Monday, March 03, 2014

பச்சைமணி பவழமணி பார்க்கலையோ சாமி!!!

காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனைக் கடந்து    மூணாவது  நிமிசம் பச்சைவண்ணப்பெருமாள் கோவில் கண்ணில் பட்டது.  கோவில் வாசல் மூடிக்கிடக்கேன்னு  அங்கிருந்து வெறும்முன்னூறு மீட்டர் தூரத்தில் இருக்கும்  பவளவண்ணர் கோவிலுக்குப்போனோம். கோவில் முகப்பில்  ஸ்ரீப்ரவாளவர்ணசாமி என்றே எழுதி இருக்காங்க.

ஈரேழு உலகத்துக்கும் முதல் சோஃபா கம் பெட்  வச்சுருக்கறவர் நம்ம பெருமாளைத் தவிர வேறயார்?

இங்கேயும் நல்ல  சேஷ சோஃபாவில் அமர்ந்த திருக்கோலம். சிவந்த திருமேனி என்பதால் பவழவண்ணர் என்று பெயர்.  எல்லாம் அந்த ப்ரம்மா  சரஸ்வதி  எபிஸோடுதான் காரணம்.  ப்ரம்மாவின் யாகத்தைக் கெடுக்க சரஸ்வதி அனுப்பி வைத்த அசுரர்களோடு  யுத்தம் செய்து அவர்களைப் போட்டுத் தள்ளினார் நம்ம விஷ்ணு.  அப்போது  அசுரர்களின் ரத்தத்துளிகள் இவர் மேனியில் தெறித்து விழுந்து  இவரே  சிகப்பாகிவிட்டார். அதான் இவர் பவழவண்ணர் ஆன கதை.

சண்டை போட்டக் களைப்பு தீர விஸ்ராந்தியாக உக்கார்ந்துக்கிட்டு இருக்கார் இங்கே!

கோவில் விமானம் ப்ரவாளவிமானம் என்பதால் பெருமாளுக்கு ப்ரவாளவண்ணரென்ற பெயரும் வந்திருக்கலாம்.

தாயார்  பவழவல்லி என்ற பெயருடன்  இருக்கார்.

காலை  எட்டு முதல் பதினொன்னு வரை, மாலை  நாலு முதல் ஏழரை மணி வரை கோவில் திறந்திருக்கும்.

பாடல்பெற்ற ஸ்தலம் இது.  அதான் அந்த நூற்றியெட்டில் ஒன்னு. கொஞ்சம் நல்லமுறையில் பராமரிக்கக்கூடாதோ?

அஞ்சு நிலை ராஜகோபுரத்துக்குக் கொஞ்சம்  வர்ணம்தீட்டினால் நல்லா இருக்கும்.

ஆமாம்....பவழம், பவளம் இதில் எது சரி? ஙே!

கொஞ்சம் மனவருத்தமுடன் பச்சைவண்ணரைப் பார்க்கப் போனோம்.


கோவில்வாசல் திறந்துருக்கு. பெரிய கமலா தெருவாம்.  கடைகண்ணிகளின் வரிசையில் கோவில் வாசலும் ஒன்னு!


பவழத்தைப் பார்க்க வரும் சனம் பச்சையையும் கையோடு பார்த்துப்போவது  வழக்கம். ரெண்டு பேரையும் ஒரே நாளில் தொடர்ந்து தரிசித்தால்  புண்ணியம் அதிகம். (அதான் பதிவிலும் ரெண்டையுமே சேர்த்துப்போட்டுருக்கேன்.  சுலபமாக் கிடைக்கும் புண்ணியத்தை விடலாமா சொல்லுங்க?)

பவழவண்ணரைப் பாடிய ஆழ்வார் ஏன் பச்சைவண்ணரைப் பாடலைன்னு ஒரு சந்தேகம் வருது எனக்கு. இந்தக் கோவிலின் வயசு  ஐநூறு என்று சொல்வதில் இருந்து ஏதோ புரிஞ்சமாதிரி இருக்கு.  ஆழ்வார்  பவழத்தை  ஸேவிக்க வந்தபோது பச்சை இங்கே இல்லை,  அதாவது பச்சைக்கு இங்கே கோவிலெழுப்பவில்லை என்று  பிறாண்டும் மனசுக்குப் பதில் சொல்லி வச்சேன்.

ஐநூறோ ஆயிரமோ ரெண்டுமே ஒரே மாதிரி கவனிப்பில்  கிடக்கு.  சீக்கிரம் சீரமைத்தால் நல்லது.கோபுரங்கள் எல்லாம் கருப்பு பிடிச்சுக்கிடக்கே:(

கோவில் உள்ளே நுழைஞ்சதும்  பலிபீடம், கொடிமரம் பெரிய திருவடியின் சந்நிதி தரிசனம் ஆச்சு.  கருவறை மண்டபத்தில்  உள்ளே மூலவர் எப்படி இருக்கார் என்ற விபரமும் கிடைச்சது,  கண்ணைக்கொஞ்சம் அகல விரித்தபடி வாங்கன்னு பக்தர்களை அழைக்கும் முகபாவம்.

மரீஷி முனிவருக்கு ராமனாகத் தோன்றி அருள் பாலித்த இடமாம்.  மூலவர் சந்நிதியில்   மரீஷிக்கும்  இடமுண்டு. பச்சைக்கலர் எனக்குச் சரியாத் தெரியலை. ஆனால்.... பச்சைதான்னு கோபால் சொன்னார்.

தாயார் பெயர் மரகதவல்லி.  கணவருக்கும் மனைவிக்கும்  வண்ணப்பொருத்தம் அபாரம்!  சந்நிதியைக் க்ளிக்கினால்   ஒரு சிறு பெண்  வாசலில் நிற்பது தெரிஞ்சது.  ஒருவேளை நம்ம தாயாரே சிறுமி வடிவில்  நமக்காகக் காத்திருக்காங்களோ!

ப்ரகாரம் சுற்றி வந்தபோது, நிறைய மரங்களுடன்  குளுமையாக  இருந்துச்சு.

அடடா.......   ஒரு  இளநீர் வீணாப்போச்சே!

கோவில் கொடிமரத்துக்கருகில்  ஒரு தம்பதிகளைச் சந்திச்சோம்.  ஐயா, மேல்க்கோட்டைப் பெருமாள் கோவில் பட்டர்!  அம்மாவின் சொந்த ஊர் காஞ்சிபுரம் என்பதால்  விஸிட்டுக்கு வந்துருக்காங்களாம்.அவுங்ககிட்டே பாண்டவதூதர் கோவில் எங்கே இருக்குன்னு விசாரிச்சார் கோபால்.

கங்கைமண்டபத்துக்குச் சமீபம் என்று சொல்லி, அவுங்க  வீடும் அங்கேதான். வாங்களேன்னு  அழைப்பும்  விட்டாங்க.  பின்னொருக்கில் ஆகட்டுமுன்னு  சொன்னோம்.  நாளைக்குக் காலையில் மேல்கோட்டைக்கு கிளம்பிருவாங்களாம்.  அங்கே கோவில் தரிசனத்துக்கு  வந்தீங்களான்னு  கேட்டார் பட்டர் ஐயா.

இன்னும் இல்லை ன்னு சொன்னோம். (இப்பப் பெருமாள் கூப்புட்டுட்டார்.  போகத்தான் வேணும்!)

கட்டாயம் வாங்கன்னு சொன்னார்.  இப்ப நம்முடன் பாண்டவதூதர் கோவிலாண்டை இறக்கி விடமுடியுமான்னு கேட்டதும் மகிழ்ச்சியோடு  அவுங்களோடு கிளம்பினோம்.

இந்த ரெண்டு கோவில்களையும்  வெறும் அரைமணியில் சுத்தி வந்தது  எனக்கு  போதலை கேட்டோ:(  என்ன  அவசர தரிசனமோ!

சொல்ல மறந்துட்டேனே....  கோவில் திறந்திருக்கும் நேரம் காலை எட்டு முதல்  பதினொன்னு வரை, மாலை நாலு முதல்  ஏழு வரை மட்டுமே.


தொடரும்.........:-)








18 comments:

said...

பவழம் பவளம் - இது சரி, இது தப்புன்னு பிரிச்சுப் பார்க்க முடியாத அளவுக்கு ஒண்ணாயாச்சு. அதனால ரெண்டுமே சரிதான்னு இருக்கோம். முன்ன மதில் மதிள் பத்தி இதையேதான் பேசினோம் ஞாபகம் இருக்கா. மங்கலம் மங்களம் இதுவும் இதே கேட்டகரிதான்.

http://www.tamilpaper.net/?p=1936

இதுக்கு இது போலி அதுக்கு அது போலி என போலிகளை சரி சரின்னு சேர்த்துக்காம இருந்தால் தமிழுக்கு நல்லது.

said...

உடனே பராமரிக்க வேண்டிய கோயில்...

said...

பராமரிக்கப்பட வேண்டிய கோவில்.

எங்களுக்கும் புண்ணியம் கிடைச்சிருச்சு.. இங்கே வந்ததினால்..

said...

உங்கள் புண்ணியத்தில் வண்ண வண்ண பெருமாள் தரிசனம் கிடைத்தது நன்றி .

//இந்த ரெண்டு கோவில்களையும் வெறும் அரைமணியில் சுத்தி வந்தது எனக்கு போதலை கேட்டோ:( என்ன அவசர தரிசனமோ!//

அவசர தரிசனம் தெரிகிறது ,வழக்கமான விஸ்தரிப்பு காணோமே . மரீஷி முனிவர் கதையெல்லாம் சொல்லுவீங்கன்னு பாத்தேன் ..... ஆனாலும் படங்கள் சரிகட்டிவிடுகின்றன !

said...

வாங்க கொத்ஸ்.

நலமா?

பவழம் பவளம் என்ற சொற்கள் ரெண்டும் சரி என்ற பட்டியலில் இருக்கு என்ற தகவல் மன நிம்மதி:-)

இதாவது ஒரு எழுத்துமாற்றம்தான். ஆனால் தமிழுக்கு சம்பந்தமே இல்லாத பல சொற்கள் இன்றைக்குத் தமிழாகவே ஆகிக்கிடக்கே!

வரும் தலைமுறை தமிழ் பேசினால் போதும் என்ற அளவில்தான் இப்போதைக்கு இருக்கோம். இந்த அழகில் பிழையற பேசணுமுன்னு நின்னால் ஒன்னும் வாயைத்திறக்காது கேட்டோ:(

தமிழுக்கு நல்லதே நடக்கட்டும். ஆசிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

பூனைக்கு மணி கட்டுவது யார்?

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

நீங்க இருக்கும் ஊரே புண்ணிய லிஸ்ட்டில் முதல்லே இருக்கே!

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க சசி கலா.

எல்லாக் கதையையுமே டீச்சர் சொன்னால் எப்படி?

ஆன்மீக வகுப்பில் இது உங்களுக்கான அஸைன்மெண்ட்.

க்ளூ: மரீஷி முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர்.

அவர் ஏன் பச்சைவண்ணரிடம் வந்தார்? சில சந்தேகங்களைத் தீர்த்துக்கவாம்.

மிச்சத்தைக் கண்டு பிடிங்க.

முடியலைன்னா அப்புறம் நான் சொல்வேன்!!

முயலுங்கள் முயலுங்கள்:-)))))

said...

கடவுள் இருக்கோ இல்லையோ ஆனால், கணவன் மனைவி மட்டும் தனியாக இப்படி பல இடங்களுக்கு கோவில்கள் உள்பட போவது ஒரு சுகமே!

said...

I shall try !

மரீஷி மனைவியை கல்லாக்கிய கதை கிடைத்தது . ஆனால் பச்சைவண்ண னிடம் வந்த கதை தெரியலையே :(
let me browse some more and get back to you :))

said...

எத்தனை எத்தனை கோவில்கள்......

பராமரித்தால் நன்றாக இருக்கும். பழைய கோவில்கள் இப்படி கிடக்க, புதிது புதிதாய் கோடிகள் செலவு செய்து புதிய கோவில்களை கட்டி வருகிறோம்......

Anonymous said...

//பாடல்பெற்ற ஸ்தலம் இது. அதான் அந்த நூற்றியெட்டில் ஒன்னு//

மங்களாசாசனம்??

said...

வாங்க நம்பள்கி.

சரியாச் சொன்னீங்க.

கோவில் கோபுரவாசலில் வாக்குவாதத்தை நிறுத்திருவோம். வெளியே வந்ததும் தொடர்வோம்:-))))

இப்படி வெளியே போகலைன்னா கணவரிடம் பேச வாய்க்குமா?

ஐ மீன் கணவர் மனைவியிடம் பேச, மனைவி சொல்வதை அவர் கவனித்துக் கேட்க,
கணவர்களுக்கு ஏது நேரம்?

said...

வாங்க சசி கலா.

தேடுங்கள்.....கண்டடைவீர்கள்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

எனக்கும் இதே சிந்தனைதான். புதிய கோவில்களைக் கட்டட்டும். பெருகி வரும் சனத்தொகைக்கு வேண்டித்தான் இருக்கு. அதே சமயம் பழையகோவில்களைப் பராமரிச்சு வச்சுக்கலாம் இல்லையா?

said...

வாங்க சிவா சர்வீஸ்.

முதல் வருகைக்கு நன்றி.

//மங்களாசாசனம்??//

அதே அதே!ஆழ்வார்களால் பாடல் பெற்று மங்களசாஸனம் செய்யப்பட்டத் திருத்தலங்கள்.

said...

பவழவண்ணர் பச்சைவண்ணர் அழகியபெயர்கள்.

said...

வாங்க மாதேவி.

உங்க பயணத்தில் இங்கே போனீர்களா?