும்,  'அம்மா....  மூணு கோவில் காமிச்சேனே'ன்னார்.   அவர் கணக்கில் ஒவ்வொரு சந்நிதியும் ஒரு தனிக்கோவில்:-)))) முன்னூறு கொடுத்தவுடன்,  'தர்ஷன் த்ருப்தியா' ன்னார்.  இல்லைன்னேன். அப்ப  இந்தாங்கமா  உங்க காசுன்னார்!  எனக்கு சிரிப்பு வந்துருச்சு.  அப்ப அங்கே வந்த இன்னொருவரைக் காமிச்சு 'இவர்  உங்களைக் கங்கைக்கரை கோவில்களுக்கு  அழைச்சுக்கிட்டுப் போவார்மா' என்றார்.

'வேண்டாம், இப்போ கங்கைக்கரை போகலை'ன்னதும்  அவர் ஃபோன் நம்பரைக் கொடுத்து , எப்ப ஃபோன் செஞ்சாலும்  கூட்டிட்டுப்போக வருவார்னு சொன்னார்.  தலை தப்பியது என்ற ஆசுவாசத்தோடு  திரும்பி வண்டி நிற்கும் இடத்துக்கு  நடந்து வந்து சேர்ந்தோம். அவுங்களுக்கெல்லாம்  டைம் இஸ் மணி.  சட்டுப்புட்டுன்னு  நம்ம வேலையை முடிச்சதும் அடுத்த பலியாடுகளைப் பிடிக்கக் கிளம்பிருவாங்க.   இப்படி அலுத்துக்கறேனே தவிர,  இதுவும் ஒரு தொழில்தான். இல்லைன்னா நாமும் தட்டுத்தடுமாறி இருப்போமே!  போகட்டும்...போ!

உண்மையில் கோவிலை இன்னும்கொஞ்சம் நல்லா சுத்திப் பார்க்கலைன்ற என் புலம்பலுக்கு,  'இதுவரை பார்த்தே  போதும் என்று  சந்தோஷப்படு' என்ற உபதேசம் கிடைச்சது   கோபாலிடம் இருந்து.  சும்மாவா சொன்னாங்க, காசி என்னும் புண்யக்ஷேத்ரத்தில்  விஸ்வநாதரை தரிசித்தவுடன் ஞானம் வந்துருமுன்னு!!!  ஞானக்கிணறு அங்கெதானே இருக்கு!!!

தொடரும்...........:-)PINகுறிப்பு: துளசிதளம் வாசகநண்பர்களுக்கும், சகபதிவர்களுக்கும், தமிழ்ப்புத்தாண்டுக்கான இனியவாழ்த்து(க்)கள்.

நேற்றையக் கொண்டாட்டமான பஞ்சாப் ஹரியானா மக்களுக்கான புது வருசப்பிறப்பு வைஷாகி விழாவுக்கும், நாளை கொண்டாடப்போகும்   விஷூ விழாவுக்குமான வாழ்த்துகளை இங்கேயே சொல்லிக்கறேன்.

இன்றைய ஸ்பெஷல் முலாம்பழ மில்க்ஷேக். நாளைக்கு சக்கப்ரதமன்.

அனைவருக்கும் நலம் உண்டாகட்டும்.

படம்:  நேற்றைய வைஷாகி விழாவில்  இன்னிசை.20 comments:

said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் துளசி தள வாசக நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
--

சாலையோர காசி அல்வா, எப்படி ஈக்கள் மொய்க்காமல்.. ஆச்சரியம்தான்.

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா...

said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

said...

புத்தாண்டு அன்று காசி விஸ்வநாதர் தரிசனம்... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் டீச்சர்.
இந்தியாவில் இன்னும் சைக்கிள் ரிக்ஷா இருக்கா? :-( தடைபண்ணிட்டதாக் கேள்விப்பட்டேனே?

said...

அருமை நன்றி;

said...

MANY HAPPY RETURNS OF THE DAY
THANK YOU

said...

வாங்க ராமலக்ஷ்மி.

cellophane பேப்பர் போட்டுச் சுத்தி வச்சுருக்கு பாருங்க. அதான் ஈஸ் ஏமாந்துபோயிருக்கு:-)

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க கரந்தை ஜெயக்குமார்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ஸ்கூல் பையன்.

பதிவுத்தொடரில் தானாக வருசப்பிறப்புக்கு அமைஞ்சு போச்சு காசி விச்சுவின் தரிசனம்!

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க ரிஷான்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

சென்னையில்தான் பார்க்கலை. மத்தபடி சண்டிகரில் ஏராளமா இருக்கு. காசியில் இன்னும் அதிகம். வடநாட்டில் இன்னும் தடை செய்யலை போல!

கல்கத்தாவில் 'கை ரிக்‌ஷா' இன்னும் இருக்காமே!

said...

வாங்க விஸ்வநாத்.

முதல் வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க சிஜி.

வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

நல்ல தரிசனம் ஆச்சு. எல்லாவற்றையும் சகிச்சுக்கொண்டுதான் காசி போகணும் போல. அப்புறமா விரக்தி தானே வந்துடும். சைக்கிள் ரிக்ஷாவில் ஏற இனி கால்கள் புதுசா வேணும் நம்ம முழங்கால் ஒத்துழைக்குமான்னு தெரியலை. அதான் உங்க மூலமாப் பார்த்தாச்சே. நகரத்தார் சத்திரம் பழைய கதைகளில் படித்திருக்கிறேன். நன்றி துளசிமா.

said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பலி ஆடுகள் - சரியாகச் சொன்னீர்கள். இங்கே செல்லும் பலரும் தீபக் போன்றவர்கள் கைகளில் சிக்கும் பலி ஆடுகள் தான்! :(

said...

வாங்க வல்லி.

ரிக்‌ஷா மலிவு என்பதால்தான் உள்ளூர் வாசிகள் அதிக அளவில் பயன்படுத்தறாங்க.

இப்ப ஆட்டோக்களும் நிறைய இருக்குப்பா.

இல்லைன்னா பேசாம வாடகைக்கு ஒரு கார் வச்சுக்கலாம்.நோ ஒர்ரீஸ்:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம ஆட்டு முகத்தை அவுங்க எப்படி சட்னு கண்டுபிடிச்சுடறாங்க என்பதே ஆச்சரியம்!!!!

முகராசின்னு சொல்வது மகா உண்மை கேட்டோ:-)))

said...

வடநாட்டில் எல்லா ஊர்களிலும் திறந்த சாக்கடைகள்தான். அயோத்தியா போய்வந்தீர்களா?
நாங்கள் அயோத்யா போனபோது எங்களுடன் வந்தவர்கள் நிறைய பேர்கள் முதல்நாள் இரவு கிளம்பி காசி போய்விட்டு அடுத்தநாள் இரவு திரும்பி வந்தார்கள். இரவு பயணம் அலர்ஜி என்பதால் போகவில்லை.
பிந்து மாதவனையும் தரிசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
ஜூட்! அடுத்த பதிவுக்குப் போகலாம்!

said...

காசி விஸ்வநாதர் தரிசனம் கிடைத்தது.