Wednesday, March 19, 2014

மாமரத்தடியில் பசுமாடு.


சிறுவன் , தேர்வுக்கு  மும்முரமா   படிச்சுக்கிட்டு இருக்கான். வாத்தியார்  சொல்லி இருக்கார், கட்டுரை ஒன்னு  ஒரு பக்கத்துக்குக் குறையாம எழுதச் சொல்லிக் கேப்பாங்கன்னு. வீட்டுவாசலில் இருக்கும் மாமரத்தடிதான்  அவனுக்குப் பாடம் படிக்கும் இடம். விளையாட்டும் அங்கேதான்.

பரிட்சை எழுதப்போனான். கட்டுரைக் கேள்வியும்   வாத்தியார் சொன்னது போலவே ' ஒரு பக்கத்திற்கு மிகாமல்  வரைக'ன்னு  வந்துருக்கு. ஆனால்.... எதைப்பற்றி? பசு மாட்டைப் பற்றி!

ரெண்டு நிமிசம் யோசித்தவன்,  பரபரன்னு  அவனுக்குத்தெரிஞ்ச மாமரத்தைப் பத்தியே  கட்டுரையை  ஒரு முழுப்பக்கத்துக்கு எழுதினான்.  கடைசி வரியில், 'இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாமரத்தில்  பசுவைக் கட்டிப்போட்டேன்' என்று முடித்தான்.

காமாக்ஷி கோவிலில் இருந்து கிளம்பி  ஏகாம்பரநாதர் கோவிலுக்குப் போறோம். தூரம்  ஒரு கிலோமீட்டருக்கும் குறைவுதான்.  காஞ்சியிலேயே பெரிய கோவில் இது. இருபத்தி அஞ்சு ஏக்கர் பரப்பில் அமைஞ்சுருக்கு. நம்ம வரதரின் இடத்தை விட ஒரு ஏக்கர் கூடுதல் இங்கே:-) ஒன்பது நிலையுடன்  ராஜகோபுரம் அம்பத்தியொன்பது மீட்டர் உசரம். தென்னிந்தியாவில் ரெண்டாவது  உசரமான கோபுரமுன்னு சொல்றாங்க. முதலிடம் நம்ம ஸ்ரீரங்கத்துக்கு. எழுபத்தியோரு மீட்டர்!

ராஜகோபுர ஆறுமுகர் என்று முருகனுக்கு ஒரு ஸ்பெஷல் சந்நிதி கோபுரவாசலுக்கு வெளியே!

கோபுரவாசலைக் கடந்து உள்ளே போனதும்  என்னமோ கோட்டைக்குள்ளே போனாப்போல அங்கொரு பெரிய இடம். வெளிப்ரகாரம்!  இன்னொரு  வாசல்வழியா வந்திருந்தாலுள்ளேயே காரைக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கலாம்.



கோபுரத்தின் கீழிருக்கும் மண்டபத்தில் உள்ளே நாம் என்ன பார்க்கப்போறோமுன்னு  படம் வச்சு விளக்கி இருக்காங்க.

மணல்வெளியில் நடந்து இன்னொரு சின்ன மதிலைக் கடக்கணும்.  இப்போ புதுசா கேட் போட்டு வச்சுருக்காங்க. 

கெமெராவுக்குக் கட்டணம் ரூ இருபதுன்னு  பால் வார்த்த தகவல் பலகை!  படம் எடுக்கப் பிரச்சனையே இல்லை. பூஜைப்பொருட்கள் விற்கும்  கடைகளும் பிள்ளைகளுக்கான விளையாட்டுச்சாமான்கள் விற்கும் சில கடைகளும்  இருக்கு. பசங்களைக் கோவிலுக்குக் கூட்டி வந்தால் எதாவது  பொம்மை,பந்து இப்படி வாங்கிக்கொடுக்கணும் என்பது எழுதப்படாத விதி:-) அப்பதான் நம்மை நிம்மதியா சாமி கும்பிட விடுவாங்க அவுங்க!


அன்பே சிவம்! ரொம்பச் சரி!

கோவில் முன்மண்டபம் ரொம்பவே நீளமா இருக்கு.
ஏகம்பதுறை எந்தாய் போற்றி! பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி!



மண்டபத்தின் நடுவில் நுழைஞ்சு இடப்பக்கம் போறோம்.  மண்டபத்தூண்களில் எல்லாம் சிற்பங்களோ சிற்பங்கள்!  பலிபீடம் கொடிமரம்,நந்தியுடன் மூலவரை நோக்கிய வண்ணம் கைகூப்பி நிற்கும் கரிகால சோழரின் சிலை.

நாமும் கூப்பிய கரங்களுடன் ( கேமெராவைப் பைக்குள் வச்சுக்கிட்டு) மூலவரை தரிசிக்கப் போறோம்.

சிவன் லிங்க ரூபத்தில் ஸேவை சாதிக்கிறார். மணலால் செய்த லிங்கம்.  கைலாயத்தில் ஒரு சமயம் பார்வதி,  சிவனின்  கண்களை விளையாட்டாகத் தன்  கைகளால்  மூடிட்டாள்.  ஈரேழு உலகமும்  அப்படியே அசைவில்லாமல் நின்னுபோச்சு.சூரியனும் சந்திரனும் கூட திகைச்சு ஒளி இழந்து நின்னதும் எங்கும் மையிருட்டு!  சட்னு தன் மூன்றாம் கண்ணைத் திறந்து ஒளி காண்பித்தார் சிவனார்.

தவறை உணர்ந்த பார்வதி,  மன்னிப்பு வேண்டி தவம் செய்ய பூலோகம் வருகிறாள்.வந்து நின்ன இடம்  காஞ்சி.   அங்கே கம்பை ஆற்றங்கரையில்  ஒரு மாமரத்தடியில் அமர்ந்து,  கீழே இருக்கும் மணலைக் குவித்து  லிங்கம் நிறுவி அதனை பூஜித்து வர்றாள். அவளை மேலும் பரிசோதிக்க  சிவன், தன் தலையில் இருக்கும் கங்கையை கம்பை ஆற்றில்பெருக்கெடுத்து வரச் செய்ததும் வெள்ளம் பெருகிவந்து மணலால் ஆன  சிவலிங்கத்தை  மூழ்கடித்துக் கரைத்துப்போகும் சமயம், லிங்கத்தைக் காப்பாற்ற தன் கைகளால்  தழுவிக் கொள்கிறாள் அம்பாள்.  உடனே அங்கிருக்கும் மாமரத்தில் பரமசிவன் தோன்றி, பார்வதிக்கு அருள்செய்து  மணமுடித்துக் கூடவே  கயிலைக்குக் கொண்டு போயிட்டார்  என்கிறது புராணம்.

அம்மையின் விரல் தடங்கள்  மூலவர் மேனியில் பதிஞ்சு  இருப்பதாகச் சொல்றாங்க. மணல் லிங்கம் என்பதால் அபிஷேகம் இல்லைன்னு நினைக்கிறேன்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்  என்ற சமயக்குரவர் (நாயன்மார்) நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது.

அஞ்சு ப்ரகாரம் உள்ள கோவில் இது.    ராமேஸ்வரம் கோவிலில் இருக்கமோன்னு நினைக்க வைக்கும்  நீண்ட   திண்ணைகளோடும்  உட்ப்ரகாரங்கள்.  எங்கே பார்வையைத் திருப்பினாலும் லிங்க வரிசைகள். சந்நிதிகள்,  சாமிக்கான வாகனங்கள்!  ஆயிரத்தெட்டு லிங்கங்களாம்.  எதைச் சொல்ல எதை விட?






இங்கே தலவிருட்சம். மாமரம். இது மூவாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது! இந்த மரத்தில்தான் ஈசன் தோன்றினாரென்பதால்  முற்றத்தில்  மாவடிக்கு தனிச்சந்நிதி அமைச்சுருக்காங்க.நாலே கிளைகள். நான்கு வேதங்களைக் குறிக்குமாம். இதில் கிடைக்கும் மாம்பழம், கிளைக்கு ஒரு சுவையாக இருக்குமாம்.  இதன் கனியைப் புசித்தால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்று ஒரு நம்பிக்கை.

ஸ்வாமியின் பெயர் கூட இந்த மரத்தின் சம்பந்தமானதே. ஏக ஆம்ப்ரம்  நாதன். ஒரு மாமரத்தில் தோன்றிய ஈசன்.  ஏகாம்பரநாதர்
அம்பாளின் பெயர் ஏலவார்குழலி!  ஹைய்யோ!  என்ன ஒரு அழகான பெயர்!

எனெக்கென்னவோ சிவன் கோவில்களின் அம்பாளின் பெயர்கள்  ரொம்பவே  கவித்துவமா இருக்குன்னு எப்பவும் ஒரு எண்ணம் தோணும். இப்பவும் அதே! 

சரியா இருபது  வருசத்துக்கு முன் நெருங்கிய உறவினர்களுடன்  நானும் மகளுமா இந்தக்கோவிலுக்குப் போனோம்.  அப்போ ஒரு  குருக்கள் போல இருந்தவர்,  தன் மடியில் கட்டிவச்சுருந்த மாம்பழத்தை ரகசியமா  எடுத்து எங்களிடம்  காமிச்சு, புத்திரபாக்கிய சமாச்சாரம் சொன்னார்.  எங்களுடன் வந்திருந்த உறவுக்காரரின் மருமகளுக்குக் குழந்தை  இல்லை.  கல்யாணம் முடிஞ்சு  எட்டு வருசம் ஆகி இருந்துச்சு அப்போ.  ஏகப்பட்ட மருத்துவ சோதனைகள் எல்லாம் செஞ்சு பார்த்துட்டு   சோர்ந்திருந்த  சமயம். கணவன் மனைவி இருவருக்கும் எந்தக் குறைபாடுகளும் இல்லை!  எளிதில் கிடைக்காத, அரியது என்பதாலும்  அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கட்டும் என்ற ஆசையாலும்  நூறு ரூபாய் கொடுத்து  பழத்தை வாங்கி வீட்டுக்குக் கொண்டுபோய் பூஜையில் வச்சு பிறகு பழத்தைச் சாப்பிடவச்சோம்.

குழந்தை?

கடையில் வாங்கி வந்து மடியில் கட்டிவச்சு என்னமா ஏமாத்தி இருக்காருன்னு  இப்பவும் நினைச்சுக்கத்தான் செய்யறேன்:(

நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம்  என்னும் பஞ்சபூத தலங்களில்  இந்தக்கோவில்  நிலத்துக்கானது. (நீர்= திருவானைக்காவல். நெருப்பு= திருவண்ணாமலை.  வாயு = காளஹஸ்தி.  ஆகாயம் = சிதம்பரம்)

கோவில் குளம் நல்லாவே இருக்கு! பெரிய சைஸ்  மீன்கள்  நீந்திக் களிக்கும்  அழகை ரசிக்கலாம். நீர்மூழ்கிக் கப்பலின் மினியேச்சர்:-)

கருவறையைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு ப்ரகாரங்களிலும்  புகுந்து வலம் வர்றோம். அங்கங்கே வெவ்வேற  தேவர்களுக்கு சந்நிதிகள்.

 நவகிரக  சந்நிதியைச் சுத்தி வந்து கும்பிடு போட்ட  கையோடு கடைசியா கோவிலுக்கு வெளியே வரும்  பிரகாரத்தில்  ஒரு சின்ன சந்நிதியில் இருக்கார் நிலாத்திங்கள் துண்டர்.  நாம் தேடி வந்தது இவரைத்தான்.  நூத்தியெட்டு திவ்யதேசங்களில்  இந்தச் சந்நிதிக்கோவிலும் ஒன்னு!
அண்ணனும் தங்கையும்!

எப்பவோ ஒரு காலத்தில் காஞ்சி போனபோது , ஏகாம்பரேஸ்வரரை தரிசனம் செஞ்சு, கோவில் ப்ரகாரங்களைச் சுத்தி வரும்போது   சுவரிலிருந்த ஒரு மாடத்தின்  அருகில் நின்ன ஒருத்தர் விஷ்ணுசகஸ்ரநாமம் முணுமுணுத்துக்கிட்டு இருந்தார்.  என்னடா இது சிவன் கோவிலில் என்று உத்துப் பார்த்தேன்.சுவரில் விஷ்ணு.  அட! பெருமாள்,   மச்சான் வீட்டுக்கு வந்துருக்கார் என்ற நினைப்போடு  கும்பிட்ட கையோடு வெளியே வந்துட்டேன். அப்போ இது திவ்யதேசத்தில் ஒன்னு என்று தெரியாது. விவரம் பத்தலை:(

திவ்யதேசப் பித்து பிடிச்சதும், தகவல்களைச் சேகரிச்சு வாசிச்சபோதுதான்  ஆழ்வார் பாடிய நிலாதிங்கள் துண்டத்தான்  இருப்பது இங்கேன்னு  தெரிஞ்சது.

இப்போ  தனிச்சந்நிதியா அமைச்சுருக்காங்க.  சின்னதுதான். வெளியே ஜயவிஜயன்கள்  த்வாரபாலகரா இருக்காங்க.

திருப்பாற்கடலைக் கடைந்த சமயம்  வேலை மும்முரத்தால்  பலகீனமாகிப் போனார் விஷ்ணு. உடலின் சூடு அதிகரிச்சது.( கூர்மமா மந்தரமலையை முதுகில் தாங்கினால் க்ஷீணம் வராதா? சூட்டைக் குறைக்க  சிவனின் தலையில் இருக்கும் பிறைநிலாவில் (நிலவின் துண்டு!)  இருந்து வரும் குளிர்ச்சியைத் தன்னுடலில் வாங்கி களைப்பைப் போக்கிக்கொண்டார். அதனால் இவருக்கு  நிலாத் திங்கள் துண்டத்தானென்ற பெயர் லபிச்சது.

பார்வதி, மாமரத்தடியில்  மணல் லிங்கத்தை  நிறுவி தவம் செய்தப்ப, ஈசன் அவரை சோதிக்க மாமரத்தை எரித்ததாகவும், அப்போ ஏற்பட்ட வெப்பத்தில் இருந்து தங்கையைக் காப்பாற்ற சந்திரன் போல் குளிர்ச்சியா பெருமாள்  இங்கே தோன்றியதால்  நிலாத்திங்கள் துண்டத்தான் என்றபெயர் ஏற்பட்டதாகவும் ஒரு புராணக்கதை நிலவுகிறது.

எது எப்படியோ...... சைவ வைணவ ஒற்றுமைக்கு  இந்தக்கோவில் ஒரு எடுத்துக்காட்டு என்பதே முக்கியம்.

நாம் காஞ்சிக்கு இந்தமுறை 'காஞ்சியின் பதினைஞ்சு  திவ்யதேசம்' (திருப்புட்குழி உட்பட) தரிசிக்கத்தான் வந்தோம். வந்ததன் நோக்கம்  முழுசும் நிறைவேறியது  நிலாத்திங்கள் துண்டரின் சந்நிதியில்.

ஆஹா.........   இதுதானா,  அந்த மாமரத்தில் கட்டப்பட்ட பசு!

கொடிமரம், பலிபீடத்தையொட்டி இருக்கும் ப்ரஸாதக் கடையில் நாலு  லட்டுகள் உள்ள  பேக் வாங்கி  நம்ம சீனுவோடு பகிந்து கொண்டோம். பொதுவா வாங்கமாட்டேன்......  ஆனால் இது வா வா ன்னு கூப்பிட்டதே:-)

மனநிறைவோடு  வெளியே வந்து  ஆளுக்கொரு இளநீர் குடிச்சுட்டுக் கிளம்பினோம். மணி பதினொன்னறைதான் ஆச்சு. ஒரு மணிக்கு நாம் ஜி ஆர் டியில் செக்கவுட்  செஞ்சுக்கணும். கணக்குப்படி ஒன்னரை மணி நேரம் இன்னும் இருக்கு!  இனி கிடைப்பதெல்லாம்  போனஸ்:-)

தொடரும்........:-)


10 comments:

said...

உறவுக்காரரின் நிலை சந்தோசமாக மாறட்டும்...

முதல் கதையே புரிந்து விட்டது...

சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா... படங்கள் அனைத்தும் அற்புதம்...

நன்றி... வாழ்த்துக்கள்...

said...

கதை, படங்கள், என்று பகிர்வு மிக அருமை.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

சம்பவம் நடந்தது 20 வருசத்துக்கு முன்.

இப்ப அவுங்களுக்கு ட்டூ லேட்:(

ரசனைக்கு நன்றி.

said...

வாங்க கோமதி அரசு.

ரசித்துச் சொன்ன அருமை!

இனிய நன்றி.

said...

மாமரத்தில் கட்டப் பட்ட பசு யார்.பார்வதியா. மாம்பழக்கதை போல இன்னும் எத்தனையோ. ஏன் என்று தெரியாமலே ஏமாறுகிறோம் துளசி. படங்கள் விஸ்தாரமாக அருமையாக இருக்கின்றன. கூர்மாவதாரத்தின் விஷ்ணுவைக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி. ஏகாம்பரம் எனும் சொல்லில் மஹா ஈர்ப்பு.எளிமையான சிவனார்.அழகான பார்வதி.

said...

மீண்டும் உங்கள் பயணத்தில் ஏகாம்பநாதர் தர்சனம்கிடைத்தது. நன்றி.

said...

அற்புத தரிசனம் கிடைத்தது . படங்கள் அருமை . நேரில் சென்றதுபோல் இருந்தது நன்றி !!!

எதை தின்னா பித்தம் தெளியும்னு இருக்கும் பக்த்தர்களின் பலவீனத்தை பணமாக்க நினைக்கும் செயலும் பாவச்செயல் தான் . எவ்வளவு
ஏமாந்திருப்பார்கள் அந்த தம்பதியர் :(

said...

மாம்பழம்.. தொழில் ரகசியமா இருக்கும் போலிருக்குதே.

சிவன் கோவில் அம்பாள் பெயர்களை ரிசர்ச் செய்ய வேண்டியதுதான்..

said...

இந்த சிவன் விஷ்ணு பாகுபாடு தென் இந்தியாவில் தான் அதிகம். இங்கே உள்ள கோவில்களில் பொதுவாகவே எல்லா கடவுளுக்கும் இடமுண்டு... ஒரு புறம் ராதா கிருஷ்ணர் இருக்க, மறுபக்கம் சிவன் தனது பரிவாரத்துடன் [ஷிவ் பரிவார்!] இருப்பார்....

சிறப்பான படங்கள் - அருமையான குறிப்புகள் என வழமை போல சிறப்பான பகிர்வு.

said...

தாயார் பெயர்கள் எல்லாமே அழகுதான்! எத்தனை பெரிய கோவில், பிரகாரங்கள், சுத்தமான குளம் என்று எல்லாமே மனத்தைக் கவருகின்றன.