Monday, April 21, 2014

நாலு மைல் நீளமாம், காசிப் படித்துறைகள் !

கங்கோத்ரியில் இருந்து பெருகி ரிஷிகேஷ்,ஹரித்வார் வழியாக  கிழக்கு நோக்கி  ஓடும் கங்கையில் வருணா என்ற நதியும்  அஸி என்ற நதியும்   கலக்கின்றன.  இந்த ரெண்டு நதிகளுக்கிடையில்  இருக்கும் இடமே   காசி என்று நாம் கொண்டாடும் வாரணாசி.  ரொம்பவே பழைய காலத்து ஊர் இது. மஹாபாரதத்தில்  காசி மன்னரின் புத்திரிகளைத்தான்  தம்பிக்காக,  அண்ணன் பீஷ்மர்  கவர்ந்து கொண்டு போறார்.  கங்கையின் மைந்தராச்சே.  கங்கை வழியாகப் படகில்தான் வந்துருப்பார்.

கங்கைன்னாலே முக்கியமாச் சொல்ல வேண்டியது  (Ghats ) படித்துறைகள்தான். மக்கள்ஸ் நடமாட்டமும் படித்துறைகளில் அதிகம்தான். ஒன்னையொன்னு தொட்டபடி கரை முழுசும்  படித்துறைகளே!  இந்த வருணா, அஸிகளுக்கிடையில்தான் இந்தப் படித்துறைகள் இருக்கின்றன.  நூத்தியெட்டு, நூறு இப்படி பல எண்ணிக்கைகள் சொன்னாலும் இப்போதைக்குக் கணக்கில் இருப்பவை  ஒரு எண்பத்திநாலு தான்.  இப்பதான்  பண்டிட் மதன் மோஹன் மாளவியா படித்துறைன்னு   புதுசா ஒன்னைக்  கட்டிக்கிட்டு இருக்காங்க. Ghat என்பது கூட ஸ்நானக் கட்டம் என்ற பொருளில்தான் போல!

நதிக்கரைக்கு  அருகில் இருப்பவர்கள், குளிக்ககொள்ள  நதிக்கு  போக வர  எதாவது வழிவச்சுருப்பாங்கதானே? அதிலும் கங்கை போன்ற  ப்ரமாண்டமான நதி இருக்கும் கரையில் இருப்பவர்கள்  கொஞ்சம் உசரமான மேட்டில்தான் வீட்டைக் கட்டிக்கணும்.  என்றைக்கும் வற்றாத ஜீவநதி என்றாலும்  மழைக்காலங்களில்  வெள்ளப்பெருக்கு சகஜம் இல்லையோ?

உசரமான இடத்தில் இருந்து  சுலபமா நதியாண்டை இறங்கிப் போக  படிகளைக் கட்டிக்கிட்டாங்க. இப்படி அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள் கட்டித்தான்  கரையெங்கும் படித்துறைகளாக் கிடக்கு. சாதாரண வீடுகளா இல்லாமல் பெரிய பெரிய மாளிகைகளைக் கட்டுனதால்  அதுக்கேற்ப  படிகளின் அகலமும் கூடத்தானே வேணும்! கட்டுனவங்க எல்லாம்  மன்னர்களும், குறுநில மன்னர்களும்,  பெரிய செல்வந்தர்களுமான்னா இருந்துருக்காங்க.

ஒரே சீரான  வரிசையில் ப்ரமாண்டமான  மாளிகைகள்,  அங்கிருந்து நதிக்கு இறங்கி வரும் படிகள் என்று எல்லாமே இங்கே ப்ரமாண்டம்!

இந்த கங்கைப் படித்துறைகள்   ஒவ்வொன்னிலும் எதாவது ஒரு கோவில் சின்னதும் பெருசுமா இருக்கத்தான் செய்யுது.  அப்படி ஒன்னும் இல்லாத  Ghatsகள் எல்லாம்  இப்ப   Doby Ghatsகளாத்தான் இருக்கு.  பாக்கியம் செய்த  உடைகள். கங்கைக் குளியல் கிடைக்குதே!

படிகட்டுகள் வழியாவே ஒரு  படித்துறை கடந்து அடுத்ததுன்னு நடந்து போய்க்கிட்டே இருக்கலாம். நாலு மைல் (6.5 கி.மீ)   தூரம் !

இப்போ நாம் இருக்கும்  தசஸ்வமேத படித்துறையில் இருந்து  வலப்பக்கம் நம்ம படகு போகுது.

தினமும்  மாலை கங்கா ஆரத்தி நடக்குது பாருங்க , அதை இங்கே இந்தப் படித்துறையில் செய்றவங்க கங்கா சேவா நிதி என்ற நிறுவனத்தினர். ஒரு காலத்துலே கங்கைக்கு  பூஜை என்று  சின்ன அளவில் இருந்திருக்கு.   இப்ப 1992  ஆண்டுமுதல்   இந்த கங்கா சேவா நிதி,  ஆரத்திக்குப் பொறுப்பெடுத்துக்கிட்டு  மிகப் பெரிய அளவில் நடத்த ஆரம்பிச்சு, இப்ப  பெரிய ஷோவாக  நடக்குது.

தினமும் காலையிலும் கங்கைக்கு ஆரத்தி எடுத்தாலும், மாலை மயங்கும் நேரம்தான் சூப்பர் ஷோ!  இருள் சூழ ஆரம்பிக்கும் சமயம்  சங்கொலி எழுப்பி, பூஜை  நடக்குது. ஷோடச உபச்சாரங்கள் என்று பதினாறு வகை உபசரிப்புகளுடன் கோவில்களில்  சந்தியாகால பூஜை  பார்த்துருப்பீங்கதானே! அதேதான் இது.  ஆனால் எல்லாம்பெரிய அளவில்!

ஒரே சமயத்தில் ஏழு பேர் ஆரத்தி எடுக்கறாங்க.  அவுங்களுக்கு  ஒரே மாதிரி சீருடை கூட இருக்கு.   பார்க்கவே பரவசமா இருக்குன்றதை ஒத்துக்கத்தான் வேணும்.  இந்த கங்கா சேவா நிதி,  ஒரு என் ஜி ஓ. வகை.  கங்கையை சுத்தம் செய்யும் சேவைக்கும் இவுங்க உதவி செய்யறாங்க. ஆனால்......  சுத்தம் ஆகுமா என்பது இங்கே பெரிய கேள்விக்குறி:(

பதினாலு லட்சம் உள்ளூர்வாசிகளும், தினமும் வந்து போகும்   கணக்கில்லாத மக்கள்ஸ் செய்யும் அசுத்தமும் கடைசியில்  கங்கையில்தானே கலக்குது:(

 மக்கள் விரும்பினால் இந்த ஆரத்திக்கு ஸ்பான்ஸார் செய்யலாம்.  ஒரு நாளுக்கு  15,111 ரூபாய் ஆகுது,  ஏழுபேர் வரிசைக்கு.  ஒருத்தருக்கு  மட்டும்கூட பணம் கட்டலாம். 2011 ரூ.

 ஓலைக்குடைகளின் வரிசை  ஒருபக்கம். ஒவ்வொரு குடையின் கீழும் ஒரு பண்டா ( சாஸ்த்ரிகள், பூஜை செஞ்சு வைப்பவர்கள்) இருப்பார்கள். மக்கள் தேவைக்கு ஏற்றபடி  கர்மங்கள் செஞ்சு கொடுத்து, தட்சணை வாங்கிப்பார்கள்.

சீதளா மாதா கோவில்  ஒன்னு இதையொட்டியே இருக்கு!  பெரிய சிங்கத்தின் மேல் சவாரி செய்யும்  அன்னை(படி ஷேர் பே ஸவார்: Badi sher pe sawar) நம்ம சிம்ஹ வாஹினியைத்தான் இப்படி நீட்டி முழக்கிச் சொல்றாங்க.

முன்ஷி காட்,  ராணா அகல் காட்,  சௌஸட்டி காட் ( சொஸைட்டி  என்பதைத்தான் இப்படிச் சொல்றாங்களோ?) திக்படியா காட், ராஜா காட் , சௌகி காட், விஜயநகரம் காட்   இப்படி படித்துறைகளைப் பார்த்தபடி போய்க்கிட்டு இருக்கோம். தண்ணீர் போகும் திசையிலேயே பயணம்  என்பதால் வினோத் கொஞ்சம் ரிலாக்ஸாத்தான் ஓட்டறார்.

என்ன ஒன்னு மற்ற படகுகளை இடிச்சுக்காமப் போகணும்.   குழுக்குழுவா மக்களை ஏற்றிப்போகும் படகுகள் அப்பப்போ குறுக்கிடுது. மக்கள் எத்தனை வகையோ அத்தனை வகைப் படகுகளும். சின்னது, பெருசு,  குள்ளம், உசரம்,  நீளம் ,வீடு போல உள்ளது, ரெண்டடுக்கு இப்படி....

குட்டிப்படகு ஒன்னில் பூ விற்கும் சிறுமி.  சின்ன இலையில் நாலைஞ்சு  சாமந்திப்பூ, நடுவில் ஒரு  விளக்கு.  மெழுகுன்னுதான் நினைக்கறேன். எண்ணெய் விளக்குன்னா  தண்ணியில்   கவிழ்ந்து  கொட்டிறாதா?


இருட்ட ஆரம்பிச்சது. பறவைகள் கூடடையும் நேரம்!  அதென்னமோ எந்த நாடாக  இருந்தாலும்,  எந்தப் பறவைகளா இருந்தாலும்  எல்லாமே சொல்லி வச்சாப்போல  படுக்கறதுக்கு  முன்னே உடற்பயிற்சி செய்யாமல் இருப்பதில்லை.  கூட்டங்கூட்டமா வானத்தில்  ஒரு பத்துப் பனிரெண்டு தடவை வட்டம் போட்டுட்டுத்தான் தூக்கம்.  அதான் பறவைகள் அநேகமா  குண்டு பூசணிக்காயா இருப்பதில்லை!!!

கேதார் காட் கண்ணில் பட்டது.  தென்னிந்தியக்கோவில் அங்கே!  அதான் பார்த்தவுடன் தெரிஞ்சுருச்சே:-) இங்கே  வந்துட்டால்  அக்கம்பக்கம் இருக்கும்  படித்துறைகளுக்கு சுலபமாப்போய் வரலாமுன்னு  காசிப்பைத்தியத் தோழி ஒருவர் சொல்லி இருந்தாங்க!  எனக்கும் படித்துறை உலாப்போக ஆசையா இருக்கு. வாய்க்குதான்னு பார்க்கணும்.

இந்தப் பயணத்தில், ஒருமுறையாவது  காசியில் கங்கையின் நீரோட்டம் பார்த்தபடி உக்கார்ந்து நாமம் ஜெபிக்கணுமுன்னு  என்னுடைய ஜெபமாலையைக் கூட மறக்காமல் கொண்டு வந்துருந்தேன்.  இதுவரை லபிக்கலை.இன்னும்  ரெண்டு நாள் இருக்கே....  பார்க்கலாம், கிடைக்குதான்னு!

புகை சூழ்ந்த ஒரு படித்துறை கண்ணில் பட்டதும் கேமெராவை  ஃபோகஸ் செஞ்சேன்.   'இதுக்குத்தானே வந்தே? ' கோபால் விசாரிக்கிறார்:-) இல்லையா பின்னே!!  தூரம் கொஞ்சம் அதிகமா இருக்கு.  இன்னும் பக்கத்தில் போனா நல்லா இருக்கும்.  இப்ப வேணாம், இருட்டப்போகுது  பகல் வெளிச்சத்தில் வரணும்.

அதென்னவோ...  கங்கையின் ஒரு கரையில் மட்டுமே அடுத்தடுத்துப்  படித்துறைகளாக் கட்டி விட்டுருக்காங்க. எதிர்கரையில் ஒன்னுமே இல்லை.கிடக்கு.  அங்கே ஓர் மயானம் இருக்காம்.


கங்கையில் விடச் சொல்லிக் கொடுத்து விட்டிருந்த  மாமனாரின் உடைகளை , 'அப்பாவை மனசில் நினைச்சுக்கிட்டு தண்ணீரில் மெல்ல விடுங்கோன்னதும்,  கோபால் அப்படியே செய்யறார்.  ஆடி அசைஞ்சு ஒய்யாரமா நடக்கிறாள் கங்கைன்னு  நினைச்சால்....தண்ணீரின் உண்மை வேகம் அப்பதான் புரியுது.  தண்ணீரைத் தொட்ட அடுத்த விநாடி   அடிச்சுக்கிட்டுப்போகுது.  நானும் மனசில்  வணங்கினேன்.  நல்ல பிள்ளையைப் பெத்து எனக்குக் கொடுத்த புண்ணிய ஜீவன்கள்!

அங்கொன்னும் இங்கொன்னுமா ஜொலிக்க ஆரம்பிச்ச விளக்குகள்  திடீர்னு  மொத்தமா எரிய ஆரம்பிச்சு தண்ணீரில் அதன் பிரதிபலிப்பு ....  ஆளை அசத்திருது! ஆரத்திக்கு நேரமாயிருச்சுன்னு படகைத் திருப்பினார் வினோத். இப்ப  நீரோட்டத்துக்கு  எதிர்ப்புறம்! துடுப்பைக் கஷ்டப்பட்டு போடுவது  இருட்டிலும் தெரிஞ்சது.

ஹரிச்சந்திரா படித்துறையில்  ஆட்கள்  சொக்கபானையா எரிஞ்சுக்கிட்டு இருக்காங்க:(

 கடந்து வந்தப்ப  இன்னும் ரெண்டு இடங்களில் கங்கை ஆரத்தி நடக்குது போல. சின்னக்குடை போல மின்விளக்குகள் அலங்காரம். தசஸ்வமேத படித்துறைக்கு  வந்துட்டோம்.  ஜேஜேன்னு கூட்டம். கரையில் மட்டுமில்லையாக்கும்.  இங்கே தண்ணீரிலும் ஏகப்பட்ட படகுகள் முண்டியடிச்சுக்கிட்டு நிக்குதுகள்!!

கங்கை ஆரத்தி ஆரம்பிச்சு நடக்குது.  ஒரே மாதிரி உடையுடன் ஏழுபேர் ஆளுக்கொரு மேடையில் நின்னு  பதினாறு உபசாரங்களை  ஒவ்வொன்னா ஒன்னு போலச் செய்யறாங்க.

நம்ம வினோத் 'நீங்களே பாருங்க இந்த  ஆரத்தியை'ன்னு  சொல்லும் பாவனையில்! 

ஹரித்வார் பயணத்தில் நாம் பார்த்த ஆரத்தி (அடி ஆத்தி, இது ஆரத்தீ) போல இல்லை.  அங்கே பக்திபரவசம்!  இங்கே...  ப்ராட்வே தியேட்டரில் ஒரு  ம்யூஸிகல் பார்த்தமாதிரி கேட்டோ!  நம்மூர் சாலைகளில்  சிக்னலுக்கு நிற்கும் வண்டிகளின்  குறுக்கே புகுந்து ஓடும் சனம் மாதிரி, இங்கே ஒரு படகில் ஏறித் தாவித்தாவி மற்ற படகுகளின் வழியாக குறுக்கும் நெடுக்கும் போகும்  ஆட்களினால்  படகுகூட ஒரு நிலையில் நிக்காமல் ஆடிக்கிட்டே  குலுங்குது.  எடுத்த படங்களில் நாலைஞ்சுதான் தேறுச்சு:(

முக்கால் மணி நேரம் நடக்கும் ஆரத்தி ஷோ பார்த்து முடிச்சதும், கரை ஓர மண்பகுதியில்  படகைக் கொண்டுபோய் நிறுத்தினார் வினோத்.  நன்றி கூறிட்டு,  நம்ம அன்பளிப்பு  கொடுத்தவுடன்  அவருக்கு(ம்)  மனம் நெகிழ்ந்து போச்சு.

.   தயாராக இருந்த கௌரவ் நம்மை  கார்வரை கொண்டுவந்து விட்டார். அவசர நடை! காசி விஸ்வநாதர் கோவில்   நுழைவு வாசல் பளீர் வெளிச்சத்தில் கண்ணில் பட்டது.

இன்றைய சுற்றல்  இதோடு முடிகிறது. நாளைக்கு  இன்னொரு முக்கிய சமாச்சாரம் இருக்கு.  சீக்கிரம் எழுந்து  ரெடியாகணும்.


குட் நைட்.

தொடரும்.................:-)

19 comments:

said...

பறவைகளைப் பார்த்தும் கத்துக்கணும்... தேறின படங்களும் நல்லாத் தான் இருக்கு அம்மா...

said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

said...

ரீச்சர்

தப்பா நினைக்கலைன்னா ஒரு கேள்வி.

சுத்தமா இல்லை சுத்தமா ஆகுமான்னு வருத்தப்பட்டுக்கிட்டே நாமளும் அந்த நதியில் பழைய துணியை எல்லாம் போடறது எந்த விதத்தில் நியாயம்?

தப்பா கேட்டுட்டேன்னா மன்னிக்கவும்.

said...

வணக்கம் டீச்சர். உங்க பதிவுகள் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு. தவிர்க்கவே முடியாத காரணங்கள். இன்னைக்கு வந்து பாத்தா இத்தனை பதிவுகள். அடடா!

வடக்க அதிகம் போனதில்லை. பெங்கால், சிக்கிம்னு இந்தப் பக்கம் இமயமலை ஏறியிருந்தாலும் வடக்குப் பயணம் இன்னும் அமையல.

உங்க பதிவுகளைப் படிக்கிறப்போ உங்க கையைப் பிடிச்சிக்கிட்டே போற மாதிரியான அனுபவம்.

கங்கை... என்ன சொல்றது அவளைப் பத்தி. ஊருக்கெல்லாம் நல்லது செஞ்சு தான் அழுக்காய்ப் போன அன்பான அபலை. அந்த நிலை மாறும் என்று நம்புவோம். கங்கையாற்றின் நீளமும் அகலமும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கம்பியைப் பிடித்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்க வேண்டும். இல்லையென்றால் ஆற்றோடு பயணம் என்று சொல்லியும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தூய வெண்பனிக்கூட்டம் உருகி ஒழுகிப் பெருகி ஆறாகி மலையிலிருந்து இறங்கி ஓடி வருகின்ற வேகமல்லவா.. அப்படித்தான் இருக்கும்.

கங்கையை (ஹூக்ளி) கொல்கொத்தாவில் கண்டுள்ளேன். தொடர்ந்து எழுதுங்கள். இன்னும் நிறைய தெரிந்து கொள்கிறேன்.

said...

Ungal thayaval engalukkum punniyam kidaithathu!

said...

ஆடுத்த நாளும் நல்லதாக இருக்கப் பிரார்த்தனைகள் படங்கள் அத்தனையும் ஜோர். அங்கே எரிந்த மனிதர்களுக்கு வணக்கங்கள். ஆரத்தியும் பூப் பெண்ணும் பிரமாதம். கொத்ஸிடம் சொல்லவும் ஆற்றில் போட்டது யார் கையிலாவது கிடைக்கும் .வீணாகாது என்று.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இயற்கையை கவனிச்சால் வாழ்க்கைப்பாடம் படிக்கலாம்!

said...

வாங்க நிகண்டு. காம்.

நல்லது. செஞ்சுருவோம்!!!

said...

வாங்க கொத்ஸ்.

எதுக்கு மன்னிப்பெல்லாம்?

தப்பா நினைக்க மாட்டேன். என் வகையில் இப்படி நதிகளில் போடுவதைவிட யாருக்காவது கொடுத்தால் பயன்படும் என்றுதான் இருக்கேன்.

ஆனால்..... குடும்பத்தினரின் நம்பிக்கையில் என்னால் மூக்கை நுழைக்க முடியாதில்லையா? சமரசம் செஞ்சுதானே ஆகணும். அதுவும் கோபாலின் தம்பிகளும் அவர்களின் மனைவிகளும் இப்படிச் செஞ்சுருங்கன்னு நம்மிடம் கொடுக்கும்போது..... எனக்கு வேற வழி இல்லை:(

ஆனாலொன்னு மாமியாரின் புடவையும் தரேன்னாங்க. கடைசி நிமிஷம் அதெல்லாம் ஊரில் இருக்குன்னு சொன்னதால் தப்பினேன்.

நம்ம வல்லியம்மா சொன்னதுபோல் யாருக்காவது கிடைக்கும் என்றால் ரொம்ப நல்லது.

தண்ணீர் போகும் வேகத்தைப் பார்த்தால் ஒரு 500 கிமீ போனபின் கரையில் ஒதுங்குமோ என்னவோ?

said...

வாங்க ஜிரா.

நலமா? ரொம்ப வேலைகளோ? பரவாயில்லை, எப்ப முடியுமோ அப்போ படிச்சுக்கலாம். எங்கே ஓடிடப்போகுது!

கங்கையில் குளிக்கச் சரியான இடம் என்றால் ரிஷிகேஷ்தான். படு சுத்தமான நீர். வேகம் அபாரம். கம்பிகளுக்கிடையில் இருக்கும் சங்கிலிகளைப் பிடிச்சுக்கிட்டே முங்கி எழணும். கூட்டமும் அவ்வளவா இல்லை. வெறுங்கால் வச்சதுக்கே சங்கிலியைப் பிடிக்க வேண்டியதாச்சு எனக்கு!

said...

வாங்க வல்லி.

கொத்ஸ்க்கு பதில் சொன்னதுக்கு நன்றிப்பா.

பிரார்த்தனைகளுக்கு நன்றி.

said...

வாங்க தெய்வா.

என்ன உங்களை ரொம்ப நாளா இந்தப் பக்கமே காணோம்???

பயணங்களில் கிடைக்கும் புண்ணியங்களை நம் வாசக நண்பர்களுக்கும் சகபதிவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தோழிகள் அனைவருக்கும் பங்கு போட்டுக் கொடுத்தாச்சு.

said...

நேரில் கண்டது போல் உணர்வு !!நன்றி .

said...

எனக்கும் அங்கே சென்று ஒரு வாரமாவது இருக்க வேண்டும் என எண்ணம். பார்க்கலாம் எப்போது முடிகிறது என....

said...

வாங்க சசி கலா.

அதுக்காக.... நேரில் போக ஒரு சான்ஸ் கிடைச்சால் விட்டுறாதீங்க:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரு வாரமா!!!! அதெல்லாம் எனக்குக் கனவு!

ஆணாக இருக்கும் சுகங்களில் ஒன்னு.... பயணங்களில் சட் னு கிளம்பித் தனியாகச் சுத்தி வரலாம்!

பெண்களுக்கு.... ஹூம்.....:(

said...

நானும் கூட சிங்காரச்சென்னை கூவத்தை சீரமைப்போம் என்று உறுதி மொழி கொடுத்தா ஓட்டு போடலாம் என்று பார்த்தேன்,யாரும் அதைப்பற்றி வாய்திறக்கவில்லை. கங்கையை சுத்தப்படுத்துவது இன்னும் 30 வருடத்துக்கு ஒரு முழுஅதிகார அமைப்பு இருந்தால் மட்டுமே சாத்தியம்.

said...

உங்களால் எல்லா Gகாட்களையும் சுற்றி வந்தாச்சு. ஆர்த்தியும் பார்த்தாச்சு. உள்ளூர்வாசிகளும், வெளியூர்வாசிகளும் வந்து மொய்க்குமிடத்தில் எங்கிருந்து சுத்தம் வரும்?

said...

கங்கை ஆரத்தி கண்டுகொண்டேன்.