Friday, April 11, 2014

அடடா..... இது அகாடா !!!!

 உடுக்கை ஒலி ஓங்கி ஒலிக்க , காண்டாமணி   சப்தம் ஓம் ஓம் என்று  நின்று நிதானமா  வருது. கூடவே சின்ன வெண்கல மணிகளின் கலகல. பூஜை நடக்குதுன்னு பாய்ஞ்சு உள்ளே நுழைஞ்சோம். ரெண்டு மூணு  நிலைப்படிகளைக்கடந்து   ஒரு முற்றம். காலணிகளை கழட்டி ஓரமாப் போட்டுட்டு  வலப்பக்கம் சப்தம் வந்த திசையில்  போனோம்.

 காவி உடையில் சில சாதுக்கள்  டமரும் கையுமா நிக்க,  கருவறையில் மற்றொரு சாது  கற்பூர ஆரத்தி காமிச்சுக்கிட்டு இருக்கார். இந்தப்பக்கம் ஜன்னல் வழியா வெளியே எட்டிப் பார்க்கும் குதிரை!  (மாடா இல்லை குதிரையான்னு ஒரு சந்தேகம்தான். ஆனால் நீண்ட கால்களும் முதுகில் இருக்கும் சேணமும்(!)குதிரைன்னு சொல்லுச்சு)மூலவர் ஸ்ரீ நாராயணன். நின்ற கோலம். அவருக்கும் ஒரு காவி!  பூமாலைகளும் மணிமாலைகளுமா அலங்காரம். (இங்கெல்லாம் பூ என்றால் அது  சாமந்திதான். துலுக்க/ துருக்க சாமந்தின்னு தமிழ்நாட்டில் குறிப்பிடப்படும் மெர்ரி கோல்ட் பூக்களே!  கல்யாணம் முதல்  கருமாதி வரை எதுக்கெடுத்தாலும்  இந்தப்பூக்கள்தான்.  பூக்கள் விஷயத்தில் மட்டும்  தென்னிந்தியாவை அடிச்சுக்கவே முடியாது!)  நெற்றியில் நெடுக்காவும் , கைகளில்  குறுக்காவும்  பட்டைகள்.  சைவ வைணவ ஒற்றுமையாக இருக்கணும்.


கருவறை வாசலில் நான்  கண்களை மூடிக் கூப்பிய கைகளுடன் நின்னு கும்பிட்டுக்கிட்டு இருக்கேன். ' ஹும்' என்று ஒரு உறுமல்! சட்னு கண்ணைத் திறந்தால்  உள்ளே ஆரத்தி எடுத்த சாது  கருவறை வாசல் உள்பக்கம்  நிக்கறார்.   சட்னு நகர்ந்தேன்.  வெளியே  போனவர் கருவறையைச் சுற்றி   ஆரத்தியை எடுத்துக்கிட்டுப்போறார்.  மற்றவர்கள் எல்லோரும் நின்ன இடத்துலே நின்னு  வாத்தியங்களை(!) முழக்கிக்கிட்டு இருக்காங்க. சின்ன இடம் என்பதால் பேரொலியா மண்டையில் இறங்குது எனக்கு.

அவரைப் பின் தொடர்ந்து  நானும் போறேன்.  கேமெரா கோபாலின் கையில்.  படம் எடுக்கலாமா வேண்டாமான்ற தயக்கத்தோடு நிக்கறார்.  கண்களால் ஆணை இட்டேன்:-) க்ளிக் க்ளிக்.

குதிரைக்குப் பக்கத்தில் இன்னொரு சந்நிதி. அதுக்கும்  ஆரத்தி காமிச்சுட்டு வெளியே முற்றத்தில் இறங்கினார் சாது. கற்பூரமா இருக்காது. சின்ன தீப்பந்தம் போலன்னா எரியுது!

சந்தில் இருந்து பார்த்தபோது  சின்னதா இருக்கும் கட்டிடம் உள்ளே போகப்போக பெருசாவே இருக்கு. முற்றத்தைச் சுத்திச் சின்னச் சின்ன  சந்நிதிகளா ஒரு பக்கம். குதிரைத் தலைக்கு (குதிரைதான். கன்ஃபர்ம்டு. கொம்பு இல்லையாக்கும்) இந்தப்பக்கம்  புலி போல  (வெள்ளைப்பூனையோ?)  ஒன்னும்  குட்டிச்சந்நிதி அருகில்.
சூலம் ஏந்திய  காளி,  லக்ஷ்மி நாராயணன், நாய்களுடன் நிற்கும் தத்தாத்ரேயர், நாகர்,    புள்ளையார், சிவலிங்கங்களா ஒரு பக்கம்,  இன்னொரு பக்கம்  நம்ம ஆஞ்சி!  மாலைகள் அலங்காரத்துக்கிடையில்  வடக்கர்களின் ஸ்டைலில்  செஞ்சாந்துக்குழம்பில் கண் மட்டும் தெரிஞ்சது.  Gகதையை வச்சுக் கண்டு பிடிச்சேன். இந்தப் பக்கங்களில் எல்லாம், கருவறையிலும் சந்நிதிக்குள்ளும் சாமிக்கு ஒரு படுக்கை போட்டு வைக்கிறாங்க. த்வாரகா பயணத்திலும் பார்த்துருக்கேன். சாமியும்தான் எத்தனை நாழி நின்னுக்கிட்டே இருக்கும்? கொஞ்சம் ஆஸ்வாசப்படுத்திக்கவும்  தூக்கம் வந்தால் தூங்கவும்  படுக்கை ஒன்னு வேணும்தானே?  சாமிக்கு ஏன் இதெல்லாம் என்று கேக்கப்டாது கேட்டோ!  மனுசருக்கு   கடவுள் மேல் இருக்கும் அதீத  அன்பால் , தம்மைப்போலவே, தம்மில் ஒருவனாக சாமியையும் நினைக்கிறோம் என்பதுதான் காரணம்.  அப்படித்தான் நான் புரிஞ்சுக்கிட்டேன்.

முற்றத்தின் ஒரு பக்கம்  யாக குண்டத்தில்  சின்னதா அக்னி. லேசா புகை வருது. சுற்றிலும் மூணு சாதுக்கள்.  வணக்கம் என்ற என் கைகூப்பலுக்கு வலக்கை உயர்த்தி ஆசிவழங்கினவர், ஒரு நுள்ளு யாககுண்ட  சாம்பலை எடுத்து  நீட்டினார்.  குனிஞ்சு அதை வாங்கப்போனவளின் நெற்றியில் இட்டும் விட்டார். சட்னு எனக்கு ' நதியிலாடும்  பூவனம்' பாட்டு  (பாரதிராஜாவின் படம்)  மனசில் வந்துச்சு.  அதென்னமோ.....   எப்பப்பார்த்தாலும் சினிமா என்ன வேண்டிக்கிடக்கு?  தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு ஆகிக்கிடக்கே:(
முழுக்க முழுக்கப் பளிங்குத்தரைகள்தான் என்றாலும் பல இடங்களில்  டைல்ஸ் தோண்டி வெளியே வச்சுருக்காங்க.  புதுசா  லிங்கப்ரதிஷ்டைகள் ஆகுது போல.  சுத்திப் பார்த்துக்கிட்டே வாசலுக்கு நகர்ந்தப்ப  சுவரில் இருந்த எழுத்துகளை வாசிச்சதும்............

 அடடா....  இது  அகாடா சாதுக்களின் இடமா?  நாகா சாதுக்கள்  இருக்கும்  பழமையான  அமைப்புக்குள்ளிலா வந்துருக்கோம்?!!  அதான்  இதுவரை பேச்சரவம் எதுவுமே காதில் படலையா?  நான் கூட  இம்மாந்நேரம் வாயை மூடிக்கிட்டா இருந்திருக்கேன்?  அதிசயம்தான் போங்க:-)

சும்மா இரு    ----- நோ ஒர்ரீஸ் இருந்துடலாம்.

சொல் அற  -----------   ஐயோ....  நெசமா முடியுமா?  அதுவும் இந்தியருக்கு?

 (எனக்குத் தெரிஞ்சு  பேசாமல் இருந்தவர்கள் ரெண்டே பேர்.  1. நரசிம்மராவ். 2 மன்மோகன் சிங். என்ன ஒற்றுமை பாருங்க ரெண்டு பேரும் பிரதமர்களே!!!!! )

 நாகாஸ், அகாடா தேடலில் கிடைச்ச  சில விஷயங்களை கீழே சொல்லி இருக்கேன்.

நாகா சாதுக்கள் அமைப்பு , ராணுவம் போல பயங்கர  கட்டுக்கோப்பா இருக்குமாம்.  கடுமையான விரதங்கள் (நம்மைப்போல   ஒருவேளை சாப்பாடு,  அடுத்தவேளை பாலும் பழங்களும், இல்லைன்னா பலகாரம் என்ற பெயரில்  இட்லி, தோசைன்னு வெட்டுவது எல்லாம் இல்லையாக்கும்!)  சில சமயங்களில்  நாப்பது மணி நேரம் கூட    சாப்பாடில்லாமல் இருப்பாங்களாம். பொதுவா இவுங்க தங்களுக்குள் கூட  தேவை இல்லாமல் பேசிக்கறதே இல்லையாம்.  மௌனம் மௌனம் மௌனம்.

நிர்வாண சாமியார்கள் என்று சொல்றோமே....   அது  அவுங்க தனியா இமயமலைகளில்  தவம் செய்யும் போது மட்டுமே. நகரங்களில், மக்கள் நடமாட்டம் இருக்குமிடங்களில்  காவி உடையோடுதான் இருக்காங்க. ஸீரோ டிகிரிக்கும் கீழே இருக்கும் இமயமலையில்   ஆடையில்லாமல்  தவம் என்பது  நினைச்சாலே எனக்கு மனசும் உறைஞ்சு போயிருது! இந்த அழகில்   பட்டினி வேற!  வயிறு காலியா இருந்தால்தான் மைல் கணக்கில் அந்தக் குளிரில் மலைமீது  நடக்க முடியுமாம்!

கும்பமேளாவுக்கு வரும்போது மட்டும் விதிவிலக்கா.....  ஆடை இல்லாமல் வர்றாங்க.  கங்கையில் முங்கி எழுந்து  சுடலைச் சாம்பலில்  விழுந்து புரண்டு  வருவாங்க.  'தான்' என்ற உணர்வு முற்றிலும் ஒழிஞ்சால்  நிர்வாணம் என்பது (கூட)   உறைக்காது போல!

சுமார் ஏழு லக்ஷம்பேர் இப்படி நாகா சாதுக்களா இருக்காங்க.  இந்த அமைப்பில் துறவிகளா  சேர்வது அத்தனை எளிதல்லவாம்.  எல்லாவற்றையும் துறந்தால், துறக்கும் மனநிலை இருந்தால் தான் துறவியாக ஆகமுடியும். கடுமையான நிபந்தனைகளைத் தாக்குப்பிடிக்க முடியலைன்னா.... துண்டைக்காணோம் துணியைக் காணோமுன்னு ஓடத்தான் வேணுமோ?

வெளியே  வந்ததும்  சந்து  முனையில் வெளிச்சம் இருக்கேன்னு எட்டிப் பார்த்தால் அங்கேயும் ஒரு படித்துறை. கர்நாடகா  ஸ்டேட் காட்!    மைசூர் சமஸ்தானம்  1910 லே கட்டுனது இது.  சதிமாதாவுக்கும்  காலபைரவருக்கும் குட்டிக்கோவில்கள்  இங்கே  இருக்கு.


இன்றையநாள்   எப்படி அமைஞ்சதுன்னு நினைச்சப்ப.....  ஹைய்யோ!  வாட் அ டே!!

கொஞ்ச நேரம்  தியானம் செய்து மனசை  சாந்தப்படுத்தினேன்:-)

தொடரும்............:-)

13 comments:

said...

குதிரை சிலை வித்தியாசமாக இருக்குறதது ஐயா.
ஒரு அறையில் இருந்து அடுத்த அறையினை எட்டிப் பார்ப்பது போல்..

said...

சில புரியவில்லை: எப்படி இவ்வளவு இடங்களுக்கு போக முடிகிறது? எப்பவும் இந்தியாவில் தானா?

பின்குறிப்பு:
கட்டுரை ஆர்ம்ப்ததில் எந்த இடம் எந்த கோவில், எப்படி செல்வது என்று ஒரு இரண்டு மூன்று வரியில் எழுதவும்-முதல் பத்தியில் எழுதினால் படிக்க நன்றாக இருக்கும்!

said...

வாங்க கரந்தை ஜெயக்குமார்.

குதிரை....எனக்கும் அப்படித்தான் தோன்றியது:-)


ஐயாவுக்குப் பதிலா 'அம்மா' இருக்கலாம்:-)

said...

வாங்க நம்பள்கி.

தொடர் கட்டுரையாக இருப்பதால் ஒவ்வொரு இடுகைக்கும் ஆரம்பத்தில் எந்த இடம், எந்த ஊர் என்று முன்னுரை சொல்வதில் சுணக்கம் வருதே:(

காசிப் பயணம் அல்லவா இப்போது எழுதிக்கொண்டிருப்பது.

லேபிளில் காசி என்று போடணும். அதைச் செய்தால் புரிந்து கொள்ள முடியும்தானே?

எப்பவும் இந்தியாவில் இல்லையாக்கும்:-) இப்ப இந்தியா வந்து போனதுக்கு எழுதுவதே.

நம் தளத்தில் பல வெளிநாட்டுப் பயணங்களும் கூட இருக்கின்றனவே!

said...

கருவறைக்குள் சுவாமிக்கு படுக்கை... ஆஹா...

நதியிலாடும் பூவனம்.... :)))

படங்களும் விவரங்களும் சுவாரஸ்யம்.

said...

குதிரை சிலை வியப்பு தான்...

அதானே... பாட்டு எல்லாம் ஞாபகம் வரலேன்னா எப்படி...?

said...

//கண்களால் ஆணை இட்டேன்:-//

அதனால் தானே அவருக்கு கண்ணாளன் என்று பெயர் வந்தது.

பிற்காலத்திலும் பக்குவமா சொல்லி இருக்காங்க..

" பார்வை ஒன்றே போதுமே.."

என்ன ? சரிதானா ?

மீனாட்சி பாட்டி.

said...

பாலா படம் எடுத்த இடமா இருக்குமோ. சட் சடுனு கோவிலுக்குள்ள போனாலும் நாராயணன் வந்து காப்பாத்திடறார்<} நல்லா இருக்கு .ஏனோ கொஞ்சம் பயமாகவும் இருக்கு. அவங்க பூசின சாம்பலோட மகிமை நதியிலாடும் பூவன ஞாபகம் வந்துட்டது. நல்லா இருந்தது துளசி.

said...

அகாடாவில் சாமியார்கள் பொதுவாக பேசுவதில்லை. கைக்கூப்பி வணக்கம் சொன்னால், ஒற்றைக் கை உயர்த்தி ஆசீர்வாதம் அவ்வளவு தான்.

ஹரித்வாரில் உள்ள ஒரு அகாடாவில் சில நிமிடங்கள் இருந்தது வித்தியாசமான அனுபவம்...... ஏதோ கேள்வி கேட்க, கையிலிருந்த வீபூதியை என் தலையில் தெளித்து ஒரு உறுமல்! :) சில நிமிடங்கள் அங்கிருந்து விட்டு வெளியேறினேன்.

said...

மானஸ லிங்கம் எங்கயாவது பார்த்தீங்களா?

said...

சாதுக்கள் ஒன்னும் பேசலைன்னாலும் பயமாதான் இருக்கு. நேரில் பார்த்த உங்களுக்கு எப்படி இருந்தது துளசி .

நேரில் கண்டது போல் படங்களும் விளக்கமும் அருமை . நன்றி

said...

எனக்குக் கூட நேரம் காலம் தெரியாமல் ஏதாவது பாடல் நினைவுக்கு வரும்!

அகாடா சாமியார்கள் பற்றி இப்போதுதான் தகவல்கள் அறிகிறேன்.

said...

அகாடாசாமியார்கள் கண்டுகொண்டேன்.