Friday, March 14, 2014

ஒரே கல்லில் நாலு மாங்காய்!


காஞ்சி ரொம்பவே புண்ணியம் செஞ்ச ஊர்.சும்மாவா சொல்லி இருப்பாங்க ஏழு மோட்சபுரிகளில் காஞ்சியும் ஒன்னுன்னு!  ஒன்னுக்கொன்னு முன்னூறு , நானூறு மீட்டர் தூரமே இருக்கும் திவ்ய தேசங்கள்  பலதும் இருக்கு. அதுக்கெல்லாம் மகுடம் வச்சது போல  ஒரே இடத்தில்  நாலு திவ்யதேசமுன்னா   அது நம்ம உலகளந்தார் கோவில்தான்.  மூன்றடியால்  உலகம் அளந்தவன் கோவிலுக்குள் நுழைஞ்சு  நம்காலில் சில நூறடி வச்சால் போதும்! அலைச்சலே கிடையாது கேட்டோ!

ஓங்கி நின்னு உலகு அளந்தது எதுக்கு?  பெருமாளின்  தசாவதாரங்களில் வாமன அவதாரம் கதை தெரியும்தானே?  தெரியாதவர்களுக்கு  ஒரு 'சுருக்' இங்கே:-)

மஹாபலி சக்ரவர்த்தி,  நம்ம ப்ரஹலாதனின் பேரன் என்பது தெரியுமோ?  அவர் ரொம்ப நல்லமுறையில் நாட்டை ஆண்டு வந்தார். மக்களும் மகிழ்ச்சியும் திருப்தியுமாக இருந்தனர். ஒரு சமயம் பெரிய யாகம் ஒன்று ஏற்பாடு செய்து அதை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த யாகம் வெற்றி அடைஞ்சுட்டால் இந்திரப்பதவி தானே கிடைச்சுருமாம்!  அப்போ பதவியில் இருந்த இந்திரனுக்கு   ' எங்கே மாவேலி(மஹாபலியின் செல்லப்பெயர்!) ஆட்சிக்கு  வந்திடுவாரோ'ன்னு   உள்ளுக்குள் பயம் வந்துருச்சு.

மற்ற தேவர்கள் புடைசூழ மஹாவிஷ்ணுவிடம் போய்  முறையிட்டார்.  பெரிய கூட்டத்தைப் பார்த்ததும் விஷயம் கொஞ்சம் சீரியஸோன்னு  நினைச்ச  பெருமாள் , கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கறேன்னு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அவுங்களைத் திருப்பி அனுப்பிச்சார்.
அதான் நல்லாட்சி செய்கிறாரே மாவேலி, மக்களும் நிம்மதியாத்தானே  இருக்காங்க.  இருந்துட்டுப்போகட்டும்னு விடப்டாதா? ஒருவேளை  இவருக்குப்பின் இவர்  வம்சத்தில் ஆட்சிக்கு வரும் அடுத்த நபர் எப்படி இருப்பாரோன்னு   சம்ஸயமா?

கிடந்து யோசிச்ச மஹாவிஷ்ணு, கச்யபர் என்ற முனிவருக்கும்  அதிதி என்ற அவர்  மனைவிக்கும்  பிள்ளையாப் பிறந்தார். வாமனன் என்று பெயர் வச்சாங்க. குழந்தை  வளர்ந்து (!) சிறுவன் ஆனதும்  முறைப்படி  வைதீககர்மா நடந்துச்சு. உபநயனம் செஞ்சப்ப, தேவர்களே வந்திருந்து  தேவர்களின் குரு ப்ரகஸ்பதி  பூநூலையும்  குபேரன் பிச்சைப்பாத்திரத்தையும்  சந்திரன், கையில் பிடிக்கும் தண்டத்தையும்  இப்படி ஆளுக்கொன்றாகக் கொடுத்து  விழாவை விமரிசையாக நடத்தி முடிச்சாங்க.  சாக்ஷாத் பார்வதி தேவியே முதல் பிக்ஷை போட்டாளாம்!


இங்கே மாவேலியின் யாகம் இன்னும் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. பெரிய யாகமாச்சே... பலவருசங்கள் இடைவிடாது  நடந்து அது முடியும் சமயம் ஆச்சு. கடைசி நிகழ்ச்சி தானம் கொடுப்பது.  யார் என்ன கேட்டாலும் மறுக்காமல்கொடுத்துக்கிட்டே இருக்கான். வாமனன்  வந்து சேர்ந்து  தானம் பெறும் வரிசையில் நிற்க, அவன் முறை வந்ததும்  என்ன வேணுமுன்னு மாவேலி கேட்க, தன்காலால் மூணடி நிலம் வேணும் என்றான் சிறுவன்.

சின்னப்பையனுக்கு விவரம்  பத்தலை. அதான்  கொட்டிக் குமிச்சு வச்சுருக்கும் தானப் பொருட்களைக் கேக்காமல் பிஞ்சுக்காலால்  மூணடி கேக்கறான் என்று பரிதாபப் பட்ட மாவேலி. அடடா.....   துளியூண்டு இடத்தை வச்சு என்ன செய்யப்போறீர்?  (அதானே  ஆறடின்னாலும்  பரவாயில்லை. எப்பவாவது உதவும், இல்லே?)  இன்னும் கூட வேறெதாவது வேணுன்னாலும்  சொல்லும் என்றான்.

அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை. ஜஸ்ட்  'என் காலளவில்' மூணடி போதும்.


தந்தேன் என்று சொல்லித் தாரை வார்த்து தானம் கொடுக்க  கெண்டியை (கமண்டலம் போல் சைடில்  மூக்கு இருக்கும் பாத்திரம்) கொண்டு வரச் சொன்னதும்,  குலகுருவான சுக்ராச்சாரியார்  பார்த்தார். வந்திருப்பது யாருன்னு அவருக்குச் சட்னு புரிஞ்சுபோச்சு.  (அதுக்குத்தான்  கன்னத்தில் ஒரு பெரிய மச்சம் ஒட்டி வச்சுக்கிட்டு வந்திருக்கணும் என்பது!) ஓடிவந்து  மன்னனின் காதில் ரகசியமா அந்த  உண்மையைச் சொல்றார்.

"வந்திருக்கும் சிறுவன் சாமானியப்பட்டவரில்லை.  வைகுண்டத்தின் அதிபதி  மஹாவிஷ்ணு!  ஈரேழு லோகங்களில் இருக்கும் அனைத்து செல்வங்களுக்கும்  அதிபதியான மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் திருமார்பர். (அம்பானி வந்து  என்னிடம் அஞ்சு செண்ட் தருமம் போடச் சொன்னாப்போல்) இந்த மூணடியில் எதோ சூழ்ச்சி இருக்கு.  ஆபத்தாயிரும். கவனமா இரு.  வேறு எதாவது கேட்டு வாங்கிப்போகச் சொல்"

அட!  அவரா இவரு!  மாவேலிக்கு கர்வம் கூடிப்போய்,  ஆனானப்பட்டவரே   என்னிடம் தானம் வாங்க வந்துருக்காருன்னா என் புகழ், மதிப்பு எல்லாம் எப்படிப்பட்டதா இருக்கணும்!  கொடுத்த வாக்கை மீறமாட்டேன்னு  குருவின்  காதில்   ரகசியமா முணுமுணுத்துட்டுக் கெண்டியைக் கையில் எடுத்தான்.

குருவுக்குப் பொறுக்கலை. அடப்பாவி...கண்ணைத் திறந்துக்கிட்டே  நடுக்கடலில்  குதிக்கப் போறியா?   மாணவனுக்கு  வரும் துன்பத்தை தெரிஞ்சுக்கிட்ட ஆசான், அதைத் தடுக்காமல் இருந்தால் பெரும்பழியும் பாவமும் சுமக்கணுமேன்னு  சட்னு ஒரு வண்டு ரூபமெடுத்து  கெண்டியின் மூக்குக்குள் போய் உக்கார்ந்துக்கிட்டார்.

மாவேலி இடது கையால் கெண்டியைச் சரிக்கிறான். வலது கையில்  தண்ணி விழலை! வலது கையில் விழும் தண்ணீரைப்பிடிச்சு  தானம் பெறுபவரின்  வலக்கையில்  அதை  ஊற்றி, தந்தேன் என்று சொல்லணும். நோ தண்ணி நோ தானம்!

என்ன ஆச்சுன்னு  கெண்டியைத் தூக்கி மூக்குக்குள் ( கெண்டியின் மூக்கு கேட்டோ!) பார்த்தால்  என்னவோ அடைச்சிருக்கு.  லேசா ஒரு மினுக்கல். தானம் வாங்க வந்த வாமனன் சட்னு தன் இடுப்பில்  செருகிவச்சுருந்த தர்ப்பைக் கட்டில் இருந்து ஒரு புல்லை எடுத்து  மன்னர் கையில் கொடுக்க, அதைக் கையில்  வாங்கிய  மாவேலி  மூக்குக்குள்  போட்டுக் குத்திக் குடைஞ்சதும் ' ஐயோ  கண் போச்சே'ன்னு கத்திக்கிட்டு வெளியே விழுந்த வண்டு  மீண்டும் சுக்ராச்சாரியாரின் உருவமாச்சு.  கண்ணில் ரத்தம் வழிய நிக்கிறார் குலகுரு. கொடுப்பதைத் தடுத்தால் இப்படித்தான்  ஆகும்!

அடைப்பு போனதால் சரிச்சவுடன்  கெண்டியில் இருந்து  தண்ணீர்  பாய்ஞ்சது. 'தந்தேன்' என்றான்.

'இதோ காலடியால் அளக்கப்போறேன்'னு  சொன்ன விநாடியில் சிறுவனின் உருவம்  வளர ஆரம்பிச்சது.  மஹாவிஷ்ணு! த்ரிவிக்ரமன்!  பூவுலகின்  விட்டத்தின் அளவு இருந்தது பாதம்.   வலது பாதம் எடுத்து வச்சு  ஒரு அடியில்  பூமியை அளந்தாச்சு. இடது காலைத் தூக்கி மேலே கொண்டு போறார் . பூமிக்கு மேலே  இருக்கும் உலகங்களின் கட்டக்கடைசியான  சத்யலோகம் எட்டிப் பார்க்குது  பாதம்!  அங்கே இருக்கும் ப்ரம்மா , இதென்னடா 'ஒரு  கால் ' வருதேன்னு   பார்த்தால் அது விஷ்ணு பாதம்!  அங்கே ஓடிக்கொண்டிருக்கும் ஆகாச கங்கையைத் தன் கமண்டலத்தால் முகர்ந்தெடுத்து  கால் பெருவிரலில்  ஊற்றி பாதபூஜை செஞ்சு வணங்குகிறார். அந்தக் கால்விரல் வழியா வழிஞ்சு கீழே  வந்த தண்ணீர்  பூமியில் இப்ப கங்கை நதியா ஓடுது!

(கங்கை பூமிக்கு வந்த கதைகளில்  இது (வும்)ஒன்னு)

மூணாவது அடி எங்கே வைக்கன்னு கேட்டதும் பிரமிச்சு நின்ன மாவேலி  என் தலையில் வச்சுக்கோங்கன்னான்.  ஒரே அழுத்து......  பாதாளலோகத்துக்குப் போயிட்டார். இவரை ஏன் கொல்லலை?

அதுக்கொரு அருமையான காரணம் இருக்கு! நரசிம்ம அவதாரம் எடுத்து ஹ்ரண்யகசிபுவை வதம்  செய்தாரில்லையா? அதைப்பார்த்து ப்ரம்மிச்சு நின்ன ப்ரஹ்லாதனிடம், இனி  உன் வம்சத்தில் யாரையும் கொல்லமாட்டேன்னு  சொன்னாராம்.

நல்லவேளையா பாதாளத்துக்கு உயிருடன் போன மாவேலி,  வருசத்துக்கு ஒருமுறை  என் நாட்டு மக்களை வந்து பார்த்துப்போக  அனுக்ரஹிக்கணும் என்று பெருமாளை வேண்ட , ஆகட்டும் என்று அருளினார். இல்லைன்னா நமக்கு வருசாவருசம் ஓணசத்யா ஏது,கேட்டோ!

பாருங்க  சொல்ல வேண்டியதை விட்டுட்டு எங்கியோ போயிட்டேன்:-)

இடது காலைத்  தூக்கி வானமளக்கும்  நிலையில்   இங்கே இந்தக்கோவிலில் ஸேவை சாதிக்கிறார்  உலகளந்த பெருமாள். இடுப்பு வஸ்த்திரம்  விசிறி மடிப்பு மடிப்பாய்  உசரத்தூக்கிய காலில்  பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும். நாப்பது வருசத்துக்கு முன்னே தோழியுடன் வந்தப்பப் பார்த்திருக்கேன். என்னமோ அப்போதான் சிலை பராமரிப்பு என்னவோ நடந்து முடிஞ்சு மின்னலா இருந்துச்சு.

அதன்பிறகு  சில சமயம் போனபோதும்  மின்னல் கிடைக்கவே இல்லை. ஜஸ்ட் மடிப்பு .அம்புட்டுதான்  ஆனால் இப்போ இன்னிக்குப்போனது மார்கழி என்பதால் இவரும் திரைக்குப்பின். ஆனால் ஆஜானுபாகுவான உயரமென்பதால் தலை மட்டும் வெளியே தெரிஞ்சது நம் பாக்கியம்!
 த்ரிவிக்ரம கோலத்தில்  நின்ற நிலையை நமக்கும் சாம்பிள்  காண்பிக்கலாமுன்னு! முப்பதடி உசரம் என்றால் சும்மாவா?

தாயார் ஆரணவல்லிக்குத் தனிச் சந்நிதி. நல்ல அருள் பொங்கும் முகம். கழுத்தில் போட்டுருந்த பதக்கத்தின்  ஜொலிப்பு இன்னும் என் கண்ணிலேயே இருக்கு:-)

  உலகளந்தானை தரிசிக்க நாம்  அவர் எதிரில்  நிற்கும்போது  நமக்கிடப்புறம்  சின்ன மாடத்துக்குள் திரு  ஊரகத்தான்  சந்நிதி இருக்கு.  ஊர்ந்துவருவது எது?  தலைகள்  தூக்கிப் படமெடுத்து நிற்கும் கோலம். கொஞ்சம்  உள்ளே தள்ளித் தெரிவதால்  குனிஞ்சும் கூர்ந்தும் பார்த்து ஸேவிச்சுக்கணும்.


இதே கோவிலின் வளாகத்திலேயே மத்த மூணு திவ்ய தேசங்களும்  அமைஞ்சுருக்கு. பிரகாரம் சுற்றி வரும்போது  முதலில்  திரு நீரகம் என்ற நீரகத்தான் சந்நிதி இருக்கு.  நின்ற கோலத்தில் ஸேவை.  கம்பிக் கதவு வழியாகப்பார்த்து வணங்கினோம்.

இன்னும் அடுத்த பகுதியில் நம் வலம் தொடரும்போது  திருக்காரகத்துப் பெருமாள் (திருக்காரகம்)  ஆதிசேஷன் மேல்   அமர்ந்த கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். இங்கேயும் க்ரில் கேட்டுக்குப்பின் இருக்கார்.  .  அஞ்சாறு படிகளேறி சின்னதா இருக்கும் மண்டபத்துக்குள்ளே சின்ன சந்நிதிதான். அரையிருட்டில் கவனமாப் பார்த்து ஸேவிச்சுக்கணும். சந்நிதிக்கு நேரா ப்ரகார ஓரம், சேஷவாகனம்  ஒன்னு இருக்கு.

நாலாவதா திரு கார்வானப்பெருமாள். இவருக்கும் இதே போல ஒரு சந்நிதிதான். குறைஞ்ச பவர் உள்ள மின்விளக்கு தொங்கினாலும் கூட,  வெளிமுற்றத்தின் வெளிச்சம்  உள்ளே வர்றதால்   தரிசனம் கொடுப்பதைக் கொஞ்சம் கஷ்டப்படாமல்கம்பி க்ரில் வழியாப்  பார்க்கலாம்.


தனித்தனிக் கோவில்களா பாடல் பெற்றிருந்தாலும்  இவர்கள் இருப்பதெல்லாம் தனித்தனிச் சந்நிதிகளே! ஏன், எப்படி, இப்படி ஒரே கோவில் வளாகத்துக்குள்ளே  வந்தாங்கன்னு தெரியலை.  நமக்கென்ன.......  நோகாமல்   நாலு திவ்ய தேசங்களையும் , வாமனரில் இருந்து த்ரிவிக்ரமனான  ஒரு  அவதாரத்தையும்  தரிசிக்கக் கசக்குதா என்ன?

இத்தனை திவ்யதேசங்கள்  ஒரே  இடத்தில் இருப்பதே தனிச்சிறப்பாக இருக்கு! வெவ்வேறு பெயர்களில் பெருமாளும் தாயாருமா ...........   நாம் குழம்பிக்காமல் இருக்க  கோவிலிலே எது எது எப்படின்ற சந்நிதி விபரங்கள் சுவரில் போட்டு வச்சுருக்கும்  கோவில் நிர்வாகத்துக்கு   பாராட்டுகளும் நன்றியும்.  எனி ப்ராப்ளம்? நோ ப்ராப்ளம். ப்ராப்ளம் ஸால்வ்டு:-))))

 தினமும் காலை ஏழு மணி முதல் பகல் பனிரெண்டு வரையும், பிறகு மாலை  நாலு முதல் எட்டுவரையும் திறந்திருக்கும்.  அப்போ பட்டரைக் கேட்டுக்கொண்டால்  மற்ற திவ்ய தேசங்களைத் திறந்து காட்டுவார்கள் போல!  எனக்கு அப்போ தோணலையே:(

 கோவில் குளம் .  ஒரு குடம் தண்ணி இருந்தால் அதிகம்!  ஆனால்  சுத்தமா இருக்கு  என்பதையும் சொல்லத்தான் வேணும்.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர்  இந்தக்கோவிலில்  அர்ச்சகரா இருந்துருக்காராம்.!சொல்ல மறந்துட்டேனே.......  கோபுரவாசலுக்குள் நுழைஞ்சதும்  இடதுபக்கம் இருக்கும் பெரிய மண்டபத்தில்  (மணவாள மாமுனிகள் சந்நிதி இருக்கு பாருங்க, அங்கே)  பெருமாளுக்கு புது வாகனங்கள்  செதுக்கும் திருப்பணி நடக்குது.  கருட வாஹனமும், நரசிம்மரை ஏந்திய கருடருமா எல்லாம்  ரொம்ப அழகு!   இன்னும் பலவிதமான கோவில் சமாச்சாரங்கள் செதுக்கிக்கிட்டு இருக்காங்க.

ஆறுமாசமாச்சாம். இன்னும்  ஏழெட்டு மாச வேலை இருக்காம்!  பாராட்டுதல்களைச் சொன்னப்ப அவர்கள் முகத்தில் கோடி மலர்கள் !  நல்லா இருக்கட்டும். காலம் போற போக்கில் இந்தக் கலைகளைப் பயில,  வரும் தலைமுறையில்  ஆள் இருக்குமான்ற   கவலைதான் நமக்கு.தொடரும்............:-)


PINகுறிப்பு:  இந்தப்பதிவு கொஞ்சம் நீண்டுதான் போச்சு. எங்கே வெட்டன்னு  புரியாமல்.........  ஒரே வளாகம் ஒரே கோவில் என்பதால்  நான்கு திவ்ய தேசங்களையும் பிரிக்காமல் ஒன்னாவே போட்டுருக்கேன் . (திவ்ய )தேசங்களே  பிரியாம ஒத்துமையா இருக்கும்போது நமக்கெதுக்குப் பொல்லாப்பு,கேட்டோ:-)17 comments:

said...

இந்த வாமனன் உலகளந்த கதைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை, ஆனால் காஞ்சியின் கோவில்களின் ஒவ்வொரு மூலையையும் சுற்றி உள்ளேன், அதன் கட்டட கலை நுட்பமும், எழிலும், அழகும் உள்ளம் கொள்ளையடிப்பவை. இயற்கை அழகு நிரம்பிய இத்தகைய பகுதிகளை மேன்மேலும் சுத்தமாகவும், அழகாகவும், பராமறித்தால் யாத்திரிகர்களுக்கு வசதிப்படும். படங்களும், சங்கதியும் அருமை. :)

said...

வாமன அவதாரம் கதை உங்கள் பாணியில் அசத்தல்...

படங்கள் அட்டகாசம் அம்மா... நன்றி...

said...

பலவருடங்களுக்கு முன்பு பார்த்த திவயதேசங்களை இன்று உங்கள் பதிவின் மூலம் மறுபடி தரிசனம் செய்து விட்டேன்.
இரண்டு நாட்கள் அங்கு தங்கி கோவில்களை தரிசனம் செய்தோம்.
கதை அழகாய் சொல்கிறீர்கள்.

said...

வாங்க இக்பால் செல்வன்.

ரொம்ப நாளாச்சே பார்த்து! நலமா?

கட்டிடக்கலையின் அழகும் சிலைகளின் எழிலும் புரிஞ்சு போச்சுன்னா அருமையேதான். அதைவிட வேறு பேறு உண்டோ!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிச்சு வாசிச்சதுக்கு நன்றீஸ்.

said...

வாங்க கோமதி அரசு.

தள்ளுகூடாமல் தரிசனம் கிடைச்சதுதானே:-))))

இன்னும் ரெண்டு நாள் தங்கினால் இன்னும் விட்டுப்போனவைகளையும் தரிசிக்கலாம்.

இந்த முறை ஒரு நாளாவது தங்கமுடிஞ்சதே என்பது எனக்கு மகிழ்ச்சிதான்.

said...

வாமனன் கதை உங்கள் பாணியில் அழகாக சொல்லி இருக்கீங்க !! எல்லா படங்களும் அருமை . கூடிய சீக்கிரம் உலகளந்தானை மட்டுமாவது பாத்துட்டு வரணும் !!

said...

அருமையாக தரிசனம் செய்து வைத்தமைக்கு நன்றி.....

பல சிற்பங்களையும் கோவில்களையும் தொடர்ந்து இழந்து வருகிறோம். இருக்கும் கோவில்களையாவது பராமரித்தால் நல்லது!

said...

நான்கு திவ்ய தேசங்களையும் தர்சிக்கும் பாக்கியம் எமக்கும் கிடைத்ததில் மகிழ்ச்சி.

said...

ஆழ்வார்களால் பாடப்பெற்ற கோவிலகளுக்கு மட்டுமே திவ்யா தேசங்கள் என்று பெயர். குருவாயூர் திவ்ய தேசம் கிடையாது. எனவே திவ்ய தேசங்களைப்பற்றி எழுதும்போது எந்த ஆழ்வாரால் பாடப்பெற்றது எனக்குறிப்பிட்டு அப்பாடலையும் போடுவது வழக்கம். வைணவர்களில் வலைபதிவுகளில் இதைக் காணலாம்.

said...

உங்களந்த பெருமாள்தான் உலகத்தோருக்கும் படி அளக்கிறார். இல்லையா?

said...

வாங்க சசி கலா.

அப்படியே பாண்டவதூதனையும் தரிசனம் செஞ்சுட்டு வாங்க.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நம்ம மக்கள்ஸ்க்கு பழமையின் அருமை தெரியலையேன்னுதான் எனக்கு மனக்கவலை:(

said...

வாங்க மாதேவி.

ஸ்பீடு தரிசனம்தான் அமைஞ்சது கேட்டோ!

said...

வாங்க மலரன்பன்.

முதல் வருகைக்கு நன்றி.

உங்க யோசனை நல்லதே!

ஏற்கெனவே துளசிதளம் பதிவுகள் அனுமார் வால் போல. இதில் ஆழ்வார்கள் பாடலையும் சேர்த்தால்....

நம்ம வாசகர்களுக்கும் ஒரு ஹோம் ஒர்க் வேணாமா?

தேடிக் கண்டடைவார்கள் என்று அதீத நம்பிக்கை எனக்குண்டு.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அவன் அளகாட்டா, நாம் எங்கே?

said...

உலகளந்த பெருமாளை இங்கே சேவிச்சுட்டீங்களா, அப்பாடி, நேரம் இல்லைன்னு விட்டுவிட்டீர்களோ என்று கவலைப் பட்டேன்!