Monday, March 24, 2014

சாமிக் குத்தம் ஆயிருச்சுன்னா...........

எல்லோருக்கும் இருக்கும்  பயம் எனக்குள்ளும்  இருந்துச்சு.  கச்சபேஸ்வரரை தரிசனம் செஞ்ச கையோடு  அறைக்குப்போய் பொட்டியை  அடுக்கி,  கொண்டு வந்த  பொருட்கள் எல்லாம் மறக்காமல் பொட்டிக்குள் போச்சான்னு கவனிச்சுட்டுக் கொஞ்ச நேரம் ஓய்வுக்குப்பின் சரியா ஒரு மணிக்கு செக்கவுட் பண்ணினோம்.  வரவேற்பில்  கிறிஸ்மஸ்க்கு  செஞ்ச அலங்காரத்தில் முளைப்பாரி இன்னும் கொஞ்சம் உசரமா (நேத்துப் பார்த்ததைவிட கூடுதல்)  வளர்ந்திருக்கு.

சரவணபவனில் பகல் சாப்பாடு.  வழக்கம்போல் வயித்துக்குக் கேடு வராமல்  சாப்பிட்டேன்.:-)சாலையை ஒட்டி இருக்காமல் கொஞ்சம் உள்ளே தள்ளி இருப்பதால்  வாகன இரைச்சலும் தூசி தும்பும் குறைவே. ஆனால் நம்ம மக்கள்  செல்பேசியில்  பேசும் சத்தம் எட்டூருக்குப்போதும்:( அதென்ன பேச்சோ.........   எப்பப்பார்த்தாலும்!

சாப்பாட்டு கூடம் மூணு இங்கே . அதில் ஒன்னு  ஏஸி ஹால்.  சாப்பாடு ஒரே மாதிரி என்றாலும் கூட வெளி ஹாலில் சாப்பிடுவதைவிட ஒரு பத்துப்பதினைஞ்சு  ரூபா கூடுதல். கரண்டு பில்லை நாம் தானேகட்டணும்,இல்லையோ? போயிட்டுப் போகுதுன்னு விடவேண்டியதுதான்.

விநாயகா ஸில்க் கடைக்கு வண்டியை விடச் சொன்னேன்.  திடுக்கிட்டுப்போன கோபால், எதுக்கு என்னும் பாவனையை முகத்தில் காமிச்சார்.  'உங்களுக்கு பட்டு வேட்டி வாங்கலாமுன்னுதான்.....'

"எனக்கெதுக்கு பட்டு வேட்டியெல்லாம்.   வேணவே வேணாம்."

"அடடா.....   போகட்டும். அப்ப எனக்கொரு புடவை(யாவது)  வாங்கிக்கலாம்."

'அதான் நிறைய வச்சுருக்கயே'ன்னு  ஆரம்பிச்ச கோபாலுக்கு,  'காஞ்சிக்கு வந்து பட்டு வாங்கலைன்னா சாமிக்குத்தம் ஆகிருமு'ன்னு  'பட்'னு சொன்னேன்.  மார்கழி என்பதால் கடையில் அவ்வளவாக் கூட்டமில்லை.  நம்ம சென்னை ஸில்க்  ஸ்டைலில் ஆடம்பரமான கடைகள்  சில இருப்பதைக் கவனிச்சேன் என்றாலும்  நமக்கு ஆகிவந்த கடையில் வாங்கினால்தான் திருப்தி.

ஸில்க் காட்டன் புடவைகள்  இருப்பதுபோல்  அதே வகையில் ஸல்வார் கமீஸ் துணிகள் கிடைச்சால் தேவலை.  பட்டெல்லாம் உடுத்திப்போகும் அளவுக்கு  எங்கூரில் நிகழ்ச்சிகள்  கிடையாது.  ஆனால் பாருங்க...........   ஸில்க் காட்டன் ஸல்வார் மெட்டீரியல்ஸ்  கிடைப்பதே இல்லை:(

தபதபன்னு புடவைகளை மலைபோல் குவிச்சுட்டார் விற்பனையாளர்.  சொல்லச் சொல்லகேட்காமல்  எல்லாத்தையும் பிரிச்சு வேற போடுவதைப் பார்த்தால் என் மனசுக்குப் பொறுக்கலை. 'வேண்டாம் வேண்டாம்' என்ற  சொல்லைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தலை:( நம் தலை அசைப்பைக் கவனிக்கும் விற்பனையாளரின் உதவிக்கு இருக்கும் பெண்கள்  ஒரு நொடியில் பிரிச்சுப்போட்டப் புடவைகளை அலுங்காமல்  மடிச்சு திரும்ப அடுக்கிடறாங்க. பயங்கர ட்ரெய்னிங்  அண்ட் ட்ரெய்ன்டு.

அந்தக் காலத்தில்  வீட்டுலே கல்யாணம் கார்த்திகை என்றால்தான் பட்டுப்பக்கமே திரும்புவோம். அப்ப வந்த புடவைகளும் கனம்கூடுனதாக இருக்கும்.  சிம்பிளா பார்டரிலும் முந்தானையிலும் வெள்ளி சரிகை வேலைப்பாடுகள். முகூர்த்தப்புடவை மட்டுமே கொஞ்சம் அதிகப்படி சரிகையுடன்.   புடவைகளைக் கட்டினாலும் புசுபுசுன்னு நிக்காமல்   அப்படியே பாந்தமா படிஞ்சு இருக்கும்.   தினப்படி கட்டிக்கவேன்னு  கூட புடவைகள்கிடைக்கும். கடலை மாவோ, இல்லை சோப்பு காய் என்று சொல்லும்  பூந்திகொட்டையோ (பெயர் சரிதானா?)   ஊறவச்ச தண்ணீரில் வீட்டிலேயே துவைச்சுப் போட்டுக்குவாங்க எங்க அம்மம்மா. மரத்தாடி நிழலில்  காய வச்சு, முக்கால் ஈரம் போனதும் வீட்டுக்குள்ளே கொண்டு வந்து  உள்கயித்துக்கொடியில் போட்டுருவாங்க.

என் முதல் புடவையான  ப்ரிண்டட் காஷ்மீர் சில்க் புடவையை இப்படித்தான் ஒரு நாள் துவைச்சு வெளியே மரத்தடியில்  இருந்த கொடிக்கயித்தில் காயப்போட்டேன்.    கொஞ்ச நேரம் கழிச்சு புடவையை எடுக்கப்போனால்............  மாடு அதைத் தின்னுக்கிட்டு இருந்துச்சு:(

அம்மம்மா  எப்போ புடவையைக் காயப்போட்டாலும்  திண்ணையிலே  ஏன் உக்கார்ந்திருக்காங்க  என்ற  கேள்விக்கு விடையும் கிடைச்சது.

உடம்பும் தலைப்பும் ஒரே நிறமாக இருந்தது போய்  பார்டரும் தலைப்பும் உடல் நிறத்துக்கு (ஐ மீன் புடவையின் உடல்நிறம்)  போட்டிவண்ணமுமா வந்தது.  தனித்தனியா பார்டர்களையும் முந்தானையையும் நெய்து  அப்புறம் புடவையின் உடலில் சேர்த்துருவாங்க. கோர்த்து வாங்குனதுன்னு அதுக்குத் தனிப்பெருமை! அதன்பிறகு அகலமா ஒரு சைடு மட்டும் பார்டர். அப்புறம்  மேலேயும் கீழேயுமான டபுள் சைடில்  மேலே ஒரு நிறம் கீழே ஒரு நிறம் என்று ரெண்டு முந்தானையுடன்! இதை 'கங்கா ஜமுனா ' புடவை என்பார்கள்.  ரெண்டு வெவ்வேற ப்ளவுஸ்களுடன்  டூ இன் ஒன் என்று ரெண்டு புடவைகளா அதையே  மாத்திக்கட்டிக்கலாம்.

ஆனால்........  இப்போ டெஸ்ட்டட் ஜரி என்ற பேரில்  எதோ மினுமினுப்பு.  கட்டினாலும் பாந்தமா உக்காராது. அடங்காத புடவையின்  முன் கொசுவத்தைப்பிடிச்சு  சரியாக்க  'இன்னொருத்தர் ' உதவி வேண்டித்தான் இருக்கு:( இந்த அழகில் இப்போ லேட்டஸ்ட் டிஸைன் என்ற பெயரில் கசகசன்னு  புடவை முழுக்க எம்ப்ராய்டரி,  கிறிஸ்ட்டல் பதிப்பது  என்று ஏகக் களேபரம்:(

இன்னும் வட இந்தியர்களுக்கு 'கஞ்சீவரம்' என்றால்  ஒரு 'இது'தான்!  கண்களில்  கொஞ்சம் மதிப்பும் (பொறாமையுமாவும்) பார்த்துக் கேப்பாங்க.  நமக்கும் உசரம் ஒரு நாலு இஞ்ச் கூடுமுன்னும் சொல்லலாம்! 'இதெல்லாம் ஒன்னுமில்லை' என்பது போல் முகபாவனை வச்சுக்கணும்.ஆமா:-)

கைத்தறியில்  நெசவு செய்ய இப்போ  ஆள் கிடைப்பதில்லை.  பரம்பரையாக் குடும்பத்தொழிலா இதைச் செய்து வரும் குடும்பங்கள் , தங்கள் சந்ததிகளை  வேற வேலைக்கு அனுப்பத் தொடங்கிட்டாங்க. போதுமான வருமானமும் மதிப்பும் இல்லைன்னா யார்தான்  இந்த வேலை செய்ய விரும்புவாங்க?  விவசாயம் மெல்ல மெல்ல  காணாமப்போவதைப்போல்தான் கைத்தறி நெசவாளர்களும்:(

தற்சமயம்  காஞ்சியில் சுமார் இருபத்தியஞ்சாயிரம் நெசவாளர்கள் இருக்காங்க(ளாம்)  இவுங்க நெய்யும் புடவைகளை  நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்யறாங்கன்னும்  இந்தக் கூட்டுறவு சங்கங்களே எண்ணிக்கையில்  இருபத்தி இரண்டு இருக்குன்னும் தகவல்.

சென்னையில் நம்ம  கபாலி கோவில் இருக்கு பாருங்க அதன்  ராஜகோபுரத்துக்கு  எதிரில் இருக்கும்  சந்நிதித்தெருவில் (கிரி ட்ரேடிங்ஸ்க்குப் பக்கத்தில்)  காஞ்சிபுரம்  பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின்  கடை ஒன்னு  இருக்கு. அங்கே தரமான புடவைகள் கிடைக்கிறது. எதாவது   டிஸைன் பிடிச்சிருந்து, புடவையின் நிறம்  மட்டும் வேற வேணுமுன்னால்  நமக்கு விருப்பமான வகையில்  நெசவு செஞ்சு கொடுக்கறாங்க. மகளுக்கு அப்படி சில புடவைகள்  அங்கே வாங்கி இருக்கேன். கடை உரிமையாளர் சீதாராம், நல்ல  மனிதரும் கூட. புடவையைக் கட்டிக்கூட காமிச்சுருவார்:-))))))))))


நம்ம பதிவர் வல்லியம்மாதான்  நம்மை முதல்முதலா இந்தக்கடைக்குக் கூட்டிபோய் அறிமுகம் செஞ்சு வச்சாங்க. பதிவர்களின் பாராட்டு பெற்ற நம்பிக்கையான கடைதான்.


விலைவாசி கூடுவது  புடவைக்கும்தான்.  அதனால்  எல்லோருக்கும்  வாங்க முடியும் விலையில் (தரத்தில்  ரொம்பக்கீழே!) புடவைகள் தயாரிக்கத் தொடங்கிட்டாங்க.  முந்திக் காலத்தில்  கட்டுன புடவைகளையே மீண்டும் மீண்டும் கட்டுவாங்க. இப்ப என்னன்னா......   நாலு முறை கட்டிட்டால் பிறகு அதைச் சீந்துவாரில்லை. மற்ற துணிகளும் இப்படித்தான். பொங்கல் தீபாவளி பிறந்த நாள் இப்படி குறிப்பிட்ட நாட்களில்தான் புதுத் துணி எடுப்பது  தான் வழக்கம். ஆனால் இப்போ  காரணமே வேணாம். சும்மாச் சும்மா புதுசு எடுத்துக்கறோம்,இல்லையா?

ஒரே ஒரு புடவை மட்டும் வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம்.  இதுதான் காஞ்சியில் செஞ்ச ஒரே ஷாப்பிங். அதுவும் ஜஸ்ட் அரை மணி நேரத்தில்!

காஞ்சி,  கலைகள் வளர்க்கும் பூமியா ஒரு காலத்தில் இருந்துருக்கு.  நாளந்தா பல்கலையின்  தலைவரா இருந்த  தருமபாலர் , காஞ்சிபுரத்தவரே!  சங்க இலக்கியப் பாடல்களிலும் இந்நகரம்  பற்றிய குறிப்புகள் இருக்கு. கிமு ரெண்டாம் நூற்றாண்டில்  பதஞ்சலி  முனிவர்  காஞ்சியைப் பற்றிச் சொல்லி இருக்கார்.

புத்தர் பிரான் கூட  காஞ்சிக்கு வந்துருக்காராம். இங்கே ஒரு புத்தவிஹாரமும் இருக்கு. நாம்தான் போகலை. சமணர்களின்  தீர்த்தங்கரர் கோவில் கூட இருக்காம். அந்தக் காலத்தில்  காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அரச ர்களால்  இந்து மதம் மட்டுமில்லாமல் மற்ற மதங்களும் போற்றப்பட்டிருக்கு. அடுத்த முறை விடுபட்ட கோவில்களுக்கு ஒரு விஸிட் அடிக்கத்தான் வேணும்.

சிவன் கோவில்கள் அதிகமிருக்கும் பகுதி சிவ காஞ்சியாகவும்,விஷ்ணு கோவில்கள் அதிகம் இருக்கும்பகுதி  விஷ்ணு காஞ்சியாகவும் குறிப்பிடப்படும்போது  புத்த காஞ்சி , ஜைன காஞ்சின்னும் பல பகுதிகளா  பரந்திருந்தது.  ஆறு  மைல் சுற்றளவில் நகரம் அப்போ அமைஞ்சுருந்ததா  சரித்திரம் சொல்லுது.

யுவாங் சுவாங் என்ற  'பயணப்பதிவர்'  தன்னுடைய பயணக்குறிப்புகளில் காஞ்சியைப் பற்றி பதிவு செய்திருக்கார்.  இப்போ நாமும் பதிவு செஞ்சுட்டோம்:-)

வயசுக் கணக்கை வச்சுப் பார்த்தால்  நம்ம சிங்காரச் சென்னை காஞ்சிக்கு முன் கைக்குழந்தைதான்!  முன்னூத்தி எழுபத்தியஞ்சு வருசம் மட்டுமே ஆகி இருக்கு. அதுக்கு முன் திரு அல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர்  இப்படி தனித்தனி ஊர்களா  இருந்ததை எல்லாம் ஒன்னு சேர்த்து சென்னை மாநகராக்கி, இப்போ கிட்டத்தட்ட  செங்கல்பட்டுவரை சென்னை!  ரியல் எஸ்ட்டேட்காரர்கள்  'சென்னையில் வீடு  நிலம் கட்ட வாங்குங்க'ன்னு  செங்கல்பட்டு எல்லைக்குக் கூட்டிப்போய் காமிக்கிறாங்க:-)

இதோ காஞ்சியை விட்டுக் கிளம்பறோம். போகும் வழியை இந்தமுறை கோபால் முடிவு செய்தார்:-)

தொடரும்.......:-)




8 comments:

said...

தலைப்பை பார்த்து என்னமோ நினைச்சேன் அம்மா...

இங்கு முன்பு 15000 இப்போது கைத்தறி நெசவுகள் 5000க்கும் குறைவாகி விட்டது... வளர்ச்சி...? & பலருக்கும் வீழ்ச்சி...!

ஒரு எட்டு எங்க ஊருக்கு வாங்க... தமிழ்நாடு முழுக்க வியாபாரம் செய்யும் பலப்பல + பளப்பள + விதவிதமான புடவைகள் இருக்கு - மாடு தின்னாத புடவை தவிர... ஹிஹி...

said...

ஒரேயொரு புடவை வாங்க அரை மணி நேரமா டீச்சர்? ஏன் அவ்வளவு நேரம்?

said...

சரவண பவனில் சாப்பாடு என்றவுடன் உங்களை புடவை விற்பவர்கள் பிடித்துக் கொள்வார்களே! என்றுப் பார்த்தேன்.

நாங்கள் சரவணபவனில் சாப்பிட போனபோது வாசலில் பட்டுபுடவை கடை ஆட்கள் எங்கள் கடைக்கு வாருங்கள் என்று போட்டி போட்டுக் கொண்டு அழைத்தார்கள். வேண்டாம் என்றாலும் சும்மாவந்து பாருங்கள் என்றார்கள் அவர்களுடன் போய் பார்த்தால்

அந்த கடையில் முதலில் காட்டிய புடவையை பட்டு என்றவர்கள் நான் பட்டு கட்டமாட்டேன் என்றவுடன் பட்டு இல்லை என்றார்கள் .
ஆட்களுக்கு ஏற்ற மாதிரி பேசி அழகாய் விற்பனை செய்கிறார்கள்.

said...

வல்லியம்மாவும் சீதாராமனும் வந்துட்டாங்களா பட்டுப் பதிவில்]]] நன்றிங்கோவ். விநாயகா ஸில்க்ஸிலியும் பழைய பட்டு இல்லை. பட்டு வாங்குவதையே நிறுத்தியாச்சு. இனி சில்க் காட்டனே போதும். கோமதி சொல்வதுபோல ஜாலம் செய்யும் புடவைக்காரர்களை நானும் பார்த்திருக்கிறேன். திண்டுக்கல்லுக்கு ஒரு தடவை போகணும்.

said...

நீங்க எடுத்த புடவை படத்தை போடாம விட்டுட்டீங்களே :(
சில்க் காட்டன் சல்வார் material நல்லி, சுந்தரிசில்க் சில் கிடைக்குது செட் டா இல்லாட்டியும் running material ல்ல இருக்கு .
கபாலி கோவில் புடவை கடைக்கு போய்டணும் !!

said...

அலுவலக வேலையாக காஞ்சிபுரம் சென்று இருந்தபோது இந்த சரவணபவனில் தான் இரண்டு நாட்களும் உணவு!

சில கோவில்கள் மட்டுமே செல்ல முடிந்தது.....

said...

காஞ்சீபுரம் போகணும், காஞ்சீபுரம் போகணும்,காஞ்சீபுரம் போகணும், - ஆசை அதிகமாகிறது! நிதானமா எல்லா கோவில்களையும் சேவித்து விட்டு வரணும்!

said...

காஞ்சிபட்டு உடுத்தி வந்தாகிவிட்டது. :))