Friday, March 21, 2014

காஞ்சி கச்சபேஸ்வரர்

நேத்துக் காலை பத்து மணிக்கு இந்த காஞ்சிபுரத்துக்குள் நுழைஞ்சதும் கண்ணில் பட்ட  முதல் கோபுரம், வா வான்னு கூப்பிட்டது உண்மை. நானும்  'முதல்லே ஹொட்டேல் ரூமுக்குப்போயிட்டு அப்புறமாதான் கோவிலும் குளமும். அப்பாலிக்கா வர்றேன்'னு  காற்றில் சேதி அனுப்பினேன். அதுக்குப்பிறகு  குறுக்கும் நெடுக்குமா எத்தனை முறை  இதைக் கடந்து போனேன்னு கணக்கு வச்சுக்கலை.  அதுவும் சலிக்காமல் கூப்பிட, நானும் சலிக்காமல் அப்புறம் அப்புறம் என்றபடி வந்த வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

இப்போ அந்த வழியாப்போகும்போதும்  அதே வா  வா! இதோ வந்தேன்னு  கோவில் வாசலில் போய் இறங்கியாச்சு. கச்சபேஸ்வரர்  கோவில்! இளம் சந்தன நிறத்தில் மின்னும் ராஜகோபுரம். மஹாகும்பாபிஷேகம் 2005 ஆம் ஆண்டு நடந்துருக்கு. இதுக்கும் முந்தி நடந்தது சரியா அம்பத்தியொரு  வருசங்களுக்கு முன்!  அடராமா.........  இப்படியா?   போகட்டும். இப்பவாவது  செஞ்சாங்களேன்னு ஆறுதல் பட்டுக்கணும்.







கோபுரவாசலைக் கடந்து உள்ளே போறோம். பரந்து விரிந்திருக்கும்   வளாகத்தில்  முதலில் கண்ணில் பட்டது  திருக்குளம்! துளியூண்டு  குப்பைஒரு மூலையில் இருந்ததைத் தவிர்த்துப் பார்த்தால் சுத்தமான குளம்தான். தண்ணீரும் நிறையவே இருக்கு:-)




 எச்சரிக்கைத் தகவல் போர்டு சொல்லுது,  இந்த சுத்தத்தின் ரகஸியத்தை:-)  அந்த தொகைக்கு இன்னும் நாலுபூஜ்யம்  சேர்த்திருந்தால் கொள்ளாம்.









 கொள்ளை அழகா  கோவில் நந்தி!











வளாகத்தின் நடுவில், பஞ்ச சக்தி விநாயகர் தனிச்சந்நிதியில்.

மூலவர்  மஹா விஷ்ணு நேரில் வந்து பூஜித்த  ஈஸ்வரன். கச்சபேஸ்வரர்.

அட! அப்படியா?  கதை இருக்கணுமே!

இருக்கே:-)

திருப்பாற்கடலைக் கடைய ஆரம்பிச்ச காலம்.  மந்தாரமலை  மத்து. வாசுகிதான்  மத்தைச் சுழற்றும் கயிறு!  ஆழங்காணமுடியாத கடல் என்பதால்  மத்து நிலையில் நிற்காமல் கயிற்றில் இருந்து (!)  வழுக்கி வழுக்கி உள்ளே கடலில் விழுந்துருது.  அடியில் எதாவது இருந்து தாங்கினால் கொள்ளாம் என்ற நிலை. பாற்கடலுக்கு  உரிமையாளரிடம்  யோசனை கேட்கப்போய் , கடைசியில் அவரே தாங்கிப்பிடிப்பதாக ஒத்துண்டார்.

அகலமா நின்னு  மலையைத் தாங்கணுமே, என்ன ரூபம் எடுக்கலாம் என்ற ஐடியா  ஒரு விநாடியில் மனதில் வந்தது.  ஆமை!   மேலே உள்ள மலை  வழுக்கி விழாமல் முதுகு  அகலமா  இருக்கணும். அதேசமயம் தான் இடம்விட்டு விலகாமல்  கடலடியைக் கால்களால்  கவ்விப்பிடிக்கணும். ஓக்கே ஓக்கே! ஆமைதான் பெஸ்ட்!

நினைத்த காரியம்  நல்லபடியா நிறைவேறணுமேன்னு  சிவனின் அருளை வேண்டி நின்றாராம். அவரும் அருளினார். அதுக்குக் கிடைச்ச பரிசுதான் ஆலகாலம்!   பாவம் சிவன்:(

கூர்மாவதாரம் பிறந்தது  இப்படித்தான்.  கச்சபம் என்ற  சமஸ்கிரதச் சொல்லுக்கு  ஆமை என்றே பொருள்.  கச்சபம்  அவதரிக்குமுன் இங்கு வந்து வணங்கியபடியால் ஈசனுக்கு கச்சபேஸ்வரர் என்ற பெயர் வந்தது.  அம்பாள் பெயர் சுந்தராம்பிகை.

இந்தப்பதிவை எழுதும்போதுதான் சென்னையிலும் ஒரு  ஆமை கும்பிட்ட கோவில் இருக்குன்னு  அம்மம்மா சொன்னது நினைவுக்குவருது.  அது மண்ணடியில் இருக்கும் கச்சாலீஸ்வரர் கோவில்.  அந்த ஏரியாவில்தான்    சென்னப்பட்னம் வந்த புதுசில்   எங்க  தாத்தா  குடியிருந்தாராம்.  நான் இதுவரை போனதில்லை.  பார்க்கலாம்.....  கிடைக்குதான்னு!

கோவில் குளத்தில் நிறைய ஆமைகள் இருப்பதாகச் சொல்றாங்க.  கொஞ்சநேரம் குளப்படியில்  உக்கார்ந்து பார்க்க நமக்கு நேரமில்லாமல்போச்சு:(



முக்கியமாச் சொல்லவேண்டிய  ஒரு சமாச்சாரம் இங்கே இந்தக்கோவிலில்  உள்ள தகவல் பலகை. இதில் காஞ்சியில் உள்ளவை   என்று 165 கோவில்கள் பட்டியலும்  அவை எங்கெங்கேன்னு சொல்லும் வரைபடமும் இருக்கு.  பக்தர்களுக்கு உண்மையான சேவை செஞ்ச நிர்வாகத்துக்கு  மனமார்ந்த நன்றி சொல்லத்தான் வேணும்.


கட்டக்கடைசியா வராம முதலிலேயே இங்கே வந்திருந்தால் இன்னும்  வசதியா இருந்திருக்கும். அதான் போல  'வா வா'ன்னு கூப்பிட்டுக்கிட்டே இருந்துருக்கார் ஈசன்.

நாந்தான்.............  சொன்னப்பேச்சைக் கேட்டுட்டாலும்...........  சரியான இடும்பி:(

கோவில்  உச்சிகால பூஜைக்குப்பின்  கதவு அடைக்கும்  நேரமாயிருச்சு.  கிடைச்சவரை போதும் என்ற  மனத்தோடு கிளம்பி அறைக்குப் போய்ச் சேர்ந்தோம்.

தொடரும்...........:-)




8 comments:

said...

வரைபடம் பலருக்கும் உதவும்... படங்கள் மூலம் நாங்களும் சுற்றி விட்டோம்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

said...

இந்த கோவிலை இதுவரை போய் பார்த்ததில்லை,ஞாபகம் வைத்துக்கொள்கிறேன்.

said...

அருமையான படங்கள். நாங்களும் காஞ்சிபுரத்தில் மூன்று நாட்கள் தங்கி கோவில்கள் பார்த்தோம்.
காஞ்சி கச்சபேஸ்வரர் கோவில் திருக்குளம் மிக அழகு.

said...

குளங்களைசுத்தமாகவைத்திருக்க நல்லவழிசெய்துவிட்டார்கள்.:)

காஞ்சியிலுள்ள கோயில்கள் பற்றிய வரைபடம் வைத்துஇருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.

said...

கோவிலும் குளமும் சூப்பர் சுத்தம். எத்தனை முன்னேற்பாடா செய்திருக்காங்க. ரொம்ப அழகு. பத்தொன்பது பெருமாள் கோவில் .சிவன் கோவில் எத்தனை தெரியவில்லையே. ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக பல்லவ மன்னன் இருந்திருக்கிறான். நல்ல பயணம் எங்களுக்கு ஆலய தரிசனம் கொடுத்தது.

said...

அருமையான படங்கள் . குறிப்பாக மகாவிஷ்ணு பூஜிக்கும் படம் அருமை !!

said...

அருமையான படங்கள்.

குளம் சுத்தமாக இருப்பது பார்த்து மனதில் ரொம்பவே மகிழ்ச்சி.....

said...

அம்மை அப்பராக காட்சி கொடுக்கும். அழகு பார்த்துகொண்டே இருக்கலாம.