Friday, April 18, 2014

விஷ்ணு துர்கையும் தசஸ்வமேத் Gகாட்டும்.

அஞ்சு மணிக்கு அங்கிருந்தால் போதுமே.  நாலு மணிக்குக் கிளம்பலாம் என்றவரை, கொஞ்சம் கூடுதலாகத் தொணப்பி எடுத்து மூணே காலுக்குக் கொண்டுவந்தேன்.  இப்படி சோம்பி(!) கிடந்தால் ஒன்னையும் பார்க்க முடியாது தானே?

துர்கை கோவிலுக்குப் போறோம். பதினெட்டாம் நூற்றாண்டு கோவில். வங்காள தேச மஹாராணி ஒருத்தர் கட்டுனாங்களாம். வட இந்திய ஸ்டைலில் ஒல்லியா வெவ்வேற அளவுகளில் இருக்கும் கூம்புக் கும்மாச்சிக் கோபுரங்களை  எல்லாம் சேர்த்துக் கைகளில் அடக்கியதைப்போல் இருக்கு  கோவில் கோபுரம்!   நடுவில் ரொம்ப உசரக்கூம்பு . அதைசுத்தி, ஒவ்வொரு சுற்றிலும்  படிப்படியா  அளவு குறைஞ்சுக்கிட்டே வருது. நகாரா  வகைன்னு சொல்றாங்க.   இதேமாதிரி கோபுர வரிசைகளை நாம் ராஜஸ்தான் பயணத்திலும், த்வாரகா பயணத்திலும் பார்த்திருக்கோம் இல்லையோ?

இவளே விஷ்ணு துர்கையாக  சங்கு சக்கரம் கையில் ஏந்தி இருக்காள்.  இங்கேயும் படம் எடுக்கான், பாடில்லை கேட்டோ:(   கோபுர அழகை மறைச்சு வளாகம் கட்டி விட்டுருக்காங்களேன்னு நொந்துக்கத்தான் வேணும்:(


வளாகம் அத்தனை பெருசில்லைதான். ஆனால்..... வாசலில் ஆரம்பிச்சு  இடைவெளிவிடாமல் கடைகளோ கடைகள்.பூஜைக்கான பொருட்கள் மட்டுமில்லாமல் வளையல்கள், பொட்டு, பாசி மணிகள், நகைநட்டுக்கள் இப்படி  ஃபேன்ஸி ஸ்டோர்களா  வரிசைகட்டி நிக்குது.

சின்னப்பிள்ளைகள்தான் மெயின் கஸ்டமர்ஸ்!!    விளையாட்டுச் சாமானாக் கொட்டி வச்சுருந்தால்.... எந்தப்பிள்ளை சும்மா இருக்கும்?  அப்பா அம்மாவைப் பிடுங்கி எடுத்து ஜெயிச்சுடறாங்க:-)))))


இந்தக்கோவிலை குரங்குக்கோவில் என்றும் சொல்றாங்கன்னா.... பார்த்துக்குங்க.... எவ்ளோ குரங்குகள் இருக்குமுன்னு! பகல் வெயிலுக்கு பயந்தோ என்னவோ எல்லாம் மரத்தின் மேலே, இலைகளுக்குப் பின்
 மறைவில்!இந்த  துர்கை கோவிலை  ஷக்தி பீட் கோவில் என்றும் சொல்றாங்க.  ஷக்தி குடிகொண்டுள்ள கோவில் ஷக்தி பீடமா இருக்கட்டுமே!  கோவிலையொட்டி ஒரு குளம். துர்காகுண்ட். காலை ஏழு முதல்  இரவு எட்டுவரை கோவில் திறந்துருக்கு. பக்தர்களுக்கு நல்ல வசதி.  மதியம் கோவில் மூடிக்கிடக்கேன்னு மாலைவரை தேவுடு காக்க வேணாம்,பாருங்க:-)

மோட்சபுரிகளில்   ஏழில் காசியும் ஒன்னு. மற்றவை த்வாரகா, மதுரா, காஞ்சி,  ஹரித்வார், அயோத்தி, உஜ்ஜயினி ( இந்த ஏழில் நமக்கு லபிச்சது ஆறு.  அப்ப மோட்சம் கன்ஃபர்ம்டு தானே?)

மோட்சபுரி என்ற புகழுக்கு இன்னொரு மகுடம் சூட்டினாற்போல்   காசி.... ஒரு சக்தி பீட தலமும்தான்!  கதை எல்லோரும் அறிந்ததே.  புதுசா வந்தவங்க இங்கெ போய் புருசன் மனைவி சண்டையைப் பார்த்துக்குங்க:-)    இது அம்பத்தியொரு  சக்தி பீடங்களில்  சக்தியின்  காது விழுந்த இடம்.

காதுலே போட்டுருந்த  வைரக் கம்மல்   ஒரு கிணத்துக்குள்ளே விழுந்துருச்சுன்னும்  'ஐயோ கம்மல் போச்சே'ன்னு கிணத்துக்குள் எட்டிப் பார்த்த  சிவன்,  கிணத்துக்குள்ளே குதிச்சுட்டார்ன்னும், அப்போ கிளம்பி வந்ததே காசி விஸ்வநாத் ஜோதிர்லிங்கம் என்று கூட ஒரு புராணக்கதை இருக்கு.

அந்நியர் படையெடுப்பில்,  கோவிலை அழிக்கவந்த  ஆட்களிடமிருந்து  சிவனைக் காப்பாற்றணுமுன்னு  அப்போ இருந்த அர்ச்சகர் ஒருவர்,  சிவலிங்கத்தோடு  கோவில் வளாகத்துக்குள் இருந்த  கிணத்துலே குதிச்சுட்டார்ன்னும்,  (இதுதான் வைரக்காதணி விழுந்த கிணறும் கூட!)  இன்னும் ஒரிஜினல் சிவலிங்கம்  அந்தக் கிணத்துக்குள்ளேதான்  இருக்குன்னும் ஒரு சேதி  இருக்கு.  இதுதான் கோவில்வளாகத்துக்குள்ளே இருக்கும் ஞானக்கிணறுன்னு சொல்றாங்க. போகட்டும்........  கிணத்துலே இருந்து வந்தவர் கிணத்துக்கே போயிட்டார், இல்லே!!!!

நம்ம விசாலாக்ஷி கோவில் சக்தி பீடக்கோவில் என்றும்,  (காது அங்கெதான் விழுந்துச்சோ என்னவோ?  )ஆனால்.. அங்கெ  இல்லை குண்டலமணிகள் அலங்கரிச்ச  கர்ணம் (காது) விழுந்த இடம்தான் மணிகர்ணிகா காட் என்றும்  சொல்றாங்க. பின்னதுதான் பொருத்தமா இருக்கு எனக்கு.

சரியா அஞ்சு மணிக்கு தஸ் அஸ்வமேத காட் படித்துறையை சமீபிக்கும் சாலையின் கடைசிக்கு வந்துருந்தோம்.  தயாரா நமக்காக காத்திருந்த இளைஞரிடம் கைலாஷ் நம்மை ஒப்படைச்சார்:-)

புதிய இளைஞர் கௌரவ் நம்மைக் கூட்டிப்போய் வினோத் கையில் ஒப்படைச்சார்.  (பாஸ்....  அதுக்கொரு ஆள் இருக்கான் பாஸ். அவங்கிட்டே சொல்லிட்டால்  அவனோட ஆள்  இன்னொரு ஆள் கூடச் சேர்ந்து, நம்ம வேலையை  முடிச்சுக்கொடுத்துருவான் பாஸ்!)

படித்துறைக்குப்போகும் வழியிலே  ஒரு கட்டணக் கழிப்பறை கட்டிவிட்டுருக்கு நகராட்சி.  பழைய கட்டிடமா இருந்தாலும் நல்ல சுத்தம்தான். கங்கைக்கரையில் தண்ணீர் பஞ்சம் ஏது?   இன்னும் கொஞ்சம் நடந்தப்ப  ஒரு அம்மா, தன் செல்லத்தோடு உக்கார்ந்திருந்தாங்க.  குழந்தை பெயர் ஜூலி! பொட்டெல்லாம் வச்சுக்கிட்டு அழகோ அழகு!

ப்ரம்மா  ஒரு சமயம் அஸ்வமேத யாகம் செஞ்சாராம். ஒன்னுல்லே ரெண்டில்லே...பத்து  அஸ்வங்களை (குதிரைகளை ) வச்சு(??!!)   யாகம்  செஞ்ச இடம்தான் இது என்பதால்  தஸ்(பத்து) அஸ்வமேத Gகாட். தஸாஸ்வமேத் காட்(Dasaswamedh ghat).   கொஞ்சம் பெருசாவே இருக்கு!

கங்கைக்கரையின் படித்துறைகளில் ரொம்பப் புகழ்வாய்ந்ததுன்னு சொல்லலாம்.  வயசில் மூத்தது மட்டுமில்லாமல்,  காசி விஸ்வநாதரின் கோவிலுக்குச் சமீபமா இருப்பதும் ஒரு காரணமோ என்னவோ?

நாளின் எந்த வினாடியில் போனாலும் கலகலப்புக்குக் குறைவில்லாத இடம் இது. நம்ம பக்கங்களில், சூரியன் அஸ்தமிச்ச பிறகு ஆத்துலே குளிக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனால்.... காசியில் நாளின் 24 மணி நேரத்தில் எப்ப வேணுமுன்னாலும் கங்கையில் குளிக்கலாம்.

உசரம் அதிகமா இருக்கும் படிகளில்  நின்னு நிதானமா காலை இறக்கி வச்சு, பெருமாளே...  ராமா, கிருஷ்ணான்னு  அனத்திக்கிட்டே  போறேன். 'எதுக்கு பயம்?  இதெல்லாம் ஜூஜுபி'ன்னு  ஒரு பத்து  மாடுகள் ஹாய்யா உக்கார்ந்து கங்கையை அனுபவிக்குதுகள்!  எப்படி இறங்கி இருக்கும்? என்னை விட வெயிட்டான பார்ட்டியாச்சே!!!சிலபடிகளில்  உடல்முழுசும் சாம்பல் பூசிய சாமியார்கள் குட்டியா ஒரு அக்னி குண்டம் வச்சுப்  பக்தர்களுக்கு  பூஜை கைங்கர்யம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  ஒவ்வொருத்தரைச் சுத்தியும் ஒரு பத்துபேர்!

ஆளில்லா காலிப் படகுகள்  கூட்டம்போட்டு பேசுதோ!!!இந்திய ஒருமைப்பாடுன்னால்...........  ஆஹா இதுவல்லவோ!  எல்லாமாநில மக்களும் போதாதுன்னு  பல வெள்ளையர்களும்...........!!!!

வினோதும்  கௌரவுமாச்  சேர்ந்து  படகை மண்ணுக்கு வெகு அருகில் கொண்டு வந்து நிப்பாட்டினாங்க. ரொம்ப  மண்ணை அடுத்து வந்தாலும் மீண்டும் தண்ணிக்குப் படகை உந்தித் தள்ளிவிடத்தான் வேணும்.  கோபால் சட்னு ஏறிட்டார்.  நான்?  படகு வேற உசரம் கூடுதலா இருக்கு.  ரெண்டரை அடி இருக்கும். நமக்குத்தான் முழங்கால் சொன்னால் சொன்னபடி கேக்காத உருப்படியாச்சே:(   சட்னு உயிர்த்தோழி நினைவு வந்து போச்சு!

மரப்பலகையால் சரிச்ச ரேம்ப் ஒன்னு போட்டுருக்கலாம். ஹூம்..... படகின்  கைப்பிடிப் பலகையில் உக்கார்ந்துகிட்டு   மெள்ள உடலைத் திருப்பி  ஒரு காலை படகுக்குள் இழுத்துவிட்டு அப்படியே  அடுத்தகாலையும் உள்ளுக்குள் கொண்டு வந்துடலாம்.  சின்ன டெக்னிக்! இதுக்கே..........  உடம்பு  ஆட்டம் கண்டுடுச்சு,  என்னமோ  மாரத்தான் ஓடிக் களைச்சாப்போலெ!

மெள்ள நடந்து எதிர்ப்புறம் போய் உக்கார்ந்தேன்.  சாதிச்சுட்டோம்லெ:-)

வினோத், படகை மெள்ளத்  தண்ணிப்பக்கம் கொண்டு போனார். கரையை விட்டு விலகியாச்சு.


குளிர்காத்து அடிச்சதும்   கோபால் பதறி ஓடிவந்து  என்னைப் 'பாதுகாத்துட்டு' ஒரு க்ளிக்.

    அதென்ன வளைவுகள் வச்சு ஒரு அலங்காரம்?

இங்கேதான்  தினமும் மாலை கங்கை ஆரத்தி நடக்குதுன்னார்  நம்முடைய  குகன்!  வினோத்.


ரொம்பக் கரைக்குப் பக்கத்தில் இல்லாமல்  கொஞ்சம் தள்ளி ஓட்டச் சொன்னோம். லாங் ஷாட்தான்  நல்லா இருக்கும், இல்லே?

அமைதியான  நதியினிலே ஓடம்.........

தொடரும்.........

16 comments:

said...

//குளிர்காத்து அடிச்சதும் கோபால் பதறி ஓடிவந்து என்னைப் 'பாதுகாத்துட்டு' ஒரு க்ளிக்.//

:)))

என்ன இருந்தாலும் நம்ம ஊர்க் கோவில்களின் அழகு வருமா!

said...

அருமையான படங்களுடன் உங்களின் கருத்துகளும் ரசித்தேன் அம்மா...

said...

படங்களும் விளக்கமும் அருமை!!! .
//மெள்ள நடந்து எதிர்ப்புறம் போய் உக்கார்ந்தேன். சாதிச்சுட்டோம்லெ:-)//
:)))

என் அக்காவும் இப்படித்தான் படகில் ஏற தயங்குவாள் .
ஏறி உக்கார்ந்ததும் நாங்கள் கை தட்டி விசிலடிக்காத குறைதான் .

said...

படங்கள் ஒவ்வொன்றும் பேசுகிறது ஐயா

said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

said...

ஓஹோ அங்க போயும் உயிர்த்தோழி நினைவு வந்துச்சா. அந்த லிஸ்ட்ல இரண்டு மாடிக்கட்டிடத்தோழியும் வருவாங்க இல்ல துளசி. ஆமாம் நீங்க பதிவு போட போட்டோ வேணும் இல்லையா. அதான் குளிருக்குப் போர்வை பதிவுக்குப் படம்}}}}} அடுத்து ஆரத்திப் படங்கள். விஷ்ணு த்ர்க்கையின் படம் கிடைக்குமோன்னு பார்த்தேன் மா.

said...

காசி விஸ்வநாதர் கோவில் உள்ளே இருக்கும் ஞானவாபி - கிணறுக்கு அருகில் ஒருவர் உட்கார்ந்து காசு வசூலித்துக் கொண்டிருப்பார்! :)

படகுத்துறையில் தான் எத்தனை எத்தனை காட்சிகள்....

said...

வாங்க ஸ்ரீராம்.

நம்மூர் கோவில்கள் அழகு.

வடக்கத்தியார் கோவில்களில் பக்தி உணர்வு கொஞ்சம் அதிகமாக இருப்பதாகத் தோணுதே எனக்கு!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசனைக்கு நன்றிகள்.

said...

வாங்க சசி கலா.

ஆஹா.... அப்ப நான் தனி மனுஷி இல்லை:-)))

said...

வாங்க கரந்தை ஜெயகுமார்.

ஐயாவை விடுவதாக இல்லையோ!!!!

said...

நன்றி நிகண்டு .காம்

said...

வாங்க வல்லி.

விஷ்ணு துர்கை, படம் எடுக்கப் போட்டாளே தடா:(

அதென்னவோ தெரியலைப்பா என்ன கெமிஸ்ட்ரின்னு......

எப்பப் பார்த்தாலும் ஏன் இப்படி நினைவில் வந்து நிக்கறாங்க:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ஒரு நாளைக்கு ஒன்னும் செய்யாமல் சும்மா அங்கே வேடிக்கை பார்க்கணும். பொழுது நிமிசமாப் போயிருதுல்லே!!!

said...

இந்த Gகாட்டில் தானே நம் புதிய பிரதமர்- மோதியும் நேற்று முன்தினம் ஆரத்தி செய்தார், கங்கா மாவிற்கு?
நீங்கள் படகில் ஏறத் தயங்கினீர்கள், நான் 'நாம் படகில் உட்கார்ந்தால் படகு நம்மைத் தாங்குமா?' என்று ஏறவே தயங்குவேன்!

உங்கள் கட்டுரைகளைப் படிக்க படிக்க நாங்கள் எப்போது போகப்போகிறோம் என்று இருக்கிறது.

said...

"கோபுர அழகை மறைச்சு வளாகம் கட்டி விட்டுருக்காங்களே" பார்க்க கவலையாகத்தான் இருக்கிறது.