Monday, March 31, 2014

அனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி.

உடல்களைப்பில் இன்னிக்கு  வெளியே கிளம்பக் கொஞ்சம் தாமதமாச்சு. அப்படியும்  ஒன்பதேகாலுக்கு  புறப்பட்டோம்,  கோபாலபுரம் நோக்கி.  அங்கே ஒரு ஸ்ரீ வேணுகோபாலன் கோவில் இருக்குன்னு கேட்டது முதல்,   ஒருக்கா அங்கே போகணும் என்று ஒவ்வொரு பயணத்திலும்  நினைச்சுக்குவேன்.  இதுவரை நடக்கலை. இன்று விடக்கூடாது.

கோவிலைப் பூட்டி இருந்தாங்க. மார்கழி என்பதால் காலை  நாலரைக்கு  கோவில் திறந்து  நித்யபடி பூஜைகள் முடிச்சுட்டு,  காலை ஒன்பதுக்கே  மூடிடுவாங்களாம்.  அட நாராயணா:(

இன்னுமொரு கோவில்  காரில்  போகும்போதும் வரும்போதுமா  ஆயிரம்தடவை  பார்த்தும், ஒரு நாளும் இறங்கிப்போய் சேவிக்காத கோவிலுக்குப்போக நமக்கு  அதிர்ஷ்டம் இருக்கான்னு  பார்த்தால், இருந்தது:-)

 லஸ் கார்னரில் இருக்கும் நவசக்தி விநாயகர்.


 சின்னக்கோவில்தான். ஆனால் பராமரிப்பு அருமை. ரொம்பவே பிஸியான இடத்தில்  இருக்கார். நாலு முனை கூடுமிடம் என்றாலும் போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாம ஓரமாப்போய் உக்கார்ந்ததை நினைச்சால், அவர் புத்திசாலித்தனம் எவ்ளோ அதிகம்னு புரியும்:-)


அப்படியே நம்ம கபாலியையும் கண்டுக்கிட்டு வந்தோம்.  ஜஸ்ட் ஒரு சுத்து.  நின்னு ரசிக்க நேரம் இல்லை. கோவில் மூடிக்கிட்டு இருக்காங்க. சலோ பாண்டி பஸார்.
போகும் வழியில் ரங்காச்சாரி கடையில் சின்னதா ஒரு பத்து நிமிச இடைவேளை:-)   தோழியின் நினைவு வந்து நின்னது மனசுக்குள்!


இன்னிக்கு கோபாலின் ஷாப்பிங் டே!  வருசக்கடைசிநாள். போயிட்டுப்போகுது. 'எனக்காக ஒருநாள்  கடை கண்ணிக்கு வந்துருக்கியா?'ன்னு நாளைக்கு ஒரு கேள்வி வந்துறக்கூடாது பாருங்க:-) சென்னைப்பயணத்தில் வழக்கமாப்போகும் கடைதான் இது.  ரேமாண்ட்ஸ். 90 பாண்டி பஸார்.


நம்ம கீதா கஃபேக்குப் பக்கத்துக்கடை. நடத்துபவர்  வெங்கடேஷ். வெறும் வெங்கடேஷ் இல்லை. 'சிங்கம்' வெங்கடேஷ்.
பூனைக்குட்டியாட்டம்தான் இருப்பார்.  சின்ன உருவம். ஆனால் திறமைசாலி. இல்லைன்னா தி நகரில் இத்தனை வருசம் குப்பை கொட்டி  இருக்க முடியுமா?


புள்ளையார் பக்தர் என்பதைப் பார்த்தவுடன் தெரிஞ்சுக்கலாம். கல்லாமேசையில் ஊஞ்சலாடும் புள்ளையார் இருப்பார். கடைக்குள்ளே அட்டகாசமான அலங்காரங்களுடனும்  ஒருவர். மூலவரும்  உற்சவருமாக:-)

ஆண்களுக்கான கடை என்பதால்........ நமக்கு உக்கார்ந்து வேடிக்கை பார்க்கலாம்:-) என்னவோ எடுத்துக்கிட்டு போகட்டும்.  சுதந்திரம் கொடுத்துருவேன்.  ரெண்டு பேண்ட்ஸ் போதுமுன்னு இவர் முதலில் ஆரம்பிப்பார். அங்கே  மதன் என்ற விற்பனையாளர்  வெவ்வேற துணிகளை எடுத்துப்போட்டு  விவரிக்கும்போது, நம்மாள் கண்ணில், மின்னல் வருவதைக் கவனிச்சு அவைகளிலும் ஒன்னு  எடுத்துக்குங்கன்னு 'சின்னதா சவுண்ட்' விடுவேன்.  என் பேச்சை ,கோபால் கேக்கறாரோ இல்லையோ,   மதன் கேட்டு அதன்படி நடந்துக்குவார்:-))))) குறைஞ்சது  ஆறு பேண்ட்ஸ் என்றாகும்.  தயங்கும் கோபாலிடம்,  அவற்றின் விலையை டாலராக மாற்றி  இந்தக் காசுக்கு  அங்கே ஆறு எடுக்கமுடியாதுல்லேன்னு சமாதானம் சொல்வேன்.  கொஞ்சூண்டு சுயநலமும் இந்த தாராளத்தில் இருக்குன்னு தனியாச் சொல்லணுமாக்கும்:-)

நீலச்சட்டை மதன். வெள்ளை வெங்கட்.


வெங்கட்ன்னு  ஒரு  'மெஷர்மெண்ட் மாஸ்டர்' இப்போ இங்கிருக்கார்.  அவர் முதுகுக்குப் பின்னால்  நாம் எண்ணும் நோட்டு, ரூபாயா டாலரா இல்லை பவுண்டான்னு   தன் முகத்தைத் திருப்பாமலேயே கண்டு பிடிச்சுருவாராம்!!!  ரொம்ப சாதாரணமா இருக்கும் நம்மையும்  பார்த்து , 'இவுங்க ஃபாரின் மக்கள்'னு எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்களோன்னு  எனக்கு இன்றுவரை ஒரு சம்ஸயம் உண்டு கேட்டோ! (அவர் சொன்ன நாடு மட்டும் தவறு)

 மேடம் சொல்றது சரிதான்.வாங்கிக்குங்க ஸார். ஃபாரின்லே எல்லாம் விலை ஜாஸ்தியா இருக்குமேன்னார்:-)

விலையை விடுங்க.... இங்க அளவெடுத்துத் தைச்சுக்கொடுப்பது என்பதே அடியோடு இல்லையே. ரெடி மேட்தான். அதுவும் வெள்ளைக்கார உசரத்துக்கு தைச்சு வரும்.  நம்மாட்களுக்கு  காலை வெட்டணும். அதுக்குத் தனியா சார்ஜ் செய்வாங்க. சில சமயம் முப்பது டாலர் பேண்ட்ஸ்க்கு இருபது டாலர்  வெட்டணும், வெட்டித் தைக்க.  இதுவே ஸூட் செட் என்றால் அம்பது வள்ளிசாக் கொடுக்கணும்.  அநியாயமில்லையோ? அதுக்குத்தான் ஓசைப்படாம ஊரில் தைச்சுக்கிட்டு வர்றது:-) இங்கே பெருமையா சொல்லிக்கலாம் 'made to measure '

வெங்கட்நாராயணா சரவண பவனில் பகல் சாப்பாடு ஆச்சு.  அப்புறம் எனக்கு கண்ணாடி ஆர்டர் கொடுத்திருந்த கடைக்கு  ஃபோன் செஞ்சா, கண்ணாடி ரெடின்னாங்க. போய் வாங்கிக்கிட்டு அறைக்கு வந்தோம்.   கொஞ்சம் விலை கூடுதல் என்றாலும் நல்ல சர்வீஸ். ஏறக்கொறைய எங்கூரில் செலவாகும் அதே அளவுதான்.

பொழுது விடிஞ்சால் புது வருசம். மாலை  கொஞ்சம் சீக்கிரமாக் கிளம்பி நாலரைக்குக் கோவில் திறந்ததும்  நம்ம அடையார் பத்மநாபனுக்கு  ஹேப்பி நியூ இயர்  சொல்லிட்டு இப்போ புது அனுபவத்தைத் தேடிப்போய்க்கிட்டு இருக்கோம்.  ராமராஜ்யம் போகணும். கேளம்பாக்கத்தில் இருக்கு.  கொஞ்சநாளா எனக்கு இந்த ஆன்மீகத்தேடல் அதிகமாகிக்கிட்டு இருக்கு. வயசானால் தானே வந்துரும்போல!  ஆன்மீகத்தேடல் இல்லைன்னா வாழ்க்கையில் எதையோ மிஸ் பண்ணறோமுன்னு பொருள்,இல்லையோ?

கோவிலுக்குப்போய்  வெறும் சாமி கும்பிடுவது ஆன்மீகம் இல்லையாக்கும்:-) அது ஜஸ்ட் ஒரு ஆரம்பம் மட்டுமே!  மனத்தைக் கடவுளில் லயிக்கவிட அது ஒரு உபாயம். அவ்ளோதான். தன்னைத்தானே அறிந்து கொள்வதுதான்   முக்கியம்.  செல்ஃப் ரியலைசேஷன். கடவுள் உண்மையில் இருக்காரா இல்லையா என்பது  ப்ரச்சனையே இல்லை.  இருக்குன்னு நினைச்சால் இருக்கார். அப்ப இல்லைன்னு நினைச்சால்?

கோவிலில் நாம் பார்க்கும் ரூபத்தில் இல்லாமல் , வேற ரூபத்தில் இருக்கார். நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையை கவனியுங்கள். பறவைகளோ, மிருகங்களோ, மரங்களோ, செடிகொடிகளோ , பூக்களோ   சொல்லித் தராத பாடங்களா? இதெல்லாம் கூட கடவுளின் அம்சங்கள் என்றுதான்  எனக்குத் தோணும்.

நம்ம நியூஸித் தோழி ஒருவர் சொல்லிதான் எனக்கு ராமராஜ்யத்தைப் பற்றித் தெரியும். பொதுவா எனக்கு  ஆன்மீகக் குருக்களைப் பற்றிய நம்பிக்கைகள் அறவே இல்லை.  குடும்பத்தில்  சிலர்  ஒரு ஆன்மீக குருவைப் பின்பற்றி இருந்த காலத்தில் அவர்களின் யோக்கியதையைக் கண்முன் பார்த்த காரணத்தால்......  குரு என்றாலே எனக்கு அலர்ஜி:(  அப்ப நான் அறியாப்பருவத்தில் இருந்த காலம் என்றாலும் கூட.....   மேற்படி சமாச்சாரங்கள் மனசில் ஆழமாப் பதிஞ்சு போச்சு.  சாமிக்கும் எனக்கும் இடையில் இன்னொருவர் தேவையே இல்லை. எல்லாம் டைரக்ட் அப்ரோச்தான்.   அர்ஜுனனுக்கும் கிருஷ்ணனுக்கும் இடையில் யாரு இருந்தாங்களாம்?

யாருக்காவது நல்லது செய்யணுமுன்னு நினைச்சால் உடனே செஞ்சுறணும்.  இல்லை ஒன்றும் உதவ முடியாத நிலையா?  நல்லது செய்ய முடியலையா? நல்லது செய்யப் பார். முடியலைன்னா கஷ்டப்படுத்தாமல் 'சும்மா இரு'. சும்மா இருப்பதே  சுகம்.  'சும்மா இரு' என்றால் வேலை வெட்டி செய்யாமல் சோம்பி இரு என்று அர்த்தமில்லை. மற்றவர்களுக்கும்  & எந்த உயிர்களுக்கும் தொல்லை கொடுக்காமல் 'சும்மா இரு'.

தோழி சொன்ன ஆன்மீகக் குருவைப் பற்றிக் கொஞ்சம் அனுபவங்களை  கேட்டதில்  நம் எண்ணத்துக்கு கொஞ்சம் கிட்டே வருவது போலவே இருந்தது.  மேலும் நமக்கு இருக்கும் சில ஐயங்களையும்   அவரிடம் கேட்டுத் தெளிவு பெறலாம் என்றும் நினைச்சேன்.  தோழியின் கணவர் அவருடைய அனுபவங்களை எழுதி  இதுவரை  ரெண்டு புத்தகங்களாக வெளி வந்திருக்கு.  அவற்றை வாசிச்சதும்,  இன்னும் சமீபத்தில் நான்  நெருங்குவதைப்போல்   ஒரு உணர்வு.

இவருடைய  கொள்கைன்னு  சொன்னால்  ரெண்டே வரிகள்தான்.   Love all.  Love is all. வெரி சிம்பிள்!!!

அனைத்தும் அன்பே!   அனைவரையும் நேசி.

சட்னு மனசில் ஒட்டிப்பிடிக்கும் சமாச்சாரம்!  ஆன்மீகவாதியா இருப்பது  இவ்ளோ சுலபமா?  வியப்புதான்!

இவர் ஹைடெக் குருவாகவும்  இருக்கார்.  மனசு தவிக்கும் சமயம், ஒரு  இ மெயில் தட்டிவிட்டால் போதும்.  உடனே  பதிலும் அனுப்பறார்.  ஒரு கவுன்ஸிலிங் போலத்தான்.  குருவா உடனே என் மனசு ஏத்துக்கலைன்னாலும், ஒரு நல்ல நண்பரா ஏத்துக்க முடிஞ்சது எனக்கு.  அப்பப்ப  மின்மடல் தொடர்பில் இருந்தேன்.

போனவருசம் போனபோது  ராமராஜ்யம் போய் அவரை சந்திக்க ஆவல் இருந்தாலும், அவர்  அப்ப வெளிநாட்டுக்குப் போயிருந்ததால்  வாய்ப்பு கிடைக்கலை.  இந்த  முறை தோழியின் குடும்பமும் நாங்களும்  ஒரே நாளில் விடுமுறைக்குக் கிளம்பினோம்.  ஆனால்  அவுங்கவுங்க  உள்ளூர்  பயணத்திட்டம் தனித்தனி.  வருசாவருசம்  புது வருசச் சமயம் மட்டும்  (தொடர்ந்து  நாலு வருசங்களா )  அவுங்க ராமராஜ்யத்தில் தங்கி இருக்காங்க என்பதால்  நாங்களும்  'நியூ இயர்ஸ் ஈவ்' நிகழ்ச்சியில்   அவுங்களுடன் சேர்ந்து கொள்ள நினைச்சோம்..

முதலில் மின்மடலில்,  ராமராஜ்யத்துக்கு நாங்கள்  வரலாமான்னு  அனுமதி கேட்டுக்கிட்டேன்.  தாராளமா வாங்கன்னு சொல்லி,  அங்கே  வந்து யாருடன் தொடர்பு கொள்ளனுமுன்னு  பதிலும் வந்துச்சு.

வரும் வழியைப் படிச்சுப்படிச்சுச் சொல்லி இருந்தாங்க  தோழி, என்றாலும்  கேளம்பாக்கம் - வண்டலூர்  மெயின் சாலையில் இருந்து  இடது பக்கம் திரும்பும் வழியைக் கோட்டை விட்டுட்டு  நேராப்போய்க்கிட்டு இருக்கோம்.  பாக்கம் என்ற ஊர்ப்பலகை கண்ணில் பட்டதும், ரொம்பதூரம் வந்துட்டதைப்போல உணர்வு வந்துச்சு. அவ்வளவாப்போக்குவரத்து இல்லாத சாலை. யாரிடமாவது வழி கேக்கணும்.  கடவுளாப் பார்த்து அனுப்பிய  மாதிரி  ஒருத்தர்  தென்பட்டார்.   அவர் சொன்னமாதிரியே  திரும்பி வந்தப்ப  எமரால்ட் கம்பெனி  கண்ணில் பட்டது.  அங்கிருந்து  கொஞ்சதூரம் போய்  யூ டர்ன் எடுத்து மீண்டும் மெயின்சாலையில் வந்தப்ப, இடதுபுறம் போகும் வழி கண்ணில் கிடைச்சது.

அதில் நுழைஞ்சு இங்குமங்கும் வலதும் இடதுமாய்க்  கொஞ்சம் திரும்பியவுடன் பழனி கார்டன்ஸ் கண்ணில் பட்டது.  சரியா பாதைதான் என்று உறுதியாச்சு.  மெயின் கேட்டில் வண்டியை நிறுத்தினோம். அலங்கரிச்ச யானைகள் வரிசையா நின்னு வரவேற்பு  கொடுத்தன. ஓக்கே. ரைட் ப்ளேஸ்!

தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணை, செல்லில் கூப்பிட்டதும் , ஓப்பன் சிஸமெ ....... கேட் திறந்தது.


நல்வரவு சொல்லி  உள்ளே அழைத்துப்போக வந்த  ஆன்மீக அன்பருக்கு   வணக்கம்சொல்லி,  'நியூஸி மக்கள் சார்பில்' என்று கொண்டு போன படத்தைக் கொடுத்தேன். மாடர்ன் கோகுலம்:-)))) (பாண்டிபஸார் தாத்தா போட்டுக்கொடுத்த ப்ரேம் இதுதான்)

தொடரும்.............:-)

PINகுறிப்பு:  ஆங்கிலப்புத்தாண்டைப் பற்றி பதிவு எழுதும்  இந்நாளில்,  பாரதத்தின் புத்தாண்டும்  தற்செயலாக  இணைஞ்சுருச்சு. அனைவருக்கும்  இனிய யுகாதிப் பண்டிகை வாழ்த்து(க்)கள்.  இன்றைய ஸ்பெஷல் 'கிஷ்மு' பாயஸம்:-))))


19 comments:

said...

உகாதி அன்று புத்தாண்டு பதிவு... :)

”அனைத்தும் அன்பே... அனைவரையும் நேசி”

இதை மட்டும் செய்துவிட்டால் என்றும் ஆனந்தம் தான்...

said...

நம் மனதைப் பொறுத்து எல்லாமே எளிது தான் அம்மா...

உகாதிப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

said...

இனிய யுகாதிப் பண்டிகை வாழ்த்துகள்.

said...

//அனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி.//

எவ்வளவு இதமான வார்த்தை !!

said...

ரங்காச்சாரி , raymonds aishvaryam இரண்டும் நாங்களும் வழக்கமாக போகும் கடைகள் !! :)

said...

உகாதி நல் வாழ்த்துகள் துளசி. இந்த வருடம் எல்லா நலன்களும் வாழ்வில் நடக்கணும். லஸ் பிள்ளையார் சேவைக்கு நன்றி.

said...

அனைத்தும் அன்பே... அனைவரையும் நேசி”//
அருமையான வாசகம்.
இதை கடைபிடித்தால் எங்கும் எப்போதும் அமைதி, ஆனந்தம்தான்.
அன்புதான் அனைத்தும்.
அன்பே கடவுள்
அன்பே சிவம்.

said...

Happy ugadhi to all.

Reading regularly, but feedback in tamil from mobile is a tough job :-)

said...

தாமதமான யுகாதி வாழ்த்துக்கள், உங்களுக்கும் திரு கோபாலுக்கும், வரப்போகும் தமிழ் புத்தாண்டுக்கு முன்கூட்டிய மனமார்ந்த இனிய வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உண்மை ஆனந்தம் இதுதான்!!!!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரொம்பச் சரி.

எல்லாம் மனசுக்குள்ள அடங்கிப்போயிருக்கு பாருங்க!

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

உங்களும் எங்கள் வாழ்த்து(க்)கள்.
இன்னிக்கு ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகளையும் சேர்த்துச் சொல்லிக்கிறேன்.

said...

வாங்க சசி கலா.

இதம் பதமா இருப்பது கேட்கவே சுகமா இருக்கேப்பா!

said...

சசி கலா,


வழக்கமாப் போகும் கடைகளா? ஆஹா...

அப்ப அங்கே நல்ல சர்வீஸ் இருக்கு என்பது தெளிவாகி இருக்கு:-)

said...

வாங்க வல்லி.

வாழ்த்துகளுக்கு நன்றிப்பா. இன்னிக்கு ஸ்ரீ ராம நவமி வாழ்த்துகளையும் சேர்த்துச் சொல்லிக்கிறேன்.

ரொம்பப்பிடிச்ச பண்டிகை. எளியவன் ராமன், ப்ரசாதமும் சிம்பிள்!

அதெல்லாம் செஞ்சுட்டொம் இல்லே:-))))

said...

வாங்க கோமதி அரசு.

சொல்வது ரொம்ப எளிதுன்னாலும் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள மெனெக்கெடத்தான் வேணும்.

அன்கண்டிஷனல் லவ் என்கிறார். நம்மைச் சுத்தி நடப்பவைகளைப் பார்த்தால்... தலைக்கேறும் கோபத்தை எங்கே போய் ஒ ளி/ழிச்சு வைக்க?

said...

வாங்க சாந்தி.

படிச்சால் போதும் என்ற திருத்தி எனக்கிருக்கு. ஆனால் உங்க அண்ணன்?????

said...

வாங்க ரஞ்ஜனி.

எதுவுமே நமக்குத் தாமதம் கிடையாதுப்பா! அதான் வரிசையா வருசப் பிறப்பு வந்துக்கிட்டே இருக்குல்லே:-)))

said...

"அனைத்தும் அன்பே! அனைவரையும் நேசி."