Monday, March 10, 2014

அக்கவுண்டென்ட்டும் ஆர்மி ஜெனரலும்.

லேசாத் தலைவலி. இந்தக் காப்பிச் சனியனை இன்னும் எஞ்சினுக்கு ஊத்தலையே:(  கடைத்தெருவில்  எங்கியாவது  காபிகடை பார்த்து  வண்டியை நிறுத்தச்சொன்னோம். நெல்லுக்காரத்தெருவில்  வெளியில் இருந்து பார்க்க சுமாரா  ஒரு  ஓட்டல். பார்க்கிங் பார்த்து வண்டியை நிறுத்தறேன் நீங்க இறங்கிப்போங்கன்னார்  நம்ம ட்ரைவர் சீனிவாசன்.  சரி நீங்களும் காஃபி குடிக்க வாங்கன்னுட்டு நாங்க உள்ளே போய் வந்த வேலையைப் பார்த்தோம்.  அதுக்குள் சீனிவாசனும்  வந்து சேர்ந்துக்கிட்டார்.

காஃபியை குடிச்சுட்டு வெளியே வந்து  வண்டியைத் தேட கண்ணை ஓட்டினால்  தொட்டடுத்து ஒரு கோபுரம்   மசமசன்னு கண்ணில் பட்டது. தமிழ்நாட்டில் நான் முக்கியமாக் கவனிச்சது இந்த ட்வைலைட் சமாச்சாரம்.  இங்கே நம்மூரில் (நியூஸி) சூரியன் மறைஞ்சபின்  குறைஞ்சது  ஒரு முக்கால்மணி நேரமாவது  வெளிச்சம் இருக்கும்.  இதுவே கோடை காலமுன்னால்  ரெண்டு  ரெண்டரை மணி வரை  வெளிச்சம். சூரியனும்  மாலை எட்டு வரை இருக்கும்!   ஆனால்  தமிழகத்தில் சூரியன் மறைஞ்சவுடன் சட்னு இருள் வந்து  கவ்வுதே!

என்ன கோவிலுன்னு பார்க்க ரெண்டடி கிட்டப்போனால் , ஆண்ட்டி இங்கே செருப்பை விடுங்க நான் பார்த்துக்கறேன்னு  சொன்ன சிறுவனுக்கு அழகான முகமும் அதைவிட அழகான புன்சிரிப்பும்.  பெயர்  என்னவோ, சொன்னது மணிச்சத்ததில்  என் காதில் விழலை. கோவிலில் சாயரக்ஷை பூஜை நடக்கும் சமயம்.  கணகணன்னு  மணியும், டமடமன்னு மேளமும் முழங்குது.  எல்லாம் சமீபத்திய  சமாச்சாரமான எலெக்ட்ரானிக் ட்ரம்மின் கை வரிசையே!

பார்வைக்குச் சின்னவனா இருக்கான். ஆனால் பத்தாவது படிக்கிறானாம்!

கோவில் பெயரைப் பார்த்ததும்  'அடடா.....  கட்டாயம்போகணும்  என்று  காலையில்  காஞ்சீபுரம் புறப்படும்போது  நினைச்சது எப்படி  மறந்து போச்சு?' ஆனாலும்  இவர் (சாமி)  மறக்காமக்கூட்டி வந்து நிறுத்திட்டார் பாருங்களேன்!!

சித்ரகுப்தருக்கான கோவிலிது.  இவருக்கு ஒரு சில கோவில்கள்தான்  உலகெங்கும் இருக்காம். அதுலே முதலிடம் காஞ்சிபுரத்துக் கோவிலுக்குத்தானாம். ஆறேழு படிகள் ஏறிப்போனால்  கோபுர வாசல்.  படி கடந்து அந்தாண்டை கால் வச்சால்  நேரெதிரா ஒரு சந்நிதியில்  இருக்கார் சித்ரகுப்தர். .  நல்ல கூட்டம்  இருந்துச்சு. கற்பூர ஆரத்தியைக்கண்ணில் ஒற்றிக்கொண்டோம். கோபுர உசரத்தை வச்சுப் பார்த்தால் அதுக்கு எதிர்மாறா இது  ரொம்பவேச்  சின்னக்கோவில்தான்.  ஜஸ்ட் கருவறை சுத்தி வரலாம். அவ்ளோதான். நல்ல சுத்தமா வச்சுருக்காங்க.

கோவிலுக்கு வயசு ஒரு ஆயிரம் இருக்குமாம்.  புது  வர்ணம் பூசி  கோபுரம் பளிச்ன்னு இருக்கு. காலை  6 முதல் 10, மாலை  5 முதல் 8 மணி வரை  கோவில் திறந்திருக்கும் .

உலகம்  தோன்றிய காலத்தில் யமதருமனுக்கு  அவ்வளவா வேலை இருந்துருக்காதுன்னு நினைக்கிறேன்.  இருக்கும் கொஞ்சூண்டு மனிதர்களும்  அவ்வளவா பாவம் செஞ்சுருக்கச் சான்ஸ் இல்லை தானே?  அப்போ மற்ற உயிர்கள் இருந்துருக்குமேன்னால்.....  மனிதனைத் தவிர மற்ற எவையும்  அன்னாடம் காய்ச்சிகள் தானே? சந்ததிகளுக்குச் சேர்த்து வச்சுட்டுப்போகும்  ஏற்பாடெல்லாம்  அவைகளுக்கு இல்லையே!  இதனாலயே பாவம் பெருகாமல் இருந்திருக்குமே!

ஒண்டி ஆளா சமாளிச்சுக்கிட்டு இருந்த யமனுக்கு  மக்கள் கூட்டம் பெருகப்பெருக  வேலை மென்னியைப்பிடிச்சது. நரகத்தில் உதவிக்கு  கிங்கரர்கள் ஏராளமாக இருந்தாலும்,  ஆஃபீஸ் வேலை, புக் கீப்பிங் இதுக்கெல்லாம்  எழுதப்படிக்கத் தெரிஞ்ச  அக்கவுண்டன்ட் இருந்தாத்தேவலை.  ஒன்னுன்னா ஒன்னு  விட்டுப்போகாமல்  நல்லது பொல்லாததுகளைக் கரெக்டாப் பார்த்து கவனமா எழுதணும்.

ப்ரம்மாவிடம் போய்  மனு கொடுக்கிறார் யமன். பார்வதி பரமசிவன் அருளால் சித்ரா பௌர்ணமி தினம்  ஒரு குழந்தை கைகளில் எழுத்தாணியும், ஓலைச்சுவடியுமா  தோன்றிச்சு.  சித்ரகுப்தன் என்று பெயர் வச்சாங்க. ஆனால் சின்னக்குழந்தையா இருந்ததால் கல்வியறிவு இல்லை.  குழந்தையை  உஜ்ஜயினி காளியிடம் அனுப்பறாங்க.  அவளருளால்  'அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி' ன்னு ஆரம்பிச்சு  மஹா காலேஷ்வரிடம் கணக்கெழுதும்  வேலையை எல்லாம் பக்காவாத்தெரிஞ்சுக் கிட்டதும்  (இதுக்குள்ளே குழந்தை வளர்ந்து பெரியவனாகி)  மீண்டும் யமலோகத்து வந்து சேர்ந்து  தன் வேலைக்கான  அப்பாய்ண்ட்மெண்ட் ஆர்டரை வாங்கிக்கிட்டு  உத்யோகத்தில் அமர்ந்தார்  எமனுலுகக் கணக்கர்  சித்ரகுப்தன் .   தெய்வப்பிறவி ஆனதால்  பயங்கர  அறிவு.  சுருக்கமாச் சொன்னால்  கம்ப்யூட்டரை விட பெர்ஃபெக்‌ஷன்  அதிகம்!  நாம் செய்யும் ஒரு சின்னத் தவறும்  விட்டுப்போகாது அவர் லெட்ஜரில். உயிர்களின்  எக்ஸ்பைரி டேட், டைம், இடம்  எல்லாம்  பக்கா!

முந்தி எப்பவோ கேட்டுருந்த கதை ஒன்னு மனசில் வந்து நிக்குது. சொல்லலைன்னா  மண்டைக்குடைச்சல்.  எமலோக கிங்கரர்களுக்கு  யாரை, எப்போ, எங்கேயிருந்து கொண்டு வரணும் என்ற ஒர்க் ஆர்டர்  தினமும்  சித்ரகுப்தரின் ஆஃபீஸில்  இருந்து   வந்துக்கிட்டே இருக்கும். அதன்படி அந்தந்த ஏரியாவுக்கு  கிங்கரர்களை  அனுப்புவாங்க அந்த டீம் லீடர்ஸ்.  ஒருநாள்  ரெண்டு கிங்கரர்கள்  ஒரு  ஊருக்கு வந்துருக்காங்க.  அன்றைக்கு உயிர் போக வேண்டியவன்  கொஞ்சம்  தெய்வ அனுக்ரஹம் உள்ளவன். அவன் கண்ணுக்கு  கிங்கரர்கள் லேசாப் புலப்படறாங்க. பயந்து போன அவன் சட்ன்னு வேற ஒரு ஊருக்குக் கிளம்பிப் போயிடறான். பார்த்துக்கிட்டே இருந்த கிங்கரர்களில் ஒருவன்,  ஐயோ இவன்  வேற ஊருக்குக்  கிளம்பிட்டானே. எப்படி அவனைப் பிடிச்சுக்கொண்டு போகப் போறோமுன்னு கவலைப்பட, அடுத்த கிங்கரன் சொன்னான்,' எனக்கும் அவனை இங்கே பார்த்ததும்  கவலையாத்தான்போச்சு. அவனை இங்கே இல்லை,   அந்தஊரில் இருந்து பிடிச்சுப்போகணும் என்பதுதான்  ஆர்டர். இங்கே இருக்கானேன்னு  நினைச்சப்ப, அவன்  சரியா  அந்த ஊருக்குக் கிளம்பிட்டான். வா.சட்னு அங்கே போய்  அவனைப்பிடிச்சுக்கிட்டுப்போகலாம்'

மேலே போகும் உயிர்களை முதலில் சித்ரகுப்தரின்  முன்னால் கொண்டு போய் நிறுத்தியதும், அவர் லெட்ஜரைப் புரட்டிப்பார்த்து  நம் வாழ்நாளில் செய்த நன்மை தீமைகளை வாசிப்பார்.  அதைக்கேட்ட யமதருமன்  அததுக்கேத்தமாதிரி  சொர்க வாசமோ நரக வாசமோ  அனுபவிக்க  நம்மை அனுப்புவார்.

இப்படி தரும நெறி பிறழாமல்  சேவை செய்பவர்களுக்கு  எப்படியோ இன்னொரு விதமான புகழ்(??)  பூலோகத்தில் ஏற்பட்டுப்போச்சு!
மரணப்படுக்கையில்  இருந்து ' முடிவு'க்கு வராமல்  மக்கிச் சீரழியும்  நபர்களைக்  கொஞ்சம் கருணை வச்சுச் சீக்கிரமா மேலே கூட்டிட்டு போங்கன்னு   சித்ரகுப்தனை வேண்டி மனு கொடுக்க  ஆரம்பிச்சுருக்கு  நம்ம சனம். யார் தொடங்கி வச்சதுன்னு தெரியலை.  நமக்குக் கேக்கக் கொடுமையா இருந்தாலும் அவுங்க நிலையில் நாமிருந்து  நல்லா யோசிச்சுப்பார்த்தால்,  ஆண்டு அனுபவிச்சு, மூத்து முதிர்ந்து இப்போ  வாழ்க்கைத்தரம்  அடியோடு  போன நிலையில் நோயும் வலியுமா 'எல்லாத்துக்கும்' பிறர் உதவி வேணும் என்ற கதியில்  இருப்போர்க்கு இது ஒரு விடுதலைதான்.

எங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்ட  ஒரு  குடும்பத்திலும்  இப்படி  நடந்துருக்கு. பெரியவர் படும் வேதனையைச் சகிக்கவொட்டாமல்,  காஞ்சிபுரம் சித்ரகுப்தர் கோவிலுக்குக் கூடப்போய்  வேண்டிக்கிட்டு வந்தோமுன்னு  சொன்னதைக் கேட்டதும் ஒரு விநாடி  இதயம் நின்னுப்போனாப்லெ உணர்ந்தேன்.

வேண்டுதலுக்கு  சித்ரகுப்தன் செவி சாய்ச்சது போல அடுத்த ரெண்டு மாசத்தில் பெரியவர்  போயிட்டார். அப்பீல் செஞ்சாலும் அவரவர் ஆயுசு முடிஞ்சாத்தான் யமன் வருவான்,இல்லையா?

என்ன ஒன்னு..... போகாமல் தவிக்கும் உயிர்களின்  ஃபைலை  சிலசமயம்  சித்ரகுப்தன் தொலைச்சுட்டானோன்னு  சம்ஸயம்.  இல்லேன்னா லெட்ஜரில்  நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோமோ?  அதைச் சரிப்படுத்திக்கோன்னு சொல்லத்தான்   அப்பீல் செய்ய  மக்கள்ஸ் வர்றாங்க போல!

நவகிரகத்தில் கேது என்ற கிரகத்துக்கு  அதிபதியாம் இந்த சித்ரகுப்தர்.  ஜோதிட சாஸ்த்திர  அடிப்படையில் ஒருவர் ஜாதகத்தில் கேது சரியில்லை என்றால் பல பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் அனுபவிக்க நேரிடும் என்பதால்  அதிலிருந்து விடுபட  இவரை வணங்குகிறார்கள்.

 மதியம் சங்கரமடம் போகும் வழியில்  இன்னொரு கோவிலும் கண்ணில் தென்பட்டது. (அதானே..... காஞ்சியில் தடுக்கி விழுந்த இடமெல்லாம் கோவிலைத் தவிர  வேறொன்னும்  இல்லையே!) குமரக்கோட்டம். ஸ்ரீ சுப்ரமணியர் தம் தேவியருடன் இருக்கார்.  அந்தக்கோவிலையும் ஒரு எட்டுப் பார்த்துக்கலாமேன்னு கிளம்பினோம்.

கோபுரவாசல் கடந்து நுழைஞ்சதும் இடது புறம்  பிள்ளையார் தனிச்சந்நிதியில் இருக்கார். நமக்கு வலதுபக்கம் ஒரு பெரிய மண்டபம். கந்தப்புராணம் அரங்கேற்றமான இடம் என்று எழுதி வச்சுருக்காங்க. தனக்கு அனுதினமும் பூஜை செஞ்சுவந்த கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு , திகட சக்கரம்' என்று  முதலடி எடுத்துக்கொடுத்து  கந்தப்புராணத்தை  முருகனே எழுதச் செய்தான் என்பது ஐதீகம்.  கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு ஒரு தனிச் சந்நிதியும் இருக்கு.
 (சுட்டபடம். கோபுரதரிசனம் பதிவருக்கு நன்றிகள்)

ஐந்து தலை நாகம் குடைபிடிக்க சுப்ரமணிய ஸ்வாமியும், மூன்று தலை நாகங்கள்  குடைபிடிக்க  தெய்வானையும் வள்ளியுமாக  இருந்து நமக்கு தரிசனம் கொடுத்தாங்க. அரங்க மேடை, மண்டபங்கள், உற்சவமூர்த்தங்கள் என்று எல்லாம் அருமையான பராமரிப்பு.  பிரகாரம் முழுசும் கல்பாவிய தரை பளிச்.  பிரகாரத்தில் சாமிப் பொருட்கள் விற்கும் கடைகள் சில. ஒன்னும் வாங்கிக்கலையேன்னு  அடுத்த வருசப் பஞ்சாங்கம்  ஒன்னு  வாங்கினோம்.

இப்போ பார்த்த ரெண்டு கோவில்களிலும்  படம் எடுக்க முடியலை.  கேமெரா பேட்டரி  டௌன்:(

அடுத்த முறை லிஸ்ட்டில் சேர்த்தேன்.  முருகன் உன்னை விடறதா இல்லைன்னார் கோபால்.

இனி இன்றைக்கு   இதுவே கடைசிக்கோவில். மற்றவை பொழுது விடிஞ்சதும்:-)

கூகுளாண்டவர் அருளிச்செய்த படங்களுக்கு நன்றி.

தொடரும்............:-)





12 comments:

said...

அப்பீல் செய்ய இப்படியெல்லாம் மக்கள் வர ஆரம்பித்து விட்டார்களா...? சரி தான்...!

பெர்ஃபெக்‌ஷன் அதிகமுள்ள கோயிலுக்கு சென்று வந்துள்ளீர்கள் அம்மா... வாழ்த்துக்கள்...

நம் ஊர் என்றால் சூரியனுக்குக் கூட இரக்கம் இல்லை போல...!

said...

திருமணத்தடைகள் தீரவும் இந்தக் கோவிலுக்குப் போகலாம்.அங்கு இராமலிங்க ஸ்வாமிகள் சந்நிதி பார்த்தீர்களா துளசி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ஆமாம். அவன் சுட்டெரிக்கும் சூரியனல்லவா அங்கே:(

said...

வாங்க வல்லி.

அடடா..... பார்த்த நினைவு இல்லையேப்பா:(

நெவர் மைண்ட்.நெக்ஸ்ட் டைம்.(எங்க கிவி ஆட்டிட்யூடு இது)

said...

எப்பிடி எல்லாம் வேண்டுதல்கள் ... ஆனா தேவையான ஒன்னு . நமக்கும் கஷ்டம் அடுத்தவங்களுக்கும் கஷ்டம்.

said...

இங்கே தில்லியில் கூட வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சித்ரகுப்தன் கோவில் இருக்கிறது. இன்னும் போகத்தான் முடியவில்லை! :(

இந்த வாரம் சனிக்கிழமை போய்விட வேண்டியது தான்......

said...

"முதலிடம் காஞ்சிபுரத்துக் கோவிலுக்குத்தானாம்" தெரிந்துகொண்டோம்.

said...

வாங்க சசிகலா.

ப்ராக்டிக்கலாப் பார்த்தா இது ரொம்பச்சரி.

ஆனால்.... எமோஷனலா பார்த்து மனம் நோவதுதான் அதிகம் இல்லையா?

அதுவும் அடுத்தவர் செஞ்சா இது ரொம்பத் தப்புன்னு தோணும்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தில்லியில் இப்போ இல்லாத கோவில்களே இல்லைன்னு ஆகிப்போச்சு!!!

said...

வாங்க மாதேவி.

நமக்கு எப்படியெல்லாம் பெருமை தேடித் தர்றார் பாருங்க:-)

said...

ரெண்டு மூணு நாளா உங்க பக்கம்தான் வந்து கொண்டிருக்கிறேன், நம்ம பயணத்திற்காக! இது ரொம்பவும் பழைய பதிவு 2014 ஆனாலும் எனக்கு வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய கிடைச்சுது. ஒவ்வொரு வீட்டிலேயும் சித்ரகுப்தன் கிட்ட அப்பீல் செய்ய வேண்டிய ஆட்கள் பெருகிட்டங்கன்னு தோணுது. //நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணும்// ரொம்ப வருத்தப்பட வைக்கும் நிஜம்.

said...

வாங்க ரஞ்சனி.

ரெண்டு வருசத்துக்குமுந்தி எழுதுனது 'ரொம்பவும் பழைய பதிவா' ஆகிருச்சா :-))))

இந்த நிமிஷம், ஸ்வாமிநாராயண் மந்திர் ப்ரமுக் ஸ்வாமிஜியின் அந்திமக் க்ரியையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். உங்க சித்ரகுப்தர் பின்னூட்டம் டைம்லியா வந்து சேருது!!!!!

கணக்கோ கணக்குதான்!

பொதுவா சன்யாசிகளைப் புதைச்சு மேலே சமாதி எழுப்புவாங்க. ஆனால் இவுங்க எரிக்கிறாங்கப்பா!!!!