Wednesday, April 16, 2014

பழசைப் பார்த்த கண்ணோடு, புதுசையும் ஒருமுறை........

பழைய கோவிலைப் பார்த்த கையோடு புதிய கோவிலுக்குப்போனோம். நியூ காசி விஸ்வநாத் டெம்பிள்.

பிர்லா குடும்பத்தினர் கட்டி இருக்கும் கோவில். இந்த குடும்பத்தினருக்கு  கோவில்கட்டுதல்தான்,   பொழுது போக்கோன்னு தோணும்.  முக்கால்வாசி பெருமாள் கோவில்கள்தான். அப்ப? மீதி கால்வாசி? சிவனுக்கு:-) உண்மையைச் சொன்னால் இதுவரை கட்டிய பதினாறுகோவில்களில் நாலு சிவனுக்கு!

உலகமக்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்துக்குள்  அனுமதி இலவசம் என்றால் நம்புவீங்கதானே?

பனாரஸ் ஹிந்து யுனிவர்சிடி காம்பஸுக்குள்(காசி  ஹிந்து விஸ்வவித்யாலயா ) இருக்கு  இந்தக் கோவில்.  வாசலில் சிலையா நிக்கறார் "பண்டிட் மதன் மோஹன் மாளவியா!'   பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர்.

 வளாகத்துக்குள்ளே  நுழையறோம். அம்மாடி..... எம்மாம் பெருசு!  1300 ஏக்கர் நிலம்! காசி ராஜா நரேஷ் ,  கல்விக்கான  கொடையா, தானம் செஞ்சுருக்கார்.  1916 ஆண்டு ஆரம்பிச்சுருக்காங்க.  இப்போ  இருபதாயிரம் மாணவர்கள்  இங்கே.  இவர்களுக்கான தங்கும் விடுதிகள்,  வகுப்பறைக் கட்டிடங்கள் , புல்வெளிகள், வயசான மரங்கள் ,  இளம் மாணவர்கள்  என்று பரந்து விரிகிறது.  ஊருக்குள்ளே இன்னொரு ஊர் !!!!




ரொம்பதூரம் உள்ளே போனதும் இன்னொரு வளாகம்.  பெரிய நுழைவு வாயிலுக்கு ரெண்டு பக்கமும் கடைகள். இந்தப்பக்கம் பண்டிதருக்கு இன்னொரு சிலை.


வளாகத்துக்கு நுழைவாயிலுக்கு எதிரே கம்பீரமா நிற்கும் கோபுரத்துடன் கோவில்.  சுத்திவர பெரிய பார்க் செட்டிங்ஸ். கோவில் கேட் பூட்டி இருக்கு. ஓடோடி வந்தும் கூட இப்படியான்னு  மனம் நொந்தது.  பனிரெண்டரை மணி ஆகுது:(  12க்கு உச்சிகால பூஜை முடிஞ்சு கோவில் மூடி இருப்பாங்க...  என்ற எண்ணத்தோடுகேட் பக்கத்தில் போய்ப் பார்த்தால் காலை 4 முதல் 12 வரை திறந்திருக்கும் கோவிலை  ஜஸ்ட்  ஒரு மணி நேரத்துக்குப்பின் பகல் ஒன்று முதல் இரவு ஒன்பதுவரை திறந்து வைப்பாங்க என்ற தகவல் கண்ணில்பட்டது.  லஞ்ச் டைம் ஒரு மணி நேரம். ரியலி ஃபேர் இனஃப்.


அரைமணி காத்திருந்தால் ஆச்சு. அதுக்குள்ளே வெளியே கோவிலை ஒட்டி இருக்கும் பார்க்கைச் சுத்திப் பார்த்துடலாமே!
 கோவிலுக்கு  எதிரில் ரெண்டு பக்கங்களிலும் இருக்கும் செயற்கை நீர்க்குளங்களில் காண்டாமிருகம் !!! பட் ஒய் காண்டாமிருகம்?  அழகான யானை வைக்கப்டாதோ? 

புல்வெளி ஒன்னில் பஞ்சவடின்னு   பெயர்ப்பலகை வச்சு  அதுலே அஞ்சு வகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்கறாங்க.


இன்னொரு பக்கம்  மகரிஷி ஒருவரின் சிலை. பக்கத்தில் ஒரு ராமாயணத் தூண். அதுலே கீழ் வரிசை மாடங்களில்  ராமர் பட்டாபிஷேகம்!  குட்டியாய் ஒரு  சந்நிதி!



மாணவர்கள் கூட்டத்துக்கு இணையா  மற்ற மக்கள்ஸ் கூட்டமும் வளாகத்துக்குள்ளே இருக்கும் ஷாப்பிங் இடத்துலே குவிஞ்சுருக்காங்க.லஞ்ச் டைம் பாருங்க.

கைவினைப்பொருட்கள் விற்கும் கடையில் அழகழகான  மரச்சிற்பங்கள். புள்ளையார்கள் கண்களை இழுத்தாலும்...........

பூஜைப்பொருட்கள் விற்கும் கடையில்  மண் கிண்ணத்தில் பால்! அபிஷேகம் செய்ய வாங்கிக்கலாம்.

கோவில் கேட் திறந்துட்டாங்கன்னு  உள்ளே போனோம்.   பளிச்ன்னு படு சுத்தம். முழுக்க முழுக்க பளிங்குக் கற்களால் கட்டி இருக்காங்க. பண்டிட் மதன் மோஹன் மாளவியா அவர்களின் விருப்பப்படி பல்கலை வளாகத்துக்குள்ளேயே கட்டுனாங்களாம். பாவம், அவருக்குத்தான் கோவிலைப்பார்க்கக் கொடுப்பினை இல்லாமப் போச்சு:(  1946 வருசமே சாமிகிட்டேபோயிட்டார். அப்ப சுதந்திர இந்தியாவையும் பார்க்கலையே:(  கோவிலைக் கட்டி முடிச்சு பொதுமக்களுக்காகத் திறந்து வச்ச வருசம் 1965. அருமையான பராமரிப்பில் உள்ளே சிவன் இருக்கார்.


காலையில் பார்த்த காசி விஸ்வநாதரின்  அதே சாயல்! ரெட்டைப்பிறவின்னு கூடசொல்லிக்கலாம்!  ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியலை. ஒன்னே ஒன்னுதான் கண்ணில் பட்டது.  இங்கே ஆவுடையார் வெள்ளி!   சாமியும் கொஞ்சம் உசந்த பீடத்தில் இருக்கார்!  கம்பிதடுப்பு வேலிபோல்  சிவனைச் சுற்றி இருந்தாலும்  அது வெறும் இடுப்புயரமே என்பதால் பக்தர்கள்  சுத்தி நின்னு ஸேவிக்க  முடியுது. கைக்கு எட்டாமல்  ஜஸ்ட் கண்ணுக்கு எட்டும் தூரம். நாம் முழங்கால் மடியக்  குனிஞ்சும்,   தொட்டும் கும்பிட முடியாது. . கற்பூர ஆரத்தி எடுத்தார் ஒரு அர்ச்சகர்.   அனைவரும்  தொட்டுக் கண்களில்  ஒற்றிக்கொண்டோம்.











 பெரிய ஹாலின் நடுவில் சந்நிதி. அமைதியான இடம்!  கோவில் முன் மண்டபம் கூட அட்டகாசம்!   மூணு மாடிக் கட்டிடம் அழகோ அழகு!  இனம், மதம், மொழின்னு  எந்த வேறுபாடும் இல்லாமல்  யார்வேணுமுன்னாலும் கோவிலுக்குள்ளில் போய் வணங்கலாம்.  சொல்லமறந்துட்டேனே......  செக்யூரிட்டி செக்கப் கூட இல்லையாக்கும், கேட்டோ!!!!!

அடுத்த வருசம் கோவிலுக்குப் பொன்விழா!  அம்பதாகப் போகுதுல்லே!

படம் எடுக்க அனுமதி இல்லை என்றாலும்  வலையில்  உட்புறப்படங்களை ஒருத்தர் போட்டுருக்கார். அவருக்கு நம் நன்றிகள். சுட்டியில் பார்க்கலாம்.


தோட்டத்தில் சகல இடங்களிலும் பைரவர்கள் நிம்மதியான  பகல் உறக்கத்தில்:-)

வளாகம் முழுசும் ஏராளமான ஆலமரங்கள். பழங்கள் எக்கச்சக்கம்.  பழத்துக்குள் குட்டிப்பூச்சிகள்!


பிர்லா மந்திர்களுக்கே உரித்தான கூம்பு கும்மாச்சிக் கோபுரங்கள்.  குதுப்மினாரை விட உசரமாம் இங்கே காசியில்!



கிளம்பி  நம்ம அறைக்கு வரும் வழியிலொரு இடத்தில்  ஸ்ரீ குரு ரவிதாஸ்  வாசல் கண்ணில்பட்டது.


பகல் நேரக் காசியில்  கூட்டமான கூட்டம்.  கடைகளை வண்டிக்குள் இருந்து  வேடிக்கை பார்த்தபடியே ஹொட்டேலுக்கு வந்து சேர்ந்தோம்.

 பகல்சாப்பாட்டை அறைக்கு  வரவழைச்சோம். கொஞ்சநேர ஓய்வுக்குப்பின் மறுபடி நகருக்குள் போகலாம்.

தொடரும்...............:-)





16 comments:

said...

தங்களுடன் சேர்ந்து பயணித்த ஓர் உணர்வு. நன்றி ஐயா
படங்கள் ஒவ்வொன்றும் பேசுகின்றன அருமை

said...

உலகமக்கள் அனைவருக்கும் பல்கலைக்கழகத்துக்குள் அனுமதி இலவசம்

அதுமட்டுமல்ல இங்கே பணம் கொடுத்தால் காசுக்கேற்ற மாதிரி படிக்காமலே பட்டங்கள் பெற்றுக்கொள்ளலாமாம்..

பி. ஹெச்.டி பட்டமெல்லாம் ரொம்ப ரொமப் சீப்..!

said...

1300 ஏக்கர் நிலமா....?

அருமையான படங்கள் அம்மா... நாங்களும் கூடவே...

said...

பிரமாதம் துளசி. கோபால் அங்க படிக்கிற மாதிரி நீங்களும் படிச்சிருக்கலாம். ஐம்பதா. எங்கயோ கேட்ட மாதிரி இருக்கே.>}} படித்தால் பட்டம். காசு கொடுத்தால் பட்டமா. அப்போ பதிவைப் படிச்சவங்களுக்கும் எழுதினவங்களுக்கும் பிஹெச்டி கொடுத்துருவாங்க போலிருக்கு. அருமை. காசில்லாமல் காசியை வலம் வர வைக்கிறீர்கள் என்றென்றும் நன்றி.

said...

ஒவ்வொரு படமும் நேரில் பார்ப்பது போல இருக்கு .
விளக்கங்களும் சேர்ந்து அருமை . நன்றி துளசி.

said...

நாங்கள் சென்றபோதும் பூட்டி இருந்தது. அங்கிருந்து அலஹாபாத் செல்ல வேண்டியிருந்ததால் அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம என விட்டுவிட்டோம்....

தெளிவான படங்கள். எப்போதும் போல ஸ்வாரசியம்.

தொடர்ந்து பயணிப்போம்.

said...

வாங்க கரந்தை ஜெயக்குமார்.

நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

அடடா.... முதலிலேயே இது தெரியாமப் போச்சே:(

பேசாம ஒரு டாக்குட்டர் பட்டம் வாங்கியாந்துருப்பேனே. வீட்டுலே இருக்கும் ஸ்டெத் (அம்மா நினைவில் வாங்கி வச்சது) சும்மால்லே கிடக்கு:-)))

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நாடே ராஜாவோடது. அதுலே 1300 ஏக்கர், லட்சத்துலே ஒரு பங்கா இருக்குமோ என்னவோ!!

ஆனாலும் இது கல்விக்கொடை என்பதே சிறப்பு.

said...

வாங்க வல்லி.

டாக்டர் பதிவர் உலகம் வாழ்க, வாழ்கவே:-))))

ஒரு புது அனுபவமாத்தான் இருக்கு காசி!

said...

வாங்க சசி கலா.

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றீஸ்ப்பா.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பகலில் ஜஸ்ட் ஒரே ஒரு மணி நேரம்தான் மூடிவைக்கிறாங்க.

'அடுத்தமுறை' விரைவில் வாய்க்கட்டும்!

said...

பழைய கோவிலில் வரும் பக்தி பரவசம் புதுக்கோவிலில் வருமா? பல்கலைக்கழக கட்டிடம் பிரமிக்க வைத்தது. அங்கு நிலவும் சூழ்நிலையே நம்மைப் படிக்க வைத்துவிடுமோ?

said...

1300 ஏக்கர். பரந்தஇடம் நன்றாகவே இருக்கிறது.

said...

இவ்வளவு சுத்தமா போட்டோ எடுக்க முடியவில்லை என்னால். மேலும் செல்போட்டோதான்!!

said...

வாங்க ஸ்ரீராம்,

நானும் இப்ப ஒரு எட்டுமாசமா செல்ஃபோன் கேமெராதான் அதிகமாப் பயன்படுத்தறேன். என்னதான் இது நல்லாப் படம் எடுக்குதுன்னாலும், கெமெராவில் எடுப்பது இன்னும் நல்லாவே இருக்குல்லே? இனி சோம்பல் படாமல் கெமெராவைக் கொண்டு போகணுமுன்னு முடிவு :-)