"ஏங்க வெயில்தான் இருக்கே... அப்புறம் ஏன் புகைமூட்டமா இருக்கு?"
"அப்படி ஒன்னும் இல்லையேம்மா"
"லேசா ஃபோக் (Fog) இருக்கோ?"
"ஊஹூம். பளிச்சுன்னுதான் இருக்கு."
குறைஞ்சது ஏழெட்டு முறை இந்த கேள்வியும் பதிலும் தினப்படி வாடிக்கை. அதுவும் வெளியே எங்கியாவது ட்ரைவ் பண்ணிப்போனால் இன்னும் அதிகம். பாவம்.... பதில் சொல்லியே நொந்து போயிருப்பார் கோபால்.
எனக்கு உடல்நிலை சரி இல்லைன்னு கொஞ்சநாளா மருந்து எடுத்துக்கிட்டு இருந்த சமயம், பக்க விளைவா அது கண்பார்வையை(யும்) பாதிக்கலாம் என்ற காரணத்தால் கண் சிகிச்சைப் பிரிவில் இருந்து 'வந்து கண்ணை காட்டிட்டுப்போ' ன்னு கடுதாசி வந்துச்சு. போயிட்டு வந்தோம்.அது என்ன 'தோம்'?
இப்பெல்லாம் தனியா வண்டியை எடுத்துப் போக கொஞ்சம் யோசனைதான். நோயாளி பாருங்க....... அதுவும் கண்ணாஸ்பத்திரிக்கு கூட ஒரு துணையோடு(ட்ரைவர்) வான்னுதான் இங்கே சொல்றாங்க.
பரிசோதனை முடிச்சுட்டு 'இப்ப சரியாதான் இருக்கு. எதுக்கும் இன்னும் நாலு மாசம் கழிச்சு வந்துட்டுப்போங்க.கடுதாசி அனுப்பறோமு'ன்னாங்க. ஆச்சு நாலு மாசம். கடுதாசி வந்ததும் போனோம்.
எல்லாம் சரிதான். மருந்து பாதிப்பு இல்லை. ஆனால் கண் லென்ஸில் காடராக்ட் வந்துருக்கு. அதை எடுக்கணும். வெய்ட்டிங் லிஸ்டுலே உங்க பெயரை பதிவு செஞ்சு வைக்கிறேன்னு டாக்டர் சொன்னாங்க. இந்தியர். ஹைதராபாத் . ஆஹா.... விடமுடியுமா? கொஞ்சம் தெலுகுலே மாட்லாடினேன்:-)
'எவ்ளோநாள் காத்திருப்பு'ன்னதும் 'அஞ்சு மாசம்' என்றவங்க, 'உங்களுக்கு மருத்துவக் காப்பீடு இருக்கா'ன்னாங்க. 'இருக்கே! 'அப்ப தனியா சிகிச்சை எடுத்துக்கலாமே. உங்க கண் டாக்டர் யார்?
பெயரைச் சொன்னதும் அவுங்களுக்கு மகிழ்ச்சி கூடிப்போச்சு . "அட! அவர்தான் என்னுடைய வாத்தியார் . ரொம்பக் கெட்டிக்காரர்.
" நல்லதாப்போச்சு. சிகிச்சை எப்படி? கஷ்டமானதா? "
"ஊஹூம். எல்லாம் ருட்டீன்தான். சிம்பிள்."
உடனே நம்ம கண் மருத்துவருக்கு ஃபோன் செஞ்சு மறுநாள் அவரைப்போய்ப் பார்த்தோம்.
"கணினியில் நம்ம ரெகார்டை எடுத்துப் பார்த்தவர் ரெண்டு வருசத்துக்கு முன்னேயே இப்படி கண் லென்ஸ் க்ளௌடியா ஆகிக்கிட்டு இருக்கு மாத்திடலாமுன்னு சொன்னேன். தேதியும் குறிச்சேன். ஆனால் நீங்கதான் ( பூம்பூம் மாடு போல தலையாட்டிட்டு அப்புறம் செகண்ட் தாட் வந்து) வேணாமுன்னு சொல்லிட்டீங்க. அப்ப ஒரு கண்ணுலே இருந்தது இப்ப ரெண்டு கண்களுக்குமா இருக்கு. "
அங்கே இருந்த 'ஒரு கண்ணைப் பிரிச்செடுத்து' டபக்குன்னு அதுக்குள்ளே இருந்த லென்ஸை வெளியில் எடுத்துக் காமிச்சு இதை எடுத்துட்டு வேற ஒன்னு வைக்கணும். அவ்ளோதான். ஈஸி என்றார்.
கேமெராவுலே லென்ஸை மாத்திப் போடறோமே அப்படித்தான் போல!
வழக்கமான சர்ஜரிதான். அனஸ்தீஸியா? லோக்கலா மரத்துப்போக மருந்துன்னார்.
புது லென்ஸ் போடறதால் பொதுவா கண் நல்லாத் தெரியும். படிக்க மட்டும் கண்ணாடி போடவேண்டி வரும் என்றார். அந்த லென்ஸில் இப்ப நம்ம கண் கண்ணாடியில் இருப்பதைப்போல ப்ராக்ரஸிவ் லென்ஸ் போட முடியாதான்னால்.... 'இல்லை. இது IOL (intraocular lens) இதுலே மல்ட்டி ஃபோகல் கூட இப்ப வருதுன்னாலும் அதுலே கொஞ்சம் ப்ராப்ளம்ஸ் இருக்கு. 100% காரண்டீ இல்லை. அப்படியாச்சுன்னா, மறுபடி இன்னொரு சர்ஜரி செஞ்சு அதை எடுத்துட்டு இதைப்போடும்படி ஆகும்' என்றதும் ஐயோ..... வேணாமுன்னு சொன்னேன்.
தேதி குறிச்சதும் நமக்கு சரிவருமான்னு பார்த்துட்டு ( கோபால் ஊரில் இருக்கணுமே!) வீட்டுக்கு வந்துட்டோம். மறுநாள் ஸர்ஜரி அட்மிஷன் பேக் ஒன்னு வீட்டுக்கு வந்துச்சு.
அட்மிஷன் பேக்கைத் திறந்து பார்த்தால்.... ஐயோ! சுருக்கமாச் சொன்னா, நம்ம பிறந்த நட்சத்திரத்தையும் ராசியையும்மட்டும்தான் கேட்கலை. இதுவரை ஆன அறுவை சிகிச்சைகள், இப்போ என்னென்ன வியாதி,அதுக்கு என்னென்ன மருந்து எடுக்கறோம், எதெது நமக்கு அலர்ஜி, ஏன்? அது என்ன செய்யும்? இப்படி ஏகப்பட்டவைகளை அந்தப்படிமத்தில் நிரப்பி, திருப்பி கண் சிகிச்சை நடக்கப்போகும் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பணும். நம்ம இன்ஷூரன்ஸ் கம்பெனி நடத்துது. இதுலே மற்ற இன்ஷூரன்ஸ் கம்பெனிகளில் பாலிஸி எடுத்தவங்களுக்கும் ஆர்கனைஸ்ட் சர்ஜரி நடத்திக்க முடியும். தியேட்டர், டாக்டர், நர்ஸ், பொதுவான சர்வீஸ்களுக்கு பணம் கட்டிட்டு சிகிச்சை எடுத்துக்கலாம். பாலிஸிக்கு ஏற்ப அவுங்க இன்ஷூரன்ஸ் கம்பெனி பணம் திருப்பிக் கொடுக்கும்.
நாங்க நியூஸி வந்த சமயம் இங்கே தனியார் மருத்துவமனைகளே கிடையாது. இப்போ ஒரு இருபது வருசமாகத்தான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கம்பெனி ஒரு ஹாஸ்பிட்டல் கட்டி இருக்கு. இங்கே ஏற்கெனவே முடிவு செய்த அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கும். இந்தக் கம்பெனியில் அங்கத்தினராக உள்ளவர்களுக்கு மட்டும் இந்த ஆர்கனைஸ்ட் ஸர்ஜரி. பொது மருத்துவமனை டாக்டர்கள் தான் இங்கேயும் வந்து அறுவை சிகிச்சை செய்வார்கள்.
அன்னிக்கு மாலை நடைப்பயிற்சிக்குக் கடைக்குப்போனோம். எங்கூர்லே வேர்ஹௌஸ் என்னும் கடைதான் நம்ம நடைப்பயிற்சிக்கான களம். அங்கே இருக்கும் க்ளியரன்ஸ் & ஸேல் பின் (Bin ) ரொம்ப சுவாரசியமான சமாச்சாரங்களால் நிறைஞ்சிருக்கும். பத்து நிமிசம் டைம் பாஸ் எனக்கு அங்கே:-) பல பொருட்களைப் பார்க்கும் போது இதையெல்லாம் யார் வாங்குவான்னு நினைச்சுக்குவேன். குறிப்பிட்ட சில விழாக்களுக்கான பொருட்கள் அந்த குறிப்பிட்ட நாள் முடிஞ்சதும் இந்த இடத்துக்கு வந்துரும்.
பத்து டாலர் சமாச்சாரம் இப்ப அம்பது செண்ட், இல்லை சும்மா 99 செண்ட்ன்னு (ஒரு டாலர்னு அர்த்தம்) போட்டு வச்சுருப்பாங்க. இப்ப ஏது ஒருசெண்ட், அஞ்சு செண்ட் காசுகள். எல்லாம் காணாமப்போச்சு குறைஞ்ச காசு இப்போ பத்து செண்ட்தான்.
கடந்து போன ஹாலோவீன் சமாச்சாரங்களை ஒழிச்சுப்போட்டு வச்சுருக்காங்க (ஏன் இத்தனை லேட்டு?) அதுலே ஒரு கொக்கிக்கை பார்த்தேன். பெரிய மீசையும் கண் பட்டியும் இருந்துச்சு இன்னொரு செட்லே.
மீசை வேணாம். பேசாம ஒரு கொக்கிக்கை மட்டும் வாங்கிக்கலாமான்னு தோணுச்சு.
நான் சின்னவளா இருந்த காலத்தில் எங்க எதுத்த வீட்டுலே இருந்த தாத்தா ஒருவர், தினம் காலையில் திண்ணைக்கு வந்து இளவெயில் காய்வார். அவருக்குக் கண் சரியாத் தெரியாது. கிட்டப்போய் குரல் கொடுத்தால் யாருன்னு கண்டு பிடிச்சுருவார்.பேசாம நின்னால்.... நம்ம காலடி சத்தம் கேட்டு, யாரு? யாரு? ன்னு கேட்டுக்கிட்டே வழக்கமா அங்கே போகும் பிள்ளைகளின் பெயரை ஒவ்வொன்னா எடுத்து விடுவார். மெல்லிசான காலடின்னால்... யாரு?தொளசியான்னு சட்னு கண்டு பிடிச்சுருவார்.
அவருக்கு கண்புரை விழுந்துருச்சாம். இன்னும் பழுக்கலை. பழுத்தாவுட்டு சுரண்டி எடுப்பாங்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தவர், ஒரு நாள் பச்சை நிறமான ஒரு கண் பட்டியைப் போட்டுக்கிட்டு திண்ணையில் உக்கார்ந்திருந்தார். புரை எடுத்தாச்சாம். இன்னும் ஒரு பத்து நாளைக்கு கண்பட்டி போட்டுக்கணும். அதுக்குப்பிறகு கண் நல்லாத் தெரியுமுன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டார்.
இப்போ நம்ம கேஸ் இதுதானே. கொழுப்பு வந்து கண்ணை மறைச்சிருக்கே! ப்ரோட்டீன் கண் லென்ஸ்மேலே படிஞ்சு திக்கா ஒட்டிக்கிட்டு இருக்கும் அதுதான் கண் புரைன்னு நினைப்பு.
நமக்கும் கண் பட்டி போட்டு விட்டுருவாங்க. பேசாம கொக்கிக்கை ஒன்னு வாங்கி மாட்டிக்கிட்டால் வேஷப்பொருத்தம் இன்னும் நல்லா இருக்குமுல்லே?
அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு ஆசையில் மண்ணு போட்டுட்டார் நம்மாள்.
தொடரும்............:-)
PINகுறிப்பு: பதிவின் நீளம்கருதி பாக்கி நாளைக்கு:-)
13 comments:
பார்வை ஒன்றே போதுமே.....
தலைப்பு வைக்க உங்க கிட்டதான் கத்துக்கணும்!
IOL வைத்தாயிற்றா.....
//கேமெராவுலே லென்ஸை மாத்திப் போடறோமே அப்படித்தான் போல!//
கண் ஆஸ்பத்திரிகளில் இப்படித்தான் நடக்குது...
இளவெயிலில் காயும் தாத்தா இப்போதும் இருக்கிறாரா?
அப்புறம் என்ன, அறுவை சிகிச்சை என்ன ஆச்சு? அடுத்த பதிவுக்காக...
படிவத்தை நிரப்ப தனியாக ஒரு படிப்பு படிக்கணும் போல... ஹா... ஹா...
முன்ன மாதிரி இல்லாம இப்ப இந்த அறுவைசிகிச்சை மிகவும் எளிதாகி விட்டதே..
அடுத்து என்ன? நாளை வருகிறேன் டீச்சர்.
கண்கள் ஒளிவிடவும் மென்மேலும் வாழ்வில் வெளிச்சம் கூடவும் மனமார வாழ்த்துகிறேன்.
வாங்க வெங்கட் நாகராஜ்.
தலைப்பா...... அது ஒன்னுதான் நல்லா வருதுன்னு கோபால் சொல்லிக்கிட்டு இருக்கார்:-)
//IOL வைத்தாயிற்றா.....//
ஹாஞ்சி. ஹாஞ்சி!
வாங்க ஸ்கூல் பையன்.
உண்மையில் அங்கே என்ன நடக்குதுன்னு எழுதி வைக்கலாமுன்னுதான்.....
அந்தத் தாத்தா இப்போ சாமிகிட்டே இருப்பார். அது ஆச்சு கனகாலம்!
வாங்க திண்டுக்கல் தனபாலன்.
இன்ஃபர்மேஷன் ஈஸ் வெல்த். இதை நல்லாப் புரிஞ்சவங்க இவுங்க, நமக்கும் புரிய வச்சுருவாங்க:-)
வாங்க ரோஷ்ணிம்மா.
நார்மல் ப்ரொஸீஜர்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாலும்.சிகிச்சை செஞ்சுக்கப் போகும் நபருக்கு கொஞ்சம் பதைப்பு இருக்கத்தானே செய்யும்?
அதான் பயம் போக்க இந்தப்பதிவு:-)
வாங்க வல்லி.
வாழ்த்துகளுக்கு நன்றிப்பா.
நெருங்கிய தோழிக்கு கண் சிகிச்சை நடந்து, சட்னு குணமாகாமல் கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டாங்க:(
அதான் எனக்குச் செஞ்சுக்க ரொம்பத் தயக்கமா இருந்துச்சு.
Hooked hand o..k.
How will u type?? :-)))))
அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து கண்ணாடியும் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். (இவ்வளவு தாமதமாக வந்தால் எப்படி?)
கண்ணாளனே ஒளியூட்டுவாய்.
Post a Comment