Wednesday, March 05, 2014

பாண்டவர் தூதன், திருப்பாடகம்.

காஞ்சிபுரத்தில்  நம்ம ஏகாம்பரேஸ்வரர் கோவிலை  நடுமையமா மனசில் வச்சுக்கிட்டீங்கன்னா....  இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும்  கோவில்கள் எல்லாம்   ரொம்பப்பக்கம்தான். எல்லா திசையிலும்  ஒரு ஒன்னு ஒன்னரை கிமீ தூரத்துக்குள்ளேயே அமைஞ்சுருக்கு.

திருப்பாடகம் என்ற பேட்டையில் இருக்கார் நம்ம பாண்டவதூதர். வனவாசத்தை முடிச்சுட்டு வந்த பாண்டவர்கள்,  இனி எங்கே போய் வசிப்பது என்ற கவலையுடன் இருக்காங்க. ராஜ்ஜியம் மீண்டும்  கிடைக்க வழி ஒன்னும் இருப்பது போல் தெரியலை.  வஞ்சகமா சூதாட்டத்தில்  தருமனை (யுதிஷ்ட்ரன்)  இழுத்து  அவன்  பங்கு ராஜ்ஜியத்தையும் கவர்ந்து, அதன்பின்  அவன்  மனைவி, தம்பிகள் எல்லோரையும்  அடிமைகளாக்கிக் காட்டுக்கு விரட்டுன  துக்கத்தையும் அவனால் மறக்க முடியலை.

இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும்  திருப்பிக் கொடுக்க  துரியோதனன்  தயாரா இல்லை. அதெப்படி...  அப்படியா  ரூல்ஸ் இருந்தது? பகடை விளையாட்டில்  பணயம் வச்சு  தோத்துப்போனதை  திரும்பித்தர முடியாது.  நிபந்தனைப்படி வனவாசம் முடிச்சு வந்தபின்  சுதந்திர மனிதரா  இருக்கலாமே தவிர   மீண்டும்  எதையும் திருப்பிக் கேக்க  முடியாதுன்னான்.

பேசாம  கௌரவர்களோடு போர் செஞ்சு அவுங்களைத் தோற்கடிச்சுட்டு நம்ம பங்கு ராஜ்ஜியத்தை மீட்டுக்கலாமுன்னு தருமரின்  தம்பிகள் வற்புறுத்தறாங்க.  ஐயோ.... யுத்தமா?  சொந்தக்காரங்ககூட சண்டை எப்படி? ரெண்டு பக்கத்திலும் உயிர் இழப்பு  ஆகுமேன்னு  தருமனுக்கு  தவிப்பு.

ஸ்ரீ க்ருஷ்ணனிடம்  யோசனை கேட்கறாங்க.  எங்க ஐவருக்கும் அஞ்சு கிராமம் கிடைச்சாலும் போதும். சண்டை வேணாமுன்னு  தருமன்  சொல்ல,  'துரியோதனன் அப்படியெல்லாம் கொடுத்துரமாட்டான்.  சண்டை போட்டுத்தான்  இழந்ததை மீட்கணும்.  ஆனால் எதுக்கும்  ஒரு தூதனை அனுப்பி  எங்களுக்கு அஞ்சு கிராமம் கொடுத்தால் நாங்க எங்க பிழைப்பைப் பார்த்துக்கறோம்.  நமக்குள் யுத்தம் வேண்டாம் என்று சொல்லிப்பார்க்கலாம் ' என்றான் க்ருஷ்ணன்.

அப்ப சரி. எளிதில்  உணர்ச்சிவசப்பட்டு ஏடாகூடமாகப்பேசி நிலைமையை மோசமாக்காத  நல்ல தூதன் வேணுமேன்னு  நினைச்ச தருமன்,  'க்ருஷ்ணா, நீயே போய் சமாதானம் பேசிப்பார்' என்றான்.

க்ருஷ்ணனும் கிளம்பிப் போறார்.  விஷயம்  கேள்விப்பட்ட துரியோதனன்,  க்ருஷ்ணனின்  ஆதரவு இருப்பதால்தான் பாண்டவர்கள்  நம்மை எதிர்க்கும்  துணிவுடன்  வலிமையோடு  இருக்காங்க. அதனால் க்ருஷ்ணனை மேலே அனுப்பிட்டால்.............  பண்டவர்களை புழுப்பூச்சிகளைப்போல் நசுக்கிடலாமுன்னு   தூது வருபவரையே கொல்ல ஒரு திட்டம் போட்டான்.

சபைக்கு வருபவருக்கு  எப்படியும் ஒரு  ஆசனம் கொடுக்கணுமில்லையா?   உக்கார்ந்தவுடன் உடைஞ்சு விழும் தரத்தில்  ஒரு  நாற்காலி  தயாரிக்கச் சொன்னான்.  அதுக்குக்கீழே நிலவறை ஒன்னு கட்டி அதில் ஆயுதங்களோடு மல்லர்களை  நிறுத்தினான்.   க்ருஷ்ணன் உள்ளே தொபுக்கடீர்னு  விழுந்ததும் மல்லர்கள் பாய்ந்து  அவரைக் கொன்னுடணும். திட்டம் பக்கா!  ஏற்பாடுகள் எல்லாம் செஞ்சாச்சு.

'எல்லாம் தெரிஞ்ச' ஸ்ரீ க்ருஷ்ணர்  சபைக்கு  வந்தார். ஒன்னுமே தெரியாதமாதிரி ஆசனத்தில் அமர்ந்தார். பாதங்களை அழுத்தி உட்கார்ததும் கீழே நிலவறைக்குள்  இருந்த மல்லர்கள் எல்லாம் பரலோகம் போய்ச் சேர்ந்தார்கள்!

என்ன ஆச்சுன்னு  முழிச்ச  துரியோதனனுக்கும்  த்ருதராஷ்ட்ரனுக்கும்  தன்  விஸ்வ ரூபத்தைக் காட்டினார்.  ஒரு கணம் பிரமிச்சுப்போன  துரியோதனன் அடுத்த கணம் சமாளிச்சுக்கிட்டான். தூதுப்பேச்சு ஆரம்பமாச்சு. அஞ்சு கிராமங்கள் தரமுடியாதுன்னு  மறுத்தான். சரி போகட்டும் அஞ்சு வீடுகளாவது  கொடுன்னால்....  ஊசிமுனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன்னான்.

ஒரு கட்டிடத்தில் அஞ்சு ஃப்ளாட், இல்லை அஞ்சு பெட் ரூம் ஃப்ளாட் ஒன்னு  இப்படிக் கேட்டுந்தாலும்  அதே பதில்தான் கிடைச்சிருக்கும்:(

தூது முயற்சி தோல்வியானதும்  பாரதப்போர் தொடங்கினது எல்லாம்  உங்களுக்கு வியாஸரே சொல்லி இருக்காரில்லையா!

வைஸம்பாயனரிடம் இருந்து  பாரதக் கதை கேட்டுக்கிட்டு இருந்த  ஜனமேஜயனுக்கு (  அர்ஜுனனின் கொள்ளுப்பேரன்  இவன்) தானும் அந்த விஸ்வரூப தரிசனத்தை தரிசிக்கணும் என்ற பேராவல். அவன் யாகம் செய்ய  ஆரம்பித்தான். யாகத்தின் இறுதியில் தரிசனம் கிடைச்சதாம் இங்கே!
 படம்: நம்ம ஸ்ரீயிடமிருந்து சுட்டது. நன்றி ஸ்ரீ


இந்தக் கோவிலில்,   விஸ்வரூபமெடுத்த க்ருஷ்ணர்  இருபத்தியஞ்சு அடி உயரச்சிலையாக அமர்ந்த திருக்கோலத்தில் இருக்கார்.  மார்கழி என்றதால் வழக்கம்போல் திரை மறைவில் இருந்து நம்மைப் பார்த்தார். (உக்கார்ந்தே 25 அடி. அப்ப நின்னால்...!!!)

நம்ம  வீடுதிரும்பல் மோகன் குமார் ஒரு பதிவில்  பாண்டவ தூதர் பெருமாள் கோவிலைக் குறிப்பிட்டு இருந்தார். அதை வாசித்ததில்  இருந்து   காஞ்சி விஸிட் போனால் இதை விடக்கூடாதுன்னு  மூளையில் முடிச்சுப்போட்டேன். அப்புறம் பார்த்தால்  நம்ம நூற்றியெட்டில் இதுவும் ஒன்னா இருந்ததில்  ரொம்ப சந்தோஷமே!

தாயாருக்கு  இங்கே ருக்மிணி என்ற பெயர்.  க்ருஷ்ணரின்  பட்டமகிஷி!

கோவில்  ரொம்ப சுத்தமா இருக்கு.  சின்னதா   அடக்கமா இருக்கும் திருக்குளம் கூட சுத்தமே!  நல்ல பாராமரிப்புதான்.

கோவிலில் தலபுராணங்கள், ரோஹிணி நட்சத்திரம் ( கிருஷ்ணன் பிறந்தது ரோஹிணியில்) பற்றிய விரதபலன்கள் எல்லாம்  (மாடர்ன்) கல்வெட்டுப்பலகையில் இருக்கு.

கோவிலுக்குள்ளில் ஒருபுராதனக் கல்வெட்டு இருக்காம்.அதில் தூதஹரி என்று குறிப்பிட்டு இருக்காங்கன்னு  கேள்விப்பட்டேன். கோவில் கட்டுனது எட்டாம் நூற்றாண்டில்.

தினமும் காலை  ஏழு  மணி முதல்  பதினோரு மணி வரையும் மாலையில் நாலு  மணி முதல் ஏழரை வரையும் கோவில் திறந்திருக்கும்.

இன்னொரு முறை  வந்து  தூதரின் முகத்தை தரிசிக்கணும்.  இப்படி இன்னுமொரு முறை லிஸ்ட் கூடிக்கிட்டே போகுது!

தொடரும்.......:-)




10 comments:

said...

படங்கள் அருமை ! போன பதிவில் கோவிலை பராமரிப்பின்றி பார்த்து மனம் வருத்தப்பட்டதற்க்கு இந்த கோவிலின் படங்கள் ஆறுதல் அளித்தன .

மகாபாரதம்
simple and crisp language . easy to understand without complications . நீங்க சீக்கிரமாமுழுமையா எழுத யோசிக்கணும் only you can give all the kutti kutti informations of the legendary Idhikaasam

said...

அன்பு துளசி, மார்கழி மாதத்தில் தான் இருப்பதாகச் சொல்லிவிட்டுத் தரிசனம் தராமல் ஒளிந்தால் கண்ணனுக்கு ஏற்குமா. இன்னோரு தடவை வந்துவிடுங்கள். அந்தக் கால் நகத்தின் பெருமைக்கு எதுவும் ஈடாகாது. அதென்ன கம்பீரம். கண்ணழகென்ன. உட்கார்ந்திருக்கும் கம்பீரம் என்ன.மனசை அள்ளிக் கொள்வான் கண்ணன். கோவில் படங்கள் அனைத்தும் அழகு. மிக இனிமை.

said...

அருமை. மகளிர்தின வாழ்த்துகள்.

said...

மார்கழி மாதம் தவிர்த்து வேறொரு மாதத்தில் செல்ல இப்போதே நானும் மனதுக்குள் முடிந்து வைத்தேன்....

சிறப்பான படங்கள்.

said...

வாங்க தனபாலன்.

சுட்டிக்கு நன்றி.

இங்கே வந்த மாற்றத்தினால் பதிவுகளைத் தமிழ்மணத்தில் சேர்க்கவே முடியாமல் இருந்தது:(
துளசிதளம் இல்லைன்னு சொல்லுதே!

அதன்பின் நம்ம வந்தேமாதரம் சசிகுமார் ஒரு இடுகையில் சொன்னபடி,டாட் காம்
/ncr சேர்த்துத்தான் தமிழ்மணத்தில் இப்போதெல்லாமிணைத்துக் கொண்டிருக்கின்றேன்.

said...

வாங்க சசி கலா.

கோ குடியிருக்கும் வீட்டை நல்லா பராமரிக்கத்தான் வேணும், இல்லையா?

மகாபாரதம் நினைவில் வச்சுக்கறேன்:-)

நம்ம ஜெ மோ எழுதும் பாரதம் பார்த்தீங்களா?

ஹம்மா........ என்ன ஒரு புனைவு!!!!

said...

வாங்க வல்லி.

ஐயோ.... நீங்கள் சொல்லச் சொல்ல பார்க்கணும் என்ற ஆசை அதிகமாகுதே!!!!

கால்நகம் கால் நகம்!!!!

said...

வாங்க மாதேவி.

உங்களுக்கும் எங்கள் வாழ்த்து(க்)கள்.

நமக்கு எல்லாநாளும் மகளிர் தினங்களே.

மகனர்களுக்குத்தான் ஒரு தினமும் இல்லை!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

உற்சவர் ஸ்பெஷல்தான் மார்கழி.

மூலவர் கம்ப்ளீட் (பெட்) ரெஸ்ட்!

ஒன்னு செய்யலாம்.... மார்கழியில் ஒன்லி சிவன் கோவில் என்று வச்சுக்கலாம் இனிமேலே!

said...

//உக்கார்ந்தே 25 அடி. அப்ப நின்னால்...!!!// உலகளந்த பெருமாள் ஆகிவிடுவார். அவரை நீங்கள் சேவிக்க வில்லையா? அடுத்த பதிவுகளில் இவரைப் பற்றி எழுதியிருப்பீர்கள் என்ற நம்பிக்கை.